அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்



ஹெலிகாப்டரும் இரதமும்!
2

பத்தினிப் பொண்ணு
பாரதக் கண்ணு

என்று பாடுகிறார்கள்; தாளம் கொட்டுகிறார்கள்.

தீயின் அருகே செல்லச் செல்ல, அவள் கண்களிலே ஓர் மிரட்சி ஏற்படுகிறது; வாலிபனுக்கு அது விளங்குகிறது.

“ஜெய் மகாதேவ்! ஜெய்சங்கர்! ஜெய்சீதாராம்!” என்று கோஷம் கிளம்புகிறது.

ஆயிரம் நாவுகள் படைத்த கோர உருவம்போல, நெருப்புத் தெரிகிறது, பெண்மணியின் கண்களுக்கு; எனினும் அவள் அருகே செல்கிறாள்.

மகளே! அருமை மகளே! என்று தாய், அழுது என்ன பயன்? அவள் உத்தமி பத்தினி, எனவே அவள் சுட்டுச்சாம்பலாக்கப்பட வேண்டியவள்! இளம் பெண், இந்த வயதிலா இந்தக் கதி என்று சிலர் பச்சாதாபப்படலாம். ஆயினுமென்ன, அவள் பாரதப் பெண் -பதி பிணமானான், அவன் உடல் அதோ நெருப்பில், இவள் இனிப் பூவுலகில் இருப்பானேன். உயிருடன் இருந்தபோது யாருடன் மஞ்சம் ஏறிக் கொஞ்சிக் கிடந்தாளோ அவனுடன்தான் இப்போதும் இருக்க வேண்டும். அதுதான் பாரதப் பண்பாடு. போ, மகளே, போ. நாதன் இருக்குமிடத்துக்குத்தான் நாயகி செல்ல வேண்டும். அது மலர் தூவிய பஞ்சணையானாலும் சரி, கொழுந்து விட்டெரியும் நெருப்பானாலும் சரி, அதுதான் உன் இடம்; போடி பெண்ணே, போ, போ. நெருப்பு அணைந்திடுவதற்குள் போ. நீறு ஆகிவிடுவாய். நேராகச் சொர்க்கம் சேர்ந்திடுவாய். சதியும் பதியும் இணைபிரியாமல் வாழ்வீர்கள். அவன் செல்கிறான், உன்னை அழைக்கிறான், போடி மகளே, போ” - என்று பாரதப் பண்பாடு கூறுகிறது. அந்தப் பெண் செல்கிறாள் - வாலிபன் பதைக்கிறான். நெருப்பில் இறங்குகிறாள்.

“ஐயோ” என்று அலறித் துடித்து, அதைவிட்டு வெளிவர எழுகிறாள். நீண்ட கம்புகளைக்கொண்டு “சாஸ்திர சம்பிரதாய ரட்சகர்கள்” அவளை மீண்டும் நெருப்பில் தள்ளுகிறார்கள். அவள் உடலைத் தீ பற்றிக்கொள்கிறது - வேதனையால் துடிக்கிறாள் - வேதமுணர்ந்தவர்கள் அவள் தீக்குண்டத்தைவிட்டுவெளி ஏறாவண்ணம், கோல்கொண்டு தடுத்து, அவளைப் பிணமாக்குகிறார்கள். பாரதத்துக்கு மற்றோர் பத்தினி கிடைத்து விட்டாள். ஆனால் ஒரு ஒப்பற்ற சீர்திருத்த வீரனும் கிடைக்கிறார். அவர்தான் ராஜா ராம்மோகன் ராய்.

தன் அண்ணி, உடன்கட்டை ஏறியபோது, வைதீக வன்கணாளர்கள் காட்டிய குரூரத்தைக் கண்டபோதுதான், ராஜாராம் மோகன் ராய், மடைமையில் விளையும் கொடுமை குறித்து உணரமுடிந்தது. சுடலையில் அவர் எடுத்துக்கொண்ட சூளுரையை நிறைவேற்ற அவர் இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்துவரை சென்று போரிட்டார் - வெற்றி கண்டார். சதி சட்டப்படி தடுக்கப்பட்டது. வைதீகர்கள் அவர்மீது காட்டிய குரோதம் கொஞ்சமல்ல. அவர்கள் சாஸ்திரத்தை, யுகயுகமாக இருந்து வந்த சம்பிரதாயத்தை எடுத்துக் கூறினர். ராஜாராம் மோகன் ராய்க்கு சுடலையில் கண்ட காட்சி உடனே மனக்கண்ணில் தெரியும். அவர் இதயத்தில் பெருநெருப்பு மூளும். பொறிகள் வார்த்தைகளாகி வெளிவந்து, வைதீகத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிற்று.

சதியை ஒழித்தார் ராஜா ராம் மோகன் ராய்!

நான் அறிவேன்! நான் அறிவேன்! உடன்கட்டை ஏறுவது என்பது எவ்வளவு கொடுமை என்பதை நான் அறிவேன், என் கண்ணால் கண்டேன், அலறினாள், துடித்தாள் உயிருக்காக மன்றாடினாள், உலுத்தர்கள் என்ன செய்தனர்? கோல் கொண்டு அவளை நெருப்பில் தள்ளினர் - உயிர் கருக்கினர்.

அபலையின் அழுகுரலைக் கேட்டால், கல்நெஞ்சக் காரனுக்கும் கருணை பீறிட்டெழும். அந்த அழுகுரல் பிறர் செவியில் விழக்கூடாது என்பதற்காக வைதீக வெறியர்கள், காது செவிடு படும்படி சங்கும் ஊதினர், தாளம் தட்டினர், மேளம் கொட்டினர், பஜனைச் சத்தமிட்டனர், எல்லாம் ஒரு பெண்ணைப் பிணமாக்க; தங்கள் பைத்தியக்கார முறையை வாழவைக்க; நான் கண்டிருக்கிறேன் அந்தக் கயமையை - என்று ராஜாராம் கர்ஜனை புரிந்தார்; தர்க்கம் நடத்தினார்; ஏடுகள் தீட்டினார்; வாதுக்கு வந்தோரை முறியடித்தார்; வஞ்சகரின் எதிர்ப்புகளைச் சமாளித்தார்; சீமை சென்று பேசினார்; பார்லிமென்டில் சொற் பெருக்காற்றினார்; வென்றார்; சதி எனும் மடமையைக் கொன்றார்.

பாரதத்தில் இப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாகச் ‘சதி’ நடக்கிறது.

சட்டம் இருக்கிறது; எனினும் ‘சதி’ நமது பாரதப் பண்பாட்டின் சின்னம் என்று கருதுவோர் இருக்கிறார்கள்; அவர்களிடம் ஒரு புதுத் துணிவும் காணப்படுகிறது.

“மதுந்தா என்ற இடத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் இறந்துவிட்டதும் அவருடனேயே ‘உடன் கட்டை’ ஏறியதாகச் சென்ற கிழமை ஒரு செய்தி கிடைத்திருக்கிறது

தனது கணவன் உடல் எரிந்துகொண்டிருக்கும் போது, மஞ்சள் நிறச் சேலை அணிந்துகொண்டு, கழுத்தில் ஒரு மாலையுடன் தோன்றி மயானத்தில் கூடியிருந்தவர்களிடம் தான் உடன் கட்டை ஏறப்போவதாகத் தெரிவித்துவிட்டு நெருப்பில் குதித்துவிட்டாளாம்.

அந்தப் பெண்ணை எவரும் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவில்லை.

நெருப்பில் விழுந்த அந்தப் பெண், துடித்துத் துடித்து அலறினாளாம். ஆனால் அந்த அலறலைவிட அதிக உரத்த தொனியில் தாரை, தப்பட்டைகள் முழங்கினவாம்; குருக்கள்மார் வேதங்கள் ஓதினராம்; சில நிமிட நேரத்தில் அந்தப் பெண் சாம்பலானாளாம்.”

நாடு, எவ்வழி நடத்திச் செல்லப்பட வேண்டும் என்பதில் ஓர் திட்டவட்டமான கொள்கையில்லாததால், விளையும் கோரங்களில் இஃதொன்று, வேறென்ன?

பாபு ராஜேந்திர பிரசாத் தமிழகத்துச் சுற்றுப் பயணத்தில், ஓரிடத்தில்,

“நாடு இப்போது பழைய காலத்திலும் இல்லை; புதிய காலத்திலும் இல்லை; இவை இரண்டும் போட்டியிடும் ஓர் இடைக் காலத்தில் இருக்கிறது” என்ற கருத்தைக் கூறியிருக்கிறார்.

அவர் பழமையின் பக்கமா, புதுமையின் சார்பிலா என்பதை அறிவிக்கவில்லை. அவருடைய அலுவல்கள் அதனை அறிவிக்கின்றன.

திருப்பதியின் தெரிசனம். சமஸ்கிருத பரீஷத்தில் பிரசன்னம், மடாதிபதியின் சமயப் பிரசார ஸ்தாபனத்தில் பேச்சு - இப்படி அவர் அலுவல்கள்.

மதத்தின் பெயர் கூறிக்கொண்டு எப்படிப்பட்ட மூடத் தனத்தையும் செய்ய வைக்கலாம் என்ற நெஞ்சழுத்தம்,வைதீகத்தின் துணை கொண்டு ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. யாராருக்கோ ‘யோகம்’ அடிக்கிறது மனிதர்களைத் தள்ளிவிடுங்கள். நாய்க்கு அடித்திருக்கிறது யோகம்! மஞ்சள் குங்குமம் தடவி, மலர் சூட்டி, விருந்து வைத்துப் பூஜை செய்திருக்கிறார்கள், நாய்களுக்கு!

இங்கு, நாம் தம்பிரான்களுக்கு ஏனய்யா தங்கப் பாதக். குறடு, சைவத்தைப் போற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு ஏன் மாமிச மலைகளைப் பல்லக்கில் ஏற்றிச் சுமந்து திரிகிறீர்கள் என்று கேட்கிறோம்.

சங்கரர் தந்து சென்ற அறிவு விளக்கம் ஆத்மீக வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு, பாத பூஜை செய்தால் பவப்பிணி போகும் என்று நம்பிக்கொண்டு, காலைக் கழுவி நீரைக் குடிக்கிறாயே என்ன கேவலமான புத்தி ஐயா! உனக்கு என்று கேட்கிறோம்.

இப்படியா கேட்கிறாய், என்னைத் திருத்த நீ யார், என் விருப்பம் போல் நான் செய்வேன்; எனக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் புனித ஏடுகளிலுள்ளதை, பூஜிதர்கள் கூறுவதைக் கேட்டு நான் நடந்து கொள்வேன்; அதைத் தவறு, அறிவீனம் என்று விளக்கிட நீ ஆயிரம் காரணம் காட்டுவாய்; அதனாலென்ன, நீ சொல்வதாவது நான் கேட்பதாவது என்று நம்மிடம் வாதாடுகிறார்கள். வைதீகத்தின் பிடியிலுள்ள மக்கள் நாய்க்குப் பூஜை செய்திருக்கிறார்கள் - புல்கானின் வருகைக்காக நாடு விழாக் கோலம் கொண்டிருக்கிற இப்போதுதான்!

இப்போது டில்லியில் வரவேற்பும், பம்பாயில் இராஜோ பசாரமும் பெற்றுக் கொண்டிருக்கிறாரே, இந்தியாவின் நண்பர் நேபாள மன்னர் - அவருடைய நாட்டில்.

நாய்கள், மங்கள ஸ்நானம் செய்விக்கப்பட்டு, மஞ்சள் குங்குமம் அணிவிக்கப்பட்டு, மாலைகள் சூட்டப்பட்டு, காத்மாண்டு நகரவீதிகளில் செல்கின்றன! கல்லடிபட்டுக் கொண்டும், எச்சில் இலை பொறுக்கிக் கொண்டும், ஒன்றுக்கொன்று கடித்துக்கொண்டும், குரைத்துக் கிடக்கும் இந்த நாய்களுக்கு, இப்போது விசேஷ விருந்து அளித்து விழுந்து கும்பிடுகிறார்கள்.

யமதர்ம ராஜனுடைய வாசலில் இரண்டு நாய்கள் காவலாம்.

நாய்களுக்கு இங்கு இந்தப் பூஜை செய்தால், யமதர்மனுக்குத் திருப்தியாம்.

யமனுக்குச் சந்தோஷம் என்றால் என்ன - மரண பயம் கிடையாது.

எனவே இந்த நாய் பூஜை நடக்கிறது - தீபாவளிப் பண்டிகையின் போது.

நாய்க்கு நடத்தப்படும் பூஜை போலவே, எருமைக் கிடாவுக்கும் பூஜையாம்.

நேபாள நாட்டுத் தீபாவளி இவ்விதம் இருக்கிறது.

இங்கே பசுவுக்குப் பூஜை செய்வோரும், பாம்புக்குப் பால் ஊற்றுவோரும், செச்சே இது என்ன பைத்யக்காரத்தனம், நாய்க்குப் பூஜையா, மஞ்சள் குங்குமம், மாலை மரியாதையாம், பூஜையாம் நாய்க்கு. இதுவா பக்தி? இதுவா மதம்? என்று கேபேசுவர்.

இங்கு பசு, பாம்பு - அங்கு நாய்.

எல்லாம், மதத்தைப்பற்றி மனதிலே குடிகொண்டிருக்கிற மயக்கத்தின் விளைவுதான்.

நாய்களுக்குப் பூஜை செய்யும் நாடு நேபாளம் என்று ஒரு மேயோ கூறிவிட்டால் மட்டும், கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறது; நாம் மதத்தின் பெயரால் மூடத்தனம் நிலவுகிறது என்று கூறினாலோ, ஏடா, மூடா, எமது மார்க்கத்தில் பொதிந்து கிடக்கும் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் நீ அறிவாயா? என்று பேசிடும் பெரியவர்கள் கிளம்பிவிடுகிறார்கள். இதோ நாய்களுக்குப் பூஜை நடக்கிறது.

அருவருப்பு அடைவோர் இல்லை, வேண்டுமானால், விஷயம் கேள்விப்பட்டதும். இங்கு அந்த பூஜை முறையின் விவரம் தெரிந்துகொள்ள ஆவல்கொள்வோர் கிடைப்பர்.

“நாய் என்றால் கேவலம் என்று பொருளா? தெரியுமா, பைரவர் என்று நமது புனித ஏடுகளில் கூறப்பட்டிருப்பது, அவருக்கு வாகனம் நாய்தான்” என்று ஆதாரம் பேசுவர் பஜனைக் கூடத்தார்.

நாயைக் கும்பிடுவது பற்றி இந்தச் சூனாமானாக்கள் கேபேசுகிற ôர்களே நாயிடம் கொஞ்சி விளையாடலாமா, நாய்க்கு பிஸ்கட்டும் பாலும் கொடுப்பதைக் கண்டித்தார்களா? நாய் வளர்த்து, நம்மையும் நாய் வளர்க்கப் பழக்கப்படுத்திய வெள்ளைக்காரனைக் கண்டித்தார்களா? நாய், சுதந்திரப் போருக்குத்தியாகம் செய்தது இவர்களுக்குத் தெரியுமா? நாய் செய்த தியாகம்கூடச் செய்யாதவர்கள்தான் இந்தச் சூ.மா.க்கள் கேளீர், கதையை. சத்யாக்கிரகத் தொண்டரைத் தாக்க ஒரு வெள்ளைக்கார வெறியன் ஓடி வந்தான். கையில் துப்பாக்கி, நெஞ்சில் வஞ்சகம். சத்யாக்கிரகி என்ன செய்வான்? ஓடாதே, கோழையாகாதே என்று மனம் கூறிற்று. புத்தியோ, ஓடு ஒளிந்துகொள், அது கோழைத் தனமாகாது, பாரததேவியின் விலங்கினை ஒடித்திட நீ சேவை செய்ய வேண்டும், அதற்காக உயிர் வாழ வேண்டும், எனவே இப்போது உயிரைக்காப்பாற்றிக்கொள் என்று இடித்துரைத்தது. அவன் ஓடினான், அவனா ஓடினான், அடிமை இந்தியா ஓடிற்று! ஆங்கில ஏகாதிபத்யம் துரத்திக்கொண்டு வந்தது. அப்போது கேவலம் ஒரு நாய் - ஆனால் பாரதத் திருநாட்டிலே பிறந்து வளர்ந்த நாய், கிளம்பிற்று வீராவேசமாக! நாய் பாரதத்தின் சேய் என்று உரிமையுடன் முழக்கமிட்டது; வெள்ளையன் மேலே பாய்ந்தது, குரல் வளையைக்கடித்தது; அவன் திணறினான், கூவினான். ஏகாதிபத்யம் மரணக் கூச்சலிட்டது; நாய் பாரத மண்ணிலே பரங்கி ஆதிக்கமா, என்று கேட்கவில்லை; ஆனாலும் தேசபக்தர்களின் பேச்சு அந்த நாயின் உள்ளத்திலேயும் வீராவேசத்தை ஊட்டி விட்டிருக்க வேண்டும் - எனவே அது புலியாயிற்று. போர், கடும்போர் பைரவருக்கும் பரங்கிக்கும் போர் மூண்டது! இறுதியில், அந்தப் பாதகன், பரங்கி, தன் கைத்தடியால் நாயின் மண்டையில் ஓங்கி அடித்தான் - இரத்த வெள்ளம் - கடைசி முழக்கம் - நாய் மண்ணிலே பிணமாயிற்று செத்தும், அதன் கண்கள் மூடிக்கொள்ளவில்லை - அன்னியனைவிட மாட்டேன் என்று அப்போதும் கூறுவது போலிருந்தது.

அப்படிப்பட்ட ‘நாய்’ சேவை செய்ததை அறியாத இந்த அறிஞர்களும், பெரியார்களும், இப்போது நாய் பூஜை செய்வதைக் கேவலமாகப் பேசுகிறார்கள். இதைத் தேசியவாதியாகிய நான், செக்கிழுத்த சீலரின் வழி நிற்கும் நான், அனுமதிக்க மாட்டேன் - என்று பேசி, தங்கள் திறமையைக் காட்டிக் கொள்ளவும் சிலர் உண்டு - ஒருவராவது, இது என்ன கேவலப் போக்கைய்யா, நாயைப் பூஜித்தா நாதன் அருளைப் பெறுவது என்று கேட்க மாட்டார்கள்? ஏன்? நாதன் அருள் பெற்றதாகக் கூறப்பட்டுள்ள புண்யக் காதைகளில், இதைவிட அருவருப்பான நிகழ்ச்சிகள் உள்ளன - படித்தும் பக்கம் நின்று கேட்டும் பரவசப்படும் நாடாயிற்றே!

நாய்களுக்குப் பூஜை செய்வது, கேவலம்தான், ஆனால் அதைக் கேட்டால், கைகொட்டிச் சிரித்திடத்தான் தோன்றுகிறது. வேறென்ன என்பார்கள்.

கேட்டதும், கோபமும் வேதனையும் கிளம்பத்தக்க செயலிலும், மதத்தின் வழி நிற்பதாகக் கூறிக் கொள்வோர், இப்போது ஈடுபடுகிறார்கள்.

வாரீர், வணங்கிடுவோம் வாரீர், இந்த உத்தமனை மறவாதீர், இவன் நமக்காக, நமது ஜீவனாம் இந்து மதத்துக்காக சர்வபரித் தியாகம் செய்த மகான - மாவீரன். உயிரைத் துச்சமென்று எண்ணி, மார்க்கத்தை இரட்சித்த மகா புருஷன். நமது புராதன மார்க்கமாம் இந்து மார்க்கத்துக்கு பேராபத்து நேரிடும் போதெல்லாம், இப்படிப்பட்ட ‘ரட்சகர்’ அவதரிப்பது நமது பாரதத்துக்கே தனிச் சிறப்பளிக்கிறது. இந்தப் பாரத வீரனை, இந்து மார்க்க ரட்சகனை, மதக்காவலனை, கொண்டாட வாரீர் - என்று அழைத்திருக்கிறார் ஒரு பாரத்வாசி.

இவ்வளவு புகழுரைகளும் அர்ச்சித்துக் கொண்டாட வரும்படி கூறுவது, யார்பொருட்டு, மகாத்மா காந்திக்காகத்தானே, அந்த மகானுக்குத்தானே இந்தக் கொண்டாட்டம் என்று கேட்பீர்கள். மூர்ச்சையாகிவிடாதீர்கள். இது மகாத்மாவின் நினைவு நாள் கொண்டாட்ட அழைப்பு அல்ல - அவரைச் சுட்டுக் கொன்றானே கோட்சே, அவனுக்காக!

ஆமாம், தம்பி! ஆமாம், பகிரங்க அழைப்பு, கொண்டாட் டத்துக்கான ஏற்பாடு!!

1949-ம் ஆண்டு நவம்பர் 15-ல் அம்பாலா சிறையில் அகிலம் போற்றிய உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற உலுத்தன், ஆரிய கோட்சே தூக்கிலிடப்பட்டான்.

இந்த நவம்பர் 15-ந் தேதி, இந்தக் கொலைகாரனுடைய ஆறாவது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டம் நடத்த குவாலியரில், தண்டாவாடே எனும் இந்துமகாசபைக்காரன், தன் சகாக்களுடன் கூடி ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தான்.

மகாத்மா கொல்லப்பட்ட வழக்கிலே இவனும் சிக்கினான் - விடுதலை செய்யப்பட்டான்.

இவனுக்கு, நேரு பண்டிதரின் ஆட்சி இருக்கும்போதே, கொலைகாரக் கோட்சேயை அவதார புருஷன் போலக் கொண்டாட்டம் நடத்திப் பாராட்டும், துணிவு ஏற்பட்டு விட்டது! ஏன்? மார்க்கரட்சகன் கோட்சே! இந்து மதத்தைக் காப்பாற்றவே காந்தியைக் கொன்று, தன் உயிரைப் பலி கொடுத்தான் என்று பேசிட, பெருமைப்பட, உற்சாக மூட்ட, இந்து மதவெறி இடமளிக்கிறது!!

கலாம் விளையும் என்று காரணம் காட்டி அவன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டான்.

பாரத நாடு தவிர வேறெங்கு இத்தகைய ‘பாதகன்’ துணிவு பெற முடியும்?

நாட்டிலே இன்றும் கப்பிக் கொண்டிருக்கும் குருட்டறிவை, கொலைகார கோட்சே கும்பல் நம்பிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாக இருக்கிறது.

நாய்க்குப் பூஜை செய்கிறார்கள்!

கொலைகாரனுக்குக் கொண்டாட்டம் நடத்த முயற்சிக்கிறார்கள்!!

இவை யாவும் எதன் விளைவு? பழைமைக்கு பாதுகாவலராக ஆளவந்தார்கள் உளர் என்ற நிலைமைதான்.

பாபு ராஜேந்திரப் பிரசாத் கூறியது போல பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலே உள்ள ஓர் கொந்தளிப்பில் நாடு இருக்கிறது ஆனால் ஆளவந்தார்கள், நிச்சயமாகப் பழைமையின் பாதுகாவலர்களாகத்தான் பணியாற்றி வருகிறார்கள். புதுமையை அவர்கள் அடியோடு விலக்கிடவில்லை, இயலாததாலும், அதன் இனிமை அவர்களுக்குச் சுவை அளிப்பதாலும்.

ஆனால் இந்தத் தலைமுறையில் நாடு எவ்வழி செல்வது என்பது பற்றி முடிவு எடுத்தாக வேண்டும் - ஹெலிகாப்டரா? வேதகால இரதமா? - என்பது தீர்மானமாகி விட வேண்டும்.

அன்புள்ள,

20-11-1955