அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இட்லர்கூட சோஷியலிசம் பேசினான்!

ஒரே படம், இரு வேறு பதில்கள்!
தேன் துளி தெளித்தால் தீர்ந்திடுமா கவலை?
ஜெர்மன் தேசிய சமதர்மத்தில் தைசன்கள்! இந்திய ஜனநாயக சமதர்மத்தில் பிர்லாக்கள்!
இட்லர் பாணியில் பேசுகிறார்கள் இவர்கள்!
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவனா கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழிகாட்டப் போகிறான்?

தம்பி!

ஒரு பணக்காரச் சிறுவன், ஒரு ஏழைச் சிறுவன் இருவரையும் ஒரு மனோதத்துவக்காரர் சோதனை செய்தார் ஒரு படத்தைக் காட்டி.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் தன் தாயாரைப் பார்த்துச் சிணுங்கும் காட்சி படத்தில் வரையப்பட்டிருந்தது.

படத்திலுள்ள சிறுவன் என்ன காரணத்துக்காகச் சிணுங்குகிறான் என்று கேட்டார் மனோதத்துவக்காரர்.

ஒரே படம்! இரண்டு சிறுவர்கள் பார்க்கிறார்கள்!! பதில்? இன்னும் கொஞ்சம் சோறு கேட்கிறான் சிறுவன். அதற்காகத்தான் சிணுங்கிக்கொண்டிருக்கிறான் என்று பதில் அளித்தான் ஏழைச் சிறுவன்.

எனக்குப் பசி இல்லை அம்மா? போதும் சாப்பாடு! இனிச் சாப்பிட முடியாது!! - என்று தாயிடம் சொல்கிறான் படத்திலுள்ள சிறுவன் - அதனால்தான் சிணுங்குவது போலப் படம் வரையப்பட்டிருக்கிறது என்று பதில் தந்தான் பணக்காரச் சிறுவன்!

ஒரே படம்! இரு வேறு பதில்கள்!!

ஏழை, பணக்காரன் என்ற இரு வேறு நிலைகள், இரு வேறு இயல்புகளைத் தந்திருக்கிறது என்பதைக் காட்டுவது இந்தக் குட்டிக் கதை.

ஏழை, பணக்காரன் என்ற மாறுபட்ட நிலையை மாற்றாமல், அந்த நிலைமை காரணமாக ஏற்பட்டுவிடும் இயல்பினை மாற்ற முயற்சிப்பது, குதிரையின் காதுப் பக்கத்தில் மாட்டுக் கொம்பினைக் கட்டிவிடுவதுபோன்றதாகும்! விந்தைக் காட்சியாக இருக்கும் இயல்பு மாறாது.

ஏழை, பணக்காரன் என்ற நிலைமைகள், மனித இயல்பை வேறு வேறு தரமுள்ளதாக்குவது மட்டுமல்ல, சமூகத்திலே கசப்பும், கொதிப்பும், பேதமும், பிளவும், பகையும், சமரும் மூண்டு விடுவதற்கும் அந்த நிலைமைகளும், அவற்றின் தொடர்பாக அமைந்துவிடும் இயல்பும் காரணமாகிவிடுகிறது.

நிலைமையை மாற்றுவதன் மூலம் இயல்பை மாற்றி, இந்த விரும்பத்தகாத சூழ்நிலையை அப்புறப்படுத்த முடியுமே தவிர, நிலைமையை அப்படியே வைத்துக்கொண்டு, கசப்பும் கொதிப்பும் போக வேண்டும், பேதமும் பிளவும் தொலைய வேண்டும், பகையும் சமரும் கூடாது என்று "உபதேசம்' செய்து பார்ப்பது, படகிலே உள்ள ஓட்டையைச் செப்பனிடாமல், உள்ளே புகும் தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டிக் கொண்டே இருக்கும் முயற்சி போன்றதாகும்.

காங்கிரசாட்சிக்கு, நிலைமையை மாற்ற வேண்டும் என்ற துணிவும் இல்லை; எண்ணமும் இல்லை. சொல்லப் போனால், இந்த நிலைமை தீதானது ஆபத்தை மூட்ட வல்லது என்ற கருத்தே இல்லை; இந்த நிலைமை மாற்றப்படத்தக்கதுதான் என்ற நம்பிக்கையும் இல்லை.

நிலைமையை மாற்றாமல், இயல்பை மாற்ற முடியும் என்ற தவறான போக்கைக் காங்கிரசாட்சி மேற்கொண்டிருக்கிறது.

அந்தத் தவறான போக்கு காரணமாகத்தான், காங்கிரசாட்சி எங்கள் சோஷியலிசத்தில், ஏழைக்கும் இடம் கிடைக்கும், பணக்காரனுக்கும் இடம் கிடைக்கும் என்று பேசுகிறது.

சோஷியலிசம் என்பது திட்டவட்டமான ஒரு ஏற்பாடு; எல்லோருக்கும் இரண்டொரு சொட்டு தேன் தெளித்துவிடுகிற தந்திரம் அல்ல.

காங்கிரஸ் பேசும் சோஷியலிசம், இந்நாட்டுச் சீமான்களை மட்டுமல்ல அமெரிக்க நாட்டுப் பெரிய முதலாளிகளையே அச்சம் கொள்ளச் செய்யாததற்குக் காரணம் இதுதான்; காங்கிரசின் சோஷியலிசப் பேச்சு விவரமறியாத ஏழைக்கென்றே தயாரிக்கப்படும் இனிப்புப் பானம் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலே "முதல்' போட்டு தொழில் நடத்தச் சொல்லுகிறீர்களே; இந்தியா சோஷியலிசம் பேசுகிறதே; அங்கு பெரிய முதல் போட்டு தொழில் நடத்துவது ஆபத்து அல்லவா என்று அமெரிக்க நாட்டு முதலாளிகள் கேட்டபோது, அமெரிக்க அரசியல் தலைவரொருவர் புன்னகையுடன் கூறினார்

இந்தியாவில் பேசப்பட்டு வரும் சோஷியலிசம் பற்றிப் பயம் கொள்ளாதீர்கள் என்று.

மேடையிலே "சோஷியலிசம்' பேசிவிட்டு, சீமான்களின் மாளிகைகளில் விருந்து சாப்பிடும்போது, காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் தருகிறார்கள், விவரமறிந்த சீமான்கள்,

"எல்லாம் எங்களுக்குத் தெரியும்'

என்ற குதூகலத்துடன் கூறிவிட்டு

பாவம், ஏழைகளும் வாழத்தானே வேண்டும் என்று உருகுகிறார்கள்.

ஐயோ! பாவம்! ஏழை! அவனும் மனிதன்! - என்ற இரக்கப் பேச்சு இன்று நேற்று தோன்றியது அல்ல; பஞ்சையும் பராரியும் தோன்றியபோதே தோன்றியது. அது பேச்சாக, பாட்டாக, நாடகமாக, காவியமாக, பேருரையாக, உபதேசமாக, வெளிவந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அந்தப் பேச்சு நீக்கிவிடவில்லை.

உழைப்பே, செல்வத்தை உற்பத்தி செய்கிறது.

உழைப்போரின் தொகை அதிகம்.

உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செல்வம், உழைப்போர் அனைவருக்கும் ஒரு சீராகக் கிடைக்குமானால், சமூகம் முழுவதும் பலன் பெறும்; ஒருபுறம் சோலை, சுற்றிலும் பாலை என்ற நிலை ஏற்படாது.

ஒரு சீராகக் கிடைக்குமானால்! - என்று கூறிவிட்டோமே தம்பி! எளிதாக! இது தன்னாலே நடைபெற்றுவிடுமா? பாவ புண்ணியம் பற்றிய உணர்ச்சி மூலமாக ஏற்பட்டுவிடுமா? ஏற்பட்டு விடுவதில்லை!

வருவாய் அல்லது செல்வ உற்பத்தி சமூகத்தில் ஒரு சீராகப் போய்ச் சேராததால்தான், இத்தனைக் கேடுபாடுகள் ஏற்பட்டுவிட்டன.

இந்தக் கேடுபாடுகளை நீக்கவேண்டுமானால், உற்பத்தி ஆகிற செல்வம் ஒரு சீராக, சமூகம் முழுவதற்கும் பரவிடும் முறையைச் செயல்படுத்த வேண்டும். அதனை ஒரு அரசுதான் துணிந்து மேற்கொள்ள முடியும். அந்தத் துணிவு ஒரு அரசுக்கு ஏற்படவேண்டுமானால் அது, செல்வத்தைத் தமதாக்கிக்கொள்ள முனைந்திடும் செல்வவான்களின் செல்லப் பிள்ளையாகிவிடக் கூடாது.

சில திங்களுக்கு முன்பு இந்தியப் பூபாகத்திலே மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ள பிர்லா முதலாளிகளைக் கூட்டிவைத்து, நாம் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமைவதற்காகப் பாடுபட வேண்டும்; ஏனெனில் நம்மைப் பாதுகாக்கக்கூடியது காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் என்று பேசினார்.

கட்டுப்பாடுகள் சில விதிக்கும்போது கடுங்கோபம் கொள்கிறார்கள்; வரி கூடுதலாக்கும்போது வெகுண்டெழுகிறார்கள்; ஆனாலும் அதே முதலாளிகள் ஆர அமர யோசித்துப் பார்க்கும்போது, உண்மையான "சோஷியலிசத்தை' வரவிடாமல் தடுத்து நிறுத்தவும், அதேபோது சோஷியலிசம் பேசி ஏழைகளை மயக்கத்திலாழ்த்தி வைக்கவும் காங்கிரசைவிடத் திறமையான கட்சி எதுவுமில்லை என்பதை உணருகிறார்கள்; காங்கிரசுக்கு ஆதரவு திரட்டித் தருகிறார்கள்.

வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட கணக்கின்படி, சென்ற பொதுத் தேர்தலிலே காங்கிரசுக்கு முதலாளிகள் கொடுத்த நன்கொடைத் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயல்லவா?

இந்த ஒரு கோடி எதற்கு? எவ்வளவு வேண்டு மானாலும் சோஷியலிசம் பேசுங்கள்; ஆனால் நடை முறைக்குக் கொண்டு வராதீர்கள் என்று கேட்டுக் கொள்வதற்குத்தானே!

தம்பி! சோஷியலிசம் பேசிவிடுபவர்களெல்லாம் ஏழையை வாழ வைத்துவிடுவார்கள் என்று கூறிவிடுவதற்கில்லை. இட்லர் பேசாத சோஷியலிசமா!

நாஜிசம் என்று கூறப்படுகிறதே, இட்லர் புகுத்திய முறை நினைவிலிருக்கிறதல்லவா? அதுகூட சோஷியலிசம் என்ற பெயருடன் இணைந்ததுதான்.

இதோ இவர்கள் தமது சோஷியலிசத்துக்கு ஒரு அடை மொழி சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா, ஜனநாயக சோஷியலிசம் என்று; அதுபோல, இட்லர் தம்முடைய சோஷியலிசத்துக்கும் ஒரு அடைமொழி சேர்த்துக்கொண்டார், தேசீய சமதர்மம் - என்பதாக.

அந்த "National Socialism' என்பதுதான் சுருங்கி மருவி, நாஜிசம் என்ற பெயராயிற்று.

என்ன கண்டனர் ஜெர்மன் மக்கள்? பயங்கரமான போர்!

என்ன தந்தது இந்த நாஜிசம் உலகுக்கு? அமளி, அழிவு!

இவர்கள் ஜனநாயக சோஷியலிசம் பேசுகிறார்கள்.

எங்கள் சோஷியலிசத்தில் முதலாளியும் இருப்பான்; ஆனால் அவன் வெறும் சுரண்டல்காரனாக இருக்க மாட்டான்; இலாப வேட்டைக்காரனாக இருக்க மாட்டான்; ஏழையை வாழவைக்கும் கருணாமூர்த்தியாக இருப்பான்; அவனை அப்படி மாற்றுவோம் என்று. அது போலவே, இட்லர் சொன்னான். என்னுடைய நேஷனல் சோஷியலிசத்தில் (தேசீய சமதர்மத்தில்), முதலாளி இருப்பான், ஆனால் அவன் தேசீய முதலாளியாக, நாட்டு நலனைக் காத்திடும் முதலாளியாக, அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, நாட்டு வளத்தைப் பெருக்கிடும் முதலாளியாக இருப்பான் என்று பேசினான்! உரத்த குரலில்! கேட்போர் மயங்கும் வண்ணம்! இதோ ஓர் புது தத்துவம் என்று பலரும் பாராட்டத்தக்க விதமாக.

தம்பி! பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் - இதழாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு விளக்கம் தயாரித்து அளித்தனர், வெறும் சோஷியலிசத்தைவிட, இட்லர் தந்திடும் நேஷனல் சோஷியலிசம் சிலாக்கியமானது, நாட்டுக்கு ஏற்றது என்றெல்லாம்.

இட்லருடைய நாஜிசத்தில், அதாவது நேஷனல் சோஷியலிசத்தில், "க்ருப் தைசன்' போன்ற பெரும் முதலாளிகள் கோட்டை கட்டி வாழ்ந்தனர்; தம்மை தேசீய முதலாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, தமது கோட்டைகளிலே சுவஸ்திக் கொடியைப் (இட்லரின் கொடியை) பறக்கவிட்டனர்.

அந்த நாஜிசம் ஜெர்மன் நாட்டு ஏழைகளைக் காப்பாற்றிற்றா? பயங்கரமான அழிவைத் தந்தது; நாடே அடிமைக் காடு ஆக்கப்பட்டது.

இவர்கள்கூடத் தம்பி! வெறும் சோஷியலிசம் என்பதைவிட, நேஷனல் சோஷியலிசம் என்று கூறுவது வசீகரமாக இருக்கும் என்ற கருத்துடையவர்கள்தாம். ஆனால், நேஷனல் சோஷியலிசம் எனும் நாஜிசம் உலகிலே - ஒரு கெட்ட பெயர் எடுத்து விட்டதால், மக்கள் வெறுப்பதால், நேஷனல் சோஷியலிசம் என்று கூறக்கூடாது என்று தீர்மானித்து ஜனநாயக சோஷியலிசம் என்று பேசி வருகிறார்கள்.

இட்லர் முதலாளிகளை கொலுவிருக்கச் செய்தான், அவர்கள் தனக்குக் கொடி பிடிப்போர்களாக இருந்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன். இவர்களும் எத்தனை பிர்லாக்களும் இருக்கலாம், தொழில் நடத்தலாம், செல்வபுரி அமைக்கலாம், ஆனால் ஒரு நிபந்தனை, எமது "போஷகர்களாக' இருக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.

இங்கும் தைசன்கள் வளருகிறார்கள்.

அன்று தைசனை வளரவிட்டபடி நேஷனல் சோஷியலிசம் பேசினான் இட்லர்.

இன்று பிர்லாக்களைக் கொழுக்க வைத்துக்கொண்டே காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் பேசி வருகிறது.

முதலாளி, போகபோக்கியத்தில் புரளுவதற்காகத் தன் செல்வத்தைப் பயன்படுத்தினால், அது கெடுதல், ஆனால் அவன் தன் செல்வத்தை நாட்டு வளத்தை அதிகமாக்க, எழில் கூட்ட, ஏற்றம் உண்டாக்க, பிற நாட்டார் கண்டு அஞ்சத்தக்க வலிவு நமது நாட்டுக்கு ஏற்படப் பயன்படுத்தினால், நல்லதுதானே என்று கேட்டான் இட்லர். அவனிடம் சொக்கிப்போன மக்கள் ஆம்! ஆம்! என்றனர்.

அதுதான், என் அருமை மக்களே! நாஜிசம்!! - என்றான் இட்லர்; வாழ்க நாஜிசம் என்று ஜெர்மன் மக்கள் முழக்கமிட்டனர்!

இங்கே அதே பாணியில் பேச்சு!!

தொழில் பெருகவேண்டுமல்லவா? - ஆமாம்!

தொழில் பெருகவேண்டுமானால் புதிய புதிய தொழில் நடத்தும் முதலாளிகள் வேண்டுமல்லவா? அதனால் நமது சோஷியலிசத்தில் முதலாளிகள் இருக்கிறார்கள் தவறா? - என்று கேட்கின்றனர் ஆளவந்தார்கள்.

"ஆம்'' என்பவன் அணைத்துக்கொள்ளப்படுகிறான் - அது சரியில்லையே! என்பவன் அடித்து நொறுக்கப்படுகிறான்.

இட்லரின் நேஷனல் சோஷியலிசத்தில் சுவஸ்திக் திரைக்குப் பின்னாலே இருந்துகொண்டு முதலாளிகள் கொட்டமடித்தார்கள். காங்கிரசாட்சியில், மூவர்ணக் கொடி மறைவிலே இருந்துகொண்டு, முதலாளிகள் பெருத்துக்கொண்டு வருகிறார்கள்; காங்கிரஸ் கட்சியையே குத்தகைக்கு எடுத்து நடத்திக்கொண்டும் வருகிறார்கள்.

அரண்மனை போன்ற மாளிகைகள், அன்னங்கள் ஊர்ந்து செல்லும் அழகிய செயற்கைக் குளங்கள், அவைகளிலே துள்ளிடும் பல வண்ண மீன்கள், அவற்றினைக் கண்டு கலகலவெனச் சிரிப்பொலி எழுப்பும் சிங்காரிகள், அந்தச் சிங்காரிகளின் இதழ் கண்டு ஏங்கிடும் சீமான்கள். இந்தக் காட்சியை ஓவியமாக்கிய வர்கள், கவிதை இயற்றியவர்கள், இவை எல்லாமே இருந்தன பிரான்சு நாட்டில். இவற்றை அந்த நாட்டு ஆட்சியாளர்கள், சீமான்கள் போகபோக்கியத்தில் புரளும் நிலை என்று கருதவில்லை; மாறாக அவர்கள் இந்த நிலையினை,

பிரஞ்சு நாட்டு எழில், ஏற்றம்!
பிரஞ்சு நாட்டுச் சிற்பக் கலையின் சிறப்பு!
பிரஞ்சு நாட்டு ஓவியத் திறமை!
பிரஞ்சு நாட்டுக் காவியப் புலமை!
பிரஞ்சு நாட்டில் காதல், ஒரு கலையாகி இருக்கும் நேர்த்தி என்றுதான் பெருமிதம் கொண்டனர்.
பிரஞ்சு நாட்டு மக்கள்கூட, நெடுங்காலம் நம்பினர்! உண்மை பிறகுதான் வெடித்துக் கிளம்பிற்று!!

அதுபோன்றே, இங்கு முதலாளிகள் அமைத்துள்ள பணக் கோட்டையை பாரத நாட்டுச் சிறப்பு என்று காங்கிரசார் பேசுகின்றனர்; நம்பச் சொல்லுகின்றனர்.

ஒரு அமைச்சர் தம்பி! துணிந்து, வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார். முதலாளிகள் பணத்தைக் குவித்துக்கொள் கிறார்கள் என்று கொதிப்படைகின்றீர்களே, எங்கே போய்விடும் அவர்களிடம் குவிந்துள்ள பணம்? இந்த நாட்டில்தானே இருக்கிறது! வெளிநாடுகளுக்கா போய்ச் சேர்ந்துவிட்டது அந்தப் பணம்? இங்கேயே, நம் நாட்டிலேயேதான் இருக்கிறது! இந்த நாடு, அவர்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லையே! இது உனக்கும் சொந்தமான நாடுதானே! அப்படியானால், அந்தப் பணம், உன்னுடை நாட்டில்தானே இருக்கிறது!! இதை அறியாமல் முதலாளிகளிடம் போய்க் குவிகிறதே பணம் என்று கொதித்துப் பேசுகிறாயே தவறல்லவா! விவரம் தெரியாததால் வேதனைப்படுகிறாய்! தெரிந்துகொள், அவ்வளவு பணமும் இங்கேயேதான் இருக்கிறது, நம் நாட்டிலேதான் இருக்கிறது. கவலைப் படாதே, நாம் விரும்பும்போது அந்தப் பணத்தை வரி போட்டு எடுத்துக்கொள்ளலாம். பணம் எங்கும் போய்விட வில்லை, இங்கேதான் இருக்கிறது என்று பேசினார் - துணிந்து!!

தம்பி! கொள்ளைக்காரன், கன்னக்கோலன், காது அறுப்பவன், அகப்பட்டதைச் சுருட்டுபவன் போன்றார் திருடுகிறார்களே, அந்தச் செல்வமெல்லாம்கூட இங்கே தான் இருக்கிறது, நம்முடைய நாட்டிலேயேதான்! அவர்கள், களவாடியதை கனடா நாட்டுக்கோ, காங்கோ நாட்டுக்கோ, ஆஸ்திரே-யாவுக்கோ, அர்ஜெண்டினா வுக்கோ கொண்டோடிவிடவில்லை; இங்கேயேதான் இருக்கிறது; இந்த நாட்டிலேயேதான் புண்ய பூமியாம் பாரத நாட்டிலேயே இருக்கிறது. ஆகவே பொருள் களவு போய்விட்டதே என்று கூச்சல் எழுப்பாதே; உன் பொருள் வேறு எந்த நாட்டுக்கும் போய்விடவில்லை; இந்த நாட்டிலேயே, உன் சொந்த நாட்டிலேயே இருக்கிறது என்று எவனும் கதைக்காகக்கூடத் துணியமாட்டான். ஆனால், நாடாள வந்துள்ள நல்லவர்கள், துணிந்து பேசுகிறார்கள், ஏழையின் வயிற்றில் அடித்து முதலாளிகள் குவிக்கும் பணம் வேறு எங்கும் போய்விடவில்லை, இந்த நாட்டிலேயே இருக்கிறது என்று!

கேட்டுக்கொள்கிறார்கள், கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

முதலாளித்தனத்தை நீக்க மனமற்றவர்கள், துணிவற்றவர்கள் ஏன் "சோஷியலிசம்' என்று பேசுகிறார்கள்? காரணமற்று அல்ல!

சோஷியலிசம் என்பதனை நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.

உண்மையிலேயே சோஷியலிசத்தைச் செயல்படுத்தக் கூடியவர்கள் மக்களை அணுகினால் பேராதரவு பெற்று விடுவார்களே என்ற அச்சம் காரணமாக, மற்றவர்களை சோஷியலிசம் பேசவிடுவதா, அதையும் நாமே பேசி, உண்மை சோஷியலிஸ்டுகள் மக்களிடம் தொடர்பு கொள்ளாதபடி செய்துவிடலாம் என்ற நைப்பாசை காரணமாகவே காங்கிர சாட்சியினர் சோஷியலிசம் பேசுகின்றனர்.

அவர்களின் பேச்சு போலி என்பதையும், அவர்களின் போக்கு வெறும் பசப்பு என்பதையும் உணர்ந்தும், கட்டுக் கோப்புள்ள காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்கும் துணிவற்று, காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து இடம்பெற்று, மெள்ள மெள்ள, காங்கிரஸ் கட்சியையே கருவியாக்கிக்கொண்டு சோஷியலிசம் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் சிலர் இருக்கிறார்கள். அதுபோலவே காங்கிரசின் செல்வாக்கைப் பழுதுபடாதபடி பார்த்துக்கொள்ளப் பெரும் பொருள் செலவிட்டு, அதனைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, கருவியாக்கி தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற துணிவுடன் செல்வவான்கள் இன்று காங்கிரசில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த இரு தரப்பினருக்கும் பலப்பரீட்சை நடத்தப் படுவதில், இன்றுவரையில் செல்வவான்களின் கரமே ஓங்கிக் காணப்பட்டு வருகிறது.

அப்பழுக்கற்ற, உண்மையான சோஷியலிசத்தை மேற்கொண்டால், காங்கிரஸ் கட்சியில் மாஜி மகாராஜாக்களையும், ஆலை அரசர்களையும், வணிகக் கோமான்களையும் காண முடியாது. அவர்கள் தனித்திட்டிலே சிக்கிக்கொள்வார்கள்; அவர்களின் ஆதிக்கத்தை நீக்கிடும் திட்டம் எது கொண்டுவரப்பட்டாலும் எதிர்த்திடும் வலிவு அவர்களுக்குக் கிடைக்காது.

போன மாதத்திலேதான் தம்பி! ராம்கார் ராஜா காங்கிரசில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்; இதழ்களில் பார்த் திருப்பாயே! ராம்கார் ராஜா காங்கிரசில் நுழைகிறார். பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் அஜாய்குமார் முகர்ஜி காங்கிரசைவிட்டு வெளியேறுகிறார். நிலைமை புரிகிறதல்லவா? உனக்குப் புரிகிறது, ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் எங்கே இதனைப் புரிந்துகொள்ளுகிறார்கள்.

இந்த ராம்கார் ராஜா சுதந்திரக் கட்சியில் இருந்தபோது எதிர்த்தனர்; இன்று அணைத்துக்கொள்கின்றனர்; அகமகிழ் கின்றனர். எதனால்? அவர் தியாகி என்பதனாலா? ஏழைப் பங்காளர் என்பதனாலா? தொண்டு பல செய்த தூயவர் என்பதனாலா? இல்லையே! அவரிடம் உள்ள இலட்சங்கள், ஓட்டு வேட்டைக்குப் பயன்படும் என்பதனால்! அவர் நோட்டுக்களை நீட்டி ஓட்டுக்களை வாங்குவார், பிறகு காங்கிரஸ் வெற்றி! என்று முழக்கமிட்டு மகிழ்ச்சி அடையலாம் என்ற ஆசை காரணமாக!

இத்தகையவர்கள் இருக்கும்போது காங்கிரசால் எப்படி சோஷியலிசம் புகுத்துவதில் வெற்றி காண முடியும்?

தங்களை ஆதிக்கம் செலுத்தவும், தொழில் அமைப்புகளில் தர்பார் நடத்தவும் உரிமை கொடுத்து, வசதி ஏற்படுத்திக் கொடுத்து, பாதுகாப்பும் செய்து கொடுத்துவிட்டு, ஏழைகளின் மனம் குளிர்ச்சி கொள்வதற்காக சோஷியலிசம் பேசுகிறோம், அதற்காக வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் போது, அந்த முதலாளிகளுக்கு, காங்கிரசிலே இருப்பதாலே என்ன நட்டம்? கசக்குமா, குமட்டுமா?

பெரிய அளவிலே வளர்ந்து, நாடாளும் வாய்ப்பும் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியிலே இடம் பெற்றுக் கொள்வதன் மூலம், முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன், ஏழை எளியோரின் பகையும் தங்கள்மீது பாயாமல் ஒரு கேடயத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

படிப்படியாகவாகிலும் சோஷியலிசம் வருகிறதா என்று பார்த்தாலும், வராதது மட்டுமல்ல, நாளாகவாக முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துகொண்டு வருகிறது.

உள்நாட்டு முதலாளிகளுக்கு இப்போது வெளி நாட்டு முதலாளிகளின் துணை, குறிப்பாக அமெரிக்க முதலாளிகளின் துணை அதிக அளவிலே கிடைத்துக் கொண்டு வருகிறது. உள்நாட்டு முதலாளிகளிடம் காட்டும் பரிவு மரியாதையைக் காட்டிலும் அதிக அளவுக்கு அமெரிக்க முதலாளிகளுக்கு இந்தியப் பேரரசை நடத்திச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.

காங்கிரசின் மூலமாக, எப்படியாகிலும் சோஷியலிசத்தைப் புகுத்திவிடலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டு, காங்கிரசிலே இருந்து வருபவர்களும், இந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி சிற் சில நேரங்களில், கண்டனம் உமிழ்கிறார்கள். பிறகோ, கட்சிக் கட்டுப்பாடு அவர்களை ஒடுக்கிவிடுகிறது. காங்கிரசுக்கு ஓட்டு தேட அவர்களே கிளம்பிவிடவேண்டி நேரிட்டுவிடுகிறது.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, ஒரு சமதர்ம முன்னணி இருக்கிறது! காங்கிரஸ் கட்சி போலியாகத்தான் சோஷியலிசம் பேசுகிறது என்பதற்கு இதனைவிடச் சான்று தேவையில்லை, அல்லவா?

மெய்வழிச் சபைக்குள் ஒரு உண்மை நாடுவோர் சங்கமும், சைவ மெய்யன்பர் கூட்டத்திற்குள், இறைச்சி விரும்பாதார் மன்றமும் இருந்திடின், விந்தை என்பீர்கள் அல்லவா? ஆனால் ஜனநாயக சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோஷியலிச முன்னணி என்ற ஒரு பிரிவும் இருக்கிறது!!

அந்த முன்னணியினர் சின்னாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளனர்;

காங்கிரஸ், இவ்வளவு ஆண்டுகளாகியும் சோஷியலிசத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை,

சோஷியலிசத்தைக் கொண்டு வரும் முயற்சியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவேயில்லை.

சோஷியலிசப் பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிற இதே நேரத்தில் முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதாக.

இந்த "கண்டுபிடிப்புக்குப்' பிறகும் அவர்கள் ஏன் காங்கிரசிலே இருக்கவேண்டும் என்று கேட்கிறாய். நியாயமான கேள்வி! அதைவிடத் தேவையான கேள்வி, உள்ளே இருப்பவர்களே மனம் குமுறிக் கிடக்கும்போது, ஊராரைப் பார்த்து ஜனநாயக் சோஷியலிசம் வேண்டுமானால், காங்கிரசில் வந்து கூடுங்கள் என்று அழைக்கிறார்களே, பொருள் இருக்கிறதா?

ஆனால் அழைக்கிறார்கள்!! ஏன்? சோஷியலிசம் என்பதன் கவர்ச்சி மக்களை ஈர்த்துக்கொண்டு வரும் என்பதால்.

வைகுந்தம் போக விரும்புவோரெல்லாம் என்னோடு வருக! - என்று அழைத்தான் ஒருவன்.

நெற்றியிலே திருநாமமும் கழுத்திலே துளசி மணி மாலையும் இருந்தது. கண்டவர்கள், அவனை நம்பி, "வைகுந்தம் போக வழி எது? சொல்லுங்கள் வருகிறோம்'' என்றார்கள்.

"பள்ளிகொண்டான் கோயில் கோபுரம் தெரியுமா? அதன்மீது ஏறவேண்டும்! அங்கே சென்றதும், வைகுந்தம் போகும் வழியை நான் காட்டுகிறேன்'' என்றான் திருநாமதாரி. மக்கள் யோசித்தனர், சிறிதளவு தயக்கம் அவர்களுக்கு.

கட கடவெனச் சிரித்தான் ஒருவன்; மக்கள் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

வைகுந்தத்துக்கு வழி காட்டுவதாகக் கூறுகிறாரா இவர்! கோபுரம் ஏறிக் காட்டப் போகிறாரா? ஏமாளிகளே! இவன் யார் தெரியுமா? இவன் கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத பேர்வழி. அவன் வீட்டுக் கோழி, கூரையிலே ஏறிக்கொண்டது; கூரை ஏறிக் கோழியைப் பிடிக்க முடியாமல், கல்லை எடுத்து அதன்மீது வீச, குறி தவறி, வழியே வந்துகொண்டிருந்த மணியக்காரர் பிள்ளை தலைமீது விழ, மணியக்காரரின் ஆட்கள் இவனை நையப்புடைத்தார்கள். மண்டையில் பலத்த அடி; மூளை குழம்பிவிட்டது; அது முதற்கொண்டு இவன் இப்படித்தான் எங்கெங்கோ அலைந்து, வைகுந்தத்துக்கு வழி காட்டுகிறேன் என்று குளறிக்கொண்டிருக்கிறான். "கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத இவனா கோபுரம் ஏறி வைகுந்தத்துக்கு வழி காட்டப் போகிறான்?'' என்று விளக்கமளித்தானாம்.

அதுபோல ஓரளவுகூட சோஷியலிசத்தைப் புகுத்த முடியாதவர்கள் என்று காங்கிரசைக் கண்டித்துக்கொண்டு, ஆனாலும் காங்கிரஸ் ஜனநாயக சோஷியலிசம் தந்திடும் என்றும் அந்த முன்னணியினர் பேசுகின்றனர், விந்தை அல்லவா?

விந்தை மட்டுமல்ல; இது விபரீதமான யோசனை என்பதை உணர்ந்துகொண்டு வருகிறது நாடு.

நாடு பெற்றுள்ள அந்த உணர்வினைத் தந்திட தம்பி! நீ மிகுந்த பாடுபட்டிருக்கிறாய்.

நீ, பட்ட பாடுகளுக்கு ஏற்ற பலனைப் பெறுவதற்கான நாளும் நெருங்கிக்கொண்டு வருகிறது. உன் நடையிலேயும் புது வேகம் காண்கிறேன், மகிழ்கிறேன்.

அண்ணன்,

7-8-66