அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குரு பக்தி
2

எனவேதான், கையேந்தி நிற்கிறோம். இந்தக் கேவலம் தெரியத் தானே செய்கிறது! தமிழகத்திற்கு வந்துற்ற விபத்து உண்டாக்கியுள்ள வடுக்களைப் போக்கும் அக்கறை இருந்தும், இங்குள்ள சர்க்காருக்கு ஆற்றல் இல்லையே! வஞ்சனை இருக்கிறது, வசதி இல்லை! கருணை பிறக்கிறது, காசு இல்லை! பேரன்பு கொண்டோரிடம் பேழையில் பணம் இல்லை! ஏன்? எல்லாம் டில்லியில் ஒப்படைக்கப்பட்டிருப்பதால்தானே?

பசியால் துடிக்கும் குழந்தை, பால்வேண்டி, தாயின் மார்பினைச் சுவைத்து, பால் காணாது கதற, சேய் அழக்கண்டு தாய் அழுவது போல, குடில் இழந்து குடும்ப மணிகள் இழந்து கதறும் மக்கள் காமராஜரைக் கண்டுகையேந்தி நிற்கிறார்கள் - அவர் கண்களைத் துடைத்துக்கொண்டு, நேருவிடம் கையேந்தி நிற்கிறார்! இதுதானே நிலைமை? இது, வேதனைக் கிடையிலும், நமது இழி நிலைமையைத்தானே காட்டுகிறது. வடக்குக்கு உள்ள ஆதிக்கம் விளக்கமாகிறதே! யார் அறிந்து கொள்ளமாட்டார்கள் இதனை. எனினும் இந்த நேரத்திலும் நம்மைக் குத்துவதிலே, அமைச்சர் சுப்பிரமணியனாருக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி! திருவல்லிக்கேணியும் திருமயிலையும், ‘நம்ம சுப்பிரமணியம்’ என்று அணைத்துக்கொள்ள வேண்டுமே, ஆச்சாரியார் என் குருநாதர் என்று கூறிப் பூஜித்தால் மட்டும் போதுமா, ‘அதுகளை’யும் சாடினேன் என்று காட்டினால் தானே, ‘என்னதான் சொல்லுங்கோ, நம்ம சுப்ரமணியத்துக்கு உள்ள புத்தி தீட்சணியம், இந்தக் காமராஜுக்குக் கிடையாது’ என்று அக்கார வடிசல் கிடைக்கும். அதற்காக அவர் அர்த்தமற்றதைப் பேசுகிறார்.

வடக்கு தெற்கு என்ற பிரச்சினை, வெள்ளம், விபத்து, அவதி, அல்லல், இவைகளுக்காகத் தரப்படும் உதவி, இவற்றுடன் நின்று போவதல்ல. அரசியல் என்பது அன்னதான சமாஜமுமல்ல. உரிமைக் கிளர்ச்சி என்பது உண்டிப் பெட்டி நிரம்பிவிட்டால் கருகிப்போவதுமல்ல. காட்கில் என்னும் மாவீரர் முழக்கமிடுவது போல, தன்மானத்தை இழந்துவிட எந்த ஆண்மகனும் சம்மதியான், கற்பை இழந்திட எந்தக் காரிகையும் சம்மதிக்க முடியாது. அதுபோன்றே உரிமையை இழந்திட எந்த நாடும் ஒருப்படாது.

சப்ரமஞ்சக் கூடம், சல்லாத் துணி, ஜரிகை வேலைப்பாடு, சந்தனம் பன்னீர் என்று காட்டி, கற்பைச்சூறையாடுபவன் பேசுவதாகக் கதைகளில் படிக்கிறோம். கனம் சுப்பிரமணி யாமே, சவக்குழி தோண்ட மண்வெட்டி உதவினானே மகானுபாவன், அவன் பாதம் போற்றுதும் என்று பேசிடும் பேதமை போல, ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, நம்முடைய செல்வத்தைச் சுரண்டி வைத்துக்கொண்டு, கொடுமையில் சிக்கித் தவித்திடும் வேளையில் கொஞ்சம் தாராளம் காட்டுகிறதே, அதுவே போதும் என்கிறார்; அதனால் நாம் வாயடைத்துப் போவோம் என்று வேறு எண்ணுகிறார்.

தனக்கென்று ஓர் இலட்சியம் கொண்டோர் எவரும், அதற்கான பணியாற்றுகையிலே, குறுக்குப் பாதைகள் கண்டால், அதிலே நுழைந்து, இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்க மாட்டார்கள். இலட்சியத்தை நோக்கிச் செல்வோருக்கு, அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிப்போரே தலைவர்கள், நண்பர்கள், வழிகாட்டிகள், ஞானாசிரியர்கள். இடையில் இளநீர் கொடுப்போர் நன்றிக்கு உரியோர், இதயம் நோகப் பேசுவோர் பரிதாபத்துக்குரியோர், உடனிருந்து கெடுப்போர் கண்டனத்துக்கு உரியோர், பாதையில் பயணத்தின் கடுமை தாங்கமாட்டாமல் பட்டுப்போவோர், அனுதாபத்துக்குரியோர். அமைச்சர் சுப்பிரமணியனாருக்குச் சிலபல அலுவல்கள் உள்ளன- தரப்பட்டுள்ளன! அவ்வளவே தவிர அவர் ஓர் இலட்சியத்துக் காகப் பணியாற்றும் பொறுப்பில் ஈடுபட்டவரல்ல. எனவேதான் அவர் குரு பக்தியைக் கொட்டுவதிலும், நம்மைக் குத்துவதிலும் குதூகலம் காண்கிறார். காணட்டும், களிப்பூட்டப்படட்டும். நமக்கேதும் நட்டமில்லை, தமக்கென்று ஓர் குறிக்கோள், அது குறையுடையதோ நிறைமிகுந்ததோ, நாடு கொண்டாடுவதோ அல்லவோ, தன் நெஞ்சார நம்பும் ஓர் குறிக்கோளுக்காகப் பணியாற்றும் எந்தத் தலைவரும், அதற்குக் குந்தகம் விளைவிப்போர் எவ்வளவு பெரியவராயினும், பெருநிலையைப் பிடித்துக் கொண்டவராகவே இருப்பினும், குருபீடத்தில் அமர்ந்திருப்பவராகவே இருப்பினும்கூட, அவரை விட்டு விலகவும், வேறு பாதை தேடவும், அவர் மூலம் இழிவும் பழியும் கிடைப்பதாயினும் ஏற்றுக்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும், இடுப்பொடிந்ததுகளும், ஆசை அலைமோதுவதால் அங்கலாய்ப் போரும், அடிவருடிகளாகி ஏசலை வீசினும் பொருட்படுத்தாமல், எடுத்த காரியத்தை முடித்திடும் நோக்குடன் பணியாற்றுவர்.

நேரு பண்டிதருடன் அமைச்சர் சுப்பிரமணியனாருக்கு உள்ள தொடர்பு, நாடு அறிந்ததுதான். நேரு பண்டிதரின் தர்பார்களிலே உள்ள பத்துப் பதினாறு தலையாட்டும் துரை மகனார்களிலே இவர் ஒருவர் என்ற அளவிலே உள்ள தொடர்பு தான்!

மராட்டிய மண்டலத்து காட்கில் அப்படி அல்ல.

நேரு பண்டிதருடைய எழுச்சி மிக்க வரலாற்றிலே, காட்கில் ஒரு சிறப்பான இடம் பெற்றவர்; உடனிருந்து பணியாற்றியவர்; விடுதலைக் கிளர்ச்சியில் முன்னணியில் நின்றவர்.

அவருக்கு அமைச்சர் அலுவல் இல்லை; எனவே ஆசாபாசத்துக்கு ஆட்படவேண்டிய கேவலம் ஏற்படவில்லை; அவருக்கு ஓர் குறிக்கோள் இருக்கிறது; எனவே அவர் பூஜித்துக்கிடக்க மறுக்கிறார், இலட்சிய முழக்கமிடுகிறார் - குருபக்தி - கட்சிப்பாசம் - பதவியில் பற்று - அதிகாரத்தைக் கண்டு அச்சம் - இவைகள் தலைகாட்ட மறுக்கின்றன. டில்லி ஆட்சி மன்றத்திலே அஞ்சா நெஞ்சுடன் பேசுகிறார். நேசம் மறக்கவில்லை, பாசம் பட்டுப்போகவில்லை. எனினும், இவைகளுக்காகக் குறிக்கோளை இழக்க முடியாது என்று முழக்கமிடுகிறார்.

அவ்வளவு பெரியவர் தொட்டிழுத்த போது, நான் என்ன செய்ய முடியும் என்று வாதாடுபவளைப் பத்தினியாகவா கொள்ள முடியும்?

நாளைக்கு அவர் எவ்வளவு பெரியவராவாரோ, யார் கண்டார்கள்? இன்றே எனக்கு அவர் நெஞ்சம் கிடைத்துவிட்டது என்றெண்ணிப் பூரித்திடுவாள், கண்டாரைக் கொல்லும் காரிகை.

காட்கில், எவ்வளவு பெரியவரானால் என்ன, உரிமை, எல்லாவற்றிலும் பெரிது என்கிறார். அமைச்சர் சுப்பிரமணியம் இப்படிப்பட்டவர்கள் வாயடைத்துப் போக வேண்டும் என்று தவமிருக்கிறார்.

காட்கில் கேட்கிறார். தன்மானம், கற்பு, உரிமை இவைதமை இழக்க எப்படி முடியும் என்று.

வெள்ளத்துக்கு உதவி செய்கிறது வடக்கு, எனவே அதற்கு வெள்ளாட்டியாக இருப்பதிலே வெறுப்படைவதோ, வெண்சாமரம் வீசுவதைக் கண்டிப்பதோ கூடாது; அப்படி எல்லாம் பேசுபவர்களின் வாய் இனி அடைத்துப் போகும் என்கிறார், சுப்பிரமணியனார்.

தேசிய உணர்ச்சி இல்லையா, மராட்டியருக்கு மராட்டிய மண்டலம் என்று பேசுகிறீரே, என்று இங்கு நம்மைச் சுப்பிரமணியர்கள் கேட்பது போல, காட்கிலைக் கேட்கிறார்கள், சந்தனமே! மணமாக இரு! என்று சொல்வாருண்டா? மராட்டியர்களைப் பார்த்து, தேசிய உணர்ச்சி கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்களே என்று காட்கில் கேலியால் அவர்களைக் கொல்கிறார்.

வெட்டும் குத்தும், கலகமும் குழப்பமும், இரத்தக் களரியும் கூட நடத்த முடியும் - இவை போன்ற முறைகளிலெல்லாம் ஈடுபட வேண்டிய அளவுதான். நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது என்று எச்சரிக்கையே செய்கிறார் காட்கில்.

‘‘இராஜ்யப் புனரமைப்புக் கமிஷன் மராட்டியர்களைக் குறித்துக் கூறியுள்ள கருத்து, மராட்டிய இனத்தை இழிவு படுத்துவதாக இருக்கிறது. கடந்த 600 ஆண்டுக் காலத்தில் இப்படிப்பட்ட இழிமொழியை மராட்டியர் மீது யாரும் வீசியதில்லை. இந்த இழிவைத் துடைத்திட பதிலளித்திட எமக்குத் தெரியும் - ஆனால் அந்த முறைகள் இன்று சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப் படாதனவாக உள்ளன - குடி அரசுக் கோட்பாட்டுக்கு முரணாகவும் உள்ளன” என்று மனம் குமுறிப் பேசுகிறார் காட்கில்.

பதிலளிக்கத் தெரியும் - பதிலளிக்கும் முறைகள் உள்ளன - என்று காட்கில் கூறினாரே, தம்பி! அதிலேதான், கொலை கொள்ளை, குத்து வெட்டு, இரத்தக் களரி யாவும் அடங்கியுள்ளன.

மராட்டியரை மட்டநிலையில் வைத்திடவும், அவர்களின் உரிமைக்கு உலைவைக்கவும் இன்று டில்லியில் ஓர் அரசு முயற்சிக்கும் போது, அதே இடத்திலிருந்து பாதுஷாக்கள் முயன்ற காலமும், அந்த ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும், மாவீரன் சிவாஜியின் பரம்பரையில் வந்த காட்கில் அறிவாரல்லவா? அமைச்சர் சுப்பிரமணியம் அவ்விதமல்லவே, அவர் இராமனுக்குத் தாசனான அனுமனின் பிரபாவம் பற்றிய பெருங் கதையைப் பயபக்தியுடன் கேட்டு இரசிப்பவர்தானே! எனவேதான், குரு பக்தியையும், குருவின் மனம் மகிழும் என்ற எண்ணத்தில் நம்மைத் தாக்கிப் பேசுவதையும் செய்து காட்டியிருக்கிறார்.

குறிக்கோள் கெடுகிறது என்று தெரிந்தால், சிலருக்குக் குரு பக்திகூட மெள்ள மெள்ளக் குறைந்துவிடத் தொடங்குகிறது என்பதை விளக்கும் வகையில், நண்பர் ம.பெ.சிவஞானம் அவர்கள் இப்போது எழுதுகிறார்.

அவருடைய குறிக்கோள் ‘மொழிவழி அரசு’ என்கிறார்.

இதுதான் சாலச் சிறந்தது, மற்ற குறிக்கோள்கள் யாவும் போலி என்கிறார்.

மற்றக் குறிக்கோள்கள் யாவும் போலி என்று தன்னைத் தானே நம்ப வைத்துக் கொண்டால்தான். தான் மேற் கொண்டுள்ள குறிக்கோளிடம் தமக்கே ஒரு அச்சம் கலந்த ஆர்வம் பிறக்கும் என்று எண்ணுகிறார் போலும். எப்படியோ இருக்கட்டும் - அவர், மொழிவழி அரசு கிடைத்திடப் பணியாற்று வதைத் தமது கழகத்தின் தலையாய கொள்கையாகக் கொண்டிருக்கிறார். அதேபோது அவருக்கு நேரு பண்டிதரிடம் ‘பக்தி’ உண்டு; காங்கிரஸ் கட்சியிடம் ‘பாசம்’ நிரம்ப.

நேரு பண்டிதரை யாராவது - கண்டித்தால் - ம. பொ. சிக்கு எரிச்சல் எழுகிறது. பண்டிதரைப் பதட்டமாகப் கண்டிக்கும் பதர்களை விட்டு வைக்கமாட்டேன் என்பார். தாய் - சேய் - உறவு, எனக்கும் காங்கிரசுக்கும் என்று அனாதைப் பிள்ளை ஆக்கப்பட்ட பிறகுங்கூடக் கூறுகிறார்.

‘நேரு பண்டிதரின் அமோகமான அறிவாற்றல்தான் என்னே! அவருக்கு உலக அரங்கிலே கிடைத்துள்ள பெரும் புகழ்தான் என்னே! என்னே!’ என்று வியந்து கூறுகிறார்.

தமிழர்களை மிக மிகத் தாழ்வாக நேரு பண்டிதர் கண்டித்த போது தம்பி! சீறி எழுந்து, கிளர்ச்சி நடத்தி, கடும் தண்டனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் - அவரல்ல. அவர், நேரு பண்டிதரைக் கண்டிக்காதது மட்டுமல்ல, முட்டாள்கள்! சிறுபிள்ளைத்தனம்! என்று நேரு பண்டிதர் இவர்களையா ஏசிப் பேசினார், எங்களையன்றோ அதுபோல் பேசினார், அதற்காக இவர்கள் ஏன் கிளர்ச்சி செய்தனர்? அடாது! அடாது!! என்று பேசவே செய்தார். அவ்வளவு குரு பக்தி அவருக்கு! ஆனால் இப்போது, நேரு பண்டிதரின் போக்கு, மொழிவழி அரசுக் கொள்கையைப் போற்றுவோரைப் புல்லர்கள் என்று கண்டிக்கும் வகையினதாகவும் இருந்திடக் காண்கிறோம் - குரு பக்தியின் வேகம் குறைகிறது!!

தோற்றால் துடிப்பார்! பொய் பேசுவார்!!
ஆவேசமாடுவார்! குப்புற விழுந்தார்!

என்று ம. பொ. சி. இப்போது எழுதுகிறார் - நேருவைப் பற்றி.

‘பிறர் தகுந்த காரணத்துக்காக’ தடியடி சிறை என்று அஞ்சாமல் நேருவை எதிர்த்து நியாயமான முறையில் கிளர்ச்சி நடத்திய போது, ‘எங்கள் நேருவுக்கா கண்டனம்? எற்றுக்கு? பாரத நாட்டின் அந்தஸ்தைப் பாரெல்லாம் உயர்த்தி விட்டாரே, அதற்கா? பஞ்சமும் நோயும் பாரத நாட்டிலா என்று கேட்டுப் போரிட்டு அவைதமை விரட்டி அடித்தாரே, அதற்கா? எதன் பொருட்டய்யா, எம்மானை, நேரு பெம்மானைக் கண்டிக்கிறீர்?’ என்று காய்ந்துகேட்டாரல்லவா, அதே ம. பொ. சி.க்கு, ‘மொழிவழி அரசு' என்பது வெறும் வறட்டுக் கூச்சல், வகை கெட்ட திட்டம், பொருளற்ற வாதம், புத்தி கெட்ட பேச்சு என்றெல்லாம் பொருள்படும்படி நேரு பேசுகிறார் என்றதும், கோபம் கோபமாக வருகிறது. கொதிக்கிறார், குமுறுகிறார், கோல் எடுக்கிறார், நேருவைத் தாக்க! குரு பக்தி குறைகிறது, குலைகிறது!!

தனக்கு வரும்போதுதான் தெரிகிறது, தலைவலியும் காய்ச்சலும்.

பொய்யர் - புரட்டர் - ஆவேசக்காரர் என்றெல்லாம் ஒரு போதும் எமது ம. பொ. சி. கூறமாட்டார் என்று கூறும் சிலர் உளர். தம்பி! மிகச் சிலர். எனினும் அவர்களுக்கும் நாம் விளக்கமளிப்பதுதான் கண்ணியம்.

தமது அந்தஸ்து தாக்கப்படும் போது, தம்முடைய கருத்திலே காலூன்றி நிற்க முடியாத போது, தோல்வி மனப்பான்மை கொண்டு மற்றவர்களுக்குச் சவால் விட்டுப் பேசுவது நேருஜியின் சுபாவமாகி விட்டது.

ம.பொ.சி. தமது ஏட்டில் தீட்டுகிறார் இதனை :

சவால் விடுவது நேருவின் சுபாவம்.

தோல்வி மனப்பான்மை கொள்ளும்போது இவ்விதம் நேரு சவால் விடுவார்.

தமது அந்தஸ்து தாக்கப்படும்போது, இவ்விதம் சவால் விடுவார்.

தம்முடைய கருத்து நிலைக்காதபோது சவால் விடுவார்.

இவ்வளவு கண்டனங்களையும் மணிகளாக்கித் தமது சொற் சிலம்புக்குள் போடுகிறார் ம.பொ.சி. இம்மட்டோ! இதோ மேலும்!

பெரிய பதவியிலிருக்கும் நேரு உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார்.

ராஜ்யங்களைத் திருத்தி அமைப்பதில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தாம் தயாராக இல்லையென்றும் நேரு ஆவேசத்துடன் கூறியிருக்கிறார்.

மொழிவாரி இனங்களிடையே எழுந்த உரிமைக் கிளர்ச்சி, அவருடைய முதுகுக்கு மண் காட்டி விட்டது! அந்தத் தோல்வியை மறைக்க என்னென்னவோ பேசுகிறார்.

குரு பக்தி, ம.பொ.சி.யை, நேருஜி, தலைவர் நேரு என்றெல்லாம் அர்ச்சிக்கச் சொல்கிறது; கொள்கையோ, நேரு பண்டிதரை, வீணுரை பேசுவோர், குப்புறவிழுந்த பிறகும் வீரம் பேசுவோர், பொய்யர் என்றெல்லாம் கூறச் சொல்கிறது.

அடக்கமாகத் துவக்க வேண்டும், இல்லையானால் அவர்கள் போலாகி விடும் என்று கவலை குடைகிறது. கண்டிக்காமல் இருக்கக் கூடாது, கண்டிக்காது விட்டோமாயின் கொள்கை புதைகுழி செல்லும் என்று அச்சமும் துளைக்கிறது. எனவே, நேருஜி என்ற மரியாதையும், உண்மைக்கு மாறாகப் பேசுகிறார் என்ற கண்டனமும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு வெளிவருகின்றன.

‘‘மேன்மை தங்கிய ஐயனே! தங்கள் மீது சிறு தூசும் வீசும் நோக்கமுடையேனல்லேன். எனினும், என் துப்பாக்கிக் குண்டு பாய வேண்டிய இடத்தில் தாங்கள் இருப்பதால் தங்கள் மீது சுட வேண்டி இருக்கிறது,” என்று கூறினானாம். கைத் துப்பாக்கியால் ஒருவனைக் கொல்லக் கிளம்பியவன். அதுபோல் உண்மைக்கு மாறாகப் பேசுகிறாரே, என்று எழுதுகிறார், ம. பொ. சி. குரு பக்தி குலைகிறது என்பதுதானே பொருள்? கொள்கையின் வழி பணியாற்றப் புகும்போது, குரு பக்தி குறுக்கிட்டாலும் அதனைச் சமாளிக்கத்தான் வேண்டும். அந்த நிலைமை, ம.பொ.சி.க்களுக்கும் வந்தே தீரும் என்பதை இச்சம்பவம் விளக்குகிறது.

சுப்ரமணியனார், தமக்கு அந்தச் சங்கடத்தை வைத்துக் கொள்ளவில்லை.

மொழி, இனம், உரிமை இவைகளெல்லாம் அவருக்குச் சொற்றொடர்கள்!!

பதவி, பவிசு இவை அவருக்குப் பொருளுள்ளவை.

இவை தாக்கப்படாதிருக்கும் வரையில், அவரால் நிற்கதியாகக் குரு பக்தி காட்டிக் கொண்டிருக்க முடிகிறது.

காட்கில் போன்றோர் கடும் கோபம் கொள்வது போலவோ, ம.பொ.சி. போன்றோர் சிந்தாகுலராவது போலவோ, சுப்ரமணியனாருக்குச் சங்கடம் நேரிடுவதில்லை. அவருக்கு அதனால், ‘குரு பக்தி’யை வெளியிட்டுக் கொண்டிருக்க முடிகிறது; செய்கிறார்; செய்யட்டும், பாவம், இதையேனும்

‘‘என்ன புத்திக் குறைவடா, சீடா! கீழே விழுந்த பொருளைக் கண்டெடுக்காமல் விட்டுவிட்டு வந்தனையே. ஈதோ உன் குரு பக்தி?” என்று கேட்டார், குருநாதர்; பயணத்தில் அவருடைய பீதாம்பரம் தவறி கீழே விழுந்து விட்டதைச் சீடன் கவனியாமலிருந்ததால். சீடன் ‘‘புத்தி! குரு தேவா! புத்தி புத்தி”, என்று கூறிவிட்டு, பிறகு மிகக் கவனமாக, கண்ணுங் கருத்துமாகப் பணிபுரிந்து வந்தான். முடிவு என்ன தெரியுமா தம்பி? மடம் போய்ச் சேர்ந்ததும் ஒரு பெரிய "மூட்டை'யைக் கொண்டு போய், குருவின் முன் வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான் சீடன். “என்னடா இது?” என்று கேட்டார் குரு.

‘‘ஒன்று விடாமல் எடுத்து வந்தேன். கீழே விழுந்ததை யெல்லாம் எடுத்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தேன்” என்று கூறி, மூட்டையைப் பிரித்துக் காட்டினான் சீடன். அவ்வளவும் குதிரையின் லத்தி (மலம்).

குரு-சீட தொடர்பில் இப்படியெல்லாம் ‘ரகம்’ இருந்திருக்கிறது. கனம் சுப்பிரமணியம் இதில் ஒரு ரகம். பாவம்!

அன்புள்ள,

25-12-1955