அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எரிகிற தழலில்...!
2

இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன்.

தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று.

தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர, வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும் வேதனையும் தருகிற நிலைமையாகும் - ஆனால் இரண்டு என்ன - எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள்.

தேவிகுளம்
பீர்மேடு
நெய்யாற்றங்கரை
கொச்சின் - சித்தூர்
பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி

தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது - ஐயனே! - மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று "இருந்து முகந்திருத்திக்' கூறினர்; "என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!'' என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். "எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா! அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக் கொள்க! - என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சுகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டாரநாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒரு துளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை - சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக் கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில் பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப் படுகிறார்களே - இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா? - பாதகம் விளைவிக்கும் பண்டார நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால், மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்!

ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணர்ச்சியையும், தமிழரின் நியாயமான "கோரிக்கை களை'க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக் கொண்டேதான் வருகிறது.

சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர்.

நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார்.

நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார்.

அப்படிப்பட்ட "வீரதீரமிக்கவர்' இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின் தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400 கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்: கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார், "கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!' என்று கெஞ்சுவார்களே - அது போலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400 கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும் இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேரு பண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ - அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில், இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு "ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு;' - என்று பாராட்டுகிறார்கள்.

கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது.நேரு பண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன்பனி போலாகும் என்று காமராஜர் கருதுகிறார் - பலமுறை அதுபோலாகி இருக்கிறது - இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும் - இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி உள்ளன.

பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது.

இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள்.

எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள் கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது - அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ் காரர்களை. "என்ன தோழரே! செய்வது?'' என்று பரிதாபத்தோடு சிலரும், "இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல! என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர் - ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை நேருவின் விஜயம் மாற்றிவிடாது.

நேரு பண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை.

காமராஜர் கருதுவதுபோல் நேரு பண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேரு பண்டிதருக்குப் பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட தனக்கும் பிற நாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது! மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி,

அடுத்துக் கெடுப்பவர்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர்
ஊர் சுற்றிகள்

என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேரு பண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை.

காரணம் எதுவாயினும், தம்பி நேரு பண்டிதரின் "விஜயம்', இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள்.

"தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா, புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை "தமிழ்நாடு' - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது.

அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!

"தனி நாடு' என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கின ரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில் - மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த நிலைமை மாற்றப்பட்டாகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

மாகாணங்களுக்கு - மாநிலங்களுக்கு - இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின்கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றிவைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.

வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது.

இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது.

எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் "சுருதி பேதம்' இருப்பது தெரிகிறது.

அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு- தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது "காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை.

ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம்.

வடக்கு - தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் "நகாசு'' வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை ஏன் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது!

லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால் - அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்!

இங்கும் அதுபோல, நேரு பண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள்.

இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழிக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன?

"இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே.

தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.''

தம்பி! "குமுதம்' இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது!

தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது

என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன?

இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை - இயற்கையாக எழுவதில்லை!

தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு "குமுதம்' என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது.

தமிழன் என்றோர் இனம் உண்டு

தனியே அவர்க்கோர் பண்பு உண்டு.

அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா?

தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.''

என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும்.

நமது அமைச்சரவை!

தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!!

நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு

நல்லவரை
திறமைசாலியை
அனுபவமிக்கவரை

கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழ்க் கவர்னரை

நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்!

தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம்.

மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக் கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.

மத்திய அரசாங்கம்

என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது.

பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசிய முகாமின் தீப்பொறி கிளம்புமே... என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!!

தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது.

நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது.

உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார்.

மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது!

என்று கூறுகிறார்!

ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது - என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள "ரசம்' இதிலே இருக்கிற தல்லவா? ஆம், அண்ணா, என்பாய், தம்பி இதனினும் மேலான "ரசமும்' இருக்கிறது, கேள்.

அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது - என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா "குமுதம்' ஆசிரியர், அவரைப் பார்த்து,

தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா!

என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!!

ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும் ஆச்சரியப்படுவானேன்!

பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும். உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், "உள்ளதும்' போய்விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால். "மத்திய அரசாங்க'ப்பிடி, இரும்புப் பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் "திக் விஜயத்தி'னால் தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக் கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேரு பண்டிதரின் பவனி!!

அண்ணன்,

16-12-1956