அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறுவடையும் - அணிவகுப்பும் (1)
2

இங்கே, நீ இன்னமும் என்பொருட்டு ஏங்கிக்கிடப்பது அறியும்போது, என் மனம் எப்படி இருக்கும்? எண்ணிப்பார், தம்பி!!

குன்றைவிட்டுக் கீழே வந்தால், ஒரு ஊர்வலம் செல்கிறது; வெற்றி ஊர்வலம்!

பிரஜா - சோμயலிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர், சிவப்பா என்பவர், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அந்த ஊர்வலம்!! பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது!

பெங்களூர் திரும்பிவந்துகொண்டிருந்தோம், மற்றோர் ஆரவாரமான ஊர்வலம், சுதந்திரக்கட்சியினர் ஒருவர் அந்தானப்பா என்றார்கள், அவருடைய வெற்றி ஊர்வலம். எங்கள் மோட்டார் அதனைக் கடந்து செல்ல இயலவில்லை; சரி, என்று ஊர்வலத்திலேயே சென்றோம்! ஆகவே அண்ணன் வெற்றிபெற்றிருந்தால், ஊர்வலம் நடந்திருக்குமே என்றுகூட நீ ஆயாசப்படத் தேவையில்லை - ஊர்வலமாகச் சென்றேன்! அதுமட்டுந்தான் என்று எண்ணாதே, பெரிதும் கன்னடத் தோழர்களே அதிகம் உள்ள மாவள்ளி எனும் பகுதியில் உள்ள தி. மு. கழகக் கிளையினர், பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் எங்களுக்கு ஒரு தேனீர் விருந்து அளித்தனர்.

பார்ப்பவர்களைப் பிரமிக்கவைக்கும் சிவசமுத்திரம் நீர்விழ்ச்சியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். என்றாலும், மறுபடியும் பார்ப்பதில் எனக்கு விருப்பம். இம்முறையும் கண்டேன். பாறைகளையும் கற்குவியல்களையும் குடைந்து கொண்டும், தழுவிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும், பல்வேறு பக்கங்களிலும் இருந்து பாய்ந்துவரும், காவிரி, நீர்வீழ்ச்சியாகிடும் இடம், சிவசமுத்திரம், சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். இது பல சிற்றாறுகள் ஒரு பேருருவாகி, இத்தனை பெரிய உருவை நான் தாங்கவல்லேன் அல்லேன் என்று காடும் கற்குவியலும் நிறைந்த மலைமுகடு கூறிட, செல்ல எனக்கா இடமில்லை என்று கூறிச் சினந்து கீழே பாயும் காட்சியே, சிவசமுத்திரம் நீர்விழ்ச்சி, மலைமுகடு முழுவதிலும், இங்கும் அங்குமாகச் சலசலவென ஓடிவரும். இந்தக் காவிரியா, மலை அதிர, காண்போர் மனம் அதிர நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துளது என்று எவரும் வியப்படைவர். அதனைக் காணும்போதெல்லாம் எனக்கு. சிறுகச்சிறுக மக்களின் உணர்ச்சி பீறிட்டுக் கிளப்பிடின் ஓர்நாள், பெரிய நீர்வீழ்ச்சி போன்றதோர் உருவம் கொள்ளும் என்ற எண்ணம் தோன்றும். இம்முறை அந்த எண்ணம் மிக அழுத்தமாக ஏற்பட்டது.

தம்பி! இப்படி நான் சில நாட்கள் கழித்துவிட்டு உன்னுடன் உரையாடி மகிழ, பணியாற்றி மகிழ்ச்சிபெற வந்துள்ளேன். பெற்ற வெற்றிகளின் பொருள் எத்தன்மையது என்பதனை நாடறியச் செய்திடும் நற்பணியிலே, நாம் இனி ஈடுபடுதல்வேண்டும். சிலர் - என்னையும் சேர்த்தே கூறுகிறேன் - தோற்றனர் - அதனால் என்ன? தம்பி. கருணாநிதி கடற்கரைக் கூட்டத்திலே சுட்டிக்காட்டியதுபோல, அந்தத் தோல்வியால் மூண்டிடும் வேதனை, புதிய உறுதியுடன் பணியாற்றி, பழி துடைத்துக்கொள்வோம் என்று சூள் உரைத்துப் பணியாற்றி, இப்போது பெற்ற வெற்றியினைவிட, அளவிலும் வகையிலும் தரம் உள்ளதான வெற்றியைப் பெற்றளிக்கும் ஆற்றலை நமக்குத் தருவதாக அமையவேண்டும். ஐயோ தோற்றுப் போனார்களே! - என்று அழுத கண்ணினராக இருத்தல்கூடாது. ஆஹா! தோற்கடித்தார்களல்லவா? என்ற கோபம் கொப்பளிக்கும் கண்ணினராதல்வேண்டும், வெற்றி ஈட்டித் தருவோம்! வேதனையினின்றும் ஓர் புதிய வலிவு பெறுவோம்! என்று உணர்ச்சி பெறவேண்டும். நம்மிலே சிலருடைய தோல்வி, மற்றவர்களைச் செயலற்றவர்களாக்குவதற்கு அல்ல, நமது செயலிலே செம்மையும், திறமும், பக்குவமும், பண்பும் மிகுந்திடச் செய்வற்கேயாகும் என்பதனை உணர்தல்வேண்டும்.

உமது தலைவர் என்ன ஆனார்? பார் - என்று மாற்றார் எழுப்பும் ஏளனம் - எரிச்சலை மூட்டினால் மட்டும் பலன் இல்லை, தம்பி! வீழ்த்திவிட்டீர்கள் இம்முறை, இனி என்றென்றும் அதுபோல் நேரிட முடியாத நிலைக்குக் கழகத்தின் வலிவினை வளர்த்துக் காட்டுகிறோம், பாருங்கள் என்று அறைகூவல் எழுப்பவேண்டும்.

நமக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கான காரணங்களை - தனிப்பட்டவர்கள்மீது ஐயுறவு கொள்ளாமல் - விருப்பு வெறுப்புக் காட்டாமல் - நிலைமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும், எப்படித் திருத்தலாம், முறைப்படுத்தலாம் என்ற நோக்குடன்.

என்னைத் தோற்கடித்த காஞ்சிபுரம் தொகுதியையேகூட எடுத்துப்பார். தம்பி! நான் இங்கு எவருக்கும், எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை; என்னால் எவருக்கும் எந்தவிதமான இடர்ப்பாடும் ஏற்பட்டதில்லை. என் பணியிலே மாசு கற்பித்துப் பேசக்கூட அதிகம் பேர் இங்கு இல்லை? எனினும் என்னைப் பெரும்பான்மையினர் ஆதரிக்க மறுத்துவிட்டார்கள். ஏன்?

பணம் வெள்ளம்போல் பாய்ந்தது என்கிறார்கள்.

இருக்கட்டுமே! அதனையும் மீறி அல்லவா, மக்களுக்கு என்னிடம் அன்பு எழவேண்டும். இனி அதே நோக்கத்துடன் அல்லவா, நான் பணியாற்றவேண்டும்.

முறைகேடுகள். ஒழுங்கீனங்கள், சதிச்செயல்கள், பலப்பல நடைபெற்றன; ஊரறியும் உலகறியும். ஆனால் இவைகளை எல்லாம் முறியடிக்கத் தக்கவிதமாக அல்லவா, என் தொண்டு மக்கள் உள்ளத்தில் என்பால் அன்பு உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது ஏற்பட வழி என்ன? என்பதுதானே நான் ஆராய வேண்டிய பிரச்சினை,

விஷம் என்று தெரிந்தால், அதனை தங்கக் கோப்பையிலே ஊற்றிக்கொடுத்தாலும், பருகிட எவரேனும் இசைவார்களா? இசையமாட்டார்கள். அதுபோலவே, காங்கிரஸ் ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுப்பது விஷம் குடிப்பதற்குச் சமானம் என்ற உணர்ச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்குமானால், பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகக் காங்கிரஸ் ஆதிக்கத் துக்கு இடம் அளிக்கச் சம்மதித்து இருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. எனவே, மக்களிடம், காங்கிரஸ் ஆதிக்கம் அறவே கூடாது என்ற எண்ணம், இன்னும் அழுத்தமாக ஏற்பட வேண்டும். நமது பிரசாரம் மேலும் செம்மைப்படவேண்டும்.

என் தொகுதி நிலைமையைக்கொண்டு, பொதுவாகச் சொல்கிறேன்; நாம் இதுவரையில், ஊர் நடுவே உள்ள திடல்கள், ஊர்க் கோடியில் உள்ள திடல்கள், இங்கு மட்டுமே கூட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம். நெடுஞ்சாலைகளுக்கு இருமருங்கிலும் உள்ள தெருக்களில் நமது கூட்டங்கள் அதிகமாக நடப்பதில்லை. கூட்டம் அளவில் பெரிதாக இருக்காது. அலங்கார ஏற்பாடுகள் இராது என்ற எண்ணத்தினாலும் திடலில் கூட்டம் நடந்தால், எல்லாத் தெருக்களிலும் இருந்து மக்கள் வந்து கூடுவார்கள் என்ற நினைப்பிலும், ஒவ்வொரு நகரத்திலும் பல பகுதிகளை நாம் கூட்டம் நடத்தாமலே ஒதுக்கி வைத்துவிடுகிறோம். எனவே அங்கு அரசியல் விழிப்புணர்ச்சி, புத்துணர்ச்சி மிகமிகக் குறைவாகி, எப்போதோ எக்காரணத்தாலோ ஏற்பட்டுவிட்ட உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.

நடந்ததைக் கூறுகிறேன். ஒரு நெசவாளியைக் கண்டேன். அவர், "நான் காங்கிரஸில் நீண்ட காலமாக இருப்பவன். ஆகவே நான் எப்படி உங்களுக்காக மாற முடியும்?'' என்று கேட்டார். கோபமாக அல்ல, வெறுப்பாக அல்ல; இயற்கையாக.

மாறமுடியாது என்று கூறுகிறீரே, ஐயா! நீங்கள் பற்றுக் காட்டுகிற, காங்கிரசே, மாறிவிட்டதே - கொள்கையில் குணத்தில்; கண்டவர்கள் கூடிக் காங்கிரசைக் கெடுத்துவிட்டார்களே; கெட்டுப்போன பிறகும், காங்கிரசை நான் ஆதரிக்காமல் இருக்கமுடியாது என்கிறீரே, நியாயமா? என்று கேட்டேன்.

தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இது.

ஓட்டு வாங்க நான் சாமர்த்தியமாகப் பேசுகிறேன் என்றுதான், அந்த நெசவாளி அந்த நேரத்திலே எண்ணிக்கொண் டிருந்திருப்பாரே தவிர, யோசித்துப் பார்த்திருக்கமாட்டார். தேர்தல் காலத்துப் பேச்சு, நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மக்கள் கருதமாட்டார்கள். ஆனால், சாதாரண காலத்திலே, இந்த வாதத்தை, எவ்வளவு அழுத்தக்காரர் கேட்டாலும், மனம் அசைந்தே தீரும். அதற்கு நாம், நமது கூட்டங்களை, ஒவ்வொரு நகரத்திலும், எந்தப் பகுதியையும் ஒதுக்காமல், எல்லாப் பகுதி மக்களும் கேட்டுப் பயன்பெறத் தக்கவிதத்திலே நடத்தவேண்டும்.

காஞ்சிபுரம் நகரில் எனக்கு ஓட்டுகள் குறைவாகக் கிடைத்த பகுதிகள் யாவும், நமது கழகக் கூட்டங்கள் தொடர்ந்து சாதாரண காலத்தில் அதிகமான அளவில் நடத்தப்படாத இடங்கள்.

இங்கெல்லாம், காங்கிரஸ் கூட்டங்களும், கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டங்களும்தான் பரவலாக நடந்திருக்கின்றன.

ஓட்டுகள் கிடைத்துள்ள வகையை ஆராய்ந்து பார்க்கும் போது, சென்ற தேர்தலின்போது கழகத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்த பல இடங்களில். காங்கிரசுக்கு அதற்கு அடுத்தபடி யாகவும், கம்யூனிஸ்டுக்கு மூன்றாவதாகவும் ஓட்டுகள் கிடைத்தன. இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகள், கழகத்துக்குக் கிடைத்ததைவிட அதிகம்; எந்த முறையில் என்றால் முன்பு காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுக்கும் தனித்தனியே கிடைத்த வாக்கு களின் "கூட்டு', இம்முறை காங்கிரசுக்குக் கிடைத்திருக்கிறது.

இதெல்லாம் காரணம் அல்ல; பல இலட்சம் செலவிட் டார்கள் - என்று கூறுகிறார்கள்.

ஒன்று கூறுவேன் நமது கழகத் தோழர்களுக்கு, பணம் பல இலட்சம் செலவிட்டுத்தான் காங்கிரஸ் தோற்கடித்தது என்றால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

எத்தனை முறை இதுபோல பல இலட்சங்கள் செலவிட முடியும்? எத்தனை இடங்களில் செலவிட முடியும்? எத்தனை காலத்துக்கு இது நடக்கும்?

எனவே, நச்சுப்பூச்சி தீண்டிய கதை போலாகுமே தவிர, நிரந்தரமான பலத்தை ஒரு கட்சிக்குக் கொடுத்துவிடாது. எனவே, நாம் பணத்தைக் கண்டு பயம்கொள்ளத் தேவையில்லை.

முறையாக, முன்னேற்பாட்டுடன் வேலை செய்தால், நிச்சய மாகப் பணபலத்தையும் தோற்கடிக்க முடியும். அதற்கு, என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வாய்ப்பும் திறமையும் கொண்ட தோழர்கள், நகரின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கவேண்டும். வதந்திகளுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரிந்த தெளிவுள்ளவர்கள் இந்தத் துறையிலே பணிபுரிந்தால் பணபலத்தை உருக்குலைக்க முடியும். நச்சுப்பூச்சி நாம் ஏமாந்த நேரத்திலேதான் தீண்டும். பணபலமும் அப்படித்தான். பாம்பினைப் பழுதை என்றோ, பழுதையைப் பாம்பு என்றோ கொண்டிடல் கூடாது. திட்ட வட்டமான தகவல் சேகரிப்பு இதற்கு அடிப்படையாகத் தேவை.

பணம் பெற்றுக்கொண்டாலும், அதற்காக "சத்தியம்' செய்தாலும், அது தம்மைக் கட்டுப்படுத்திவிடத் தேவையில்லை என்ற நிலை, சாமான்யர்களுக்கும், குறிப்பாகத் தாய்மார்களுக்கும் சுலபத்தில் ஏற்படாது.

காஞ்சிபுரம் தொகுதியில் திருப்பதி ஏழுமலையான் படத்தின்மீது சத்தியம் செய்துகொடுத்ததால், தாய்மார்கள் திகில் கொண்டுவிட்டார்கள் என்று ஊரே பேசுகிறது.

இவர்கள் நம்முடைய கூட்டங்களுக்கு வருகிறவர்கள் அல்ல. வந்திருந்தால் இதுபற்றி நாம் பேசியது கேட்டு, தெளிவும் பயமற்ற நிலையும் பெற்றிருக்கக் கூடும்.

எனவே, இவர்களின் இந்த மனப்பான்மையை மாற்ற நமது கழகத்துக்கு நிரம்பத் தாய்மார்கள், பிரச்சாரப் பணியில் ஈடுபட வேண்டும்.

நம்மிடம் அந்த அணி சரியாக அமையவில்லை.

அமையாததற்குக் காரணம், நமது கழகத்தவர், தமது இல்லத்துத் தாய்மார்களை, இந்தப் பணியில் ஈடுபடுத்தாதது. ஈடுபடுத்த முடியாததற்குக் காரணம், அரசியலை, நம்முடைய கழகத் தோழர்கள்கூட, ஆடவர்களின் அரங்கம் என்றே இன்னமும் எண்ணிக்கொண்டு தாம் மட்டுமே அதிலே ஈடுபடுவதுதான்.

இதனை நீக்க, இப்போதிருந்தே பாடுபட்டு வெற்றி கிடைக்கவேண்டுமானால், கழகக் கூட்டங்களுக்கு தமது வீட்டுத் தாய்மார்களை, கூடுமான வரையில் அழைத்துக்கொண்டு வரும் பழக்கத்தை, ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

அரசியல் கூட்டப் பேச்சுக்கள் தாய்மார்களுக்குப் பிடிக்காது, புரியாது என்று சாக்குப்போக்குக் கூறுவது சரியல்ல; அதிலே பொருளும் இல்லை, பொருத்தமும் இல்லை.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது எந்த நோக்கத்துடன்? வாங்கினால் என்ன கேடு உண்டாகும் என்பது தாய்மார்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தால், நான் காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றிருக்கவே முடியாது என்பதை, இந்தத் தொகுதியின் நிலவரம் அறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள்.

ஒரு கூடை தவிடு தருகிறேன், ஒரு குண்டுமணி தங்கம் கொடு என்றால் கொடுப்பார்களா? கருத்துக் கெட்டவர்கள் கூடத் தரமாட்டார்கள்.

ஆனால், பளபளப்பான செயற்கை வைரத்தைக் காட்டி, அது வைரம் என்றுகூறித் தங்க நகைக்கு ஈடாகத் தருவதாகச் சொன்னால், சிலர் ஏமாந்துபோவார்கள்; பலர் சபலம் கொள்வார்கள்.

பணத்துக்காக ஓட்டு கொடுப்பது, தவிட்டுக்காகத் தங்கம் கொடுப்பதாகும் என்பதைத் தாய்மார்களுக்கு எங்கே எடுத்துச் சொல்ல, உணரச்செய்ய, நம்மிடம் அணி இருந்தது? இல்லை! அது இனி அமைக்கப்பட்டாகவேண்டும்.

என் நெஞ்சை மெத்தவும் உருக்கியதும், என் தோல்விபற்றி எனக்கு ஓரளவு வேதனை ஏற்பட்டதும், என்னால் அதற்குக் காரணமாக அமைந்ததும், எதுவென்றால், எனக்காக, நகர் முழுவதும் வீடுவீடாகச் சென்று என் துணைவி இராணி ஓட்டுக் கேட்டதுதான், துணையாக அலமேலு அப்பாதுரை அவர்கள், மல்லிகா, எங்கள் ஊர் சரசுவதி வெங்கடேசன், சரசுவதி சிற்சபை, கமலா பாபு, உளுந்தூர்பேட்டை இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் சென்றனர்.

கழகத்துக்கான ஏற்பாடு வேலைகளும், சிக்கல் நீக்கும் காரியமும், மற்றத் தொகுதி வேலைகளும், என்னை அந்த அளவுக்கு, நகரில் ஓட்டு கேட்க இடம் தரவில்லை.

இராணியும் துணையாகச் சிலரும் சென்று ஓட்டு கேட்டதுபோல, பேட்டைக்குப் பேட்டை ஒரு சிறு அணி இருந்திருப்பின், பணம் பலித்திருக்காது.

இது என் தொகுதிக்கு மட்டுமல்ல நான் சொல்வது, எல்லா இடங்களுக்கும்.

சென்ற தடவைகூட இராணி வேலை செய்தது உண்டு! என்றாலும், இம்முறை வெகு உற்சாகத்துடனும், மும்முர மாகவும், முறையாகவும் வேலை செய்ததற்குக் காரணம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில், மகளிர் மன்றக் கூட்டங்கள், கழகக் கூட்டங்கள் ஆகியவைகளிலே பெற்ற கருத்தால் ஏற்பட்ட உணர்ச்சியும், நமது இயக்க ஏடுகளைப் படித்ததால் வந்த உணர்ச்சியும்தான்.

சென்ற தடவை ஓட்டுக் கேட்டபோது இராணிக்கு இருந்திருக்கக்கூடிய எண்ணம், கணவருக்கு வேலை செய்கிறோம் என்பதுதான்; இம்முறை கழகத்துக்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

இராணி இந்த அளவு பணியாற்றப் பெருந் துணையாக இருந்தது, என் அக்காவாகும்.

அவர்கள்போல், மொத்தத்தில் நகரில் ஒரு 50 பேர், தாய்மார்கள் அணி இருந்திருந்தால், "வெங்கடேசப் பெருமானும் சத்தியமும்' என்ற பேச்சு வலிவிழந்துபோயிருக்கும்.

இந்த முறை ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்கி, அடுத்த தேர்தல் வருவதற்குள் நல்லதோர் தாய்மார்கள் அணிவகுப்பு ஏற்படவேண்டும்.

இந்தத் தேர்தலில் இருந்த அணிவகுப்பு, இருதரப்புக்கும் எப்படிப்பட்டது என்பதனை அடுத்த கிழமை எடுத்துக் காட்டுகிறேன்.

அண்ணன்,

11-3-1962