அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இயற்கை கொஞ்சுகிறது !
இல்லாமை கொட்டுகிறது !!
2

இம் முறையில் ஊதாரித்தனமாக நடந்துகொள்ள எப்படி முடிகிறது? கேட்பதற்கு நாதி இல்லை! தினமணி எழுதுவதுகூட குதிரை பறிபோன பிறகு கொட்டிலைப் பூட்டும் கதை போன்றதுதான். கமிட்டிகள், ஜமாக்கள், விழாக்கள், வீண் செலவுகள், இவை கிளம்பும் போதே, ஆட்சி மன்றத்திலே, கேள்விக் கணைகளைப்பூட்டி, தடுத்து நிறுத்த எதிர்க்கட்சி எங்கே இருக்கிறது? கடிவாளம் இல்லை, குதிரை, காடுமேடு தாவிச் செல்கிறது!! எதிர்க்கட்சி இல்லை, எனவே, ஊரார் பணம் ஊதாரிச் செலவுக்குப் பாழாக்கப்படுகிறது!!

இரண்டாயிரம் கோடி என்ன - இருபதினாயிரம் கோடி செலவானாலும், இப்படிப்பட்ட துரைத்தனம் நடத்துவோரின் தர்பாரில் நாடு சிக்கிக்கிடக்கிறவரையில், இல்லாமை கொட்டத்தான் செய்யும் - இதனைத் தம்பி! அரசியல் விளக்க ஏடுகள் படித்தவர்கள் அறிந்து கொண்டிருப்பதைவிட, நான் காட்டினேனே, ஒரு அணா கொடுத்த உழைப்பாளி, அப்படிப் பட்டவர்கள் மிக நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதானா இரகசியம்? நீங்கள், இல்லாமைக்குக் காரணமாக இருப்பவர்கள் இந்த ஊதாரித்தனமிக்க ஆட்சியாளர்கள் என்பதை எடுத்துரைக்கிறீர்களா - ? இதைக் கேட்கத்தான், திரள் திரளாக மக்கள் கூடுகின்றனரா? அப்படியானால், நாங்களும் அதனையேதானே செப்புகிறோம்? உம்மைவிடச் சற்று அதிகமான வீரதீரத்துடன், காரசாரமாகவே சொல்கிறோமே... என்று கேட்கும், மற்ற மற்ற கட்சிகளைக் காண்கிறேன்.

தம்பி! இயற்கை வளமளித்தும், உழைப்பு உற்பத்தி அளித்தும்கூட, இல்லாமை கொட்டுவதற்குக் காரணம், ஆட்சியாளர்களின் ஊதாரித்தனம் மட்டுந்தான் என்று கூறவில்லை. பல காரணங்களிலே இது ஒன்று என்பதை விளக்கி விட்டு, ஊதாரித்தனமாக நடந்துகொள்ளாதீர்கள், ஊருக்கும் பயந்து ஆட்சி நடத்துங்கள், ஏழையின் வயிறு எரியச் செய்யாதீர்கள், என்று அறிவுரை கூறித் திருத்த முற்பட்டாலும், ஆட்சிக் குழுவினரையேகூட மாற்றி அமைத்தாலும், பலன் கிடைக்காது; ஏனெனில், நந்தம் நாட்டைப் பொறுத்த மட்டில், ஆட்சியிலே வீற்றிருப்போருக்கு, அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் மிகமிகக் குறைவு; ஆட்டிப்படைத்திட டில்லியிலே ஓர் பேரரசு இருக்கிறது, இங்கு உள்ளது, பேருக்குத்தான் அரசு என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறோம்.

இதுபோது காணக்கிடைக்கும் இயற்கை அழகு ஒருபுறம் இருக்கட்டும், தம்பி, திராவிடம் முழுவதும்கூட அல்ல, தமிழகம் வரையிலேயே வேண்டுமானால், பார்க்கச் சொல்லு, பரந்த மனப்பான்மையினரை, என்ன வளம் இங்கு இல்லை? என்ன பொருள் கிடைக்கவில்லை?

தமிழ்நாடு எல்லை, சிதைக்கப்பட்டு, உரிய இடங்கள் பறிக்கப்பட்டுப் போன நிலையிலும், தனி அரசு செலுத்தி மதிப்புடன் வாழ்ந்து வரும் பல சுதந்திர நாடுகளைவிட, அளவிலும் வளத்திலும் பெரிதாகவே இருக்கிறது.

50,170 சதுர மைல் அளவுள்ளது இன்றைய தமிழகம்!

தமிழகத்து மக்கள் தொகை மூன்றுகோடி - இதில் 2,65,46,764 மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

விளைநிலம் மட்டும் 15,878,000 ஏக்கர் உள்ளன என்று புள்ளி விவரத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

விளைநிலம் ஆகத்தக்கதும், இன்று ஆட்சியாளரின் அசட்டையால் கரம்பாகிக் கிடப்பதும் மட்டும் 37 இலட்சம் ஏக்கருக்கு மேலிருக்கிறதாம்.

காட்டு வளத்துக்கும் குறைவு இல்லை. விஞ்ஞானத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கனிப் பொருள்கள் ஏராளமாக உள்ளன, பூமிக்கடியிலே தூங்கிக் கிடக்கின்றன!

இன்று புதியமுறை தொழில்களுக்காக,

குரோமைட்
மோனசைட்
சில்மனைட்
கார்னெட்

என்றெல்லாம் கூறுகிறார்களே அப்பொருள்களும், உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்கத்தக்கதான

தோரியம்
யுரேனியம்

ஆகியவைகளும் தமிழகத்தில் ஏராளமான அளவுக்குக் கிடைக்கின்றன.

பொன்னும் மணியும் ஒரு நாட்டுக்கு வாழ்வும் வளமும் அளித்திடாது; ஆனால் எந்த நாடும் பொன்னாடு ஆகத்தக்க நிலையை ஏற்படுத்த இரும்பும் நிலக்கரியும் இருக்கவேண்டும். இந்த இரு செல்வங்களையும் தமிழகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரியின் பாங்கினைப் பாராட்டாத நிபுணர் இல்லை; மிக உயர்தரமானது என்கின்றனர்; கிடைக்கும் அளவும் மிகப்பிரம்மாண்டமானது; பல நூற்றாண்டுகள் கிடைக்குமாம்!

கஞ்சமலை, கோதுமலை, கொல்லிமலை, கொத்தளமலை, பச்சைமலை, பெருமாமலை, தீர்த்தமலை, சித்தேரிமலை ஆகிய இடங்களில், இரும்பு சிறைப்பட்டிருக்கிறது, விழிப்புற்று எழுச்சிபெற்ற தமிழகம் அமையுமானால், தூங்கிக் கிடக்கும் இந்தக் கருப்புத் தங்கத்தை வெட்டிக் கொணர்ந்து, தமிழகத்தைத் தொழிலகமாக்கிச் செழிப்பினைக் காணலாம். சேலம் மாவட்டத்திலே இரும்பு! தென் ஆற்காடு மாவட்டத்திலே நிலக்கரி! சேலத்து இரும்பு 30 கோடி டன் என்கிறார்கள். நெய்வேலி நிலக்கரி 100 சதுரமைல் அளவுக்கு அடைந்து கிடக்கிறதாம், 200 கோடி டன் அளவு நிலக்கரி உள்ளது என்கின்றனர்.

சேலம் சேர்வராயன் மலையில் பாக்சைட், மாக்னசைட், திருச்சி அரியலூர் வட்டாரத்தில் ஜிப்சம், குமரிமுனையில் தோரியம், - தம்பி! காவிரிப் பகுதியில் பெட்ரோலாம்! எந்தெந்தப் பொருள் கிடைக்காமல் நாடு பல திண்டாடுகின்றனவோ, அந்தப் பொருள் யாவும் இங்கு நமக்காக இயற்கை, கட்டிக் காத்து வருகிறாள் - கனிவுடன் அழைக்கிறாள் ஆனால், வெட்டி எடுக்க நமக்கு உரிமை ஏது!

கட்டித் தங்கமடா, மகனே! பலகாலமாக உனக்காக நான் காத்து வந்திருக்கிறேன், வெட்டி எடுத்துக்கொள் என்று வாஞ்சனையுடன் தாய் அழைக்கிறாள், தனயன், "அந்தோ அன்னையே! என் கரம் கட்டுண்டு கிடக்கிறதே!'' என்று கண்ணீர் பொழிந்து நிற்கிறான்.

சேலத்து இரும்பு சிறைப்பட்டிருக்கிறது - டாட்டா கம்பெனிக்கு நாம் கப்பம் கட்டுகிறோம்.

நெய்வேலி நிலக்கரி வெளிவர மறுக்கிறது, இங்கு ஏழையின் கும்பி, இல்லாமையால் எரிகிறது! காடு போதும், நாட்டுக்கு செல்வமளிக்க! எனினும் இங்கு நஞ்சை கரம்பாகிறது - கரம்பு கள்ளிகாளான் படரும் இடர்மிகு இடமாகிறது. பச்சை மாமலைகளும், பளிங்கன்ன நீரோடைகளும், இங்கு இருந்தும், பசி! பசி! என்று பதறிக் கதறி, வேலை கிடைக்காததால் வேற்றுச் சீமைகள் சென்று சோற்றுக்கு அலைகிறார்கள், நேற்றுவரையில் நானிலம் போற்றிடத்தக்க நல்லாட்சியில் இருந்தவர்கள்.

கத்துங் கடலில் முத்து எடுத்து கடலகமெனத்தகும் கலம்தனில் ஏறிச்சென்று, காற்றை அடக்கி, யவனம் சென்று வாணிபம் நடத்தி, பொன்னும் புகழும் ஈட்டினர் முன்னோர்.

நாமும் தமிழரே! நாமமதில் தமிழர் என்றாரே, பாரதியார், அந்தத் தமிழர்! நாம், நமது உடன்பிறந்தாரை, மலாய்க் காட்டுக்குத் துரத்திவிட்டிருக்கிறோம்! பர்மாவில் ரப்பர் பால் எடுக்கிறார்கள் - தாயகத்தின் கோலத்தை எண்ணி அழுகின்றனர்! இங்குள்ள ஏழை எளியவர்களோ இல்லாமை கொட்டும்போது, "அக்கரை' சென்றாலாவது அரை வயிறு கஞ்சி நிச்சயமாகுமோ, போகலாமா, என்று எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர்.

கட்டழகி, கன்னிப் பருவத்தினள் கலகலெனச் சிரித்தபடி, மணமிகு சந்தனம் குழைத்துப் பூசி, மகிழ்தல் போல பொன்னி எனும் பேரழகி பூரிப்பை அள்ளித் தெளிக்கிறாள். காவேரி தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம், தங்கம்! என்று கவி சுரக்கிறது, அவள் எழிலை எண்ணும்போதே.

செந்நெலைக் கண்டு செங்கமலம் சிரிக்கிறாள் - அன்னம் அதுகண்டு நின்ற நிலையிலன்றோ நீ இருப்பாய், என்போல் குடைந்தாடி மகிழவல்லாயோ என்று கேட்டு, கவர்ச்சியூட்டக் காண்கிறோம்.

கன்னல் விளைகிறது, காரமிக்க மிளகுக் கொடிகள் படருகின்றன!

உலகின் தொழில்துறை பலவற்றுக்கும் தேவையான ரப்பர் விளையும் காடுகள் - மனைக்கும் மரக்கலத்துக்கும் தேவையான தேக்கு - ஓங்கி வளரும் தெங்கும், ஒயிலாகக் காட்சி தரும் கமுகும், என்னென்ன எழில், எத்துணை வளம், எல்லாம் நந்தம் இன்பத் தமிழகத்தில்!

முல்லை மணமும், காட்டிலே விளைந்துள்ள சந்தன மரத்திலே உடலைக் களிறு தேய்ப்பதினாலே எழும் நறுமணமும், தென்றலிற் கூடிக் கலந்து வந்து, தமிழகத்துக்கு என்றோர் தனிமணமல்லவா தருவதாக உளது.

எனினும், வறுமை முடை நாற்றமன்றோ அடித்திடக் காண்கிறோம்.

சந்தன மணத்தைச் சாகடிக்கும் அளவுக்குச் சஞ்சலச் சாக்கடை நாற்றமடிக்கிறது.

இத்தனை இருந்தும் இல்லாமையை விரட்டிட ஓர் மார்க்கமின்றி இடர்ப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம், உள்ளத் தெளிவற்றோர், ஊதாரிகள், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்திடுவோர் பிடியில் ஆட்சி சிக்கிவிட்டது என்பது மட்டுமல்ல, இவர்களின் அதிகாரம் என்பது செல்வர் சிலருக்குச் சுகபோகம் வழங்கிடவும், செல்லரித்துப்போன வாழ்வினர், பெருமூச்சினைச் சிறிது உரத்துக் காட்டினாலே, பிடி! அடி! சுடு! என்று அடக்குமுறை வீசவுமான அளவுக்குத்தான் அமைந் திருக்கிறது!! தமிழகத்தைத் திருநாடு ஆக்கும் திட்டம் தீட்டிச் செயல்படும் உரிமை இவரிடம் இல்லை! மக்களின் வாழ்க்கையில் உள்ள வாட்டத்தை ஓட்டிட, இயற்கை வளத்தையும் மக்களின் உழைப்பின் திறத்தையும் ஒன்று கூட்டிட, அதன் பயனாகக் கிடைக்கும் செல்வத்தைச் சமுதாய உடைமையாக்கிட இவர்கட்கு, உரிமை கிடையாது. எனவே, இயற்கை கொஞ்சியும் இல்லாமை மிஞ்சுகிறது என்றால், அதற்கான காரணங்களிலே மிக முக்கியமானது, இங்கு அமைந்துள்ளது பேருக்குத்தான் அரசு - சிலருடைய பெருமைக்குத்தான் அரசு - உண்மையில் முழு அதிகாரம் படைத்த அரசு அல்ல.

இது பிரசாரம் - தீதான பிரசாரம் என்கின்றனர் டில்லியிடம் வரம் கேட்டு வாங்கி வாழ்க்கையை நடத்தி வருவோர்.

இது குறுகிய மனப்பான்மை, குறை நெளியும் கொள்கை, தவறுள்ள தத்துவம் என்கின்றனர், அகிலமெல்லாம் கட்டி ஆளும் ஆற்றலைப் பெற்றோம் என்ற ஆசைக்குப் பலியானவர்கள்.

அமைச்சர்கள் - அதிலும் அமைச்சர் அனைவருக்கும் "வாய்' அளித்திடும் நிதி அமைச்சர் - டில்லியின் ஆதிக்கம் என்பது அபத்தம் என்று அறைகிறார்.

ஆனால், இவர்களில் ஒவ்வொருவரும், தத்தமது தலையில் குட்டு, எரிச்சல் ஏற்படும் அளவுக்குப் பலமாக விழும்போது பதறிப்பதறிக் குளற முன் வருகின்றனர் - ஆமாம்! டில்லியிடம் கேட்கவேண்டும்! எம்மிடம் இல்லை! என்று பேசுகின்றனர்.

முதலமைச்சர் காமராஜரே கூடப் பேசுகிறாரே, உயிர் நீத்த உத்தமர் சங்கரலிங்கனாரின், கோரிக்கைகள் 12 இல், 10 மத்திய சர்க்காரைப் பொறுத்தது என்று.

அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, டில்லியின் தயவு இருக்கும் வரையில்தான் "பதவி பவிசு எல்லாம், டில்லியின் முகம் சிறிதளவு சுளித்திடும் அளவில் இவர்களின் போக்கு இருப்பினும்கூடப் போதும், காஷ்மீரச் சிங்கத்தின் கதிதான்!

பாகிஸ்தானில் உள்ளவர்கள் உன் இனத்தவராக இருக்கலாம், பழக்க வழக்கத்தால், நடைநொடி பாவனைகளால், அங்கு உள்ளோர் நமது இனத்தவர், என்று தோன்றக் கூடும் - ஆனால் அந்தச் சபலத்துக்கு இடமளித்தால், உமது சுதந்திரம் சுக்குநூறாகும் - என்று அன்பு சொட்டச் சொட்டப் பேசி, காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவை வலையில் போட்டுக் கொண்டு, பாரதம் முழுவதும் உலாவரச்செய்து, அவரைக் கொண்டே ஜனாப் ஜின்னாவை ஏசச்செய்து, பாகிஸ்தானை எதிர்க்கச்செய்து, இவ்வளவுக்கும் பிறகு, அவர் காஷ்மீர் இந்தியாவின் நேசநாடாகமட்டும் இருக்கும், ஆனால் அடிமை நாடு ஆகாது, தனி நாடாகத்தான் இருக்கும் என்று கூறத் துணிந்ததும், அவர் வாயை அடைத்து, கைகாலைக் கட்டி, சிறையில் போட்டுப் பூட்டி, வழக்கும் போடாமல், வாட்டுகிறார் களே! சிங்கத்துக்கே இந்தக் கதி என்றால் சிறு நரிகள் கதியாதாகும்!! இந்த அச்சம், நமது அமைச்சர்களைப் பிடித்தாட்டுகிறது.

இந்த நிலைமையைத் தம்பி, நாம் ஒவ்வோர் நாளும் கூறுகிறோம், ஒவ்வோர் துறையிலே கிளம்பிடும் பிரச்சினை களையும் எடுத்துக் காட்டிக் கூறுகிறோம்.

நமக்கு ஏன் இந்த வம்பு என்று இருக்கும் இயல்பினர் கூட தமக்குத் தனி அக்கரையுள்ளதென்று உள்ள பிரச்சினைகளிலே, டில்லியின் இரும்புக் கரம் அழுத்தமாக விழுகிறபோது, அலறித் துடித்துக் கிளம்புகின்றனர்.

இறக்குமதி ஏற்றுமதி சம்பந்தமாக நீதி கிடைக்க வேண்டும், டில்லியிடம் நீதி கிடைக்கவில்லை, என்று மனம் உறுத்தும்போது வாணிபத்துறையினர், வாய் திறக்கின்றனர். எல்லாம் டில்லியிடமா! ஈதென்ன முறையற்ற செயல்!! என்று குமுறுகின்றனர்.

தொழில் துவக்குவோர், துவக்கிடும் தொழில் துவண்டிடக் காண்போர், மனம் நொந்த நிலை பெறுகிறபோது, எழுகின்றனர், எல்லா வளமும் வடக்கேதானே! தெற்கை யார் கவனிக்கிறார்கள்? என்று கேட்கின்றனர்.

அவ்வப்பொழுது ஆனந்தராமகிருஷ்ணன் எனும் தொழிலதிபர், பேசிடக் கேட்கிறோமல்லவா?

அமைச்சர்களேகூடச் சிலவேளைகளில், பேசிவிடுகின்றனர் - பிறகு அஞ்சி ஆமையாகி விடுகிறார்கள்.

குமாரசாமிராஜா அவர்கள் குமுறிய உள்ளத்தோடு பேசத் தலைப்பட்டதை, நாடு எங்ஙனம் மறந்துவிடும்! எல்லாம் மத்திய சர்க்காரில் என்று இருக்கும் நிலைமையை எதிர்த்துப் போரிடவேண்டிய காலம் விரைவில் வரும் என்றல்லவா கூறினார்.

தமிழகம், அவர் இந்தத் துறையில் முனைந்து நிற்பாரானால், வாழ்த்தி வரவேற்றிருக்கும், வணங்கி அவர் தலைமையைப் பெற்றிருக்கும்.

கோவையில் கொதித்தெழுந்தவர், பிறகு ஏனோ மௌன மாகிவிட்டார். காலம் கனியவில்லை என்று கருதுகிறாரோ - என்னவோ!

எனினும் அவரவருக்கு முக்கியமானது - உயிர்ப்பிரச்சினை என்று கருதத்தக்க கட்டம் கிளம்பும்போது, அவர்களெல்லாம், டில்லியின் ஆதிக்கம் ஆகாது, கூடாது, பெருந்தீது! என்று பேசுவது காண்கிறோம்.

இவர்களெல்லாம் தொடர்ந்து இந்தக் கருத்தை நாட்டிலே எடுத்துரைத்து, மக்களைப் பக்குவப்படுத்தலாகாதா என்று ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம். பிறகோ அவர்கள், வாய்மூடிடக் கண்டு வாடுகிறோம்; சரி, சரி, இன்னும் இவர்களே பக்குவப்படவில்லை என்றெண்ணிக்கொண்டு, நாம் நமது பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறோம். ஒரு அணா கொடுத்தானே, உழைப்பாளி, அவன் இதை அறிவான்!! நம்மிடமிருந்து தொடர்ந்து இந்தப் பணியை எதிர்பார்க்கிறான். சோர்வடையாதீர்கள்! என்னால் ஆன உதவியை நான் அளிப்பேன் என்று சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார்கள், இத்தகைய செம்மல்கள். அவர்களை அமைச்சர்கள் அறிவதில்லை.

இந்தியாவிலிருந்து கலைத் தூதுக் குழுவினர் பலர் பல முறை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்... மக்கள் போற்றி மகிழும் கலைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து தூதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை. ஊர்பேர் தெரியாத யாரோ ஒரு சிலர் தமிழ்நாட்டின் கலைஞராகப் போய்வருகிறார்கள். காரணம் என்ன? மக்களின் மனதை அறிந்து நடக்கும் ஆட்சி இல்லை. மத்திய அரசியலார், பாராளுமன்றத்தில் ஒரு சிலரைமட்டும் நம்புகிறார்கள். அவர்கள் மனம்போல் எல்லாம் நடக்கிறது. மத்திய அரசியலாரின் போக்கை மாற்றவோ திருத்தவோ இங்குள்ள அரசியலார் முன்வருவதில்லை! அச்சம் தடுக்கிறது.

தம்பி! பிரச்சினை, கலைத்துறை பற்றியது - எனினும் என்ன - எந்தத் துறையில் அநீதி காணப்பட்டாலும் அதனைக் கண்டித்துக் களைந்து எறியத்தானே வேண்டும்.

மத்திய அரசியலாரின் போக்கைக் கண்டிக்கிறார் - இதனை மாற்றாது இருக்கும் இங்குள்ள நமது பேர் அரசையும் கண்டிக்கிறார்.

அச்சம் தடுக்கிறது இவர்களை என்றார்.

பயந்தாங்கொள்ளிகள் - தொடை நடுக்கம் கொண்டோர் - கோழைகள் - என்றெல்லாம் அந்த அச்சம் என்பதற்குப் பல பொருளைப் பெறலாம். அச்சம் தடுக்கிறது! என்ன அச்சம்! அதுதான் தம்பி, ஷேக் அப்துல்லா பற்றிச் சொன்னேனே, அந்த அச்சம்தான். பதவியும் பவிசும் போய்விடுமே என்ற அச்சம் - வேறென்ன? போனால் என்ன? மானமன்றோ பெரிது! நாடல்லவா பெரிது! என்று ஒரு அணா கொடுப்போன் கேட்பான் - ஆமாம் - அவனிடம் அணாக்கள் தானே உள்ளன. பதவியில் உள்ளவர்கள், மானத்தை இழந்து விட்டாலும், இலட்சாதிபதியாகிறார்களே - அதிலே அவர்களுக்குத் திருப்தி - பெருமை - பாசம்! ஆசை ஊட்டவும் அச்ச மூட்டவும், டில்லிக்கு முடிகிறது.

டில்லிக்கு இந்த நிலை இருக்கும்வரையில், இங்கு அரசுக் கட்டிலில் அமருவோர் அடங்கி ஒடுங்கி "அடைப்பம்' தாங்கு மட்டும் கொலுவிருக்கலாம். ஏனென்று கேட்கத் துணிந்தால், ஷேக் அப்துல்லாவாக வேண்டும். இந்த அச்சம் தடுக்கிறது!

எனவேதான் தம்பி, ஆட்டிப்படைக்கும் டில்லியின் பிடியில் திராவிடம் சிக்கிக் கிடக்கும் நிலைமை ஒழிந்தாக வேண்டும் என்று நாம், கூறுகிறோம்.

தமிழ்நாட்டு மக்களின் பலவகைக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. எல்லைப் பிரச்சினையைத் தமிழ் மக்கள் முன் ஒருமுறை எழுப்பியபோது, "கேட்கத் துணிந்துவிட்டீர்களா? கேட்டால் உள்ளதும் போய்விடும்'' என்று' செங்கோட்டையை எடுத்துப் பிறருக்குத் தந்தனர். மீண்டும் ஒருமுறை கேட்டபோது "அப்படியா? இன்னும் உங்கள் துணிவு போகவில்லையா? தமிழ்நாடு என்று நாடும் இல்லாமல் செய்துவிடுவோம். தட்சிணப்பிரதேசம் என்று உங்களில் சிலரைக் கொண்டே மாற்றியமைத்துவிடுவோம். எங்களால் முடியும், தெரியுமா?'' என்ற மிரட்டலே கிடைத்தது. அமைதியான கிளர்ச்சி ஒன்று நடந்தபோது "இவ்வளவா, தமிழ்நாடு என்ற பெயரும் கிடையாது, போ'' என்று விரட்டலே கிடைத்தது.

தெளிவாக, நிலைமை விளக்கப்பட்டிருக்கிறதே, படம் பிடித்துக் காட்டுவது போலிருக்கிறதே, யார் இப்படி விளக்கமாகத் தந்திருப்பவர் - என்று கேட்கத் துடிக்கிறாய் அல்லவா?

தம்பி, மிரட்டல், விரட்டல், என்று கூறியிருப்பது கேட்டு ஆட்சியாளர்கள் மனம் "சுருக்'கெனத்தான் தைக்கும். ஆனால், நிலைமை இதுதான். அச்சத்தால், இங்குள்ள அமைச்சர்கள் காலமெலாம் வாயடைத்துத்தான் கிடக்கின்றனர் - எப்போதோ ஓர் சமயமாகிலும், பொதுமக்கள் பொங்கி எழுவது கண்ட பீதியால், எதிர்க்கட்சிகளின் ஏளனம் குத்துவதால், ஒரோர் சமயம் உள்ளமே சுடுவதால் துடித்து எழுந்து, நீதி கேட்கின்றனர். அப்போது டில்லியிடமிருந்து அவர்கட்குக் கிடைப்பது என்ன? மிரட்டல் - விரட்டல்!

ஆமாம், டில்லியின் போக்கையும் இங்குள்ள நம் அமைச்சர்களின் நிலையையும் அழகுபட எடுத்துரைத்துள்ள இவர் யார், என்றுதானே கேட்கிறாய்.

தம்பி, இவர் நமது கழகம் அல்ல. அந்தக் கழகத்தினரும் அல்ல, அரசியல்வாதியே அல்ல.

அப்படியா? அப்படியானால்... யார்... என்று கேட்கிறாய், தெரிகிறது... கேட்டுப்பார், நண்பர்களை, இப்படி, டில்லி - சென்னை நிலைமைகளைப் படம் பிடித்துக் காட்டுபவர், யார் என்று; நீயே கூடத்தான் கண்டுபிடியேன் பார்க்கலாம். அடுத்த கிழமை நான் அவரை உனக்குக் காட்டுகிறேன்.

அன்பன்,

18-11-'56