அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"எங்கள் நாடு"
2

தாயகத்தைத் தருக்கர்கள் அடிமைப்படுகுழியில் தள்ளிய போது, செல்வத்தைச் சுரண்டியபோது, தொழில்களை நசுக்கிய போது, அறிவை அழித்தபோது, தன்மானத்தை ஒழித்த போது, அடக்குமுறையை அவிழ்த்து விட்டபோது, உன்னை ஈன்றெடுத்து இயல்புகளை அளித்து, இயற்கைச் செல்வத்தால் உன்னைஊட்டி வளர்த்த தாயகம் தலைவிரி கோலமாக்கப்பட்டு, மானமழியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, வடவரால் வதைக்கப் பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தாய்? ஏதுமறியாத ஏமாளியாக இருந்தாயா? என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக்கிடந்தாயா? அங்ஙனமாயின். நீ ஓர் அப்பாவி! வீரக்குலத்திலே தப்பிப் பிறந்த பதர்! விளக்கமறியாத வீணன்! தூத்தூ! திருவும் அறிவும், வீரமும் மாண்பும் பொங்கும் நாட்டிலேயா இத்தகைய ஏமாளி பிறந்திட வேண்டும்! உன் தாயகம், தன்னரசு இழந்ததை, தன் மொழி இழந்ததை, விழியைக் குளமாக்கிக் கொண்டதைக் கண்டறியும் அளவுக்குமா உனக்குக் கருத்துத் தெளிவு ஏற்படாமற் போய்விட்டது! ஏடா! மூடா!! உன்னைச் சுற்றிலும் அழகிய மலையும், எழிலோங்கும் ஆறுகளும், பச்சைப் பசேலென்ற வயலும், பாங்கான பல தருக்களும் இச்சையூட்த்தக்க எத்தனையோ வளமும் இருந்தும் வறுமை நம்மைவாட்டிடக் காரணமென்ன? உழைப்பு ஏன் வீணாக்கப் படுகிறது? உண்டு கொழுத்திடுபவன், உழைத்திடக் காணோமே, அது ஏன்? கொட்டிக் கொடுக்கும் வரிப்பணம் வேறு எங்கோ கொண்டு செல்லப்படுகிறதே, சரியா? பட்டியில் மாடுகள் போல, ஆளவந்தார்கள் உள்ளனரே, முறையா? என்றெல்லாம், எண்ணிப் பார்த்திடத் தெரியவில்லையா உனக்கு பேதையே! அறிவுக் களஞ்சியத்தின் அழகினைக் கெடுத்திடும் அவமானச் சின்னமே! வெட்கப்படு! வெட்கம் வேலாகிக் குத்தட்டும் உன்னை! தலைகுனிந்து நட-தையலரும் தன்னரசுக்கான போர்புரிய முன்வந்தபோது, "அசை' போட்டுக் கொண்டு கிடந்தோமே என்றெண்ணி, முக்காடிட்டுக் கொண்டு நட! விடுதலைப் போரிலே வீழ்ந்துபட்ட வீரர், நடந்துசென்ற பாதையில் காணக்கிடக்கும் குருதிக் கரையிலே, கண்ணீர் சொரிந்து வேண்டிக்கொள்!

ஓர் நாள், இப்படி "ஏமாளிகள்' கேட்கப்படுவர், திராவிட விடுதலை கண்ட பிறகு, விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திய மாவீரர்களால்!

திரு இடத்தின் இன்றைய தாழ்நிலையை அறியுமளவுக்குத் தெளிவு அற்றுக் கிடக்கும் ஏமாளிகள் கண்டிக்கப்படுவீர், ஆனால் அனுதாபத்தோடு! பரிதாபம்! அவன் கருத்துக் குருடன், ஆகவேதான் தந்தையர் நாட்டினை மீட்டிடும் தன்மானப் போரில் ஈடுபடாதிருந்தான், என்று எண்ணுவர். ஆனால் அறிவில் தெளிவு இருந்தும், உண்மைக்காகப்பரிந்து பேசவும், உரிமைக்காகப் போரிடவும் முன் வராததுடன், எத்தகைய ஏசல், எதிர்ப்பு, இடர், இன்னல், பழி பாதகம், எதுவரினும் அஞ்சாது, அறப்போரில் ஈடுபட்டு, அன்னையின் கரத்தினில் விலங்குகளா! என்று ஆர்த்தெழுவோரை, எதிர்த்திடும் அற்பர்கள், காட்டிக் கொடுக்கும் கயவர்கள், எதிரிகளுடன் கூடிக்கொண்டு கொலுப் பொம்மைகளாகும் துரோகிகள் இருக்கிறார்களே, இவர்களை, விடுதலைபெற்ற திராவிடம், சும்மாவிடாது!

பெற்ற தாயை மானமழித்திடத் துணிந்தவனுக்குத் தாள்பிடித்துக் கிடந்தவனே, பிறந்த கொன்னாட்டை மாற்றான் சீரழிக்கும்போது கண்டு, கரம் அசைக்காமல் அவனுக்குக் கட்டியம்கூறிக் கிடந்த கடையனே! உனக்கென்று ஒரு மொழியும், மொழிவழி ஓர் சீரிய வாழ்வும் அளித்து, உனக்காகத் தென்றலையும் தேனையும், தினையையும் நெல்லையும், தீஞ்சுவைக் கனிகளையும் சுவைமிகு சுனைகளையும் கானாறு களையும் களிறுகளையும், ஓங்கி வளர்ந்த வரையினையும் சந்தனத் தருக்களையும், கடல் முத்தையும், கட்டித் தங்கத்தையும், மலர்க்கொல்லைகளையும், மான் கூட்டங்களையும், வேட்டைக்கு வேங்கையையும் வீட்டுக்கு ஆவினங்களையும், எங்கும் பச்சையையும், உன் இச்சையைப் பூர்த்தி செய்ய எல்லா வளங்களையும் தந்த தாயகத்தை, மாற்றான் வெள்ளாட்டியாக்கி, கூந்தலைக் கலைத்து, குங்குமத்தைக்குலைத்து, ஆடையைக் குறைத்துக் காலால் உதைத்து, ஏடி! வெள்ளாட்டி! தொட்டி ழுக்கும் வேளையிலே, வெட்டுவேன் என்று பதட்டம் பேசுகிறாய், என் சுட்டு விரல் அசைத்தால், உன்னைச் சுக்கு நூறாக்க என் சூறாவளிப் படை கிளம்பும், உனக்கேன் ஒரு தனிக்கொற்றம், வீழ்ந்துகிட என் கொட்டகையில், பிழைத்துப் போ, நான் தரும் பிச்சையை உண்டு, பேய்க்கோலம் காட்டுவாயேல், வாட்டிடுவேன் சூட்டுக்கோலால்! - என்று கொக்கரித்தபோது, மாமிசப் பிண்டமே! உன் இரத்தம் கொதிக்கவில்லையா? இதயம் துடிக்க வில்லையா? உடல் பதறவில்லையா? கண்களை இறுக மூடிக் கொண்டாயா! எப்படி உன் மனம் இடம் தந்தது, தாயகத்தைக் காலின் கீழ் போட்டு மிதித்தவனுக்குக் கைகட்டி வாய்பொத்தி நிற்க! சிறு குத்தீட்டி கிடைக்கவில்லையா உனக்கு? ஒரு முழக் கயிறுக்கும் பஞ்சமா? ஆழ்கிணறோ, மலை உச்சியோ, கிடைக்காமலா போய்விட்டது? உயிரையும் வைத்துக்கொண்டு உன் அன்னைக்குப்பங்கம் விளைவித்தவனை எதிர்க்கும் வீரப்போரில் ஈடுபடாமலிருக்க உன்னால் எப்படி முடிந்தது? கோழையானால் கூடப் பரவாயில்லை, மன்னித்து விடலாம்! கொடியவனே! நீ, மாற்றான் கோட்டைக்குக் காவலாக அல்லவா நின்றிருந்தாய்? உன் உடன் பிறந்தானின் உடலைக் கழுகும் காக்கையும் கொத்தித் தின்ற வேளையில், கூடப் பிறந்த கேடே! நீ, மாற்றான் தந்த மதுவையும் மாமிசத்தையும் உண்டு கிடந்தாயே! இயற்கையாகச் சுரக்க வேண்டிய நாட்டுப் பற்று? எழாத உள்ளத்தைக் கொண்டு, ஒரு உடலம் நிற்பதா-எம் கண்முன் நடமாடுவதா? - எமது தாயகம் இத்தகைய இழி மகனை, இனத்துரோகியைச் சுமந்து கொள்வதா, விடுதலைப் போரிலே வீரர் கொட்டிய குருதியால் புனிதமாக்கப்பட்டுள்ள இந்த மண்ணில், மாபாவி! உன் நிழல் படுவதும், கேவலம், ஓடிப்போ! மனித உருவம் தாங்கி நிற்கும் மிருகமே, எமது கோபம், வேலாக, வாளாக, தூக்குக் கயிறாக, துப்பாக்கிக் குண்டாக மாறுமுன், ஓடிப்போ! கிழங்கு தோண்டித் தின்று பிழைத்துக்கொள்! கிழப்புலி கொன்று தின்ற மானின், மிச்சம் மீதி கிடைத்திடின்,தின்று பசி போக்கிகொள்! வீரக்கோட்டத்தைக் களங்கப்படுத்தாதே! அகமும் புறமும்கண்டு அகமகிழ்ந்த தமிழர் திருநாட்டில், வாயும் வயிறும் பெரிது என்றெண்ணிக்கிடந்த வஞ்சகனே, உனக்கு இடம் இல்லை! ஓடிவிடு, ஓடிவிடு, காதலனைக் களத்திலே இழந்தகாரிகையரின் கண்ணீர் உன்னைச் சுட்டெரித்து விடும், பல்லிழந்த பாட்டியின் சொல்லம்பு கூட உன்னைச் சல்லடைக் கண்ணாக்கிவிடும். சிறார்காணின், அவர் தம் விழி சிவந்திடும். உன்னைப்பற்றி மேலும் பேசிடின், எம் வாயும் நாறிடும். நாசகாலனே, நாட்டைக் காட்டிக் கொடுத்தவனே, ஓடு, ஓடு, உனக்கு ஏற்ற ஓர் உதவாக்கரை இடம் தேடி, ஓடு,'' - என்றெல்லாம் கண்டிப்பர், கடமையை நிறைவேற்றி வெற்றி கண்டோர் - எதிர்கால இன்பத் திராவிடத்தில்.

மெல்லிய கோடுகள் தெரிகின்றன, கம்யூனிஸ்டுகளுக்கு - ஆகவேதான், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தென்னாட்டுக்குத் தொழில் சேலத்து இரும்பு, நெய்வேலி நிலக்கரி, - என்று பேசிப் பார்க்கிறார்கள்.

இப்போதும் இவர்களும், காங்கிரசிலே உள்ளவர்களில் சிலரும், தென்னாட்டுக்குத் தொழில் வளம் செய்து தர வேண்டும், திட்டங்கள் வகுப்பதில் ஓர வஞ்சனை காட்டுவது கூடாது. என்றுதான் டில்லியிடம் கேட்கிறார்கள், விண்ணப் பித்துக் கொள்கிறார்களே தவிர, ஏன் இந்தக் கேவல நிலை, தொட்டண்ணன் தோட்டத்திலே வெட்டண்ணன் மாடு மேய்வானேன், அதைக் கொஞ்சம் பிடித்துக்கட்டு என்று புட்டண்ணன் கெஞ்சிக் கிடப்பானேன், என்று எண்ண மறுக்கிறார்கள்.

வாழ வழி இருக்க, வளம் யாவும் குறைவின்றி இருக்க, வாழும் வழியை அமைத்துக் கொள்ளும் அறிவாற்றல் இங்கிருக்க, வாழ்ந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக, வடவரிடம் நமது பிடரியைக் கொடுத்து விட்டு, பிறகு, "மெள்ள, மெள்ள' வலிக்கிறது, வலிக்கிறது, என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? இங்கு இல்லாத எதையும் நமக்காகப் பெற்றுத் தரும்படி, வடவரை நாம் கேட்டோ மில்லை - இங்கு புகுந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, எமது செல்வம் எமக்குப் பயன்படாமற் செய்யும் கொடுமையைத் தானே எதிர்க்கிறோம். மாதாவுக்கு மத்தாப்பூ வண்ணச் சேலையா கேட்கிறோம். அன்னையின் ஆடையை, அக்ரமக்காரனே, பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்ரமம் என்றல்லவா கேட்கிறோம், உரிமையைக் கேட்கிறோம் உபகாரம் அல்ல. இழந்ததைக் கேட்கிறோம், இரவல்பொருள் அல்ல; எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதைக் கேட்கிறோம் பிச்சை அல்ல; இந்த மூலக் கருத்தை உணரா முன்னம், வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். தம்பி! இந்த மூலக் கருத்தைத்தான் உன் துணைகொண்டு, நமது கழகம் நாட்டிலே பரப்பிக்கொண்டு வருகிறது. பளிச்செனத் தெரியா விட்டாலும், விடிவெள்ளியின் வரவுக்கான வண்ணம், மெல்லிய அளவிலே தெரியத்தான் செய்கிறது.

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வகுப்புவாதியா என்று கேட்டுப்பார் காங்கிரசாரை? பகைப்புயலால், பதவி ஆட்டம் கொடுத்தபோது, அதைக் காத்திட முடியாமற் போய்விட்ட பரிதாபத்துக்குரிய பெரியவர் என்று வேண்டுமானால் கூறுவார்கள் - அவரை வகுப்பு வாதி, பிளவு மனப்பான்மையினர் என்று காங்கிரசாரே கூற மாட்டார்கள். ரொம்ப பொறுமைசாகூட அவர். அதுமட்டுமல்ல, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கருதுபவர். இல்லையானால், தம்பி, நாடாண்ட அந்த நல்லவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக மக்கள் தொண்டு புரிந்து உரம் பெற்றவர், இப்போது, ஒரு பள்ளிக்கூடம், குருகுலம் நடத்தினால் போதும், ஏதோ கண்ணைப் பறித்த கடவுள் இந்தக் கோலாவது கொடுத்தாரே என்ற முறையில், முதலமைச்சர் பதவி போனால் போகட்டும், ஏதோ குருகுல அதிபர் எனும் நிலையாவது கிடைக்கட்டும், என்று திருப்தி அடைவாரா? அவ்வளவு நல்லவராலேயே, வடநாடு நடந்து கொள்ளும் போக்கும், தென்னாடு புறக்கணிக்கப்படும் தன்மையும் கண்டு, சகித்துக் கொள்ள முடியவில்லை.

நம் ராஜ்யத்தில் எவ்வளவு வரிபோட முடியுமோ அந்த அளவுக்குப் போட்டாகிவிட்டது.

மத்திய சர்க்காரிடமிருந்து கிடைப்பது அதிகமாக இல்லை.

மத்திய சர்க்காரிடமிருந்து உதவி வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்பது தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் குறைவு, தலைவிதி என்று நினைத்துக்கொண்டு, நாம் சும்மா இருந்து விடுகிறோம்.

மத்திய சர்க்காரிடம் இதை வற்புறுத்த வேண்டும்.

கட்சிச் சார்பில்லாமல் போரிடவேண்டும் - அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்.

ஆகையினாலே தமிழ் நாட்டு மக்கள் அதிகக் கூச்சல் போடவேண்டும்.

அப்போது தான் ஏதாவது கிடைக்கும். நமது மந்திரிகள் மத்திய சர்க்காரிடம் சண்டை பிடித்து வெற்றி காண வேண்டும். ஆகஸ்ட்டு 23-இல், மேல் சபையில் பேசுகிறார் இதுபோல!

அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்கிறார்! அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் என்றோர் பழமொழி தெரியுமல்லவா தம்பி, அதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறார் சுப்பிரமணியனார்.

"ஐந்து கண்ணன் பிடித்துக் கொள்வான்'' என்று மிரட்டுவது போல, ஐந்தாண்டுத் திட்டம் என்று டில்கூறிவிடுகிறது!

இங்கே குழந்தை அழுகிறது - குடல் வற்றிப் போகிறது, - அல்லது மிரட்டி அடக்கப்படுகிறது, அங்கே? வடக்கே?

வடக்காவது, தெற்காவது, எல்லா இடத்துக்கும் வறுமை பொதுவாகத்தான் இருக்கிறது என்று பொது உடைமை பேசுகிறார்கல்லவா, அவர்களின் முகத்தில் அறைவதுபோல, சர்க்கார் இலாகாவின் புள்ளி விவரமே பேசுகிறது. சராசரி வருமானம் தலைக்கு, வடக்கே 600 - தெற்கே 300.

புள்ளி விவரங்கள்தான் பொது உடைமையருக்குப் பூஜா மாடப் பொருளாம். இதற்கு என்ன சொல்கிறார்கள், 600 வடக்கே - 300 தெற்கே? வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்லும்போது, எல்லாத் திக்குகளுக்கும் தம்மை காவலராக்கிக் கொண்டு விட்டதாக மனப்பால் குடிக்கும், "மார்க்சால் மன்றம் ஏறியோர்' பேசுகிறார்கள், கேலியுடன், வடக்காவது, தெற்காவது என்று.

600-300- இதற்கு என்ன விளக்கமளிக்கிறார்கள், 600 அங்கே. 300 இங்கே! என்றால் என்ன பொருள்?

மூன்று வேளை உணவு அங்கே; பகல் பட்டினி அல்லது இராப் பட்டினி, இங்கே. மானம் காப்பாற்றப்படும் அளவு ஆடை அங்கே, இங்கே அரை ஆடை. வடக்கு வாழ்கிறது, வளருகிறது - தெற்கு தேய்கிறது. தேயும் தெற்கில் இந்த "மேதைகள்' வேறு மேய்கிறார்கள்.

பொதுப்படையான புள்ளி விவரம் போதாது என்று, போக்கை மாற்றிக்கொள்வதற்கு ஒரு மேலிடம் பார்த்துக் கிடக்கும் அந்த மேதைகள், கூறுவரேல், தம்பி, இதோ, விளக்கமான மற்றோர் புள்ளி விவரம், இதுவும் சர்க்கார் தருவதுதான், எடுத்துக்காட்டு,

விவசாயிக்கு சென்னையில் நாளொன்றுக்குக் கிடைக்கும் ஊதியம், சராசரி, ஆடவருக்கு 1-4-0, பெண்களுக்கு 0-12-0.

பெப்சுவில் ஆடவருக்கு 2-8-0; பெண்ணுக்கு 1-8-0. மேற்கு வங்கத்தில் ஆடவருக்கு 1-12-0; பெண்டிருக்கு 1-4-0.

கொத்துவேலை கொல்லன்வேலை போன்ற வகைகளில் ஈடுபட்டவர்களுக்கு, இங்கு, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரையில் கிடைக்கிறது.

பெப்சுவில் நாலு முதல் ஐந்து வரையில் கிடைக்கிறது. வடக்கு ஆதிக்கம் செலுத்துவதால் வந்துற்ற அவதியை விளக்க, இந்தப் புள்ளிவிவரம் போதாதா? போதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவருக்கு, நாட்டுப் பற்றினை இழந்து சோற்றுத் துருத்தியாவது கேவலம் என்ற உணர்ச்சிகொண்ட அன்பர்களுக்கு. எம்மிடம் என்ன இருக்கிறது தெரியுமா, சக்கரம் - சம்மட்டி என்று "விருதுகளை'க் காட்டியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணிக் கிடப்பவர்களுக்கு, புள்ளி விவரம் மட்டும்போதாது, தம்பி, பன்னிப் பன்னிச் சொல்லியாக வேண்டும், பள்ளிச் சிறுமிகள் பாடிக் காட்டினார்களாமே . கவர்னருக்கு அதுபோலப் பாடியும் காட்டவேண்டாம், நாடகம் கூடத்தான், எல்லாம் எதற்கு?

எங்கள் நாடு
எழில் பொங்கும் நாடு
இனி எவர்க்கும் அடிமை அல்ல
எமக்கது சொந்த நாடு!
திராவிட நாடு!
திராவிடர்க்கே!

என்ற எழுச்சிப் பண்பாடி, தாயகத்தின் தளைகளைப் போக்கி, தன்னரசு காணத்தான். தம்பி, இத்தகைய உன்னதமான பணியாற்றும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது பற்றி எண்ணும் போது புத் தார்வம் பிறக்கிறதல்லவா?

அன்புள்ள,

18-9-1955