பம்பாயில் பீரஹத் பாரதிய சமாஜம்-
வெளிநாடு களில் திராவிடர் நிலை -
நம் நாட்டில் அகதிகள் உயர்நிலை.
தம்பி!
ஆறடுக்கு மாடிகொண்ட மாளிகை
எழும்பப் போகிறது - பன்னிரண்டு இலட்ச ரூபாய் செலவில்!
சர்க்காரின் திட்டங்களிலே
ஒன்று போலும் என்று எண்ணிவிடாதே தம்பி! ஒரு சமாஜம் கட்டப்போகும்
அரண்மனை இது. அரண்மனை மட்டுமல்ல, ஆராய்ச்சிக் கூடமுங்கூட!
பீரஹத் பாரதிய சமாஜம் என்பது
இதன் பெயர்-இதன் பணி, வெளிநாடுகளிலே சென்று தங்கியுள்ள
இந்தியர்களுக்கும் இடையே தொடர்பு, தோழமை ஏற்படுத்தி
வைப்பது. இது மட்டுமல்லாமல், வெளிநாடு சென்றோரின் வரலாறு
பற்றிய நுணுக்கங்கள், செல்லவேண்டிய காரணம் என்ன, சென்றபோது
அடைந்த சிரமம் எப்படிப்பட்டது, சென்று அங்கு கண்ட அனுபவம்
எத்தகையது என்பன போன்றவைகளைக் குறித்து ஆராய்ச்சிகள்
நடத்தப்படும்.
இத்தகைய நேர்த்தியான நோக்கத்துக்காக,
அண்ணாந்து பார்ப்போரின் கழுத்து வலி எடுக்கும் அளவு உயரமாக,
அன்னிய நாட்டினர் பார்த்து ஆச்சரியப்படத் தக்கவகையில்,
சமாஜக் கட்டிடம் சமைக்கப் போகிறார்கள்.
மாளிகை அமைக்க 12 இலட்சம்,
அதிலே மற்ற வசதிகள், ஒரு படிப்பகம் உட்படக் காண மற்றோர்
நாலு இலட்சம்.
இதற்கு நிதி குவிகிறது.
இந்திய சர்க்காரிடமிருந்து
இரண்டு இலட்ச ரூபாய் நன்கொடை எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்தறிந்தால் போதாதா,
நன்கொடை வாயு வேகம் என்கிறார்களே, அவ்விதம் வந்து சேரப்போகிறது.
பம்பாயில்! - இங்கா கட்டுவார்கள்!
பம்பாயில்தான்.
கோடீஸ்வரர்களின் கோட்டத்தில்தானே,
இத்தகைய கொலு மண்டபம் அமைக்க முடியும்; அமைக்கிறார்கள்.
இந்த பவனத்தில், வெளிநாட்டார்
வந்து தங்க, வகை வகையான ஏற்பாடுகள்.
வெளியிலிருந்து இங்கு வரும்
மாணவர்களுக்கு அறுசுவை உண்டி.
செவிச் சுவை உண்டு.
சிந்தனைக்கும் விருந்து
தருவார்கள் - படிப்பக மூலம்.
இவைகளுக்கான நிதி திரட்டும்
ஏற்பாடு, விமரிசையாகத் துவக்கப்பட்டு, வேகமாக வளர்ந்து,
இப்போது வெற்றிக் கட்டத்தை நோக்கித் துரித நடைபோட்டுத்
செல்கிறது.
வெளிநாடுகளிலே வதியும் இந்தியர்கள்!
- என்ற சொற்றொடரைக் கவனித்தாயா, தம்பி. பொருள் எளிதாயிற்றே,
இதை ஏன் கவனப்படுத்துகிறாய், என்று கேட்டுவிடாதே. பொருள்
எளிதுதான், ஆனால் இதிலே புதை பொருளும் இருக்கிறது, அதைக்
கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல.
இந்தியர்கள் என்ற பட்டியலில்
நாமும் இருக்கிறோம்.
நம்மவர்கள் வெளிநாடுகளிலே
இருக்கிறார்கள் - ஆமாம். பல இலட்சம்! வடக்கத்தியர்களும்
வெளிநாடுகளிலே இருக்கிறார்கள். வெளிநாடுகளிலே சென்றுள்ளவர்களை,
வடவர் திராவிடர் என்று இரு பிரிவாக்கிக் காட்டுவதற்குக்
காரணமும் இருக்கிறது - அதிலே நாடு அறியவேண்டிய கருத்தும்
நிச்சயமாக இருக்கிறது. வடவர் வெளிநாடுகள் சென்று வதிகிறார்கள்
- திராவிடர் வெளிநாடு சென்று வதைபடுகிறார்கள்.. வெளிநாடு
சென்றுள்ள வடவரில் பதினான்கணாபாகம், முதலாளிகளாய், நிலச்சுவான்தார்களாய்,
ஆலைகளின் சொந்தக்காரர்களாய் வாழ்கிறார்கள்.
அவர்கள் சென்று வாழும்
இடங்களிலே, அரசியல் சூத்திரக் கயிறுகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
வெளிநாடு சென்றுள்ள வடவரிலும்,
கிழக்கு ஆப்பிரிக்கர் மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலே
சென்று தங்கி, சீரும் செல்வாக்கும் பெற்றுள்ள வடவர்களுக்கு
அங்கே உள்ள பிரச்சினை; சொத்துகள் வாங்க உரிமை தரப்படவேண்டும்;
அரசியல் ஆதிக்கத்திலே கிடைக்கும் பங்கின் அளவு அதிகமாகிக்
கொண்டிருக்க வேண்டும்; வேறு வேறு நாட்டவரிடமிருந்து கிளம்பக்கூடிய
வியாபாரப் போட்டிகளை வேரறக்களைவதற்கு இந்திய சர்க்கார்
தக்க திட்டம் தயாரித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்;
என்பவைகளாகும்.
கூலி போதவில்லை, கும்பி
நிரம்பவில்லை, கொட்டும் குளிரைத் தாங்கிக் கொள்ளச் சக்தி
இல்லை, கொடுக்கும் கசையடியால் பீறிட்டு வரும் குருதியைத்
துடைக்கவும் நேரமில்லை, வேலையில் நிம்மதியுமில்லை. அது
நிலைத்து இருக்கும் என்பதற்கும் உறுதி இல்லை, - இவைகளல்ல,
பவனபுரியினருக்குள்ள பிரச்சினைகள்.
இந்தப் பிரச்சினைகளெல்லாம்
நம்மவர்களுக்கு - நாடாண்ட இனம் என்று கூறுகிறோமே, அந்தத்
திராவிட மக்களுக்கு - வெளிநாடுகளிலே வாழ்பவர்களுக்கு அல்ல
- வதைபடுவர்களுக்கு!
பவனம் அமைகிறது, அவர்களுக்கு
படகு அழைக்கிறது, நம்மவர்களை!
பல்வேறு நாடுகளிலே பரங்கியர் போலாகி
விட்டுள்ளனர், அவர்கள்.
சென்ற இடமெங்கும் வறுமைச் செந்தேள்
கொட்டுகிறது, திராவிடரை.
தேயிலைத் தோட்டம் அமைக்கிறார்கள்,
மோட்டார் பஸ்கள் நடத்துகிறார்கள், பல சரக்குக் கிடங்குகள்
அமைக்கிறார்கள், அவர்கள்.
தேயிலைத் தோட்டத்தில் வேலை
செய்து, அட்டைக்கடி அரணைக்கடி பெற்று, ஆவி பிரியாதது ஒன்றுதான்
பாக்கி என்று கூறத்தக்க அவல நிலையில் இருக்கிறார்கள்,
திராவிடர்!
ராஜாங்கத்திலே நாங்கள் ஏன்
நடு நாயகர்களாக்கப் படக் கூடாது? என்று கேட்டு, புருவத்தை
நெரித்துக் காட்டுகிறார்கள், அவர்கள்.
ரப்பர் பாலை எடுத்துவிட்டு,
இராத்தூக்கமின்றி, கைகளைப் பிசைந்தும், கண்களைக் கசக்கிக்கொண்டும்,
கலங்கி நிற்கிறார்கள், திராவிட மக்கள்.
அவர்கள் எதிர்காலத்தை மேலும்
எழிலுள்ளதாகவும், நிலையை ஏற்றமுள்ளதாகவும் செய்ய, பவனம்!
நம்மவர்களுக்கு, இந்த ஒரு
வேளைக் கஞ்சியும் ஏன் தரவேண்டும் என்று சிங்களம் பேசிக்கொண்டு,
சிங்கக் கொடி சர்க்கார் படகுகளைக் காட்டுகிறது, ஏறிச்செல்-எங்கள்
நாட்டிலே இடமில்லை, போ, போ! என்று.
இவர்களுக்கு, ஒரு குடில்
இல்லை இங்கு.
அவர்களுக்காக அக்கறை காட்டும்
அன்பர் குழாம், ஆறடுக்கு மாடி கட்டுகிறது - ஆனந்தத்துடன்
சிந்து பாடுகிறது!
ஏன்?
அவர்கள், ஆளும் இனத்தினர்!
திராவிடர், அடிமை இனத்தவராக்கப்பட்டுவிட்டனர்!
வேங்கைக் காட்டிலேதான் நரி
ஆட்சி நடக்கிறதே - நரிக்குத்தானே பிறகு, எல்லா வைபவமும்
கிடைக்கமுடியும்.
திராவிடர்கள் இலங்கையில்,
பர்மாவில், மலாய் நாட்டில் எங்கும் இன்று இடர்ப்பட்டு,
இழிமொழிகளைத் தாங்கிக் கொண்டு உள்ளனர். அவர்களின் வாழ்வு
துலங்க, வகை என்ன, வழி என்ன என்பதற்கு, ஓர் அறிவியற்கூடம்
இல்லை, ஆற்றல் அரங்கு காணோம். அங்கே ஆறடுக்கு மாடி அமைத்து
அந்தப் பவனத்தில் ஆராய்ச்சி நடத்தப்போகிறார்கள், ஏன்
சென்றனர்? எப்படிச் சென்றனர்? சென்று எவ்வகையில் அங்கு
வாழ்வு பெற்றனர்? என்பன பற்றி! துரத்தி அடிக்கிறதே இலங்கை
சர்க்கார், அந்தத் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் திராவிட
மக்களுக்கு, மீட்சிக்கு மார்க்கமுண்டா, என்று கேட்க நாதியில்லை,
கவனிக்க நேரமில்லை. கண் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது,
ஆனால் இந்தப் பிரச்சினையைக் கவனிக்க அல்ல.
இலங்கை சர்க்கார், திராவிட
மக்களைத் தேளெனக் கொட்டி, அம்மக்கள் தேம்பித்தவித்துக்
கொண்டிருந்தபோது,விஜயலட்சுமி பண்டிட் அங்கு பவனி சென்றதும்,
அதுபோது ஆசியாவின் ஜோதியின் குடும்பக் குமரிகள், குதூகல
விருந்திலே கலந்து கொண்டது மட்டுமல்ல, கொத்தலாவலையுடன்
மேனாட்டு முறையில் நடனமாடி ரசித்ததும் தம்பி, நாடு கண்ட
காட்சி! கண்ணீர் பொழிகிறான், காவிரிக் கரைக்காரன்; பன்னீரில்
குளித்தெழுந்து, பரிமள கந்தம் பூசி, பட்டுப் பட்டாடை அணிந்து
கொண்டு, பரங்கியர் முறையிலே "பால் டான்சு' ஆடினர், பண்டிதரின்
இல்லத்துச் செல்வக் குமாரிகள் - படாடோபம் கூடாது - ஆர்ப்பாட்டம்
ஆகாது - செல்வச் செருக்கு கூடாது - ஏழை மக்கள் புழுப்
போலத் துடிக்கும் போது பணக்காரர்கள் பகட்டாக வாழ்ந்து
காட்டுவது வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் என்று மற்றவர்களுக்கு
உபதேசம் செய்யும் பண்டிதர், இந்த அக்ரமத்தைக் கண்டித்தாரில்லை.
பிரான்சுப் புரட்சி வெடிக்கும்
முன்பு இது போல நடை பெற்ற துண்டு - மாளிகையிலே மதுக்குடம்
உருளும், இடை நெளியும், கடைசிவக்கும், கனவான்கள் கனகப்
பந்துகளைப் பெறுவர் காரிகையர் கோலமயில் போலாடுவர், குயிலெனக்
கூவுவர், சாகசச் சமரில் யாருக்கு யார் தோற்பது என்பதறிய
முடியாதது பிரச்னையாகும், இந்த அநீதியைத் தடுத்திட "காய்கதிர்ச்
செல்வனே! நீ யாவது முயன்று பார்'' என்று கூறிவிட்டு, நிலவு
மங்கை மறைவாள். கோழி கூவும், கோகிலங்களின் குறட்டை கேட்டு
அஞ்சும் - அதே நாட்டில், வயலில் செந்நீரும் கண்ணீரும்
சேறாகும்; கருவுற்ற காரிகையின் கதறலொலியைக் கேட்கக் சகியாத
கணவன், கர்த்தனின் ஆலயமணிச் சத்தத்தைக் கிளப்பி, சிந்தனையை
வேறு பக்கம்திருப்பிட முயல்வான். சவுக்கடி ஒரு புறம்,
சகதியில் வீழ்தல் மற்றோர் புறம், பட்டினிச் சாவு ஒரு
பக்கம், பயங்கர நோய் மற்றோர் பகுதியில், என்று இவ்வண்ணம்
ஏழை எளியோர் வதைபடுவர்.
பவனம் அமைக்கிறார்கள், பம்பாயில்,
திருட்டுப் படகேறியா வந்தாய், திரும்பிப் போ, என்று துரத்துகிறார்
கொத்தலாவலை, திரு இடத்தவரை.
வடநாட்டினன் என்றால் அவன்
அகதியாகட்டும், அன்னிய நாடுகளில் வசிப்பவனாகட்டும், ஆளும்
இனத்தவன் என்ற காரணத்தால், மதிப்பும் சலுகையும் பெறுகிறான்.
அகதிகளுக்காக இந்திய சர்க்கார்
அள்ளித் தந்த பணம் கொஞ்சமா?
அகதிகளுக்கு இங்கு எல்லாவகையான
வியாபாரமும் செய்து கொள்ள, வழியும், வசதியும் தரப்பட்டன.
புதிய அங்காடிகளே அமைக்கப்பட்டன.
அலுவலகங்களிலே நுழைவர் அகதிகள்
-ஆடவனாக இருந்தால் ஆத்திரத்தோடு சொல்வான், நானோர் அகதி
- என் சொத்து அத்தனையும் பாகிஸ்தானில் பறிபோய்விட்டது
- பத்து ரூபாய் தருவாயா - என்று கேட்பான். இரண்டோ மூன்றோ
கிடைக்கும், இவ்வளவு அற்பனா நீ, என்று கேட்பது போல, நம்மை
முறைத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக் கொண்டு போவான் ஆரணங்குக்கோ
இதழில் கீதம், கண்ணில் நடனம், - நம்மவர்களோ, நாலோ ஐந்தோ
அதிகம் தர இயலவில்லையே என்ற கவலையுடன் தருவர். ஒரு நமஸ்தே,
கிடைக்கும்; ஒரு பெருமூச்சுப் பிறக்கும்.
அகதிகளுக்காக ஆற்றோரத்தில்
அழகு நகர்கள் உண்டாக்கப்பட்டன திராவிடத்தில் அவர்களுக்கு
வாய்ப்புகள் தரப்பட்டன.
இதோ இலங்கையில் இடர்ப்படுகிறார்கள்
திராவிடர் - நாட்டற்றவர்கள் என்று நையாண்டி செய்யப்படுகிறார்கள்
- யார் அவர்களைக் காப்பாற்றக் கவலை கொள்கிறார்கள்?
இந்தப் பிரச்சினையைச் சென்னை
சர்க்கார் கவனித்துக் கொள்ளும் என்று தேஷ்முக் தெளிவளிக்கிறார்.
எவ்வளவு திகைப்பூட்டும் பிரச்சினையையும் மிகச் சாதாரணமாகக்
கருதி மிகத் தாராளமாக வாக்களித்துக் கொண்டு வரும் காமராஜரோ,
இது ஒரு பிரச்சினையே அல்ல - இலங்கையிலிருந்து வருபவர்கள்,
தாங்களாகவே இங்கு வேலைதேடிக் கொள்வார்கள்,
பிழைத்துப் போவார்கள் என்று கூறிவிடுகிறார்.
பம்பாய் மாகாணக் காங்கிரஸ்
கமிட்டித் தலைவர் படீல், கிழக்கு ஆப்பிரிக்கா சென்று,
அங்கு வாழும் இந்தியர்களிடம் பல இலட்ச ரூபாய் வசூல் செய்து
கொண்டு வந்திருக்கிறார் - இந்த பவனம் அமைக்கும் செயலில்
ஈடுபட்டிருக்கிறார்.
இலட்சக் கணக்கிலே பணம் தந்து,
பட்டீலை மகிழ்விக்கச் செய்ய முடிகிறது, வடவரால்,
கண்ணீரைத்தான் காண்கிறோம்
இலங்கையில் இடர்ப்படும் திராவிடரிடம் - அதைக் காண வெட்கமும்
வேதனையும் அடைகிறோம்.
அவர்களுக்கென்று இங்கோர்
தாயகம் இருக்கிறது.
எல்லா வளமும் கொஞ்சும்
நாடு.
எனினும், அவர்களுக்கு இங்கு
ஒரு கவளம் சோறு இல்லை.
அவர்கள் படும் அவதியைத்
துடைத்திடும் ஆற்றல் படைத்த ஒரு சர்க்கார் இல்லை.
அவர்கள் சொந்த நாட்டிற்கே
அகதிகளாக வந்து சேரும் போது, விதவை மகளைக் கட்டித் தழுவி
விம்மிடும் நலிவுற்ற தாய் போலாகிறது நாடு.
வாழ்கிறார்கள் வளமாக வெளிநாடுகளிலேயும்,
வடவர்; அந்த வசீகரத்தின் மெருகு கெடாதிருக்கச் செய்வதற்காக
பம்பாயில் பவனம் கட்டுகிறார் படீல்.
"தாராவி எங்கே இருக்கிறது?-''
என்று நான் கேட்டேன் - என்னை அழைத்துச் சென்ற பெரியாரிடம்.
பம்பாய் சுயமரியாதை இயக்கத் தோழர்களின் அழைப்பின் பேரில்
அங்கு போயிருந்தோம்.
"தாராவியா?...'' என்று
கேட்டபடி, இப்புறமும் அப்புறமும் பார்த்தார். அவருடைய
நாசி விரிந்தது, குவிந்தது,- என்ன இது என்று நான் கூர்ந்து
கவனித்தேன். "இதோ அருகாமையில் தான் தாராவி - நாற்றமடிக்கிறதே,
தெரியவில்லையா?'' என்று கேட்டார் - கேட்டுவிட்டு விளக்கமளித்தார்.
தோல் பதனிடுகிறார்கள், அந்தத் துர்நாற்றம் அடிக்கிறது.
இப்படிப் பட்ட இடம்தானே நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும்,
அதனால் தான் தாராவி அருகாமையில் இருக்கிறது என்று கூறினேன்
என்றார். உண்மையாகவே, தாராவியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.
திராவிடர் வடநாடு ஆனாலும்
இலங்கையானாலும், சென்று வாழ்கின்றார்கள் என்பதல்ல பொருள்,
வதைபடுகிறார்கள்.
கங்கைகொண்டான், இமயத்தில்
கொடி பொறித்தான்' ஈழம் சென்றான், கடாரம் வென்றான், சாவகம்
சென்றான், யவனம் கண்டான் என்றெல்லாம் ஆராய்ச்சி அறைகிறது
- உண்மையிலேயே, நமது இதயத்திலே அறைவது போலத்தான் இருக்கிறது,
ஆராய்ச்சியாளர் கூறும்போது. இன்றோ! பம்பாயில் பவனம்
கட்டுகிறாôகள், பதினாறு இலட்சம் செலவிடுகிறார்கள் - பாண்டியன்
பரம்பரை என்ற பட்டயம் பெற்றுள்ள திராவிடர்கள் "கள்ளத்
தோணிகள்' என்று நிந்திக்கப்படுகிறார்கள்.
தொழிலெல்லாம் அங்கே, துரைத்தனம்
அங்கே என்று ஆகிவிட்ட போது, ஒரு பவனம் தானா கட்ட முடியும்!
வடநாடு, தென்னாடு என்று
பேதம் பேசாதே, பவனம் பம்பாயில் இருந்தால் என்ன, அதற்குச்
சாக்கடை சுத்தம் செய்யும் மேஸ்திரி யார் தெரியுமா? நான்
தான்; தெரிந்து கொள் - என்று நம்மை மிரட்டுகிறார் அழகேசனார்.
அவர்களின் கருத்திலே, இலங்கைத் திராவிடர் பிரச்சினை என்று
ஒன்று இருப்பதாகக் கூடத் தெரிவதில்லை - பிரன்சுப் பிரபுக்களிடம்
பில்லைச் சேவகம் பார்த்துப் பிழைத்து வந்தவர்கள், பிரபு
போதை மிகுதியால் மயங்கிக் கிடக்கும் நேரத்தில், கோப்பையில்
மிச்சமாக இருந்த பானத்தைப் பருகிவிட்டு, நானும் இப்போது
பிரபுதான் என்று குளறுவராம். கேளுங்கள் கோவைக் கோமானை,
விருதுநகர் அண்ணலை, சோப்புச் சீமானை, தண்ணீரில்லாத ஆறுக்கு
இரும்பே சேராத பாலம் கட்டிப் பரவசப்படும் ஓமலூர் கனவானை
- செச்சே! தொழில் எங்கே வளர்ந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில்தானே
- என்ற சமரசம் பேசுகிறார்கள் - அதற்காகச் சம்பளமும் தருகிறார்கள்!
ரகுபதி ராகவ ராஜாராம் -
பதீத பாவன சீதாராம் -
கியாகர்ணா பகவான் -
வைஷ்ணவ ஜனதோ
இப்படிப் பஜனைப் பாடுகிறார்கள்;
பகவத் நாமத்தைக் கூறுகிறார்கள் பாலகர்கள்.
பாபா! மாராஜ்! பாய்யோ!
சேட்ஜீ! நமஸ்த்தே; நமஸ்த்தே! என்று கூவிப் பிச்சை எடுக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசம், அசாம்,
பீகார், மேற்குவங்கம் இங்கிருந்தெல்லாம், சிறார்களை ஒரு
கயவாளிக் கூட்டம் ஏய்த்து அழைத்துக் கொண்டு போகிறதாம்.
உங்களுக்கு நல்ல சாப்பாடு; நல்ல துணிமணி, படிப்பு சொல்லித்
தருகிறோம் எங்களோடு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை
சொல்லி ஏழை எளியவர் வீட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு
போகிறார்கள். தொலை தூரத்தில் அழைத்துச் சென்று அந்தச்
சிறுவர்களை பிச்சையெடுக்கச் சொல்லிப் பயிற்சியளிக்கிறார்கள்.
பஜனை பாட,பல்லைக் காட்டிக் கெஞ்ச, நமஸ்த்தே சொல்ல, கண்ணீர்
சிந்த - இத்தகைய பாடம் சொல்லிக் கொடுத்து, சிறார்களை
பிச்சை எடுக்கச் செய்கிறார்கள். அந்தச் சிறுவர்கள், இம்சை
தாளாமல், பிச்சைக்காரர்களாக, குழல் ஊதிக் கொண்டும், மேளம்
கொட்டிக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும், உள்ளம்
உருகச் செய்யும் பாடல்கள் பாடிக் கொண்டும், தெருத் தெருவாகப்
பிச்சை எடுத்து, அந்தக் கயவர்களிடம் பணத்தைக் கொடுக்கிறார்களாம்
- சோறு, கந்தல் - இவை கிடைக்குமாம் சிறுவர்களுக்க. ஓடிவிட
முயன்றால, உதை, குத்து. பிச்சைக் காசு குறைந்தால் தலையில்
குட்டு, கன்னத்தில் அறை, இப்படிக் கொடுமைகள்!
1400-சிறுவர்கள்; 147-சிறுமிகள்
காப்பாற்றப்படும் ஒரு ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்
- நீங்கள் தருகிற பணம் அந்த ஆசிரமத்துக்குத்தான் என்று
புளுகிப் பிச்சை எடுக்கும்படி, சிறுவர்களை, அக் கயவர்கள்
மிரட்டி வேலை வாங்கி வருகிறார்கள். போலீசுக்கு, இந்த
அக்ரமம் தெரிந்து, இப்போது கயவர் சிலர் பிடிட்டதாகச்
செய்தி வந்திருக்கிறது.
டில்லி சர்க்காரில் மந்திரி
வேலை பெற்றுக் கொண்டு, இங்கே அடிக்கடி பவனிவந்து வடநாடு
தென்னாடு என்று பேசுவது கூடாது, அகில பாரதம், ஏக இந்தியா,
என்ற தத்துவத்தைத் தாரகமாகக் கொள்ள வேண்டும் என்று இங்கு
"பிரசங்கம்' செய்பவர்களின் மீது நினைவு சென்றது எனக்கு,
இந்தச் செய்தியைப் படித்தபோது.
ஏய்த்துப் பிழைப்பவர்கள்
ஏமாளிச் சிறுவர்களைப் பிச்சைக் காரர்களாக்கி, பணம் பறிக்கிறார்கள்.
பதவிக்குப் பல்லிளிப்போரை,
பசப்பிடத் தெரிந்த வடநாட்டுத் தலைவர்கள், மந்திரி வேஷம்
போடச் செய்து, தொண்டரடிப்பொடி ஆழ்வார்களாக்கி, திராவிடத்திலே
"பஜனை' செய்யச் சொல்கிறார்கள்.
இங்கே வரி வசூலித்துத் தருகிறார்கள்
- பஜனையும் நடத்துகிறார்கள் - பாதி தேங்காய் மூடியும்
ஒரு பிடி சுண்டலும் கொஞ்சம் வெண் பொங்கலும் கிடைக்கிறது
- உண்டு, உருசி உருசி! என்று கூவி ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள்
இந்த அடிவருடிகள். இவர்களின் இனத்தவர், திராவிடர், வெளிநாடு
சென்றாவது வாழ்வு நடத்துவோம் என்று கடல் கடந்து சென்றும்,
வறுமையையே கண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் சார்பாக
வாதாடவும் வகையற்றுக் கிடக்கிறார்கள். - அதேபோது, வெளிநாடுகளிலே
வியாபாரக் கோமான்களாகி வடவர் கொழுக்கிறார்கள் - வெளிநாடு
சென்றுள்ளவர்களின் சீர்சிதையாதிருக்கப்பாதுகாப்புத் தேடப்படுகிறது,
ஆறடுக்குப் பவனம் கட்டப்படுகிறது.
அங்கே பவனம்!
இங்கே?
தம்பி, அழகேசர்களின் கவனமெல்லாம்,
தங்களுக்கு அடுத்த முறை என்ன பதவி கிடைக்கும் என்று ஆருடம்
பார்ப்பதிலும். நேருவின் தயவைப் பெற்றால் எங்காவது ஒரு
ராஜபவனத்தில் கொலுவிருக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று
ஏங்கிக் கிடப்பதிலும்தான் செல்லும். அவர்கள், ஏன் வடநாடு,
தென்னாடு என்று பேசுவது பேதமை என்று கூறுகிறார்கள் என்ற
சூட்சமம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது; எனவே,
அவர்களின் பேச்சுப் பற்றிக் கவலைப் படாமல், நீ, வடநாட்டவர்கள்
பவனங்களில் வாழ்வதை எடுத்துக் காட்டி, இது நியாயமா? ஏன்
இதனை அனுமதிக்க வேண்டும்? எத்தனை காலத்துக்கு இதைச் சகித்துக்
கொள்ள முடியும்? நமக்கென்று ஓர் நாடு இல்லையா? அது ஏன்
அன்னியரின் வேட்டைக்காடாகி இருக்கிறது? என்று கேட்டுக்
கேட்டு அவர்களின் முகம் கேள்விக் குறியாக மாறும்படி செய்.
தம்பி! பிறகு பார், இந்த அழகேசர்களின் நிலையை! ஆப்பசைத்த
மந்தி கதை தெரியுமல்லவா - சிறுவனாக இருக்கும் போது சொல்வார்களே
- அந்த நிலைதான்!
அங்கே பவனம், தம்பி, இங்கே
படகுப் பயணம்.
அங்கே ஆறு அடுக்கு மாளிகை,
இங்கே சேரி.
இதை எடுத்துக் காட்டு, தம்பி;
நித்த நித்தம் எடுத்துக் காட்டு; தொடுக்கப்படும் தூற்றல்
கணைகளைத் துச்சமென்று எண்ணி தூய உள்ளத்துடன் தாயக விடுதலைக்கான
தன்னிகரற்ற தொண்டாற்றிக் கொண்டிரு. பிறகு பார், நாட்டிலே
புதியதோர் பொலிவு பூத்திடுவதை; உன் பணியினால், நம் நாடு
பொன்னாடு ஆகத்தான் போகிறது. ஒப்பற்ற பணியிலே தம்பி,
நாம் ஈடுபட்டிருக்கிறோம்; உன் அருந்திறனை நம்பித்தான்,
மார்தட்டி நின்று மாற்றாரிடம் சொல்லி வருகிறேன், திராவிட
நாடு திராவிடருக்கே என்று.
அன்புள்ள,

17-7-1955