அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கங்கா தீர்த்தம் - 1

பொருளற்ற சொல் பயனற்றுப் போகும்
சோஷியலிசம் என்பதுதான் என்ன?
காமராஜர் பேசுவது சோஷியலிசம்; குலவுவதோ முதலாளிகளிடம்!

தம்பி!

நெல்லுக்கும் பதருக்கும் உருவ அமைப்பிலே அதிக வித்தியாசம் தெரிவதில்லை; ஆனால், உழவர்கள் எளிதாக இரண்டையும் வெவ்வேறாகப் பிரித்துவிடுகிறார்கள்; ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து அல்ல; முறத்திலே கொட்டி, காற்றடிக்கும் பக்கமாக நின்று "தூற்றி' எடுப்பதன் மூலம்.

கானலுக்கும் நீருக்கும் தொலைவிலிருந்து பார்க்கும்போது வேறுபாடு தெரிவதில்லை; கானல், நீர்போலவே தோற்ற மளிக்கிறது; அருகே சென்று பார்த்தால் கானல் என்று கண்டறிந்திட முடிகிறது.

சொல்லிலேகூடப் பதரும் உண்டு, நெல்லும் உண்டு; கானலும் உண்டு, நீரும் உண்டு; கண்டறிய வேண்டும்.அதற்குக் காது மட்டும் பயன்பட்டால் போதாது, கருத்து சுறுசுறுப்பாக வேலை செய்தபடி இருக்க வேண்டும்.

நெல் விளைவிக்க எடுத்துக்கொள்ளவேண்டி வரும் முயற்சி உழைப்புப்போலவா சொல்லை விளைவித்திடத் தேவைப் படுகிறது? வெகு எளிதாக வண்டி வண்டியாக, அம்பாரம் அம்பாரமாகக் குவித்திட முடிகிறது சொல்லினை.

நெல்லுக்கும் பதருக்கும் உள்ள வேறுபாட்டினைக் கண்டறிந்து, பதரை அப்புறப்படுத்தினால் மட்டுமே, பயனுள்ள நெல்லைப் பெறமுடியும்; சொல்லுக்கும் அவ்விதமே.

பயனற்றதைச் சொல்லாதே என்கிறார் வள்ளுவர்; கேட்டனரா! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார், கேட்டனரோ? இல்லையே.

பயனற்றன பேசுவதிலேயும், தம்பி! இரு வகை உண்டு. ஒன்று தெரியாமல் பயனற்றன பேசிவிடுவது; மற்றொன்று, தெரிந்து, திட்டமிட்டு, வேண்டுமென்றே, கேட்பவர்களை ஏய்க்க என்றே பயனற்றவைகளை பயனுள்ளவைபோலத் தோற்றம் கொள்ளும்படிச் செய்து பேசி வைப்பது. முன்னது அறியாமையின் விளைவு, மற்றது கயமையின் ஒருவகை.

மற்றொன்றும் தெரிந்திருக்குமே தம்பி! சீமான் கொடுக்கும் வேப்பெண்ணெய் தேன்போல இனிக்கிறது என்று கூற வேண்டிய கொடுமையை ஏழைகள் சில வேளைகளிலே தாங்கித் தொலைக்க வேண்டி நேரிட்டுவிடுகிறது. சீமான் என்று நான் குறிப்பிடுவது பணம் படைத்தவனை மட்டுமல்ல, பதவியால் உயர்ந்திருப்பவரும் ஒரு வகையில் சீமானே! அதிலும் இந்நாட்களில் பணம் படைத்தவன்கூடப் பதவி பிடித்தவன் முன்பு கைகட்டி நிற்கவேண்டி இருக்கிறது, காரியம் சாதித்துக் கொள்ள.

பெரிய புள்ளியின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசுவது கூடாது என்ற எண்ணத்தில், குமுட்டல் கொடுத்திடுவதைக்கூட இனிப்பளிப்பதாக, ஏழை கூறிடவேண்டி நேரிட்டுவிடுகிறது; ஆனால் அந்த ஏழைக்கு உண்மை தெரியும்; நாக்கு மட்டுந்தான் வேறுவிதமாகப் பேசுகிறது; நெஞ்சம் உண்மையினை அறியும். நிலை காரணமாக அந்தப் பேச்சு.

அஃதே போலத்தான் பதவியில் உயர்ந்தவர்கள், பதர் கொடுத்து இது உயர்தரமான நெல் என்று கூறிடும்போது, ஏழையால் மறுத்துப் பேசிட முடிவதில்லை. ஆனால், வாய் மட்டுந்தான் மூடிக்கிடக்கிறது; மனம்? தூங்குவதில்லை! உண்மையை உணராமலிருப்பதில்லை.

திட்டமிட்டு, பயனற்றவைகளைக் கலந்தளிக்கும் முறை வணிகத்துறையிலே மிகுந்துவிட்டிருக்கிறது என்று அறிந்தோரும் அனுபவித்து அல்லற்பட்டோரும் கூறுகின்றனர்.

ஒருவர் கூறினார் என்னிடம் ஒரு ஊரில், அரிசியுடன் கலப்பதற்காக வெள்ளை நிறக் கூழாங்கற்களை அரிசிபோன்ற வடிவிலேயே உடைத்துத் தந்திட ஒரு சிறு யந்திரமே வைத்திருக்கிறார்களாம்! அரிசி சோறாக ஆன பிறகே, இந்தக் கல்லரிசியைக் கண்டுபிடிக்க முடியுமாம்! வேகாதல்லவா, கல்லாலான அரிசி! கண் மட்டும் போதவில்லையல்லவா, அரிசியுடன் கலந்துள்ள - கலந்துள்ளதா!! கலக்கப்பட்டுள்ள!! - கல் அரிசியைக் கண்டுபிடிக்க!

சீவல் பாக்குடன் ஏதோ ஓர்விதமான கொட்டையை (காட்டுப்பயிர்) சீவிக் கலந்துவிடுவதாகவும், தழையை வேக வைத்துக் கருநிறமாக்கிப் பொடி செய்து தேயிலைத் தூளுடன் கலந்துவிடுவதாகவும், ஏலத்துடன் கருநிறமான மெழுகுத் துண்டுகளைக் கலந்துவிடுவதாகவும் கூறுகிறார்கள்.

இவை, குறுக்கு வழியில், தவறான வழியில் ஆதாயம் தேட நடத்தப்பட்டு வரும் அக்கிரமங்கள், சட்டம் இருக்கிறது, ஆனால், அதனால் மட்டும் எவ்வளவு என்று வேலை செய்ய முடியும்! அலுத்துப்போய்விடுகிறது! தூங்கிவிடுகிறது! மயக்கமடையச் செய்தும் விடுகிறார்கள்! இன்று நேற்றா! நெடுங்காலமாகவே.

கிரேக்க நாட்டுக் கவிஞர் பெருமகன், ஹோமர் கூறினார்.

ஓடிவிடுகிறது ஒய்யார அநியாயம்!

மாந்தரை அலைக்கழித்து மானாய்ப் பறக்கிறது.

அநியாயம் விளைவித்த புண்ணுக்கு மருந்தளிக்கப் புறப்பட்டுப் போகின்றாள் தொழுகை எனும் பெண்ணாள்! தொல்தேவர் குடிப்பிறந்தாள்! ஆயினும் என்ன?

நங்கை அவள் நொண்டி. நகர்கின்றாள், நைந்த கண்ணாள் முகமது சுண்டி

என்று பாடினார்.

அநியாயம் இழைக்கப்படும்போது, தேவனைத் தொழுது பரிகாரம் தேடுகின்றனரல்லவா - அது எப்படிப் பயனற்றுப் போகிறது என்பதனைக் காட்டுகிறார் கிரேக்கக் கவிஞர்

அநியாயம் மானாகப் பறக்கிறதாம்!

அநியாயத்தை வீழ்த்தக் கிளம்பும் தொழுகை எனும் பெண்ணுக்கு, கண் குருடாம், கால் நொண்டியாம்!

இப்போது, அநியாயத்தை வீழ்த்தக் கிளம்பும் சட்டம், இதைவிட மோசமான நிலையில் அல்லவா இருக்கிறது!

சரி, அண்ணா! கலப்படத்தால் விளையும் கேடு பற்றி எதற்காக இப்போது கூறுகிறாய்? எந்தப் பண்டம் வாங்கி ஏமாந்துவிட்டாய்? என்று கேட்கிறாயா, தம்பி! நான் கூறவந்தது, சொல்லிலே கலக்கப்பட்டுவிடும் பயனற்றன பற்றி; இடையிலே பொருளிலே கலக்கப்பட்டுவிடும் பயனற்றவை பற்றியும் குறிப்பிட்டேன்.

தம்பி! வடிவத்திலே ஒத்ததுபோலவே இருப்பினும் ஏன் பதர், கானல் இவைகளைப் பயனற்றன என்கிறோம்.

பொருளற்றன, பயனற்றன; அவ்வளவே!

பதருக்குள்ளே, பொருள் இல்லை, நெல்லுக்குள் அரிசி எனும் பொருள் இருப்பதுபோல! பொருள் இல்லை; ஆகவே பயன் இல்லை!!

கானலில், நீர் இல்லை, பருகிட! பொருள் இல்லை, பயன் இல்லை! சொல்லிலேயும் அவ்விதமே, பயனுள்ள சொல்லில் பொருளிருக்கும், பொருளுள்ள சொல்லால் பயன் கிடைக்கும்; பொருளற்ற சொல் பயனற்றுப் போகும்.

நெல்லும் பதரும் ஒரே பயிரிலே விளைவதுபோலவே, பயனுள்ள சொல்லும் பயனற்ற சொல்லும், ஒரே பேச்சி லிருந்துதான் முளைக்கின்றன.

பதர் நீக்கி நெல் கொள்வதுபோல, பேசப்படுவனவற்றில் பயனற்றதை நீக்கிவிட்டுப் பயனுள்ளதைக் கொள்ள வேண்டும்.

இது மிகக் கடினமா! என்ன அண்ணா! உனக்கு இளையவன் - வயதில்தானே!! பதர் நீக்கி நெல்லைக் கொள்ள வேண்டும் என்பதனைக் கூடவா எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்பாயோ, தம்பி! கேட்டாலும் கேட்டுவிடுவாய்; ஆகவே விரைந்து கூறிவிடுகிறேன். நான் குறிப்பிட்டேனே, சீமான் கொடுத்த வேப்பெண்ணெய் - அதனை நினைவுபடுத்திக் கொள். பயனற்றன - பயனளிப்பன என்று சொல்லைப் பிரித்துவிடலாம், நல்லன கொண்டு அல்லன தள்ளலாம் - நம்மை ஒத்தவர்கள் பேசக் கேட்டால்; ஆனால், பேசுபவர், பெரிய புள்ளி - பெரிய பதவியில் உள்ளவர் என்றால் முடியுமா; எளிதாக! முடியும்என்னால்! என்கிறாயா!! சரி, தம்பி! நீ எதனையும் துருவித் துருவிப் பார்த்திடவும், உண்மையை எடுத்துரைக்கவும் தேவைப்படும் இயல்பினைக் கொண்டிருக்கிறாய்; உன்னால் முடிகிறது. ஆனால், எல்லோராலும் முடியுமா - எத்தனையோ தொல்லைகளைத் தாங்கித் தாங்கி வாழ்க்கையே வளைந்து போயுள்ள நிலையில் உள்ளவர்களால் முடியுமா - பதவியில் உயர்ந்தவர்கள் பேசும் பேச்சிலே, தரம், வகை பிரித்துக் காட்டி, அவர்களின் கோபம் கிளம்பித் தாக்கினால் அதனுடைய வேகத்தைத் தாங்கிக் கொள்ளும் "உள்ள உரம்' எல்லோருக்குமா ஏற்பட்டுவிடும்? முடியாதல்லவா! அவர்கள் நெல்லுக்குப் பதிலாகப் பதர் கிடைக்கப்பெற்று, பதர் என்று வெளியே கூறிடவும் முடியாமல், அதனைச் சுமந்தும் செல்லவேண்டி நேரிட்டுவிடுகிறது. காமராஜரின் சுற்றுப் பயணப் பேச்சைக் கேட்டவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்; இதழ்களிலே நான் பார்த்த அளவில், எனக்கும் அதுபோலத்தான் தோன்றுகிறது.

தம்பி! மற்றொன்று உளது முக்கியமானது; பேச்சு பொருளுள்ளதாக, பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுடன், சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமிருக்க வேண்டும்; சொல் சுவைத்து, செயல் கசப்பளித்தால், பயன் என்ன?

வாளது கையில்கொண்டு
வருபவன் சிரம் அறுத்து
வாகையைச் சூடிநானே
வந்திடுவேன், உறுதி உறுதியாமே!

என்று உரத்த குரலிலே முழக்கம் எழுப்பிவிட்டு, களம் நோக்கிச் செல்லாமல், அடுக்களை சென்று பதுங்கினால், முழக்கத்தால் பயன் என்ன கிடைத்திடும்!

செந்தமிழின் சுவையினைச் சேர்த்து, செல்லரித்துப்போன ஏடுகளிலே உள்ள கதைகளுக்குப் புதுவடிவம் கொடுத்து, "காலட்சேபம்' செய்து கனதனவான் வாழ்க்கையைப் பெற்றிருப்பவர்கள் சிலரை அறிந்திருப்பாயே, தம்பி! அப்படிப் பட்டவரில் ஒருவர் - பெயரா? ஏதாவது வைத்துக்கொள்ளேன்! - தேனாமிர்தானந்தர்! - பரதன் பாதுகை சுமந்ததுபற்றி உருக்கமாகக் காலட்சேபம் செய்துவிட்டு, அன்றிரவு அண்ணனுக்குச் சேரவேண்டிய சொத்தினை ஏமாற்றிப் பறித்துக் கொள்வதற்காக, ஆள்வைத்து அவனை மண்டையில் அடித்து, மூளை குழம்பிப்போகும்படி செய்து, "பித்தர் விடுதி'யில் சேர்த்துவிட்ட பிள்ளைப் பெருமாள் எனும் சீமான் வீட்டில்விருந்துண்ணச் செல்வதும், கண்ணப்ப நாயனார் கதையை, கேட்பவர் கண்களில் நீர் வழியும் விதமாகக் "காலட்சேபம்' செய்துவிட்டு, இளையாளுக்காக மூத்தாளைத் தாக்கி, அதன் காரணமாக அவளுடைய கண்ணுக்குச் சேதம் உண்டாக்கி, அது மாரியம்மன் செய்தது என்று மற்றவர்களை நம்பும்படி செய்து விட்ட பெரியசாமி மாளிகையில் விருந்துண்ணச் செல்வதும், வள்ளலார் வகுத்த வழிபற்றி அழகொழுகப் பேசிவிட்டு, பட்டாளத்துக்கு ஆட்டுக்கறி "காண்ட்ராக்ட்' எடுத்து ஆறு இலட்சம் ஆதாயம் பெற்ற அருமைநாயகம் பங்களாவில் விருந்து சாப்பிடச் செல்வதும், காரைக்காலம்மையார் பற்றிக் காலட்சேபம் செய்துவிட்டு, கணவனிடம் மல்லுக்கு நின்று மாதம் ஆயிரம் ஜீவனாம்சம் பெற்றுக்கொண்ட மரகதம் வீட்டிலே சிற்றுண்டி சாப்பிடச் செல்வதும், எம்மதமும் சம்மதமே என்ற சமரசபோதம் அளித்துவிட்டு, கோயில் யானைக்கு நாமம், வடகலையா, தென்கலையா என்ற பிரச்சினையில் முன்னாலே நின்று, எதிர்த்தரப்பினரை ஆள்வைத்து மண்டையை உடைத்த தர்மகர்த்தா தனபாலர் வீட்டிலே விருந்துக்குச் செல்வதும், ஆலயத் திருப்பணி பற்றி அழகாகப் பேசிவிட்டு, அம்பாளின் ஆபரணங்களைத் தன்னுடைய "அன்னத்துக்கு' என்று ஆக்கிக் கொண்ட கோயிற் பெருச்சாளி கோதண்டபாணி வீட்டிலே "ஜாகை' வைத்துக்கொள்வதும், பொருத்தம் என்று புராணத்தைப் போற்றுபவர்களேகூட ஒப்புக்கொள்பவர்களா! சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லையே; எதெது தவறு, பாபம் என்று காலட்சேபத்தில் கூறுகிறாரோ, அந்தத் தவறுகளை, பாபங்களைச் செய்து பணம் திரட்டிக்கொண்டுள்ள பாதகர்களின் விருந்தினராகச் செல்லலாமா? எப்படி மனம் ஒப்பிச் செல்கிறார்? இவர் அப்படிப்பட்டவர்களின் இல்லங்களில் சென்று விருந்துண்டால், ஊரார் என்ன எண்ணிக்கொள்வார்கள்? எத்தனையோ பயல்கள், என்னை அக்கிரமக்காரன், அநியாயம் செய்தவன் என்று பேசினார்கள்! இப்போது என்ன சொல்கிறார்கள். அறநெறிபற்றியும் அன்புவழிபற்றியும், ஹரிஹரன் அவர் மகன் ஆகியோரின் மகிமைபற்றியும் அழகாகக் காலட்சேபம் நடாத்தும் தேனாமிர்தானந்தரே எனது இல்லத்திற்கு வந்திருந்தார், விருந்துண்டார், வாழ்த்தினார்; காணிக்கையை ஏற்றுக்கொண்டார்! என்று அவர்கள் பேச மாட்டார்களா! உள்ளபடி அந்தக் காலட்சேபம் செய்பவருக்கு, அக்கிரமத்திலே வெறுப்பு என்றால், அக்கிரமக்காரர் வீடு செல்ல மனம் இடம் கொடுக்குமா! சென்றார் என்றால், அவரைப்பற்றிஎன்ன தம்பி! எண்ணிக்கொள்வாய்? அவருடைய "காலட்சேபம்' பற்றி எந்தவிதமான மதிப்புப் போடுவாய்?

சூறாவளிச் சுற்றுப் பயணக்காரர் - காமராஜர் - 3000 மைல்களாமே - அவ்வளவு தொலைவுசுற்றி, பேசினாரே, ஏழைக்காக, சோஷியலிசத்துக்காக - தம்பி! அந்தப் பேச்சிலே பதர் எவ்வளவு என்பது ஒருபுறம் இருக்க, அந்தப் பேச்சுப் பேசினவரை வாழ்த்தி வரவேற்றவர்கள், செலவு செய்து விழா எடுத்தவர்கள், சூழ நின்று சூடம் கொளுத்தியவர்கள், மாளிகை அழைத்துச் சென்று விருந்து நடத்தியவர்கள், இவர்கள் யார்? சோஷியலிசத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏழை இவர்களைப்பற்றி என்ன எண்ணுகிறான்? என்பவைபற்றி எண்ணிப் பார்த்தால் தம்பி! நான் குறிப்பிட்ட காலட்சேபக்காரர் உவமையின் பொருள் விளங்கும்.

ஒரு ஊரில் பஸ் முதலாளி, மற்றோர் இடத்தில் ஆலை அரசர், இன்னோரிடத்தில் வட்டிக் கடைக்காரர் வேறோரிடத்தில் மிட்டா, மற்றுமோரிடத்தில் புது பர்மிட், இப்படிப்பட்டவர்கள் இல்லங்களிலா அல்லது ஆலைத் தொழிலாளி, கதர்க் கடையில் கணக்கெழுதுபவர் போன்ற எளியோர் குடில்களிலா, எங்கு அழைத்துச் செல்லப்பட்டார், சோஷியலிசம் பேசியவர் என்பதைக் கேட்டறிந்தால், தம்பி! சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாததை, முரண்பாடே இருப்பதை அறிந்து கொள்ளலாம்; அறிந்துகொண்டுள்ளனர் மக்கள்.

"ஏழை பங்காளர் காமராஜர் என்பது இப்போது தெரிகிறதல்லவா?''

மண்டலம் கேட்கிறார் இதுபோல வறண்ட தலைத் தோழரைப் பார்த்து.

"மகராஜன்! ஏழைக்காகத்தான் ஆட்சி என்கிறார். காது குளிரக் கேட்டேன்'' என்று அந்த ஏழை கூறுகிறான்; உடனே மண்டலம், சரி! இந்த ஓட்டு நமக்கு, காங்கிரசுக்கு என்று எண்ணிப் பூரித்து, வேறு ஆளைப் பார்க்கச் செல்கிறார். ஏழைக்காகப் பேசிய காமராஜர் ஏறிச் செல்லும் படகு மோட்டார் பறந்து வருகிறது; பாதையில் நிற்காதே, போ! அந்தப் பக்கம்! என்று விரட்டுகிறார் போலீஸ்காரர்.

"எங்கே செல்கிறார் காமராஜர்?'' என்று கேட்கிறான் ஏழை, போலீஸ்காரரிடம்.

கட்டாயம் தெரிந்துகொண்டாக வேண்டுமோ! ஏனாம்! பேட்டி பார்க்கவோ!

என்று கேலி பேசித் துரத்துகிறார், காலை முதல் கால் கடுக்கச் சேவகம் பார்த்த அலுப்பினால், கான்ஸ்டபிள்.

மற்றோர் ஏழை பதில் கூறுகிறான்.

ஆலை முதலாளி அய்யம்பெருமாள் அரண்மனைக்கு.

இது கேட்ட ஏழையின் உச்சி குளிருமா! உள்ளம் பதறுகிறது.

அய்யம்பெருமாள் அரண்மனைக்கா!

விருந்து சாப்பிட அந்த இடமா!

நூல் கட்டுகளைக் கள்ளமார்க்கட்டில் விற்பவனாயிற்றே.

நெசவாளர்களின் குடும்பம் எத்தனையோ நாசமாகக் காரணமாக இருந்தவனாயிற்றே.

கணக்கு, மூன்று நாலு தினுசாச்சே அவனிடம், அவன் அரண்மனைக்கா செல்கிறார் காமராஜர்.

அவன் போன்றவர்களின் ஆதிக்கத்தை ஒழித்தால் தானே, சோஷியலிசம் மலரும்.

சோஷியலிசம் மலர்ந்தால்தானே ஏழைக்கு வாழ்வு.

ஏழையின் வாழ்வைக் குலைக்கும் எத்தன் அரண்மனைக்கு இவர் போகலாமா?

இவர் அங்குப் போனால் பிறகு சோஷியலிசம் பெற எப்படி வேலை செய்ய முடியும்?

பேசுவது சோஷியலிசம், குலவுவது முதலாளியிடமா!

எங்கள் காதுக்காகச் சோஷியலிசப் பேச்சு; இவர் தங்குமிடம் முதலாளி மாளிகை!

இவ்விதமெல்லாம் தம்பி! அந்த ஏழை கேட்க முடியாது - மனத்திலே இவை கொந்தளித்தபடி இருக்கும். மண்டலத்துக்கு இது தெரியாது!

சோஷியலிசம் ஏன் தேவைப்படுகிறது? என்பது குறித்தும், சோஷியலிசம் என்றால் என்ன? என்பது பற்றியும் சோஷியலிசத்தை எப்படிக் காண்பது என்பது பற்றியும்சோஷியலிச தத்துவம் அறிந்தவர்கள், சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலே வெற்றி கண்டவர்கள். கூறியுள்ளனர்.

காமராஜர் இந்தக் கருத்துக்களை அல்ல - சோஷியலிசம் பற்றிக் காங்கிரஸ் கொண்டுள்ள கருத்தைத்தான் கூறுகிறார்.

இது அல்லவே சோஷியலிசம் என்று கூறுகின்றனர்; சோஷியலிச தத்துவத்துக்கும் நீங்கள் சொல்லுவதற்கும் பொருந்தவில்லையே என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்; அதுபற்றி எமக்குக் கவலையில்லை; தத்துவம் பேசுபவர்கள் அல்ல நாங்கள்; நாங்கள் கூறும் சோஷியலிசம் இப்படித்தான்! போ! போ!! - என்று கூறிவிடுகிறார் காமராஜர்.

மண்டலத்தைக் கேட்டால், இது ஒரு மாதிரி சோஷியலிசம் என்கிறார்.

சோஷியலிசம் மாதிரிதான் இது என்கிறார் வேறோர் காங்கிரஸ்காரர்.

தம்பி! இப்போது புனிதப் பயணத்தின் புகழ் பாடி, நம்மோடு இருந்தபோது, சோஷியலிசம் மாதிரி என்று காங்கிரஸ் கட்சி ஆவடியில் திட்டம் கூறினபோது முழக்கமிட்டது என் காதில் இப்போதுகூட ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சோஷியலிசம் மாதிரி!
குதிரை மாதிரி!

குதிரை மாதிரி என்றால் என்ன பொருள்? கழுதை என்று பொருள்.

அப்படிப் பேசிவிட்டு இப்போது இப்படி இருக்கலாமா என்று என்னைக் கேட்காதே தம்பி! பயில்வான்போல இருந்தான் இப்போது எலும்புருவாகிவிட்டானே ஏன் என்று கேட்டால், என்ன பதில் கூறுவது; கெட்ட கிருமிகள் கொட்டிவிட்டன என்றுதானே, அதுபோல, அது கிடக்கட்டும்; காமராஜர், பேசிடும் சோஷியலிசம் பற்றிப் பார்ப்போம். அவர் பேசுவது சோஷியலிசம் அல்ல! பதர்; நெல் அல்ல!! - ஏன்? பொருள் இல்லை; பயன் இல்லை.

இதனை எல்லோராலும் உணர்ந்துகொள்ள முடிந்தாலும் எடுத்துக் கூறிடும் இயல்பு அனைவருக்கும் இருந்திடாது; அந்த இயல்பு இருந்திடினும், அச்சம், தயை, தாட்சணியமின்றி அதனை எடுத்துக் கூறுவோரின் தொகை அதிகம் இருக்க முடியாது.

ஏழைக்காகப் பரிந்து பேசுவது,
ஏழைக்கு இயன்ற அளவு உதவி செய்வது,
ஏழையும் ஓரளவு நிம்மதியான வாழ்வு பெற வழி காண்பது,
ஏழைக்குத் தொழிலும் வருவாயும் கிடைக்கச் செய்வது,
ஏழையை ஏழை என்பதற்காக இழிவாக நடத்தாமலிருப்பது,
ஏழைக்கு, குடி இருக்க வசதி, படிப்பு வசதி, மருத்துவ வசதி தேடிக் கொடுப்பது,
இவைகளைச் செய்துவிட்டால் போதும், அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிக்கொள்ளச் சொல்லுகிறது, காங்கிரஸ் கட்சி.

காய்ச்சல் காரணமாக வாய்க்கசப்பு கொண்டவன் நாவில், ஒரு துளி தேன் தடவிவிடுவது போன்றது இது.

தானதருமம் செய்வது, சத்திரம் சாவடி கட்டுவது, கோயில் குளம் அமைப்பது, கல்விக் கூடம், கலியாண மண்டபம் கட்டுவது, இவைகளைச் செய்தால் போதும் அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிக்கொள்ளச் சொல்கிறார்கள்.

இந்த உதவிகளை - தருமங்களை - தனிப்பட்ட "முதலாளிகளை'ச் செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் முதலாளி களிடம் வரியாகவும் நன்கொடையாகவும் பணம் பெற்று சர்க்கார் இந்த உதவிகளைச் செய்வதும் போதும், சோஷியலிசம் அதுதான் என்று காமராஜரைச் சொல்ல வைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆனால் சோஷியலிசம் என்பதற்கு தரப்பட்டிருக்கும் விளக்கம் வேறு; அதனைப் பார்க்கும்போது மன எழுச்சியே ஏற்படும்.

உடலிலே படிந்துள்ள சேற்றினைக் கழுவிக்கொள்ள ஒரு பானைத் தண்ணீர் தரச் சொல்லி "உபதேசம்' செய்வதைச் சோஷியலிசம் என்று காங்கிரஸ் கூறுகிறது. சோஷியலிசம் உடலிலே சேறு படியாத நிலையை ஏற்படுத்த என்ன வழி, யாது முறை என்பதை எடுத்துக் காட்டும் திட்டமாகும்.

"கொடு!'' என்று முதலாளிகளிடமும், "பெறு'' என்று ஏழையிடமும் கூறுவதும். "அவ்வளவு இருக்கிறதே கொஞ்சம் கொடு!'' என்று பணக்காரரிடமும், "இவ்வளவு கிடைத்ததே திருப்திப்படு'' என்று ஏழையிடமும் பேசி, இரு வர்க்கத்துக்கும்இடையே நின்று இருவருக்கும் இனிப்பாகப் பேசிவருவதை, சோஷியலிசம் என்று காங்கிரஸ் கட்சி கருதிக்கொள்கிறது! கருதிக்கொள்ளச் சொல்லுகிறது. சோஷியலிசத் தத்துவமும், முறையும் வேறாக இருக்கிறதே என்று கூறினாலோ, கோபம் பொத்துக்கொண்டு வருகிறது - புரியாததால் அல்ல - புரிவதால்!! - எங்கள் சோஷியலிசம் இதுதான் என்று கூறிவிடுகிறார்கள். இதுபற்றிப் பிறகு எழுதுகிறேன்.

புரோகிதன், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவரச் சொல்லி, செம்பிலே நிரப்பி, ஒரு கொத்து மாவிலையைச் செருகி, இதிலே இருப்பது, கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகளின் புண்ணிய தீர்த்தம் என்று சொல்லும் போது, இது ஏன் இப்படி ஒரு அண்டப் புளுகு! என்று கேட்கிறார்களா - நன்றாகத் தெரியும், நம்முடைய வீட்டுக் கிணற்றுத் தண்ணீர்தான் என்பது - இருந்தாலும் புரோகிதர் பொய்யுரைக்கும்போது மறுப்பதில்லையே!! ஆம்! என்று ஒப்புக் கொள்கிறார்களல்லவா? அதுபோல நெடுங்காலமாக - இங்கு மட்டும் அல்ல - நாகரிக அரசியல் வளர்ந்த எல்லா நாடுகளிலும் ஈவு இரக்கம், பரிவு பச்சாதாபம், தானம், தருமம் என்ற பண்புகள் இருந்து வந்தனவே, அவைகளையே எடுத்து தமது கட்சி முத்திரையிட்டு, இதுதான் சோஷியலிசம் என்கிறது காங்கிரஸ் கட்சி. கிணற்றுத் தண்ணீர் கங்கா தீர்த்தம் ஆகிவிடுகிறது!!

அண்ணன்,

30-5-1965