அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எங்குச் சென்றாலும். . .
1

மலேசியாச் செலவு
கனவான் கவலையும் பாட்டாளியின் கவலையும்
உழைத்து அலுத்தவனுக்கு ஓய்வு தேவை
ஓய்வு என்பது எது?
ஓய்வு நேரம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதம்
புண்ணியப் பயணங்கள்

தம்பி,

அண்ணனுக்கென்ன, உல்லாசமாகக் கிளம்பிவிட்டான் - வேலைகளைக் கவனிக்காமல் - பாரத்தை என் மீது போட்டு விட்டு - சிங்கப்பூராம் - பினாங்காம் - கோலாலம்பூராம், ஈப்போவாம், ஹாங்காங்காம் - பாங்காக்காம், டோக்கியோவாம், ஓசாகாவாம், மணிலாவாம், கம்போடியாவாம் - பார்க்கக் கிளம்பிவிட்டான் என எண்ணிக் கோபித்துக் கொள்ளாதே. எங்குச் சென்றாலும், எத்தகைய எழில்மிகு காட்சியெனினும் அவைகளை உனது இன்முகத்துக்கும், அன்பு ததும்பிடும் கண் ஒளிக்கும் மிஞ்சியதெனவா கருதிக் கொள்வேன்?

ஓங்கி உயர்ந்த மலைகளைக் கண்டால், உனது திண் தோள்களை எண்ணிக் கொள்வேன்; அன்றலர்ந்த மலர்கள் உன் முகத்தை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்; சிற்றாறுகள் பாடிடும் சிந்துகள் உன் சிரிப்பொலியை நினைவுபடுத்தும்; கண்டிடும் காட்சி யாவும் உன்னைத்தான் எண்ணிடச் செய்திடும் என்பதனை அறியாயா? - அறிவாய் நிச்சயம் - எனினும், ஒரு பொய்க் கோபம் காட்டுகிறாய், புன்னகையை மறைத்துக் கொண்டு.

ஓய்வு எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது என்பதாலே நாடு பல கண்டிடலாம், பொழுதினை ஓட்டிடலாம் என்றெண்ணி உல்லாசப் பயணம் நடாத்திடும் உயர்நிலையினனா நான்! உனக்கு அண்ணன் என்றால் அந்த நிலையினன் அல்ல என்பது தன்னாலே விளங்கிவிடுமே. வேலை மிகுதியாக உளது, மும்முரமாகப் பணியாற்றிட வேண்டிய நிலை. எனினும், மலேசியா வாழ் நண்பர்கள் பல ஆண்டுகளாக அன்பழைப் பினைத் தந்தபடி உள்ளனர். வருக! வருக! அளவளாவிட வருக! என்பதாக. பலமுறை எனது இயலாமையைக் கூறிக் கூறிப் பார்த்தாகிவிட்டது. இனியும் அவர் மனம் புண்படச் செய்திடல் முறையாகாது என்பதால், பயணத்துக்கு ஒப்புதல் அளித்தேன்.

தம்பி! ஒய்வு நேரம்! உல்லாச வேளை! சல்லாபப் பேச்சு! - இவை நமக்குக் கிடைத்திடுபவை அல்ல.

ஓய்வாக ஒயிலாக இருந்திட வேறு பலர் நமக்காக உழைத்தபடி இருந்திட வேண்டுமே - அஃதோ நமது நிலை? அந்த நிலையையோ நாம் வரவேற்கத்தக்கது எனக்கொள்வோம்? இல்லையல்லவா!

நாடு பல கண்டிடலாம் என்ற எண்ணம் கூட, கண்கவர் காட்சி கண்டிடும் நோக்குடன் அல்ல; எண்ணற்ற நல்லிதயங்களுடன் உறவாட; அவர்தம் எண்ணத்தினை அறிந்து மகிழ்ந்திட; பிறகு உன்னிடம் அவை பற்றி எடுத்துக் கூறிட; வேறெதற்கு!

உள்ளத்துக்கு ஏற்பட்டுவிடும் அலுப்பினைப் போக்கிக் கொள்ள, சோர்வு நீக்கிக் கொள்ள, புதிய தெம்பு பெற்றிட, மேலும் பணியாற்றிடும் உற்சாகம் பெற்றிட, சிலர் உல்லாசப் பயணத்தினை மேற்கொள்கின்றனர். வேறு சிலரோ காலம் மெள்ள மெள்ள நகருவது கண்டு கவலை மிகக் கொண்டு ஒரே இடம், ஒரே வாழ்க்கை முறை, ஒரேவிதமான சுற்றுச் சார்பு ஆகியவை பளுவினை மனத்திலே ஏற்றிவிடுவது கண்டு திகைத்து, புதிய கோலம் கண்டாகிலும் பழைய சோர்வைப் போக்கிக் கொள்வோம் என்பதற்காகச் சுற்றுகின்றனர். காலத்தைக் கொன்றிட, உல்லாசப் பயணத்தை ஒரு கருவியாக்கிக் கொள்கின்றனர்.

காலம், தம்பி! விந்தை மிக்கது, வேலை மிகுதியும் உள்ளவர்களுக்குக் காலம் ஒரு கசையடி! சுரீல் என்று அடித்தல்லவா எழுப்பி விடுகிறான் கதிரவன் ஏழையை! வேலையோ மலைபோல, காலமோ கடுகி ஓடிவிடுகிறது. செய்ததோ சிறிதளவு; செய்திட வேண்டியதோ பெருமளவு; காலம் கேலிக் குரலெழுப்பிச் சிரிக்கிறது, பாடுபடுபவனைப் பார்த்து.

இப்போதுதான் விடிந்தது என்றிருந்தோம். உச்சிப்போது வந்துவிட்டதே என்பதனை உழைப்பாளி தன் உடலெங்கும் கசியும் வியர்வையால் அறிந்து கொள்கிறான்; காலம் வேகமாக ஓடிடுவது அறிந்து, தன் வேலையில் மேலும் மும்முரமாகிறான். பொழுது சாய்வதற்குள் செய்து முடித்தாக வேண்டுமே, இல்லையென்றால், சோம்பேறி! தடிக்கழுதை! கடாமாடு! இத்தனை அர்ச்சனைகளல்லவா நடக்கும், வேலை தந்திடும் மேலோரிடமிருந்து. உச்சிப்போதும் பறந்து செல்கிறது, உழைத்து அலுத்துப் போகிறான்; பிறகேனும் ஓய்வு உண்டா? அவனுக்கா! செய்த வேலையுடன் செய்தாக வேண்டிய வேலையினை ஒப்பிட்டுப் பார்க்கும்போது காலம் ஏன் தான் இப்படிக் கடுகிச் சென்றிடுகிறதோ என்று கோபம் கோபமாய் வருகிறது.

உல்லாசச் சீமானுக்கோ, காலம் நகர மறுக்கிறது, அன்ன நடை போடுகிறது. காலத்தை ஓட்டிட அவரும் ஏதேதோ செய்து பார்க்கிறார் - தோட்டத்தில் உலவுகிறார், தோழர்களுடன் அளவளாவுகிறார், காலத்தை மறந்திடச் செய்யும் கலை இன்பம் நுகருகிறார். ஏதேதோ விளையாட்டு, களியாட்டம்! எனினும், காலம் ஓடிட மறுக்கிறது. காலம் கூட, குடிசையை விட மாளிகையிலேதான் அதிக நேரம் இருந்திட விரும்புகிறது போலும்!

காலம் போகவில்லையே என்ற கவலை, கனவானுக்கு!

காலம் வரவில்லையே என்ற கவலை பாட்டாளிக்கு!

காலம் வரவில்லையே! என்று கூறுகிறான் - குமுறுகிறான் - தம்பி! சாவு வரவில்லையே என்றுதான் கவலை! சாவே வா! என்றுதான் அழைக்கின்றான் வாழ்வுக்காகப் போராடிப் போராடித் தோல்வி கண்டவன், சாவாவது தன் குரல் கேட்டு வந்து உதவிடுமா என்று பார்க்கிறான் - மெத்த ஆவலுடன். ஆனால் சாவும் சிரிக்கிறது அவனைப் பார்த்து! "தப்பித்துக் கொள்ள விரும்புகிறாயா! விடுவேனா! சாவே வா! என அழைக்கிறாயே, நான் வந்து உன்னை அழைத்துக் கொண்டு சென்று விட்டால், நீ செய்யாமல் விட்டு வைத்திருக்கும் வேலைகளை வேறு யார் செய்திடுவர்! ஏமாற்றவா பார்க்கிறாய் நான் ஏமாறமாட்டேன். உனக்கு நிரம்பவேலை இருக்கிறது, செய்து முடித்திடுவதிலே கவனம் செலுத்துட்டம், செத்து விடலாம் என்று தந்திரத் திட்டம் போடாதே நான் ஏமாறமாட்டேன் போ! போ! உனக்கு நிரம்ப வேலை இருக்கிறது'' என்று கூறிவிடுகிறது காலம், குற்றுயிராகக் கிடக்கிறான், இப்போதோ இன்னும் சிறிது நேரத்திலோ, ஈளை கட்டி விட்டது. இழுப்பு வந்துவிட்டது, உடல் சில்லிட்டு விட்டது. மூச்சுத் தடைப்படுகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள், பிறகு? தெய்வாதீனமாகப் பிழைத்துக் கொண்டான் என்கிறார்கள் அல்லவா - காலம் செய்திடும் பல கொடுமைகளிலே இதுவு மொன்று - கட்டையைக் கீழே போட்டுத் தொலைக்கலாம், கண்களை மூடிவிடலாம் என்று எண்ணும் ஏழையைச் சாகவும் விடமாட்டேனென்கிறது. அணு அணுவாகச் சிதைந்திடு என்று கூறுகிறது.

தம்பி! காலம் வரட்டும் என்று பேசுவதைக் கேட்டிருப்பாயே!

உழைக்கிறான், உருக்குலைகிறான்; அவன் கண்ணெதிரே ஊர்க்குடி கெடுப்பவன் உயர்ந்து கொண்டே போகிறான். உழைத்தவன் மனத்திலே ஓராயிரம் ஆசைகள் அலை மோதுகின்றன; நம்பிக்கை கூடப் பூத்திடுகிறது. ஆனால், ஆசைகள் அவலமாகிப் போகின்றன; நம்பிக்கை நசித்துப் போகிறது; தாங்க முடியாத வேதனைதான் பெறுகிறான்; மனம் உடைந்துவிடும் என்ற நிலை; அந்த நிலையிலே அவன் மெள்ளக் கூறுகிறான், தனக்குத்தானே கூறிக் கொள்கிறான் - காலம் வரட்டும்! என்று.

காலம், தம்பி! அவன் கண்ணீரைத் துடைத்திட வந்திடுகிறதா! அது இந்த வேலையையா மேற்கொள்ளும், வேறு சுவையான வேலை இருக்கும்போது!

காலம் வரட்டும்! என்று இவன் கண்ணீரைத் துடைத்தபடி கூறுகிறான். இவனைத் தேடியா வந்திடும்? அதோ! அந்த அழகுமயில் கூறுகிறாளே, அடிமூச்சுக் குரலாலே, காலம் வரட்டும் என்று, தன் காதலை வேண்டித் தவமிருப்போனிடம் - தனிமை கிடைக்கட்டும், கட்டுக்காவல் குறையட்டும் - காலம் வரட்டும் என்பதாக! அவள் எண்ணத்தை ஈடேற்றத் துணை செய்கிறது, ஏழைக்குத் துணை செய்யுமா?

தம்பி! காலம், கனவானின் கருவி, ஏழையை வேலை வாங்குவதற்காகச் சீமான் கரத்தில் வந்து சேர்ந்த சாட்டை!!

காலம் கடுவேகத்துடன் சென்றிடும் நிலையைக் காண்பவர்கள் நாம்.

முத்தனா! அடே, நம்ம முத்தனா! என்னடா இப்படிக் கிழமாகி விட்டாயே. . .

வயசு ஆகலியா. . . காலம் ஓடிக்கிட்டேதானே இருக்குது, உருண்டு உருண்டு. . .

என்ன இருந்தாலும், ஐந்து வருஷத்துக்குள்ளாகவா நீ இப்படி ஆகிவிடுவது. . . நம்பவே முடியவில்லையே. . . தலைமுடி முழுவதும் நரைத்துப் போயிருக்கே. . .

ஆமாம்பா! வயசு ஆகுதேல்லோ. . . 45 ஆகுதே. . . அதுக்குள்ளாகவா இப்படி ஆகிவிடுவது. . .

தம்பி! இப்படிப்பட்ட உரையாடல் நடந்தபடி இருக்கிறது. காலம், ஏழைகளின் முகத்திலே கவலைக் கோடுகளை, மனம்போன போக்கிலே கீறிவைக்கிறது, செல்வவான்களிடமோ, அடக்க ஒடுக்கத்துடன் நடந்து கொள்கிறது.

தங்கள் வயது. . .?

என்ன இருக்கும் சொல்லு பார்ப்போம். . .

நாற்பது நாற்பத்திரண்டுக்கு மேலே. . . யோசித்துச் சொல்லு; சொல்லு சும்மா, தைரியமாக. . . என்ன இருக்கும் எனக்கு வயது. . . நாற்பத்தைந்துக்கு மேலே இருக்கவே முடியாது! சீமான் சிரிக்கிறார்; அவன் முதுகைத் தட்டிக் கொடுக்கிறார்; அவள் கூட இப்படியேதான் சொல்கிறாள் என்கிறார்.

யார் அந்த "அவள்'. . . என்று கேட்க முடியுமா! எத்தனையோ "அவள்' அவருக்கு இருக்கக் கூடுமே?

நான் சொல்வது இருக்கட்டும், "அவள்' சொல்வதும் இருக்கட்டும், உங்கள் வயதுதான் என்ன? என்று கேட்க ஆவல்தான்;ஆனால், அவசரம் காட்டலாமா. . .?

அவரே சொல்லுகிறார், எனக்கு வயது ஐம்பது முடிந்து ஆறுவருடமாகிறது என்று.

இருக்கவே இருக்காது; நான் நம்பவே மாட்டேன். விளையாட்டுக்குச் சொல்கிறீர்கள் - என்று கூறுகிறான்.

காலம் கனவானிடம் முரட்டுத்தனம் காட்டவில்லை; மெதுவாகத் தடவிக் கொடுக்கிறது. ஏழையையோ பிறாண்டிப் பிய்த்துவிடுகிறது.

காலத்தின் இயல்பு அது; கடும் உழைப்பு பலருக்கு, களியாட்டம் சிலருக்கு என்ற முறை இருக்குமட்டும் காலம் இந்த இயல்புடன்தான் இருந்திடும்.

ஆனால், இதனை மாற்றிட வேண்டுமென்பது சமதர்ம நோக்கத்திலே ஒன்று.

பாடுபடுபவனுக்கும் "ஓய்வு நேரம்' வேண்டும் என்ற கருத்தினை இப்போது ஏற்றுக் கொண்டுள்ளனர்; முன்பு ஓய்வு நேரம் என்பது உயிர் நிலையினருக்கு மட்டுமே கிடைத்திடத் தக்கது, கிடைத்திட வேண்டியது என்று கருதிக் கொண்டிருந்தனர்; அதனை ஒரு தத்துவம் என்று கூடக் கூறி வந்தனர்.