அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஆழமான குழியாம் !
1

ஆழமான குழி! அறுபத்தேழாயிரம் அடி!
உள்ளத்தில் பட்டதை ஒளிக்காமல் சொல்கிறது கழகம்!
பலர் வாழச் சிலர் சாகலாம்!
கிளர்ச்சிகள் மூட்டிவிடப்படுவன அல்ல!
குழி பறிப்போன் குழியிலேயே வீழ்வான்!

தம்பி!

ஆழமான குழி; மிக மிக ஆழமான குழி - ஆயிரம், இரண்டாயிரம் அடி ஆழமல்ல, 67,000 அடி ஆழமான குழி தோண்டப்போகிறார்களாம், சொல்லிவிட்டார்கள்! எவ்வளவு கஷ்டம் பாவம், இவ்வளவு ஆழமான குழி தோண்ட என்று எண்ணும்போதே எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

பரிதாபம் காட்டுவது இருக்கட்டும். எதைப்பெற இவ்வளவு ஆழமான குழி தோண்டுகிறார்கள்? விஞ்ஞான வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஏதாவது அரிய பொருள் அத்தனை அடி ஆழத்திலே புதையுண்டு கிடக்கிறது என்பதற்காகவா என்று கேட்கிறாயா! தம்பி! அதற்காக அல்ல. நமக்காக, கழகத்தைப் போட்டுப் புதைக்க!! 67,000 அடி ஆழக் குழி தோண்டிப் போட்டுப் புதைக்கப் போகிறோம், தி. மு. கழகத்தை 1967-ஆம் ஆண்டு என்று திருச்சியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டிலே பேசியிருக்கிறார்கள்.

என்ன செய்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்? ஐந்தாண்டுத் திட்டம் என்கிறார்கள், சமுதாய நலத் திட்டம் என்கிறார்கள், வட்டார வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள், இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் - நாட்டிலே ஏழை மக்கள் வாழ்விலே பாராட்டப்படத்தக்க விதமான முன்னேற்றம் எதையும் காணாததால் மனம் நொந்து நீ கேட்டிருக்கிறாய் பல முறை, என்னதான் செய்கிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள்? என்ன செய்யப்போகிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்றெல்லாம். அவர்கள் கூறிவிட்டார்கள் திருச்சி மாநாட்டில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை; ஆழமான குழி தோண்டப்போவதாகச் சொல்லிவிட்டார்கள்; 67,000 அடி ஆழம்.

என்ன அண்ணா! நம்மைப் போட்டுப் புதைக்கக் குழி தோண்டப் போவதாக அவர்கள் பேசுகிறார்கள் அத்தனை ஆணவத்துடன்; அதைக் கேட்டு நீ பதறாமல் துடிக்காமல், மகிழ்ச்சியுடன் பேசுகிறாயே என்று கேட்கத் தோன்றும். நான் பதறாததற்கும் துடிக்காததற்கும் காரணம் இருக்கிறது.

67,000 அடி! கவனமிருக்கட்டும்! அத்தனை ஆழமான குழி! ஏன்? அவர்களுக்கு அவ்வளவு அச்சம், அத்தனை ஐயப்பாடு! சாதாரண ஆழமுள்ள குழி, ஆயிரம், இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி தோண்டினால் போதாது, அதிலே போட்டுப் புதைத்தால் பயனில்லை, மீண்டும் எழுந்து வந்துவிடக்கூடும், மிக அதிகமான ஆழம் தோண்ட வேண்டும் என்று தோன்றுகிறதே தம்பி! அவர்களுக்கு; அது எனக்கு நமது கழகம் எத்தனைப் பெரியது, எதிரிகளை எந்த அளவுக்கு அச்சப்படுத்தி வைத்திருக் கிறது என்பதை அறியச் செய்கிறது. அது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வைக்கூடத் தருகிறது. தி. மு. கழகம் சாமான்ய மானதல்ல, இந்தியாவை பத்தொன்பது ஆண்டுகளாகக் கட்டி ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினர், இந்த கழகத்தைப் புதைத்துக் குழியில் போடவேண்டுமென்றால், ஆயிரம், இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி போதாது, 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது அவர்களின் பேச்சு! கழகத்தின் வளர்ச்சியின் அளவை நாடு உணர்ந்து கொள்ளவும் அந்தப் பேச்சு துணை செய்கிறது.

கழகமா? அது எங்கே இருக்கிறது என்று பேசிய காலம் போய், கழகமா? அதைப் பொதுமக்கள் சீந்துவார்களா என்று கூறிய காலம் போய்,

கழகமா? பத்துப் பேர் கூச்சலிடும் இடந்தானே என்று பரிகாசம் பேசிய காலம் போய்,

கழகமா! கொஞ்சம் துள்ளுகிறது, நாலு நாளில் தன்னாலே அடங்கிவிடும் என்று பேசிய காலம் போய்,

கழகமா? அது உட் குழப்பத்தாலே உருக்குலைந்து போய்விட்டது என்று பேசிய காலம் போய்,

கழகமா? அது உடைபட்டுப் போய்விட்டதே! இப்போது அதிலே என்ன இருக்கிறது!! என்று பேசிய காலம் போய்,

கழகமா? நாங்கள் மூச்சுவிட்டால் காற்றிலே பறக்காதா என்று ஏளனம் செய்த காலம் போய்,

கழகமா? எங்கள் கோபப் பார்வையாலேயே அதனைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட மாட்டோமா? என்று பேசிய காலம் போய்,

கழகமா? எங்களுக்கு அது ஒரு பொருட்டாகுமா! என்று அலட்சியம் காட்டிப் பேசிய காலம் போய்,

கழகமா? அதை 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்டி அல்லவா புதைக்கப் போகிறோம் என்று பேசும் காலம் வந்திருக்கிறதே!

இது எதைக் காட்டுகிறது? கழகத்தை அலட்சியப் படுத்தியவர்கள், அது தன்னாலே உருக்குலைந்து போகும், உடைபட்டுப் போகும் என்று எண்ணினவர்கள், கழகம் சாமான்யமல்ல, அதைப் போட்டுப் புதைப்பதானாலும், சாதாரணக் குழி போதாது, மிக மிக ஆழமான குழி வேண்டும் என்று கூறிடவேண்டிய அளவுக்குக் கழகம் வளர்ந்து, அவர்களைக் கலங்கிடச் செய்கிறதே, அது தம்பி! எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியேகூடத் தருகிறது!

காலஞ் சென்ற சத்தியமூர்த்தி சொல்லிக்கொண்டிருந்தார், ஜஸ்டிஸ் கட்சியை 5,000 அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைக்கப் போகிறேன் என்று.

இன்றைய காங்கிரஸ்காரர்கள் அவரை மிஞ்சி விட்டார்கள்; குழி தோண்டுவதில்! வாயால்! 67,000 அடி ஆழக் குழியாம்.

அவ்வளவு கடினமான வேலை செய்ய வேண்டும் என்றாகி விட்டது, கழகம் பெற்றுள்ள வளர்ச்சி.

ஒன்றை மறந்துவிடுகிறார்கள் - கோபம் கண்ணை மறைக்குமாமே, அதனால் என்று எண்ணுகிறேன் - 67,000 அடி ஆழக் குழிதோண்டிக் கழகத்தைப் புதைக்கத்தக்க வல்லமை உள்ளவர்களானால், இந்த வீரர்கள் கழகம் இந்த அளவு வளர்ந்ததே, என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஏன் கழக வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை?

கழகம் இவர்கள் கண்முன்பாகத்தானே வளர்ந்தது? வேறு எங்காவது ஓரிடத்திலே கட்டப்பட்டு இங்கு திடீரென ஒரு நாள் கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்டதா? இல்லையே! இவர்கள் இப்போது இருப்பதுபோலவே அறிவாற்றலுடன், வீராவேச உணர்ச்சியுடன் இங்கேதான் இருந்துகொண்டிருந் தார்கள், நாம் வளர்ந்தபோது. ஏன் தடுக்க முடியவில்லை கழக வளர்ச்சியை? வளர்ச்சியைத் தடுத்திட முடிந்திருந்தால் இன்று இத்தனை ஆழமான குழி தேவைப்பட்டிருக்குமா? பாவம்! 67,000 அடி ஆழமல்லவா தோண்டப்போவதாகச் சொல்லுகிறார்கள். ஏன் இத்தனைக் கஷ்டம்? தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பார்களே, அந்தப் போக்கா?

இப்போது இருப்பதுபோலவே அவர்களிடம் எல்லா வல்லமையும் இருந்தது! பிரசாரம், பண பலம், அதிகார பலம் எல்லாம்! இப்போது இருப்பதுபோலவே அப்போதும் இவர்களே ஆளவந்தார்கள்! இருந்தும்? கழக வளர்ச்சியைத் தடுத்திட முடிந்ததா? இல்லையே! கழகம் வளர்ந்து வளர்ந்து, இவர்களுக்கு மிரட்சி அதிகமாகி, ஆழமான குழி! மிக ஆழமான குழி! என்றல்லவா அலறுகிறார்கள்.

இவர்கள் வேறு முக்கியமான வேலையாக - அமெரிக் காவைச் சீர் செய்ய - புரட்சியால் இன்னல் அடைந்த ரμயர்மக்ஒ இதம் செய்யச் சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கிவிட்டது போலவும், இவர்கள் இங்கே இல்லாத நேரமாகப் பார்த்து நாம் வளர்ந்ததுபோலவும், இவர்கள் இங்கே இருந்திருந்தால் நம்மை வளரவிடாமல் அப்பொழுதே செய்து விட்டிருக்க முடியும் என்பதைப்போலவும் எண்ணிக்கொண்டு பேசுகிறார்கள்! இவர்கள் அவ்வளவு பேரும், இங்கே விழித்துக் கொண்டும் வீறாப்புப் பேசிக்கொண்டும் இருந்து வந்த நேரத்திலேயேதான் கழகம் வளர்ந்தது.

67,000 அடி ஆழமான குழி தோண்டப் போவதாகப் பேசும் இந்த வல்லவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

வளர்ந்தால் வளரட்டும் அது நம்மை என்ன செய்யும் என்று இருந்துவிட்டார்களா என்றால் அதுவும் இல்லையே! அப்போதும், இதே விதமான பேச்சு.

ஒழித்துக் கட்டுவோம்
குழி தோண்டிப் புதைப்போம்
கூண்டோடு தொலைப்போம்
பூண்டோடு ஒழிப்போம்

என்ற முழக்கங்கள்; உருட்டல் மிரட்டல்கள்!

இன்றைய இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர் அன்று சொன்ன திருவாய் மொழி தெரியாதா! கழகத் தாருடைய கை கட்டை விரலை வெட்டி விடுவோம் என்பதல்லவா!!

எத்தனை விதமான எதிர்ப்புகளை,
எத்தனைக் கலவரங்களை மூட்டிவிட்டனர்!

என்னென்ன விதமான வழக்குகளைத் தொடுத்தனர்;

எத்தனை தடிஅடி! சிறைவாசம்!

சதிச் செயல்களுக்குத்தான் குறைவா?

தூத்துக்குடி சாமியிலிருந்து வண்ணை பாண்டியன் வரையில் கொலை செய்யப்படவில்லையா?

ஒடித்த கொடிமரங்கள் கொஞ்சமா? கொளுத்திய கொடிகள் கொஞ்சமா?
இட்டுக் கட்டியதும் இருட்டடிப்பு நடத்தியதும் திறமையுடன் அல்லவா?

கழகத் தலைவர்களை ஏசிப் பேசிட, வசைமொழிகள் சாதாரணமாகவா? தனித் தரமுள்ள நாராச நடையிலல்லவா?

பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், கொடி வழி என்ற எதையாவதுவிட்டார்களா?

மண்ணாசைக்காரன், பெண்ணாசைப் பேயன், பொன்னாசை பிடித்தோன் என்றெல்லாம் கழகத்தின் முன்னணியினரை ஏசியது கொஞ்சமா?

கூத்தாடிகள்! என்றல்லவா இகழ்ந்தனர் - இன்று "கலைஞர்களை' நாங்களும் காட்டுகிறோம் என்று பேசிடும் இந்தக் குணாளர்கள்!

எத்தனை விதவிதமான எதிர்ப்பு மாநாடுகள், ஒழிப்பு மாநாடுகளை நடத்திக் காட்டினர்!

உள்ளூர்ச் சரக்குப் போதாது என்று வெளியூர்ச் சரக்குகளை வேண மட்டும் வரவைத்துக் கூவிக் கூவி விற்றார்களல்லவா?

கருப்பு கொடியா! காட்டுபவன் கரத்தை ஒடி என்ற அகிம்சைப் பேச்சு வழிந்ததே!

எதைச் செய்யாமல் விட்டார்கள்? எல்லாம் செய்து பார்த்து, கழகம் வளருவதைத் தடுக்க முடியவில்லை.

வெட்ட வெளியில் இருந்த கழகம் சட்ட சபைக்கே வந்துவிட்டது!

சட்ட சபையிலும், கழகம் அதிகாரம் பெற்ற எதிர்க் கட்சியாகிவிட்டது!

இந்த வளர்ச்சியைத் தடுத்திட முடியாத இதே வல்லமை சாலிகள்தாம், இப்போது 67,000 அடி ஆழமான குழி தோண்டப் போகிறார்களாம்!

நாட்டிலே சில ஆயிரம் புதுப் பணக்காரர்களை உண்டாக்கி வைத்துக்கொண்டிருப்பதால், கேட்ட பணம் கிடைக்கிறது என்ற ஒரு தைரியம் தவிர, மக்களின் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது எமது ஆட்சியின் திறமையால், ஆகவே மக்களின் பேராதரவு எமக்கே உண்டு என்று பேசிடும் தைரியமா இன்று அவர்களுக்கு இருக்கிறது?

மக்கள் மனம் மகிழ்ந்திடும்படியான ஆட்சி நடத்தி யிருந்தால் எதிர்க் கட்சிகள் இந்த அளவு வளர்ந்திருக்க முடியுமா?

குழி தோண்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் தம்பி! ஆழமான குழி! அதைப் பார்த்து மக்கள் கேட்க மாட்டார்களா?

நாடாளும் நல்லவர்களே! எதற்காக இத்தனை ஆழமான குழி தோண்டுகிறீர்கள்?

இதுவா? இது தி. மு. கழகத்தைப் போட்டுப் புதைக்க!

இவ்வளவு ஆழமான குழி தேவைப்படுகிறது என்றால், தி. மு. கழகம் பெரிய கட்சி என்று தெரிகிறதே, அப்படியா? அப்படியானால், எப்படி அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது?

எப்படியோ வளர்ந்துவிட்டது! இப்போது இந்தக் குழியில் போட்டுப் புதைத்துவிடப் போகிறோம்.

ஏன்? தி. மு. கழகம் என்ன கெடுதல் செய்தது? குழியில் போட்டுப் புதைத்திடவேண்டிய விதமான கெடுதி யாருக்கு என்ன செய்தது?

உனக்குத் தெரியாது! இது மிக மிகக் கெட்ட கட்சி! ஆமாம் பொல்லாத கட்சி! நாட்டையே நாசமாக்கும் கட்சி!

அந்த விவரம்தான் கேட்கிறோம், என்ன செய்துவிட்டது கழகம்? ஊர் மக்கள் சொத்தைச் சுருட்டிக்கொண்டதா? ஆயிரமாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு உல்லாச வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்ததா? கள்ள மார்க்கட்காரனுடன் குலவிற்றா? கொள்ளை இலாபக்காரனிடம் குலவிக் கிடந்ததா? ஊழல் ஊதாரித்தனம் நடத்திற்றா? - என்ன செய்தது சொல்லுங்கள், கேட்போம். . . .?

இப்படி உரையாடல் இருந்திடின், குழி தோண்டக் கிளம்பிடும் குணாளர்கள் என்ன பதில் கூறுவர்?

போ! போ! உனக்கொன்றும் தெரியாது. நீ மேற்கொண்டு ஏதாவது பேசினால் உன்னையும் இந்தக் குழியில் போட்டுப் புதைத்துவிடுவோம் என்றுதான் பேசுவர்.

ஆனால், பொதுமக்கள் என்ன பேசிக்கொள்வார்கள்?

திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சி இந்தக் காங்கிரஸ் காரர்களுக்குக் கிலியை மூட்டிவிட்டுவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம்தான் விழிப்புடன் இருந்து கொண்டு, காங்கிரசாட்சி ஆகாத சட்டம் கொண்டுவந்தால் எதிர்க்கிறது; அநியாய வரி போட்டால் கண்டிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசாட்சியிலே நெளியும் ஊழலை, ஊதாரித்தனத்தைக் கண்டிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், மக்களிடம் வாங்கிடும் வரித்தொகை எவ்வளவு? மக்களுக்குச் செய்திடும் வசதி எந்த அளவு, காட்டு கணக்கு என்று துணிந்து காங்கிரசைக் கேட்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனையோ பேர் நமக்கென்ன என்றும், நம்மால் ஆகுமா என்றும் வாய் மூடிக் கிடந்திடுவதைக் கண்ட பிறகும், நமக்கு என்ன நேரிட்டாலும் சரி, நம்முடைய உள்ளத்துக்குச் சரியென்றுபட்டதைச் சொல்லியாக வேண்டும் என்ற தூய்மையுடன் பணியாற்றுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், மொழிக்காக, கலை வளத்துக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக, அந்த முன்னேற்றம் முதலாளிகளிடம் சிக்கிவிடாமல் சமுதாயத்துக்குப் பரவுவதற் காகப் பாடுபடுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், முதலாளிகளுக்கும் காங்கிரசாட்சிக்கும் ஏற்பட்டுவிட்டுள்ள எழுதாத ஒப்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறது.

குட்டுகளை உடைக்கிறது! கொடுமைகளை எதிர்க்கிறது! ஆட்சியில் உள்ள அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது.

அந்த எரிச்சல், காங்கிரசுக்கு! நமது ஆதிக்கத்துக்குக் கழகம் உலை வைக்கிறதே என்ற எரிச்சல்.

பட்டம் உண்டு, பதவி உண்டு, பர்மிட் உண்டு, லைசென்சு உண்டு, பத்திரிகைகளில் நிறைய விளம்பரம் உண்டு, வருக! பெறுக! என்று அழைத்ததும் ஓடோடி வந்து நம்மோடு கூடிக் கொண்டார்கள் பலப் பலர், இந்தக் கழகத்துக்காரர்கள் மட்டும், பசப்புக் கண்டு மயங்க மாட்டோம், பாதை தவறமாட்டோம் என்று இருக்கிறார்களே, பொது மக்களிடம் தோழமைத் தொடர்புடன் இருந்து வருகிறார்களே, இவர்களைத் தொலைத்தாலொழிய நமது ஆதிக்கம் நிலைக்காது, நீடிக்காது என்ற உணர்ச்சி.