அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எழுச்சி வெள்ளம்

தமிழ் மொழியின் தாழ்ந்த நிலை -
பண்டைய மேனாட்டு இலக்கியங்கள் -
இந்தித் திணிப்பு

தம்பி!

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரக் கிளம்பினார், ஹுவான் சுவாங் எனும் சீனப் பேரறிஞர். அவருடைய குறிப்புகள், இன்றும் வரலாற்றுக்கு அணியாக உள்ளன. அவர் பல நாடுகளிலே, இருந்துவந்த வளம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கிக் கண்டறிந்து, கூடுமான வரையில் மிகைப்படுத்தாமலும், குறைத்திடாமலும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்ப நிகழ்ச்சிகளை, நிலைமைகளை மாற்றாமலும், தெளிவாக எடுத்துக் கூறினார். அவருடைய ஏடு இன்றும் பல பொருள்களை அறிந்து கொள்ளச் செய்திடும், அறியதோர் களஞ்சியமாக இருந்து வருகிறது.

"உலகிலே பல்வேறு நாடுகளையும் காணவிழைகிறேன். மக்கள், எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள், நாட்டுவளம் என்னென்ன வகையின உள்ளன? அரசு முறைகள் யாவை? நெறிகள் எவையெவை உள்ளன என்பனவற்றைக் கண்டறிய விரும்புகிறேன். சென்று வர ஒப்பம் அளியுங்கள், இறையே!'' என்று அவர் மன்னரைக் கண்டு கேட்டார்.

மாமன்னர், "டாங்' என்பவர், மகிழ்ச்சியுடன் ஒப்பம் அளித்தார்; பருகிடப் பானம் கொடுத்தார்! அற்புதமான பானம்!! பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தோ; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் கொண்டிருக்கிறாய்.

ஒரு பிடி மண்ணை அள்ளி, பருகச் சாதாரணமான பானம் நிரப்பி இருந்த குவளையில் போட்டுப் பருகச் சொன்னார்.

மாமன்னரிடம் சென்று, மலை வனம் வனாந்தரங்களைக் கடந்து மண்டலம் பல சென்றுவர விழைகிறேன் என்று கூறுகிறார். ஒருவர் மணியும் பொன்னும், மருந்தும் பிறவும் கொடுத்து, அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியதன்றோ முறை. மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் சொல்வதா! ஈதென்ன பேதமை! என்று எண்ணிடவும், கோபித்திடவுங்கூடத் தோன்றும்.

மதியற்றோ, மண்டைக் கனத்தாலோ அல்ல, மாமன்னர் அதுபோலச் செய்தது.

உலகம் காணச் செல்கிறார், எந்தெந்த நாட்டிலே என்னென்ன எழில் இருக்கிறதோ, சீரும் செல்வமும் உளவோ, அவைகளைக் கண்டு, சீனத்திலே இல்லையே இத்தகைய சிறப்புகள் என்றெண்ணிச் சிந்தை நொந்து, தாயகத்தைத் தாழ்வாகக் கருதத் தலைப்பட்டு, நாட்டுப்பற்று அற்றவராகிவிட்டால் நல்லதல்லவே! நாடு பல சுற்றினாலும், "நம் நாடு' என்ற உணர்ச்சி பாழ்படலாகாதே! என் நாட்டிலே இல்லாத ஏற்றமும் எழிலும், பொழிலும், புதுமையும், வளமும் இங்கு இருக்கிறது என்று எண்ணத்தக்க விதமாக, பல நாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை, "என் நாடு' ஆகுமா? என்ற எண்ணம், எப்போதும் இருந்தாக வேண்டுமே! இவர், செல்லும் நாடுகளிலே, செம்பொன் ஓடுகள் வேய்ந்த மாடங்கள் இருக்கலாம், கட்டித் தங்கத்தைக் கொட்டி மகிழ்ந்திருக்கும் கோமான்கள் இருக்கலாம், விண்ணை முட்டும் மலைகளும், மனதை மருட்டும் மாநதிகளும், செந்நெல் கொழிக்கும் வயல்களும், செந்தாமரை பூத்திடும் வாவிகளும், கிள்ளைக்கு மொழி அழகும், மயிலுக்கு நடை நயமும் கற்றுத் தருபவளோ இக் கன்னி என்று கவிஞர்கள் கூறத்தக்க பாவையரும் இருக்கலாம். அகழி சூழ்ந்த கோட்டைகளும், அவை எமக்கு எம்மாத்திரம் என்று கேட்டிடும் மதயானைகளும், கடுகிச் செல்வோம் களத்தை நோக்கி என்று கூறிடும் பரியும் பிறவும், காண்போருக்குக் கலக்கம் தரும் அளவு இருக்கலாம். பாய்ந்தோடி வரும் ஆற்று நீரிலே அழகுறத் தோன்றிடும் நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி குறித்து, எனக்கேயன்றோ வெட்கமாக இருக்கிறது! - என்ற எண்ணம் உருவானால், நாட்டுப்பற்று நாசமாகுமன்றோ!!

இவரோ, நாடு பல செல்கிறார் காண; காண்பதால், சீனம் எனும் தாயகத்தின்மீது உள்ள பற்று அற்றுப்போய்விடக் கூடாதே! எனவே, இவருக்கு நாட்டுப்பற்றின் அருமையினை உணர்த்தியாக வேண்டும் என்று எண்ணினார், மாமன்னர் டாங்! எனவேதான், தாயகத்தின் மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் செய்து, பிறகு "வேற்று நாட்டவர் தந்திடவல்ல, கோடிச் செம்பொன்னையும்விட, பிறந்த நாட்டு மண் சிறந்தது அல்லவா?'' என்று கேட்டார்.

உலகு சுற்றி, அறிவினைப் பெற்றிட விரும்பினார், ஹுவான் சுவாங்; புறப்படும்போதே, பேரறிவு பெற்றுச் செல்க என்று கூறாமற் கூறி வழியனுப்பி வைத்தார் மாமன்னர்.

நாட்டுப்பற்று, பிற நாடுகள் காண்பதால் கெட்டுப்போகக் கூடும் என்று எண்ணினார் மாமன்னர்; ஆனால் நாடு பல சென்று காண்போருக்கு, அந்தந்த நாட்டு மக்கள், தத்தமது நாட்டினிடம் பற்று வைத்திருப்பதைக் காண்பதால், காண்போருக்கு, தம் தாயகத்தின்மீது உள்ள "பற்று' வளரும், குறையாது.

கண்ணைக் கவரும் வனப்பு சீமையில்; காடு சூழ்ந்த இடம், ஆப்பிரிக்க பூபாகம்! நவநாகரிகம் கொழிக்குமிடம் சீமை; காட்டுமிராண்டிக் கோலம் என்று கூறத்தக்க நடை உடை பாவனை ஆப்பிரிக்க பூபாகத்தில்! ஆடலழகிகள் ஆயிரமாயிரம் அங்கே! ஆவேசமாடிடும் அலங்கோலவதிகள் ஆப்பிரிக்காவில்!

பாங்குநிறை பாராளுமன்ற முறைகள் பரங்கியர் நாட்டில்; பழங்கால அமுல் ஆப்பிரிக்காவில்!

எனினும், சீமை சென்று வாழ்ந்துவந்த, ஆப்பிரிக்க இளைஞர்கள் "செச்சே! நமது நாடும் ஒரு நாடா! காட்டுமுறை அல்லவா காண்கிறோம்! இந்த அழகும் அறிவும், ஆற்றலும், அங்கு ஏது' என்று எண்ணி நாட்டுப் பற்றினை நாசமாக்கிக் கொண்டாரில்லை! நாட்டுப்பற்று, கொழுந்துவிட்டு எரியலாயிற்று.

இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே; என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது இங்கே; என் நாடு, இருண்டல்லவா கிடக்கிறது! இவர்கள் இங்கு, வேற்றானுக்கு தங்க இடம் தருகிறார்கள், தகுதி பெற்றோருக்கு உதவியுமளிக்கிறார்கள்; ஆனால் அரசு நடாத்த, அனுமதிக்கின்றனரோ? என் நாட்டிலே, எவனெவனோ ஆளுகிறான்! எப்படியெப்படியோ ஆளுகிறான்! இங்குள்ள மக்கள், இருக்க இடம், செய்யத் தொழில், வாழ வசதி பெற்று இருக்கிறார்கள்; என் நாட்டிலே மக்கள், மிருக வாழ்க்கையில் அல்லவா உள்ளனர்! இங்கு, நாட்டுப்பற்றும், உரிமை உணர்ச்சியும் ஊட்டப்பட்டு வருகிற நேர்த்தியுடன், என் நாட்டிலே எடுப்பார் கைபிள்ளையாகிடும் இழிநிலையும், எதற்கும் அஞ்சிடும் போக்கும், நத்திப் பிழைத்திடும் முறையும் இருக்கிறதே, அதனை, ஒப்பிட்டுப் பார்த்தால், செச்சே! எனக்கே வெட்கமாக அல்லவா இருக்கிறது! பிறநாட்டான் ஒரு சுடுசொல் வீசினாலும் இங்குள்ள மக்கள் சீறிக் கேட்கின்றனர்! என் நாட்டிலே உள்ளவர்களை; கருப்பர்! என்று இழிமொழியால் அழைக்கின்றனர்; சினம் கொள்வார் இல்லை!!

எமது நாடு, எமது மொழி, எமது கலை, எமது அரசு, எமது செல்வம் என்று இங்கு எழுச்சி பொங்கிடும் நிலையில் பேசிடக் கேட்கிறோம்; இந்த ஆர்வம், எழுச்சி, பற்று, என் நாட்டிலே இல்லையே! ஏன்? ஏன்? - என்றுதான் எண்ணத் தலைப்பட்டனர்; எழுச்சியின் தூதுவராயினர்; தாயகம் திரும்பினர், தளைகளை நொறுக்கிட; ஒவ்வொன்றாக இன்று, விடுதலை பெற்றுவருகின்றன, ஆப்பிரிக்க பூபாகத்து, நாடுகள்! புத்தம் புது அரசுகள்!!

*

இன்று விடுதலைக் கொடியைப் பறக்கவிடும், இந்த நாடுகளை எல்லாம்விட, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டிலே, நாம் பிறந்தோம்; எனினும் நமது இனம், அதற்குரிய மொழி, அதனால் கிடைத்திடும் வாழ்க்கை முறை எனும் எல்லாவற்றையும் அழித்து வருகின்றனர்; எதிர்த்து அல்ல, தம்பி! அணைத்து!!

வைதீகர்கள், "எலும்பைப் பெண்ணாக்கிய மொழி, எம்மான் கழகத்தில் அமர்ந்து வளர்த்த மொழி' என்று கூறிக் களிப்பூட்டுகிறார்கள்.

வரலாற்றுப் பேராசிரியர்களோ, "இம்மொழி செம்மொழி; இயல் இசை நாடகமெனும் மூன்று வகையினதாக அமைந்த மொழி' என்று கூறுகின்றனர்.

எனினும், அந்தத் தனிமொழி தத்தளிக்கிறது; தாதி வேலை பார்த்திடச் சொல்கிறார்கள், தருக்கர்கள்.

வேற்று நாட்டவரெல்லாம் கண்டு வியந்துரைக்கின்றனர், நம் மொழியின் தனிச்சிறப்புப் பற்றி; ஆயின் கோல்கொண்டோர், "அம்மொழிக்கு, வெள்ளாட்டி வேலைதான்' என்று கூறுகின்றனர். ஏதோ இதாகிலும் கிடைத்ததே என்று இளித்துக் கிடப்போரிடம் ஆட்சி சிக்கிக் கிடக்கிறது.

தம்பி! செப்பேடுகளில், கல்வெட்டுக்களில், காண்கிறோம் தமிழ்மொழியை! என்ன பொருள் என்கிறாய்? சீரும் சிறப்பும் மிகுந்திருந்தது, "பேரும் புகழும்' பெற்றிருந்தது, நம் நாடு என்பதன்றோ பொருள்!

வெற்றிகளைக் குறித்திட, விருதுகளைத் தந்திட, செப்பேடுகள், கல்வெட்டுகள்!

இமயத்தில் கொடி நாட்டினான், கனகவிசயர் தலைமீது கல் ஏற்றினான், கங்கைகொண்டான், கடாரம் வென்றான், கலிங்கத்தை கதிகலங்கச் செய்தான், வாதாவி வென்றான், சிங்களம் சென்றான், வென்றான் - காவிரிக்குக் கரை அமைத்தான் - என்றெல்லாம், நமது இனத்தின் முன்னாள் ஏற்றத்தைக் குறித்திருக்கிறார்கள் - தமிழ் மொழியில்.

செப்பேட்டுக்கும் கல்வெட்டுக்கும் தகுதிபெற்றுத் திகழ்ந்த தமிழ் மொழிக்கு இன்று அஞ்சல் அட்டையிலேகூட இடம் இல்லை தம்பி! ஆமாம்! என்று ஆச்சரியத்துடன் சிலரும், ஆமாம்! என்று ஆயாசத்துடன் பலரும், கூறிக் கேட்கிறோமேயன்றி, அப்படியா! ஏன்? என்று கேட்டுச் சீறி எழுந்து, கேட்டினை எதிர்த்து ஒழித்திட, யார் உளர்? எங்கே உளர்?

நெடுஞ்சாலைகளிலே உள்ள கற்களிலே, இந்தி! நெடுநல் வாடையின் சிறப்புப்பற்றி உரையாற்றிட ஆசிரியர் உளர், கல்லூரிகளில்!!

"கன்னித் தமிழ்!' என்று புகழ் பாடுகின்றனர், புலவோர். எனினும் "கற்றிடுக இந்தியினை, பிழைத்திட அதுதான் வழி.'' என்கின்றனர் அமைச்சர்கள். அவர்கள் தமிழரே! ஐயமில்லை! ஆயின் அமைச்சராகி உள்ளனர்! அந்த நிலை கெடாதிருக்க, ஆட்டி வைக்கிறபடி ஆடிடும் போக்கினராகிவிட்டனர்!!

ஆச்சரியம், அம்மட்டோடு, இல்லை! எம்மைத்தான் மக்கள் விரும்பி, வாக்களித்து அரசோச்ச ஆணையிடுகின்றனர் என்று வேறு, அவர்கள் மார்தட்டிக் கூறுகின்றனர்; தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுதான், எண்ணிக்கையில் பிற கட்சிகள் உள்ளன.

மொழியின் நிலையே இது எனின், மற்றத் துறைகளிலே என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுத் தீரும் என்பதனை எடுத்தியம்பத்தான் வேண்டுமா?

*

இந்தி மொழி கட்டாயம் இல்லை; திணிக்கப்போவதில்லை; ஆட்சிமொழியாக அவசரப்பட்டு ஆக்கிடப் போவதில்லை; ஆங்கிலத்தை உடனடியாக அறவே நீக்கிடப் போவதுமில்லை என்று ஆணவத்தை பதுங்க வைத்துக்கொண்டு, பேசிடக் கேட்கிறோம். எனினும், மெள்ள மெள்ளப் படரும் நோய் போல, இந்தி, எல்லாச் சந்து பொந்துகளிலும் நுழைகிறது, குழைகிறது, நம் தன்மானம் அழிக்கிறது.

தமிழகத்தில் மட்டுமே, இந்தி எதிர்ப்பு என்பது, பட்டுப் போகாத நிலையில், நீறுபூத்த நெருப்பு நிலையில் இருந்து வருகிறது.

வங்கம் போன்ற வேறு சில இடங்களில், வாதாட வல்லுநர்கள் உள்ளனர், வரலாற்றுச் சான்று காட்டிச் சாடுவோர் உள்ளனர், மொழிவளம் பற்றிய விளக்க உரையாற்றி, இந்தி மொழிக்குப் பொது மொழியாகிடும் தகுதி இல்லை என்று எடுத்துக் காட்டுவோர் உளர் - ஆனால், எமக்கு ஏன் இந்தி? எமக்கு ஏன் ஒரு பொது மொழி? என்று கேட்டிடத் துணிவு எழவில்லை.

சுவிட்சர்லாந்து நாட்டினைக் காட்டி, பல மொழிகள் அங்கு, தேசிய மொழிகளாக உள்ளனவே, அதுபோல, இங்கும் பல மொழிகள் இருக்கட்டுமே, இந்தி மொழிக்கென, ஏன் ஓர் தனித்தகுதி தேடித் தருகிறீர்கள் என்று கேட்டு அறிவு கொளுத்தப் பார்க்கின்றனர்.

இவை அவ்வளவுக்கும், இந்தி புகுத்துவோர், ஒரே வரியில் சமாதானம் கூறுகின்றனர்; "உமது மொழி அழிக்கப்பட மாட்டாது; இந்தி மொழி, உங்கள் தாய்மொழிக்கென உள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளாது; இந்தி, அகில - இந்திய உறவுக்காக, அகில - இந்திய ஆட்சியின் வசதிக்காக, அகில - இந்திய அலுவலகங்களுக்குத் துணையாக, இருக்கிறது, வேறொன்றுமில்லை; மிரண்டுவிட வேண்டாம்; வெகுண்டு எழவேண்டாம்'' என்று கூறுகின்றனர்; அதுபோது, பாஞ்சாலத் தாராகட்டும், மராட்டியராகட்டும், வங்கத்தாராகட்டும், அந்த வாதம் சரியா, என்பதுபற்றித்தான் ஆராய்கின்றனரேயன்றி, போதுமான பாதுகாப்பு தமது ராஜ்ய மொழிகளுக்கு உள்ளனவா என்றுதான் கேட்கின்றனரேயன்றி, அகில - இந்திய அலுவலகங்களிலே, இந்தி பேசாதார்களுக்கு ஊறு விளைவிக்கப்படுமா என்று உசாவுகின்றனரேயன்றி, எமக்கு ஏன் அகில இந்திய ஆட்சி? என்று கேட்கிறார்களில்லை!!

தமிழர், மட்டுமே கேட்கிறோம், அதனை!

தேவையற்ற, தீதுபயக்கும், அகில - இந்திய ஆட்சி எனும் ஏற்பாட்டிலே எங்களைச் சிக்கவைத்தது ஏன்? சிக்க வைத்து விட்டு, அதிலே, இருந்திட வசதி தேவை அல்லவா? அந்த வசதியைப்பெற, இந்தி அவசியமல்லவா? என்று பேசுவது, வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் - வேண்டாம் இந்த விபரீதம்! - என்று கூறுகிறோம்.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே ஏற்றம் பெற்றது, எமது மொழி! அம்மொழி போதும் எமக்கு, எமது அரசுக்கு! எனினும், தமிழர், தரணி எங்கணும் தொடர்பு கொண்டிட அறிவு திரட்டிட, வாணிபம் நடாத்திட, உறுதுணையாக, தமிழுடன் உலகப் பொது மொழியாம் ஆங்கிலம் போதும்! என்று உரைக்கிறோம்.

தொல்காப்பியம் முதற்கொண்டு, தூதுவரை உள்ள இலக்கியச் செல்வம், தமிழில் உளது!

இனி, ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது.

பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், - காணலாம் ஆங்கில மொழி மூலம்!

கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் - போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம், நெறிகளில் நேர்த்தி பெறலாம், ஆங்கில மொழியின் துணையால்.

உமார்கயாம் பாடலின் இனிமை, டாண்டே கவிதையின் கெம்பீரம், மில்டன் கவிதை காட்டிடும் உருக்கம், ஷெல்லி தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம், ஆங்கில மொழியின் அருந்துணைகொண்டு.

ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம், ஆங்கில மொழியின் துணைகொண்டு.

செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா - எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும்.

ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட், ஜோலா, டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பெர்ல்பக் - என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!

மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட, அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை - ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம்.

அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் "விஜயம்' வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது.

நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன். ஆங்கிலத்தின் துணையுடன்

அக்ராவில் நடமாடலாம், ஆக்ராவிலும் உரையாடலாம், பீகிங்கில் பேசலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும், வாμங்டனானாலும் டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்!

தொல்லையை நீக்கிக்கொள்ளப் பயன்படவில்லை. எனினும், சென்ற திங்கள் நேரு பண்டிதர், சீனத்துப் பிரதமர் சூயென் - லாயுடன் உரையாட, ஆங்கிலம் உதவி செய்தது! பிரிட்டிஷ் மகாராணியுடனும், டாக்டர் நிக்ருமாவுடனும், துங்கு ரஹிமானுடனும் ஆங்கிலத்தில்தான் பேசினார். பழைய மாணவரே வருக! - என்று அவரை அவர் படித்த கல்லூரியில், ஆங்கில மொழியில்தான், இன்றைய மாணவரும் ஆசிரியரும், வரவேற்று உபசரித்தனர்.

அவர், தம்முடைய பேரப்பிள்ளைகளுடன் பேசுவதானாலும் ஆங்கிலம்தான் - ஏனெனில், அவர்கள், "ஐரோப்பிய நாடு' சென்று, கல்வி பயின்ற வாய்ப்பினர்!

நிலை இங்ஙனமிருக்க, இந்தியை, நேரு துரைத்தனத்தார், ஏன் தூக்கித் தலைமீதுவைத்து சுமந்திடச் சொல்கின்றனர்? அகில இந்தியா எனும், ஏகாதிபத்தியத்துக்கு அது முத்திரை மொழி! அந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களெல்லாம் டில்லியின் அடிமைகள் என்பது பொருள். அதற்காகவே இந்தியை ஏற்றுக்கொண்டாட வேண்டும் என்கின்றனர்.

எனவே, இந்தி மொழியைப் புகுத்துவதற்கு என்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது பற்றி, மற்றவர் கவனம் செலுத்தி, முறைகளை மாற்றவோ, கடுமையைக் குறைக்கவோ, வாதாடு கிறார்கள் - அவர்களுக்கு அதுபோதும் - ஆனால் நாமோ, இந்தி மொழியை, எந்த நோக்கத்துக்காகப் புகுத்துகிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்கவேண்டியவர்களாகிறோம் - அந்த நோக்கத்தின் முழுப்பொருளையும், நமது மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்தாக வேண்டிய பணியினைச் செய்யவேண்டிய வர்களாகிறோம் - அந்த நோக்கத்தை எதிர்த்துப் போரிட்டு இந்தியைக் கருவியாகக் கொண்டு, தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்று முனைந்து நிற்கும் டில்- ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துத், தாயக விடுதலைக்காக, தனி அரசு அமைப்புக்காகப் போராட வேண்டியவர்களாகிறோம்.

தெரிகிறதா, தம்பி! நம்முன் உள்ள பணியின் தன்மையும் கடுமையும்! தெரிந்து செயலாற்ற வேண்டும்!

கிளர்ச்சியில், இரத்தம் சிந்த, சிறைப்பட, உயிரிழக்க, உடைமை இழக்க, அச்சப்பட்டுக்கொண்டு ஓடி ஒளிந்திடும் இடுப்பொடிந்தவர்கள், நம்மிடம் இல்லை.

நமது தாய்மார்களேகூட, பத்தாண்டுகளுக்கு முன்பு, "மகன்...' என்று விம்மிவிம்மித் துவக்கி, "சிறையில்!' என்று முடித்து, கண்களைத் துடைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தனர்; இப்போது, "என் மகன்கூடத்தான், எதிர்ப்பில் ஈடுபட்டான்; சிறை புகுந்தான்!'' என்று பெருமிதத்துடன் கூறத்தக்க, நல்ல மனப்பக்குவம் பெற்றுவிட்டுள்ளனர்.

அதேபோது, இந்தியைப் புகுத்தி, நம்மை இழிநிலைக்கு இழுத்துச் செல்லும், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக உள்ள காங்கிரஸ் அமைச்சர்களோ, "இவர்கள் எதிர்க்கிறார்கள்; கிளர்ச்சி நடத்துகிறார்கள்; ஜெயிலுக்குப் போகிறார்கள்; ஆனால், பொதுமக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்; எமக்கே ஓட் அளிக்கிறார்கள்; எனவே கிளர்ச்சிக்காரர்களுக்கு உண்மையான பொது மக்கள் ஆதரவு கிடையாது'' என்று பொய்யுரை பேசி, எண்ணிக்கை பலத்தை மட்டுமே ஜனநாயகம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வெளியார்களை, நம்ப வைக்க முயல்வர்.

இந்த "இடுக்கி'யையும், நாம் அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை.

ஆனால், நமது கழகம் இன்று வளர்ந்துள்ள நிலை, எதற்கும் துணியலாம் என்ற எண்ணத்தைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது.

இதுநாள் வரையிலும், உணராது இருந்து வந்தவர்களும் கூட, இன்று, இந்தி மொழிப் பிரச்சினை, வெறும் மொழிப் பிரச்சினை அல்ல, நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்படும் வழிமுறை அல்ல: ஒரு புதிய ஏகாதிபத்தியம் நீட்டிடும் சூட்டுக்கோல்! இவரெல்லாம் எமது அடிமைகள்! நிரந்தர அடிமைகள் என்று உலகுக்கு காட்ட, சூடிடத் துடிக்கிறார்கள் - என்பதனை உணர்ந்து, உள்ளம் வெதும்பிக்கொண்டுள்ளனர்.

"இந்தி மொழி படித்தால்தான், அகில இந்திய அரசியலில், ஆட்சி இடத்தில், நிர்வாக அலுவலகங்களில், உலாவ, உறவாட, உரிமை பெற முடியும்'' என்று இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் செப்புகின்றனர்.

ஆப்பிரிக்காவிலே ஆணவ அரசு நடாத்தும் வெள்ளையன், கருப்பர் எங்கு நடமாடவேண்டுமென்றாலும், வெள்ளை அரசு தரும் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிறான். அந்தச் சீட்டு இல்லை என்றால், போலீஸ் பிடிக்கிறது, சிறைக்கு இழுக்கிறது, மறுத்தால் சுடுகிறது.

ஆடவர் மட்டுமல்ல தம்பி! பெண்களும்கூட, அந்த அனுமதிச் சீட்டுகளை, அடிமை முறிச்சீட்டுகளைக் கிழித்து எறிந்தனர், கொளுத்தினர், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டனர்.

அங்கு வெள்ளை அரசு, கருப்பருக்கு அனுமதிச் சீட்டு முறை வைத்திருக்கிறது; இங்கு காங்கிரஸ் ஏகாதிபத்தியம் "இந்தி' எனும் முத்திரை பொறித்துக் கொண்டால்தான், அகில இந்தியாவில், உலவலாம், உறவாடலாம், வசதி பெறலாம், - பிழைத்துப் போகலாம் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்யச் சொல்கிறாய்? ஏற்கமாட்டாய், அடிமை முத்திரையை என்பதை நான் அறிவேன்; நாடு அறிய வேண்டுமே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மிகச் சிலர், மொழிக்காகப் போராடும் துணிவினர்! அவர்கள் போராட்டமும் மிகச் சில நாட்களே நடந்திடும்! - என்று உண்மையாகவே, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் நம்பிக் கொண்டுள்ளனர்.

ஒருவர் இருவர்தான் உளர், என்றாலும் பரவாயில்லை, முயற்சி திருவினையாக்கும், சிறு பொறி பெரு நெருப்பாகும் என்ற மொழிகளை, நாடு அறியும்.

நாம், முறை கண்டறிந்து, அறப்போர் துவக்கினால், நாடு அறிந்து, கிளர்ந்து எழும்.

நாள்தோறும் நாம் காணும் மக்கள் கூட்டம், இதை உறுதிப்படுத்துகிறது.

துவக்கிட நாம், என்றால் தொடர்ந்து நடத்திட நாட்டவர் உளர் என்ற நிலை ஏற்படத் தக்கவிதமாக, சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

"ஐயனே! ஒரு துளி தண்ணீர், என்றென்றும் உலர்ந்து போகாதிருக்க என்ன வழி?'' என்று கேட்ட சீடனுக்கு, புத்தர் "அந்த ஒரு துளி தண்ணீர், கடலில் கலந்துவிட வேண்டும்'' என்று சொன்னார்.

தேர்த-லே, நமக்குக் கிடைத்திடும் வெற்றிகள் எண்ணிக்கையிலே மிகக் குறைவானதாக இருப்பதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள், "இவர்கள் என்ன செய்ய வல்லவர்கள்? சிறு தண்ணீர்த் துளிகள்போல உலர்ந்து போவர்! ஒடுங்கிப்போவர்!'' என்று கூறித் துணிவு பெறுகின்றனர்.

எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ, அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா?

நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் - நிச்சயமாக.

அண்ணன்,

22-5-60