அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனடா பயணம் - (1)

ஆட்டவா ஒப்பந்தமா? ஒட்டவா ஒப்பந்தமா?
இலால்பகதூரின் கனடா பயணம்
மொழிப் பிரச்சினைக்குப் பயன்பட வேண்டும்
கனடாவின் வரலாறு
கனடாவில் கியூபெக் மாநிலப் பிரச்சினை

தம்பி!

லால்பகதூர் கனடா நாட்டுக்குச் செல்கிறார். . . அடடா! விஜயம் செய்கிறார் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். . . கனடா நாட்டுப் பிரதமருடன் கலந்துரையாடப் போகிறார். தலைநகரான ஆட்டவாவில் அமோகமான வரவேற்பு. பிறகு மான்ட்ரியல் நகர் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக் கழகத்திலே லால்பகதூருக்கு "டாக்டர்' பட்டம் வழங்கப் போகிறார்கள். நயாகரா நீர்வீழ்ச்சியைக்கூடப் பார்க்கப் போகிறார்.

கனடா நாட்டுடைய உதவி, மற்ற பல நாடுகளின் உதவி கிடைத்திருப்பது போலவே கிடைத்திருக்கிறது, குறிப்பாகவும் சிறப்பாகவும் நீலகிரி மாவட்டத்திலே அமைக்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான குந்தா திட்டம், கனடா நாட்டின் பேருதவியின் சின்னமாகத் திகழ்கிறது. லால்பகதூரின் கனடா விஜயம், ஏற்கனவே பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் முறையிலும், இனிப் பெற வேண்டியவற்றுக்கு வழிகாணும் விதத்திலும் அமையவேண்டும் என்று விரும்புகிறேன்.

கனடா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே ஒரு அங்கம்; பிரிட்டிஷ் அரசியார் கூடச் சென்ற ஆண்டு அங்குச் சென்றிருந்தார்கள் என்ற செய்தி நினைவிலிருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஹிட்லர், பிரிட்டனைப் படுசூரணமாக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டு, லண்டன் நகர்மீது ஓயாது குண்டு வீசிக் கொண்டிருந்தபோது, பிரிட்டனே அழிக்கப்பட்டு விட்டாலும் பிரிட்டிஷ் குலக்கொழுந்துகள் வேறு எங்கேனும் சென்று தழைக்கட்டும் என்ற எண்ணத்துடன் எண்ணற்ற பெற்றோர்கள் தங்கள் மழலைச் செல்வங்களைக் கப்பலேற்றி இந்த கனடா வுக்குத்தான் அனுப்பி வைத்தார்கள்.

கனடா என்ற உடன் எனக்கு இது மட்டுமல்ல, தமிழக அரசியல் நிகழ்ச்சியொன்றும் நினைவிற்கு வருகிறது.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் முன்பு ஒரு முறை வணிக ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளாக இந்தியாவும், கனடாவும் இருப்பதால், இவை இரண்டுக்கும் இடையே வணிகத் துறையில் சலுகைகள் இருத்தல் வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட ஒப்பந்தம் அது. அதனை முன்னின்று நடத்தியவர் சர். ஆர். கே. சண்முகம் செட்டியார்.

அந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்குக் கேடு செய்வது என்று காரணம் காட்டி, காங்கிரஸ் தலைவர்கள் அதனை மிகப் பலமாகக் கண்டித்து வந்தனர். ஆர். கே. சண்முகத்துடன் தேர்தல் போட்டியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சாமி வெங்கடாசலம் செட்டியார், ஒப்பந்தத்தைக் காரசாரமாகக் கண்டித்துப் பேசி வந்தார். தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னை நகரத்தில், ஒவ்வொரு காங்கிரஸ் மேடையிலும் கண்டனம்; இதழ்களில் கண்டனம்; ஒட்டாவா ஒப்பந்தம் ஒழிக என்ற முழக்கம்.

அத்தனை கண்டனத்துக்கும் சேர்த்து பதில் அளிக்கும் முறையில், சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில், சண்முகமும், சர். ஏ. ராமசாமி முதலியாரும் பேசினார்கள். பேச்சா அது!!

சர். சண்முகம் அன்று பேசியது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நான் முன்னின்று நடத்திவைத்த வியாபார ஒப்பந்தத்தைப் பற்றிக் கண்டனக்குரல் எழுப்புபவர்களின் கூற்று அவ்வளவும் தவறு; முழுத் தவறு; பரிதாபத்துக்குரிய தவறு! ஒப்பந்தம் நடந்த ஊர்ப் பெயரிலிருந்து ஒப்பந்த ஷரத்துக்கள் வரையில் ஒன்றைக் கூடச் சரியாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்; ஏசுகிறார்கள். நண்பர்களே! நான் சென்று கையொப்ப மிட்டுவிட்டு வந்த ஒப்பந்தம் நடைபெற்ற நகரின் பெயர் ஆட்டவா!! - ஒட்டவா அல்ல!!

தம்பி! அன்று நான் கேட்ட மகிழ்ச்சி ஆரவார ஒலி போல் இன்னும் கேட்கவில்லை.

அந்த ஆட்டவாவில் லால்பகதூர், கனடா நாட்டுப் பிரதமருடன், பல பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேசப் போகிறார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையில், சிக்கலான எந்தப் பிரச்சினையும் அதிக அளவிலே இல்லை. கனடாவின் நட்புறவு மேலும் வளப்படுத்தப்படவேண்டும்; அம்முறையில் பேச்சு கனிய வேண்டும்.

என்ன அண்ணா! நல்லெண்ணத்தைத் தெரியப்படுத்த அவருக்கே நாலுவரி கடிதம் எழுதிவிட்டிருக்கலாமே, அதை விட்டுவிட்டு, என்னோடு பேச வேண்டிய நேரத்தை வீணாக்கி விடுகிறாயே என்று தம்பி! கேட்கத் தோன்றும். உனக்குச் சில கூறத்தான் லால்பகதூரின் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.

இன்று நம்மை எல்லாம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிக்கலான பிரச்சினைப் பற்றிப் புதிய தெளிவு பெற்றுக்கொள்ள, கனடா பயணம் பயன்பட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்; மொழிப் பிரச்சினை பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

ஒருமைப்பாடு, ஒன்றுபட்ட உணர்வு, நாட்டுப் பற்று, விரிந்த மனப்பான்மை; அடிப்படையில் கவனம் செலுத்துவது என்ற சொற்றொடர்கள், சுவைமிக்கன; பொருள் மிக்கன; மிகப் பெரியவர்களால் வழங்கப்படுவன! அவைகளை நான் மறுக்க வில்லை; குறைத்தும் மதிப்பிட்டுவிடவில்லை. இன்னிசை எழுப்பிடும் இந்தச் சொற்றொடர்களை, நடைமுறையில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ளும்போது, இடர்ப்பாடுகள் என்னென்ன விளைகின்றன, பிரச்சினைகள் புதிது புதிதாக எவையெவை எழுகின்றன என்பதனைப் பார்க்கும்போது, சுவைமிக்க சொற்றொடர்கள் மட்டும் போதாது, பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திட இதயத்தின் அடித்தளத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் எண்ணங்களைக் கண்டறிந்து, மதிப்பளித்தாக வேண்டும் என்பது புரியும். கனடாவில் இப்போது இந்தக் கட்டம் காணலாம், விரும்பினால், அக்கறை எடுத்துக் கொண்டால். லால்பகதூர் அக்கறை காட்டினாலும் காட்டாவிட்டாலும், அவர் செல்ல இருக்கும் இடம் அவர் மனத்தில் அந்த எண்ணத்தை நிச்சயமாகக் கிளறிவிடும். மான்ட்ரியல் நகருக்கும் அவர் செல்ல இருக்கிறார் என்று அறிகிறேன். கனடாவின் தலைநகர் ஆட்டவா; மான்ட்ரியல் ஒரு புதிய எழுச்சிக்கு இருப்பிடமான தலைநகராகி இருக்கிறது.

தம்பி! க்யூபெக், கனடாவில் ஒரு மிôநிலம்; மத்திய அரசுக்கு உட்பட்ட ஒரு மாநில அரசு; மொத்தம் பத்து மாநில அரசுகளை இணைத்துக் கொண்டுள்ள அமைப்பு கனடா நாட்டின் மத்திய சர்க்கார் - பேரரசு.

3,619,616 சதுர மைல் கொண்டது கனடா! 16,589,000 மக்கள் தொகை.

இதிலே, க்யூபெக் 523,860 சதுர மைல் கொண்டது. 4,628,378 மக்கள் தொகை கொண்ட மாநில அரசு. இதன் தலைநகர் க்யூபெக்; 166,996 இந்நகரின் மக்கள் தொகை; மான்ட்ரியல் 1,094,448 மக்கள் தொகை கொண்டது.

இந்த விவரம், நான் காரணமற்றுத் தரவில்லை.

பேரரசிலே இணைந்துள்ள பத்து மாநிலங்களிலே ஒன்றான க்யூபெக் மாநிலத்திலிருந்து கிளம்பியுள்ள பிரச்சினை - மொழி அடிப்படையிலே துவக்கப்பட்ட பிரச்சினை - இன்று கனடா நாட்டின் எதிர்காலத்தையே ஒரு பெரிய கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது என்பதனைக் குறிப்பிடத்தான் இந்தத் தகவலைத் தந்தேன்.

க்யூபெக் மாநிலத்திலிருந்து எழும்பியுள்ள இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதைப் பொறுத்துத்தான், கனடாவில் பேரரசு இருக்குமா, அல்லது அது போரரசு ஆக வேண்டி நேரிடுமா என்பது முடிவாக இருக்கிறது என்று, வீண் மிரட்டல் பேச்சுக்காரர்கள் அல்ல, வதந்திகளைக் கிளப்பிவிடுவோர் அல்ல, பொறுப்பு மிக்க ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனக்கே இது புரிந்திருக்கிறபோது, அங்குச் செல்லும் லால்பகதூர் இதனை உணராமலிருந்திருக்க முடியாது.

ஆனால் கனடாவின் உள்நாட்டுப் பிரச்சினை அது; அதுபற்றி வெளிநாட்டுத் தலைவர் ஏதும் கருத்தளிப்பது கூடாதே என்று கூறுவர்; நான் அதுபற்றிக் கருத்து அளிக்கும்படி லால்பகதூரைக் கேட்டுக் கொள்ளவில்லை; அங்கு உள்ள நிலைமையைப் பார்த்து, பிரச்சினையைப் புரிந்து கொண்டு, கருத்திலே கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

தம்பி! எழும் பிரச்சினைகளை ஏளனம் செய்து விடுவது எளிதான காரியம்; அதிலும் சிக்கலைத் தீர்த்திட வகை தெரியாத போது, பிரச்சினைகளை அலட்சியப் படுத்திப் பேசி விடுவது, தோல்வியை மறைத்திடக்கூடப் பயன்படும். பிரச்சினைகள், கிளம்புகின்றன; கிளப்பப்படுவதில்லை! பிரச்சினைகளைச் சந்திக்கும் துணிவும், புரிந்து கொள்ளும் தெளிவும், தீர்த்து வைக்கும் ஆற்றலும் அற்றவர்கள், பிரச்சினைகளை வேண்டு மென்றே யாரோ, எதற்காகவோ, கிளப்பிவிடுகிறார்கள் என்று பேசுகின்றனர்; பேசிவிட்டுப் பிரச்சினைகளைச் சந்திப்பதற்குப் பதிலாக, எந்தப் ப-க்கடா கிடைக்கும் என்று தேடித் திரிகிறார்கள்.

காரணமற்று, எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை; எழும் பிரச்சினையின் நியாயத்தை உணர்ந்தவர்கள் அதன் பக்கம் நிற்கிறார்கள், வாதாடுகிறார்கள்; அவர்கள் பிரச்சினையால் ஈர்க்கப்பட்டவர்கள், கிளப்பி விட்டவர்கள் அல்ல.

ஆனால், ஆதிக்கத்தில் உள்ளவர்கள், எழும் எந்தப் பிரச்சினையையும்., இயற்கையானது, நியாயமானது, கவனிக்கப்பட வேண்டியது என்று எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதில்லை.

கொடுங்கோலை எதிர்த்து மக்கள் குமுறியபோதுகூட, ரμய ஜார் சொன்னானாம், "என் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும்'' என்று.

இந்தியாவுக்கு சுயராஜ்யம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது, வெள்ளை ஏகாதிபத்யம் அதனை ஒரு பிரச்சினை என்று ஒப்புக் கொண்டதா, துவக்கத்தில்?

வேண்டுமென்றே, சில கலகக்காரர்கள் கிளப்பி விடும் பிரச்சினை - இது அடக்கப்பட வேண்டியது - கவனிக்கப்பட வேண்டியது அல்ல - என்றுதான் பேசினார்கள்; வாதாடினார்கள்.

அதே முறையிலேதான் இந்தியப் பேரரசும் எந்தப் பிரச்சினையையும் - மொழிப் பிரச்சினை முதற்கொண்டு வாழ்க்கை வழிப் பிரச்சினை வரை - எதனையும் இயற்கையானது என்றோ, நியாயமானது என்றோ ஒப்புக் கொள்வதில்லை.

வீணான பயம்; காரணமற்ற கலக்கம்; குழப்பம்; சந்தேகம் என்று பல பேசி, பிரச்சினைகளுக்காக வாதாடுபவர்களை விவரமறியாச் சிறுவர்களாகச் சித்தரித்துக் காட்டுகின்றனர்.

கனடாவில், துவக்கத்திலே க்யூபெக் மாநிலத்திலிருந்து எழுந்த பிரச்சினையே, அலட்சியப்படுத்திப் பார்த்தனர் என்றாலும், பிறகு அது இயற்கை வலிவுடன் உள்ளது என்பதனையும், வளர்ந்து வருகிறது என்பதனையும் உணர்ந்து, பிரச்சினையைத் தீர்த்து வைக்கத் தீவிரமான முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.

லால்பகதூர், கனடா செல்லும் இந்த நேரம், கனடியப் பேரரசு, பிரச்சினையை அலட்சியப்படுத்திய நேரம் அல்ல, பிரச்சினையை முழு அளவில் கண்டறிந்து, சிக்கலைப் போக்கிட வழிதேட முனைந்துள்ள நேரம் இது.

இங்கு பேசப்படுவது போலத்தான், ஒருமைப்பாடு, ஓரரசு என்பன பற்றிய பேச்சு கனடாவில் பேசப்பட்டது. இங்காவது 17 ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது, அங்கு நெடுங்காலமாக.

நாம் அனைவரும் முதலில் இந்தியர்! பிறகே பிற என்று பேசுகிறோம்; ஒருவருக்கு மற்றவர் தாராளமாக இந்த உபதேசத்தை வழங்கி வருகிறோம். அதேபோது கிளை அஞ்சல் அலுவலகத்தில் துணை அதிகாரியாக வந்திருப்பவர், நம்மவரா! என்று கேட்டறிந்து, காற்றினிலே வரும் கீதமாகக் கொள்கிறாம் அந்தச் சேதியினை!

அங்கும், நாம் அனைவரும் கனடியர் - கனடா நாட்டவர் - என்ற "தேசியம்' இருக்கிறது; நெடுங்காலமாகக் கொலுவிருக்கிறது. கனடியர் என்ற தேசிய உணர்ச்சியின் முன்பு மதம், பிரதேசம், மொழி எனும் எதுவும் நிற்காது; கதிரவன் ஒளி முன் மின்மினி அவையெலாம் என்று பேசத் தவறவில்லை.

கட்டுரைகளும் கவிதைகளும், கனடா தேசிய உணர்ச்சியை மலரச் செய்யப் பயன்பட்டன. ஆனால். . . ஆமாம், தம்பி! அங்கேயும் அந்த ஆபத்தான "ஆனால்' படை எடுத்திருக்கிறது!

அதனைக் கூறுமுன்பு தம்பி! கனடாவின் வரலாற்றைச் சிறிதளவு சொல்லிவிடுவது தேவை என்று எண்ணுகிறேன் - ஏனெனில் பிரச்சினையின் ஆணி வேர் வரலாற்றுடன் பிணைந்து கிடக்கிறது.

கனடா, ஒரு நாடு ஆக்கப்பட்ட பூபாகம்! ஒரு நாடு ஆக்கப்படுவதற்கு முன்பு, அந்தப் பூபாகத்தில் தனித் தனி அமைப்புகள் இருந்து வந்தன; ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு தனி இயல்பு, அந்த இயல்புக்கு ஏற்றவிதமான நடவடிக்கை, இவ்விதம்.

மிகப் பழைய காலத்தை விட்டு விடுகிறேன்; பெரும் பெரும் அரசுகள், "ராஜ்யம்' தேடி அலைந்த கால கட்டத்தில் நடந்தவைப் பற்றி மட்டும் சிறிதளவு கூறுகிறேன்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றுஎந்த பூபாகத்தைக் கனடா என்று குறிப்பிடுகிறோமோ அங்கு, மிகப் பெரிய அளவு இடம், பிரஞ்சு அரசுக்கு இருந்தது. பிரஞ்சுக்காரர்களே குடி இருந்தார்கள் என்பதல்ல பொருள்; பிரஞ்சு ஆதிக்கம் இருந்து வந்தது. அந்த ஆதிக்கம் வளர வளர, அந்த இடத்தில் மேலும் மேலும் பிரஞ்சுக்காரர்கள் குடியேறினர்.

பிரிட்டிஷ் அரசுக்கும் பிரஞ்சு அரசுக்கும் ஆதிக்கப் போட்டி நடைபெற்ற நாட்களில் - எங்கெங்கு பிரான்சு ராஜ்யம் அமைத்ததோ அங்கெல்லாம் பிரிட்டிஷாரும் கோட்டை கட்டிக் கொடி பறக்க விட்டனர். ஆங்காங்குக் களம்! இடங்கள் அடிக்கடி கைமாறும்! இப்படிப்பட்ட நிலை.

ஏழு ஆண்டுச் சண்டை ஒன்று நடைபெற்றது, பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும்; அது ஐரோப்பிய பூபாகத்தோடு நிற்கவில்லை; இங்கும் நடந்தது; கனடாவிலும் நடந்தது; அப்போது, பிரஞ்சுப் பிடியில் இருந்த பூபாகம் பிரிட்டனிடம் சிக்கிற்று; அப்படிச் சிக்கிய இடங்களிலே ஒன்று க்யூபெக்; அந்தக் களத்திலே கீர்த்திமிக்க வெற்றி பெற்று உயிர் நீத்தவர் வுல்ப் எனும் பிரிட்டிஷ் தளபதி.

1763லில், பாரிஸ் பட்டினத்தில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்தின்படி கனடா முழுவதும் பிரிட்டனுக்கு ஒப்படைக்கப் பட்டது.

கனடா, பிரிட்டிஷ் பிடியில் வந்த பிறகு, பல மாநிலங்களை இணைப்பதிலும், ஒரே விதமான அரசு முறை அமைப்பதிலும் ஈடுபட்டனர்; கனடா, கனடியர் என்ற உணர்ச்சி ஊட்டப்பட்டது.

ஊட்டப்பட்ட இந்த உணர்ச்சி பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கே உலை வைத்துவிட்டது. கனடா நமது நாடு. கனடியர் நாம், ஏன் பிரிட்டனின் அடிமை நாடாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது; கிளர்ச்சி நடந்தது; 1849லில், கனடாவுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டது; கனடாவின் பல பகுதிகளை இணைக்கும் வேலை மும்முரமாகி, 1867லில் கனடா பேரரசு ஆகிடத்தக்க சட்டம் பிறந்தது. பத்து மாநில அரசுகள், ஒரு பேரரசு; பேரரசுக்குத் தலைநகரம் ஆட்டவா; மாநில அரசுகளுக்குத் தனித் தனி மந்திரி சபை என்ற முறையில் அரசு அமைந்தது.

ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால், தம்பி! 1867-லிருந்து கனடா - கனடியர் என்ற உணர்ச்சி ஊட்டப்பட்டு வந்திருந்த போதிலும், கனடியர் என்ற தேசிய உணர்ச்சி காரணமாக, தத்தமக்குத் தேவைகள் யாவை என்பது பற்றி எண்ணிடவோ, அவை கிடைக்காதபோது மனம் புழுங்கிடவோ, அந்த மனப் புழுக்கம் ஏற்படும்போது தாங்கள் யார், தமது பூர்வீகம் என்ன? இயல்பு என்ன என்ற துறையில் சிந்தனையை ஓட்டவோ, அங்ஙனம் சிந்தனை செல்லும்போது தங்களை யார் அழுத்தி வைத்திருக்கிறார்கள், எந்தக் கருவியைப் பயன்படுத்தி என்று ஆராயவும், ஆராய்ந்து பார்த்தபிறகு, நாங்கள் தனி இயல்பினர் எமது இயல்பினை நாசமாக்கும்விதமாக நடந்து கொள்ளும் எந்த ஆதிக்கத்தையும் நாங்கள் எதிர்த்தே தீருவோம் என்று முழக்க மிடவும், அந்த முழக்கம் கேட்டு மற்றவர்கள் இவ்விதமான பேத உணர்ச்சி உனக்கு ஏற்படலாமா, நாமெல்லாம் ஒரே நாட்டின ரல்லவா, கனடியர் அல்லவா என்று சொந்தம் பேசவும், அதைக் கேட்டதும் மேலும் எரிச்சல் கொண்டு சொந்தம் பந்தம் பேசிக் கொண்டு சுகபோகம் அனுபவிக்கிறாய், நாங்கள் தேய்ந்து போகிறோம் இது அக்கிரமம் அல்லவா என்று கேட்டு, அக்கிரமம் ஒழிக! அக்கிரமம் செய்திடும் ஆட்சி ஒழிக! என்று முழக்கமிடவும் முடியாமற் போகவில்லை.

அப்படிப்பட்ட முழக்கம் எழுப்பியுள்ள இடம் க்யூபெக்.

இருநூறு ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கனடியர் என்ற உணர்ச்சியுடன், க்யூபெக்கில் உள்ளவர்கள் உட்பட ஒன்றாகக் கலந்திருந்த பிறகும், தங்கள் நிலை கெடுகிறது, கெடுக்கப்படுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டதும், க்யூபெக் தனிக்குரல் எழுப்ப முனைந்துவிட்டது.

நாம் அனைவரும் கனடியர் என்ற பேச்சு, சட்ட சம்மதம் பெற்று விட்டது; இருநூறு ஆண்டுகளாக அரசியலில் அந்தச் சொல்லுக்குத் தனிப்பட்ட மதிப்பு இருந்து வந்திருக்கிறது; ஆயினும், இப்போது மிகப் பலமாகவும், சில ஆண்டுகளாகவே மெள்ள மெள்ளவும், நாங்களும் கனடியர் என்று பேசி வந்தவர்கள் "நாங்கள் கனடாவில் உள்ள பிரஞ்சுக்காரர்கள்; நாங்கள் பிரஞ்சுக் கனடியர்' என்று பேசத் தலைப்பட்டு விட்டனர்.

தம்பி! பதவி கிடைக்காத பசி நோய்க்காரர்கள், பேதம் மூட்டிவிட்டுப் பிழைப்பு நடத்துபவர்கள், குட்டையைக் குழப்பி விட்டு மீன் பிடிப்பவர்கள் போன்றவர்கள் இப்படிப்பட்ட பேச்சுத்தான் பேசுவார்கள், ஆனால், நாட்டின் அறிவாளர்கள் இத்தகைய பேச்சைத் துச்சமென்று தள்ளிவிடுவார்கள் என்று கூறுவர்.

ஆனால், நாங்கள் பிரெஞ்சுக் கனடியர். எமது பிரஞ்சு மொழிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கிடைத்தாக வேண்டும்; பிரஞ்சுக் கனடியர்களான எம்மீது ஆங்கிலக் கனடியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், எல்லாத் துறைகளிலும்; இதனை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; உரிமையை இழக்கமாட்டோம் எமது உரிமை எந்த விதத்திலும் பாதிக்கப்பட முடியாத விதமான அரசு முறை அமைக்க வேண்டும், இல்லையேல், நாங்கள் பிரிந்து போகிறோம்!

என்று முழக்கம் எழுப்புபவர் படித்தவர்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொறியிய-னர், மருத்துவத் துறையினர், தேவாலயத் துறையினர், இத்தகையோர்; விவரமறியாதவர்களுமல்ல, விஷமிகளும் அல்ல! தேசியம், ஒருமைப்பாடு, ஓரரசு என்பன பற்றி எல்லாம் அறிந்தவர்கள்; எடுப்பார் கைப்பிள்ளைகள் அல்ல, ஏதுமறியாதாரும் அல்ல.

இத்தனைக்கும் தம்பி! பேதம் எழலாகாது, பிளவு இருத்தல் கூடாது, வஞ்சனை ஆகாது, உரிமையை அழித்திடல் பெரும் தீது என்ற உணர்வுடன் கனடாவின் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டபோது, மொழி ஏகாதிபத்தியம் ஏற்பட முடியாதபடி பாதுகாப்புத் தந்துள்ளனர்.

கனடாவில் உள்ள மக்களில், இரு பெரும் பிரிவினர் உள்ளனர்; ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள்.

கனடாவில் உள்ள ஆங்கிலேயர்கள், மொழி ஒன்றினால் மட்டுந்தான் ஆங்கிலேயர்கள், மற்றபடி அவர்களுக்கும் இங்கிலாந்துக்கும் வேறு தொடர்புகள் குறிப்பிடத்தக்க விதமாக இல்லை. அதுபோன்றே பிரஞ்சுக் கனடியர் நிலையும்.

இந்த இரு பெரும் மொழிப் பிரிவினரும், மொழியால் வேறுபட்டவர்கள் என்ற உணர்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, கனடா சுயாட்சி பெறக் கிளர்ச்சி நடாத்தினர்.

ஆனால், சுயாட்சி நடத்திடும் கனடாவில், தங்கள் உரிமை தழைக்கவில்லை, வாழ்வு செழிக்கவில்லை என்றதும், மொழி உணர்ச்சி மீண்டும் ஏற்பட்டு விட்டது. எப்படி முடிந்தது என்கிறாயா, தம்பி! பொது ஆபத்தை எதிர்த்து நிற்கும்போது ஒதுக்கி வைக்கப்படும் உணர்ச்சிகள், ஒதுக்கித்தான் வைக்கப் படுகின்றன. அவை மடிந்து போய் விடுவதில்லை, ஆகவேதான் அந்த உணர்ச்சிகள், தமது நலன் கெடுக்கப்படுகிறது, உரிமை பறிக்கப்படுகிறது என்ற நிலை கிளம்பும்போது மீண்டும் வெளி வந்து விடுகின்றன! அந்த உணர்ச்சி ஒடிந்த வாளாகி விடவில்லை; உறைக்குள் வாளாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

கனடாவில்; பிரெஞ்சு மொழி பேசுவோரை விட ஆங்கில மொழி பேசுவோரின் தொகை அதிகம்.

அதுமட்டுமின்றி பிரஞ்சுமொழி பேசுபவர்கள், களத்தில் ஆங்கில அரசால் தோற்கடிக்கப்பட்டவர்கள். அவ்விதம் இருந்தும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி, பிரஞ்சு பிராந்திய மொழியாக இருக்கட்டும், மத்திய அரசுக்கு, பேரரசுக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என்று சட்டம் இல்லை. மாறாக கனடாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 133-ம் விதியின்படி, பாராளுமன்றம், அரசாங்கப் பணிமனைகள், நீதிமன்றங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் எல்லா அலுவல்களுக்கும், ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சிமொழிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; சர்க்கார் வெளியிடும் எல்லா விதமான அறிக்கைகள், உத்தரவுகள் கொண்ட ஏடுகளும், இரு மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும், இரு மொழிகளில் எதை வேண்டுமானாலும் எவரும் அவருடைய விருப்பப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

களத்திலே தோற்றுப்போனவர்கள் என்பதைக் காரணம் காட்டி, ஒரு மொழித் திட்டத்தை அமுல் செய்திடலாம் என்ற ஆதிக்க நினைப்பு எழவில்லை. நாம்தான் களத்திலே தோற்று விட்டோமே, நம்முடைய பிரஞ்சு மொழிக்கு அரியணை எப்படி நாம் துணிந்து கேட்க முடியும் என்ற தயக்கம் பிரஞ்சுக் கனடியருக்கும் ஏற்படவில்லை.

மாறாக இருமொழிகளும் ஆட்சி மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன; அதற்கான சட்டம் 1867-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் இருமொழிகள் ஆட்சி மொழிகளாக அமுலில் இருந்து வருகின்றன.

இருந்தும், மீண்டும் மாச்சரியமா? மறுபடியும் மொழித் தகராறா? என்று கேட்கத் தோன்றும்.

இப்போது, மொழி ஆதிக்கம் பற்றிய பிரச்சினை எழவில்லை; இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே, மிக்க அரசியல் நுண்ணறிவுடன் இருமொழிகளையும் ஆட்சி மொழிகள் என்று சட்டம் செய்துவிட்டதால், இந்த இருநூறு ஆண்டுகளாக, மொழி ஆதிக்கம் என்பதனால், தகராறு, மாச்சரியம், கிளர்ச்சி எழவில்லை.

இப்போது கிளம்பி இருப்பது, மொழி ஆதிக்கம் செய்கிறது, ஆட்சிமொழி என்ற நிலையில் என்பது அல்ல. ஆங்கிலம் மட்டுமல்ல ஆட்சிமொழி; பிரஞ்சு மொழியும் ஆட்சிமொழி;- ஆகவே மொழி ஆதிக்கம் என்ற பேச்சுக்குப் பொருள் இல்லை. ஆனால், இப்போது எழுந்துள்ள பிரச்சினை, ஆங்கில மொழியினரின் ஆதிக்கம் என்பதாகும். அதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கும், நிச்சயமாக; ஆனால், முதலில், மொழி காரணமாக, மாச்சரியம் எழாதபடி இந்த 200- ஆண்டுகளாக நடந்துகொள்ள முடிந்ததே, இரு மொழிகளையும் ஆட்சி மொழிகள் என்று சட்டம் இயற்றியதன் மூலம், அந்த அரசியல் நுண்ணறிவு பற்றி, தம்பி! எண்ணிப்பார்!! நீயும் நானும் எண்ணிப் பார்த்து மட்டும் என்ன பயன்? அங்கே போகிற லால்பகதூர் அல்லவா எண்ணிப் பார்க்க வேண்டும்.

இருநூறு ஆண்டுகள் எத்தனையோ இனிமையுடன், கனடியர் என்ற தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சியை ஊட்டி வளர்த்த பிறகும், இன்று கனடாவில் கிளம்பியுள்ள பிரஞ்சு உணர்ச்சி பற்றி லால்பகதூர் கூர்ந்து கவனித்துத் தமது கட்சியினர் கொண்டுள்ள நோக்கத்தையும் போக்கையும் மாற்றிக் கொண்டாக வேண்டும் என்ற தெளிவான கருத்தினைப் பெற வேண்டும். சென்றேன்! கண்டேன்! மெய்மறந்து நின்றேன்!! என்பதிலே என்ன பலன்? சென்றேன், கண்டேன், புதுக்கருத்துக் கிடைக்கப் பெற்றேன் என்றால், பயன் மெத்தவும் உண்டு.

தம்பி! அடுத்த கிழமை மீண்டும் க்யூபெக் சென்று பார்ப்போம் - நிலைமையை - நினைப்பினை.

அண்ணன்,

13-6-65