அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அவர் படும் அல்லல்

காமராஜரின் கருத்தைக் குடையும் கழகம்
கழகம் ஆளும் கட்சியாகிவிடும் என்பதால் காமராஜருக்கு மனக் குமட்டல்
பொதுமக்களின் ஆணைக்கு முன்னால் எந்த ஆர்ப்பரிப்பும் நில்லாது; நிலைக்காது!
பதினேழு ஆண்டு கடந்தும் தீராத சோற்றுப் பிரச்சினை
நல்லவரிடம் பொல்லாத வியாதி

தம்பி!

பைத்தியக்காரர்கள்!
பகற்கனவு காண்பவர்கள்!

பெரிய இடத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் "பட்டங்கள்' இவை! எவ்வளவு உயரத்திலே தூக்கிக்கொண்டு போய் என்னை உட்கார வைத்தாலும், எத்தனை பலமான குரலிலே பல்லாண்டு பாடினாலும், எத்தனை விதவிதமானவர் களைக் கொண்டுவந்து நிறுத்தி என் பல்லக்கைத் தூக்கச் சொன்னாலும், இந்தப் பாரதம் மட்டுமல்ல, பாரே புகழ்கிறது என்று பாமாலை சூட்டினாலும் என் எண்ணம் மட்டும் திரும்பத் திரும்ப "அவர்கள்' பற்றியேதான் செல்கிறது, "அவர்களை'ப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே! "அவர்களை'ப் பற்றிப் பேசினாலொழிய என் நா சுவை பெறுவதில்லை. நீங்கள் ஏதேதோ கேட்கிறீர்கள்,

லாவோஸ் பிரச்சினை என்கிறீர்கள்
காஷ்மீர் நிலைமை என்கிறீர்கள்
பாகிஸ்தான் நிலைமை என்கிறீர்கள்

ஏதேதோ கேட்கிறீர்கள். ஆனால், என் மனம் ஒரே ஒரு விஷயத்திலேதான், நானே எவ்வளவு தடுத்துப் பார்த்தாலும், கட்டுப்படுத்த முயன்றாலும், திரும்பத் திரும்பச் சென்று தாவுகிறது - அந்தப் பயல்களைப்பற்றித்தான் எண்ணுகிறேன், எண்ணுகிறேன், எண்ணியபடி இருக்கிறேன். யாராரையோ எப்படி எப்படியோ மண்டியிடச் செய்துவிட்டேன், கூட்டாளி களாக்கிக்கொண்டேன் - ஆனால், இந்தப் பயல்களோ. . . . .!!

இவ்விதமான கவலைமிகு எண்ணம் கொண்டுள்ள காமராஜர் நமக்கு இந்தக் கிழமை வழங்கியுள்ள பட்டங்கள்,

பைத்தியக்காரர்கள்
பகற்பனவு காண்பவர்கள்

என்பனவாகும்.

காமராஜர், அகில இந்தியக் காங்கிரசுக்குத் தலைவராகி விட்டார், இனி அவருடைய நேரமும் நினைப்பும், "அனைத்திந்திய, அதிதீவிர, அதிஅவசரப் பிரச்சினைகளிலேயே பாயும் பதியும், இணையும் பிணையும், மற்ற மற்றச் சில்லறைகளைச் சின்னவர் களிடம் விட்டுவிடப்போகிறார்,

மக்களே, ஒழுங்காக இருங்கள்!
மக்களே, ஒன்றுபட்டு இருங்கள்!
மக்களே, உங்களை வாழ்த்துகிறேன்.
மக்களே, உங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நாடு முழுவதும் நன்றாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும்

என்பன போன்ற உபதேசங்களை அருளியபடி இருந்திடப் போகிறார், அந்த உயர்ந்த நிலைக்கு அவர் சென்றுவிட்டார்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் பேசிக்கொண்டனர்.

தம்பி! நான்கூடக் கொஞ்சம் அந்தப் பேச்சைக் கேட்டு மயங்கினேன் - இப்போது தெரிகிறது, அவர் எத்தனை அடுக்குள்ள மாடி சென்றாலும், அரசோச்சினாலும், அவருடைய கண்களுக்குத் தெரிவது, கண்களை உறுத்துவது, தி. மு. க. என்ற பேருண்மை! அது அவருடைய இயல்பை அல்ல, தி. மு. க. வின் நிலையைக் காட்டுகிறது. எவர் எந்நிலை பெற்றிடினும், அவர் அரசியலில், சந்தித்துத் தீரவேண்டிய சக்தி, சமாளித்தாக வேண்டிய பிரச்சினை, பதிலளித்துத் தீரவேண்டும் என்று கேட்டு நிற்கும் கேள்விக்குறி, தி. மு. க.! ஆமாம், தம்பி! அதனால்தான், அவ்வளவு மேலான பதவிபெற்று, பராக்குக் கூறுவோர் படைபெற்று, "சாந்துப் பொட்டுத் தளதளக்க சந்தனப்பொட்டு மணமணக்க' என்று சிந்து பாடுவார்களே, அதுபோன்ற நிலையினைப் பெற்று "தர்பார்' நடத்தினாலும் அவருடைய நினைப்பு, நம்மைப்பற்றி, அவருடைய பேச்சு நம்மைப்பற்றி! எங்கு சென்றாலும், எத்தனை உயர்வு பெற்றாலும், என்ன அதிகாரம் கிடைத்தாலும், எவ்விதமான அமுல் நடத்தினாலும், எவரெவர் வாழ்த்தினாலும், வழிபட்டு நின்றாலும், என்னை மறக்க இயலாது உம்மால்! எட்டி எட்டிச் சென்றாலும் உமது மனத்தைத் தொட்டிழுக்கும் நான் எழுப்பிடும் கேள்வி! என்று கூறுவது போல, நமது கழகம் காமராஜரின் கருத்தைக் குடைந்தபடி இருக்கிறது. குடைச்சலே, தம்பி! மகா பொல்லாத நோய்! அதிலும் மனக் குடைச்சல் இருக்கிறதே, ஏ! அப்பா! தொல்லை நிரம்பியது, துளைத்தெடுக்கும், படாத பாடு படுத்திவிடும். அந்தக் குடைச்சல் காரணமாக அவர் நம்மை,

பைத்தியக்காரர்கள்
பகற்கனவு காண்பவர்கள்

என்று முச்சங்கத்தினரும் ஒருங்கே கூடி நின்று, தமிழ் மொழிக்கே அணியெனத்தகும் சொற்களாம் இவை தமைச் சொரிந்த வித்தகரே! வாழ்க! வாழ்க! வளர்க நும் செந்நாப் புலமை! என்று கூறிடுவர் என்று கொலு மண்டபத்துக் கோலேந்திகளும், குழலூதிகளும் கூறிக் குதூக-த்திடத்தக்க முறையில், நம்மை ஏசியிருக்கிறார்.

ஏசக்கேட்டால், அண்ணா! எரிச்சலல்லவா ஏற்படும்? நீ மகிழ்ச்சி காட்டுகிறாயே என்றுதானே தம்பி! கேட்கிறாய். கேட்கத்தான் செய்வாய்! ஒன்று மறந்துவிடுகிறாயே, தம்பி! எத்தனை முறை நினைவுபடுத்தினாலும். எனக்கு இத்தகைய பேச்சுகளைக் கேட்டு எரிச்சல் வருவது இல்லையே!! ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? எந்த நிலையில் இப்படிப் பேசுவார்கள்? என்று இந்தவிதமாக அல்லவா என் எண்ணம் செல்கிறது.

அவ்வளவு பெரியவர், அத்தனை மகத்தான நிலையில் இருந்துகொண்டு, "கனம்கள்' கைகட்டி நிற்க, கனவான்கள் வாய்பொத்திக்கிடக்க, கொலுவீற்றிருக்கும் நிலையில், நம்மைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார், நம்மைக் குறித்துத் தான் பேசமுற்படுகிறார் என்றால், நாம் தம்பி! அவருடைய கவனத்தை ஈர்க்கத்தக்க வல்லமையுடன் இருக்கிறோம் என்பது விளக்கமாகிறதல்லவா!! என் மகிழ்ச்சிக்குக் காரணம் அது; பொருத்தமானதா அல்லவா என்பதை எண்ணிப் பார்த்திடு, தம்பி! புரியும், உனக்கும் மகிழ்ச்சி பூத்திடும்.

இப்போதும் தம்பி! நாட்டிலே, பல கட்சிகள் உள்ளன காங்கிரசை எதிர்த்திட. காமராஜரின் கவனம் அந்தக் கட்சிகளின் மீதா செல்கிறது! "கம்யூனிஸ்டு கட்சி - அசல் - விலைவாசி உயர்வைக் கண்டிக்கப் போராட்டம் - போர் ஆட்டம் அல்ல - நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது! ஒரு வார்த்தை அதுபற்றி! உஹும்!! (இதுவரையில்) நினைப்பு வந்தால்தானே? சம்யுக்த சோஷியலிஸ்டுகள் கட்சி (பழைய பிரஜர் சோஷியலிஸ்டு கட்சி) கிளர்ச்சி நடத்தியிருக்கிறது. ஒரு பேச்சு அதுபற்றி? கிடையாது! மேடை ஏறினால் "மன்னாதி மன்னா!'' என்று பாடிடுவோர் புடை சூழ்ந்திருக்கும் வேளையில், காமராஜர் பேசும் பொருள் என்ன? தி. மு. கழகம் பற்றி! அவ்வளவு வேலை செய்கிறது, அந்த நினைப்பு!

சிற்றரசர்கள் கப்பம் கட்டுகிறார்கள்! பட்டத்தரசிகள் புன்னகை புரிகிறார்கள். ஆடலழகிகள் ஆடுகிறார்கள், குயிலிகள் பாடுகிறார்கள். இருந்தும், பட்டத்தரசனின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை சோர்ந்து காணப்படுகிறான்; என்ன? என்ன? என்று ஆயிரம் கண்கள் கேட்கின்றன! ஒரே பெருமூச்சுத்தான் பதில்!! இந்நிலை என்றால், காரணம் என்ன? மன்னன், மணி மண்டபத்தில் காணும் காட்சி மகோன்னதமானது என்றாலும் அவனுக்கு மருத்துவம் பலப்பல நடாத்தியும் குமட்டல் போகவில்லை என்றால், மன்னன் மனம், மணி மகுடம், சிங்காதனம். சிற்றரசர் பணிவு, சிங்காரிகளின் நெளிவு இவற்றிலா செல்லும்; கோலாகலம் இவ்வளவு இருந்து என்ன பலன், இந்தக் "குமட்டல் நோய்' என்னைவிட்டுப் போகவில்லையே என்று எண்ணுகிறான்: இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, மருந்துக்குக் கட்டுப்படாமல் போய்விடுமானால். . . . .! அந்த மன்னனுக்கு மலரிலே நெடியும், தேனிலே கசப்பும், தென்றலிலே வெப்பமும் இருப்பதாக அல்லவா தோன்றும்? மனம் படாதபாடு படத்தான் செய்யும்.

அதுபோல, ஆயிரவர் ஆரத்தி எடுக்க, பல்லாயிரவர் பராக்குக்கூற, பட்டத்தரசரெனக் கொலு இருப்பினும், காமராஜரின் மனம் என்ன எண்ணுகிறது? இத்தனை அலங்காரம், ஆடம்பரம், இருந்து என்ன பயன்? அந்தப் பயல்கள், பதினைந்திலிருந்து ஐம்பதாகிவிட்டார்களே! பிளவு, இனி அழிவு என்று கணக்கிட்டோம், வளர்ந்துவிட்டார்களே! சென்னை மாநகராட்சியை மறுபடியும் கைப்பற்றிவிட்டார்களே, பல நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கிறார்களே! இதே பதவி தேடும் வேலையோடு இருந்து தொலைக்காமல் சளைக்காமல் அறப் போராட்டமும் நடத்தியபடி இருக்கிறார்களே! இவ்வளவுக்கும் இந்தப் பொதுமக்கள் ஆதரவு தருகிறார்களே! தலை காய்ந்தது களெல்லாம் கூடிக்கொண்டு, நமது "தர்பாரை' எதிர்க்கின்ற கொடுமையைக் காணவேண்டி இருக்கிறதே. இந்த இலட்சணத்தில், நாம் அளவு கடந்த செல்வாக்குப் பெற்ற அகில இந்தியத் தலைவராகிவிட்டோம் என்று புகழ்கிறார்கள். சே! சே! சே! என்ன இது! என்ன இது! - என்று எண்ணுகிறார்; ஒரு கசப்பு, குமட்டல் ஏற்படுகிறது!!

பைத்தியக்காரர்கள்.
பகற்கனவு காண்பவர்கள்

என்று ஏசுகிறார் - மனக்கசப்புக் காரணமாக, குமட்டலின் விளைவாக.

குமட்டல், தம்பி! கெட்ட வியாதி! உடற்கூறு அறிந்தவர்கள் அதன் இயல்புபற்றிக் கூறுகிறார்கள்.

இதைச் சாப்பிடுங்கள் குமட்டல் போய்விடும்! தேனில் குழைத்துச் சாப்பிடுங்கள், கசப்புத் தெரியாது!! என்று பக்குவம் சொல்கிறார்கள்!

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது வாயில் ஏற்படும் குமட்டல் அல்ல; மனத்திலே ஏற்படும் குமட்டல்!! இதற்கு மருந்து எளிதிலே கிடைக்காது.

நமது கழக வளர்ச்சி இந்த மனக் குமட்டலை மூட்டி விட்டிருக்கிறது - பலருக்கு! துரும்பாக இளைத்துப் போனவர்களும், மேனி கருத்துப்போனவர்களும் உண்டு, இதனால்.

இருப்பதை இழந்திட மனம் இல்லாத நிலையும், இருப்பது போய்விடுமோ என்ற பீதியும், அவன் பெற்றுவிடுவானோ இவன் பெற்றுவிடுவானோ என்ற அச்சமும், இது போய்விட்டால் என்ன செய்வது என்ற ஆயாசமும் அற்ப சொற்பமானவன், யோக்கியதை அற்றவன் என்று நாம் யாரைக் கருதிக் கொண்டிருந்து வந்தோமோ அவர்கள் அல்லவா நல்ல நிலை பெற்றுவிடுவார்கள்போலத் தெரிகிறது என்ற எண்ணமும் ஏற்படும்போது, மனக் குமட்டல் ஏற்படும்.

அந்தப் பயலா போகிறான் மோட்டாரில்?

ஆமாம், அவரேதான்! அத்தனை, பெரிய மோட்டாரிலா?

எவன் இவனை ஏற்றிக்கொண்டு போகிறான்?

மோட்டாரே அவருடையதுதான்! மோட்டார். . . அவனுடையதா? படாடோபத்தைப் பாரேன்! பயல் எங்கே கடன் வாங்கி இந்தக் கார் வாங்கினான்?

அவர் ஏன் கடன் வாங்கப் போகிறார்? அவரே பலருக்குக் கடன் தருகிறார்.

இவனா? கடன் தருகிறானா? ஏது? இவனுக்கு ஏது இத்தனை பணம்?

இப்படிக் கேட்டுவிட்டு, மனக் குமட்டல் கொள்பவர்களைக் காண்கிறோம், ஊரில், சில இடத்தில். அந்தக் குமட்டல்காரர், பிறகு தம்முடைய செவர்லேயில் ஏறிக்கொண்டு, கடற்கரை சென்றால் குளிர்ச்சியா காண முடியும்? நண்பரின் திருமணம் காணச்சென்று அங்கு சுந்தராம்பாள் அம்மையார், கேட்போரின் மனம் உருகும்படி "வெண்ணீறு அணிந்ததென்ன?' என்று பாடிடும்போது இவர் செவியில் என்ன விழும்? மோட்டார் இவனுக்கென்ன? என்ற வார்த்தைகள்!!

சாதாரண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கே ஏற்படக் கூடாது மனக் குமட்டல் - அது நல்ல இயல்பு அல்ல - உள்ளதையும் உருக்குலையச் செய்துவிடும், அதிலும் அரசியல் வாழ்க்கையிலே துளியும் குமட்டல் ஏற்பட்டுவிடக்கூடாது - நல்ல நினைப்பே எழாது, நல்ல பேச்சே வராது.

திராவிட முன்னேற்றக் கழகம் வளருகிறது - மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் கூறுகிறோம்.

ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு எவை எவை துணை செய்யுமோ, அந்த வசதிகளைப் பெற்றில்லாமலேயே, பொது மக்களின் அன்பு நிறை அரவணைப்பின் காரணமாகவே வளருகிறது.

இந்தக் கழகத்தை, எதிர்க்காதவர் இல்லை, எதிர்க்காத நாளில்லை.

இந்தக் கழகத்தின்மீது வீசப்பட்ட வசை மொழிகளைத் திரட்டினால், புராணங்களைவிடப் பெரும் அளவு உள்ள பெரும் ஏடாக்கலாம்,

எனினும், கழகம் வளர்ந்து வருகிறது. வளர்ந்தால் என்ன! வளரக் கண்டு, மனக் குமட்டல் ஏற்படுவானேன்!

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை, திட்டங்களைக் கழகம் எதிர்க்கிறது என்பதாலா?

ஆம் என்றால், இதே செயலைச் செய்திடும் பல கட்சிகளின் மீது ஏற்படாத கோபம், கசப்பு, கழகத்தின்மீது ஏற்படக் காரணம்? மனக் குமட்டல் அளவுக்கு நிலைமை முற்றிவிடக் காரணம்?

கழகம் வளருகிறது எதிர்ப்புக்கிடையில் என்பது மட்டுமல்ல, பரவலாக ஒரு எண்ணம், நாட்டு மக்களிடம் ஒரு பேச்சு எழுந்துவிட்டிருக்கிறது, அடுத்த முறை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையக்கூடும் என்பதாக.

காங்கிரசை எதிர்த்து நிற்கும் வேறு எந்தக் கட்சியையும் பற்றி இந்தப் பேச்சு எழவில்லை. தி. மு. கழகம் பற்றியே இந்தப் பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது.

இது எதிர்க் கட்சி மட்டுமல்ல, ஆளுங் கட்சியாக வரக்கூடிய வகையில் வளரும் கட்சி என்ற எண்ணம் காங்கிரஸ் பெருந்தலைவர்களுக்கே ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்த எண்ணம் காரணமாகவே, மனக் குமட்டல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்த குமட்டலின் காரணமாகவே,

பைத்தியக்காரர்கள்.
பகற்கனவு காண்பவர்கள்.

என்று ஏசிப் பேசியிருக்கிறார் அகில இந்திய காங்கிரசின் தலைவர்.

தம்பி! அடுத்த பொதுத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதும், எத்தகைய ஆட்சி அமைய வேண்டும் என்பதும், பொதுமக்களின் கரத்தில் இருக்கிறது, இந்நாட்டின் மன்னர்கள், நாளை அவர்களின் விருப்பத்தின்படி ஒரு அரசு அமைத்துக் கொள்வார்கள். அந்த உரிமை அவர்களுக்கு.

அதுதான் ஜனநாயகம் எனப்படுவது. இந்நிலையில், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்துவிடப் போகிறதாமே என்று மனக் குமட்டல் கொள்வதால் என்ன பலன்? பொதுமக்கள் விரும்பித் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்துவார்களானால், அது எப்படிக் குறையுடையதாகும்? ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்ற உரிமை படைத்தவர் களல்லவா பொது மக்கள்? மனக் குமட்டல் கொள்வது எதற்கு?

ஒருவர் பேசியிருக்கிறார் எண்ணிப் பத்து நாள் நடக்குமா, கழக ஆட்சி! என்று,

இன்னொருவர் ஒரு படி மேலே சென்று கூறுகிறார். "பத்தே நாளில், கழக ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவோம்'' என்று.

உயர்ந்த நிலையிலுள்ள ஒரு காங்கிரஸ் தலைவரிடம் நமது கழகத் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காங்கிரஸ் தலைவர் கூறினாராம், "நீங்கள் ஆட்சியைக் கைப்பற்றினாலும், நாங்கள் நொடியில் அதைக் கவிழ்த்து விடுவோம்'' என்பதாக.

இவை நடைபெறுகின்றன என்றே வைத்துக்கொள்வோம். - எல்லாம் பொதுமக்கள் அனுமதி கொடுத்தால்தானே! - யாருக்கு இதனால் நட்டம்? கழகத்துக்கா? இம்மி அளவும் இல்லை!! கழகம், பொதுமக்கள் விரும்பி, அதற்கு எந்த நிலையை அளித்தாலும், எந்தச் செயலைச் செய்திடப் பணித்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கிறது.

தம்பி! இந்தப் பேச்சுகளிலிருந்து நமக்கு இப்போதிருந்தே, காங்கிரஸ் கட்சி தி. மு. க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியிருப்பதிலிருந்தே, காங்கிரசுக்கே ஒரு பலமான எண்ணம் கழகம் ஆளுங் கட்சியாகி விடும் என்ற எண்ணம் வலுத்துக்கொண்டு வருகிறது என்பது புரிகிறதல்லவா!

அந்த எண்ணம் காரணமாகவே மனக் குமட்டல்.

அதிகாரத்தைப் பெற்றவர்களுக்கு, அதை இழந்திட மனமும் வராது - இழந்துவிடச் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை என்ற எண்ணமே தடித்து இருக்கும்.

ஆனால் அந்த எண்ணத்தைக் கண்டு, பொது மக்கள் தமது போக்கை மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள், உரிமையை இழந்துவிடவும் மாட்டார்கள்.

கோபமில்லாத பழைய காங்கிரஸ்காரர் யாரையாவது பார்த்தால் இதைக் கேள், தம்பி! தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்னய்யா என்று?

அவருக்கே கூடக் கொஞ்சம் சங்கடம் கலந்த கோபம் முதலில் கிளம்பும் - காங்கிரசின் சேவைபற்றி விளக்குவார் - மரியாதையுடன் அதைக் கேட்டுவிட்ட பிறகு - ஐயா! அந்தக் காங்கிரசா இப்போது இருக்கும் காங்கிரசு? என்று கேள் - சாந்தம் ஏற்படும் - பிறகு மறுபடியும் கேள், தி. மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு? ஏன் வரக்கூடாது? வரக்கூடாது என்று உங்கள் தலைவர்கள் சிலர் பேசுகிறார்களே, அது ஏன்? மனக் குமட்டல் கொள்கிறார்களே சரியா? என்று கேட்டுப்பார்.

நாட்டை ஆள நீயா? உனக்கா அந்த அந்தஸ்து!!

நீ யார்? உன் யோக்யதை என்ன? உன்னிடமா நாடு ஆளும் பொறுப்பை ஒப்புவிப்பார்கள்?

நாடு ஆள்வது சாதாரண காரியமா! திறமை வேண்டாமா? தகுதி வேண்டாமா? உனக்கு ஏது அவை?

இப்படிப் பேசுவர் - பேசுகின்றனர் - சிலர். இவர்கள், நடைபெறுவது ஜனநாயகம் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள்.

ஜனநாயகத்தில், நாடாளும் நிலை, பொதுமக்களின் ஆதரவைப் பொறுத்திருக்கிறது, பொதுமக்கள் பார்த்து, ஒரு கட்சியை ஆட்சிப் பொறுப்பிலே இருந்திடச் சொன்னால், அந்த ஆணை ஒன்றே அந்தக் கட்சிக்கு, ஆட்சி நடாத்தும் தகுதி, திறமை, வலிமை யாவற்றையும் தன்னாலே பெற்றுத் தருகிறது!

மோட்டாரில் ஏறிக்கொள்பவன், குடல்தெறிக்க ஓடத் தேவையில்லை - உட்கார்ந்த நிலையிலுள்ள அவனை, மோட்டார் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் வேகமாக அழைத்துச் சென்று சேர்க்கிறது.

பொதுமக்களின் "உத்தரவு' எனும் விசைதான், ஆட்சிப் பொறுப்பில் அமரும் எந்தக் கட்சிக்கும் தகுதி, திறமை அளிக்கிறது. அந்தப் பொதுமக்களின் உத்தரவு கிடைத்து தி. மு. கழகம் ஆட்சிக்கு வருமானால், தவறு என்ன? என்று விளக்கமாகக் கேட்டுப்பார், தம்பி! நல்ல காங்கிரஸ்காரராக இருந்தால், பொதுமக்கள் பார்த்து கழகத்துக்கு அந்த நிலையை உண்டாக்கினால், அந்தத் தீர்ப்பை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவிப்பார்,

இந்த "விடுவோமோ?''க்காரர்களைப்பற்றிக் கவலை வேண்டாம்! பொதுமக்களின் "ஆணை'க்கு முன்பு எந்த ஆர்ப்பரிப்பும் நில்லாது,

நிலைக்காது. இவ்வளவு தெளிவாக இது தெரியும்போது மனக் குமட்டல் ஏன் ஏற்படுகிறது என்கிறாயா, தம்பி! காரணம் என்ன தெரியுமா? பெரிய நிலைக்குச் சென்றுவிட்டதும், தன்னாலே ஒரு எண்ணம், பலருக்கு வந்துவிடுகிறது - நம்மால்தான் முடியும் - நம்மால் மட்டுந்தான் முடியும் - நம்மாலன்றி வேறெவராலும் முடியாது - நம்மைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - என்ற எண்ணம்.

இந்த எண்ணம், ஒருவிதமான எதேச்சாதிகார மனப் போக்கை வளரச் செய்துவிடும் - அதன் விளைவு - உலகிலேயே தன்னைவிடத் தகுதியும் திறமையும் படைத்தவர்கள் ஒருவரும் இல்லை என்ற நினைப்பு - அந்த நினைப்பு தடித்திடத் தடித்திட, வேறு எவரோ இருக்கிறார்களாம் தகுதியுடன் என்ற பேச்சு கேட்டதும் ஒரு ஏளனம், பிறகு கோபம், பிறகு திகைப்பு, திகில்! இறுதியில் கசப்பு, குமட்டல்!! ஏற்பட்டுவிடுகிறது.

நாமே எதற்கும்! நாமே என்றென்றும்! நாமே எவரையும் விட! - என்ற மனப்போக்கு, அரசியலில் முறை எதுவாக இருப்பினும், சர்வாதிகாரத்தை மூட்டிவிடும்.

முடிமன்னனுமில்லை, படையுடையோன் ஆட்சியும் இல்லை, இது மக்கள் ஆட்சி என்று விருது கூறியபடியே, ஆட்சியில் அமர்ந்துவிட்ட கட்சி, "ஒரே கட்சி' ஆட்சியை அமைத்து, இதுவே உண்மையான ஜனநாயகம் என்று பேசுவது அறிவாயல்லவா? எகிப்திலே நாசர்! மற்றவர்கள் பற்றி நினைவுப் படுத்திக்கொள்வதா, கடினம்?

பத்து நாட்களுக்கு முன்பு, கெனியா நாட்டு முதலமைச்சராகியுள்ள ஜோமோ கெனியாடா கூறிவிட்டார், கெனியாவில் ஒரே கட்சி ஆட்சி முறை ஏற்படுத்த எண்ணுகிறேன் என்று. கானா நாட்டில், நிக்ருமா! இவர்களுக்கெல்லாம் என்ன எண்ணம்?

நாமே சகல தகுதியும் திறமையும் பெற்றிருக்கிறோம்.

நம்மை விட்டால் வேறு எவரும் இல்லை. இதே முறையில் காங்கிரஸ் தலைவர்களின் போக்கு செல்கிறது என்பதைக் காட்டுவதுதான்,

எதிர்க்கட்சி என்றாலே ஒரு எரிச்சல்

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் என்றாலே மனக் குமட்டல்

ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலைமை.

தம்பி! நான் இதைக் கண்டுதான் வருத்தம் கொள்கிறேன் - காமராஜர் இரண்டு வார்த்தை நம்மை ஏசிவிடுவது பற்றி அல்ல.

ஜனநாயக சோஷியலிஸ வாரம் கொண்டாடிவிட்டு, எதிர்க் கட்சியாவது ஆட்சிக்கு வருவதாவது! பைத்தியக்காரர்கள் பேசுகிறார்கள்! பகற் கனவு காணுகிறார்கள்! என்று ஏசுவது, ஜனநாயக முறையைப் புரிந்துகொள்ளாமலே, அதற்காக ஒரு விழாக் கொண்டாடிய கேலி நிரம்பிய குற்றமாகிவிடுகிறது.

இவனுக்கென்ன யோக்கியதை! அவனுக்கு என்ன தகுதி? - என்று ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குறித்துக் கேலி பேசுவது முறையுமல்ல - அந்தப் பேச்சு பலனும் அளிக்காது. பொதுமக்கள், தேர்தலின்போது யோசிக்கவேண்டிய விஷயமிது!

வேறு எவரும் ஆட்சிக்கு வரத் தேவையில்லாத முறையில், பொதுமக்கள் கொண்டாடத்தக்க விதத்தில், ஒரு குறையுமின்றி மக்களை, இன்று உள்ள ஆட்சி வைத்திருக்கிறதா - தகுதி திறமை குறித்து இவ்வளவு பேசுகிறதே என்று பார்த்தால்,

ஆண்டு பதினேழான பிறகும், இன்றும் முக்கியமான பிரச்சினையாக இருப்பது சோற்றுப் பிரச்சினைதான்!

என்று காமராஜரே சொல்லுவதிலிருந்து, 17 ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்தும், மக்கள் இன்னமும் சோற்றுக்கே திண்டாடுகிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உள்ள ஒரு ஆட்சி, எம்மைத் தவிர ஆட்சி நடத்தும் தகுதியும் திறமையும் பெற்றவர்கள் யார் என்றா கேட்பது?

உற்பத்தி பெருகினாலும் விலை குறையவில்லை,

உணவுப் பண்டங்களைப் பதுக்கி வைக்கும் கொடுமை ஒழிக்கப்படவில்லை.

வெளிநாட்டானிடம் "சோறு' கேட்கும் பஞ்சநிலை போகவில்லை.

ஏறிக்கொண்டேபோகும் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பேச்சு மட்டும் இருக்கிறது, "மூச்சுவிடாதே! முடி என் தலையில்! அது கீழே இறங்காது!!'' என்று.

எந்தப் பிரச்சினையை இவர்கள், எவரும் கண்டு வியக்கத் தக்க முறையிலே தீர்த்துவிட்டார்கள், எம்மைக் காட்டிலும் தகுதி படைத்தவனும் இருக்கிறானா நாடு ஆள!! - என்று ஆர்ப்பரிக்க.

தம்பி! உண்மை இதுதான். 17 ஆண்டுகளாகியும், சோற்றுப் பிரச்சினையைக்கூடத் தீர்க்க முடியாத ஒரு ஆட்சியை, மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? அந்த மக்களிடம், கழகம் கொண்டுள்ள நேசத் தொடர்பு நாளுக்கு நாள் வளருகிறதே. எதிர்காலம் எப்படியோ என்ற எண்ணம் தோன்றுகிறது; தோன்றும்போது மனக் குமட்டல் ஏற்படுகிறது; அதுதான் காரணம்,

பைத்தியக்காரர்கள்.
பகற்கனவு காண்பவர்கள்

என்று நம்மை ஏசுவதற்கு.

இந்த முறையிலே, தம்பி! பார்த்திடுவாயானால், அந்த ஏசல் கேட்டு எரிச்சல் ஏற்படாது. நமது கழக வளர்ச்சி கண்டு, அதனைக் குலைத்திட எடுத்துக்கொண்ட முயற்சிகள் முறிந்து போகக் கண்டு, மனக் குமட்டல் கொண்டு, காங்கிரஸ் பெருந்தலைவர்கள் உள்ளனர் என்ற உண்மை புரியும்; புரிந்திடும்போது மேலும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றிக் கழகத்தை வலிவும் பொலிவும் மிகுந்ததாக்குவோம்; பொதுமக்கள் காணட்டும் நமது சீரிய பணிகளை! பொதுமக்களின் ஆணை கேட்டு நடந்திடுவோம்!! என்ற உறுதி பிறந்திடும்.

உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலவில்லை காங்கிரஸ் கட்சியினால் என்பதைப் பொதுமக்கள் பெரும் அளவு புரிந்துகொண்டுவிட்டிருக்கிறார்கள். புரிய வைப்பவர்கள் இந்தக் கழகத்தாரல்லவா என்ற எண்ணம் ஏற்படும்போது மனக் குமட்டல் அதிகமாகிறது.

அதன் காரணமாக, நம்மைப் பைத்தியக்காரர்கள், பகற்கனவு காண்பவர்கள் என்று காமராஜர் ஏசி இருக்கிறார்.

நல்லவர்!
பொல்லாத வியாதி!

என்று கூறுவதன்றி, வேறென்ன கூற முடியும், தம்பி! அவர் படும் அல்லல் கண்டு உள்ளபடி பரிதாபப்படுகிறேன்.

அண்ணன்

9-8-1964