தம்பி! ஒரு யானை! அது ஒரு நாள், தன் பிடி முன்வர வெட்கப்பட்டுக்கொண்டு
புறக்கடைப்பக்கம் போய் நின்றதாம்! ஈதென்ன வேடிக்கை, யானை
வெட்கப்படுவதா, ஏன்? என்பீர்!
காதலி எதிரில், அலங்கோலமான
நிலையில், வந்து நிற்க வெட்கமாக இராதோ உங்கட்கு. ஆள்வோரைத்
தள்ளி விடுங்கள், அவர்கள் விரைவில் "ஜடாமுடி' தாரிகளாகி,
காவி கட்டிக் கமண்டலமேந்தி, கடுந்தவம் செய்யப் புறப்படுவார்கள்!
அப்படிப் புறப்பட்டால்தானே, பேரழகி மேனகை வருகிறாள்!!
போகட்டும்! தவத்தை நடத்தட்டும். நான் கேட்பது இல்லறம்
நடத்துவோரை! யாம் கூறுவதன்றிப் பிறிதேதும் அறமாகாது என்று
அறைந்திடுவோரை அல்ல!
பல்லிரண்டு ஒடிந்துபோய்,
உதடு கிழிந்து, ஆடை கலைந்து இருக்கும் நிலையில் காதலி
எதிரே வந்து நிற்கத் துணிவீர்களோ? முடியாது, என்கிறீர்கள்.
அதேதான் அந்தக் களிறு இருந்த நிலை. தந்தம் உடைந்துவிட்டது!
நகங்கள் தேய்த்து போய்விட்டன! அந்தத் தந்தத்தைக் கண்டு
கண்டு எத்தனை முறை பெண்யானை களிப்புற்றிருக்கும்; உரிமையுடன்
உவகையுடன், தன் துதிக்கை யால் எத்தனை முறை தந்தத்தை வருடிற்றோ,
நீ கண்டாயோ! என்ன ஒரு விதமான புன்னகை!! அன்றொருநாள்,
தோளின்மீது சாய்ந்து. . . ஓஹோ! அதை எண்ணிக்கொண்டாயா!
யானை மட்டும் என்னவாம்! களிறு, கவலைப்படுகிறது! செ! இந்த
நிலையில், மடப்பிடி என்ன எண்ணுவாளோ! எப்படி எதிரே போவது!
வெட்கமாக இருக்கிறதே என்று. எனவே, புறக்கடைப் பக்கம் சென்று
நிற்கிறது.
தந்தம் ஒடிந்தது ஏன் தெரிகிறதா?
கொடி மதில் பாய்ந்தது -
போரில்! கோட்டைச் சுவரினைக் கோடுகொண்டு - தந்தந்தைக்கொண்டு,
தாக்கிற்று! கோட்டைச் சுவரும் இடிந்தது, தந்தமும் உடைந்தது.
போரின் காரணமாகத் தான் நகமும் தேய்ந்தது! இதைப் பெண்
யானை பிறகு, தானே தெரிந்துகொள்ளும் பார்த்ததும்! என்ன
அலங்கோலம் இது! கோடு உடைந்து கிடக்கிறதே! என்று கேட்டுக்
கேலி செய்யுமே! அந்த எண்ணம், ஆண் யானைக்கு!
வெறும் காதல் மட்டுமா, தம்பி.
இதிலே காணக் கிடக்கிறது! தமிழர் போர் முறை விளக்கப்படுகிறது!
மனப்போக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரிய நகைச்சுவை ததும்புகிறது!
இத்தனையும் தமிழ்! அந்தத் தமிழ், நமது மொழி! அந்தக் களிறு,
பிடி, நம்முடையவை! "அந்த நாட்கள்' நம்மவர், "நமது அரசு'
அமைத்து ஆண்ட நாட்கள்!
இவ்வளவும், இதற்கு மேலும்,
ஊற்றெடுக்குமே, இத்தகைய தமிழ்ப்பாக்களைப் பயிலுங்காலை.
தம்பி! நாடாள்வோரைக் கண்டு
கண்டு சலித்துப் போயிருக்கிறதல்லவா, உன் கண்கள். அதிலும்,
கோயிலுக்குச் சென்று கும்பிட்டு நின்று, ஆண்டவன் அருளைக்கூடப்
பெற்று விடலாம் எளிதாக. ஆனால், ஆலயத்துப் பூசாரியிடமிருந்து
மட்டும், மட்டு மரியாதை, மனிதத்தன்மையை மதிப்பதுபோன்ற
மிகச் சாதாரண "பிரசாதம்'கூடக் கிடைக்கவில்லையே என்று,
கை பிசைந்து கண் கலங்கி நிற்கும் "கனம்'களைக் காண்கிறோமே!
கஷ்டந்தான்! எனக்குந்தான்! சரி, தம்பி! ஒரு நாரையைக் காண்போமா!
துயில்கின்றது! எவ்வளவு
இன்பமாக; கவனித்தாயா! உன் மார்பின்மீது, மதலையின் சிறுகால்!
உன் முகத்திலே, ஓர் மலர்ச்சி! பக்கமுள்ள பாவைக்கு உன்னை
அம்மகவு படுத்தும் பாடு கண்டு, பெருமை, பூரிப்பு! உனக்கு
அடங்க மறுக்கிறது, உன் ஆற்றலின் விளைவு!
"நானே, அடங்க! உங்கள் "வீரம்'
என் கண்ணிடம் பலிக்காது!'' என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள்,
முக்கனிச் சாற்றைப் பேச்சிலே பெய்தளிக்கும் பாவை.
உனக்கும் உன்போன்றோர்க்கும்
அது.
இதோ நாரையைப் பார், நிம்மதியாகத்
தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வாராது?
அதுவும், மாமரத்தின் இளந்தளிர்,
தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு.
மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்.
ஆமாம், தம்பி! புலவர்,
ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக்
காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலேகூட,
அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது
சாதாரண நாரைதானே. இதை ஏன், புலவர் காட்டினார் என்பார்.
காரணத் தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த
இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும்
அல்ல.
கழனிக் கரும்பின் சாய்ப்புறம்
ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்.
நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது
கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம்.
கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம் வெயிலில் காய்கிறது.
சேச்சே! இதென்ன ஆமைக்கு
ஒரு பாடலா என்று கேட்பர், ஆள வாய்ப்பு கிடைத்ததாலேயே;
அறிவின் முதிர்ச்சி தமது சொத்து என்று அதிகாரத்தைக் காட்டி
மக்களை நம்பச் சொல்வோர். நாட்டு வளம் மட்டுமா? புலவர்கள்,
இயற்கைக் காட்சிகளை எவ்வளவு அழகுறப் படமெடுத்திருக்கிறார்கள்
என்பதல்லவா முக்கியம்.
ஆமையைக் கண்டு கூர்மாவாதாரக்
கதை கட்டினாரிலை; வளம் எப்படி இருந்தது என்று உணர்த்தினர்.
இயற்கை வளம் காட்டுவதுடன்
நின்றாரில்லை, அரசர்கள் முறை தவறி நடந்தகாலை இடித்துரைத்தனர்,
கோல் கோணாதிருத்தல்வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
சுவைபடக் கூறுவது ஆகாது
என்று பேசுவோர், குறிப்பாக "அகத்துறை'யை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர்.
உனக்கென்ன, என்று கேட்பாயானால் தம்பி, எனக்கொன்றும் இல்லை;
ஆனால், அங்ஙனம் கூறுவோர், "புறம்' பற்றிய, புலவருரையையேனும்,
போற்றினரா, பாடம் பெற்றனரா? இல்லையே! ஏன்? ஆரணங்குபற்றிய
பேச்சு அவர்கட்கு எட்டி. சரி! அப்படியே இருக்கட்டும்.
மற்ற அறநெறிபற்றி, என்ன கருதுகின்றனர்? எவ்வாறு நடந்துகொள்கின்றனர்?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே.
என்று பாடியுள்ளனரே. இதிலே
கடை இல்லை; இடை இல்லை, பிறகேன், இதனைக் கூர்ந்து பார்த்து,
அவ்வழி நல்வழி என்று கண்டு, கேடு களைய முற்படக்கூடாது!
நீண்ட காலமாக இருந்து வரும்
"பூஜா' முறையை எவரும் குறைகூறக் கூடாது என்றல்லவா, பேசுகின்றனர்,
அமைச்சரானோர்.
சிறப்பும் சீலமும் அல்லாது
பிறப்பு நலந்தருமோ
பேதையீரே!
என்று கேட்கிறாரே, புலவர்!
எங்ஙனம் விடை இறுக்க இயலும்?
இந்தத் தேவாலயத்திலே, இன்னார்தான்,
இன்ன முறைப் படிதான், பூஜை செய்வர்; அதற்கு உட்பட்டுத்தான்
பக்தர் செல்ல வேண்டும் - என்று பேசும் போக்குக்கும்,
பழந்தமிழர் கொள்கைக்கும் ஏதாகிலும் பொருத்தம் இருக்கிறதா?
இல்லையே! ஆலயத்துக்குப் "பூஜாரிகள்'' ஆக, இன்னின்ன தகுதி
வேண்டும், ஜாதி அடிப்படையில் அல்ல என்று சட்டம் இயற்றச்
சொல் பார்ப்போம்! அந்த முயற்சியில் ஈடுபட்டால், எமது
செல்வாக்குச் "சடசடெனச் சரியும்'' என்பார்கள்.
எனவேதான், தம்பி, தமிழரின்
வரலாறு குறித்து நாடு அறிந்தால் மட்டுமே, நெஞ்சுரம் ஏற்படும்
என்று கூறுகிறது, நம் கழகம்.
சிறைப்பட்ட மன்னனுக்குத்
தாங்கமுடியாத தாகம் ஏற்பட்டது. காவலாளியோ பருக நீ கொடுக்கும்போது
மரியாதைக் குறைவாகக் கொடுத்தானாம். மானம் பெரிது, உயிரல்ல
என்று எண்ணிய அந்த மறத்தமிழன், நீர் பருகாதிருந்து உயிர்
நீத்தான் என்று பாடல் இருக்கிறது.
அந்தப் பாடலும் பழம் கதையும்
எற்றுக்கு என்று ஏசுவோரின் ஆளுகையில், "எட்டிநில்! கிட்டே
வராதே! வீசுவேன் பிரசாதம், வாங்கிக்கொள்!'' என்று ஆலயத்தில்
உள்ளவன் ஆரியம் பேசுகிறான், அது நியாயந்தான் என்று "ஐதீகம்'
பேசுகிறார் ஒரு அமைச்சர்! ஊரே கிளம்பி, இந்தச் சுழியில்
சிக்கிய துணை அமைச்சரைத் துளைத்தெடுக்கிறது. தமிழ் அறம்
அரசோச்சுமானால் நிலைமை இதுவாகவா இருக்கும்?
அந்த அறம், அமைச்சர்களின்
துணையால் வாராது; தம்பி! உன்போன்ற தூய உள்ளமும் துயர்
கண்டு துவளாப் போக்கும் கொண்டோர், தொடர்ந்து பணியாற்றினால்
மட்டுமே முடியும். தொடர்ந்து பணியாற்றவேண்டும், தம்பி,
தொடர்ந்து! இன்று கூடவா, அண்ணா! என்று, ஏக்கத்துடன்,
கேட்கத் தோன்றும். நான் அவ்வளவு கடின மனம் கொண்டவன்
அல்ல.
இன்று இல்லத்தில் இன்புற்று
இரு! உன்னைப் பெற்றோர் உளமகிழ்ந்து "எமது குடிசிறக்க
வந்துற்றான் இவன்' என்று கூறிடத்தக்க விதமாகச் செயலாற்று.
மஞ்சளும் இஞ்சியும், அவைதமை
நறுக்கிடும் மாம்பழக் கன்னத்தாளும், பால் பெய்த பொங்கலும்,
பருப்பும் பாகும், எதிரிருக்க உன்னை ஏடு எடு! நாடாள வந்தவர்கட்கு
அறிவுச் சுடர் வரத்தக்க விதத்தில் எடுத்துக் கூறு! எதிர்ப்புக்கு
அஞ்சாதே! என்று கூறி, அழைப்பேனா! அண்ணன் கூறுவதை எப்படித்
தட்டி நடக்க முடியும் என்று கூறிப்பார், வேல் இரண்டு பாயும்
உன் நெஞ்சில்! எடுத்தெறியத் தேவை இல்லை வேலை! ஏறெடுத்துப்
பார்த்து, என்ன? என்று கேட்டாலே போதும், நானறிவேன்.
பொங்கலெனும் நன்னாளைப்
பூரிப்போடு போற்றுதற்கு, ஊரெல்லாம் திரண்டிடும்போது,
உனக்கு மட்டும் வேறு பணியா? இல்லை, தம்பி, இல்லை, செங்கரும்பும்
சீனியும் செவ்வாழைச் சீப்பும், சுவைக்க! முல்லையும் மல்லியும்
சூட!
பூ இரண்டு போதாதோ, புதுப்பூக்கள்
தேடுவதோ, என்று மலர்க்கண்ணாள் கேட்டிடுவாள் இதழ் விரித்து.
அந்த இன்பக் காட்சியிலே,
உன்னை மறந்து, ஒரு நாள் இருப்பது, பிறகு தன்னை மறந்து,
தமிழுக்குப் பணிபுரியும் உற்சாகம் பெறுவதற்கே என்பதை மட்டும்
மறவாதே!
காடதிர, நாடதிர, கயவர் கூட்டம்
சிதற, வீரம் விளைவித்து வெற்றி கண்ட இனத்தில் உதித்தோம்.
வேழம் உராயும் சந்தனமும்,
வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர் சோலைகளும்,
பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம்.
தீயன நினைக்கா நெஞ்சும்,
தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும்,
நமக்கு.
முப்புறம் கடலுண்டு; எப்புறமும்
அந்நாளே கண்டு வியந்ததுண்டு. பலப்பல இலக்கியம் உண்டு,
கலை பல உண்டு, காண்பாய்!
அலைகடல் அடக்கும் ஆற்றல்,
ஆணவம் முறிக்கும் அடுபோர்த்திறன், வாணிபம் நடாத்தும்
நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மை, யாவும் உண்டு இங்கே.
முத்து அளிக்கும் கடல்!
அகில்போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு
வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும், மரபின் இயல்பு!
வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார், நம் ஆன்றோர்.
அத்தனையும் உடனிருக்க, நத்திப்பிழைக்கலாமா?
இத்தனையும் இங்கிருக்க, இல்லாமை இருக்கலாமா? நாடு வளம்
தந்திடினும், நாம் வாழ வழி காணோம், கடல்கடந்து வந்துள்ளோம்,
அடிமைகளாய் வதைவதற்கே என்று கூறிக் கசிந்து நிற்கின்றனர்,
நம் உடன்பிறந்தார், வேற்றுச்சீமைகளில்.
இவைகளை எண்ணாமல், எம்முடன்
இணைந்திருங்கள், இறுக்கிப் பிணைத்துவிட்டோம், எங்கு இனிச்
சென்றிடுவீர் என்று கேட்டு மிரட்டுகிறது பேரரசு.
இது இன்றுள்ள நிலைமை. இந்த
நிலைமையை மாற்றினால்தான் தம்பி, வீடெல்லாம் விழாக்கோலம்,
நாடே விழாக்கோலம், நாளெல்லாம் நல்ல விழா!
சின்னஞ்சிறுநாடு செம்மையுடன்
வாழ்ந்திருக்க, பண்டைப் பெருமைதனைப் பாங்காகப் பேசிவரும்,
நந்தம் திருநாடு, நாதி யற்றுக் கிடப்பதுவோ? திண்தோள்
உண்டென்றும், தீவிரம் பல பேசி, ஆவது ஒன்றுமில்லை. தெளிவுகண்டோம்
என்றால், மற்றவர்க்கும் தெளிவளித்து நம்மைப்போல் அவராகும்
நாளை எதிர்நோக்கி நிற்போம்; கன்னல் வளரக்கண்டு கருத்தோடு
உழைத்திட்ட காராளன் தருவான் பாடம்.
இங்கிதனைச் செய்வதற்கு,
ஏற்றதோர் இளவல் நினையன்றி வேறெங்கு காணக்கிடைத்திடுவான்?
நின் முன்னோன் ஒரு சேரன், நீள்புகழ் நாட்டிச் சென்றான்.
மற்றோர் மாமன்னன் கடலைக் கடந்து சென்று காட்டினான் பெருவீரம்!
அவர் தந்த "நாடு' அழகழிந்து இருப்பதுவோ? நமை நோக்கி
உள்ளார்கள் நாளைத் தலைமுறையார், அவர் வாழ வழிவேண்டின்
அடிமை நிலை போக்கி, மடைமைதனை நீக்கி, வறுமைப் பிணிக்கு
இது வாழிடம் அன்றென்று கூறி, கிளர்ந்தெழுந்து கொடுமைகளை
ஒழித்திடுவாய்.
நான் மட்டுமல்ல, தம்பி,
நாடே அழைக்கிறது.
நம் நாடு மட்டுமல்ல, எங்கும்
இது குறித்து இன்று பலர் பேசுகிறார்.
விந்தை மனிதரென்றும், வெட்டிப்
பேச்சாளரென்றும் வீறாப்புப் பேசுவோரும், உள்ளூர உணர்ந்துகொண்டார்;
நமக்கின்று உள்ள நிலைமையோ பாய்மரமில்லாக் கப்பல் என்ற
பெரும் உண்மையினை.
கோதிக்குழல் முடித்து,
கோலவளை குலுங்க அழகு நடை போட்டு அருகில்வரும் ஆரணங்கும்
"ஆமாம் அத்தான்; அரிமாவாம் உம்முடைய ஆற்றலுக்கு ஏற்றதோர்
அரும்பணி ஈதேயாகும்'' என்பார்.
வீடாளும் வேல்விழியாள்,
நாடாளும் நற்பேறு நமதாதல் வேண்டுமென்று நாளும் நினைப்பவள்தான்.
ஆகவே, "அண்ணன் அழைக்கின்றான் அயராது போய் வருவீர்' என்றே
கூறிடுவாள் அகம்குழைந்துமட அன்னம். கேட்டு, "அன்புத் தாயகமே
அடிமை நிலைபோகும்; அரியாசனம் காண்போம்' என்று நாட்டுக்கு
எடுத்துரைக்கத் துடிக்கின்றேன். எனினும், இன்று அன்று!
இன்று மனை; மகிழ்ச்சி; விழாக்கோலம்! இன்புற்றிரு, என்
அன்பினைப் பெற்று உன் அன்பினை எனக்களிக்கத் தவறாதே - அளித்தால்
குறையாது. அஃதொன்றே, கொடுக்கக் குறையாதது.
செந்நெல்மணி குவித்துச்
செங்கரும்பு விளைவித்துச் சேயிழையார் ஈன்றெடுத்த செல்வங்களோடு
இல்லறம் உவந்தளிக்கும் இனியன பலவும் பெற்று இன்புற்று
இரு! இந்நிலையும், எல்லார்க்கும் ஏற்படவேண்டும் என்பதனை
மறவாதிரு! எண்ணம் பாரியானால் எத்துணையோ கோடி காதம்,
"இம்'மென்று கூறி முன் சென்றிடலாம் என்பர். அம் முறையில்,
எண்ண நின்றால், அரசு அமையும் என்றிருத்தல் அழகல்ல, அறமல்ல,
ஆகும் நெறியாகாது, நெஞ்சம் புகுந்து விட்ட அந்த எண்ணமதை,
எல்லோரும் உணர்ந்திட ஓர் வழி காணல் நின் கடமை. கடமை அத்தோடு
நின்றிடவுமில்லை. எழுச்சி எங்கணுமே ஏற்றமுடன் தோன்றியபின்,
காட்சி இதுபோலக் காணக்கிடைக்காது என்று இறும்பூதெய்தி
இருந்திட்டால் போதாது. எங்கே எம் பகைவர். எப்பக்கம் களம்
உளது? ஏன் இன்னும் முரசு இல்லை? எனக் கேட்டுத் துடிதுடித்துக்
கேடகற்ற நீ முனைவாய்!
ஆடகச் செம்பொன்னும் ஈடாமோ
உன் மேனி அழகதற்கு என்று பேசிடின், ஏற்றிடுமோ ஏந்திழையும்,
காணக் காத்திருத்தல், கண்பொத்தி விளையாடல், கா சென்று
பூப்பறித்தல், வேழம் தனை விரட்டல், வெஞ்சமரில் முந்திநிற்றல்
என்றன்றோ முறைகள் பல இயம்புகின்றார் அகம் அறிந்தோர்.
அவரே அழகுபடப் "புறம்'' இருந்திடும் முறைதனையும் அன்றே
கூறியுள்ளார்!
களிறோ, கடுங்காற்றோ காணீர்
இவ்வீரனையே! என்று மாற்றாரும் வியந்திடும் போக்கினிலே
அஞ்சாது போரிட்டு அரசு காத்திருந்தார், இந்நாளில் இடர்ப்பட்டு
ஏங்கித் தவித்திடும் இத்தமிழ் மக்களின் எந்தையர்கள் முந்தையர்கள்.
இன்றுள்ள நிலைமையினால் ஏற்பட்டுவிட்டுள்ள
இழுக்கைத் துடைத்திடவோர் ஏற்றமிகு செயல்புரிய எல்லோரும்
துடிக்கின்றனர். அவர்தம்மை வாழ்த்துகிறேன். ஆர்த்தெழும்
முரசாவர் அருந்தமிழர் விடுதலைக்கே!
அன்னாரும் அன்பர்தாமும்,
இனிதே மகிழ்ந்திருக்க விழைகின்றேன். என் வாழ்த்துதனைச்
சேர்க்க ஏற்ற முறை கிடைத்திடுமேல், பொன்னான தம்பி! அதைச்
செய்தும் சுவை பெறுவாய்.
இந்நாளில் பொங்குவது இன்பம்
மகிழ்ச்சி எலாம்.
எந்நாளும் இதுபோன்ற அமைந்திட
ஓர் வழி உண்டு. அந்த நல்வழி நடக்க, உனக்கு ஆற்றலும் நிரம்ப
உண்டு. அறிந்தே உரைக்கின்றேன், ஆகும் என்று உரைக்கின்றேன்.
உழவர்கள் உள்ளம் பொங்க
ஒளிதரும் கதிர்கள் ஈன்று
கழனிகள் தோறும் செந்நெல்
களிநடம் புரியும் தையே
எழிலோடு வாராய். . . .!
என்று இங்குளார் அழைக்கின்றார்கள்.
செங்கதிர் சிரித்த சிறப்பினிலே
சிதறிய ஒளியின் சிதற-லே
பைங்கதிர் கொண்ட உவகையிலே
பைம்பொன் கதிராய் மாறுகையிலே
மங்களத் தோற்றம் காண்கையிலே
பொங்கிய உள்ள மகிழ்ச்சியிலே
தங்க நிறக்கதிர் கொய்தனரே
பொங்க லெனவிழா வைத்தனரே!
என்று பாடுகின்றனர்.
இசையுடன் வாழ்ந்த இனத்தில்
வந்துதித்தோம், இனியொரு முயற்சி செய்வோம், இழந்ததைப்
பெறுவோம், இசைபட வாழ்வோம், வாராய்.
இன்றல்ல என்று தனது இருவிழியால்
கூறிடும் என் உடன்பிறந்தாள் தனக்குமே, உரைத்திடு, முறை
அறிந்து உரைத்திடுவாய், தம்பி, நீ
அண்ணன்,

14-1-1960