அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனவான் காற்று வாங்குகிறார்

இடம், நேரம், நிலை அறிந்து பேசுக
மமதை மதியைக் கெடுத்த கதை
பேச்சின் தன்மை பற்றிய விளக்கங்கள்

தம்பி,

"ஜெர்மன் மருந்தாமா! அற்புதமானது என்கிறாரா, டாக்டர்! இதைக் கொடுத்தால் ஆபத்துப் போய்விடும், ஆசாமி பிழைத்துக் கொள்வான் என்று சொன்னாரா! சொல்லுவார்! சொல்லுவார்! சொல்லுவார். கோடி வீட்டுக் குமரப்பனுக்கு உயிர் போய்க் கொண்டு இருக்கும்போது, இதே போலத்தான் ஒரு மருந்தைக் காட்டி, அது அற்புதமான மருந்து, இனி ஆபத்து இல்லை என்று அடித்துப் பேசினார், இவரைவிடப் பெரிய டாக்டர்! ஜெர்மன் மருந்தாவது, ஜப்பான் மருந்தாவது இனி எந்த மருந்தும் வேலை செய்யாது; நள்ளிரவு வரையிலாவது தள்ளுமா என்பது கூடச் சந்தேகம், வீணாக ஏன் அந்த நாட்டு மருந்து, இந்த டாக்டர் சொன்னது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்!''

***

"அழாதே தம்பி! அழாதே! இப்போது என்ன நடந்து விட்டது என்று இப்படிப் புலம்புகிறாய்! டாக்டர் இப்போது கொடுத்தனுப்பியுள்ள மருந்து, ஜெர்மன் மருந்தாம், இது அற்புதமான மருந்தாம், பலர் சொல்லி இருக்கிறார்கள்; இந்த மருந்து ஒருவேளை சாப்பிட்டால் உன் அப்பாவின் மயக்கம் தெளிந்துவிடும்; கண் விழித்துப் பார்த்து உன்னிடம் பேசுவார்; பயப்படாதே. பக்கத்துத் தெரு பார்வதிக்குப் பல்லெல்லாம் கிட்டி விட்டது, பார்த்தவர்களெல்லாம் இனிப் பிழைக்காது என்று சொன்னார்கள்; ஆனால், இதே டாக்டர், இதே விதமான ஜெர்மன் மருந்து கொடுத்தார்; ஒரே மணி நேரத்தில் பார்வதி எழுந்து உட்கார்ந்துவிட்டாள்; தெரியுமா! நான் கண்ணால் பார்த்ததைச் சொல்லுகிறேன். வீணாக ஏன் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறாய். நல்ல மருந்து கிடைத்து விட்டது. இனித் துளியும் பயம் வேண்டாம்.''

***

தம்பி! முதல் பேச்சு இருக்கிறதே அதுதான் உண்மை. எந்த மருந்தும் இனி வேலை செய்ய முடியாத கட்டம், சந்தேகமில்லை ஜெர்மன் மருந்தோ ஜப்பான் மருந்தோ எல்லாம் வீணான ஒரு நம்பிக்கையை மற்றவர்கள் பெற்றிட உதவிடும்; அவ்வளவுதான்; ஆள் பிழைக்க மாட்டான். அதுதான் உண்மையான நிலைமை.

இரண்டாம் பேச்சு இருக்கிறதே, அது உண்மை அல்ல! சொல்லுபவருக்கே தெரியும். நம்பிக்கை இல்லை, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை. அந்த உண்மையை மறைத்துவிடுகிறார். பிழைத்துக் கொள்வார், புது மருந்து அற்புதமானது என்று பொய் பேசுகிறார். அழுது கிடப்பவர்களைத் தேற்றுகிறார். அவர்களின் வேதனையை மாற்றிட முயல்கிறார்.

***

எப்படியாவது பிழைத்துக் கொள்ள மாட்டாரா என்று குடும்பத்தார் குமுறிக் கொண்டிருக்கும்போது எதுபற்றியும் கண்டிப்புடன், ஒளிவு மறைவு இல்லாமல் பேசிடும் பழக்கமுள்ள ஒருவர், அதுபோலப் பேசினால், பாராட்டவா செய்வார்கள்! ஒளிவுமறைவின்றிப் பேசுபவர், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு மனத்திற்குச் சரியென்று பட்டதை மறைத்துக் கொள்ளாதவர் என்பதற்காக அவரைப் பலர் பாராட்டியிருக்கக் கூடும்; முன்பு, ஆனால் இப்போது இந்த நிலையில் இந்த இடத்தில்? எவ்வளவு விளக்கமாகப் பேசுகிறார். இது அல்லவா அறிவாளிக்கு அழகு; துளியும் நெளிகிறாரா வளைகிறாரா! இல்லையே! டாக்டர் பேச்சை நம்பாதே! மருந்து இனி வேலை செய்யாது என்ற உண்மையைத் துளியும் மறைக்காமல் பேசுகிறார்; பொய்பேச, மயக்கமொழி பேச மறுக்கிறார்; அவர் எப்போதும் அப்படித்தான்; வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற விதமான போக்கினர்! - என்று பலரும் பாராட்டவா செய்வார்கள்?

"இவனும் ஒரு மனிதனா! துளியாவது இடம் நேரம் தெரிகிறதா இவனுக்கு. குடும்பம் "கோ'வெனக் கதறுகிறது; இவன் இந்த நேரமாகப் பார்த்து, இவ்விதம் பேசுகிறானே; ஆணவம்! இரக்கமற்ற நெஞ்சம்!'' - என்றெல்லாம் பலரும் பதறிப் பேசுவார்கள்; ஏசுவார்கள்.

ஓடிப்போய் டாக்டரைக் கேட்டால், "கண்டிப்பாகப் பேசுபவர்' சொன்னதுதான் உண்மை என்று கூறுவார்.

"நான் உண்மையைச் சொல்லுகிறேன். பொய் சொல்ல மாட்டேன். வீண் நம்பிக்கையூட்டமாட்டேன்'' என்று கண்டிப்புப் பேர்வழியேகூட வாதாடிடக்கூடும். ஆனால், மற்றவர்கள் சமாதானம் அடையமாட்டார்கள்; அந்த வாதத்தில் நியாயம் இருப்பதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; அந்தப் பேச்சிலே பண்பு இருப்பதாகக் கருதமாட்டார்கள். இந்தக் கண்டிப்புப் பேச்சு, மற்றவர்கள் விஷயமாகத்தான்; இவர் வீட்டிலே இப்படி ஒரு நிலைமை என்றால், வேறு யாராவது இந்த விதமான கண்டிப்புப் பேச்சுப் பேசினால் இதே ஆசாமி "ஆமாம்' என்றா ஒப்புக் கொள்ளுவார்; ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதிப்பார், ஆத்திரத்துடன்! மற்றவர்கள் விஷயம் என்கிறபோது. "மனத்திற் பட்டதைப் பேசுகிறார்; கேட்பவர்களின் உள்ளம் எப்படி வேதனைப்படும் என்பது பற்றித் துளியும் கவலைப் படாமல். அறிவு இருந்துவிட்டால் போதுமா; அதை எப்படி எப்படிப் பண்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் இருக்க வேண்டாமா என்றுதான் கூறிக் கண்டிப்பார்கள்.

"காயமே இது பொய்யடா! - நல்ல
காற்றடைத்த பையடா!''

- இது பொய்யல்ல; மெய், யாரிடமும் இதுபற்றிய விளக்கம் சொன்னாலும் மறுக்கமாட்டார்கள். பலர், தமக்கே ஒருவிதமான சலிப்பு ஏற்படுகிறபோது இதை முணு முணுத்திருப்பார்கள். ஆனால், வெண்கலக் குரலில், இதைப் பாடுகிறார், ஒருவர்; பலராலும் பாராட்டப்பட்டவர் இந்தப் பாடலைத் தனிச் சுவையுடன் பாடியதற்காக மெச்சி ஊரார் தங்கப் பதக்கம் கூடக் கொடுத்திருக்கிறார்கள் இவருக்கு! ஆயினும், அன்று அவர்

காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா!

என்று பாடத் தொடங்கியதும் மூலைக்கு மூலை கூச்சல்! மூடு வாயை! பாடாதே! மூடு வாயை!! என்று, சிலர் அடிக்கவே கிளம்புகிறார்கள் ஏன்? அந்தப் பாடல் தவறு என்பதால் அல்ல, பொருள் பொய் என்பதாலே அல்ல; முறையாகப் பாடவில்லை என்பதாலே அல்ல; எந்தப் பாட்டுக்குப் பதக்கம் வாங்கினாரோ அதே பாட்டுதான், அதே பாகவதர்தான்! ஆனாலும் பதறுகிறார்கள், பாவி என்கிறார்கள், அடிக்கவே கிளம்புகிறார்கள். ஏன்? பாடிய இடம் ஒரு திருமண வீடு! தாலி கட்டும் வேளை! ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்! பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள். அத்தகைய இடத்திலே காயமே இது பொய்யடா! என்று பாடினால், பாடியவர் படாதபாடு படத்தான் வேண்டிவரும்; பாடலிலே உள்ள பொருள் என்பதாலே அல்ல; இடமும் நேரமும் அந்தப் பாடலுக்கு ஏற்றது அல்ல என்பதால்.

***

1962 வருஷத்து மாடல்
பிளைமவுத்.
நேவிபுளூ - நீல நிறம்!
எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் ஏராளம்!
உள்ளே அழகான ரேடியோ!
சீட்டுகளுக்குப் பிளாஸ்டிக் கவர்.
பின்சீட்டில், "ஆறு ஆப்பிள், மூன்று சாத்துக்குடி,
"சூட் கேஸ்' பிரிட்டிஷ் மாடல்
அமெரிக்க மாடல் தெர்மாஸ்,
ஒரு ஜப்பான் காமிரா!
மோட்டார் விலை முப்பதாயிரம் ரூபாய்,
சேட் ரங்கலாலிடம் வாங்கினார்கள்.

மேலும் விவரங்களைத் தர முயல்கிறார் நிருபர், தமது குறிப்புப் புத்தகத்தைப் பார்த்தபடி. இவ்வளவு விவரமான தகவலைத் தருகிறாரே என்பதற்காக ஆசிரியர் பாராட்டத்தானே வேண்டும்? இல்லை! கோபிக்கிறார்; மேஜையை ஓங்கி அடித்துக் கொண்டு கூறுகிறார்,

"உம்மை யாரய்யா இந்த விவரமெல்லாம் கேட்டது? எந்த விதமான காமிரா இருந்தது? எந்த ஊர் தெர்மாஸ்? இவைகளா இப்போது எனக்குத் தேவை. விபத்து எப்படி நடந்தது? யாராருக்கு ஆபத்து? போலீசார் யாரையாவது கைது செய்திருக்கிறார்களா! என்ற விவரமல்லவா எனக்கு வேண்டும்; ஊராருக்கும் அவைதானே முக்கியம் - அது பற்றி ஒரு வார்த்தை பேசாமல், மோட்டாரில் ஆப்பிள் இருந்தது என்று கணக்குக் கொடுக்கிறீரே! நான் என்ன செய்ய? தலைதலை என்று அடித்துக் கொண்டு எங்காவது ஒடித் தொலைக்க வேண்டியதுதான். உம்மோடு மாரடிக்க நம்மாலே ஆகாது என்று.

காரணம் புரிகிறதல்லவா, தம்பி! கடற்கரைப் பக்கம் நேரிட்டுவிட்ட மோட்டார் விபத்து பற்றி நேரிலே போய் பார்த்து வந்து விவரம் கூறும்படி நிருபரை அனுப்பி இருக்கிறார் ஆசிரியர். விவரம் ஒன்றுவிடாமல் வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அதை அப்படியே நிறைவேற்றத் திட்டமிட்டதன் விளைவு, மோட்டாரில் அரைபட்டு உயிரிழந்த சிறுவன் ஆறு வயதுள்ளவன், மோட்டார் டிரைவர் கைது செய்யப்பட்டான் என்ற விவரத்தைத்தானே தர வேண்டும் என்று கருதாமல், மோட்டாருக்குள்ளே இருந்த பழத்தின் கணக்கும் விட்டு விடக் கூடாது என்று குறிப்பு எடுத்துவந்த வேதனை தரும் வேடிக்கை.

விவரம் தேவை, ஆனால் கிடைத்திடும் தகவல்களில் எவையெவை முக்கியமானவை, மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியவை என்ற பாகுபாடு வேண்டுமல்லவா! அந்தப் பக்குவம் இல்லாமல் நான் கூறியது அவ்வளவும் உண்மை; சந்தேகமிருந்தால் போய் எண்ணிப் பாருங்கள் ஆறே ஆறு ஆப்பிள்தான் இருக்கிறது என்று பேசி, உண்மைக்கு இந்த ஆசிரியர் மதிப்பளிக்க மறுக்கிறார் என்று குறை கூறிக் கொள்வதா! உலகம் ஏற்றுக் கொள்ளாது.

***

இடமறியாது பேசுவது போலவே, பாகுபாடு அறியாமற் பேசுவதும், எதிர்பாராத இக்கட்டுகளை மூட்டிவிடுவதாகிவிடும்.

அதனால், உண்மையைப் பேசக்கூடாது; இடத்திற்குத் தக்கபடி, வேளைக்குத் தக்கபடி, ஆளுக்குத் தகுந்தபடி, உண்மையை மறைத்தும் குறைத்தும் திரித்தும் பேச வேண்டும் என்பதல்ல பொருள்.

உண்மையைக் கூறுவதால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடும் என்ற நிலை இருப்பினும் அஞ்சாமல், உண்மையைக் கூற வேண்டும்.

உண்மையைக் கூறுவதால் தன் உயிருக்கு அல்ல, மற்றவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றாலோ, மற்றவருடைய மனம் வேதனைப்படும் என்றாலோ, உண்மையைக் கூறாமலிருப்பது, பக்குவத்தில் ஒன்றாகும்.

தம்பி! நோயாளி துடிப்பதையும், அதைக் கண்டு குடும்பத்தார் குமுறுவதையும் பார்த்தும் டாக்டர் கொடுக்கும் புதிய மருந்தினால் பயன் இல்லை, ஆள் பிழைக்கப் போவ தில்லை என்ற "உண்மை'யைக் கூறினானே "கண்டிப்பு'ப் பேர்வழி அவன் அந்த உண்மையைக் கூறியதாலே யாருக்கு என்ன பயன் விளைந்தது? அவ்விதம் பேசாதிருந்தால், யாருக்கு என்ன கெடுதல் ஏற்பட்டுவிடும்? ஒன்றுமில்லையல்லவா! ஆனால் "பச்சை'யாகப் பேசியதால், ஏற்கனவே குமுறிக் கிடந்தவர்கள மேலும் பதறுகிறார்கள்; வேதனை அடைகிறார்கள். இந்த வேதனையைத் தான் அவனுடைய "பேச்சு' மூட்டிவிட்டதேயன்றி, வேறென்ன செய்தது! ஒன்றுமில்லை.

அந்த இடத்திலே அவன் பக்குவமாகப் பேசியிருக்க வேண்டும் அல்லவா?

நீதியை நிலைநாட்ட, பிறர் நன்மை பெற, ஊர் வாழ, உரிமை காத்திட, இவை போன்றவைகளுக்காகப் பணியாற்றிடும் போது, உண்மை பேச வேண்டும்; அவ்விதம் பேசுவதால் தன் உயிருக்கே ஆபத்து வந்திடும் என்றாலும் கவலையற்று, கலங்காமல்!

இடமும் நேரமும் தெரியாமல் சிலர் பக்குவமற்றுப் பேசுவது போலவே, தனக்கேற்ற இடம், தனக்குச் சாதகமான நேரம் கிடைத்ததைப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் தமது ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும், பிறரை இன்னலுக்கும் இழிவுக்கும் ஆளாக்கும் நோக்கத்துடனும், பேசுவது காண்கிறோம்.

முன்னது மடைமையிலே சேருவது; இஃது கொடுமையிலே சேர்க்கத்தக்கது.

நோயாளியிடமே செல்வோம், தம்பி! டாக்டர் சொன்ன மருந்து வாங்கி வர வேண்டும். யாரும் கிடைக்கவில்லை; குடும்பத்தார் துடிக்கிறார்கள், எதிர் வீட்டு இளைஞன் தெரிகிறான்; அவனிடம் கெஞ்சுகிறார்கள், மருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி,

"இப்பத்தான் கண்ணுக்குத் தெரியுதா என்னை! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். அந்தப் புத்தி கூட இல்லாமல் நான், மணி பார்க்க வீட்டுக்குள்ளே வருகிற போதெல்லாம், இங்கே என்ன வேலை! மணிபார்த்து எந்த ஆபீசுக்குப் போகப் போகிறாய்! போ! போ! கடிகாரம் ஓடவில்லை! என்று ஏசி அனுப்புவீர்களே, கவனமிருக்கிறதா! இப்போது நான்தான் உதவவேண்டி வருகிறது! போக முடியாது என்றால் என்ன செய்து விடுவீர்கள்! காலிலே கூட விழுவீர்கள்!! தெரியுமே, எனக்கு.''

என்று அந்த இளைஞன் பேசினால், அதுதான் கொடுமை என்பது.

நோயாளியின் நிலைமை மோசமாகிவிட்டதை அறிந்து, இதுவரை பார்த்த டாக்டரால் பயனில்லை என்று உணர்ந்து புதிய டாக்டரை அழைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்; அந்தப் புதிய டாக்டர் இதுதான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்டு,

யாரு? எல்லப்பனா! ஏது இந்தப் பக்கம்? உனக்குத்தான் வேறு எத்தனையோ டாக்டர்கள் உண்டே! என்னிடம் வருவானேன். போ! போ! உயிர் போகிற நேரம் என் கவனம் வருகிறது இல்லையா! நான் என்ன வேலையற்றவனா, எவன் எந்த நேரத்தில் வந்து கூப்பிட்டாலும் வந்துவிடுவேன் என்ற எண்ணமோ?

என்றெல்லாம் பேசினால் நிலைமையைத் தனக்குச் சாதகமான தாக்கிக் கொண்டு, கொடுமையைக் கொட்டுகிறார் என்பது பொருள்.

***

"ஐயா, எப்பவும் மோட்டார் பஸ்ஸிலேதானே போற பழக்கம். நாமாகப் பார்த்து, கொடுப்பதைக் கொடுங்க, ஏறுங்க வண்டியிலேன்னு கூப்பிட்டாக் கூட, பொழுது விடிந்துவிடுமே உன் வண்டியிலே ஏறினா என்று பேசறவராச்சே. இப்ப? பஸ் இல்லை! நம்ம வண்டியை விட்டா வேறே வழி இல்லை. கூப்பிட வர்ரீங்க, இல்லையா! மூணு ரூபா சம்மதமானா, வாங்க. இல்லையான காத்துக்கிட்டு இருங்க; நாளைக்கு வருவான் பஸ்ஸுக்காரன்''

என்று பேசிடும் வண்டிக்காரர்களைப் பார்க்கிறோமல்லவா? இந்த விதமான மனப்பான்மையினர், மேல்மட்டத்தில் நிரம்ப! அடிமட்டத்தினர்' அஞ்சுவார்கள், இந்தப் போக்கினைக் கொள்ள! மேல்மட்டத்தினரோ, கூசாமல், இந்தக் கொடுமையுள்ள போக்கினை மேற்கொள்வர்; அதிலே ஒரு குதூகலமும் காண்பர்!

"மேல்மட்டத்தினரில்' சிலர் தம்மிடம் மதிப்பு வைத்துள்ள வர்களை, குத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் விதமாகப் பேசுவதில் தனிச்சுவை காண்பவர்கள்.

"நான் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளக் கூடாது; அப்படிக் கோபித்துக் கொண்டாலும் நான் கவலைப்பட போவதில்லை; சொல்ல வேண்டியதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்? உன் அண்ணன் ஒரு பெரிய முட்டாள். ஆமாம்! காரணத்தோடுதான் சொல்கிறேன். உன்னைச் சொன்னேனா, முட்டாள் என்று. எனக்கு அப்படித் தோன்றவில்லை; ஆகவே சொல்ல வில்லை, ஆனால், உன் அண்ணனைப் பற்றி என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.''

இவ்விதம் "மேல்மட்டம்'' பேசுவது கேட்டு, அவரிடம் உள்ளபடி மதிப்பு வைத்துள்ள இளைஞன் என்ன நினைத்துக் கொள்வான், சங்கடமான நிலைமை; ஆனால், இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்கி மகிழ்வதில் ஒரு தனிச் சுவை கொள்கிறார்கள் மேல்மட்டத்தினர்; என்ன செய்வது?

மேலதிகாரி, தன்னை மெச்சிடுபவர் எதிரில், தன்னிடம் வேலை பார்ப்பவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசி மகிழ்வதைக் கண்டதுண்டா, தம்பி?

"இவன் சார்! எட்டு வருஷமாக இங்கு வேலை பார்க்கிறான். சம்பளம் நூற்று ஐம்பது. பி.ஏ. படித்தவனாம் ஒரு நாளாகிலும் ஒரு பக்கமாகிலும் பிழையில்லாமல் எழுதுவானா என்று நான் தவம் கிடக்கிறேன், இதுவரையில் பிழையில்லாத ஒரு பக்கத்தைக் கூடப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆசை மட்டும் இருக்கிறது கொள்ளை கொள்ளையாக! ஆபீஸ் மானேஜராக ஏன் வரக் கூடாது என்ற ஆசை - என்னவோ பழமொழி சொல்லுவார்களே, ஆசை இருக்கு தாசில் பார்க்க. . . என்னது சார் அந்தப் பழமொழி. . .''

என்று சொல்லி, ஏசல் நிரம்பிய பகுதியை வந்தவரைக் கொண்டே சொல்ல வைப்பார்,

ஆசை இருக்குது தாசில் பார்க்க. . .

என்று பழமொழியில் பாதி சொல்லி மற்றப் பாதியைச் சொல்லச் சொல்லும்போது எவ்வளவு நேரம் தயக்கம் காட்டிக் கொண்டிருக்க முடியும். வலியுறுத்தல் வளர வளர,

"ஆசை இருக்குது தாசில் பார்க்க், அம்சம் இருக்குது கழுதை மேய்க்க''

என்று பழமொழியை, வந்தவர் சொல்லித் தீர வேண்டி வருகிறது.

தனியாகக்கூப்பிட்டு நாலு வார்த்தை கண்டிக்கட்டும். கேட்டுக் கொள்ளலாம்; வேறொருவர் எதிரில் இப்படியா அவமானப்படுத்துவது என்று அந்த B.A வருத்தப்படுகிறான், வருத்தத்தை யார் மீது காட்ட முடியும்! மேலதிகாரி மீதா!! முடியாதே.

அவனால் "முடியாது' என்பது தெரிந்து, மேலதிகாரி வாட்டுகிறார்; கவ்விக் கொண்ட எலியைப் பூனை வாட்டுகிறதே அதுபோல!

***

இடம், நேரம், நிலை இவற்றினைச் சாதகமாக்கிக் கொண்டு, இழிவுபடுத்தும் முறையுலும், சங்கடம் ஏறபடுத்தும் விதத்திலும் பேசுவது, இடமறியாது, நிலை புரியாது, நேரமறியாது பேசுவது போலவே, கேடு நிரம்பியது; ஆனால், நாட்டினில் இந்த விதமான பேச்சுகளை நிரம்பக் கேட்டுத் தீர வேண்டி இருக்கிறது.

வறுமையால் கொட்டப்பட்ட நிலையில், மனைவியிடம் ஆத்திரத்தைக் காட்டுகிறான் கணவன், அந்த ஆத்திரம் அவள் கன்னத்தை வீங்கக் செய்து விடுகிறது; தாய் வீடு சென்று விடுகிறாள். கணவன் கோப மிகுதியால்,

"அந்தக் கழுதை எங்கே ஓடிப் போனால் எனக்கு என்ன!''

என்று கூவுகிறான். நடைபெற்றது இவ்வளவுதான். ஆனால், அவனுடைய "எஜமானன்' அந்த நிலை காரணமாக, நாலு பேர் எதிரில் கேட்கிறார் அவனை,

"என்னடா சடையா! உன் பெண்ஜாதியா ஒடிப்போயிட்டா''

என்ற. என்ன செய்வான் இந்தப் பேச்சைக் கேட்டு?

"ஆத்தா வீட்டுக்கு. . .''

என்று கூறுகிறான்; அங்கே போய்ப் பார்த்தாயா? என்று குறுக்குக் கேள்வி கேட்கிறார் எஜமானன்! ஆத்திரம் பொங்கி வழிகிறது அவனுக்கு. ஆனால் நிலைமை! ஏதாகிலும் எருது, எருமை அந்தப் பக்கம் வந்தால், அதன்மீது காட்டிக் கொள்ளலாம் ஆத்திரத்தை - எஜமானரிடம் காட்ட முடியுமா! துடிக்கிறான், அவர் சிரிக்கிறார்.

***

கிடைத்துவிட்ட அல்லது பிடித்துக் கொண்ட நிலை காரணமாகச் சிலருக்குப் பேச்சு தன்னாலே தடித்துவிடுவதுண்டு. நிலை என்பது, பணம், பதவி எனும் எதன் காரணத்தாலும் வரலாம்.

கதை ஒன்று சொல்லுவார்கள், கையிலே நாலு காசு சேர்த்ததும், தன்னாலே "திமிரான' பேச்சு வந்து சேர்ந்துவிடும் என்பதை விளக்கிட.

பட்டிக்காட்டான் ஒருவன் சந்தையிலே மாடுவிற்று இரு நூறு ரூபாய் பெற்றான்; பெற்றதை மடியினில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, சாவடியிலே படுத்தான், உறக்கம் தொட்டிழுக்கும் நிலை. அந்தப் பக்கத்தில் களவு, வழிப்பறி நடத்துபவர் நாலைந்துபேர், சாவடிக்குள் நுழைந்தனர் பதுங்கிக் கொள்ள. இருட்டு; உள்ளே ஆள் படுத்துக் கிடப்பது தெரியாமல், ஒருவன் பட்டிக்காட்டான் காலை இலேசாக மிதித்துவிட்டான்; இடறி விழ இருந்தவன் சமாளித்துக் கொண்டு, உற்றுப்பார்க்க, படுத்திருப்பது ஒரு ஆள் என்று தெரிந்ததும் கேலியாக, கட்டை போலக் கிடக்கிறான் பயல்! என்றான், படுத்துக் கிடந்தவன், சும்மா இருப்பானா; மடியில் பணம் இருக்கிறதே இரண்டு நுறு!! அதனால் என்றுமில்லாத ஒரு இறுமாப்பு. அதன் காரணமாக, "கட்டையா! உங்க வீட்டுக் கட்டை மடியிலே இருநூறு ரூபாய் முடிந்து வைத்துக் கொண்டிருக்குமோ?'' என்று கேட்டான். உயர்தரமான நகைச்சுவை என்ற எண்ணம், மடியில் இருநூறு! என்று சொன்னதும், வழிப்பறிக்காரன் சும்மா இருப்பானா? எடடா! என்றான் ஒருவன், போடடா! என்றான் இன்னொருவன், மற்றொருவன் மடியில் இருந்ததைப் பறித்துக் கொண்டான். வேறொருவன் ஏதாகிலும் கூச்சல் கிளப்பினே, தொலைத்து விடுவோம் என்று மிரட்டினான். பணத்தைப் பறி கொடுத்தவன், பயத்தால் வெடவெடத்துப் போய், உயிர் தப்பினால் போதுமென்று ஓராயிரம் கும்பிடுகள் போட்டான்! போ! என்று களவாடுபவர் உத்தரவு கொடுத்தனர், ஓடிவிட்டான், உயிர் தப்பினோம் என்று. ஓடும்போதுதான் புத்தியிற்பட்டது அவனுக்கு. மடியில் பணம் இருக்கிறது என்பதைச் சொல்லி நாமேயல்லவா சிக்கிக் கொண்டோம். ஒரு விநாடி ஆணவத்துக்கு இடம் கொடுத்ததன் பலன், பணம் பறிபோயிற்று. வாய் திறவாது இருந்திருந்தால் வந்திராதே இந்த இழப்பு, ஆபத்து என்று எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டான். காரியம் கெட்டபிறகு!! மடியிலே பணம் என்றதும் மமதைப் பேச்சு தன்னாலே வந்துவிடும் என்பதையும் மமதை மதியைக் கெடுக்கும் என்பதையும், விளக்கும் கதை.

சாவடியில் படுத்துக்கிடப்பவன் மட்டுமல்ல, அரசுக் கட்டில் ஏறிடுவோர் பலருக்கு இத்தகைய வாய்த்துடுக்கு எளிதாக ஏற்பட்டு விடுகிறது. சாவடியில் இருந்தவனுக்கு ஏற்பட்ட இன்னல் இவர்களுக்கு ஏற்படுவதில்லை; ஏனெனில், இருக்கும் இடம் அத்தனை பாதுகாப்புள்ளது, ஆனால், இறுதியில், பொதுமக்கள் விழித்தெழுந்து இத்தகையவர்களுக்குத் தக்க தண்டனை தந்துவிடுவார்கள்; தீர்ப்பு நாளன்று.

ஜனநாயக ஆட்சி முறையில் அரசுக் கட்டில், எவருக்கும் கிடைத்துவிடக்கூடும்; அவர்கள் எந்தக் காரணத்தாலாவது மக்களின் பேராதரவைப் பெற்றிட்டால்! அரசாள வாய்ப்புக் கிடைத்த பிறகு, அவர்களிலே பலருக்கு, எங்கு இருந்தோம், எங்கே வந்திருக்கிறோம்? என்ன முறையாலே வந்தோம்! என்னென்ன கூறிவிட்டு வந்திருக்கிறோம்; என்பவைகள் மறந்து போகின்றன; பழங்கதையாகி விடுகின்றன. பெரிய இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் போய்விடுகிறது. நாம் பெரிய ஆசாமி என்ற நினைப்பு மேலோங்கி விடுகிறது. உடனே, தன்னைச் சுற்றி உள்ளவை அனைத்தும் அற்பமாகத் தெரியத் தொடங்குகின்றன. தகுதிகள் யாவும் தமக்கே உண்டு என்ற தருக்கு தலைக்கு ஏறிவிடுகிறது. எடுத்தேன் கழித்தேன் என்று பேசும் போக்கு மிகுந்து விடுகிறது. பெரிய இடத்தில் உள்ளவர் பேசுகிறார் என்பதால், கேட்டுக் கொள்கிறார்கள், சகித்துக் கொள்கிறார்கள். அதைக் கண்டதும், ஆணவம் மேலும் வளருகிறது. டாக்டர்களுக்கு மருத்துவ முறை பற்றியும், பொறி இயல் துறையினருக்குக் கட்டட அமைப்புப் பற்றியும், பேராசிரியர்களுக்குக் கல்வியின் மேம்பாடு பற்றியும், தொழிலதிபர்களுக்குத் தொழிற்சாலை அமைப்பு பற்றியும் புத்தி கூற முனைந்து விடுகிறார்கள்!

ஜனநாயக முறை காரணமாக ஆட்சிப் பொறுப்பில் இடம் பெற்றுவிட்டதாலேயே, அந்த ஆட்சிக்கு உட்பட்ட நிலையில் உள்ளவர் எவர் என்றாலும், அவர்களுக்கு உள்ள தகுதிகள் திறமைகள் எவ்வளவு உயர்ந்தன என்றாலும், மதிப்பளிக்கத் தேவையில்லை என்ற எண்ணம் வளர்ந்து விடுவது, ஜனநாயகப் பயிரைக் கெடுத்திடும் களை போன்றது. கதிரை அழித்திடும் பூச்சி போன்றது. இதனால் ஜனநாயக முறை மூலம் கிடைக்க வேண்டிய பலன் வெகுவாகக் குறைகிறது, கெடுகிறது.

பதவி காரணமாக மட்டுமல்ல, பணம் காரணமாகவேகூட இந்த மனப்பான்மை வளர்ந்து விடுவதைக் காண்கிறோம். காண்பது மட்டுமல்ல, அதற்கு அடங்கிக் கிடக்கிறோம்; அடங்கிக் கிடப்பதன் மூலம் நாமே அந்த மனப்பான்மையை மேலும் வளர்த்தும் விடுகிறோம்!

கையில் காசு இல்லாதவன் அதிகம் பேசாமலிருந்தால் ஊமை உன்மத்தன்; பேசத் தெரியாததால் பணம் படைத்தோன், வாய் மூடிக்கிடந்தால், அடக்கம், பெருந்தன்மை கண்டபடி பேசமாட்டார், அளந்து பேசுவார் நிறுத்துப் பேசுவார் என்ற புகழாரம்; நாமே சூட்டிவிடுகிறோம்! களங்கமற்றுச் சிரிப்பவன், காசு இல்லாதவனானால், என்னடா இளிக்கிறாய் என்று கேட்டு விடுகிறோம்; பணம் படைத்தவனை அவ்விதம் கேட்போமா? ஐயா எப்போதும் இப்படித்தான், கலகலப்பாக இருப்பார் என்று கூடப் பாராட்டுகிறோம். கனவான், கடற்கரையில் காற்று வாங்குகிறார்! காசில்லாதவனை அதே இடத்தில் கண்டால்? கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறான்! என்கிறோமல்லவா!! பதவியில் உள்ளவர்கள் பற்றி இதே போலத்தான், பேசுகிறோம்.

இது தம்பி! ஒருவர் இருக்கும் நிலையைக் கண்டு மற்றவர்களுக்கு ஏற்பட்டுவிடும் நினைப்பும், அந்த நினைப்பின் காரணமாகக் கிளம்பும் பேச்சுமாகும். இது ஒரு சிலருக்கு மட்டும் இருந்தால் கேடு அதிகம் இல்லை. ஆனால் இது "சமூக இயல்பு' ஆகிவிட்டால், அங்கு "ஜனநாயகம்' பிழைக்காது, தழைக்காது. அதற்காகத்தான் அது குறித்துச் சொல்கிறேன் இந்த அளவு.

ஆக, நிலைமை அறியாது பேசுவது தவறு; நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு பேசுவதும் தவறு. நிலைமையைக் கண்டு அஞ்சி நடுக்குங்குரலிற் பேசுவதோ, மயங்கி மழுப்பும் குரலில் பேசுவதே, இவை யாவுமே தவறுதான்.

என்ன அண்ணா! "பேச்சு' பற்றி இத்தனைக் கூற வேண்டுமா? என்று கேட்கிறாயா, தம்பி! இன்னமும் கூற வேண்டியது இருக்கிறதே! அடுத்த கிழமை மேலும் சில கூற இருக்கிறேன்.

அண்ணன்,

31-10-65