அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!
2

சந்திரகுப்தன், சமுத்ரகுப்தன், ஹர்ஷன் அசோகன் என்ற மாமன்னர்கள், இந்தியாவை ஒரு குடையின் கீழிருந்து ஆளத் திட்டமிட்டுத் தோற்ற வரலாற்றினைப் படித்துக் குறிப்புகள், மேற்கோள்கள், பேரறிவாளரின் கருத்துரைகள் பலவும், தயாராகவைத்திருந்தேன், பயன்படுத்த தேவையே இல்லாமற் போய்விட்டது. ஏன் எனில், சர். சண்முகம் ஒரு சிலர் கூறியதுபோல, நாட்டுப் பிரிவினைத் திட்டத்தைக் கண்டிக்கவுமில்லை; மாறாகப் பிரிவினை கேட்பதிலே, தவறு ஏதும் இல்லை; உரிமையே இருக்கிறது; சாதாரண இந்துக் குடும்பத்திலேயே பிரிவினை கேட்க உரிமையும், பெற வழியும் இருக்கும்போது, ஒரு தனி இனம், தனி அரசு நடாத்தி வெற்றி கண்ட இனம், "தனி நாடு' வேண்டும் என்று கூறாமலிருக்க முடியுமா? அந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்கத்தான் செய்யலாமா? என்றெல்லாம் சர். சண்முகமே பேசலானார். எதிர்த்திடப் போகிறார் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, - காலம் விழைவோர், சாடி கூறுவோர் என்பவர்கள் - அதே சர். சண்முகம், தனிநாடு கேட்பதிலே, தவறு துளியும், இல்லை, மறுத்திடத் துளியும் நியாயம் இல்லை என்று பேசினார்.

பெரியார், பிரிவினைக்கான வழக்குத் தொடர்ந்து விட்டார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள், அலட்சியம் காட்டாமல், வீணான அருவருப்புக் கொள்ளாமல், வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுவதற்கான வழிவகை செய்தாகவேண்டும் என்ற கருத்துப்பட, சர். சண்முகம் விளக்கம் அளித்தார். சர். சண்முகம் தனி அரசு கேட்பது, சிறுபிள்ளைத்தனம் என்று கூறிடுவாரோ என்ற அச்சம் என் போன்றோருக்கு. எனவே, சர். சண்முகமே, விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை என்கிறார்களே அது! அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு.

சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ள வும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!!

தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும்.

தம்பி! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய்.

ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்?

நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம் அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது.

கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது, பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும், செல்வரேயன்றி, "ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!'' என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். சிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூய பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும். எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல, கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா, நாம் இருப்பது. அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ!

தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள், அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிகமிக மேலோர் என்று நாமே, நெஞ்சு நெக்குருக ஒப்புக்கொண்டு தீரவேண்டிய பேரறிவாளர்கள், இன்று நம்மீது வீசப்படும் இழிமொழிகளை விட மிகமிகக் கேவலமான இழிமொழிகளையும் பழிச் சொற்களையும் தாங்கிக்கொண்டனர்.

உலகே இன்று புகழுகிறது; அறிவியலுக்கே அடித்தளம் அமைத்த ஆசான் என்று கிரேக்க நாட்டு சாக்ரடீசை. அவர் பட்டபாடு, கொஞ்சமா? ஆம், அண்ணா! மாபாவிகள், நஞ்சு கொடுத்தல்லவா சாகடித்தார்கள் என்பாய். நான், அதைக் கூறவில்லை, தம்பி! அது, அவர் கிரேக்க நாட்டுக் கொடியவர் களுக்குத் தந்த தண்டனை. இறந்துபட்டார்; எத்தகைய இழிமக்கள் கிரேக்கத்தில் இருந்தனர் என்பதனை உலகு அறிந்து காரித் துப்பச் செய்து விட்டுச்சென்றார். நான் அவர் இறந்து பட்டதைக் கூறவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே, எத்துணை இழிமொழியைக் கேட்டுக்கொண்டார் தெரியுமா?

நாடகம் தீட்டி நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற புலவனொருவன், வெறும் பொச்சரிப்புக் காரணமாக சாக்ரடீசை, முட்டாள், முரடன், கயவன், காமுகன், பொய்யன், புரட்டன், என்றெல்லாம் ஏசி, ஒரு நாடகம் தீட்டி, சாக்ரடீஸ் வாழ்ந்த நாட்களிலேயே, அவர் உலவிய ஏதன்ஸ் நகரத்திலேயே, நாடகத்தை நடத்திக் காட்டினான். நையாண்டி செய்தனர்! செச்சே இவ்வளவுதானா, இந்தச் சாக்ரடீசின் இலட்சணம் என்று ஏளனம் பேசினர் பலர். சாக்ரடீஸ் துளியும் பொருட்படுத்தவில்லை! தாங்கிக் கொண்டார்! தடுத்தார் இல்லை! திருப்பித் தாக்கவுமில்லை!! மங்காப் புகழொளி இன்றும் அவருக்கு, அறிவாய்.

அவரை விடவா, நாம் ஏற்றமிக்கோர்! இல்லை அல்லவா? ஆம் எனின் தம்பி, நமக்கு ஆத்திரமூட்ட வேண்டும், அதன் காரணமாக அமளி மூளவேண்டும் என்ற அற்பநோக்குடன், நாராச நடை பயிலுவோர் நாலாறு வார்த்தைகளை வீசினால், தாங்கிக்கொள்ளக் கூடாதா! கல்லடியாம், கலீலியோவுக்குக் கிடைத்தது! முள் முடியாம், ஏசுவுக்கு! நெருப்பிலிட்டனர், ப்ரூனோவை! சுட்டே கொன்றனர், ஆபிரகாம் லிங்கனையும் அண்ணல் காந்தியாரையும். எனினும், அண்ணா! அடக்கிக் கொள்ள முடியவில்லை ஆத்திரத்தை! அவ்வளவு மோசமாக ஏசுகிறார்கள் என்றும் ஆயாசப்படுகிறாயே, நியாயமா?

தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த "உயர்' பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆளைப்பார் ஆளை! என்று கேலி செய்வர். அவர் யோக்யதை தெரியுமா? என்று கூசாமல் பொய்யுரைத்து ஏசுவர்.

அவன் பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன், அடுத்துக் கெடுப்பான், ஆகாவழி காட்டுவான், அர்த்தமற்ற பேச்சுப் பேசுவான், ஆதாரமற்ற காரணம் காட்டுவான், இப்படிப் பட்டவனை அடித்தாலும் கடித்தாலும் கொன்றாலும் மென்று உமிழ்ந்தாலும் குற்றம் இல்லை, பாபம் இல்லை. நாட்டுக்கு இவன் துரோகி, நல்லன எல்லாம் அழித்தான், நாசப் பாதைதான் காட்டுவான், நம்பினோரை நாட்டாற்றில் விடுவான், பெட்டி பேழை நிரப்பிக் கொள்வான், பேயாய் அலைவான்...

போதுமா, தம்பி! இவ்வளவுதான், ஏச முடியும்; ஏசட்டும் ஏசுகிறார்கள்.

ஆனால், என்னை இப்படியும், உன்னை ஓரளவுக்கும் தூற்றிப் பேசவும், இழிமொழியால் ஏசவும்தான், வசவாளர் களால் முடியுமேதவிர, நாம் எந்த நாட்டினை மீட்டிடவேண்டும், சொந்த அரசு அமைத்திடவேண்டும் என்று எடுத்துக்காட்டுகிறோமோ, அந்தத் தாய்த்திரு நாட்டினை, தமிழகந்தன்னை, ஒரு துளியேனும், இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும், பேச இயலுமா? என்னிடம் வண்டி வண்டியாகக் குறைகள் உள்ளன என்று பேசி, ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும், என்னையும் உன்னையும், "என் அரும் மக்காள்! எனக்கோ தளைகள்! நீவிரோ புதல்வர்!'' என்று கூறி அழைத்து, விடுதலைக்கான தொண் டாற்றும் ஆர்வத்தை ஊட்டி ஆணை பிறப்பித்துள்ள, தாயகத் திடம், குறை ஏது காண முடிகிறது இவர்களால்.

தாயகத்தின் எழிலையும் ஏற்றத்தையும், இல்லை என்று கூறக் கொல்லைச் சரக்கின் நாற்றத்தையும் மிஞ்சவல்ல கொடிய மொழி பேசிடும் குணாளர்களாலும், முடியவில்லையே! முடியாதே!!

எனக்குத்தான் அறிவு இல்லை, ஆற்றல் இல்லை, தரம் கிடையாது, திறம் இல்லை என்று ஏச முடிகிறதேயன்றி நமதரும் நாடு வளமற்றது, வகையற்றது, மரபற்றது, மாண்பற்றது, வீரமற்றது, வரலாறற்றது என்று கூற முடிகிறதா!!

என் தாய் மலடி என்று கூறிடும் மகன் எங்குளான்?

என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான்.

விரலிலே புண் என்று கூறட்டும் - கண் அல்ல, கருத்துக் குருடானதன் விளைவு அந்தப் பேச்சு என்போம் - ஆயின் விரலில் உள்ள மோதிரத்திலே பதிந்துள்ள வைரத்தினை ஒளியையும் உயர்வையும் கூடவா மறுத்திட இயலும்.

தம்பி! எனக்குள்ள மகிழ்ச்சி, இதிலேதான்.

தாயகத்தின் அருமை பெருமை, மரபு மாண்பு இப்போது மிகமிகச் சமான்யர்களுக்கும் பளிச்செனத் தெரிந்துவிட்டது; எனவேதான், நம்மை இழித்தும் பழித்தும் பேசிடும் போக்கினர் கூடத் தாயகத்தை ஏசக் கூசுகிறார்கள்.

நமக்கென்று உண்மையான, பொருத்தமான, தரம் திறம் இருக்குமானால், தருக்கரின் தாக்குதல், நம் தாள்படு தூசு ஆகிப்போகும்; எனவே கவலைகொள்ளத் தேவையே இல்லை!

நாடு, எத்துணை ஏற்றத்துடன் ஒரு காலத்தில் இருந்து வந்தது; இன்று செங்கற்பட்டு - தாம்பரம் மின்சார இரயிலுக்காகக் கூட பத்து ஆண்டுகள் தவம் கிடந்தும் கிடைத்திட முடியாத தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது; ஒரு காலத்தில் தரணி மெச்சிட வாழ்ந்த தாயகம், இன்று தமிழ் நாடு என்ற பெயரும் பெறாமல் பெருமை குறைந்து கிடக்கிறது. வளம் கொஞ்சும் களஞ்சியமாக இருந்த நாடு இன்று வாட்டம் கொட்டிடும் கொட்டிலாகக் கோலம்மாறித் தவிக்கிறது. வீர கோட்டம் இன்று எங்ஙனம் வீணர் தங்குமிடமாகித் தாழ்வுற்று இருக்கிறது என்ற இந்த மறுக்கொணா உண்மைகள் மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது! இதனை மறுத்திடவோ, தாயகத்தைப் பழித்திடவோ, நா எழவில்லை, தீயுமிழ்வோருக்கும்.

இதனை எண்ணிடும்போது, தம்பி! எனக்கு உள்ளபடி, அவர்கள் நம்மை ஏசுவதுகூட நினைவிற்கு வாராதுபோய்விடுகிறது.

செம்பொன்னால் அணிபணி செய்தளிப்போன், கருநிறம் என்று கூறட்டும் - அதனால் அணிபணிக்குத் தினைத்துணையும் இழுக்கு வாராதன்றோ.

அஃதேபோலத் தாயகம் தனி அரசாகி, தகுதி பெற்றுத் திகழவேண்டும் என்ற திட்டம் நம்முடையது! நமது வண்ணம் குறித்தோ, வல்லமைபற்றியோ, வர்க்கம் குறித்தோ, எவரெவர் ஏதேது பேசினால்தான், என்ன கெட்டுவிடும்! செந்தாமரை இருக்கிறது பக்கத்தில். தவளை அதை மதிக்கவா செய்யும்; கண்டு மகிழவா செய்யும் - சேறுதான் அதற்கு உறைவிடம்!! செருக் கெனும் சேற்றில் இறங்கிப், பதவியிலுள்ளோரிடம் பல்லிளித்துப் பராக்குக் கூறி, "பவிசு' பெறத் துடியாய்த் துடிக்கும் பேர்வழிகள், நாவடக்கத்துடன் இருப்பர் என்று எதிர்பார்ப்பது, கர்த்தபத்திடம் காம்போதியையும், புழுத்துப்போனதிடம் நறுமணத்தையும் எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும். பால் பருகுவோன்தான் சீனி தேடுவான், புளித்துப்போன பானம் பருகுவோனுக்குப் புழுத்துப்போன காரக் கருவாடுதானே வேண்டும் என்பார், கைவல்யம். அதுபோலவே, ஏசிப் பேசுவதன் மூலம், நம்மை ஒழித்திடலாம் என்று எண்ணிக்கிடப்போரிடம், பண்பான பேச்சு இருக்கும் என்று, எப்படி எதிர்பார்க்க முடியும்? முருங்கையில் தேடினால் முல்லையா கிடைக்கும்!

தம்பி! ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு.

உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போக்கினர். உமிழ்ந்திடும் தூற்றலை, மறந்துவிடு!

அவரும்கூட, தாய்த்திரு நாட்டின், திருவை திறத்தை மறைத்திட இயலாதிருப்பதை மறவாதிரு.

அத் திருநாடு, அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம்கல் அகன்று கிடக்கும் தில்லி நோக்கி எதற்கும் இரந்திடும் நிலைதனைக் கூறினோம், அதனை அன்று மறுத்தோரில் பலர், ஆய்ந்து பார்த்ததால் அனுபவம் பெற்றதால், "ஆம்! அங்ஙனம்தான், நமது நாட்டுநிலை உளது! எதற்கெடுத்தாலும், வடக்கு நோக்கி எடுக்கிறோம் பிச்சை என்ற உண்மையை உணர்ந்தோம்'' என்று உரைத்திடக் கேட்டிடு! உன் சொல் வென்றது என்ற உண்மையை, மறவாதிரு!

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற அம்மொழி இந்நாள் பொய்மொழியாயிற்று. எடுத்து இயம்பினோம், தடுத்து ஓய்ந்தனர். பிறகு அவரும் நம்மொழி பேசிட முனைந்தனர் என்பதனை மறவாதிரு!

நம் மொழி பேசிட நல்லோர் பலரும் முனைந்து வந்ததால், முன்னிலும் அதிக ஆர்வம்கொண்டு, பணியினைத் தொடர்ந்து நடாத்திடு, தம்பி! நம் மொழி கேட்டு, அம்மொழி பேச முனைந்து வந்துள்ள நல்லோர் யாவரும், நம் வழி நல்வழி, அஃதே எம்வழி, என்றே கூறி வருவர், துணைசெய்.

அந்நாள், நன்னாள்; அஃது விரைந்திட, ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு.

பைந்நிறப் பழனம்
பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள்
வழங்கு பொன்னாடு!

பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து.

இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்!

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூ-னும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!

அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார்.

எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிந்தன மருப்பு
கலங்கினர் பலர்.

வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன்.

கனமே குழல்! செங்கயலே விழி!
மொழி கார்க்குயிலே!

என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர்,

கன்னிய ரோடும்
நிலவினிலாடிக் களித்ததும்
இந் நாடே;
பொன்னுடல் இன்புற நீர்
விளையாடி இல் போந்ததும்
இந் நாடே!

என்று உளத்தில் உவகை பொங்கப் பாடுகிறார்.

தம்பி! அந்த நாடு, விடுதலைப்பெறப் பாடுபடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், அந்த வீரப்பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு, வேறு நாட்டம் எழலாகாது; எழாது!

ஏலாதனவெல்லாம் கூறுகிறான் என்று ஏளனம் செய்தனர்.

ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!!

அண்ணன்,

1-5-60