அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ
1

தமிழ் நாட்டின் அமைப்பும் மொழியும் -
கேர் குழு அறிக்கை -
தமிழ் இலக்கிய வளம்

தம்பி!

ஆணை பிறந்துவிட்டது, அணிவகுப்புகள் தயாராகட்டும் என்று சென்ற கிழமை எழுதியதை, நீ படித்து, உன் "பங்கு' குறித்துத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, நான், நெய்தல் நிலக் காட்சிகளைக் கண்டு களித்துக்கொண்டிருந்தேன். என்ன துணிவு அண்ணா! உனக்கு, இதைச் சொல்ல. போர்க்கொடி உயர்த்தியாகிவிட்டது என்று நாவலர் அறிவித்துவிட்டார். போராட்டக் குழு அமைக்கப்பட்டாகிவிட்டது, பரணி பாடி வருகின்றனர் கழகத்தவர், எங்கணும்; இந்த நேரத்தில், நெய்தல் நிலம் காணவா செல்கிறாய்? சென்றதுடன், அதை என்னிடமும் செப்புகிறாயே, சரியா? பாசறை காணவும் பாடி வீடமைக்கவும் செலவிட வேண்டும் நேரத்தை, நினைப்பை. நெய்தல் காணும் நேரமா இது!! - என்று கோபித்துக்கொள்கிறாயா, தம்பி! நெய்தல் நிலம் சென்றேன், கண்டேன், களிப்பு மிகக்கொண்டேன்; ஆனால் அந்த நேரத்திலும், அந்த இடத்திலும்கூட, உன்னையொத்தவர்கள், எத்துணை உற்சாகத்துடன் எழுச்சியுடன், மொழி காத்திடும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதைக் காண முடிந்தது; காட்சிகளைக் கண்டு களித்தேன் என்று கூறினேன் தம்பி! இயற்கைக் காட்சிகளை மட்டுமல்ல, இயற்கையோடு உறவாடி மகிழ்ந்திடும் இன்முகத் தோழர்கள்,நம்மை எதிர்நோக்கி இருக்கும் இந்தி எதிர்ப்புப் பற்றிக் கொண்டுள்ள ஆர்வத்தின் அழகையும்தான் என்று கூறவும் வேண்டுமா?

தில்லையில், பல்லாயிரவர் கூடினர் - பொதுக்குழுவின் முடிவு பற்றிப் பேசினோம். கேட்டனர் - முழக்கமிட்டனர் சழக்கர் மனதிலே அதிர்ச்சி ஏற்படும் வகையில். மறுநாள்தான், தில்லைக்குச் சில கல் தொலைவிலுள்ள கிள்ளை எனும் கடலோரச் சிற்றூரைத் தொட்டுத் தோழைமை கொண்டாடிடும் உப்பங்கழி சென்றோம், தோணியில்.

பிச்சாவரம் காடு என்று அந்த இடத்துக்குப் பெயர் கூறுகின்றனர்.

தம்பி! கடல் நீரின்மீது ஒரு காடு!! அடர்ந்து இருந்தது முன்பு என்பது, இப்போது ஓரளவு அழிக்கப்பட்டுக்கிடக்கும் நிலையிலும் தெரிகிறது. வேறெங்கும் அதிகம் காணப்படாததும், உப்பங்கழிகளில் மட்டுமே வளரக்கூடியதுமான, பலவகை மரங்கள், கொடிகள், செடிகள் நிரம்பி உள்ளன. ஆலுக்குள்ள விழுதுகள்போல, அந்த மரங்களிலிருந்து கிளம்பித் தண்ணீரைத் தொடுகின்றன, உள்ளேயும் செல்லுகின்றன. இடையிடையே "திட்டுகள்' உள்ளன; அவை மேய்ச்சலிடங்களாகப் பயன்படுகின்றன. சில இடங்கள் விரிந்து பரந்து உள்ளன; சில இடங்களிலோ, தோணி நுழையும் அளவு மட்டுமே, நீர்ப்பரப்பு உள்ளது; விழுதுகளும், கொடிகளும் வழி மறித்து நிற்கின்றன; வளைத்தும், பிரித்தும், ஒடித்தும், நீக்கியும், வழிகாண வேண்டி இருக்கிறது.

செம்போத்தும், குருகும், வக்காவும், வண்ணப் பறவைகளும, ஆங்கு தங்கியுள்ளன. இசை எழுப்பும் பறவைகளும் உள்ளன. ஆள் அரவம் கேட்டு மரத்திலிருந்து கிளம்பிச் சிறகடித்துக்கொண்டு, வேறிடம் நாடிப் புள்ளினம் பறந்திடும் காட்சி, உள்ளபடி அழகாக இருக்கிறது. வெளிர் நீலவண்ணம் நீர், சூழப் பச்சை, மேலே நீலமும் வெண்மையும் கொண்ட மேகக் கூட்டம். இடையில், வெண்ணிறக் கொக்குகள், விமானப்படை, அணிவகுத்துச் செல்வதுபோல! இதை நீங்கள் மட்டுந்தானா கண்டு களித்திடக் கற்றீர்கள், எமக்கும் தெரியும் என்று கூறுவதுபோல், துள்ளித் துள்ளி மேலே வருகின்றன, மீனினம். எதையும் அழித்திடும் மாந்தர் உளரே என்ற வெறுப்பில், மீண்டும், தண்ணீருக்குள் சென்றுவிடுகின்றன! தரையில் நடக்கமட்டுமே கற்றுக்கொண்ட மனித இனமே! இதற்கே உனக்குஇத்துணை தலைக்கனம் ஏற்பட்டுவிட்டதே!! என்போல் நீர்மேல் நடக்கவல்லாயோ என்று கேட்டுக் கேலி செய்வதுபோல, சின்னஞ்சிறு மீன்கள், துள்ளித்துள்ளி, நீரின் மீது நெடுந்தூரம் செல்கின்றன.

செடி கொடிகளின் மருங்கே, தோணியை நிறுத்திவிட்டு, வலையை விரித்துவைத்து, "வரவு' தேடிக் காத்திருக்கின்றனர், மீனவர்கள். அவர்கள் கொண்டுவரும் "அறுவடை'யை அங்காடிக்கு எடுத்துச்செல்ல, கரையிலே அமைக்கப்பட்டுள்ள ஓலைக்கொத்துக் குடிசைகளில், காத்துக்கிடக்கின்றனர், பெண்டிர்! வலைக்கான நூலுக்கு, வகையாக முறுக்கேற்றியபடி சிறார்கள் உள்ளனர். தோணிகள் காற்றில் சிக்குவது காண்கின்றனர், கலக்கத்தோடு அல்ல! ஆழ்கடல் சென்று கொண்டு வந்து கொட்டப்படும் மீனினத்தைப் பார்க்கின்றனர், நமது "வேட்டை' எப்போது ஆரம்பமாகும் என்ற நினைப்புடன்.

நண்பர் இராமசாமியும் "வேட்டை' நினைப்புடனேதான் இருந்தார்! பிச்சாவரம் சென்றதே, பெரிதும் அவருக்காகத்தான்! நான், முன்பே, சென்றிருக்கிறேன் - வில்லாளனுடன்! இம்முறை நமது நடிப்பிசைப் புலவருக்கு இந்தக் காட்சியைக் காட்ட எண்ணி, நண்பர்கள் வில்லாளன், வேணு, பட்டாபி, சுந்தரம் ஆகிய தோழர்கள், தோணிப் பயணம் ஏற்பாடு செய்தனர். கையிலே துப்பாக்கியைப் பிடித்தபடி, கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு, குருகு வருமா, வக்கா கிடைக்குமா மணிப்புறா கிடைக்குமா, செம்போத்து அகப்படுமா என்று ஆவலாகத் தேடினார்! புள்ளினம் என்ன மனித இனத்துக்கு மட்டமா!! கிழக்கே இருப்பதைக் கண்டறிந்து இவர் குறிபார்த்தால், அவை, சரேலெனக் கிளம்பி, மேற்குப் பக்கம் சென்று, அடர்ந்த இடம் தேடி அடங்கிவிடுகின்றன!! தோணி அங்குச் செல்வதற்குள், அவை, வேறோர் இடம் பறந்து விடுகின்றன. மெத்தக் கஷ்டப்பட்டு, இரண்டு "கல்பொத்தி'ப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினார், நடிப்பிசைப் புலவர்.

பறவை வேட்டை மட்டுமே ஆடினார் என்றுதான் நான் எண்ணிக்கொண்டேன்; தம்பி! நீயும் அவ்விதம்தான் எண்ணிக் கொண்டிருந்திருப்பாய். ஆனால், அப்போதும் அவர் மனதிலே என்ன எண்ணம் எழும்பிற்று என்பதை, அடுத்த நாள் விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையிலுள்ள முட்டத்தூர் எனும் சிற்றூரில் பேசும்போதுதான், என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

"இந்தி எதிர்ப்புப் போர் வருகிறது! இதயத்தில் இரக்கமற்ற எதேச்சாதிகாரிகள், அடக்குமுறையை அவிழ்த்துவிடுவார்கள், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அண்ணா தில்லைக் கூட்டத்திலே பேசினார். துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள நேற்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நானே இரு முறை வேட்டுக் கிளப்பிப் பார்த்தேன் பிச்சாவரம் காட்டில்!'' - என்று இராமசாமி சொன்னார்.

கவனித்தாயா, தம்பி! கடலோரம் சென்றாலும், காட்சிகளைக் கண்டாலும், தோணி நடத்திச் சென்றாலும் புள்ளினத்தைத் தேடி அலைந்தாலும், எங்கு இருந்தாலும். எதைச் செய்தாலும், நம்மவர்களின் நோக்கம் எதிலே பதிந்து இருக்கிறது, என்பதைக் கவனித்தாயா!!

தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பார்வையிலேயே, இப்போதெல்லாம் ஒரு தனிச் சுவை இருந்திடுகிறது - உனக்குத் தென்பட்டிருக்க வேண்டுமே! "வருகிறது கிளர்ச்சி! பார்ப்போம், உன் பங்கு என் பங்கினைவிடத் தரத்திலும் அளவிலும் மிஞ்சுகிறதா, பார்ப்போம்!!'' - என்று கண்கள் பேசுகின்றன.

"மகனே! மகனே! வேளா வேளைக்குச் சாப்பிடக் கூடாதா! உடம்பு இளைத்தே போய்விட்டதே!'' என்று கேட்கும், தாயின் பரிவினிலே, இப்போதெல்லாம், ஓர் தனி வகை குழைந்து காணப்படுகிறது.

"தடுத்தால் நிற்கவா போகிறான்! தடுப்பதுதான் அறமாகுமா? தாய் எனினும் தமிழச்சி அல்லவா! மொழி காத்திட, என் மகனும் சென்றான் என்று கூறுவதன்றோ மறக்குடியினர் மரபு! கிளர்ச்சியில் ஈடுபடும்போது, என்னென்ன ஆபத்து வந்து தாக்குமோ, இடுக்கண் யாதோ? யாரறிவார்! என் மகன், இப்போதேனும், உண்டு உரம் பெறுவதைக் கண்டு மகிழ வேண்டுமே! நாளை எப்படியோ!!' என்ற எண்ணம், தாயின் குரலிலே தோய்ந்து இருக்கிறது.

"உனக்கென்னடா, சிங்கக்குட்டி! மனதிற் பட்டதைச் சொல்லுகிறாய் - முடிகிறது! அறப்போருக்குத் தயாராக நிற்கிறாய் - விடுதலை வீரன்! என்னைச் சொல்? சேற்றிலே சிக்கிக் கொண்டேன்! மீள முடியவில்லை! செய்யுந் தொழிலும், இருக்கும் இடமும், என்னை செயலாற்ற இயலாதவனாக்குகிறது. நீ அறிந்ததனைத்தையும் நான் அறிந்து உணருகிறேன்! உள்ளம்அலைகடலாகிறது! ஆனால்...'' என்று ஆயிரத்தெட்டுத் தொல்லைகளில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட தோழன், விடுதலைக் கிளர்ச்சிக்காக, எதையும் மறந்து, எந்தச் சூழ்நிலையாலும் சிறைப்படாமல், ஆர்த்தெழும் நண்பனைப் பார்த்துக் கூறுகிறான் - கண்களில் நீர் துளிர்ந்திடும் நிலையில்.

பொது மக்களேகூட நம்மை இப்போது பார்க்கும்போது ஏதேதோ கேட்பதுபோலவே, எனக்குத் தோன்றுகிறது; உனக்கு எப்படியோ!

"பாவம்! நல்ல பிள்ளைகள்; நாட்டுக்குழைத்திடும் நற்பண்பு கொண்டவர்கள். வீட்டை மறந்து, கேடு களைந்திடும் தொண் டாற்றி வருகிறார்கள். பாட்டு மொழியாம் பைந்தமிழ் காத்திட இவரெல்லாம் செல்லுங்காலை, சுட்டுத் தள்ளுவரோ, எலும் பொடித்து வீழ்த்துவரோ, இழுத்துச்சென்று சிறையிலிட்டுப் பூட்டுவரோ! யாதோ இவருக்கு நேரிடப்போகும் இன்னல்! எனினும், மணப்பந்தல் நோக்கி முகமலர்ச்சியுடன் சென்று கட்டழகியைக் காணத்துடிக்கும் காளையர் போலன்றோ காணப்படுகின்றனர் என்றெண்ணி - ஆயாசமல்ல - அன்பு நிறை பார்வையை வழங்குகின்றனர்; வாழ்த்துகின்றனர்.

நெய்தல் நில மக்கள் என்னைப் பார்த்தபோது, நான் இதை உணர்ந்தேன் - உவகையும் கொண்டேன்.

அந்த மக்களுடன் உரையாடியபோதும், அன்று மாலை கிள்ளையிலே பேசியபோதும், இங்கு, அறப்போருக்கு ஓர் அணிவகுப்பு அமைத்திடலாம் என்ற எண்ணம் சுவையூட்டிற்று.

தம்பி! கடலும் கடல் சூழ்ந்த இடமும், நெய்தல் என்றனர் தமிழர். நிலத்தின் இயல்பு கண்டு பெயரிட்டனர்; தனிச் சிறப்புக் கண்டு பயன் பெற்றனர். குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை எனும் ஐந்து வகையாக, நிலத்தைப் பிரித்தனர். எப்போது என்கிறாய், தம்பி? ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக!! இன்றுள்ள பல நாடுகள், பெயரற்ற இடங்களாக இருந்த நாட்களில்! இன்றுள்ள பல நாட்டு மக்கள், காட்டில் திரிந்த காலத்தில்!! எத்துணை ஆராய்ச்சித் திறன் இருந்திருக்க வேண்டும், அந்த நாட்களில், இயல்பு கண்டு இடங்களைப் பிரித்து, பெயரிட்டுக் காட்ட!

தம்பி! இத்துணைச் சிறப்புகளும், இன்று எடுத்துக் கூறப் படவேண்டியவைகளாகிவிட்டன. வெளிநாட்டவருக்கோ,இராமாயண மகாபாரதம் தெரிவிக்கப்பட்டிருக்கும் அளவு, தமிழரின் தனிச்சிறப்பான "திணை இலக்கணம்' அறிவிக்கப் பட்டதில்லை. எங்ஙனம் அறிவிக்க இயலும்! தமிழ்மொழியில் உள்ள தனிச்சிறப்புகளை நாம் கூறினால், இன்று வெளிநாட்டவர் கைகொட்டி அல்லவோ சிரிப்பர்! தமிழாம்! தமிழ்! ஐவகை நிலமாம்! அதற்கோர் இலக்கணமாம்! ஆங்கு வாழ்க்கை முறைகள், தனித்தனிச் சிறப்புடனாம்! எல்லாம் இயற்கையோடு தழுவியவையாம்! ஏதேதோ கூறுகின்றனர். எனினும், இந்தத் தமிழர், இந்தி மொழி கற்றுத் தேறினால் மட்டுமே, பிழைக்க முடியும் - ஆட்சிமொழியாக இருப்பது இந்தி - அழகு பார், அணி பார், அகவலைப்படி, அறநூற்களைக் கவனி! என்று பேசி, ஆகப்போவது என்ன! அரசோச்சுவது இந்தி மொழி! அதற்கு அடி பணிந்து கிடக்கும் இவர்கள், அகமும் புறமும் பேசி நிற்பது, தோற்றோடி வந்தவன், தன் வாளின் பிடியிலே இழைக்கப்பட்ட ஒளிவிடு கற்களைக் காட்டுவதுபோலன்றோ! - என்று கேட்டுக் கெக்கலி செய்வர்.

கிள்ளைக் கூட்டத்திலே, தம்பி! நான் நெய்தல் நிலம் பற்றிச் சிறிதளவு பேசினேன் - பேசிவிட்டு, கேட்போரிடை எத்தகைய உணர்ச்சி ஏற்பட்டது என்று கூர்ந்து கவனித்தேன் - திகைத்துக் கிடந்தனர்!!

புலவர்கள் படித்தும் பொருளுரைத்தும் மகிழ்வளிக்கும் பொருளாகிவிட்டது, தமிழரின் அறிவுத் திறத்தின் விளைவுகள் பலவும்.

எனினும், மெள்ள மெள்ள எடுத்தியம்பி, நாம் எப்படிப் பட்டவர், எத்துணை ஏற்றத்துடன் இருந்து வந்தோம், நமது கொற்றமும் குடியும் எத்துணை தரமாக இருந்தன என்பன பற்றித், தெளிவும், அதன் பயனாக எழுச்சியையும் ஊட்டிட முடியும் - தமிழ் தாழ்நிலைக்குத் துரத்தப்படாது இருப்பின்! ஆனால், வருகிறதே இந்தி - நமது மரபு அழிக்கும் செந்தீ! அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஏடு பல இருந்து பயன் என்ன!!

மரபு அழிக்கும் சதித்திட்டமாகவே, நாம் இந்த இந்தியைக் கருதுகிறோம் - வெறும் மொழிப் பிரச்சினையாக அல்ல.

எண்ணங்களை வெளியிடும் கருவி, மொழி என்று வாதாடுவது எளிது! ஆனால், எண்ணங்கள், உருப்பெற, அவரவர்க்கு, அவரவர் இயல்புக்கு ஏற்ப, வாழும் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, அமையும் மொழியே துணை நிற்கிறது.

அந்தத் தமிழ் மொழி அழிந்துபடாது! அது, மாநிலத்திலே, மாண்புடன் விளங்கும் - தழைக்கும் - மணம் பரப்பும் - என்றுரைப்பார் உளர். அவர்கள் உயரிடமும் சென்று அமர்ந்துள்ளனர். இடம் உயரமே தவிர, அவர்களின் கூற்று மிக மிக மட்டம் என்பதை எடுத்துக்காட்டவா வேண்டும்.

ஆட்சி மொழியாக இந்தி என்று ஆகிவிட்ட பிறகு, எவரும் அம்மொழியிடம் "பயபக்தி விசுவாசம்' காட்ட முற்படுவரேயன்றி, தமிழா கற்பர்! கற்றதனால் ஆய பயன் என் கொல், பெற்றிட இயலாது எந்த இடமும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்போது.

ஆட்சி மொழியாக இந்தி புகுந்தால், உலகு, நம்மை அம்மொழிகொண்டு அளந்திட முற்படுமேயன்றி, அழகு தமிழ் கொண்டா அறிந்திட முயலும்.

தமிழ் மன்னர்கள் காலத்து "நாணயங்கள்' இன்று எந்த அங்காடியில் ஏற்றுக்கொள்வர். முன்பு, அந்த நாணயமன்றோ, நாடாண்டது! இன்று ஆராய்ச்சிக்கூடத்திலே, பாடம் புகட்டுகிறது; பழம் பொருட்காட்சிச்சாலையிலே படுத்து உறங்குகின்றது! அந்நிலைதானே, தமிழ் மொழிக்கும், அரசோச்ச ஆணையிட, அகிலமெலாம் உலாவர இந்தி எனும் வேற்று மொழி இடம் பெறும்போது.

உடல் பெரிது, உள்ளே நுழையும் கிருமி, மிக மிகச் சிறிது அளவில்! ஆயின் என்ன? உடலை அரித்து அரித்து, கிருமிகள் உயிரையே குடித்துவிடுகின்றன!!

"செம்மொழி, எம் தமிழ் மொழி!' - என்று செப்பிக் கொண்டிருக்கலாம் சின்னாட்கள். பிறகு, "எம்மொழி, ஆட்சி மொழி?' என்று உலகு கேட்குமே? என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சி மொழி என்று கூறிடின், பிறகு, செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பர்?

நாவலர் நெடுஞ்செழியன், இந்தி மொழியின் இயலாத தன்மையினையையும், தமிழின் தொன்மையினையையும், அழகுற எடுத்துச் சொல்கிறார். கேட்போர், ஏறுநடை என்கின்றனர் - அவர் பேசிடும்போது காண்போர், அரிமா நோக்கு என்கின்றனர். அவர் அள்ளித்தரும் சான்றுக்களை கவனிப்போர், அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றுகின்றனர். மன்றங்களிலே, மாநாடுகளிலே, அவர் போன்றோர் பேசுங்காலை, தமிழணங்கு கோலமெலாம் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் காட்சியே தெரிகிறது.

இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால், ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துக் காட்டியும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருப்போரின் போக்கினை இடித்துக் காட்டியும், மற்றையோர் பேசும்போது, உடல் புல்லரிக்கிறது, உள்ளம் பொங்குமாங்கடலாகிறது.

தமிழ் மொழியின் சிறப்பினை, மறுப்பார் இல்லை.

இந்தி மொழிக்கு உள்ள சிறப்புக்கள் பற்றிப் பேசும் துணிவு, இந்தி ஏகாதிபத்தியவாதிகளுக்கேகூட ஏற்படாது.

ஆனால், இந்தப் பெருமை பேசிடின், பிரச்சினை தீர்ந்து விடுமா? பதற்கனவு! முயற்கொம்பு!!

"தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதைத் தமிழனிடத்திலே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பது அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன்.''

மூன்றாண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலையில், நாம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலே, நான் இப்படித்தான் பேசினேன்.

ஆட்சிமொழி குறித்து கேர் குழு அமைக்கப்பட்டு அலுவலாற்றிக் கொண்டிருந்த நேரம்.

"இந்தியா ஒரு நாடு அல்ல!'' என்ற உண்மையைக் கூறி டில்லிப் பாராளுமன்றத்திலே, ஓர் அதிர்ச்சி ஏற்படும்படியான முதல் முழக்கத்தைத் தம்பி சம்பத்து எழுப்பிய சமயம்!

1937-38-ல் இந்தி எதிர்ப்பிலே, முன்னணி நின்று கடும் போரிட்ட, கடமை மறவாத, காவி தரித்த மறத் தமிழர் அருணகிரி அடிகள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

ஏழைக் குடிமகன், இவனுக்குத்தான் எத்துணை அச்சமற்ற போக்கு என்று எவரும் வியந்துரைக்கும் வண்ணம், மொழி காத்திடும் கிளர்ச்சியில் பணியாற்றி நின்ற, காஞ்சித் தோழர் சி. வி. எம். அண்ணாமலை திறப்பு விழாவாற்றிய மாநாடு.

முதன் முறையாக என்று நினைக்கிறேன், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களுமாகி, நமது கழகத்தவர், வந்தமர்ந்த மாநாடு.

வடநாட்டு வன்கணாளர்கள், இந்தியைப் புகுத்தத் துடிப்பதறிந்து, நாம் முரசு கொட்டக் கூடினோம். அதுபோதுநான் பேசியது, இப்போதைக்கும் பொருந்தி இருந்திடக் காண்கிறேன் - எனவே, அதனை எடுத்துக்காட்டி உன் நினைவிற்குக் கொண்டுவருகிறேன்.

இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையத்தினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மை யினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்துவிடப் போவதில்லை. இந்த மாநாடு மொழிப் பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவது மல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத் திலே தமிழன் எடுத்துச் சொல்லுவது அவமானத்தின் அறிகுறி என்று நான் கருதுகிறேன்.