அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (3)
2

இத்தனை பிணங்கள் வீழாதிருந்தபோது, மூன்று முறை காங்கிரசைத் தோற்கடித்த பொதுமக்கள் தர்மபுரியில் வெற்றி கொடுத்தார்கள் என்றால், காங்கிரசின் அடக்கு முறையைப் பாராட்டியா! மக்கள் என்ன இதயமற்றவர்களா!! அல்லவே!!

அடக்குமுறைப் பிரச்சினையைக்கூட மறைத்துவிடத்தக்க வேறு ஏதோ நிலைமைகள் உருவாக்கப்பட்டதாலன்றோ மக்கள் காங்கிரசுக்கு வெற்றி தந்தனர். இதனைப் புரிந்துகொள்ள, சராசரி அறிவே போதுமே!

மக்கள் விரும்பவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை; காங்கிரசின் பெருந்தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை; ஆனால், தொகுதியில் வேலை பார்த்துவந்த காங்கிரஸ் தலைவர்கள், தமது வேலை முறைகளைக் கணக்கெடுத்து வெற்றி கிடைத்திடும் என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். அவர்கள் கூறியிருப்பார்கள் முதல் அமைச்சருக்கு; அப்போது அவரே அதை நம்பியிருந்திருக்க மாட்டார். நடந்துவிட்ட பிறகு பேசுகிறார், நமக்கு முன்பே தெரியும்!! என்று.

தம்பி! அவர்கள் அவ்விதம் பேசுவதாலே நமக்கு நட்டமில்லை; சொல்லப்போனால் நமக்கு ஒருவிதத்தில் அந்த விதமான பேச்சு நல்லதுகூட.

நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்; நாடே எதிர்பார்த்தது நாம் வெற்றி பெறுவோம் என்று. ஆனால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.

இதனை நாம் மறத்தலாகாது, நினைவினிற் கொள்ள வேண்டும்; எதற்கு? மக்களின் இதயம் நமது பக்கம் என்று அறிந்து அகமகிழ்ந்து நம்பிக்கை கொண்டுவிடுவது மட்டும் போதாது; வெற்றிக்கான முறைகளைச் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சியைப் பெறுவதற்காக.

தேர்தலிலே மட்டுமல்ல, எடுத்த காரியம் எதிலும் தொட்டது அத்தனையும் பலித்துவிடும் என்று நிலைமை இருந்துவிடுவதில்லை. ஏமாற்றங்களும், இடையூறுகளும் எவருடைய பாதையிலும் ஓரோர் வேளை குறுக்கிடத்தான் செய்யும். தோல்விகளையும் சந்தித்திட வேண்டும் துணிவுடன். ஒரு பட்டியல் தருகிறேன், பார் தம்பி!

1831 – வியாபாரத்தில் தோல்வி.
1832 – சட்டசபைத் தேர்தலில் தோல்வி.
1833 – மீண்டும் வியாபாரத்தில் தோல்வி.
1834 – சட்டசபையில் பதவி.
1835 – காதலியின் மரணம்.
1836 – நரம்புக் கோளாறு நோய்.
1838 – சட்டசபைத் தலைவர் தேர்தலில் தோல்வி.
1840 – எலக்டர் தேர்தலில் தோல்வி.
1843 – பெருமன்றத் தேர்தலில் தோல்வி.
1846 – பெருமன்றத் தேர்தலில் வெற்றி.
1848 – பெருமன்றத் தேர்தலில் தோல்வி.
1855 – செனட் தேர்தலில் தோல்வி.
1856 – உதவி ஜனாதிபதி தேர்தலில் தோல்வி.
1858 – செனட் தேர்தலில் தோல்வி.
1860 – ஜனாதிபதி தேர்தலில் வெற்றி.

இந்தத் தோல்வி - வெற்றி பற்றிய பட்டியல் எவருடையது தெரியுமா தம்பி! இறவாப் புகழ் பெற்றுவிட்ட ஆபிரகாம் லிங்கனுடையது!

ஆமாம்! தம்பி! அத்தனை தோல்விகளைக் கண்டிருக்கிறார் ஆபிரகாம் லிங்கன். எத்துணை உள்ள உரம்! அந்தத் தோல்விகளைக் கண்டு மனம் உடைந்திடாமல், முயற்சியிலே மேலும் மும்முரம் காட்டி, அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி இறவாப் புகழ்பெற்றுக் காட்டினார். ஒவ்வொரு முறை அவர் தோற்றபோதும் அந்த நாட்டுப் பக்தவத்சலங்கள் என்னென்ன பேசியிருப்பார்கள்! தொலைந்தான்! தொலைத்துவிட்டோம்!! என்று எத்தனை பேர் முழக்கம் எழுப்பியிருப்பர்? ஆபிரகாம் லிங்கனுடைய நண்பர்களேகூட, இந்தத் தோல்விகளைக் கண்ட போது, இவ்வளவு தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்காத இந்த மக்களை என்ன சொல்வது! இப்படிப்பட்ட மக்களை நம்பி யார்தான் எந்த நல்ல காரியத்தைத்தான் செய்ய முற்பட முடியும்! என்றெல்லாம் பேசியிருந்திருப்பார்கள். ஆயினும், ஆபிரகாம் லிங்கன், இந்தத் தோல்விகளைக் கண்டு, துயர் துளைக்கும் மனத்தினராகிவிடவில்லை, மக்களின் நல்லாதரவு கிடைக்கும் வரையில், அதற்காகப் பாடுபடுவது தமது கடமை என்ற உணர்வுடன் பணியாற்றினார்; திராவிட முன்னேற்றக் கழகம், பொதுமக்களின் நல்லாதரவைக் கேட்டிடும் பணியினை ஓர் கடமை எனக்கொள்ள வேண்டும். மக்கள் தமது நல்லாதரவை நமக்குத் தராமலும் இல்லை. தர்மபுரியில் நமக்கு அந்த நல்லாதரவு கிடைக்காமற் போனதற்கான காரணத்தை, கழகத் தோழர்கள் கண்டறிய வேண்டும்; நமது வேலை முறைகளிலே இருந்திடக் கூடிய குறைபாடுகளைக் களைந்திடுவதிலே கவனம் செலுத்த வேண்டும். நமது தோல்வி, நமக்கு மட்டுமின்றி, நமது கழகத்திற்கு வெளியே உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கெல்லாம், எவ்வளவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை அறியும் போது, கவலையைவிட, ஒரு புதுவித நம்பிக்கையே நமக்குத் தோன்றும். அத்துணை மக்கள் நமது வெற்றியை எதிர்பார்த்தபடி உள்ளனர் என்பது புரிவதால்.

பொது உண்மையை அனைவரும் அறிவர்; ஆளுங் கட்சிக்குக் கிடைக்கக்கூடிய சில வசதிகளும், வாய்ப்புகளும், எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்காது. ஆம் எனில் அதற்கு என்ன பரிகாரம்? அந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு ஆளும் கட்சி சாதித்துக்கொள்வதை நாம் நமது பரிவினைக் காட்டி, தோழமையைக் காட்டி தூய்மையைக் காட்டி, முயற்சியின் மூலம் பெற்றிட வேண்டும்; பெற்றிட முடியும்; பெற்றிருக்கிறோம்; தருமபுரியில் பெறத் தவறிவிட்டோம்.

ஆளுங்கட்சி அதிகார பலத்தைக் காட்டி ஏழை எளியவர் களை மட்டுமல்ல, வணிகர்களை, அலுவலகப் பணியாளர்களை மயக்கவும், மிரட்டவும் முடிகிறது. அதனால்தான், அமைச்சர் களாக இருந்துகொண்டே பொதுத் தேர்தலை நடத்துவதைக் கண்டித்தோம்; தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகிலும், மந்திரி பதவிகளை ராஜிநாமா செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். காங்கிரஸ் அமைச்சர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

இடைத் தேர்தலின்போது, நாம் அந்த யோசனையைக்கூட கூறமுடியாது; பொருளில்லை.

இடைத் தேர்தலிலே பெரும்பாலும் ஆளுங்கட்சி வெற்றியைத் தட்டிப் பறித்துக்கொள்ளும் வாய்ப்புப் பெறுகிறது. வருபவர் யார்? மந்திரி! கேட்பது என்ன? ஓட்டு! கொடுக்கா விட்டால்? கோபம்! கோபம் வந்தால்? என்னென்ன செய்வாரோ? நமக்கேன் அவர்களின் பொல்லாப்பு!! - இது பொதுவாக மக்களின் மனப்போக்கு. இதை மீறித்தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிட வேண்டும்.

எதிர்கட்சிக்குத் தருகிற "ஓட்டு' உடனடியான பலனை எதிர்பார்த்து அல்ல!

ஆளுங்கட்சியினர் "ஓட்டு' கேட்கும்போதோ, உடனடியாகப் பலன் தருவதாகச் சொல்லுகிறார்கள்; மக்கள் நம்பவும் செய்கிறார்கள்.

"பெண்கள் கல்லூரி வேண்டும், வேண்டும் என்று பல வருஷங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஏற்பாடாகவில்லை''

என்று தர்மபுரி பிரமுகர்கள், கழகத் தோழர்களிடம் கூறும் போது, கழகத் தோழர்கள் என்ன சொல்லுவார்கள்?

"சட்டசபையில் இதைப்பற்றிக் கட்டாயம் பேசுகிறேன். கல்லூரி அமைக்காதிருக்கும் போக்கைக் கண்டிக்கிறேன். இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்துக் காட்டினால், காங்கிரஸ் மந்திரிகளுக்குப் பயம் ஏற்படும்; அப்போது கல்லூரிக்கு வழி பிறக்கும்.''

இதைத்தான் சொல்லுவார்கள்; முறை. அமைச்சர் ராமைய்யாவிடம் அதே தருமபுரி பிரமுகர்கள் அதே கல்லூரி விஷயமாகக் கேட்டால், அவரால் என்னென்ன சொல்ல முடியும் என்பதை எண்ணிப் பாரேன், தம்பி!

"கல்லூரியா! பெண்கள் கல்லூரியா! ஏற்படுத்தலாமே! அதிலென்ன கஷ்டம்! எத்தனையோ கல்லூரிகள் ஏற்படுத்தி இருக்கிறோமே. இங்கே எந்த இடம் நல்ல இடம், கல்லூரிக்கு?''

இவ்விதம் பேச முடியும்; பேசுகிறார்கள். உள்ளம் பூரிக்கிறது பிரமுகருக்கு இருக்கிறது நல்ல இடம் ஊருக்கு மையமாக; ஒரே சதுரம்; அறுபது ஏக்கர்.

என்கிறார் என்று வைத்துக்கொள்ளேன், உடனே மந்திரியின் மோட்டார் கிளம்புகிறது; ஜீப் முன்னாலே பறக்கிறது; பக்கத்தில் பிரமுகர்; இடத்தைப் பார்வையிடச் செல்கிறார்கள்.

"உங்க பேட்டை ஓட்டு எப்படி?''

என்று அந்தச் சமயத்தில் மந்திரி கேட்டால் என்ன பதில் வரும்?

"எல்லாம் "ஐயா' சொல்கிறபடிதான்! காங்கிரசுக்குத் தான்''

இடத்தைப் பார்வையிடுகிறார்கள்; தரமான இடம் என்கிறார் மந்திரி; ஆமாம்! என்கிறார் அதிகாரி! அகமகிழ்ச்சி பிரமுகருக்கு; கல்லூரி வந்துவிடும் என்பதனாலே மட்டுமல்ல; நெடுநாளாக விலை போகாதிருந்து வந்த அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்றுவிட முடியும் என்பதால்; நிலம் பிரமுகருடையது; இந்த விவரம் விளக்கப்பட்ட பிறகு அந்தப் பிரமுகர், ஐம்பது பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்களே அந்தக் கொடுமையையா எண்ணிக் கொண்டிருப்பார்; ஏகர் ஐயாயிரம், அறுபது ஏகர்! மொத்தத்தில் 3 இலட்சம்!! இந்தக் கணக்கிலே அல்லவா அவர் உலவிக் கொண்டிருப்பார். மகனை இழந்த மாதா கதறுவதா காதில் கேட்கும், புதுப்புது நோட்டுகளை எண்ணும்போது எழுகிறதே இன்பநாதம், அது!!

தம்பி! நாம் மக்களின் இதயம் நமது பக்கம், ஆகவே, தேர்தலிலே வெற்றி நமது மக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, காங்கிரசாட்சியின் கொடுமைகளை எடுத்துப் பொதுமக்களிடம் விளக்கிக்கொண்டு இருக்கும்போது, இந்தக் கல்லூரிப் பிரச்சினை படை எடுத்து, நமக்கு வரவேண்டிய ஓட்டுகளை விழுங்கிக்கொண்டிருக்கிறது.

பண்புள்ள ஜனநாயக நாடுகளில், அமைச்சர்கள் தேர்தலின் போது - அதிலும் இடைத் தேர்தலின்போது - அதைச் செய்து தருகிறோம், இதை நிறைவேற்றிக் கொடுக்கிறோம் என்று வாக்களிக்கமாட்டார்கள், முறையல்ல என்பதால்.

தர்மபுரியில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும்போது, புதிய மாவட்டத்துக்கு எது தலைநகர், கிருஷ்ணகிரியா? தருமபுரியா? என்கிற பிரச்சினை அங்கு ஓட்டுக் கேட்க வந்த அமைச்சர்கள்.

தருமபுரியைத் தலைநகராக்கித் தருகிறோம்

என்று அங்கேயே அறிவித்திருக்கிறார்கள். தருமபுரியில் பிரமுகர்களும், வணிகர்களும், எப்படி அதிலே மயங்காதிருக்க முடியும்!

முழுக்கணக்கு எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும், தருமபுரியைத் தலைநகராக்குகிறோம் என்று தேர்தல் நேரத்தில் காங்கிரசார் வாக்களித்த காரணத்தால், தருமபுரி வட்ட ஓட்டுகள் நமக்குக் கிடைத்திருக்கவேண்டியவை, காங்கிரசுக்கு விழுந்துள்ளன என்பது தெரிகிறது.

தம்பி! தருமபுரி தொகுதி மூன்று பிரிவுகள் கொண்டது; ஒன்று காரிமங்கலம் வட்டம்; இரண்டாவது தருமபுரி வட்டம்; மூன்றாவது நல்லம்பள்ளி வட்டம்.

கடந்த பொதுத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக நின்றவர் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் கந்தசாமி கவுண்டர். கழக வேட்பாளர், தருமபுரி வட்டம் வெற்றிபெற்ற சுயேச்சையாளர் வீரப்ப செட்டியார் காரிமங்கலம் வட்டம்.

ஆகவே காரிமங்கலம் வட்டத்து ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை, வீரப்பசெட்டியாருக்கு, நல்லம்பள்ளி வட்டத்து ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை காங்கிரஸ் வேட்பாளர் பாளையம்புதூராருக்கு, கழக வேட்பாளரான சுப்பிரமணியம் அவர்களுக்கு, தருமபுரி வட்ட ஓட்டுகளில் மிகப் பெரும்பாலானவை விழுந்தன.

கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்ததைவிட இம் முறை காரிமங்கலம் வட்டத்திலும், நல்லம்பள்ளி வட்டத்திலும் (நான் அறிந்தவரையில்) கழகத்துக்குக் கிடைத்திருக்கிறது; ஆனால், தருமபுரி வட்டத்துக்குள் ஓட்டுகள் கழகத்துக்குக் குறைந்துவிட்டன.

காரணம் என்ன இருக்க முடியும்? தலைநகர்!!

இந்த ஆராய்ச்சி செய்துகாட்டி தோல்வியை மறைத்திட ஒரு திரை நெய்துகொண்டிருக்கிறேன் என்று எவரும் எண்ணிக் கொள்ள வேண்டாம். இந்த விவரம் கூறுவதற்குக் காரணம், தேர்தலின்போது, நாம் துளியும் எதிர்பாராத, புதிய நிலைமைகள் வடிவமெடுத்து, எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதை விளக்குவதற்காகவே.

ரஷியாவிலே, நெப்போலியன் படுதோல்வி அடைந்த தற்கான பல காரணங்களிலே ஒன்று என்று இன்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நெப்போலியன் ரμயர் மீது படை எடுத்துச் சென்ற சமயத்தில், வழக்கமாக ஆரம்பமாகிற பனிக்காலம் பத்து நாள் முன்னதாகவும், வழக்கத்தைவிடக் கடுமையாகவும் ஆரம்பித்தது ஆபத்தாக முடிந்தது என்கிறார்கள்.

களத்திலே ஏற்பட்டுவிடும் தோல்விகள், படை பலத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, முறைகளையும் செம்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடம் தருவன. அந்த முறையில், தருமபுரி தோல்வியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் இதயம் வென்றிட நாம் எடுத்துக்கொண்ட முயற்சி நாம் பெருமிதம் கொள்ளத்தக்க வெற்றியைக் கொடுக்கிறது. நமக்குக் கிடைத்துள்ள இந்த வலிவினைச் சிதைத்திட, ஆளுங்கட்சியான காங்கிரஸ் என்னென்ன நிலைமைகளை உருவாக்கும், என்னென்ன முறைகளை மேற்கொள்ளும் என்பன பற்றி விழிப்புடனிருந்து கண்டறிந்து அவைகளையும் முறியடிக்கத்தக்க விதமாக நமது முறைகளைச் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காகவே இதனைக் கூறினேன்.

அண்ணன்

9-5-1965