அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)
2

தம்பி! பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் - சென்னையில், நான் ஓர் நாடகத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன். எனக்கு வலப்புறம், நாடகக் குழுவின் உரிமையாளர் அமர்ந்திருந்தார் - மறுபுறம், அவருடைய மகன், சிறுவன் - ஏழெட்டு வயதிருக்கும் - அமர்ந்திருந்தான்.

நாடக முடிவில், பேசச் சென்றேன். சிறந்த முறையில் அமைந்திருந்த நாடகம் அது. அன்று அந்தக் குழுவில் இருந்த வர்களில் பலர், இன்று திரையில் ஒளிவிடும் திறமைமிக்க நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அந்த நிலை பெறப் போகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டத்தக்க சிறப்புடனேயே, அவர்களின் அன்றைய நடிப்பு இருந்தது. பாராட்டிப் பேசினேன். உரிமையாளர், மாலை அணிவித்தார். அவர் மகன், மாலையையே உற்று உற்றுப் பார்த்தான்.

சிறுவன், மாலையை மிக உன்னிப்பாகப் பார்த்துவிட்டுத், தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இவர் சின்ன மந்திரியா?'' - என்று கேட்டான். எனக்கு, அந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. அவர், சற்றுச் சிரமப்பட்டார். சிறுவர்களா, கேள்விக்குப் பதில் பெறாமல் விடுவார்கள்! கிளறியபடி இருந்தான் - அவர், வேறு பக்கமாகப், பேச்சைத் திருப்பிப் பார்த்தார்.

"இவர்தானடா, அண்ணாதுரை . . . . அண்ணா தெரியாது?'' - என்று கேட்டார், சிறுவன் செல்லமாக, "ஓ! தெரியுமே! இவர் தான் அண்ணா! அது தெரியும். ஆனால், இவர் சின்ன மந்திரியா?'' - என்று மீண்டும் கேட்டான். நான் சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஏன் அப்படிக் கேட்கிறாய்?'' என்று கேட்டேன். உரிமையாளர் திகைத்தார் - சிறுவன், சொன்னான்: "நேற்று ஒருவர் தலைமை வகித்தார். அவர்க்கு இந்தாப் பெரிய மாலை போட்டாங்க, அப்பா. அவர் யார் என்று கேட்டேன். மந்திரி என்று சொன்னார். இப்ப, உங்களுக்குச், சின்ன மாலைதான் போட்டாங்க. . . அதனாலேதான், நீங்க சின்ன மந்திரியா, என்று கேட்டேன்'' - என்றான். சிரித்தேன், உரிமையாளரின் சங்கடத்தைக் குறைத்திட, அந்த உரிமையாளர், என்னிடம் உள்ளன்பு கொண்டவர் - அன்றும், இன்றும். அன்றும் சரி, இன்றும் சரி, மந்திரிகளை விட, நாடகத்தைக் காண்பதிலும், சுவைப்பதிலும், நடிப்புத் திறனைக் கண்டால், நடிகர்களின் விருப்பு வெறுப்புப் பற்றி மறந்து பாராட்டுவதிலும், நான் அதிக ஈடுபாடு கொண்டவன்; இதை நாடு அறியும். என்னைத் திட்டுவதற்கு, மாற்றுக் கட்சியினர், பயன்படுத்தும் வார்த்தையிலே, மிக முக்கியமான சொல்லே, கூத்தாடி என்பதல்லவா?

இருப்பினும், மந்திரி தலைமை வகிக்கிறார் என்றால், மற்றவர்களுக்குச் செய்கிற மரியாதையைவிடச் சற்றுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பும், நிலையும், யாருக்கும் ஏற்பட்டு விடுகிறது.

இது தவறும் அல்ல! அவர்களிலே, மிகப் பலர், தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்று, "பெரியமாலை' என்றானே சிறுவன், அவ்விதமான மரியாதைகளைப் பெறுவதே, மந்திரிகள் என்ற பதவியில் இருக்கும்போதுதான்.

முன்னம் இல்லை, பின்பும் அநேகமாக இருக்காது.

என்போன்றோர்களின் நிலை, அது அல்ல.

ஆகவே, அமைச்சர்கள், "பெரிய மாலை' போட்டுக் கொள்வதும் தவறும் அல்ல; தகாது என்றும் கூறுவது கூடாது. ஆனால், சிறுவனுக்கு என்ன தோன்றிற்று? மந்திரிக்குப் பெரிய மாலை - அண்ணாதுரைக்குச் சின்ன மாலை - ஆகவே, இவன் இவன் சின்ன மந்திரி! - என்றுதானே!

குழந்தை உள்ளம் அது. குடிமக்களில் பெரும்பாலோ ருக்கும், நிலை அதுதான். அறிவாற்றல், தகுதி, திறமை, என்பவைகளைப் பார்த்துமட்டும் அல்ல, பதவியின் உயர்வைக் கண்டு, "பெரிய மாலை' போட வேண்டியவர்களாகிறார்கள். மாலை மரியாதை மட்டும்தான் என்றால் நஷ்டமும் இல்லை, ஆபத்தும் எழாது. ஆனால், பதவி காரணமாக மூட்டிவிடப்படும் மயக்கம், அச்சம் காரணமாக "ஒட்டுகளை'யும் போடும் நிலை ஏற்பட்டுவிடுமானால், பிறகு குடிஅரசு முறை, கோண லாட்சிக்குத்தானே, வழி ஏற்படுத்தும்.

தம்பி! ஒரு கணம் மீண்டும், அந்த நாடக மேடைக்குப் போவோம். மந்திரி என்பதால், பெரிய மாலை போட்டுக் கொண்டதாலே ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடாது - ஆனால், மந்திரியின் கரம் பட்டவன்தான் திறமுள்ள நடிகன், என்று ஒரு முறை உண்டாக்கிவிட்டிருந்தால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? இன்று மந்திரிகளின் கரம் குலுக்கிக் களிப்படையும் நடிகர்களே கூட, ஒரு சமயம், மந்திரியின் கண் பார்வை கிடைக்காது போயிருக்குமானால், உரிய உயர் இடம் பெற்றிருக்க முடியாது.

நடிகன், எந்த இடம் பெறத்தக்கவன் என்பது, ரசிகர்களின் கைஒலியில் இருக்கிறது; மந்திரியின் பார்வையில் அல்ல!!

அதுபோலவே, யார் மக்களின் ஓட்டுகளைப் பெறத் தக்கவர்கள் என்பது, அவர்களின் அறிவாற்றல், செய்தவை, இவைகளைக் காட்டிப் பெறுவதாக இருக்கவேண்டும் - பதவியைக் காட்டிப் பறிக்கப்படுவதாக இருத்தல் கூடாது - அது தீது - பேராபத்துமாகும்.

குடிஅரசு முறை, காங்கிரசாரிடம் இருப்பதால், உழவர் களின் நிலை, தேய்ந்து விட்டிருக்கிறது என்பது, ஆய்வுக் குழுவின் அறிக்கையிலேயே, விளக்கமாக்கப்படுகிறது.

இதை ஆதாரமாகக் கொண்டு, "ஓட்டு' அளிப்பது என்றால், உழவர் பெருங்குடி மக்களின் ஆதரவு, எப்படிக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க முடியும்?

இவ்வளவும் செய்துவிட்டு, உழவனைக் கடனாளியாக்கி, நோயாளியாக்கி உழலவைத்துவிட்டுப், பதவியைக் காட்டிப் பயமூட்டி "ஓட்டு' வாங்கினால், அது கூர்மையான கத்தியைக் காட்டி நடத்தப்படும் வழிப்பறி, அல்லது சுவையான பண்டம் கொடுத்து குழந்தையை ஏய்த்துவிட்டு நடத்தப்படும் களவு, போன்றதாகத்தானே ஆகிவிடும்.

இதனைத்தான், எல்லா அரசியல் கட்சிகளும், குடிஅரசு செம்மையாக்கப்படவேண்டும் என்பதிலே அக்கரை கொண்ட வர்களும், கவனிக்கவேண்டும்.

குடிஅரசு முறையை ஏற்று நடத்திக் கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, உழவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதைக் கண்டோமல்லவா! தம்பி! நெசவாளியைக் காண்போம்! அவன், இவர்கள் ஆட்சியிலே, எப்படி இருக்கிறான்? நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று நேர்த்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. காங்கிரசாட்சியோ, பட்டமரம் துளிர்த்திடச் செய்யும் "மாயாவிகள்' நிரம்பிய கட்சி என்று பாமரரிடம் கூறி வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் நெசவாளி முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்கவேண்டும்! ஆனால், எப்படி இருக்கிறான்? நான் எதற்காகத் தம்பி! அதைச் சொல்லிக், காங்கிரசாரின் கோபத்தைக் கிளறவேண்டும். ஒரே அடியாகச் சொல்வார்கள் - இவனுக்கு நெசவுத் தொழில்பற்றி என்ன தெரியும்? - என்று. ஆகவே, நான் ஏதும் கூறப் போவதில்லை - இதோ ஒரு நெசவாளி! நீயே, கேள்:

நான் ஓர் ஏழை நெசவாளி, எனக்கு வயது 17. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும், என் தம்பி, தங்கை ஆகியவரையும் விட்டுவிட்டு, இறந்துவிட்டார். நான் தறிநெய்து, நான், தாயார், தம்பி, தங்கை ஆகிய நால்வரும் சாப்பிட வேண்டும். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் படிப்பு, சம்பளம், துணி, மருந்து, வைத்தியம். . ..

இதோ எனது வருமானம்.

மாதம் ஒன்றுக்கு நான் நெய்வதால் கிடைக்கும் கூலி ரூபாய் 40. எனது தாயார் கூலிக்கு நூல் சுற்றினால் மாதம் 7 ரூபாய் கிடைக்கும், ஆக ரூபாய் 47 தான் மாத வருமானம். இதற்குக் குறையுமே தவிர அதிகமாவது கிடையாது.

தறியுடன் கூடிய வீட்டு வாடகை ரூபாய் 7

அரிசி, பருப்பு, சாப்பாட்டு வகை 30-8-0

பள்ளிக்கூடச் சம்பளம் அல்லது புத்தக வகை, 2-8-0

ஆகச் செலவு 40-0-0

இனி வைத்தியம், போக்குவரத்து, ஆடைகள், சினிமா இவைகளுக்கு நான் எங்கே போவது? தவிர, எனக்குத் திருமணம் ஆக வேண்டும். என் தங்கைக்கும் செய்ய வேண்டும். பெண்ணுக்கு நகை சீர் வரிசை இவைகள் உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் பணம் தேவை. மேலும் எனது வயோதிகத் தாயாருக்குப் பிற்கால அந்திமக்கிரியைகள் - இவையெல்லாம் நான் சுமக்கும் பாரமாகும். எங்கே இதற்கெல்லாம் வருவாய்? நான் எந்த ரகம்போட்டுக் கொண்டு கைத்தறியிலே நெய்தாலும், மாதம் சுமார் 40, 50, 60 ரூபாய்க்கு மேல் வருவாய் காண முடியாது, இது என் குடும்பத்துக்குப் போதுமா? பெருகிவரும் குடும்பத் திற்கும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கும் நான் எங்கே போவது?

***

தம்பி! என்ன பதில் அளிக்கப் போகிறாய்? நான், என்ன அண்ணா! பதில் அளிக்க முடியும்? அவர்களை ஆண்டிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி அல்லவா பதில் கூற வேண்டும் - என்றுதான் கூறுவாய், நெசவாளி காங்கிரஸ் கட்சியினரைக் கேட்கிறான் என்றால்.

கலகக்காரன்
கழகக்காரன் என்று ஏசி, அவன் வாயை அடைத்துவிட முடியும் - முடிகிறது.

கூட்டுறவு நாடு
காங்கிரசைத் தேடு
என்று புத்திமதி கூறிட, பெரியவர்கள் முன்வருகிறார்கள்.

காலத்துக்கேற்ற ரகம் வேண்டும்.
நாணயமாகத் தொழில் நடத்த வேண்டும்.
என்று எச்சரிக்கை கூறிடவும் கதராடையினர் உள்ளனர்.

இதையே நம்பிக்கிடக்காதே.
விசைத் தறி வைத்துக் கொள்.
வேறு வேலைக்குப் போ!
என்று பயங்கரமான, அல்லது பயனற்ற யோசனைகளைக் கூறவும், காங்கிரசில் ஆட்கள் உள்ளனர்.

தொழில் துறை அமைச்சர் வெங்கட்டராமன், நொந்து கிடப்பதாகப் பேசும் நெசவாளி கேட்டிடும் கேள்விக்குப் பதில், எவ்வளவு பளிச்சுப் பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கரையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர், இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக, அவரே கூறட்டும், கேள் தம்பி!

"...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.''

அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார் - அவ்வளவு நன்மை செய்தாகிவிட்டதாம் நெசவாளிக்கு!

அமைச்சரின் பேச்சு, ஏற்றுக் கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும் உள்ளம் உலுக்கும் காட்சியை, மரக்கிளை, ஆழ்கிணறு, இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதை விட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான், அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே, இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ, எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே, இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி! - என்கிறார்.

"நாட்டிலே 2 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங் கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்து போய், அகவிலை உயர்வுடன் அன்றாடம், மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்.''

தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டுதான், அமெரிக்கா போயிருக்கிறார்.

யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறி யாளர்களைக் காட்டி; நிலைமை அது அல்ல; அமைச்சர் சொன்னதுபோல, அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும்தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று ஓட்டு கேட்க வரும் காங்கிரசார், கூறுவர்.

நெசவாளி கஷ்டப்படுகிறான், என்பதை மேலும் விளக்கமாகவே கூறுகிறார், பாதுகாவலர்.

"தொழில் துறையில் அவர்களது ஆதார தேவையாகவுள்ள மூலப்பொருளான நூலுக்கு, இன்று உயர்ந்துள்ள விலையானது, இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் மங்கம்மா மார்க் கட்டிலே விற்ற நூல் விலையைக் கேலி செய்வதாக இருக்கிறது. கேள்விமுறையற்று உயர்ந்துவிட்ட நூல் விலை காரணமாகக், கைத்தறி நெசவாளர்கள், இன்று சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்.''

மங்கம்மா மார்க்கட்டு விலையைவிட, அதிகமாமே இப்போது - ஏழை பங்காளர் ஆட்சியிலே? - கவனித்தாயா தம்பி! இது நாட்டு மக்களுக்குத் தெரியாது - தெரிந்தாலும் உருட்டி மிரட்டி வாயை அடக்கிவிடலாம் என்ற துணிச்சலில், கதராடை களுக்கு, எவ்வளவு வீறாப்பு, கனைப்பு, முறைப்பு - பார்க்கிறாயல்லவா!

"நூற்பாலை முதலாளிகளே, தாங்களாக முன் வந்து நூலுக்கு விலைக்குறைவு செய்து விட்டதாக அறிவித்து, அரசாங்கத்தையும் கைத்தறியாளர்களையும் ஒரு வகையாக ஏமாற்றியதைத் தவிர, உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லை. அப்படித்தான் நூல் விலையைக் குறைத்துவிட்ட தாகச் சொன்னார்களே, அந்த விலைக்காவது மார்க்கெட்டில் நூல் கிடைக்கிறதா? இல்லையே! அதிலும் இப்போது கள்ள மார்க்கட்தானே!''

காங்கிரசாட்சி - கள்ளமார்க்கட் - இந்த இரண்டையும் எவ்வளவு ஜோடிப் பொருத்தத்தோடு, சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், துளியாவது வெட்கம் காணோமே, ஆளவந்தார்களுக்கு!!

கைத்தறியாளருக்கு நூல் கிடைப்பதில்லை - கள்ள மார்க்கட்டை நாடுகிறான் - விலை ஏறுகிறது - மங்கம்மா மார்க்கட் விலையைவிட!

ஆனால், அமைச்சர்கள், "நெசவாளி காலனி' திறப்புவிழா செய்யச் செல்கிறார்கள் - அதைத் திறப்பதற்காகத் திறக்கும் வாய், வலி எடுத்துப் போகும் அளவுக்கு, நமது கழகத்தைத் தூற்றிப் பேசப் பயன்படுத்திவிட்டு, இறுதியாக, எந்த நாட்டு அரசியல் தலைவனும் எடுத்தியம்பத் தெரியாமல் தத்தளிக்கும் அதி அற்புதமான அரசியல் தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொண்டு வீணாக எதை எதையோ, பேசுவானேன் - "இப்போது வேண்டியது சோறு!' - என்று தெளிவுரை தருகிறார்கள்.

இனி இந்த சோற்றுக்குக்கூட, காமராஜர் அதிகமாக வாய்திறக்க முடியாது போலிருக்கிறது - நேரு பண்டிதர், அரிசிச் சோறு சாப்பிட்டால், சோம்பேறிகள் - ஆகிவிடுகிறார்கள் - மூளைகூடச் சரியாக இருக்காது! - என்று பேசுகிறார்.

இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்து கொண்டுதான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும்.

கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்ய வில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார்.

அமைச்சர்களோ, "ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இல்லை என்று பேசுகிறார்கள்.

"கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்'' என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே, ஏன்?

சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா - அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!''

தம்பி! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது.

நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி'' தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை.

***

ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர் படும் துயரத்தையும், நெசவாளர் படும் அல்லலை "கைத்தறி' மவரும், நன்கு எடுத்துக் காட்டுகின்றன. உழவர் - நெசவாளர் - இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது இனிக் குடிஅரசு முறைமீதே மக்களுக்கு கசப்பு ஏற்படுவதில் வியப்பு என்ன?

அது சரி அண்ணா! முன்பே வாக்களித்தாய்; மன்னனைக் காணலாம் என்று; நானும் ஆவலாக வந்தேன்; நெசவாளியையும், உழவனையும் காட்டுகிறாயே!! - என்றுதானே தம்பி கேட்கிறாய்.

இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!!

முடிதரித்த மன்னனையே காண வேண்டுமா, சரி காணலாம் வா.

அண்ணன்,

6-11-1960