அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


டமாஸ்கஸ் முதல்...
1

நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது -
டமாஸ்கஸ்ஸில் விருந்து -
நாகநாடு பிரச்சினை.

தம்பி,

மலாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் - ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் "மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்!

கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், "எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.

அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி, உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும்.

மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?'' என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!!

இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் - ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன்.

எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில்.

எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன்.

டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின் கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி என்கின்றனர், அந்த அழகு நகரை!

அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர் விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம் உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல் அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ! விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக் கிடக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு! எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்! எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே - நமக்கென்ன இங்கு பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம் காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி இருக்கிறதென்றால், நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சி னையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர் பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள் களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை எடுத்துக்கொள்க'' என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்!

டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும் பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து களிப்படைந்திருப்பர்!

"வயது என்ன?''

"நூறு.''

"நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன் இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? உனக்கென்ன வந்தது?

"அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதை யுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு, எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும் என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான் இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு என்று! இதுவா நியாயம்...?''

"உம்! சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும் பேசுவாய்.... சரி... உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம். வேறென்ன. இந்த வயதிலே, "ஜெயில்' வாசமா என்று எண்ணும் போது எனக்குத் துக்கம்... வேறென்ன...?''

"பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப் போவது, நான். உனக்கேன் துக்கம்?''

"மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது. இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, சொல்லேன் கேட்போம்...''

"நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி, எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். படுகிழமாயிற்றே - நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே - நீ ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று - இனி நான் தேடிப் பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக, உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக் கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள் எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச் சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால் மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டி ருக்கிறோம், நாமுண்டு நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள். விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்! மகனே! அதற்காகத் தானடா, நான் இந்த வயதிலே சிறை செல்கிறேன்.''

மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும்.

டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது!

நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது.

துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது!

டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்'' அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!