அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எல்லோரும் இந்நாட்டு மன்னர் (3)

தம்பி!

மன்னர்கள் பலர் உளர்; சிலரைக் காணலாம்!! காணு முன்பு இதனை எண்ணிப்பார்; முடி அரசு முறை தீது, ஆகாது, தேவையற்றது என்று கூறுவது, மிகச் சுவையுள்ள, மிக எளிதிலே எவரும் ஒப்புக் கொள்ளத்தக்க அரசியல் தத்துவம் என்பது நிலைத்து நின்றான பிறகும், மன்னர்களைக் காண்பது என்றால், ஓர் ஆவல், பரபரப்பு உணர்ச்சி, உன்போன்றார் உள்ளங்களில் கூட ஏற்பட்டுவிடுகிறதே, அது ஏன்? புரிகிறதா? மன்னர்கள் மமதையாளர்களாகிவிடக்கூடும், மக்களை மந்தை என்றெண்ணி நடத்திடக்கூடும் - அதுபோல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல உள! மக்கள் தமது குடிசைகளில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்களை விற்றாகிலும், மன்னன் மனையாட்டியின் கருத்துக்கேற்ற மரகதமணிமாலை - வாங்கப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறிய முடி அரசுகள் இருந்திருக்கின்றன. எனக்கு மட்டும் அவன் கிடைத்துவிட்டால், இரு கரங்கள் போதும், வாள் வேண்டாம், வேல் வேண்டாம், கழுத்தை நெறித்தே காதகனைக் கொன்று போடுவேன்; கற்பழிக்கப்பட்ட கன்னியரின் கண்ணீரை எண்ணிக் கொண்டால் போதும், இந்த என் கரங்கள், இரும்பினும் வலிவுடையனவாகும் - என்று புரட்சிப்பொறி பறந்திடப் பேசிய வீரர்களை, முச்சந்தியிலே தூக்குமரம் நாட்டி, அதிலே பிணமாக்கித் தொங்கவிட்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள். எனினும், இன்றும், இவ்வளவு சுவையுடன் "ஜனநாயகம்' பேசும் இந்த நாட்களிலேயும், எங்கிருந்தாகிலும், யாரேனும் மன்னன் வருகிறார் என்றால், பார்க்கவேண்டும் என்று மக்களுக்கு ஆவல் பொங்குகிறது.

தலைவர்கள், நடிகர்கள், வெற்றி வீரர்கள், ஆகியோரைக் காணவும் மக்களுக்கு ஆவல் எழத்தான் செய்கிறது; ஆனால், அந்த ஆவல் அவர்கள் தத்தமது துறைகளில், பாராட்டத்தக்க திறம் காட்டி, மக்களின் மனதை ஈர்த்த பிறகே, ஏற்படுகிறது.

ஆனால், மன்னர்களைக் காண வேண்டும் என்ற ஆவலோ, அவன் மன்னன் என்பதற்காகவே ஏற்பட்டுவிடுகிறது - தரம், திறம், வெற்றி, எதுவும் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை.

இந்த நிலை, பழமையை விட்டுவிடத் துணிவு இல்லாத இந்நாட்டிலே மட்டும் என்பதற்கில்லை; புரட்சி பூத்திட்ட சோவியத் நாட்டிலேயே, இப்போது, மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகப் "பவனி' வருகிறார்கள்; மக்கள் கண்டு மகிழ்கிறார்கள்.

என்ன எண்ணிக் கொண்டு, ஜார் மன்னனை ஒழித்துக் கட்டிய புரட்சிப் பரம்பரையினர், இந்த மன்னர்களைப் பார்க்கி றார்களோ? அப்படி அங்கு செல்லும் மன்னர்களும், சோவியத் மக்களைக் கண்டு புன்னகை புரிகிறார்களே, அதற்குத்தான் என்ன பொருளோ? யாரறிவர்!!

"மைசூர் மகாராஜா'' அமெரிக்கா சென்று, காட்டு மிருகங்களைப்பற்றியும், கடவுள் கொள்கைபற்றியும், பல்கலைக் கழகங்களில் பேருரையாற்றிவிட்டு, வருகிறார்.

"மகாராஜா'வை அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால் தங்கள் நாட்டுக்கு ஒரு "ராஜா' வேண்டுமென்று அவர்கள் விரும்பவுமில்லை; முன்பு இங்கிலாந்து நாட்டு அரசன் ஆணைக்கு உட்பட்டு இருந்த நிலைமையைப் புரட்சி நடாத்திப் போரிட்டு ஒழித்துக் கட்டியவர்கள் அமெரிக்கர்கள்.

அமெரிக்காவில், வரவேற்பு வைபவங்களைப் பெற்று, மகாராஜா! என்று மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு, மகிழ்ந்திடும் மன்னர், இங்கு திரும்பி வந்ததும், "ராஜ்யம்' பறிபோன நிலைதான் அவரை வரவேற்கிறது!

நேபாள நாட்டு மன்னர், காஷ்மீர் நாட்டு மன்னர், இவர்கள் தத்தமது நாடுகளிலே, இன்று, இந்தியப் பேரரசின் துணை தரும் வலிவின் காரணத்தால்தான், அரசாள முடிகிறது - ஆனால் அவர்கள் "பவனி' வரும் சோவியத் போன்ற புத்தம் புதுமுறை கண்ட நாடுகளிலே, அவர்கள், புரட்சித் தலைவர்களுடன் குலவ முடிகிறது. குடிஅரசுத் தலைவருடன் கொலுவிருக்க முடிகிறது, மக்களாட்சி மட்டுமே மாண்பளிக்கும் என்ற கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த, நாட்டுத் தலைவர்கள், இந்த மன்னர்களுடன் உரையாடி, உலக சமாதானம் குறித்தும், நேசத் தொடர்புகொள்வதுபற்றியும், பேசி அறிக்கை வெளியிடு கிறார்கள். விந்தையாக இருக்கிறதல்லவா?

ஆப்கன் நாட்டு மன்னரும், மன்னர் பரூக்கை விரட்டி, அரசுத் தலைவராகிவிட்ட நாசரும், எழில்மிகு எகிப்தில் விருந்துண்டு மகிழ்கிறார்கள், உலகு சீர்பெற வழி காண்போம் என்று செப்புகிறார்கள்.

மைசூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுக்கோட்டை, போபால், ஜெய்ப்பூர், ஜோத்பூர், பவநகர், நவநகர், பாடியாலா, - இப்படியுள்ள ஐநூறுக்கு மேற்பட்ட இராஜ்ஜியங்களை அரசாண்டு வந்தவர்களை, இந்தியப் பேரரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது - எனினும் இப்போது, "பிரிட்டிஷ் மகாராணி இங்கு வருகிறார்கள்' என்பதற்காக, என்னென்ன வகையான விருந்து வைபவங்கள் ஏற்பாடு செய்வது என்பது பற்றித் துரைத்தனமே சுறுசுறுப்பாகி விட்டிருக்கிறது.

மாலை போடலாம் - ஒன்றே ஒன்று!

விருந்து வைக்கலாம் - ஆங்கில முறை உணவு!

உடனிருந்து உபசாரங்களைக் கவனித்துக் கொள்ள, இலட்சுமி மேனன் எனும் துணை அமைச்சரே, கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

மகாராணி, புலிவேட்டை காண்பாராம்! மகாராணியின் மணாளன், புலியைச் சுடுவாராம்!

இருவரும் சென்று, காதற்சின்னமாம் கவின்மிகு "தாஜ்மகாலை'க் காண்பாராம் - நிலவொளியில்!!

தம்பி! பிரிட்டிஷ் மகாராணியின் வரவேற்பு வைபவத்துக்காக, அமைச்சர்கள் வண்டுபோலச் சுறுசுறுப்பாகப் பணியாற்று கிறார்கள் - அதிகாரிகள் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டுள்ளனர்.

இது "குடிஅரசு' கொடிகட்டி வெற்றி முழக்கமிடும் காலம்! - இப்போது, உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்து, பல நாடுகளை அடிமைகொண்ட, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியாருக்குக், குடிஅரசு முறையை மேற்கொண்டுவிட்ட இந்தியாவில், இத்துணை சிறப்புடனும், பகட்டுடனும் வரவேற்புகள்!! பொருள் உண்டா, இதற்கு? குடிஅரசு முறையிலே, மக்களுக்கு ஐயப்பாடே ஏற்பட்டுவிடுமோ என்று கூடச் சிலர் அச்சப்படுவர் - முடிதரித்தோர் முன், குடியாட்சித் தலைவர்கள், முகமன்கூறி நின்றிடும் "அடக்க உணர்ச்சி'யைக் காணும்போது.

அஃதேபோல, முடிதரித்தோர், குடியாட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கி, கனிவு காட்டி, அவர்தம் அறிவாற்றலைப் பாராட்டிப் பேசும்போது, குடியாட்சித் தலைவர்களில், மிக மிக உறுதி படைத்தவர்களுக்கேகூட, ஒரு கணம், உச்சி குளிரத்தான் செய்யும்.

குடியாட்சி முறையை மேற்கொள்ளுங்கள், என்று முடி தரித்தோருக்கு இவர்கள் யோசனை கூறுவதில்லை. முடி அரசுதான் சாலச் சிறந்தது என்று குடியாட்சித் தலைவர்களுக்கு, மன்னர்களும் அறிவுரை கூறுவதில்லை; இருவரும் ஒருவருக் கொருவர் "அன்புரை' கூறிக்கொள்கின்றனர்; அவனியோர்க்கு வாழும் வழி கூறுகின்றனர்.

முடிதரித்தோருக்கு உள்ள பகட்டு கண்டு, குடியாட்சித் தலைவர்கட்கு, நெஞ்சில் சபலம் தட்டுகிறதோ என்னவோ, யார் கண்டார்கள்? அதுபோலவே, குடியாட்சித் தலைவரானால், மக்களின் பேரன்பு கிடைக்கிறது என்பது கண்டு, முடிதரித்தோர் மனம், குடியாட்சி முறையை நாடுமோ, என்னவோ!

ஆனால், மக்கள் இன்றும், மன்னர்களைக் காண்பதிலே, மட்டற்ற ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஈரான் நாட்டு மன்னருக்கு, சின்னாட்களுக்கு முன்பு ஒரு ஆண் மகவு பிறந்தது! ஆண் குழந்தை ஈன்றெடுக்காத ஒரே காரணத்துக்காகவே, ஈரான் மன்னர், தன் இதயத்தில் இடம் பெற்ற பேரழகி சுரையா மகாராணியை விலக்கி வைத்து விட்டார்; வேறோர் மங்கையை மண முடித்துவிட்டார்; அவள் பெற்றெடுத்தாள் ஆண் மகவு! ஈரான் நாடு விழாக்கோலம் பூண்டது! மன்னனுக்கு மகன் பிறந்தான் - நாட்டுக்கு இளவரசன் பிறந்தான் - என்று குதூகலம், நாடு முழுவதும்.

ஈரான் நாட்டு மன்னர், "இளவரசனை'க் கண்டுவிட்டுத் திரும்புகையில், அவருடைய மோட்டாரைச் சூழ்ந்து கொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி படமெடுக்கப்பட்டு, குடியாட்சி பரவப் பாடுபடும் நாளிதழ் களில், முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இன்றளவும், பிடிதளரவில்லை; முறை அதிகமாக மாறி விடவில்லை; எல்லா அதிகாரமும் தமது கரத்திலேயே வைத்துக் கொண்டு இருக்கிறார் அபிசீனியா நாட்டு மாமன்னர், ஹெயிலி செலாசி! சென்ற கிழமை, அவர் அரசாளத் தொடங்கி, முப்பதாண்டுகள் ஆயின என்பதைக் காட்டிட ஒரு விழா நடைபெற்றது - கோலாகலமாக!

பிரான்சு நாட்டிலே, மன்னனை விரட்டிய நாளை, இன்றும் விழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள்.

ரμய நாட்டிலே, இந்த நவம்பரில், ஜார் மன்னன் ஆட்சி ஒழிக்கப்பட்ட புரட்சி, விழா நாளாக்கப்பட்டுக் கொண்டாட்டம் நடக்கிறது.

அபிசீனியா நாட்டிலே, மாமன்னர் முடி தரித்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன என்பதால், மகிழ்ச்சியுற்று விழாக் கொண்டாடுகிறார்கள்.

பேரறிவாளன் என்று போற்றப்படும் சாலமன் எனும் மன்னனுக்கும், பேரழகி ஷீபா எனும் அரசிக்கும் பிறந்த மைந்தனுடைய வழி வழி வந்தவர், அபிசீனியா மாமன்னர், என்கிறார்கள்.

இவரும், இன்றுள்ள குடியாட்சித் தலைவர்களுக்கு, நல்லாட்சி நடத்த வேண்டும் என்பது குறித்தும், உலகப் போர் மூண்டிடாமல், அறநெறியுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும், அறிவுரைகள் கூறுகிறார்.

இவ்விதமானதோர் விந்தையான நிலைமை இன்று இருந்து வருகிறது.

குடியாட்சி முறையை முடியாட்சி முறையுடன் இணைத்துக் கொண்டுள்ள நாடு பிரிட்டன்.

முடியுடையோன் தலையை வெட்டினர் பிரிட்டனில், முன்போர் முறை.

மற்றோர் மன்னனை நாடு கடத்தினர்! மிகப் பழம் காலத்திலேயே, மன்னனை மாளிகைக்குள்ளே, மடக்கி அடக்கி, அவனிடம் "உரிமைச் சாசனம்' எழுதி வாங்கினர் - இதே பிரிட்டனில்.

இதே பிரிட்டனில், மகாராணிக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், கொட்டும் பனியைப் பொருட்படுத்தாமல், அரண்மனைக்கு எதிரே, பெருந்திரளாக மக்கள் கூடி நின்றனர் - சேதி கேட்டு மகிழ்ந்திட!

அப்படிப்பட்ட விந்தை முறைகள் நிறைந்த பிரிட்டனை ஆண்ட ஓர் மன்னனைத்தான், நாடகப் பேராசிரியர், நானிலம் போற்றிய பகுத்தறிவாளர், பேரறிஞர் பெர்னாட்ஷா "ஆப்பின் கார்ட்' எனும் நாடக நூலொன்றிலே, படைத்துக் காட்டுகிறார். ஆமாம் தம்பி! உண்மையாக இருந்த மன்னன் அல்ல; சமதர்ம குடிஅரசு, பகுத்தறிவு எனும், பல தூய கருத்துக்களைக் கருவூலமாக்கித் தந்த பேரறிஞர், "பெர்னாட்ஷா'வின் கற்பனையில் தோன்றிய மன்னன்! காண்போம் வா!

***

மன்னன் அரண்மனை பெரியது! கவர்ச்சிகரமானது! மன்னனுடைய நிலைமைக்கு ஏற்றதாகத்தானே அவன் இருப்பிடம் இருத்தல் வேண்டும். நமது நாட்டிலே தம்பி! கோயில் என்றே பெயர் தந்தனர், மன்னன் மனைக்கு!

நுழைவு வாயிலைக் கடந்துவிட்டோம் - முன்புறக் கூடம்! இங்கு உள்ள உதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டுதான் உள்ளே போக முடியும். அவர்கள் இருவரும், மன்னனுக்கு வந்த கடிதங்களைப் படித்துக் கொண்டும், இடையிடையே பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். என்ன செய்வது, தம்பி! கனைத்தாலும், கண் சிமிட்டினாலும், இவர்கள், தங்கள் வேலை முடிந்தா லொழிய, அல்லது என்ன காரணத்தினாலோ நம்மிடம் அக்கரை ஏற்பட்டாலொழிய, உள்ளே செல்ல அனுமதி அளிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரமாகும் என்று கேட்கிறாய் - பார்வையால்! என் பெருமூச்சு கூறுவது புரியவில்லையா - எவ்வளவு நேரமாகுமோ எனக்கே தெரியாது.

இதுதான் அண்ணா! முடிஅரசு முறையிலே உள்ள கொடுமை - என்று கூறுவாய்.

குடியாட்சி முறையிலே மட்டும் என்னவாம்! கண்டவர்கள், கண்ட கண்ட நேரத்திலெல்லாம், அமைச்சர் பெருமானைக் காணச் சென்றுவிட முடியுமா? "நந்திபூஜை' அங்கு இல்லையா?

இராஜகோபாலாச்சாரியார் அமைச்சராக வந்த உடன், குடியாட்சி முறையின் அருமை பெருமையை உயர்த்தும் நோக்குடன், தன்னை எவரும் எந்த நேரத்திலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார். ஒரே கொண்டாட்டம் மக்களுக்கு! காங்கிரஸ் வட்டாரத்திலே பெரு மகிழ்ச்சி! ஆனால், என்ன நடந்தது; தெரியுமோ? தம்பி! அணி அணியாகக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும், வந்து பார்த்தபடி இருந்தனர் - வேறு வேலை பார்க்கவே நேரம் கிடைக்கவில்லை. கூப்பிய கரத்தை, மடக்கமுடியவில்லை! சிரித்த முகம் - மாறக்கூட நேரம் கிடைக்கவில்லை. கடைசியில் இது ஆகாது என்று உணர்ந்து, ஆச்சாரியார், முதலில் செய்திருந்த ஏற்பாட்டைக் கைவிட்டுவிட்டார்.

குடியாட்சியிலேயே இது என்றால், முடியாட்சியிலே, கட்டுக் காவல், தடை, இவை அதிகமாகத்தானே இருந்திடும்!

அதிகாரிகள் நமது பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை - தம்பி! அடுத்து, காண்போம், மன்னனை.

அண்ணன்,

13-11-1960