அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எங்கள் பெரியார்
2

தி. க. நாம், "பத்து'க் கிளர்ச்சிகளிலே ஈடுபடவில்லை என்று எடுத்துக் கூறி, உலகம் தன்னிடம் அதற்காகப் பரிதாபம் காட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறது.

அவர்களை அழைத்தீர்களா?
இல்லை!
அவர்கள் கருத்தறிந்து போர் வகுத்தீர்களா?
இல்லை!
அவர்களிடம் ஒரு துளி அன்பு காட்டினீர்களா?
இல்லை!
அவர்களை இழித்தும் பழித்துமாவது பேசாதிருந்தீர்களா?
நாள் தவறாமல் ஏசி வந்தோம்.
இப்படி 'வாதாடுகிறது' நாம் நமது உழைப்பைக்கொட்டி ஆக்கி வைத்த தி. க.
பத்மாதான் ஜெகதீசுக்கு வாழ்க்கைப்பட்டாள் - எனவே வதைபட்டாள்.

மரண தண்டனை பெற்றவன் மன்னன் ஆட்சியில் ஓர் குடிமகன். எனவே, அவன் அக்ரமத் தீர்ப்புக்கு ஆளாக நேரிட்டது.

மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஏன் அவர்கள் அத்தகைய நிலைமைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?

நாம் விலகி வந்தவர்கள் - அவர்களும் நாம் விலகியான பிறகு, நம்மை விரட்டி விட்டதாகத் தெரிவித்து விட்டார்கள்.

நாம், வாழ்க்கைப்பட்டும் இல்லை; அந்த ஆட்சியில் குடி மக்களாகவும் இல்லை.

நமக்கென்று ஓர் குடும்பம், ஓர் கொற்றம் அமைத்துக் கொண்டாகி விட்டது.

எளிய குடும்பமாக இருக்கலாம், ஏழெட்டு இலட்சம் இல்லாமலிருக்கலாம்.

குறுநிலக் கொற்றமாக இருக்கலாம், குவலயத்தில் கீர்த்தி சாமான்யமானதாக இருக்கலாம்.

அளவும் தரமும் எப்படி இருப்பினும், நாம் அந்தக் குடும்பக் கட்டளைக்கோ, கொற்றத்துத் தீர்ப்புக்கோ அடங்கித் தீரவேண்டும் என்று பேசுவது எப்படி நியாயமாகும்?

பத்மாபோல, அடுத்த வீட்டு அம்புஜமும் எதிர்வீட்டு ஏமலதாவும் ஜெகதீசுக்கு அடங்கிக் கிடக்கவும், ஆட்டி வைக்கிறபடி ஆடவும் வேண்டும் என்று நாடகத்திலும் கூறார்களே!

அதுபோலவே தி. க. வில் உள்ளவர்கள், பத்தோ பதினைந்தோ, தேவையோ அல்லவோ, தலைமை தரும் போர்த் திட்டங்களைத் தாங்கித் தமது பத்தினித்தனத்தையும் குரு பக்தியையும் காட்டித் தீர வேண்டியதுதான் முறை. நம்மை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஏன் அந்த நினைப்பு வர வேண்டும்? அதிலேதான் தம்பி சூட்சமம் இருக்கிறது! அவர்கள் எவ்வளவுதான் நம்மை ஏசினாலும், ஏளனம் செய்தாலும், நமது வளர்ச்சியும் கட்டுப்பாட்டு உணர்ச்சியும், அவர்களையும் அறியாமல் நம்பால் ஈர்க்கிறது - ஈர்த்ததும், ஆஹா! இவர்கள் மட்டும் நாம் சொல்கிறபடி ஆடினால் . . . . என்று எண்ணம் பிறக்கிறது! அவ்வளவுதான்!

அவர்களின் ஆசைக்காகப் பத்து அல்ல, இருபது போர் எனினும், நாம் ஈடுபடக்கூட முயற்சிக்கலாம். ஆனால், எந்த நேரத்தில், எந்த வகையில் போர் அமையும், நோக்கம் எதுவாக இருக்கும், முறை எப்படி இருக்கும், போர் எந்தெந்தக் கட்டம் செல்லும், எப்போது நின்று போகும், ஆகிய எது நமக்கோ, நாட்டுக்கோ புரிகிறது? தெரிகிறது? சொல்லேன் கேட்போம்.

மிகப் பிரமாதமாக தி. க. சேனாதிபதி இன்று பேசுவது பார்ப்பனர்களை நாங்கள் ஒழித்துக்கட்ட, நாட்டை விட்டு விரட்டப் போர்த் திட்டம் வகுத்து விட்டோம், இவர்களோ, "ஈயம்' பேசுகிறார்கள் - ஓட்டப்பட வேண்டியது, ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பனர்கள் - பார்ப்பனீயம் என்று பேசுவது, கோழைத்தனம், பார்ப்பனர்கள் - கள் ! அதுதான் எமக்குப் போர்த் திட்டம் - பார்ப்பனீயம் - ஈயம் அல்ல! என்று பேசுகிறார்.

"ஈயம்' ஒழிக்கப்பட்டால் போதும் என்பது கோழைத்தனம், துரோகம், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம், இனத்துரோகம் என்றெல்லாம் குத்துகிறார்.

நாம், பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதும் என்று கூறுவது பற்றி, பார்ப்பனர்களையே ஒழிக்க "ஜல்லடம்' கட்டிக் கொண்டுள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒழித்துக் கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்? தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண்டு, கண்ட துண்டமாக்கி விட்டு, மேலால் வெற்றிக் கொடி பிடித்துக் கொண்டு செல்லலாமே! ஏன் தயக்கம்? எது தடுக்கிறது? பலம் இல்லையா? அல்லது காலம் சரியில்லையா?

பார்ப்பனர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் - அதற்காக இதோ திட்டம், போர்த்துவக்கம் இன்ன நாளில், படைத் தளபதிகள் இன்னின்னார், களம் இன்னின்ன இடத்தில் என்று அறிவித்துவிட்டு, "ஜாம்ஜா'மென்று நடத்த வேண்டியது தானே! காலமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பதுதானா! இதற்கு, "நாம்' வேறு எதற்கு? அவர்களே போதுமே! நாளைக்கொரு தடவை குத்துவது, குடைவது - களிப்படைவது - இதுதான் "போர்' என்றால், இதற்கு நாம் ஏன்?

உண்மை என்ன தெரியுமா தம்பி! பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்பது "தீவிரத் திட்டம்' புரட்சிகரமான திட்டம், பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டும் என்பது சொத்தைத் திட்டம் என்று பேசி, அதனைச் சாக்காகக் கொண்டு நம்மை ஏசலாம். இது ஒரு நோக்கம். மற்றொன்று, பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும். அக்ரகாரத்தைக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் வீரதீரமாகப் போர் முழக்கம் செய்வார்கள் - அதற்காக அவர்களுக்கு அடிபணிந்துவிட்டு, நாம், பார்ப்பனர்கள் மீது பாய வேண்டும் - படவேண்டிய கஷ்டம் படவேண்டும் - பிறகு அவர்கள் பரிகாசம் பேசவும், பாவிகள் பலாத்காரத்தை அல்லவா தூண்டிவிட்டார்கள், பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதன் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லையே, கெடுத்தே விட்டார்களே என்று பழி சுமத்தலாம். இது மற்றோர் நோக்கம்.

பார்ப்பனர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று புரட்சி பேசுவது - பயங்கரமான சூழ்நிலை உருவாவதாகச் சித்தரிக்க வேண்டியது - தகுந்த சமயமாகப் பார்த்துக் காமராஜர் குறுக் கிட்டு, இதெல்லாம் வேண்டாம் என்பார். உங்கள் வார்த்தைக் காக வாளை உறையில் போடுகிறேன் என்று கூறி, அவருக்கு நேருவிடம் நல்ல பெயர் வாங்கித் தருவது. இது மற்றோர் நோக்கம்.

இப்படி ஏதேனும் ஓர் நோக்கம் இல்லை என்றால், ஏன், பார்ப்பன ஒழிப்புப் பற்றி இன்னமும் பேச்சுக்கடை மட்டுமே இருக்க வேண்டும்? செயலுக்கு என்ன தடை? வீரதீரமாக நீங்கள் கிளம்பி, வெட்டிக் குவித்தோ, விரட்டி அடித்தோ பார்ப்பனர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கி விட்டால், இருந்த இடம் தெரியாமல், ஈயம் பேசுவோர் ஓடி விடுகிறார்கள்! "ஈயம்' பேசுகிறார்களே, ஈயம் பேசுகிறார்களே என்று எத்தளை நாளைக்குச் சாக்குக் கூறித் தப்பித்துக் கொள்வது!

இந்த இலட்சணத்தில் இருக்கிறது திட்டம், இதிலே நாம் சேராதது குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களாம்!

இதிலாவது எத்தனை நாட்களுக்கு, ஒரே விதமான நிலையான கருத்து இருக்கும் என்று யார் கூறமுடியும்? இன்று, பார்ப்பனர்களை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் தி. க. வில் தம்பி, நீயும் நானும் இருந்தபோது வெறும் கொடி தூக்கியாகவோ, கும்பி நிரப்பிக் கொண்டோ அல்ல, "பெட்டிச் சாவியைக் கொடுக்க ஒரு தனி மாநாடு போடுகிறேன்'' என்று பெரியார் திராவிடத்துக்கு அறிவித்திடும் அளவுக்கு, குறிப்பிடத்தக்க "இடம்' பெற்று இருந்தபோது, பார்ப்பனீயம ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் திட்டம், பார்ப்பனர்களை ஒழிப்பது என்பது அல்ல! இன்றைய தி. க. வுக்கு எது "ஈயம்' என்று ஏளனமாகப்படுகிறதோ, அதுதான், நாம் அங்கு இருந்தபோது, திட்டம். அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களே தவிர, அதற்குப் பிறகு, காரணம் காட்டப்படாமலும், நமது கருத்து அறியாமலும், அவர்களாக ஒரு திட்டம் - தீவிரமானதாக, தீ பறப்பதாக, கேட்போர் திடுக்கிடக்கூடியதாக இருக்கட்டும் என்பதற்காகத் தீட்டிக் கொண்டால் அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களா? அதன் முழுப் பொறுப்பும் இன்றைய தி. க. வுடையது, அதன் வெற்றிக்கு முழுமூச்சுடன் பிறரை ஏசாமல் வேறுயாரும் துணைக்கு வரவில்லையே என்பது பற்றிப் பொருட்படுத்தாமல் - பழி கூறாமல் - துவக்கி வெற்றி காண்பதுதான் முறை. அதை விட்டுவிட்டு இங்கே திரும்பிப் பார்ப்பது ஏன்?

தி. க. வின் நினைப்புக்கும் நிலைக்கும் நாமும் பொறுப் பாளிகளாக இருந்த வரையில், பார்ப்பனீய ஒழிப்புத்தான் திட்டம் - நாம் இன்றும் அதைத்தான் திட்டமாகக் கொள்கிறோம். அது போதாது என்றால், இன்றைய தி. க. அதி தீவிரத் திட்டத்துக்குப் பயணமாகட்டும், நாமொன்றும் சுங்கச் சாவடி வைத்தில்லையே! நாமறிந்த தி. க. மட்டுமல்ல, நாம் வெளியேறிய பிறகும், 1953-இல் கூட, தி. க. வின் திட்டம், பார்ப்பனீய ஒழிப்பே தவிர, பார்ப் பனர்களை ஒழிப்பது அல்ல. தம்பி! இதோ கேள், பெரியாரின் பேரன்பர் ஒருவர் பேசுகிறார்:

"தமிழ்த் தாத்தா அவர்களே! தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால், திராவிடக் கழகத்தாரின் கை ஓங்கி, திராவிடக் கழகம் பலமிக்கதாகி, பிராமண சமூகத்தைத் திராவிடக் கழகத்தார் ஒழித்து விடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப் படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கவே, பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம்''

பேசுபவர், தம்பி! ஆர். ஹீனிவாசராகவன் எனும் பார்ப்பனர்!

மூன்று வேடிக்கைகள் இதிலே காணலாம்.

பெரியார் இதில் தமிழ்த் தாத்தா - திராவிடத் தந்தை அல்ல!

பிராமணர்கள் என்றுதான் வார்த்தை, பார்ப்பனர் என்ற வார்த்தைகூட உச்சரிக்கப்படவில்லை.

இவ்வளவும், 6-1-53 "விடுதலை'யில் உள்ளது.

எப்போதும் "விடுதலை'யில் பார்ப்பனர் பற்றி எழுதப்படும் போது பார்ப்பனர் என்றுதான் வார்த்தை இருக்கும். இந்த 6-1-53 பேச்சு மட்டும் "விடுதலை'யில் பார்ப்பனர் என்ற பதமே இராது - பிராமணர் என்றுதான் பதப்பிரயோகம் இருக்கும் - அவ்வளவு பவ்வியம் - அவ்வளவு நாகரிகம் - தேவைப்பட்டது. காரணம், பேசிய இடம் மயிலாப்பூர், இலட்சுமிபுரம் யுவர் சங்கம்!

பெரியாரிடம் பவ்வியமாகப் பேசி, யாரோ பார்ப்பனர் ஏமாற்றுகிறார் என்று தோன்றும். தம்பி, பெரியார் பேச்சை நம்ப வேண்டுமல்லவா? சரி! 8-1-53 "விடுதலை'யைப் பார், புரியும்.

"எனக்கு முன் பேசிய நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்கள் பேசும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதைப் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்.

அதாவது, யாரோ சில பிராமணர்கள் அவரை "பெரியார் இராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று பேசி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்' என்று சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடக் கழகம் வேலை செய்ய வில்லை. திராவிடக் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடக் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிட கழகமும் நானும் சொல்லுவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான்.

இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு, சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்களை வாழக்கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு, அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தமாகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்! இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம்; ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனது முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலை உண்டு.''

தம்பி! 1953-இல்,
பிராமணர்களை ஓட்டச் சொல்லவில்லை.
அது ஆகிற காரியமுமல்ல.
பிராமணர்களுக்கும் நமக்கும் என்ன பிரமாதமான பேதம்?
என் முயற்சியில் பலாத்காரம் இருக்காது

என்று பெரியார் பேசுகிறார் -அது "ஈயம்' என்றா ஏளனப் பொருளாகிறது? 1953-இல் இந்தக் கருத்து பொருளும் பொருத்தமும் உள்ளது என்றால், திடீரென்று, பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதாது, பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று தாவுவதற்கு என்ன காரணம்?

பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்று மில்லை என்று 1953-இல் கூறிவிட்டு 54, 55-இல் அக்ரகாரத்தைக் கொளுத்தவும் பார்ப்பனர்களை விரட்டவும் வேண்டும் என்று கூறவேண்டிய விதமாக, பார்ப்பனர்களிடம் திடீரென்று அடக்க முடியாத ஆத்திரம், போக்க முடியாத பகை ஏற்படக் காரணம் என்ன? தி.க.வினர் கூறுவரா? எண்ணிப் பார்த்தால்தானே கூற!

1953-இல் மட்டும்தானா அப்படி! இப்போதும் நான், தம்பி, கண்ணாரக் கண்டேன் - பெரியார், பார்ப்பனத் தலைவர்களிடம் எவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதை எவ்வளவு சாந்தமாய், சமரசமாய்ப் பேசுகிறார் என்பதையும் காதாரக் கேட்டேன்.

நாம் "ஈயம்' பேசுகிறோம் என்று கூறுவதெல்லாம், அதுதான் நடக்கக்கூடிய நாணயமான நாகரிக முறை; அதை நாம் கையாள்கிறோம் என்பதால் வந்த எரிச்சலாலேயே தவிர, தி. க. பார்ப்பனர்களை ஒழித்துக்கட்டக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருப்பதாக, யாரும் எண்ணமாட்டார்கள். அப்படி உண்மையிலேயே ஒரு தீவிரமான புரட்சித் திட்டம் இருந்தால், நீயும் நானும் தம்பி! தடுக்கவா போகிறோம்! நடத்தட்டும்! நாடு மட்டுமல்ல, உலகே உண்மையில் "கிடுகிடுக்கும்''

நாம், தம்பி! பார்ப்பனீய ஒழிப்புத் திட்டம் தந்த பெரியாரின் பாதையில் செல்வோம் - அதிலே தவறுமில்லை - துரோகமுமில்லை. ஈயம். . . . ஈயம். . . . என்று ஏளனம் கூறுவோர் கூறட்டும். . . . நாம் கூறுகிறோம், ஈயம் தந்தார் எங்கள் பெரியார். . . . அது ஏளனத்துக்கு உரியது என்று நாங்கள் எப்படிக் கருத முடியும்? உங்களிடம் உள்ள பெரியார் வேறு விதமான திட்டம் தந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் - பொது மேடைகளில் தனியாகப் பேசும்போதோ, பெரியாரை நான் அந்த இடத்துக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று எக்காளமிடுகிறாராம் ஒரு இடம் பிடித்தான் - எப்படி இருப்பினும், அதை அவர்கள் நம்பட்டும், நம்பினால் நடத்தட்டுமே. அதற்கு நமது உதவியை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? கிடைக்காதது கண்டு, பத்துக் கிளர்ச்சியிலும் சேரவில்லையே என்று எதற்காகப் பதைக்க வேண்டும்?

அன்புள்ள,

25-3-1956