அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறச்சாலை
2

சிறைக் கதவுகளெல்லாம் திறக்கப்படுகின்றன!

வங்க மாதாகீ ஜே!-என்று வெற்றி முழக்கமிட்டபடி, அணி அணியாக வீரர்கள், விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள்.

சிறைத் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் வெளியே வருகிறார்கள் என்பதல்ல - எதற்காகச் சிறை சென்றார்களோ அந்த இலட்சியம் ஈடேறிவிட்டது - அவர்களைச் சிறையிலே தள்ளிய சர்க்காரே, வெட்கத்தால் வேதனைப்பட்டுக்கொண்ட நிலையிலேயே வெற்றி வீரர்களை விடுதலை செய்கிறது.

பத்தாயிரம் வீரர்களுக்கு மேல் "விடுதலை' பெற்று விட்டனர்; இன்னும் ஓரிரு ஆயிரவர், வெளியில் வரவேண்டுமாம்.

பீகாரும் - வங்கமும் இணைகிறது - என்றார், வங்க முதலமைச்சர்!

இதைக் கூற, ஒரு முதலமைச்சரா? கூறுவோர் ஒரு வங்கத்தவரா? எங்கே அவர்? அவர் திருமுகத்தைக் காண வேண்டும்! தாயகத்தை மறந்து, மக்களை மதியாமல் துரோபதையைப் பந்தயப் பொருளாக்கிச் சூதாடிய தருமன் போல, காட்டான் எவனோ கேட்டான் என்பதற்காக நாட்டைக் கொடுத்த மன்னன்போல, நேரு துரைமகனார், அந்த நேரத்தில் தோன்றிய ஒரு விருப்பத்தைக் கூற, அவருடைய ஆசையை நிறைவேற்ற, ஆங்கில அரசை முதன் முதலில் ஆண்மையுடன் எதிர்த்த வங்கத்தை, ஆயிரமாயிரம் வீரர்களைச் சிறைக்கனுப்பி, செந்தீயாகத் தேசியத்தை வளர்த்த வங்கத்தை வெடி குண்டு வீசியேனும் வெள்ளையனை விரட்ட வேண்டும் என்ற அளவுக்கு விடுதலைப் போரார்வம் காட்டிய வங்கத்தை, காவலரும் நாவலரும் புகழத்தக்க கவிச்சக்கரவர்த்தியாம் தாகூரைத் தரணிக்குத் தந்த வங்கத்தை, எதிர்ப்புக்கு அஞ்சாச் சிங்கம், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த வங்கத்தை, சுதந்திரச் சுடரொளியை, தனி நிலை, தனி ஆட்சி, தனி அமைப்பு இழந்திடச்செய்த, அந்த "தர்மவான்' எங்கே இருக்கிறார், சற்றே காட்டுங்கள், பார்ப்போம்! எமது கண்களின் கேள்விகளுக்கு அந்தக் கருத்துக் குழம்பியவர் என்ன பதிலளிக்கிறார் கேட்போம்? - என்று சீறிக் கூறியபடி கிளம்பினர் வங்க வீரர்கள். 12,000 பேர் சிறைப்பட்டனர்!

பத்துப்பேர் சிறைப்பட்டிருந்தாலும் போதும், ஆங்கில ஆட்சியின்போது, பத்திரிகைகளிலே ஓலமும் ஒப்பாரியும், சூளுரையும் பக்கங்களை நிரப்பும்; படம் வெளிவரும்; பாடல்கள் கிளம்பும்; தலையங்கத்திலே தீப்பொறி பறக்கும்.

பன்னிரண்டாயிரம் அறப்போர் வீரர்கள் சிறை சென்றனர் - பத்திரிகைகள் பலமான இருட்டடிப்பு நடத்தி விட்டன.

ஒரு திங்களுக்குள் பன்னிரண்டாயிரம் பேர் சிறை சென்றுள்ளனர் - காமராஜர் மோட்டார் மீது வேறு ஏதோ மோட்டார் உராய்ந்தது பற்றிய செய்திக்குக் கிடைத்த இடம் கூட, இதற்குக் கிடைக்கவில்லை.

இருட்டடிப்புத்தான் செய்ய முடிந்ததே தவிர, வங்கத்தின் எழுச்சியையுமா அழித்திட முடிந்தது? முடிகிற காரியமா? வங்கத்தில், காங்கிரஸ் முதலமைச்சர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கூட, "விஷப்பரீட்சை'யாகி விட்டது.

யாராவது ஒரு கல்லூரி மாணவன் கண்ணில் முதலமைச்சர் பட்டுவிட்டால், தீர்ந்தது. துரோகியே திரும்பிப் போ! பதவியை ராஜிநாமாச் செய் என்று முழக்கம் எழுகிறது. வங்கமென்ன, காமராஜர்களைத் தாங்கிக் கொள்ளும் போக்கிலா இருக்கும்! இங்குதான் நமக்கு, எது பறிபோனாலும் பரவாயில்லை. எத்துணை நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆட்சியில் அமர்ந்திருக்க ஒரு பச்சைத் தமிழர் கிடைத்தால் போதும் என்று கூறத் தலைவர்கள் இருக்கிறார்கள். வங்கம் அவ்விதமா இருக்கும்? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர் - இப்போது இணைப்பு கைவிடப்பட்டது என்று வங்க முதலமைச்சர், மக்களுக்குத் தெரிவித்துவிட்டார்; டில்லிக்கு அறிவித்துவிட்டார்!

இங்கே சேதுபதியும், கோவை நிதியும், பொன்னேரி உழவும் பிறவும், தமிழ்நாடு தனியாக இருக்கக் கூடாது - எதனுடனாவது, எப்படியாவது இணைப்பு வேண்டும் - தட்சிணப் பிரதேசம் வேண்டும் என்று பேசவும், யாரோ, எதையோ பேசிக்கொண்டு போகட்டும், முதல் மந்திரி நான்தானே? அதிலே ஒன்றும் தகராறு இல்லையே! ரொம்பச் சரி! - என்று மகிழ்ந்து கூறி, ஊர்வலம் நடாத்தும் காமராஜரும் உளர்! அவர்கள் நீண்ட நாவினராகவும் உளர்!!

எழுச்சி பெற்ற மராட்டியம், வெற்றி கண்ட வங்கம், இவை மட்டுமல்ல. நெரித்த புருவத்தை மாற்றிக்கொண்டு, நேரு துரைமகனார் நாகர்களுக்கு, புதுப்புது சலுகைகளும், சிறுசிறு உரிமைகளும் தருகிறேன் என்று பேரம் பேசிடக் காண்கிறோம்.

இங்கோ, டில்லியிடம் இடிபட்டும் இன உணர்வு துளியும் பெறாத ஒரு தமிழர், "தமிழ்நாடு' என்ற பெயரைச் சொன்னாலே தலையிறக்கமாக இருக்கிறது என்று தமிழகத்தில் பேசித் திரிகிறார் - அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்கிறார் - காரணமும் காட்டுகிறார் அதற்கு - ஓட்டு, மக்கள் எமக்குத்தானே அளித்தனர் என்று கேட்கிறார் - இதுகள் தேர்தலுக்கு நின்றால் விடுவேனா, எனக்கென்ன அவர் இல்லையா? இவர் இல்லையா? என்கிறார் - இதைக் கூற ஊரூருக்கும் செல்கிறார்.

"ஓட்டு' இவருக்கும் இவர் கட்சிக்கும் மக்கள் அளித்தார்கள், தம்பி, இல்லை என்பார் இல்லை; ஓட்டு அளித்தது எதற்கு?

"தொட்டதெல்லாம் பட்டுப்போகும் துரைத்தனம் நடத்தவா?

எடுத்ததற்கெல்லாம் டில்லிக்குக் காவடி தூக்கித் திரிவதற்கா?

தேக்கமும் அணையும் வடக்கே, சிறு பாசனத் திட்டம் தெற்கே என்ற ஓரவஞ்சனைக்கு வழிகோலவா?

அதிகாரமெல்லாம் டில்லிக்கே, நிதிக்குவியல் அங்கேயே, நிலைமை உயர்வது அவ்விடமே, கைகட்டி வாய்பொத்திக் கட்டியம் பார்ப்பது, திராவிடமே என்ற இழிநிலை பெறவா?

செலவிடப் போகும் 6000 கோடியில், ஐயனே! எமை ஆளும் கோவே! அருள்கூர்ந்து 400 கோடியேனும் தாரும் என்று இங்குள்ள மந்திரிகள் கெஞ்சிக் கூத்தாட, என்ன துணிவு இவ்வளவு கேட்க? என்று மிரட்டி, 170 கோடி தருகிறேன் என்று கூறி, அதையும் குறைத்திட, இதையேனும் கொடுத்தாயே, இறையே போற்றி! எமை ஆள அனுமதிக்கும் துரையே போற்றி! - என்று தோத்திரம் பாடிடும் துரைத்தனம் காணவா? எதற்காக "ஓட்' அளித்தனர்.

தேம்பும் தமிழனைத் தேற்றிட ஆற்றலின்றி, வேதனையில் உழல்பவனைக் கவனிக்க மனமின்றி, விலைவாசி விஷமென ஏறினாலும், பண்டங்கள் பாதாளச்சிறை புகுந்தாலும், பாட்டாளி பதைபதைத்தாலும், எதற்கும் கவலை செலுத்தாமல், "கனம்' ஆகிக் காலந்தள்ளும் "கண்ராவி'க் காட்சி காணவா "ஓட்' அளித்தனர்?

தடியடியும் சிறையும், துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திக் கொண்டு, எதிர்ப்புகளை நசுக்கிடும் எதேச்சாதிகாரம் காணவா "ஓட்' அளித்தனர்?

தமிழருக்குரிய "நிலத்தை' இழந்துவிட்டு, தமது ஏமாளித்தனத்தை மறைத்துக்கொள்ளத் தமிழர் தமது உரிமையையும் உடைமையையும், மானத்தையும் மாண்பையும், மரபையும் கெடுத்துக்கொள்ள மறுக்கும்போது அவர்களைத் தாக்கிடும் போக்குடன் நடந்து கொள்கிறார்களே, இந்த நிலை காணவா "ஓட்' அளித்தனர்?

தம்பி! இவைகளையும், இவை தமக்கு மூலாதாரமாக அமைந்துள்ள தாயக விடுதலைப் பிரச்சினை பற்றியும், நாம் கூடிப் பேசிட, கண்டோர் வியந்திடும் வகையிலோர் மாமன்றம் எழும்பியுள்ளது, திருச்சியில்.

இரவு இப்போது பகலை அழைத்துப் பணியாற்றச் சொல்லிவிட்டு, ஓய்வு கொள்ளச் செல்கிறது - விடிகிறது, தம்பி.

இடியும் மின்னலும், மழையும் காற்றும், என்னையும் மாநாட்டு அலுவலைக் கவனித்துக்கொண்டு இங்குள்ள நம் தோழர்களையும் மிரட்டிக்கொண்டிருந்த நள்ளிரவில், உன்னைப் பற்றிய நினைவு வந்தது. மாநாட்டுக்கான இந்த அழைப்பினை எழுதத் தொடங்கினேன்! இதோ, இரயிலுக்குக் கிளம்புவோர் ஏறிச்செல்லும் வண்டிகளின் ஒலி கேட்கிறது. உனக்காக - தம்பி - உற்சாகத்துடன் இங்கு மாநாட்டுக்கான எழிலை அளித்திட யாரார் பணியாற்றிக்கொண்டுள்ளனர் தெரியுமா...?....

இதேபோது, திருச்சியில் வேறோரிடத்தில் மதியழகனும் வில்லாளனும், மாநாட்டுக் கொட்டகையிலும் திருச்சி நெடுஞ்சாலையிலும் அமைக்கவேண்டிய வளைவுகளுக்கான, எழுச்சி உரைகளை, ஆய்ந்தறிந்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாலு நாட்களாகவே, நாவலரும், திராவிடன் ஆசிரியரும், நமது கழகச் சட்டதிட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அன்பிலும், பராங்குசமும், மணியும், ராபியும் - அவர்களுடன் கூடிப் பணியாற்றி என்னைக் குதூகலித்திடச் செய்யும் தோழர்களும், பம்பரமாய்ச் சுற்றுகிறார்கள்; பணியிலே தரமும் வகையும் வளருகிறது; இடையிடையே என் கோபத்தையும் தாங்கிக்கொள்கிறார்கள்; என்னை நன்றாக அவர்கள் அறிந்திருப்பதால், என் கோபத்தின் உட்பொருளை அவர்களால் உணர முடிகிறது; உணர முடிவதால், நமக்குத் தெரியாததா? இவன் யார், இது சொத்தை அது சோடை என்று கூற? விளக்கமிலாத வீணன் - என்று கூறி என்னை ஒதுக்கிடும் நிலையில் இல்லை. ஓடுகிறார்கள் - பாடுபடுகிறார்கள் - கொட்டும் மழை கண்டும், வீசும்பெருங்காற்றுக் கண்டும் நான் கிலிகொள்ளும் போது, அவர்கள் எனக்குத் "தைரியம்' ஊட்டுகிறார்கள்.

திருச்சி நகராட்சி மன்ற உறுப்பினரும், நமது கழகத் தோழருமான தோழர் நாகசுந்தரம் நற்பணியாற்றிக்கொண்டு வருகிறார். அவருடைய சீரிய முயற்சியால் மாநாடு சிறப்புப் பெறுகிறது. நகராட்சி மன்றம் நாவலருக்கு வரவேற்பளிக்கத் தீர்மானித்திருப்பது நாகசுந்தரத்தின் வெற்றிகளில் ஒன்று.

பழனி, அரசு, ராஜு, கருணா, மணி - ஓவியர்கள் பகலை இரவாக்கிக் கொண்டுள்ளனர். இளமுருகு - இத்துறைக்குப் பணியாற்ற, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்.

லாரிகள் வந்துவிட்டன - என்றோர் மகிழ்ச்சிக் குரல் கேட்கிறது. என்னவென்று சென்று பார்க்கிறேன். நமது புரட்சி நடிகரின் மேற்பார்வையில் தயாரான முகப்பு வந்து இறங்குகிறது. ஏ, அப்பா! என்னென்ன வளைவுகள்! என்னென்ன மாடங்கள்! எல்லாவற்றையும் பொருத்திக் கோத்து வண்ணமளித்தா லல்லவா தெரியும், எழில்! - என்று கூறுகிறார், சென்னை மாவட்ட மாஜி - கண்ணபிரான்

கொடிகளும் தோரணங்களும் தயாரிக்க, ஈரோட்டிலிருந்து அழகிய இரு வண்ணத் துணி மூட்டைகளை முன்னாலே அனுப்பிவிட்டு, தையற்கலையுடன் கழகப் பற்றை உடன் கொண்டுவரும் தேவராசன் என்பாரை உடன் அனுப்பி வைத்துவிட்டு, கரூர் தோழர் சோமுவையும், கூடுவதும் குறைவதுமாக உள்ள வயற்று வலியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்துள்ள சம்பத்து, மாநாட்டுத் தீர்மானம் குறித்து கவனித்து வருகிறான்.

ஒளியும் ஒலியும் - வண்ணமும் வகையும் உள்ளதாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ராபி, வண்டுபோல் சுற்றி, மலர்போல் முகம் காட்டி, தேன்போலப் பேசி விருந்தளிக்கிறார்.

விதானம் தேவையா? குளோப் லஸ்தர் தேவையா? என்ன வேண்டும், கொண்டுவந்து குவிக்கிறேன் - என்று கூறிக் குதூகலிக்கச் செய்கிறார் கண்ணதாசன்.

எல்லோரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தால், "உண்டி'ப் பிரச்சினையை யார் ஏற்று நடத்துவது என்று கவனிக்காமலிருப்பதா - இதோ இராஜமாணிக்கம் எனும் ஆசிரியத் தோழரொருவரும், போளூர் சுப்பிரமணியமும் நீண்டநாள் உணவு விடுதி நடத்தி அனுபவம் பெற்றவர்கள் போலப் பணிபுரிகிறார்கள் - சுவையான பகுதி அவர்கள் பணியில் காணக் கிடப்பது. மறுவேளை சாப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆசையை உண்போர் கொள்ள முடியாதபடி செய்திடும் "பாகமுறை'' என்று, உணவு விஷயத்தில் உருசிகரமான பிரியம் உள்ளவர்கள் இங்கு பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செலவே அதிகம்தான் என்று எச்சரித்தபடி இருக்கிறார் நமது பொதுச் செயலாளர்.

எல்லாம் பந்தலைப் பொருத்துத்தானே - என்று கண்ணால் கேட்டபடி, காற்றாடியாகக் காட்சிதரும் வானமா மலையும், பார்ப்பவர்கள் மலைக்கவேண்டும், செலவுக் கணக்குப் பார்க்கும்போது நாம் ஐயோ இவ்வளவா என்று திகைத்திடும் நிலை கூடாது - இந்த முறையில், திட்டம் இருக்க வேண்டும் என்று பணியாற்றிக்கொண்டு வருகிற சாம்புவும், நமது மாநில மாநாட்டுக்கு ஆற்றிவரும் பணியின் வடிவம் மே 17, 18, 19, 20-ல் நீ, காணத்தானே போகிறாய். தம்பி! எத்தனை எழில் முகப்புகள் தெரியுமா?

ஏறத்தாழ நாலாயிரம் செலவில், இரவு பகலென்று பாராமல், நமது இயக்கப் பற்றுகொண்ட கலை வல்லோர் உழைத்து அமைத்து சென்னையிலிருந்து கொண்டு வந்திருக்கும், முதல் முகப்பு அரண்மனை வாயில்போல் காட்சி தரும்.

அதில் நுழைந்து (கட்டணம் செலுத்தித்தான்!) உள்ளே வந்தால், தஞ்சை மாவட்டத்துக்கே தனிச் சிறப்பாக அமைந்துள்ள கீற்று அலங்கார முகப்பு, குத்தாலம் வேலைப்பாடுடன், உன்னை வரவேற்கும்.

இடையில், பட்டொளி வீசிப் பறந்திடும் கொடி, 50-அடி உயரமுள்ள "கம்பம்' தனில் காணக் கிடைக்கும்.

இப்புறம் சென்றால், அலங்கார வளைவு, அதிலே வள்ளுவப் பெருந்தகையின் வடிவம், காட்சி தரும் - எதிர்ப் புறமோ சிறியதோர் மணி மாடம் எனத்தக்க அமைப்பிலே, புத்தர்!

வள்ளுவரைக் கண்டு மகிழ்ந்து, அவ்வழி சென்றால் ஒவியக்காட்சி, உள்ளத்தை மகிழச் செய்யும் - அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும்.

கொடிமரத்தையும் குத்தால வேலைப்பாட்டினையும் கண்டான பிறகு, மேலால் சென்றால், தம்பி, மூன்றாவது முகப்பு காண்பாய்! ஆங்கு, விலங்கொடித்த விடுதலை வீரன், எழுச்சியூட்டி உன்னை வரவேற்கும் காட்சி உண்டு! மேலால் நடந்தால், போகப்போக வளர்ந்துகொண்டே போகும் - நான்கு அலங்காரத் தூண்களும், ஆற்றலை விளக்கும் அரிமா பதுமைகளும், பிறை வடிவான மேடைக்கு அழகளிக்க, மேலே இருந்து சின்னாளப்பட்டி வண்ண ஆடை திரையாகி, கண்ணைக் கவரும் - அங்குதான், கழகத் தோழர்கள் புடைசூழ, நமது நாவலர் வீற்றிருப்பார் - அழகு தமிழில், ஆற்றல் உண்டு என்பதை எடுத்துக் காட்ட!

ஒரு கிழமையாக அவருடன் இடைவிடாது உரையாடும் வாய்ப்பும் பெற்றதால், என் நண்பர் இராஜகோபால் அல்லவா கேட்கிறார், எனக்கென்று ஒரு வேலை தாருங்கள்! இவ்வளவுபேர் வேலை செய்யும்போது நான் மட்டும் வாளா இருப்பதா? என்று கேட்கிறார்! திராவிடத்திலே, புதியதோர் எழுச்சி என்று கூறினால் ஏது என்று கேட்கிறார்களே சிலர் - அவர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டாலல்லவா புரியும்! அவர்களின் கண்களும் அகலத் திறந்திடும் முறையில், தம்பி, இலட்சக்கணக்கிலே திரண்டிட வேண்டுமல்லவா திராவிடர்கள்.

அனைவருக்கும் கூறி, அழைத்துக்கொண்டு வரத்தான் போகிறாய்; உனக்கில்லையா அந்த ஆர்வமும், பொறுப்பும்!

போ, தம்பி, எதை எழுத, எதை எழுதாமலிருக்க - கரமும் வலிக்கிறது, காகமும் கரைகிறது. சுருக்கமாகக் கூறி விடுகிறேன், திராவிடத்தின் எழுச்சி எத்தகையது என்பதைக் காமராஜர்களும் உணர வேண்டும் - மாநில மாநாட்டு வெற்றி மூலம்.

அந்த வெற்றியைத் தேடித் தரும் ஆற்றல் உனக்கு உண்டு என்பதால்தான், மண்டியிட மறுத்து வீரப் போரிடும் மராட்டியத்திலே, தாயும் மகளும் சிறை சென்ற காட்சியையும் வெற்றிபெற்ற வங்கத்தில் வீரர்கள் விடுதலை பெறுவதையும் காணச் சென்றோம்; கண்டோம்; இனி மாநில மாநாட்டிலே கூடுவோம்; மகத்தானதோர் எழுச்சி, திராவிடத்திலே என்பதை அனைவரும் அறிந்திடச் செய்வோம்; தாயக விடுதலைக்காகப் பணியாற்றிடும் தகுதியும் திறமையும் நமக்கு உண்டு என்பதை மே 17, 18, 19, 20 நாட்களில் மேதினி அறிந்திடச் செய்வோம்; மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், தூற்றலுக்கும் தாக்குதலுக்கும் கலங்காதவர் நாம் என்பதைக் காட்டிட, நமக்கெல்லாம் ஓர் நல் வாய்ப்பு - ஆமாம், தம்பி! அனைவருக்கும் கிடைக்கக்கூடியதல்ல, இத்தகைய வாய்ப்பு. நாடு, நம்மிடம் நிரம்ப எதிர்பார்க்கிறது - நல்லோர் நம்மிடம் நிரம்ப நம்பிக்கை கொண்டுள்ளனர்; நாம் அதற்கு ஏற்றவண்ணம் நடந்துகொண்டு, வெற்றி முரசு கொட்டிட வழி காண்போம் வா; "மன்றம்' நடத்தும் நாவலர் கூட்டும் மாமன்றம்தனிலமர்ந்து, அறச்சாலையிலமர்ந்து பணியாற்றி

வாழ்க! வாழ்கவே!
வளமார் எமது திராவிட நாடு வாழ்க!
வாழ்கவே!!

என்ற பண் பாடிட வாராய்.

 

அன்பன்,

13-5-1956