அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறுவடையும் - அணிவகுப்பும் (3)
2

இம்முறை, நாம் நமது முறையை மாற்றிக்கொண்டாக வேண்டும். தொகுதிகளின் நலன்களுக்காக, தேவைப்படும் போது, கிளர்ச்சிகள் நடத்திட நாம் தயாராகிவிடவேண்டும்.

நாடாறு மாதம் காடு ஆறுமாதம் என்பார்களே அதுபோல, பாதிக் காலம் சிறைச்சாலை, பாதிக் காலம் சட்டசபை என்று இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்துவிடவேண்டும்.

சட்டசபை முறை, எதற்கு எடுத்தாலும் கிளர்ச்சி செய்துதான் தீரவேண்டும் என்ற நிலை இல்லாதிருக்க, வாதாடி, விளக்கம்கூறி, மக்களுக்கு நலன் தேட, ஏற்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியினர், இதனை மதிக்க மறுத்தால், இதன்படி நடக்க மறுத்தால், மிச்சம் இருக்கிற ஒரே வழி, கிளர்ச்சிதான்!! சட்டசபைக்கு கழகம் சென்றுவிடுவதாலேயே, மக்களின் நலன், கிடைத்தால் சட்டசபை மூலம் கிடைக்கட்டும், இல்லையென்றால் நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து காலந்தள்ள அல்ல! சட்டசபை முறையினால், மக்களுக்குத் தேவையான நலன்களைப் பெறமுடியவில்லை என்றால், கிளர்ச்சியிலும் ஈடுபடவேண்டும் என்ற எழுச்சி உள்ளத்தைப் பக்குவமாக வைத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

கிளர்ச்சிகள் தேவை என்ற நிலை ஏற்படும்போது உறுதிவேண்டும், ஊர்ப்பகைகூடாது! எதற்கும் கலங்காத நெஞ்சம்வேண்டும், அதேபோது ஆத்திரத்துக்குத் துளியும் இடமளித்துவிடாத போக்கு, சிதையாமல் இருக்கவேண்டும். குதிரைகள் வேகமாக ஓடவேண்டும், ஆனால் கடிவாளம் இல்லாமல் அல்ல!!

ஆளுங் கட்சியினர் பொதுத்தேர்தலுக்குச் சில திங்களுக்கு முன்னதாக, பதவிகளைவிட்டு விலகிவிட்டிருந்தால், மக்களை அச்சமூட்டியும், ஆசை காட்டியும், ஓட்டுகளைப் பறித்திட வழி இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்காது.

"அதிகாரிகளைப் பயன்படுத்தினோம் என்று தகவல் இருந்தால் காட்டுங்கள்; நடவடிக்கை எடுக்கலாம்' என்று வாதாடு கிறார்கள், காங்கிரசுத் தலைவர்கள்.

தகவல்கள், ஆதாரங்கள், சான்றுகள் கிடைக்கமுடியாத படியான சூழ்நிலையேகூட, இவர்கள் பதவியில் இருப்பதால் தான் ஏற்படுகிறது.

தேர்தல் காலத்தின் நடிவடிக்கைகளைக் கண்காணிக்கவும், தடுத்திடவும், திருத்திடவும், பரிகாரம் தேடி அளித்திடவும், தனியான ஒரு நிர்வாக அமைப்பு எங்கே இருக்கிறது? எவரிடம் முறையிடுவது? எங்கு நீதி கேட்பது, பெறுவது?

அதிகாரத்தைப் பயன்படுத்தும் முறை, அமைச்சரிலிருந்து தொடங்கும்போது, பரிகாரம் தேட, வேறு இடம்?

மருந்திலேயே விஷம் கலந்துவிட்ட பிறகு, விஷம் போக்க மருந்துக்கு எங்கே போவது?

பெரிய புள்ளிகளை, ஜாதித் தலைவர்களை, பஸ் முதலாளிகளை, வணிகக் கோமான்களை அழைத்துவைத்து அமைச்சர் நிலையினர் பேசும்போது, அடியவர்கள் போன்றார் செய்திடும் சிண்டு முடிந்துவிடும் வேலைப்பற்றி எவரிடம் எடுத்துக்கூறிப் பரிகாரம் காணமுடியும்?

தம்பி! காஞ்சிபுரம் தொகுதியிலே தேர்தல் நேரத்திலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று கூறுகிறேன். நமது நீதிநெறி தவறாத மந்திரிகள் இதற்கு ஆதாரம் காட்டமுடியுமா என்று கேட்பார்கள், நேர்மையானவர்கள், காங்கிரசல்லாதார், இந்த மாநிலத்தவரல்லாதார், பொதுவானவர்கள்கொண்ட ஒரு தனிக்குழு, இரகசியமாக விசாரணை நடத்தினால், இதற்கும் இதுபோன்ற மற்ற பல நிகழ்ச்சிகளுக்கும் மெய்ப்பிக்கும் சான்றுகள் நிச்சயம் கிடைக்கும். நிகழ்ச்சியைக் கூறுகிறேன், கேள், தம்பி!

ஒரு சிற்றூர். அதை அடுத்து, சேரி. இடையிலே புறம்போக்கு நிலம்; ஊருக்குப் பொதுவானது. சேரியில் உள்ள மக்களுக்கு இடநெருக்கடி.

புதிதாகக் குடிசைகள் அமைத்துக்கொள்ள ஏற்ற இடம் அந்தப் புறம்போக்கு. அதற்காகச் சேரி வாழ்பவர் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"ஆகட்டும் பார்க்கலாம்' என்ற பதிலன்றி, வேறு இல்லை.

தேர்தல் நெருங்கிற்று; பதினைந்து இருபது நாட்கள் உள்ளன. அதிகாரி கிளம்புகிறார். அதுவரையில் அக்கரை யற்று இருந்தவர், கையில் ஏடெடுத்து, கண்களில் கனிவு காட்டி, சேரி செல்கிறார்; பழங்குடி மக்களிடம் பரிவாகப் பேசுகிறார். பரிதாபமான நிலைமை! இருக்க இடம்கூடக் காணோமே! ஏன் இந்தக் குறையினை உங்கள் எம். எல். ஏ. போக்கவில்லையா என்று கேட்கிறார். அவரிடம் சொன்னோம், உங்களிடம் சொன்னதாகச் சொன்னார் என்று, அவர்கள் சொல்கிறார்கள்.

மறுக்கவும் இல்லை! ஒப்புக்கொள்ளவும் இல்லை அதிகாரி!

போனதுபோகட்டும். இப்போது உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. கஷ்டம் போய்விடும். அதோ இருக்கிறதே, புறம்போக்கு நிலம்; அவ்வளவும் உங்களுக்குத்தான். மனு எழுதிக் கொடுங்கள் என்கிறார், அதிகாரி. மனு பெறுகிறார்; கையொப்பம் இடுகிறார்கள்; கைகூப்பி நிற்கிறார்கள்.

இந்த முறையாவது, நன்மை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள்.

கிடைக்கும். . . என்று இழுத்தாற்போல் பேசுகிறார் அதிகாரி.

பயப்படுகிறார்கள் சேரி வாழ்வோர்.

புன்னகை காட்டுகிறார் அதிகாரி; சுற்று முற்றும் பார்க்கிறார்; பார்த்துவிட்டு புறம்போக்கு நிலத்தில் மனைக்கட்டு, வீடுகட்டிக்கொள்ள கடன் தொகை எல்லாம் கிடைக்கும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால்; தேர்தல் வருகிறது, காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள், மனைக்கட்டு கிடைக்கும் என்கிறார்.

காங்கிரஸ்காரர் அப்படிச் சொல்லியிருந்திருந்தால், "ஓட்டு' வாங்கப் பேசுகிறார் என்று எண்ணிக்கொள்வார்கள்; சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் பேசுபவரோ, அதிகாரி! என்ன சொல்ல முடியும்?

வாக்குக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள், அதிகாரிக்கு!

அதிகாரி, சேரி வாழ்வோரிடம், காங்கிரசுக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, புறம்போக்கு நிலத்தை மனைக்கட்டுகளாக்கித் தருகிற வேலையில் ஈடுபட்டார்போலும் என்றுதானே நினைத்துக்கொள்கிறாய், தம்பி! அவர் பெரிய ஆள்! சேரி ஓட்டுகளைக் காங்கிரசுக்குச் சேர்த்துவிட்டதுபோதும் என்று திருப்தி அடைந்துவிட வில்லை. ஊருக்குப் போனார்.

ஊர்மக்கள் அதிகாரியை வரவேற்றார்கள்.

ஊரிலே முக்கியமானவர்களை அருகே அழைத்தார்.

என்ன ஆட்களய்யா நீங்கள்? விவரம் தெரியாதவர் களாக இருக்கிறீர்களே! - என்றார்.

ஊர்ப் பெரியவர்களுக்குத் திகைப்பு - என்ன சொல்லு கிறார் என்று விளங்காததால்.

ஊர்ப் பொதுச் சொத்து புறம்போக்கு. இது தங்களுக்கு வேண்டும் என்று சேரிக்காரர்கள் மனுக் கொடுத்து விட்டார்கள்.

இதோ மனு! மனைக்கட்டுகள் ஆகிவிடும்; உங்கள் புறம்போக்கு, என்றார்.

ஐயோ! அது எங்களுக்கு வேண்டுமே; மேய்ச்சல் இடம் அதுதானே, என்று கூறிக் கைபிசைந்துகொண்டார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

வாயை மூடிக்கொண்டு கிடந்தால், எப்படி ஐயா காரியம் நடக்கும். புறம்போக்கு எங்களுக்கு தேவை, சேரிக்காரருக்குத் தரக்கூடாது என்று, மறுப்பு மனு தயாரித்துக் கொடுங்கள் என்றார், அதிகாரி.

மனு தயாரித்தார்கள், பெற்றுக்கொண்டார் அதிகாரி. புறம்போக்கு ஊருக்கு இருக்கும்படி செய்யவேண்டும் என்று கெஞ்சுகிறார்கள் ஊரார்.

என்னால் என்னய்யா செய்யமுடியும் - என்று கூறி விட்டு, அதிகாரி மெல்லிய குரலிற் பேசுகிறார்; காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான், உங்கள் காரியம் நடக்கும். அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டாகவேண்டும். காங்கிரசுக்கு ஓட்டுப் போடாவிட்டால், புறம்போக்கு சேரிக்குத்தான். சொல்லிவிட்டேன். பிறகு உங்கள் இஷ்டம் என்றார் அதிகாரி.

தம்பி! என்ன நடைபெற்றிருக்க முடியும் என்பதை எண்ணிப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! புறம்போக்கு தருகிறேன் என்று சொல்லிச் சேரி மக்களின் ஓட்டு! புறம்போக்கு ஊராருக்கே சொந்தம் என்று செய்து தருகிறேன் என்று கூறி ஊர்மக்கள் ஓட்டு; மொத்தத்தில் 600-ஓட்டுகள் காங்கிரசுக்கு - அதிகாரியின் போக்கினால்!!

இதற்கு ஆதாரம் காட்டு என்றால், அதிகாரி ஒப்புக் கொள்வாரா? ஏதுமறியாதவர்போல வருவார், இரண்டு மனுக்களையும் காட்டுவார்; தந்தார்கள், பெற்றுக்கொண்டேன்; ஓட்டு இன்னாருக்குத்தான் போடவேண்டும் என்று நான் சொல்லவே இல்லை என்பார்.

ஊரார் மட்டும் என்ன செய்யமுடியும்? அதிகாரிக்குக் கோபம் வருமே! ஆகவே அவர்கள் என்போன்றோரிடம் சொல்லு வார்களே தவிர, பிறகு மென்று விழுங்கிவிடுவார்கள். நமக்கேன் அதிகாரிகளின் பொல்லாப்பு என்று.

இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன; பல தொகுதிகளில்.

ஆட்சியில் இருந்துகொண்டு, தேர்தலில் ஈடுபடும் வரையில், இதுபோன்ற அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.

அதனால்தான் தம்பி! பலமுறை நான் கூறினேன், பதவியை விட்டு விலகி, வெறும் காங்கிரசுக்காரராக, தேர்தல் வேலையில் ஈடுபடுங்கள்; மக்கள் உமக்கு அப்போது எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பது புரிந்துவிடும் என்று சொன்னேன். தண்ணீரைவிட்டு வெளியே வருகிறதா முதலை! பதவியைவிட்டு விலக மனம் வந்ததா காங்கிரசாருக்கு! பதவியில் இருந்து கொண்டே தேர்தலுக்கு நின்றதால்தான் பெரிய புள்ளிகளின் படைவரிசை துணைபுரிந்தது; அள்ளி அள்ளிப் பணம்கொடுக்க முதலாளிகள் வந்தார்கள்; அதிகாரிகள் வரம்புமீறிச் சென்று காங்கிரசுக்கு வேலை செய்தார்கள்.

தம்பி! இவ்வளவு இடுக்கண்களையும் சமாளித்துப் பெற்றிருக்கின்றோம், வெற்றிகளை, இந்தத் தேர்தலில்.

சம்மட்டி இல்லை, பாறையை உடைக்க; கரமே சம்மட்டி என்று, ஓங்கிக் குத்திக் குத்தி, இரத்தம் கசியக் கசியக் குத்திப் பாறையை உடைத்திடுவதுபோல, காங்கிரசு எதேச்சாதிகாரத்தை, எவ்வளவோ வசதிக் குறைவுக்கிடையில், கழக அணிவகுப்பு எதிர்த்துநின்று வெற்றிபெற்றுக் கொடுத்தது.

மரத்தின்மீது பாதுகாப்புக்காகப் பரண் அமைத்துக் கொண்டு, சுழல் துப்பாக்கியால் புலியைச் சுட்டுக்கொல்லும் வேட்டை முறையிலே காணப்படும் வீரத்தினைப், பட்டி நோக்கிப் பாய்ந்துவரும் புலியின் வாலைப்பற்றித் தூக்கிக் கரகரவெனச் சுற்றிப் பாறையின்மீது போட்டிருக்கும் வீரத்துடன் ஒப்பிட்டுப் பார்!

குண்டடிபட்ட புலி, செத்த பிறகுகூட, குற்றுயிராக இருக்குமோ என்று அஞ்சி, மரத்தைவிட்டுக் கீழே இறங்கப் பயப்படும் "சிகாரி'யுடன், உடலெங்கும் இரத்தக் காயத்துடன் நின்றபடி, பலமான அடிதான், ஆனால் புலி சாகவில்லை; ஓடிப்போய்ப் புதருக்குள் புகுந்துவிட்டது என்று கூறிடும் மாடோட்டும் இளைஞனை ஒப்பிட்டுப் பார்!

அஃதேபோல, பலபல இலட்சங்களைக் கொட்டி, பல்வேறு அக்ரம வழிகளைக் கையாண்டு 57 இலட்சம் வாக்கு களைப்பெற்ற காங்கிரசுடன், பணப் பஞ்சத்தால் அடிபட்டு, அதிகார பலத்தால் அடியுண்டு, நெருக்கடிகளிலே சிக்கிய நிலையிலும் 34 இலட்சம் வாக்குகளைப்பெற்ற, நமது கழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அறுவடையின் அருமையும் அணிவகுப்பின் பெருமையும் விளங்கும். வாழ்த்துகிறேன் தம்பி! அரும்பெரும் வெற்றியினை இத்தனை வசதிக் குறைவுக்கு இடையிலே பெற்றளித்த அணிவகுப்பினை.

தம்பி! நான் அந்த அணிவகுப்பின் பெருமையினை, அறுவடையைக் கண்டு மட்டுமல்ல, மற்றவர்கள் இந்த அறுவடைபற்றி என்னென்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டு, மேலும் விளக்கமாக உணர முடிகிறது.

புரியவில்லையே என்பவர்களும்,

ஆச்சரியம், ஆனால் உண்மை என்பவர்களும்,

பிரச்சார பலத்தால்பெற்ற வெற்றி என்பவர்களும்,

எவரெவரோ உதவி செய்ததால்பெற்ற வெற்றி என்று கூறுவோரும்,

ஐயயோ! இது ஆபத்து என்று அலறுபவர்களும்,

அடுத்தமுறை என்ன ஆகுமோ என்று அஞ்சுபவர்களும், திக்குக்குத் திக்கு, நாள்தோறும், நாம்பெற்ற வெற்றிபற்றிப் பேசுகிறார்கள்.

பண்டித நேருவோ, பட்டாளத்தையே காட்டுகிறார்!! அடுத்த கிழமை, அது குறித்து.

அண்ணன்,

25-3-1962