அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே! - (1)

சுதந்தரத்துக்கு முன் பேசியதை இன்று மறந்தோமே !
உள்நாட்டான் ஆட்சியை எதிர்ப்பது அத்தனை எளிதன்று !
உள்ளதை உள்ளபடி உரைப்பதே உன்னதப் பண்பு !

தம்பி,

கொள்ளைச் சம்பளம் ஒழிக !
குட்டிக் குபேரர் கூண்டோடு ஒழிக !
அதிகாரவர்க்கம் அடியோடு ஒழிக !
ஆடம்பரச் செலவு ஒழிக ! ஒழிக !

இவ்விதமான முழக்கம் நாடெங்கும் எழுப்பப்பட்டு வந்ததே, நினைவிலிருக்கிறதா! ஆத்திரம் பீறிட்டுக் கிளம்புமே! அக்கிரமம்! அநியாயம்! என்று பலரும் கூறுவார்களே, சபிப் பார்களே, கவனமிருக்கிறதா! ஏழை இங்கே சோற்றுக்குத் "ததிங்கிணத்தோம்' போடுகிறான். அவனைக் கசக்சிப் பிழிந்து வரி வாங்கிக் குவித்துக் கொண்டு "பரங்கிப் பயல்கள்' குடித்து விட்டுப் புரளுகிறார்களே. இது அடுக்குமா? குந்தக் குடிசையின்றி ஏழை வதைபடுகிறான், குளிப்பதற்குப் பளிங்குக் குளம் அமைத்துக் கொண்டு கொட்டமடிக்கிறான் வெள்ளையன், இது நீதியா! குமுறிக் குமுறிச் சாகிறான் ஏழை இங்கு, இந்த நாட்டில் பிறந்தவன்; எந்த நாட்டிலேயோ இருந்து இங்கே வந்தவன், தான் வளர்க்கும் குச்சி நாய்க்குப் "பிஸ்கட்டு' தருகிறானே, பார்த்தீர்களா அக்கிரமத்தை! ஆடை இல்லை, இந்த நாட்டுக் குடிமகனுக்கு, வந்தவன் வசித்திடும் மாளிகை ஜன்னலுக்கு வண்ணத் துணியாலே அலங்காரம் செய்கிறானே, காண்போரின் கண்கள் கனலைக் கக்காதிருக்குமா? வரி! வரி! வரி! ஓயாமல் சரி! எதற்கும் வரி! எப்போதும் வரி! அவ்வளவும் எதற்குப் பயன்படுகிறது; வந்தவன் ஆயிரக்கணக்கிலே சம்பளம் பெறத்தானே! இத்தகைய அக்கிரம ஆட்சியை அகற்ற வேண்டாமா!

கொள்ளைச் சம்பளம் ஒழிக !
குட்டிக் குபேரர் கூண்டோடு ஒழிக !
அதிகாரவர்க்கம் அடியோடு ஒழிக !
ஆடம்பரச் செலவு ஒழிக ! ஒழிக !

இதுபோல எழுப்பப்பட்ட முழக்கம் கேட்கப்படாத ஊர் இல்லை! ஒவ்வொரு நாளும் முழக்கம்! ஒவ்வொரு முழக்கமும் அடிவயிற்றிலிருந்து! ஒரு கூட்டம் கிளப்பிய கூச்சல் அல்ல, ஒரு நாடு எழுப்பிடும் நாதம், விடுதலைக்கான கீதம், அன்னியனை விரட்டிடும் துந்துபி, ஆத்ம பலத்தின் எதிரொலி! - இவ்விதமாக வெல்லாம் பேசப்பட்டது நினைவிலிருக்கிறதல்லவா?

நினைவிலிருக்கிறது அண்ணா! நினைவிலிருக்கிறது; ஆனால், இப்போது எதற்காக அதனை நீ நினைவுபடுத்துகிறாய்? அந்த முழக்கம், தேசிய ஆர்வத்தின் காரணமாக எழுந்தது. தூங்கிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி விட்டது. கேடான ஆட்சியை எதிர்த்திடும் ஆற்றலை அளித்தது. நல்லாட்சி அமைத்தாக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தந்தது. நமதாட்சி அமைத்திடும் உறுதி பிறந்தது, தேசிய எழுச்சி எழிலுடன் விளங்கிய நாட்களில் கிளம்பிய முழக்கம்.

கொள்ளைச் சம்பளம் ஒழிக !
குட்டிக் குபேரர் கூண்டோடு ஒழிக !

என்பன போன்றவை! இப்போது அவை உன் நினைவிலிருக் கிறதா? என்று கேட்டிடக் காரணம் என்ன என்கின்றாய், தம்பி! அந்த நாட்களையும், அதுபோது சொன்னவைகளையும் மறந்தே விட்டோம், என்று நான் அல்ல, பதவியில் உயர்ந்தவர் அந்த நாட்களில் முழக்க முன்னணி நின்றவர் சொல்லியிருக்கிறார். அதனால்தான் நான் உன்னைக் கேட்கிறேன், அந்த நாட்களில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் நினைவிலிருக்கிறதா என்று.

நாட்டு விடுதலைக்காக மூட்டிவிடப்படும் ஆர்வம், இதயத்தில் கொழுந்துவிட்டு எரிவது, உலகெங்கும் காணக் கிடக்கும் ஓர் உன்னதம். இந்நாட்டுக்கு மட்டுமே உரியது அல்ல, அந்த ஆர்வம் தந்திடும் ஆற்றல், அடிமைத் தளைகளை உடைத்திடும், அன்னிய ஆட்சியை விரட்டிடும், நமது ஆட்சியை அமைத்தளித்திடும், அதிலே ஐயமில்லை. அஃது இங்கும் நம் கண் முன்பாகவே நடைபெற்றுவிட்டது.

முழக்கம் எழுப்புவதும், முறையாக முனைந்து பணியாற்றி னால் பலன் கிடைப்பதும் கடினம் அல்ல; குருதி கொட்டிடவும் குடும்பத்தைச் சிதைத்துக் கொள்ளவும், குண்டடிபட்டுச் சாகவும் குலக்கொடி அறுக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ளவும் தேவைப்படும் வீரம், தீரம், தியாகம் அந்த முழக்கம் எழுப்பிடும்; ஐயமில்லை.

ஆனால், விடுதலை கிடைத்த பிறகு, சொந்த ஆட்சி அமைந்த பிறகு, முன்பு எழுப்பிய முழக்கம், நினைவில் இருப்பது தான் கடினம். அந்த முழக்கம் எழுப்பியபோது என்னென்ன எழிலான "எதிர்காலம்' மனக்கண் முன் தென்பட்டதோ, அந்த நினைவு நெஞ்சைவிட்டு அகலாமலிருப்பதுதான் கடினம்.

அக்கிரமத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பிடும்போது, அந்த அக்கிரமத்தை வீழ்த்திவிட்டு, நீதியை அரியணை அமர்த்த வேண்டும் என்ற ஆர்வம், பின்னிப் பிணைந்து இருக்கிறது. அக்கிரமம் ஒழிக்கப்பட்டான பிறகும், எந்த நோக்கத்துடன் அன்று முழக்கம் எழுப்பினோம் என்ற நினைவு மட்டும் கலையாமல், குலையாமல் இருக்குமானால், அறம் அரசோச்ச வழி காணும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட முடியும்; வெற்றி பெற முடியும். முழக்கம் பற்றிய நினைவே அற்றுப் போய் விட்டால்? எழுச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நாட்களில், என்னென்ன திட்டமிட்டோம் என்ற நினைவு நசித்துப் போய் விட்டால்! வாதாடிப் போராடி, ஒளிவிளக்கைப் பெற்ற பிறகு, அதற்கு எண்ணெய் பெய்து, திரியிட்டு, ஏற்றி வைக்காவிட்டால்! இருளே ஒழிக! ஒளியே வருக! என்று முழக்கம் எழுப்பி, ஒளிவிளக்கினைப் பெற்றதனால் என்ன பயன்? இல்லையல்லவா! ஆகவேதான், விடுதலைக்கான ஆர்வத்துக்காக எழுப்பிய முழக்கம் பற்றிய நினைவு விடுதலை பெற்ற பிறகும் இருந்திட வேண்டும் என்கின்றனர் நல்லோர்.

விடுதலைப் போராட்ட காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை எதிர்த்த நாட்களில், அந்த ஆட்சியை என்னென்ன காரணத்துக்காகக் கண்டித்தோம், எதிர்த்துப் போரிட்டோம் என்பது விடுதலை பெற்ற பிறகு, சுயராஜ்யம் கண்ட பிறகு மறந்தே விட்டோமே, இது ஆகுமா என்று ஆயாசத்துடன் கேட்கிறார், முழக்க முன்னணியில் நின்றவர்; இன்று சுயராஜ்ய சர்க்காரில் இடம் பெற்றுள்ளவர்; அமைச்சர்.

அன்று எழுப்பிய முழக்கம் அவ்வளவும் மறந்தே போனீர் களே, முறையாகுமா! முன்பு கொண்டிருந்த இலட்சியம் யாவற் றையும் விட்டுவிட்டீர்களே, ஆகுமா, ஐயன்மீர்! முன்பு கூறினவற்றை இன்று நினைவிலே இருந்தே அகற்றிவிட்டீர்களே, தகுமா அரசாளவந்தோரே! என்று நானோ நீயோ கேட்டால், தம்பி! அதே அமைச்சரே கூட ஆர்த்தெழுந்து, ஆஹா! அங்ஙனம் சொல்லலாமா! நாங்களா இலட்சியத்தை மறந்திடுவோர்! எம்மைப் பார்த்தா கேட்கின்றீர்கள் துடுக்குத் தனமாக, பழைய நினைவுகள் உள்ளனவா என்று! - என்றெல் லாம் சாடுவார். ஆனால் அவரே கூறிவிட்டிருக்கிறார், அந்த நாளில் நாம் பேசியதை இன்று மறந்துவிட்டோமே என்பதாக. அன்று பேசியது என்னென்ன என்பது பற்றிய முழுப்பட்டியலை அவர் தரவில்லை. கோடிட்டுக் காட்டியிருக்கிறார், அறிவுத் தெளிவுள்ள மக்கள் அதிலிருந்தே முழுவதையும் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது அதிகார வர்க்கத்துக் காகப் பெருஞ் செலவு செய்யப்படும் அக்கிரமத்தைக் கண்டித்துப் பேசி வந்தோமே, அதனை இன்று நாமே மறந்து விட்டிருக்கிறோமே

என்ற அளவு மட்டுமே அவர் பேசியிருக்கிறார், ஆனால் "அன்றும் இன்றும்' எனும் தொடரும், "நிலையும் நினைப்பும்' எனும் தொடரும், தன்னாலே மனக்கண் முன்வந்து நிற்கிறதல்லவா?

அன்று அன்னிய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி நடாத்திய போது, கண்டித்துப் பேசிய பலவற்றிலே ஒன்றை மட்டும் அமைச்சர் குறிப்பிட்டுக் காட்டினார். அதிகார வர்க்கத்திற்காகச் செலவிடப்படும் பெருந்தொகை நாட்டு மக்களின் முதுகெலும்பை முறித்திடும் பெரிய சுமையாக இருப்பதனை, பிரிட்டிஷ் ஆட்சியினால் விளைந்த பல கேடுகளிலே, அதிகாரவர்க்கம் பெருத்ததும் கொழுத்ததும், வரித் தொகையில் பெரும் பகுதியை உறிஞ்சியதும் ஒன்றாகும்.

வயலுக்குப் பாய வேண்டிய தண்ணீரில் பெரும்பகுதியை வாய்க்காலே குடித்துத் தீர்த்துவிட்டால், வளமான விளைச்சல் எங்ஙனம் கிடைத்திட முடியும்? அதுபோலவே மக்களிடம் பெற்றிடும் வரிப்பணத்தில் பெரும் பகுதியை அதிகார வர்க்கம் கொழுத்திடவே செலவிட்டுவிட்டால், மக்களுக்கு நல்வாழ்வு அமைப்பதற்காகத் தேவைப்படும் செலவுக்குப் போதுமான பணம் எங்கிருந்து கிடைக்கும்?

வரி வாங்குவது மக்களின் நலன்களைப் பெருக்கிடவே என்ற உணர்வும், பொறுப்பும், அக்கறையும் இருக்குமானால், அதிகார வர்க்கத்தைக் கொழுத்திடச் செய்வதற்குப் பெரும் பொருளைச் செலவிட மனம் இடந்தருமா?

பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு, அந்தப் பரிவும் பொறுப்பும் இல்லை. அன்னியர் என்ற காரணத்தால்; அடக்கி ஆளவந்த வர்கள் என்பதனால்; சுரண்டல் யந்திரமாகவே சர்க்காரைக் கருதிய காரணத்தால்!

இந்தக் காரணத்தால்தான், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டபோது,

கொள்ளைச் சம்பளம் ஒழிக ! என்றும்
கோலாகல தர்பார் ஒழிக ! என்றும்

முழக்கம் எழுப்பப்பட்டது; விடுதலைப்போர் தொடுக்கப்பட்டது; வெற்றி கிடைத்தது; அன்னியராட்சி அகற்றப்பட்டது.

கொள்ளைச் சம்பளமும் கோலாகல தர்பாரும் ஒழிய வேண்டும் என்று எழுப்பிய முழக்கமும் அதன் தொடர்பான எண்ணமும், விடுதலை பெற்ற பிறகு நினைவிலே இருக்குமானால், நமது ஆட்சி அமைத்ததும்,

கொள்ளைச் சம்பளமும்
கோலாகல தர்பாரும்

ஒழிக்கப்பட்டு, மக்களின் நல்வாழ்வுக்கான வகையில், வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கும்.

அவ்விதம் இல்லையே என்பதுதான், அமைச்சருக்கே உள்ள வருத்தம். அன்று கொண்டிருந்த எண்ணம் இன்று நினைவிலே இல்லையே என்பது அவருக்கு வியப்பையும் வேதனையையும் தந்திருக்கிறது; அதையெல்லாம் மறந்தே போய்விட்டோமே! என்று கூறிக் குமுறுகிறார்.

ஆட்சியில் உள்ளவர்களைப் பார்த்து, முன்பு சொன்னதை யெல்லாம் மறந்தே போனீர்களே, இது முறையா என்று கேட்க வேண்டும்; கேட்டிடும் துணிவு எளிதிலே வருவதில்லை.

சென்னைக் கூட்டமொன்றில் பேசும்போது கிருபளானி சொன்னார், அன்னியனின் கொடுங்கோன்மையை ஒழித்துக் கட்ட ஒரே ஒரு பலமான முயற்சி போதும், வெற்றி கிடைத்திடும்.

ஆனால் நம் நாட்டவர்களே நம்மை ஆளும்போது அவர்கள் எண்ணிக்கைப் பலத்தைக்காட்டி நடத்திடும் கொடுங்கோன்மை இருக்கிறதே அதை எதிர்த்து ஒழித்திட ஒரு முயற்சி போதாது, தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஒரு நாட்டு மக்களை அடிமை கொண்டிடும் அன்னியன் நடத்திடும் தர்பார் கொடுங்கோன்மை என்று உணருவதும், அதனை எதிர்த்துக் கொதித்து எழுவதும் எவ்வளவு எளிதான தோ, அத்தனை எளிதானதல்ல, நம்மவர்களே நம்மை ஆளத்தொடங்கி கொடுங்கோன்மையை நடாத்தும்போது எதிர்த்திடுவது, அதிலே வெற்றி காண்பது.

பாய்ந்து வரும் புலியை அடித்துக் கொன்றிடலாம், ஆற்றலைப் பெற்றுக் கொண்டால். ஆனால் உடலுக்குள் புகுந்து கொள்ளும் கெட்ட கிருமிகளைக் கண்டறிந்து கொல்லுவது அவ்வளவு எளிதானதல்ல மிகப் பக்குவமான மருத்துவ முறையின் மூலமாக மட்டுமே நோய்க் கிருமிகளை அழித்திட முடியும்.

நம்முடைய ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பே தேனாக இனிக்கும். நெடுங்காலம். கேடுகள் கிளம்பித் தேளெனக் கொட்டும் போதுகூட, தேனுண்ட மயக்கம் பற்றிக் கொண்டிருக்கும், விட்டுவிட மறுக்கும்.

நம்மவர்களா நமக்குக் கேடு செய்வார்கள்.

அத்தனை ஆற்றலுடன் விடுதலைப் போர் நடத்தியவர்களா விபரீதம் புரிவார்கள்,

இலட்சிய முழக்கம் எழுப்பியவர்களா மக்களை அலட்சியப் படுத்துவார்கள்;

கொடுங்கோன்மையை எதிர்த்தவர்களா, கொடுங்கோலர்க ளாகி விடுவார்கள்.

நமக்கு நலன் பல காணத்தானே அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர்,

நாமாகப் பார்த்துத்தானே அவர்களை ஆட்சியில் அமர்த்தினோம்,

ஏழைக்குக் கேடுகள் என்னென்ன வடிவில் இருக்கும் என்பதை எடுத்துச் சொன்னவர்கள்தானே இன்று ஆட்சியில் உள்ளனர்,

கொள்ளைச் சம்பளம் ஒழிக ! கோலாகல தர்பார் ஒழிக ! என்று முழக்கம் எழுப்பியவர்கள்தானே இன்று முடிசூடா மன்னராகி உள்ளனர்.

என்ற எண்ணம், மக்களிடம் நிரம்பி நின்றிடும். அதன் பிடியி- ருந்து விடுபட்டு, நமது வீட்டு நெருப்பு என்பதாலே அது சுட்டெ ரிக்காமலிருந்திடுமோ, திருவிளக்கு எனினும் முத்தமிட்டால் உதடு புண்ணாகாது போகுமோ, நம்மவர்கள் ஆட்சி என்பதா லேயே, பொல்லாததெல்லாம் நல்லது ஆகிவிடுமோ, தங்கத்தாலான தெனினும் விலங்கு விலங்குதானே என்று உண்மையை உணர்ந்திட, எளிதிலே முடியாது. உணர்ந்த பிறகோ, நாமாகப் பார்த்து, நல்லது நடக்கும் என்று நம்பி, ஆட்சியில் அமர்த்திவிட்டவர்களை, நாமே எப்படி எதிர்ப்பது என்ற தயக்கம் குறுக்கிடும்.

அதுபோலவே, ஆட்சியில் அமர்ந்ததும், அலட்சியப் புத்தியி னாலோ, ஆணவத்தினாலோ, கூடா நட்பினாலோ, கூட்டுக் கொள்ளைப் போக்கினாலோ இலட்சியங்களைக் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, ஆணவ அரசு நடாத்திடும் நிலையிலும்,

இந்த மக்களுக்காக என்னென்ன இன்னலை ஏற்றோம்!

இவர்களை அன்னியன் பிடியிலிருந்து விடுவிக்க எத்தனை அரும்பாடு பட்டோம்!

விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வை இவர்கட்கு ஊட்டினதையும் மறந்தனரே! தலைவரே என்றும் தயாபரா என்றும், தாள் பணிவோம் என்றும், உடல் பொருள் ஆவியைத் தருவோம் என்றும் பேசி வந்த இந்த மக்கள், - முறையா என்றும், சரியா என்றும், ஆகுமா என்றும், அடுக்குமா என்றும், நம்மையே எதிர்த்துப் பேசுகிறார்களே, நன்றி கெட்ட நிலையில்!

என்று எண்ணிக் கோபித்துக் கொள்வதும், புத்திமதி புகட்ட முனைவதும், அதற்கும் மக்கள் கட்டுப்படாமலிருந்திடின்,

சுயராஜ்யம் என்றால், சுக்கல்ல மிளகல்ல என்றும்,

ஆட்சியை எதிர்த்திடின் அடக்கியே தீருவோம் என்றும்,

கலாம் விளைத்திடின் தண்டனை தருவோம் என்றும்,

மிரட்டிப் பேசிடவும், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முனைந்துவிடுவர். அடக்க அடக்க எதிர்ப்பு வளர்ந்திடக் கண்டாலோ,

நாட்டுப்பற்று அற்றவர்கள் நாசவேலைத் திட்டமிடு கிறார்கள் என்றும்,

வெளியேறிய அன்னியனை மீண்டும் அரச பீடம் ஏற்றச் செய்யப்படும் சூழ்ச்சி இது என்றும்,

ஆயுத பலமிக்க அன்னியனை விரட்டிய எமக்கு, இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவது முடியாததாகுமா என்றும்,

பெற்ற சுதந்தரத்தைப் பேணி காத்திடும் கடமைக்காக, பொறுப்பற்றவர்களை அடக்கித் தீர வேண்டியது எமது கடமை என்றும்,

கிளர்ச்சி மூட்டி கலாம் விளைவித்து ஆட்சியைக் கைப்பற்ற ஒரு சதிக் கும்பல் வேலை செய்கிறது என்றும்,

பதவிப் பித்தம் பிடித்தலையும் ஒரு கூட்டம், சட்டத் தையே துச்சமென்று எண்ணிச் செய்திடும் "அராஜக'த்தை அடக்கிடும் ஆற்றல் எமக்கு உண்டு என்றும்,

புதிதாக விடுதலை பெற்றுப் பொன்னாடாக நம் நாட்டைச் செய்திடும் புனிதப் போர் நடாத்திவரும் வேளையில், புல்லர்கள் கிளம்பி உள்ளனர்; பொசுக்கியே தீருவோம் என்றும்,

நாட்டுப் பற்று என்றால், உரிமை! உரிமை! என்று சதா கூச்சலிடுவது அல்ல;

கடமை! கடமை மறவாதீர் என்றும்,

மிரட்டியும் மயக்கியும். எதிர்ப்பினை முறியடித்திட முனைவர்.

வெளிநாட்டானை எதிர்த்து ஒரு நாட்டு மக்கள் நடாத்திடும் போர், தேசிய விடுதலைப் போர் எனும் சிறப்புப் பெயர் பெற்றிடும்; பற்பல நாட்டினரும் பாராட்டி வரவேற்பர், சிற்சில நாட்டினர் துணையும் புரிவர்.

ஆனால், ஒரு நாட்டு மக்களை அந்நாட்டு மக்களிலேயே சிலர் ஆண்டிடும்போது ஆட்சிக் கொடுமையினை எதிர்த்து, கிளர்ச்சி நடந்திடின், அதனைச் சட்டத்தையும் ஒழுங்கையும் குலைத்திடும் செயலென்றும் கலகம் குழப்பம் மூட்டிடும் செயலென்றும், உள்நாட்டுக் கலவரம் விளைவித்திடும் பயங்கரமென்றும் ஆட்சியினர் கூறிடுவர்; பற்பல நாட்டினர் ஆமென்பர்; சிற்சிலர் மக்களின் மனக்குமுறலைக் கவனித்துப் பரிகாரம் தேடித்தருவதே முறை என்று வாதிட முன்வந்திடின், "உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது, சர்வதேச நியதிக்கே முரணானது' என்று பேசிடுவர்.

இத்தனை இன்னல்கள் எழும் என்பதனால்தான் கிருபளானி அவர்கள், வெளிநாட்டானின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒழிப்பது எளிதான காரியம், உள் நாட்டானே ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு கேடு செய்திடின், அந்த ஆட்சியை எதிர்த்து நிற்பதும், மாற்றி அமைப்பதும் அத்தனை எளிதானதல்ல என்று கூறினார்.

மயக்கவும் மிரட்டவும் வசதியும் வல்லமையும் பெற்றுக் கொள்ளும் நம்மவர் நடத்திடும் ஆட்சியை மாற்றி அமைத்திடும் ஆற்றல் மக்களுக்கு ஏற்பட்டாலொழிய, உண்மையான மக்க ளாட்சி, நல்லாட்சி மலர்ந்திடாது.

அந்த ஆற்றலுக்கு அடிப்படை, ஆட்சியை ஏற்றுக் கொண்ட வர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதையெதைச் சொன்னார் களோ, அவைகளை மறவாமல், நடந்து கொள்ளுகிறார்களா என்பதை, விழிப்புடன் இருந்து கண்டறியும் திறனும், தவறி நடந்திடின் தடுத்திடும் கடமை உணர்வும், மக்களிடம் வளர வேண்டும்.

அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே! இப்போது அடித்துத் துரத்திட துணிந்தாயே! வாழ வைப்பேன் என்று கை அடித்தாயே, இப்போ வாட்டி வதைக்கிறாயே வாழ்வையே! - என்று கொடுமை செய்திடும் கணவனை அழுகுரலிலாகிலும் மனைவி கேட்டிடக் காண்கிறோம்! ஆட்சி நடாத்திடுவோர் முன்பு சொன்னவைகளை மறந்து தவறான போக்கிலே செல்லும்போது ஆகுமா இது என்று கேட்டிடவும் அன்றையப் பேச்செல்லாம் நினைவிலே இல்லையா என்று கேட்கவும் மக்கள் முன்வந்தாக வேண்டும்; தன் ஆடையே என்றாலும் அழுக்கு ஏறிவிடின் வெளுத்தாக வேண்டும்.

ஒரு சிலர் துணிந்து கடமையாற்றிடும்போது, அவர்களிடம் கடும் கோபம் கொண்டு, தாக்கிடும் போக்கிலேயே ஆட்சியினர் உள்ளனர் என்றாலும், சிற்சில வேளைகளில், அவர்களையும் அறியாது உண்மை நிலைமையை அவர்களே எடுத்துக் காட்டிவிடுகின்றனர்.

அத்தகைய ஒரு நேரத்தில் என்று எண்ணுகிறேன், தம்பி! டில்லிப் பேரரசின் அமைச்சர் அளகேசன் அவர்கள்,

தீட்டப்படும் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் பணத்திலே பெரும்பகுதி வீண் ஆடம்பரத்திற்காகவும், அதிகார வர்க்கத்துக்காகவும் செலவழிக்கப்பட்டு விடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வந்தபோது, அதிகாரிகளுக் கான செலவு பெரிய பளுவாகிப் போயிருப்பதை நாம் கண்டித்து வந்தோமே, இப்போது, அதனை மறந்தே போய்விட்டோமே!

என்று பேசி இருக்கிறார்.

பக்திப் பாசுரங்களில் அளகேசன் அவர்கள் நிரம்ப ஈடுபாடு ள்ளவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் காரணமாக வோ என்னவோ ஏற்பட்டு விட்ட குறைபாட்டினை அவரே எடுத்துக்காட்டிட முனைந்திருக்கிறார்.

மாயலோகமிது என்பதனை மறந்தேனே !
மாநிதி திரட்டிடவே முனைந்தேனே !
மாபாதகச் செயலில் அமிழ்ந்தேனே !
மாதேவன் மன்னித்திடுவானோ !

என்றெல்லாம் உள்ள பதிகம்போல, அதிகாரவர்க்கத்திற்காக ஏராளமான பணத்தைக் கொட்டி அழுகிறீர்களே ஆகுமா என்று அன்று கேட்டோமே; இன்று அதனை அடியோடு மறந்து விட்டோமே என்று பேசியிருக்கிறார்.

திட்டங்களுக்காக ஒதுக்கும் தொகையிலே பெரும் அளவு, சொகுசான விடுதிகளை (அதிகாரிகளுக்காக)க் கட்டச் செலவழித்து விடுவது பற்றியும்,

திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பல தொழில் அமைப்புகளில் அதிகாரிகளுக்காக அமைக்கப்படும் சிங்காரத் தோற்றம் கொண்ட சிறு நகரங்கள் போன்ற நேர்த்தி, தொழிற் சாலையிலே காணப்படுவதில்லை என்றும் அமைச்சர் அளகேசன் கூறினார்; குமுறினார்.

உள்ளதை உள்ளபடி உரைத்திடுவது உன்னதமான பண்பு என்ற முறையில், இதனை நான் வரவேற்கிறேன்; ஆனால் இந்தக் குறைபாடு ஏற்படுவதற்குக் காரணமாக உள்ள ஆட்சியில் பொறுப்பான பங்கு பெற்றிருப்பவர் என்பதாலே, இவரும் அதற்கு "உடந்தை'யாக இருந்தார் என்பதனை எப்படி எடுத்துக் காட்டாதிருக்க முடியும்?

மக்களின் பணம் பாழாக்கப்பட்டிருக்கிறது. இதனை ஒப்புக் கொண்டுவிடுவது, இழைக்கப்பட்டுவிட்ட கேட்டி னைத் துடைத்துவிடுமா!!

இனி, இதுபோலப் பணம் பாழாகி இருப்பது, இதுவரையில் தெரியாமலிருந்தது. எவரும் இதனை இதற்கு முன்பு எடுத்துக் காட்டிடவில்லை. அதனால்தான் இந்தக் கெடுதல் ஏற்பட்டு விட்டது என்று வாதாடுவார்களோ, தம்பி! அது மிகமிகச் சொத்தையான வாதம் என்றே கூறுவேன். ஏன் என்று கேட்கிறாயா, தம்பி! தக்க காரணத்தோடுதான் அவ்விதம் சொல்லுகிறேன். அதற்கான விளக்கம் அடுத்த கிழமை தருகிறேன்.

அண்ணன்,

26-12-65