அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அன்பில் அழைக்கிறார்
1

திருச்சியில் மாநில மாநாடு
தோழர்கள் திறமை

தம்பி,

மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள்.

அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத் தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்ப்பதுதான்!

பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர், இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த பேச்சல்ல, "ஓஹோ' என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின ராகத் தலைவர்கள், பலர், தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக் கொண்டு கட்சிகள் நடாத்தும் பிரான்சு நாட்டில், யார் இந்த அரசியல்வாதி? எப்போது கட்சி துவக்கினார்? தத்துவம் யாது? பத்திரிகைகள் எத்தனை? என்று அலட்சியமும் ஏளனமும் கலந்த குரலில் பெரியவர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சூறாவளி போலக் கிளம்பி, பொதுத் தேர்தலில் 52 இடங்களை வெற்றிகரமாகக் கைப்பற்றி, பிரான்சு அரசியல் வட்டாரத்திலே "புதிய பிரச்சினை' யாக உருவெடுத்துள்ள பவுஜாடேயின் பேச்சு இது. காரியமாற்றியவர் பேச்சு; கனவு காண்பவரின் கற்பனையு மல்ல, களமென்றால் பன்னெடுங்காத தூரம் ஓடிச் சென்று பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல. நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியலில் இன்றளவு வரையில், அலட்சியப்படுத்தப்பட முடியாததாகிவிட்டுள்ள தேர்தலில் வெற்றி கண்ட தலைவனின் அனுபவப் பேச்சு.

மாற்றார்களின் தோற்றம் - என்று இங்குக் குறிப்பிடப் படுவது, தனி ஆட்களின் உடல் தோற்றம் பற்றியதல்ல, அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ள வசதி வாய்ப்பு, அதன் பயனாக அமையும் பண பலம் படை பலம் இவை.

இம் முறையில், ஆளும் கட்சியாகிவிட்ட குழுவில் இடம் பெற்றுள்ள எந்தத் தலைவரைப் பார்த்தாலும் பிற கட்சிக் காரர்களுக்கு, "பிரம்மாண்டமான' வராகத்தான் தெரியும். காரணம், அவர்கள் முன், நாம் கூனிக் குறுகி நிற்கிறோம், மண்டியிட்ட நிலையில் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நமது கண்களுக்கு "பிரம்மாண்டமாக'த் தெரிகிறார்கள் என்று பவுஜாடே கூறுகிறார்.

அறிவகத்தில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்து அங்கு அலுவல் புரிவோரின் தொகை, அச்சாகும் தாட்களின் அளவு, காணக் கிடக்கும் வசதிகளின் பஞ்சத் தன்மை, இவைகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டு, மவுண்ட்ரோட் "இந்து' பத்திரிகை நிலையத்துக்கு உள்ள கட்டிடத்தைப் பார்த்தால், பீதி கூட ஏற்படும் - இந்த "இதழ்' தரும் ஆதரவினால் வலிவு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, நாம் எதிர்ப்பது முடிகிற காரியமா. . . . ? அரண்மனைபோல் அல்லவா அலுவலகம் இருக்கிறது - "இந்து' இதழுக்குத் தேவைப்படும் காகிதக் குவியலை வைத்திடப் போதுமானதாக இராது போலிருக்கிறதே "அறிவகம்'. இதிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு அலை, இதைப் போன்ற பிரம்மாண்டமான "கோட்டைகளைத்', துணையாகப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை என்ன செய்து விட முடியும்? என்ற அச்சமே உள்ளத்தில் புகுந்து குடையும். பவுஜாடே அந்த அச்சம்தான் கூடாது என்கிறார். நிமிர்ந்து நில்! உன் உருவத்தை நீயே குறுகலாக்கிக் கொள்ளாதே! மாற்றான் முன் மண்டியிட்டுக் கிடக்காதே. அவன் ஒன்றும் உன்னைக் காட்டிலும் பிரம்மாண்ட மானவனல்ல! என்று கூறுகிறார்.

நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக மகிழ்ச்சியடைந்தேன் - ஏனெனில் என்னைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே, எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற ஏக்கம் அதிகமான அளவு கொண்டவனல்லவா; அதனால் பவுஜாடே என்பவர் கூறிய பேச்சு, என்னையும் கொஞ்சம் நிமிர்ந்து நின்று, பார்க்கத் தூண்டிற்று; வேடிக்கை என்னென்பேன், கூனிக் குறுகிடாமல். நிமிர்ந்து நின்று பார்க்கும் போது, அப்படி ஒன்றும் நமது மாற்றார்கள் உண்மையிலேயே "பிரம்மாண்ட'மானவர்களல்ல என்பது புரியத்தான் செய்கிறது!

நாம், வெளியே நின்றபடி அண்ணாந்த நிலையில் அவர் களையும் அவர்கட்கு அமைந்துள்ள வசதிகளையும் பார்த்துப் பீதி கொள்கிறோமே, அதேபோது, கோட்டை போல நிலையங்களைக் கட்டிக்கொண்டு, அதிலே கொலு மண்டபத்தார் போல் வீற்றிருந்து கோலோச்சுபவர்களாக உள்ளவர்கள், இத்தகைய எழிலும் ஏற்பாடும், வசதியும் வாய்ப்பும், அமைப்பும் இல்லாமல், எத்தனை பொலிவும் வலிவும் பெற்று, எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தைத் தொட்டு உறவு பெற்று, உன்னதமான இடம் பெற்றிருக்கிறார்கள், பார்க்குமிடமெல்லாம் அவர்கள் பேச்சு! காணுமிடமெங்கும் அவர்களின் கொடிகள்! பட்டி தொட்டிகளிலும் அவர்களின் பாசறைகள்! நாள் தவறாமல் அவர்களின் முழக்கம்! கல்வி நிலையங்களிலே அவர்களின் வாடை!! களியாட்டக் கொட்டகைகளெல்லாங்கூட அவர்களின் கருத்தோட்டம்!! எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் கைவண்ணம்! எப்படி முடிகிறது இவ்வளவு சாதிக்க! நமக்கு உள்ள வசதிகளில் ஆயிரத்திலொன்று உண்டா அவர்கட்கு! இலட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியே தள்ளும் இதழ்கள் எத்துணை, அவைகளுக்கு இலண்டனிலும் நியூயார்க்கிலும் கிளைகள், எல்லா நாடுகளிலும் நிருபர்கள், எந்த நிகழ்ச்சி குறித்தும் அழகழகான படங்கள், வண்ணம் கண்ணைப் பறிக்கும் அளவு தருகிறார்கள் இதழாளிகள் - இந்தப் பயல்களோ, உள்ளங்கை அளவு பத்திரிகை, அதிலே செங்கல் அடுக்கியது போன்ற எழுத்துக் கோவை, அழகு இல்லை, தனி நிருபர் தரும் அலங்காரக் கட்டுரை இல்லை, விளம்பரம் கிடையாது, விமரிசனம் காணோம், வீரத் திராவிடனே! விழித்தெழு! வீறு கொண்டெழு, விடுதலைக்குப் போரிடு! என்று எழுதுகிறார்கள், இதைக் கொண்டு மட்டுமே, இவர்களால் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறச் செய்ய முடிகிறது! நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர் சிந்திடும் போக்கு, எல்லாம் மாறி, கண்களிலே ஓர் வீரக்கனல், பேச்சிலே ஓர் புதுமுறுக்கு, நடையிலே ஓர் புதிய எழில் கொள்ளும்படி அல்லவா செய்து விட்டார்கள் - மொத்தமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து ஏதேனும் ஒரு காரியம் செய்யக்கூடியவர்களா? இல்லையே, எனினும். மூலை முடுக்குகளிலும் முச்சந்திகளிலும், சாலை சோலைகளிலும், வாவி வயல்களிலும், ஆலைகளிலும் அலுவலகங்களிலும், சந்தை சதுக்கத்திலும்,

வாழ்க! வாழ்கவே!
வளமார் எமது
திராவிட நாடு வாழ்க !
வாழ்கவே!

என்ற பண் எழச் செய்து விட்டார்களே! எப்படி முடிகிறது இவர்களால்?

கோட்டையில் நமது கொடி மரம், கோலோச்சும் அனைவரும் நம்மவர், கடலிற் செல்லும் கலமும், காற்றுடன் போட்டியிடும் விமானமும் நமது கொடியினைத் தாங்கிச் செல்கின்றன; உலக நாடுகள் ஒவ்வொன்றும், நம்மிடம்தான் உறவு கொண்டாடுகின்றன. நம்மிடம்,

ஆசை கொண்டேன்
உந்தன் மேலே!
மோசம் நான்
செய்யமாட்டேன்!

என்று கீதம் பாடி நிற்கிறார்கள், கோடீஸ்வரர்கள்; இந்நிலை பெற்றிருக்கிறோம், இவ்வளவு "பிரம்மாண்டமாக' வளர்ந்து விட்டிருக்கிறோம், இந்தப் "பொடியன்கள்' ஒரு வசதியுமற்ற வாய்வீச்சுக்காரர்கள், வறண்ட தலையர்கள், நம்மிடமிருந்து மக்களைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டு சென்றிட முடிகிறதே, எப்படி? எப்படி? என்றுதான் எண்ணி எண்ணி ஏக்க முறுகிறார்கள். பவுஜாடே இப்போது சொன்னார்; நம்மில் பலர் ஏற்கெனவே, மாற்றார்களின் பிரம்மாண்டமான உருவம் வெறும் மனமயக்கந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம், எனவேதான், கூனிக்குறுகி நின்று பீதி கொள்ளாமல், நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் - நம்மைக் கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறது - அருவருப்புக் கலந்த அச்சம்! இந்தப் பஞ்சைகளால் இவ்வளவு சாதித்திட முடிகிறதே என்ற அருவருப்பு இவ்வளவு சாதித்தவர்கள், இனியும் வளர்ந்தால் என்று எண்ணும் போது ஒருவகையான அச்சம்!

காரணம் என்ன தெரியுமா தம்பி! இங்கு நானோ மற்றவர்களோ, பவுஜாடே சொன்னதுபோல, மாற்றார்கள் ஒன்றும் பிரம்மாண்டமானவர்களல்ல என்று சொன்னதில்லை. எனினும், நீயும் நானும் காணும் இன்பத் திராவிடம், எழிற் பேருருவமாக நமது மனத்திரையில் இருக்கிறதல்லவா, அதைக் காணும் போது, எவ்வளவு பிரம்மாண்டமான தலைவரும், நம்மை மிரட்டிடும் அளவுக்குப் பெரியவராகத் தெரிவதில்லை!

நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று பார்க்கிறோம் காட்சி நம்மைக் கவிஞனாக்குகிறது. தோளைத் தொட்டு அவ்வேளையில் ஒருவன், மூலைக்குழாயில் தண்ணீர் வெகு வேகமாக வருகிறது, விந்தையான காட்சி அது என்று சொன்னால், நாம் குறுநகை புரிந்தபடி, "ஏடா மூடா! மூலைக் குழாயில் வேகமாக வரும் தண்ணீரிலா விந்தைக் காட்சி காணுகிறாய், இதோ பார் எதிரே, கடலே! கடலே! விரிந்து பரந்து வியந்திடச் செய்யும் நீலக்கடலே! ஓயாது ஒலி செய்து ஞானத்துக்குத் தாலாட்டளிக்கும் அற்புதக் கடலே! - என்று பாடிடத் தோன்றுகிறது, எழிலும், அளவும், இயல்பும் உள்ளத்தை வேறு எதனிடமும் செல்லவிடாமற் செய்கிறது, இதைக் கண்டும், கருத்தற்றவனே! மூலைக் குழாயின் தண்ணீர் வேகத்தை வியந்து பேசி நிற்கிறாயே என்றுதானே கேட்போம்.

அப்படித்தான் கேட்டோம் நாட்டினரைப் பார்த்து, "நாட்டினரே! நாட்டினரே! உடன் பிறந்தோரே! எதை எதையோ கண்டு சொக்கி நிற்கிறீரே, சோர்ந்து போகிறீரே! அவருடைய கெம்பீரம் தெரியுமா? இவருடைய வீரதீரம் அறிவீரா? அவர் உயரம் எவ்வளவு, உள்ள இடத்தின் உன்னதம் எத்தகையது! உலக நாடுகளிலே அவருக்கு எத்தகைய புகழ்! எவ்வளவு வரவேற்பு! மக்கள் உள்ளத்தில் குடியேறியவர். கோலைக் கீழே எறிந்து விட்டு, அவர் தாளின்கீழ்க் குப்புறப்படுத்துத் தொழுதனர் கொற்றவர்கள். அவர் பாதம் பட்டால் போதும், பாவமெலாம் ஒழியும், பவிசுகள் வந்துகுவியும் என்று மாளிகைகள் பல தவங்கிடக்கின்றன! கரம் குலுக்கமாட்டாரா என்று கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம் அசைந்தால் ஆம்! ஆம்! என்று இலட்சக்கணக்கானோரின் சிரம் தாழ்ந்திடுகிறது! இந்நிலையில், இவ்வளவு உயர் இடத்தில், பிரம்மாண்டமான உருவில் உள்ளாரே, காணும் போது உனக்குக் குலை நடுக்கமே எடுத்தாக வேண்டுமே, என்று சிலர் பலர் கூறுகின்றனர் எனினும், இவர்களின் எழிலையும் உயர்நிலையையும் கண்டு சொக்கிடுமுன்பு, திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள் நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும், கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கெடாவண்ணம் மக்கள் விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித் தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும், கூனிய உடலே நிமிர்ந்திடும். கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர் நம்மவர் என்பது புரியும், அந்த மாமலை முன்பு இன்று நாம் காண்பதெல்லாம் கடுகாகும் - இன்று காணக்கிடைக்கும் மாற்றாரின் காட்சியே மாட்சிமையுடையது என்ற எண்ணம், அன்று நமக்கென்று இருந்து, இடையில் இலாதொழிந்து, இன்று நெஞ்சத்திரையில், புகை உருவில் பதிந்துள்ள காட்சியின் மாட்சி பற்றி எண்ணினால் போதும் - இருந்த இடம் தெரியாது போகும் - என்று எடுத்தியம்பினோம். ஏடுகளில் உள்ளனவற்றைக் கல்லி எடுத்து, கறை நீக்கிக் காட்டினோம், இன்று மக்கள் மன்றம் கல் சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ் மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக் கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம் பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணை நின்று குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம் அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி! உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது மக்களிடம் கூறிவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து சிந்தைக்குப் புது விருந்து கிடைத்தான பிறகு இதழ் பல எழிலூட்டினாலும், கோடிகள் கோட்டைகளைக் கட்டித் தந்தாலும், கோல், துணிவு தந்திடினும், இவைகளைக் காட்டி, நம்மை மிரட்டியும் மயக்கிடவும் முனைவோரின் முன்னோர், கணவாயில் குதிரைகள் நுழையும் குளம்புச் சத்தம் கேட்டதும், பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும், பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று செங்கிஸ்கான், தைமூர், கோரி, கஜனி, அலாவுதீன் ஆகிய இரணகளச்சூரர்கள் காலத்திலெல்லாம், தோற்றோடிய, "தொடை நடுங்கிக்' கூட்டத்தினரே என்பது புரிகிறபோது, பவுஜாடே எதற்கு, உன் மாற்றார்கள் பிரம்மாண்டமானவர்களல்ல என்று எடுத்துரைக்க! நாடு அதனை அறிந்து விட்டது - நாம் கூறினோம் என்பதை எண்ணும்போது, நாம் கூறியது மக்களின் உள்ளத்திலே இடம் பெற்றுவிட்டது என்பதை உணரும் போது, நாம் மகத்தான வெற்றி பெற்று விட்டோம் என்று பெருமைப்பட நாம் தயங்குவானேன்? நாடு எத்துணை பெரியது, நானிலம் நம் நாட்டினை எத்தகைய உயர்வாகக் கருதிற்று என்பது விளங்கி விட்ட பிறகு, பொய்க்கால் குதிரை ஏறி, காகிதக் கவசம் பூண்டு கட்டைக் கத்தி ஏந்தி, தாளத்துக்குத் தக்கபடி "போரிடும்' வீரர் பால், மதிப்பா பிறக்கும், மருட்சியா ஏற்படும்? சேரன் செங்குட்டுவனைப் பற்றிய "சேதி'யைத் தெரிந்து கொண்டவர்களிடம், சேட்டுமார்கள் கட்டித்தந்த கோட்டையில் அமர்ந்துள்ளவர்களின் பிரம்மாண்ட உருவம் பீதியையா கிளப்பும்! எலி தோண்டும் வளையில், புலியா வீழ்ந்துபடும்! தந்தையர் நாடு தன்னிகரற்று வாழ்ந்த வரலாற்றினையும், மீண்டும் அந்நிலை எய்துதற்கான எல்லா வசதிகளும் உள்ளன என்ற நிலையினையும் தெரிந்து கொண்டவர்கள் கண்களுக்கு, இன்று ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோரின் தோற்றமா திகிலூட்டும்!