அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஞாயிறு போற்றுதும்!
1

நாட்டுக்கும் ஆபத்து -
எல்லை காப்பதில் இராணுவம் -
எதிர்க்கும் போரணியில் நாம் -
பண்டைய போர்க்கருவிகளும் களக்காட்சிகளும் -
தமிழ்மொழி காப்புப் பிரச்சினை -
அரசியல் துறையில் மக்களாட்சியே எழுஞாயிறு!
இல்லாத் தமிழகம் இயற்கை பொருள்கள் தரும் -
மனித மிருகங்கள் விளக்கங்கள்

தம்பி!

என்ன? பொங்கலோ பொங்கல் எனும் மகிழ்ச்சிக் குரலொலி எழுச்சியூட்டத்தக்க முறையிலே கேட்டிடக் காணோம். ஆண்டுக்கோர் நாள் ஈண்டு எழும் அந்த இன்னிசை யைக் காணோமே! மாறாக, பொங்கலா? பொங்கல்! என்ற ஒகேட்கிற து. என் செவி பழுதானதால் ஏற்பட்ட விளைவா, அல்லது உன் மொழியிலேயே ஏற்பட்டிருக்கிறதா இந்த மாற்றம்? உன் விழியிலும், வழக்கமான விழா நாள் களிப்பொலி காணோம்; உருவமே தூசு படிந்த மாமணிபோன்று காணப்படுகிறது. புதுப் பொலிவு காட்டிடுவாய், போக்கிடுவாய், கவலையெலாம், முன்பெலாம். இப்போது கவலையை வெகு பாடுபட்டு மறைக்கப் பார்த்திடும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறாய் என்று எண்ணிடத் தோன்றுகிறதே. . . . என் நினைப்புத்தான் தவறா, அல்லது உன் நிலைதான் அதுபோலிருக்கிறதா? இயற்கையாக இன்முகம் காட்டிடுவாய், இந்நாள், பொன்னாள் அண்ணா இன்று! புகழ் மணம் கமழ்ந்திடு நிலையில் முன்னோர் வாழ்ந்தனர் என்ற நினைப்பு நெஞ்சுக்குத் தேனாகி நம்மைக் களிப்பிக்கும் திருநாள்! உழைப்பின் பெருமைக்கு ஈடு வேறெதும் இல்லை என்பதனை உணரும் நன்னாள்! - என்றெல்லாம் பேசிக் கொள்வோமே, முன்பு. இன்று? கோலம் இருக்கிறது விழா நாள் என்பதற்கு அடையாளமாக. ஆனால், உள்ளபடி விழாவுக்கான மகிழ்ச்சியும் காணோம், மகிழ்ச்சி பெறவேண்டும் என்ற விழைவும் மிகக் குறைந்து காணப்படுகிறது. ஏன்? காரணம் என்ன? இதழ் விரியா மலர்போல, இசை பயிலாக் குயில்போல, வளைந்தோடா அருவிபோல, சுவை தாராக் கன்னல்போல, துள்ளிடாத மான் கன்றுபோலக் காணப்படுகிறாய் - விழாக்கோலம் காண வருகிறேன் வினாக்கள் விட வைக்கிறாய்! மனைமாட்சி காண வருகிறேன், மதுரமொழி கேட்க வருகிறேன், இல்லத்தரசி தரு செல்லக் குழவியுடன் குலவிப் பாலும் பழச்சாறும் பாகும் பருப்பும் பக்குவமாய்ச் சமைத்த சோறும் பிறவும் உண்டு சொகுசாகத் தான் இருப்பாய், செக்கச் சிவந்திருக்கும் கன்னத்தாள் என் அத்தான்! என்று அழைத்திடுவாள் ஏன் என்று கேட்டபடி இருந்த இடமதனில் இருந்திடாமல் நீ பறந்திடுவாய் விருந்து பெற! இத்தனை கேள்விகளை இவ்வளவு வேகமுடன் தொடுத் திட்டால் என் செய்வேன்! சற்று பொறுமையுடன் சாற்றிடுவீர் உம் எண்ணம்! என்றே அம் மயில்கூற, வெட்கித் தலையதனை வேறுபக்கம் நீ திருப்ப, வேல் விழியாள் விடுத்திடுமோர் கெக்கலியை நான் கேட்டு, வேண்டும்! இது வேண்டும்! இன்னும் அதிகம் வேண்டும்! என்றெல்லாம் வேடிக்கை எழுப்பிடுவேன் - இது வாடிக்கை. ஆனால், இவ்வாண்டு - அழகு நிலாக் கண்டும் அல்லி மலராமல் இருப்பதுண்டோ! - பொங்கற் புதுநாள் வந்துற்றதென்றாலும், மென் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி அருகிருந்தும் எங்கு உள்ளோம் என்பதுவும் எந்நாள் இந்நாள் என்பதுவும் அறவே மறந்த நிலை கொண்டதுபோல் இருக்கின்றாய், பொங்கற் புதுநாளப்பா! பொன்னாள் நமக்கெல் லாம்! போக்கு பல காட்டிவிடும் புரட்டர்க்கு வாழ்வளிக்கும் புராண நாள் அல்ல, ஞாயிறு போற்றுதும்! எனும் நன்னெறி நடப்பவர் நாம் என்பதனை உலகறியக் கொண்டாடும் உயர் தனிச் சிறப்புள்ள உவகை பெறுநாள்! இந்நாளில் இவ்விதம் இருந்திட வேண்டுமென ஒருவர் மற்றவர்க்கு உரைத்திடவும் தேவையில்லை. அவரவரும் தத்தமது அன்பகத்தில் அகமகிழ்ந்து விழா நடத்திப் புனலாடி அணிந்திட்ட புத்தாடை அழகளிக்கப் பூங்காவிலாடிடும் புள்ளினமாய்த் திகழ்ந்து, பாங்காக மற்றவர்க்கும் பரிந்தளிப்பர் விழாச் சிறப்பை; பண்பு அது. வீடெல்லாம் நாட்டியுள்ளார் விழாக்கோலம், காண்கின்றேன்; என்றாலும் நரம்பிருந்தும் நாதம் எழுப்பாத யாழாக உள்ளதுவே! ஆம், தம்பி! மறுத்திடாதே, அறுத்திடுது உன் நெஞ்சை ஆழமாக ஓர் கவலை; ஒப்புக்கொள்; தவறில்லை; உள்ளத்தில் உள்ளதனை ஒருவர்க்கொருவர் கூறிக்கொளல் நன்று; கவலைதனைப் போக்கிடும் ஓர் மாமருந்தும் அஃதாகும். ஆகவே, அன்பால் எனை வென்ற அருமைத் திருநாட! உற்ற குறை யாதுனக்கு. உரைத்திடுவாய் - அகற்றிட வல்லோன் யான் என்னும் அகந்தை கொண்டல்ல உன்னை நான் கேட்டிடுதல்; கொட்டாமல் உள்ளத்தில் கவலை பல குவித்திடல் நன்றல்ல, குமுறல் கேடன்றோ? எனவேதான், உரையாடி நாம் நமது உள்ளமதில் இடம் கொண்ட கவலை எலாம் போக்க வழி காண்போம், வா, தம்பி!

ஒன்றல்ல என் கவலை, பல உண்டு கூறுதற்கு - கூறத் தயக்கமில்லை, "கூறிடு அண்ணா! நீ! கொட்டும் குளிர் தாங்கிக் கொடியோர் பகை தாங்கி, எல்லையிலே உள்ளாரே உடன் பிறந்தார், உயிர் கொடுத்து உரிமைதனைக் காத்திடும் உயர் குணத்தார்; அவர்க்கு அங்கு இன்னல்! கன்னல் சுவைபெற, இங்கு நாமா? ஓங்கி வளர்ந்துள்ள மாமலையின் அருகிருந்து மாற்றார் நுழையாமல், மானம் அழியாமல் காத்து நிற்கின்றார்; கடும் போர் எதிர்பார்த்து; நாம் இங்கு முக்கனிச் சுவை தேடல் முறை யாமோ, நெறியாமோ! என்னென்ன இடுக்கண்கள் கண்டிடுவர் அவர் அங்கு. நமக்கிங்கு விழாவும் ஒரு கேடா, வீணாட்டம் போடுவதா? மாடுமனை மறந்து மறவர்கள் போயுள்ளார், மாற்றரை எதிர்த்தடிக்க; நாம் இங்கு மகிழ்ந்திருத்தல் சரியாமோ?''

தம்பி! அதுதானே, உன் கவலை? அந்தக் கவலை உனை வாட்டுகிறது. நான் அறிவேன்; அறிந்ததுடன் அகமகிழ்ந்தேன்; ஆம், தம்பி! மகிழ்ச்சிதான்; பெருமையும் கொண்டிட்டேன். வீடுதனிலேயே விரும்பும் இன்பமெலாம் உண்டு எனக்கொண்டு, நாட்டு நிலை மறப்போர் நாட்டிலுள்ள காட்டினர்காண்! நாடு வாழ்ந்திடவே, வீடுகளில் நாம் உள்ளோம்; நாடு நாடாக, நாடு நமதாக இருப்பதனால்தான் தம்பி! வீடு வீடாக, வீடு விருந்தளிக்க விளங்கி வருகிறது. கேடொன்று நாட்டுக்கு வந்திட்டால், வீடெல்லாம் வீழத்தான்வேண்டி வரும், படகுதனில் ஓட்டை விழின், மூழ்கிடுவர், பிணமாவர்; வீடெல்லாம், நாடு காக்க வீறுகொள்வோர் இருந்து வரும் பாசறைதான், ஐயமென்ன! நாட்டின் நிலை மறப்போர், நாமல்ல, மறவரல்ல. வீட்டிலே இருக்கின்றோம், நாடு மறந்தல்ல! நாட்டின்மீது நாட்டம் காட்டிடும் பகைக் கூட்டத்தை ஓட்டிடச் சென்றிருக்கும் உடன் பிறந்தார் தமைமறந்து, உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டோம் உயிர் கொடுக்கும் படை அமைத்து என்றெண்ணும் உலுத்தர் அல நாம் யாரும்! களம் சென்றார் நம் தோழர். அவர் கால் பட்ட மண் மணக்கும்; மாண்பறிவோம்; அழைப்பு வரப் பெற்றால், அவரவர்க்கியன்றதனைச் செய்திடுவோம், அட்டியிலை! ஆனால், உருட்டி மிரட்டி வரும் ஊர் அழிப்போர் கண்களுக்கு, நாடு நடுங்கிற்று, வீடெல்லாம் பேச்சு மூச்சில்லை, சிரிப்பில்லை சீர் இல்லை, செய்தொழிலும் நடக்கவில்லை, எல்லோரும் ஏக்கத்தால் தாக்குண்டு, என்ன நேரிடுமோ என பேசிப் பீதி மிகக்கொண்டு பாதி உயிராயினர்காண்! எல்லையில் நாம் வந்து எக்காளமிட்டவுடன், அச்சம் மிகக்கொண்டு அம்மக்கள், கிடக்கின்றார். மங்கையரும் பூச்சூடார், மருட்சி மிக அதிகம். ஆடவர், நீராடார், நிலவாடார், உரையாடார், - ஒவ்வோர் கணமும் இறுதி வரும் உறுதி என எண்ணிச் சாகின்றார்! நாட்டிலே, பாட்டு இல்லை! பாதி வெற்றி இப்போதே நாம் பெற்றோம் - பயம் ஊட்டிச் சாகடித்தோம் அவர் களிப்பை!! என்று பேசிடவும் ஏளனங்கள் வீசிடவுமான ஓர் நிலை இங்கு இருந்திடுதல் ஆகாது; அது தீது. அங்ஙன மாயின், அக்கறை துளியுமற்று அகத்தில் பொறுப்பற்று, ஆவது ஆகட்டும், அனுபவிப்போம் உள்ளமட்டும், எனும் போக்கா, ஏற்புடைத்து? எனக் கேட்பர்; நீ அல்ல, தம்பி! கேட்கப் பிறந்து விட்டோம், கேட்டிடுவோம், வாட்டிடுவோம்! என்றே எண்ணிடும் எதிர்ப்பாளர் உண்டன்றோ; அவர் கேட்பர். பொறுப்பற்ற போக்கல்ல; அகத்தில் அக்கறை கொளல்வேண்டும். ஆனால், முகம் வெளுத்துப் போவானேன்! உறுதியுடன் போரிடுவோம் எதிரியுடன்; என்றாலும் போருக்கு நாமே போய்ப் பொறுப்பேற்றும் நிலைக்கு முன்பே, நடுக்கமுற்றோம் என்று பலர் நையாண்டி செயும் முறையில், நெய்யிழந்த கூந்தலினர்போலாகி, நிற்பதுவா தேவை! அந்நிலைதான், மாற்றார்க்கு இறுமாப்புப் பெற்றளிக்கும். அழிவு வருகிறது என்றஞ்சி அம்மக்கள் இப்போதே சாகின்றார் என்றுரைப்பர்; ஆதலாலே, விழா நடாத்த விருப்பமது குறைந்திருக்கும் நிலையிலேயும், மாற்றார் கண்டு மருளாமல், வெற்றி எமதே என்ற வீரம் நெஞ்சில்கொண்டு, விழாவும் மறவாமல் நடாத்துகிறார் இம்மக்கள். ஓஹோஹோ! நாம் நினைத்தபடி அல்ல! நமை விரட்டும் வலிவெல்லாம் கூட்டி வைத்துள்ளார் இம்மக்கள், அதனால்தான், குலை நடுக்கம் எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும் முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக் காட்டுகின்றார், என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும் மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம் கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம் அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர் பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல் வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள், ஆற்றலிலே ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும்! - என்பதறிந்துள்ளோம். எனவே, இறுதி வெற்றி நமதே எனும் நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம் கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல் விட்டுவிடத்தான் போமோ? - என்பதனால்தான் தம்பி! இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம் நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!!

தம்பி! இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே, பாழ் நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய், நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட வேண்டும் இன்றே; இப்போதே. - என்று இறைஞ்சுவதற்காக அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று!! திறந்தார் காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு, செத்திடுவீர், வாழ்ந்திடலாம்! - என்று செப்பும் நாளுண்டு - அதற்குச் சிவனே ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல், வேறோர் நாள் உரைப்பர், அறிவாய் நீ யாகம் செய்திடுவீர், சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற் புதுநாள் அஃது அல்ல. நாடு சிறந்திடவும், நம் வாழ்வு சிறந்திடவும், ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில், தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி, இந் நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க ஒப்பிடுவீர், திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை வீழ்த்திடத் தீட்டிடும் திட்டம்தனக்கு தட்டாமல் தயங்காமல், ஆவிதனைக்கூட அளித்து ஆதரவு தர முனைந்து நிற்கின்ற, முன்னேற்றக் கழகத்தார், மூதறிஞர் போற்றிய பொங்கற் புதுநாளை விழாவாக்கி மகிழ்கின்றார்.

நாட்டுக்கு வந்துற்ற ஆபத்தை நீக்கிடும் ஓர் திட்டத்துக்கு ஆக்கம் தரும், மேலும் உற்சாகம், ஊக்கம், உறுதிபெற, விழா, உணர்வளிக்கும், தம்பி! இது விளக்கம் தர மட்டும் தொடுத்திடும் சொல்மாலை அல்ல; உண்மை.

கார்கண்டு களிகொண்டு கழனி செழிக்குமென ஊர் வாழ உழைத்திடும் நல்உழவன் உரைக்கின்றான் - உண்மை - ஆனால், களியாட்டம் காட்டிக் காசுபெற விழையும் கூத்தர், கார் கண்டால் கலங்கிப்போய், கை பிசைந்து நிற்கின்றார். மாமழையும், சிற்சிலர்க்குக் கசப்பளிக்கக் காண்கின்றோம், அஃதேபோல், நம் கழகம் மேற்கொண்ட நற்போக்குதனைக் கண்டு, எல்லோரும் பாராட்டி, ஏற்புடைய செயலென்று வியந்துரைத்தும், சிற்சிலருக்குக் கசப்பு உளது; நாமறிவோம்; அவர்க்கெல்லாம் இது உரைப்போம், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றனர் தமிழர், கொற்றம் தனித்தான் அந்நாளில். உலகழிக்க ஒருபோதும் ஒப்பார்கள். உலகு மெச்ச வாழ்ந்தோர் வழிவந்தோர். இன்று முளைத்துள்ள எதிர்ப்புதனை முறியடிக்க மட்டும், புதுப்போக்கு நாம் கொண்டோம் என்று எண்ணல் சரியல்ல; என்றென்றும் எதிரிகளின் கொட்டம் அடக்கிடவும், எதிர்ப்பை முரித்திடவும், ஏற்ற விதமான போக்கும், நோக்கும் கொள்வோம், அதற்கேற்ற முறைபற்றி அறிவாளர் ஆய்வாளர் எடுத்துரைக்கும் கருத்து களைத் துச்சமெனக் கூறும் நச்சு நினைப்பினர் அல்ல நாம், அதுபோன்றே, வந்துள்ள போர் தன்னால், எழுந்துள்ள புது நிலையும், புது நினைப்பும், ஆராய்ந்து பார்த்திடவும், அன்புரை நடத்திடவும் அறநெறியில் நிற்பவர்கள் முனைவார்கள் என எண்ணுகிறோம். அறவோர் வழிகாட்டட்டும் என்று அதனை விடுக்கின்றோம்.

அண்ணா! அதுபோல, நாமிருந்தோம், அருவருக்கத் தக்கபடி சிலர் போக்குக் காட்டுகின்றார் நமக்கெதிராய், காண்கிலையோ என்கின்றாய். காண்கின்றேன்! குன்மமொடு குடல்வாதம், குட்டம் குமுட்டலெனும் பல்வேறு நோய் கொண்டோம் பாரிலுண்டு, பண்டுமுதல்! சொறி சிரங்கு கொண்ட உடல் காண்கின்றோம்; அவர்போல எமக்கும் ஆகவேண்டுமென எண்ணப்போமா! அஃதே போல, உள்ளம் சிலருக்கு, நோய்க்கூடு, என் செய்ய. மாமருந்து அறிந்துரைக்க நேரமில்லை, மாமலை ஏறுதல்போல், வேலையுளது, அதில் ஈடுபட்டிருக்கின்றோம் - நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை எதிர்த்து அழித்திடத் திரண்டு நிற்கும் வீரப்போரணியில் நாம் உள்ளோம், கடமை உணர்ச்சி யுடன். இந்நிலையில், கருத்து வேற்றுமை எழத்தக்க பேச்சதனில் கலந்துகொள்வதில்லை என்ற "விரதம்' பூண்டுள்ளோம். அதனைக் கலைத்திடவும் குலைத்திடவும் முயற்சி சிலர் மேற்கொண்டபோதினிலும், நாம் நமது உறுதி தளராமல், நெறியிற் பிறழாமல், நேர்மையுடன் கடமையினைச் செய்தபடி இருப்போம்.

மஞ்சளும் இஞ்சியும், பிஞ்சாகக் கத்தரியும் அவரையும் காண்கின்றேன் உன் மனையில், மாவும் பலாவும் வாழையுடன் இருந்திடும் ஐயமில்லை. ஈங்கு இதுபோல இருந்திடும் நிலைமை, இன்று ஏங்கித் தவிக்கும் நிலையுள்ளார்க்கெல்லாம் கிட்ட வேண்டும்; நம் ஆட்சி, நல்லாட்சி, புதுமை நிறை ஆட்சி, புரட்சி ஆட்சி என்று பல்வேறு பெயரிட்டுக் கூறுகின்றார்; நோக்கம் இஃதன்றி வேறென்ன இருந்திடும்.

இயற்கை வளம் உண்டு. செய்பொருளை நேர்த்தியுடன் ஆக்கித்தர உழைக்கும் திண்தோளர், வகை காட்டும் நுண்ணறி வினார், மிக உண்டு, எனினும், இங்கு, காய்க்காத மாவாக, கறக்காத பசுவாக, வாழ்வுகொண்டோர் தொகையே மிகுந் திருத்தல் காண்கின்றோம்.

இன்றுள்ள இந்த நிலை பண்டு இங்கு இருந்ததில்லை என்றுணர, இலக்கியமே சான்றளிக்கக் காண்கின்றோம். எழுத்தறிவே பல நாடு, பெற்றிராத காலத்தே, தமிழில் உதித் தெழுந்த மொழிகளால் வெவ்வேறான ஆந்திரமும் கேரளமும் கருநாடமும், அழகு தமிழகமாக இருந்தகாலை, இலக்கியச் சிறப்பினை ஓர் அணியாய்க்கொண்டு திகழ்ந்திருந்ததென்றால் பொருளும் என்ன? வாழ்க்கையிலே வளம் நிரம்பி, மக்கள் மன வளமும் நிரம்பப்பெற்று இருந்தார். ஆங்கு புலவர் குழாம் அரசோச்சி அரசர்க்கெல்லாம் அறவழியைக் காட்டித் துணை நின்றதெனும், உண்மையன்றோ விளங்குகிறது.

எனவே திட்டமிட்டுச் செயலாற்றி, இயற்கை வளத் தினையே தக்கபடி பயன்படுத்திடுவோமேல், செல்வம் வளரும் என்பதும், அதற்கேற்ற கருப்பொருள் உண்டு இங்கு நிரம்ப என்பதும் புலப்படுகிறதன்றோ?

வளரும் செல்வம் ஏதோ ஓரிடம் சென்று முடக்கிக் கொண்டுவிடாமல் இருக்க, துணிவும் தெளிவும், விரைவும் அறிவும்கொண்ட முறையில் பணியாற்றிடும் நல் அரசு முறை வேண்டும்.

இவ்விரண்டும் கிடைக்கப்பெற்று இருந்ததால், முன்பு இங்கு, எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது - அக் காலத்திருந்த அண்டை அயல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது.

போர்க்காலமானதால், இன்று ஓரளவு, போர்க்கருவிகள் பற்றிப் பொதுமக்கள் படித்தறிந்துகொள்ளவும், கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், அவர் களிலே பெரும்பாலோர்கூட, பிற நாடுகள் "வில் அம்பு' மட்டுமே கொண்டிருந்த நாட்களிலேயே, இங்கு (அக்காலத்துக்குப்) புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன என்பதனை அறியார்கள். புலவர்பெருமக்கள் அவை குறித்து எடுத்துரைக்கும்போது நம் மக்களிலே மிகப்பலருக்கு, நம்பமுடியவில்லை. காரணம் தெரியுமே, தம்பி! பண்டையப் போர்க்கருவிகள்பற்றிப் புலவர்கள் பேசும்போது, புராணீகர்கள் அதனைவிட விந்தை மிகுந்த "ஆயுதங்கள்'பற்றி, சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார்கள் - கேட்கும் மக்கள் அவை முற்றிலும் கற்பனை, புலவர் கூறுவதோ முற்றிலும் உண்மை என்பதை உணர முடிவதில்லை.

படிக்க எளிதான முறையில் புராணக் கதைகள் உள்ளன - எனவே, மக்கள் அவைகளையே அதிகமாகப் படித்துப் படித்து அந்தக் கற்பனைகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறார்கள்.

தமிழர்கள், அந்த நாட்களிலே நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல,

கடலரண்
காட்டரண்
மலையரண்
மதிலரண்

எனும் பாதுகாப்புகளையும் பெற்றிருந்தனர். போர்முறை களிலேயும் புதுக்கருத்துகள் கொண்டதனால், அற்றை நாளில் தமிழர் பெற்ற வெற்றிகள், இன்றும் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. நெடுந்தொலைவு படையுடன் சென்று போரிட்டு வெற்றிபெற்ற வீரக்காதைகள் பலப்பல. போரிலே வெற்றி காண வீரம், அடிப்படை என்பது மறுக்கொணாத உண்மை என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கிய மானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்ததால், பிற நாட்டாரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர்.

வளைவிற் பொறி
தள்ளிவெட்டி
கருவிரலூகம்
களிற்றுப்பொறி
கல்லுமிழ் கவண்
விழுங்கும் பாம்பு
கல்லிடு கூடை
கழுகுப்பொறி
இடங்கணி
புலிப்பொறி
தூண்டில்
குடப்பாம்பு
ஆண்டலையடுப்பு
சகடப்பொறி
கவை
தகர்ப்பொறி
கழு
அரிநூற்பொறி
புதை
குருவித்தலை
ஐயவித்துலாம்
பிண்டிபாலம்
கைப்பெயர் ஊசி
தோமரம்
எரிசிரல்
நாராசம்
பன்றி
சுழல்படை
பனை
சிறுசவளம்
எழு
பெருஞ்சவளம்
மழு
தாமணி
சீப்பு
முசுண்டி
கணையம்
முசலம்
சதக்களி

தம்பி! இத்தனை விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன், தமிழரிடம், தனியாக வீரர் தமதாற்றலை விளக்கப் போர்வாளும் கேடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றார்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தடி என்பனமட்டுமே இருந்த நாட்களில்.

இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள போர்க்கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை, மிக மிகச் சாதாரணம்; இப்போதைக்குப் பயன் தருவன அல்ல. அந்தப் போர்க்கருவி களை ஏந்திக்கொண்டு, களம் சென்றால், இன்று கைகொட்டிச் சிரிப்பர், மறுக்கவில்லை. ஆனால், இவை என்று இருந்தன - இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும்போதுதான் சிறப்பு விளங்கும்.

களமே சென்று பார்ப்போம், வா, தம்பி!

அதோ பார்த்தனையா; பகைக் கூட்டத்தார் உடைவாளை உருவிக்கொண்டு பாய்ந்து வருகின்றனர் தமிழரைத் தாக்க! தமிழர்களும் உடைவாளை உருவிக்கொண்டு போரிடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாய்; இரு பிரிவினிடமும் உடைவாள் இருப்பினும், வாள் வீச்சு முறையின் நேர்த்தி யாலேயும், களத்திலே காட்டிடும் துணிவாலும், போரிடும்போது எழும் துரிதத் தன்மையாலும், தமிழரே வெற்றிபெறப் போகின்றனர் என்று நினைக்கிறாய் - தவறல்ல! இயலும். ஆனால் இதோ கவனி. . . பாய்ந்துவருகிற பகைப்படைமீது, மழை பொழிவதுபோல அம்புகள் பாய்கின்றன - அலறித்துடிப்பதைப் பார்! இவ்வளவு அம்புகளை விடவேண்டுமானால் ஒரு பெரும் படை களத்திலே எதிர்ப்புறம் நிற்கவேண்டுமே, தெரிகிறதா? இல்லை அங்ஙனமெனின் எப்படி இது முடிகிறது?

தம்பி! புராண கால நாடாக இருப்பின், இவ்வளவு அம்பு களும், மகாராஜா செய்த "மகா யாக பலனாக, பிரசன்னமான பரமேஸ்வரன் தந்த வரத்தின் பயனாக, அந்தரத்திலிருந்து அஸ்திரங்கள் சரமாரியாகக் கிளம்பி சத்ருவைத் துவம்சம் செய்கின்றன' என்று கூறுவர்; நம்புவர்.

ஆனால், இது தமிழகக் களம்; தமிழ்வீரர்கள் போரிடு கின்றனர்; அவர்கள் கடவுளர்க்கு இத்தனை தொல்லை தருவதில்லை!

உற்றுக் கவனித்தால் தெரியும், தம்பி! அவ்வளவு அம்பு களும், தமிழர்களின் கோட்டையிலிருந்து கிளம்புகின்றன. கோட்டை மதிற்சுவரின்மீது நின்றுகொண்டல்லவா, இதனைச் செய்யமுடியும்? ஆமாம், என்கிறாய்; ஆனால், கோட்டை மதிற் சுவரிலே ஒருவரும் இல்லையே!

விந்தைதான் என்கிறாய்! விந்தை விளக்கப்படுகிறது பாரேன்.

நிறைய அம்புகளைக் கோத்துவிட்டால், தானே வளைந்து மிக வேகமாக எதிரிகள்மீது பாயும் முறை கொண்டது, வளைவிற் பொறி! அந்தப் பொறிதான் இந்தப் போடு போடுகிறது!

வளைவிற்பொறி ஒன்று செய்து முடிக்கும் செயலைச் செய்திடப் பலப்பல வீரர்கள் வேண்டும்.

இந்தப் போர்க்கருவி இருப்பதனால், சிறிய அளவுள்ள படை, கோட்டைக்குள் இருந்துகொண்டே, தாக்க வரும் பகைப் படையைச் சிதைத்திட முடிகிறது.

துணிச்சல் மிக்க அப்பகைவர்களிலே சிலர், அம்புக்குத் தப்பிவிடுவதுடன், கோட்டை நோக்கிப் பாய்கிறார்கள்; மதில் மீது ஏறுகிறார்கள் - அடடா! உள்ளே குதித்துவிட்டால். . . . . .!!

பார்த்தனையா, தம்பி! எத்தனை பெரிய கருங்கற்கள் வீசப் படுகின்றன, பகைவர்மீது! மதிலிலே ஏறினவர்களின் கதியைப் பார்த்தனையா? உருண்டை வடிவமான கருங்கற்கள் மேலே விழுந்ததால் மண்டை நசுக்குண்டு, கீழே விழுகிறார்கள் - அசையக் காணோம் - எங்ஙனம் அசைய முடியும்! பிணமாயினர்!!

அது சரி, இத்தனை பெரிய உருண்டையான கருங்கற்களைத் தூக்கி எறிய முடியாதே, ஆட்களால்? என்று கேட்கின்றாய், ஆமாம், முடியாது! ஆனால், ஆட்களா தூக்கி வீசினார்கள் அந்தக் கற்களை!! இல்லை, தம்பி, இல்லை. அவ்வளவும் கல்லுமிழ் கவண் - கல்லிடுகூடை - இடங்கணி - இந்தப் பொறிகள் செய்த வேலையன்றோ!! பகைவர் பீதி அடையாம லிருக்க முடியுமா?

அகழியிலேயே குதித்துவிட்டான் - அசகாய சூரன்போல் இருக்கிறது! ஆனால், அதோ! ஏன் அலறுகிறான்? மேலே போகிறான்! மேலே தூக்கிச் செல்லப்படுகிறான். தூண்டில் போடப்பட்டிருக்கிறது! தூண்டில் தண்ணீரிலேயே இருந்திருக் கிறது, அவன் அறிவானா அதனை? அகப்பட்டுக்கொண்டான், மீன் தூண்டிலிற் சிக்குவதுபோல்!