அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இன்றையப் பகைவர் நாளைய நண்பர்!
2

தூய்மையான தேசத் தொண்டாற்றியவர்கள், நாம் எடுத்துக் கூறிடும் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால், கடுகடுப்பும் சிடுசிடுப்பும் காட்டுகிறார்களே - அவர்கட்கு இன்று நாம் சட்டப்பேரவையில் பணியாற்றிடும் காட்சியே, கண்றாவியாக இருக்கிறது; உணர்ச்சி வயப்படும் இத்தகையவர்கள் மட்டும், நமது கொள்கையின் நியாயத்தை உணர்ந்துகொள்ளத்தக்க அளவுக்கு இதிலே தெளிவு பெற்று விடுவார்களானால் - எண்ணும் போதே, தம்பி, தித்திக்கிறது - இதிலே ஈடுபாடு கொண்டுள்ள நாம் நடத்தும் செயலை இனியன என்றுதானே, இவர்கள் கொள்ளுவார்கள்!

பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணி யாற்றிக் கொண்டுவந்தால், அவர்களிலே எத்துணையோ பேர், மனம் மாறி, நமது நியாயமிக்க கொள்கைக்கு நிரம்ப வலிவு அளித்திடுவார்கள்.

நான் இந்த எண்ணத்தை எப்போதும் மறவாமல் பணியாற்றுவதனால்தான், நான், சிலர் பகை கக்கினாலும் பதறுவதில்லை; கடுமொழி புகன்றாலும் கோபிப்பதில்லை; முகம் சுளித்தாலும் வருந்துவதில்லை; கதிரவனைக் கண்டல்லவா கமலம் மலருகிறது - நாம் நமது கொள்கையை எடுத்துரைப் பதிலே பெற்றுள்ள ஆற்றல் போதாது - கமலம் மலரவில்லை - காரணம் கதிரொளி கிளம்பவில்லை - என்றுதான் எண்ணிக் கொள்கிறேன்.

தம்பி! உன் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, இதனைச் சற்று விரிவாகவே எழுதினேன்.

இனியன கேட்பின்
என்னரும், தம்பி!
இனிது இனிது
இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்
அடுத்ததன் நண்பராய்
ஆகுதல் அன்றோ!

என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்.

தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம் காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவேண்டிய உரிய மரியாதையைத் தந்தே உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.

அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும் இருக்கின்றீர்கள் - ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை. வடக்கே குவிந்து விட்டிருக்கிறது'' என்று பேசினேன் - பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் - தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி. மு. க. காரர்கள் அரசியலுக்கு இலாயக்கில்லை என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிட்டார் என்ற செய்தியைக் காண்கிறேன்!

நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ, "நாங்கள் அரசியலுக்கே இலாயக்கில்லை'' என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்!

பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதவ முடியும்?

நம்மை அரசியலுக்கு இலாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே என்று வருத்தப்பட்டுப் பயன் என்ன?

சட்டப் பேரவையிலே, நமது தோழர்கள் பேசிய பேச்சிலே காணக்கிடைக்கும் பண்பும் கண்ணியமும், வெட்ட வெளியிலே காங்கிரஸ் தலைவர் பேசியதிலே தெளிவும் கண்ணியக் குறைவும், நேர்மையாளர்களாலே ஒப்பிட்டுப் பார்க்கப்படாமலா இருந்து விடும்?

"தாக்குகிறார்! தாக்குகிறார்!'' என்று தாசர் கூட்டம் மகிழக் கூடும் - அதற்கான கூட்டமும், போதுமான அளவுக்குக் கூடுவதில்லை. ஆனால் அறிவாளர்கள், "புத்தம்புதியவர்கள், இளையவர்கள், தீவிரமாகப் பேசவல்லோர், சட்டப்பேரவை யிலே எத்துணைப் பண்புடன் பேசுகின்றனர், தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவர் ஏனோ, இத்தகு சுடுசொல் கக்கினார் கண்ணியத்தைவிட்டு விலகினார், பண்பினை மறந்தார் என்று எண்ணிப் பார்த்திடத்தான் செய்கின்றனர்.

நாம் "தாங்கிக் கொள்கிறோம்'. அவர்களோ, தாக்குதலை நடத்தி நடத்திப் பயன் காணாததாலே தவிக்கிறார்கள்.

அரசியலுக்கு இலாயக்கில்லை என்று இவர் கூறட்டும் - பரவாயில்லை - இலாயக்குள்ளவர்கள் என்று 17 இலட்சம் வாக்காளர் பெருமக்கள் அறிவித்துள்ளனர்; அதுமட்டுமல்ல - வேறொன்றினையும் அறிவித்துள்ளனர் - இந்த விற்பன்னர் - எவரெவர் சட்டசபைக்கு உரியவர் என்று தீர்ப்பளிக்கும் திறம் படைத்தவர், சட்ட சபைக்குத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

இதனையும் நாடு அறியும் - நல்லோர் அறிந்தே உளர்.

நாத்தழும்பேற நம்மை நாத்தீகர் என்றனர் - நன்மதி படைத்தோர், அந்தப் பழிச்சொல்லை, ஏற்க மறுத்தனர்.

நாசவேலைக்காரர்கள் என்று கூசாமல் கூறினர் - மக்கள் மன்றத்து மாமணிகளோ, வடிகட்டின பொய்யை வல்லமை யினால் மெய்யாக்க முயற்சிக்கும் இவர்தம் போக்கை எள்ளி நகையாடினர்.

அரசியலுக்கு மட்டுமல்ல, தம்பி! சமூகத்திலேயே, நாட்டிலேயே, இவர்கட்கு இடம் இல்லை - இருந்திட இலாயக்கு இல்லை என்று இவர் போன்றார் பேசினர் - நாடு, இத்துணை ஆணவப்போக்கு எத்துணை நாட்களுக்கு என்று கேட்டு, எள்ளி நகையாடிற்று.

வெட்கமேனும் இவர்தம் உள்ளத்தில் உறுத்தினால், நாமோ என்னென்ன பழிகளைச் சுமத்தலாமோ அவ்வளவும் சுமத்திப் பார்த்தோம் - கடுமொழியினைக் கொட்டினோம் - சட்டம் கொண்டு தாக்கினோம் - சபித்தோம் - சந்துமுனைச் சிந்து பாடி நிந்தித்தோம் - எல்லாம் குறைவறச் செய்தும், காண்பது என்ன? கழகம் கருகிவருகிறதா? மக்கள் விலகிச் செல்கின்றனரா? ஆதரவு அழிந்துபட்டதா? இல்லையே! நாள் தவறாமல், நாலாறு இடங்களிலே அந்தக் "குரல்' அல்லவா கேட்கிறது! விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் விதண்டாவாதம் பேசிக்கொண்டு, தமிழகத்தில் நடமாடித் திரிகிறார்கள் என்று நையாண்டி பேசியது போய், இன்று எங்கும் இரண்டொருவர் இருந்துகொண்டு, அடுக்குமொழி பேசி மயக்கி' வருகிறார்கள், இவர்களை இனியும் விட்டு வைத்தலாகாது, என்று பேசிடும் நிலையன்றோ வந்து சேர்ந்தது? பலகாலும் பழிகூறிப் பலன் ஏதும் காணோமே? இனியும் அதே முறையில் இருந்திடின், காணப்போகும் பலன் என்ன இருக்கிறது? என்றாவது எண்ணுவர். எண்ணினரா? இல்லை! ஆசை வெட்கமறியாது என்றுதான் ஆன்றோர்களே கூறிவிட்டனரே! மீண்டும் மீண்டும், அரைத்த மாவையே அரைக்கிறார்கள் - அவர்கட்கு அலுப்புதான் அதிகமாகிறதே ஒழிய, கழகத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு குன்றவில்லை, குறையவில்லை, குன்றின் மேலிட்ட விளக்கென ஒளிவிட்ட வண்ணம் இருக்கிறது.

சென்னை பெரம்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காஞ்சி வந்து இதனை எழுதுகிறேன். தம்பி, நாளை மீண்டும் சென்னையிலே கூட்டம்!

நான் மட்டுமல்ல - நமது கழகப் பேச்சாளர்கள் யாவருக்குமே, இதே முறையில், வேலை மிகுதி இருந்திடக் காண்கிறோம்.

இந்த இடையறாத பொது மக்கள் தொடர்பு வீண்போகும் என்றா, ஒரு இயக்கத்தில் ஈடுபட்டவர் எண்ணுவது? இந்தத் தொடர்பு எதன் விளைவு? என்பதனையாவது எண்ணிப் பார்த்தாரோ! இல்லை என்றல்லவா அவர் பேச்சு காட்டுகிறது! இதற்கு, வளரும் சக்தியைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுவது தேவை - வேண்டாமய்யா, அத்தனை பெரியவருக்கு இத்தனை கடினமான வேலை தர வேண்டாம்; மிகச் சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதையுமா இவர் மறந்து நிற்கவேண்டும். மமதை மதியை அடியோடு அழித்து விட்டதே, வருந்துகிறேன் தம்பி, நிச்சயமாக வருந்துகிறேன்.

நாம் பேசுவதோ பயனற்றவை, போக்கோ பொருளற்றது, ஆற்றலோ அடியோடு இல்லை, அறிவோ சூன்யம், சரி - அங்ஙனமே இருக்கட்டும் - இத்தகையவர்களை நாள் தவறாமல் பல்லாயிரவர் சந்தித்திடவும், உரையாடவும், சொல் கேட்கவும் துடிப்பானேன்?

எனக்கு உண்மையில் விளங்கவில்லை - எவரெவர் அரசியலுக்கு இலாயக்கு என்பதனைக் கண்டறியும் திறமை இருப்பதாகக் காட்டிக் கொண்ட வித்தகர், இந்த விசித்திரத்துக்கு விடை அளிப்பாரா?

நான், கழகத்தின் சார்பில் வாதாடும் போக்கிலேகூட இப் போது இதனைக் கூறவில்லை. தமிழ் நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்; அமைச்சர் பெருமான்களும், அந்தப் பெருமை அதிக நாள் கிடைக்காது ஆயாசப்படுவோரும், அடுத்த முறை எனக்குத்தான் என்று ஆவல் ததும்பும் உள்ளத்துடன் இருப்போரும் பொன்னும் பொருளும் மிக்கோரும், புலமையைத் துணைகொண்டோரும், எல்லோரும்தானே, கூடிக்கூடி, நாடெங்கும் ஓடி ஆடி கழகத்தைக் கடுவிஷமென்றும், காட்டுத் தீ என்றும், நாசவேலை என்றும், நாத்தீகமென்றும், மயக்கமென்றும், மதியீனமென்றும் பலப்பல கூறினர்; பலன் என்ன கண்டனர்?

பட்டிதொட்டி எங்கும் பட்டொளி வீசிப் பறந்திடும் நமது கழகக் கொடிகளைக் காணுகின்றனர்!

பட்டினமும் பாக்கமும், நமது கழக விளக்கம் கேட்கும் கோட்டங்களாவதைக் காண்கின்றனர்.

நள்ளிரவு வரையிலும்கூட தாழ்ந்த தமிழகம் மீண்டும் எழுந்திட வழிவகை யாது என்பது குறித்து நமது தோழர்கள் பேசுவதைக் கேட்டிட பல்லாயிரவர், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன் ஆவலாக இருப்பதைக் காண்கின்றனர்.

பழி பேசிப் பகை வளர்த்திட எண்ணமிடும் தலைவர்களிற் பெரும்பாலோர் இல்லங்களிலேயே நமது கழக இலட்சிய முழக்கம் எழக் கேட்கின்றனர்.

"எங்கும் நிறைநாத' மாகிவிட்ட இந்த எழுச்சியை, இன்னமும் ஏளனத்தினாலும் பழி பேசுவதாலும், தூற்றுவதாலும் துடுக்குத்தனமாகத் தாக்குவதாலும் அழித்தொழித்திட முடியும் என்று இவர்கள் கருதுவார்களானால், தம்பி, நாம் பரிதாபப்படுவது தவிர, வேறென்ன செய்ய முடியும். நீயே கூறு, கேட்போம்.

இவர்களின் காரணமும் பொருளும் அற்ற கடும் தாக்குதல், இவர்தம் குணம் யாது என்பதனை, நாடறியச் செய்கிறது; இவர்தம் சுடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு, நாம் நமது கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்து பணியாற்றியபடி இருந்திடும் பண்பும் நாட்டுக்குத் தெரிகிறது.

தெரிந்ததும், தொலைவில் நின்றோரெல்லாம், தோழரா கின்றனர்; கழகம் வளருகிறது!

அழகு தமிழும் அடுக்குமொழியும், நமது கழக வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்!

தமிழ் மொழி வண்ணமும் வளமும் மிக்கது. ஐயமில்லை! அதன் துணை பெற்றோர் தொடங்கும் செயலுக்கு சீர் கிடைக்கிறது, மறுக்கவில்லை; ஆனால், நமது கழகம் இத்துணை வேகமாகவும் சிறப்புடனும் வளருவதற்கு உள்ள மிக முக்கியமான காரணம், அச்சமும் அதன் விளைவான அருவருப்பும் பொச்சரிப்பும், அதன் காரணமாகக் கிடைக்கும் நச்சு நினைப்பும் கொண்டோர், நம்மீது வீசிடும் சுடுசொற்களே என்பதை நான் உணருகிறேன்; தம்பி! நீயும் அறிவாய்! கழகம் வளர வளர, கடுமொழி வளரும்: ஆனால் இறுதியில், கடுமொழி பேசுவோர்தான் தமது நோக்கையும் போக்கினையும் மாற்றிக்கொள்ளப்போகிறார்கள்; கழகத்துக்கு இம்மியும் கேடுபாடு வந்து சேராது.

இனியது கேட்கின்
கனிமொழித் தம்பி!
இனிது இனிது
அன்பர்கள் அருங்குழாம்
அதனினும் இனிது
ஆர்த்தெழும் மாற்றார்
திருந்தி நம்முடன்
சேர்ந்திட விழைதல்!

எனவே, என்றேனும், வென்று வருகிறோம் என்பதை அறிவதனாலே வெகுண்டெழுந்து நமது கழகத்தின் மீது ஒரு சிலர் வெறுப்பினைக் கக்கிடக் கேட்டால், தம்பி, குறித்து வைத்துக்கொள், நம்மீது அவர்கள் வீசிடும் ஒவ்வொரு சுடு சொல்லும் பத்து புதிய ஆதரவாளர்களை நம்மிடம் அழைத்து வருகின்றது என்ற பேருண்மையை.

இன்றைப் பகைவர் நாளைய நண்பர், என்றார் ஒருவர்.

என் தேர்தலின்போது, "எனக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும்'' என்று நான் வலியுறுத்திக் கேட்கும் அளவுக்கு உறவும் உரிமையும் உள்ள ஒரு இல்லத்திலே, ஒரு இள மாது, அண்ணாவுக்கு இல்லாமலா எமது ஓட்டு? என்று கூறி, என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்திய பிறகு, காங்கிரசுக்கு "ஓட்' அளித்ததாக அறிந்து, ஒரு பொதுக்கூட்டத்தில், இப்போது இங்கு எழுதியது போலவே இடமும் பெயரும் குறிப்பிடாமல் பேசினேன்; அது புரிந்ததால், எனக்கு ஓட்டளிக்காததன் காரணத்தை விளக்கியும், தான் கொண்ட போக்கு குறித்து வருத்தம் தெரிவித்தும் அந்த வனிதை எழுதிய கடிதத்தின் கடைசி எழுத்து, எனக்கு நினைவிற்கு வருகிறது.

இப்படிக்கு,
எதிர்கால தி. மு. க. உறுப்பினர்

என்பதுதான், அந்த வாசகம்!

இன்றைய பகைவர் நாளைய நண்பர் - ஆகிறார்களோ இல்லையோ, நாட்டு விடுதலை எனும் மிகப் பெரிய செயலுக்கு நம்மை நாம் ஒப்படைத்துவிட்டோம் - நாம் இந்தச் சீரிய நோக்கத்துடன்தான் பணியாற்றவேண்டும்.

உன் ஆற்றல், இதிலே எத்துணை வெற்றிபெற்றுத் தருகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பிடப்படும்.

பாட்டுக்கு பாட்டெடுப்பேன்
உன் பாட்டனாரைத்
தோற்கடிப்பேன்!

என்ற "இலாவணி' முறையிலே அரசியல் நடத்துவது, எளிது. துவக்கத்திலே சுவைகூடத்தரும். ஆனால் அந்தச் சுவை, தம்பி; நானும் துள்ளி விளையாடும் பருவத்திலே மெத்தக் கண்டதுதான். புளியம் பழத்தைச் சுவைக்கும்போது, புளிப்புடன் ஓர் இனிப்பும் கிடைக்கும்! ஆனால் இரண்டொரு பழம் உண்ட பிறகோ, எதைச் சாப்பிட்டாலும், நாக்கிலே எரிச்சல் ஏற்படும்!

தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் சிதைக்கும். நமக்கு வேண்டாம், அந்த முறை! அது அவர்களின் "ஏகபோக உரிமை' யாகவே இருக்கட்டும்; அனுமதிப்போம்.

அண்ணன்,

28-7-57