அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


காக்கும் கரங்கள்

நம் வீட்டு நெருப்பு எனினும் ஊர் அழிக்க விடலாமோ?
கட்டுப்பாட்டுடன் கடமையாற்றிடுக!
விரட்டிடுவோம் இந்தி ஆதிக்கத்தை!

தம்பி,

எந்தக் கரம் பட்டால் காயும் கனியுமோ,

எந்தக் கரத்தின் வலிவினாலே தமிழர்தம் எதிர்கால வாழ்வு ஏற்றம் அடைய இருக்கிறதோ,

எந்தக் கரம் தன்னலத்துக்காகத் தருக்கர்முன் குவிந்திடாதோ,

எந்தக் கரம் ஏற்புடையனவற்றுக்கெல்லாம் உறுதுணை யாக இருந்திடுவதோ, எந்தக் கரம் தமிழர்க்கு அறநெறியைக் காட்டி வருகின்றதோ,

எந்தக் கரம் கழகம் மேற்கொள்ளும் தொண்டினுக்காகப் படைக்கலனை ஏந்தி வருகிறதோ,

எந்தக் கரம் இழிவினைத் துடைத்து, இன்னலை முறியடித்து, மொழிகாத்து, தமிழ் வழியை அமைத்துத் தரவல்லதோ,

அந்தக் காக்கும் கரத்திடம் "காஞ்சி' இதழின் ஆண்டு மலர் உறவாடி உவகை அடைகின்றது.

ஒவ்வொரு கிழமையும் "காக்கும் கரங்களில்' என் கருத்தினைத் தாங்கி வரும் மடல் சேருகிறது, பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதனை அறிந்து அளவிலா அக மகிழ்ச்சி அடைந்து வருகின்றேன்.

தம்பி! உன் தகுதிமிக்க கரங்களுக்கு ஏற்றவிதமான எழில் கூட்டி இதழினைத் தந்திடும் முயற்சியில் என் இளைய மகன் இளங்கோவன் ஈடுபட்டு வருகின்றான், என்றாலும் இதழின் எழிலைவிட, என் இதயத்தில் ஊற்றெனப் பெருகிடும் அன்பினையே பெரிதெனக் கொண்டிடுவாய், மகிழ்ந்து வரவேற்பாய் என்பதனை நானறிவேன்.

ஒவ்வொரு பிரச்சினையையும் உன்னிடம் எடுத்துக் கூறிடுவதன் மூலம், எனக்கே ஒரு தெளிவும், உறுதியும் பிறந்திடக் காண்கின்றேன்; நான் அளித்திடும் கருத்தினுக்கு நறுமணம்தான் கூட்டி நாலு திசைதனிலும் சேர்த்திடுவாய் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்; நான் அறிவேன் உன் திறமை.

தம்பி! எப்படியோ நமது உள்ளமதில் தாயகம் குறித்துப் பற்று நிரம்பிக் கிடக்கிறது. முன்பிருந்த நிலையினை நாமறிந்திடச் செய்யும் இலக்கியச் செல்வங்கள் இனிதே பெற்றுள்ளோம்; இணையற்ற செல்வமது. மறுப்பார் எவருமில்லை! எனினும், ஈடற்ற கருவூலம் பெற்றவரே நாமெனினும் இற்றை நாளில் எத்தனை இடர்ப்பாடும் இழிநிலையும் வந்துற்றதென்பதனை எண்ணும்போது ஏனோ நமக்கிந்த மெய்யுணர்வு நெஞ்சில் இடம் பிடித்து நிறைந்துளது என்றும் நாம் கவலைப்படுகின்றோம்; கண் கசியும் நிலையுந்தான்.

எதிர்ப்புகள் அல்ல, நமது இதயத்தை வாட்டுபவை; களம் நின்று போராடக் கலங்கிடப் போவதில்லை; நமக்கிருக்கும் கவலையெலாம், மரபு மறந்திடுவார் மாற்றாருடன் கூடி மாண்பு கெடுத்திடவும் துணிகின்றாரே, அவரும் தமிழர்! ஆம்! அவர்க்கும் சேர்த்தன்றோ அருந்தொண்டு ஆற்றுகின்றோம்! அதனை அறிந்திடாது, கனியிருக்கக் காய் கவர்வார் போலும், தாய் அருகிருக்க ஓர் பேய் மகளைப் பின் தொடர்ந்து செல்கின்றாரே! என் செய்வோம்!!

எக்கேடு எவர்க்கெனினும் எமக்கு ஈந்திடுவீர் சுவை என்றால், சேர்ந்திடுவோம் உம்மோடு, உற்றாரை மாற்றாராய்க் கருதிக் கொண்டு, என்றுரைத்து நிற்கின்றாரே, இவர் நிற்கும் இடமும் தமிழ் மண்தானே, ஐயோ! வழிவழி அம்மண்ணுக்கு வந்த மாண்பதுவும் இவர் தீண்டி நிற்பதனால் மங்கி மடிந்திடுமே, எவர் இவரைத் திருத்திடுவார், என்று இவர் விழி திறக்கும்? உற்ற வழி அதற்கு என்ன? என்றெண்ணி ஏங்குகிறோம்; மாற்றார் படை கண்டு, அல்ல, அல்ல; அவர்தம் பலம் கண்டும் அல்ல, அல்ல, உண்மை வென்றிடும் என்ற உறுதி நமக்குண்டு என்பதனால்.

வெள்ளையனை விரட்டிவிட்டோம், வெற்றி முரசு கொட்டி விட்டோம், அதற்குப் பின்னர் முரசொன்று அறைந்திடவும், முழக்கம் எழுப்பிடவும், அறமென்றும் நெறியென்றும் பலவற்றைக் கூறிடவும், தேவை துளியும் இல்லை, தெரிந்திடுவீர்! தெளிந்திடுவீர்! அன்னியன் ஆண்டபோது மிகத் தேவை கிளர்ச்சி பல; இன்றல்ல; கதை முன்பே முடிந்ததுகாண் என்கிறார் "கன'மானார்.

அரசு கட்டி-லே அமர்ந்துவிட்ட காரணத்தால், எதையும் செய்திடலாம், எம்முறையும் திணித்திடலாம், வரி பலவே திரட்டிடலாம், வயிற்றினில் அடித்திடலாம்த, வாழ்வே சுமையாகி வாட்டுதே என்போரை, வாழ்வா பெரிது? நாடன்றோ? எனக் கேட்டு, வாயை அடக்கிடலாம், மீறிட முனைவோரைச் சிறையில் அடைத்திடலாம் சின்ன பின்னமாக்கிடலாம், என்றெல்லாம் ஆர்ப்பரித்து ஆடுகின்றார் வெறியாட்டம்!

அவர் கூற்று ஏற்றிடுவோர் அறிவினை அடகு வைத்தோர்! தமிழராகார்!! அரசாள முனைந்தோர்கள் எவரெனினும், நம்மவரெனினும், கேடு செய்திடுவோர்கள் போடும் உடை யாதெனிலும், எதிர்த்து நின்றிடுதல் நம் கடமை; நம் உரிமை; நம் வீட்டு நெருப்பெனினும் ஊரழிக்க விடலாமோ! புற்றரவு நம் வீட்டுப் பூந்தோட்டம் உள்ளதெனில் நச்சுப்பல் தீண்டிடுமேல் நமைச் சாகவைக்காதோ!! ஏனோ இவர்க்கிந்த எளிய உண்மை ஏறவில்லை; எம்மையா எதிர்க்கின்றீர் என்றுரைக்கின்றாரே; கொடுமையின் வடிவமதுயாதெனினும் தாக்கிடுதல் நம் கடமை; நம் உரிமை!! நாமெல்லாம் இந்நாட்டு மன்னர்! நமை ஆள்வோர் நாம் கொண்ட ஊழியரே!

இந்த விதமான எண்ணம் இன்று நந்தம் தமிழகத்தில் நன்றாக வேரூன்றி, ஆல்போல் தழைத்திருக்கக் காண்கின்றோம். அத்தருவை அழித்திடவே முனைகின்றார் ஆளவந்தார், இருளாட்சி நடாத்திடவே ஏற்கப்போமோ!

ஆண்டு பதினேழாகி அவதி தீரவில்லை, அல்லல் போகவில்லை, அவர் வகுத்த பாதையிலே அகன்றவாய்ப் பள்ளங்கள், நெருப்புக்குண்டம்; ஏனென்று கேட்டாலோ, எதிர்ப்பா? எமக்கா? என்று கிளம்புகின்றார், மக்கள் வாழ்வறுத்துத் தம் வாழ்வைக் கொழுக்கச் செய்யும் மாநிதியைப் பெற்றவர்கள் புடை சூழத்தானே!

ஏழைக்காம் இவ்வாட்சி, எவருக்கேனும் இருந்திடுமேல் அய்யப்பாடு, எழுவீர் எம்முடன் வருவீர் திடலை நோக்கி, எத்தனை ஆர்வமுடன் எமது தலைவர் தாமும் பேசுகிறார் காணீர் பெருமை மிகு கொள்கை பற்றி, ஜனநாயக சோஷியலிசம் எமது கொள்கை; பொருள் என்ன அறிவீரோதான்; பொன்னும் பொருளும் குவிந்துவிடும் ஏழையர்க்கு என்பதாகும் என்கின்றார்கள்; கண் சிமிட்டி நிற்கின்றார்கள். முன்னணியில் கனதனவான்களாம் வாண்டையார் மூப்பனார் நெடும்பலத்தார், வகைமிக்க பட்டக்காரர் போன்றார் பல்லோர்.

இதற்கென்ன செய்வதென எண்ணிப் பார்த்திட்ட நான் என் தம்பி இருக்கின்றான் பகை முடிக்க, பழி துடைக்க என்று உறுதிபெற்று, எடுத்துரைத்தேன் அவர்க்கெல்லாம், நாட்டில் உள்ளதொரு ஆட்சிமுறை மக்களாட்சியாகும், மக்கள் ஆணையின் முன் மற்றெதுவும் நில்லாது, ஆகவே, அரசாள வந்தவரே, அறிந்திடுவீர் அருந்தமிழை அழித்திடும் உம் அக்கிரமச் செய-னுக்கு அடி பணியோம், சிறைக்கஞ்சோம்; பொதுத் தேர்தல் களத்தினிலே நின்றிடுவோம், பொறுப் புணர்ந்து மக்கள் தாமும் புத்தாட்சி கண்டிடுவார், வாக்குரிமை வலிவு கொண்டு.

ஏளனம் செய்கின்றார் என் தம்பி! நம்மையெலாம் கோட்டை பல கட்டிக் கொலுவிருக்கும் எம்மிடமா காட்டுகின்றீர் உம் வீரம், நீட்டுகின்றீர் உம் வாளை, எம்மிடம் உள்ள பலம நீரறியமாட்டீர்! இருபது இலட்சங்கள் எமது பேழை விழும். ஏழை எளியோரை எமது வலை பின்னி விடும். எதிர்ப்பென்ன கதியாகும் என்பதனை எடுத்துரைக்கத் தேவையில்லை. இழுத்து வா! பூட்டிப் போடு என்றுரைக்கும் வல்லமையைப் பெற்றுள்ளோம் பாதுகாப்புச் சட்டத்தால்! ஏனோ வீணாய் எமை எதிர்க்கின்றீர், எவரெவர்க்கு என்ன விலை என்பதறிவோம் நாம் எதிர்த்து நிற்காதீர், எறிபட்டுப் போகாதீர் என்கின்றார்.

அவர் கூறி வருவதுபோல் பெருநிதியும் குவிந்திடுது; காண்கின்றோம் நித்த நித்தம், வாளுக்கும் வேலுக்கும் வல்லம்பு தனக்கும், கரிபரி மிகக்கொண்டு களம் நிற்கும் படையினுக்கும் அஞ்சாது போரிட்ட ஆற்றல் மரபு வந்தோம், ஆர்ப்பரிப்புக்கு அஞ்சுவதா! துஞ்சுவதே யெனினும் அஞ்சிடுவோர் நாமலவே! பஞ்சை பராரிகளோ பாராண்ட நம் தமிழர், பளபளக்கும் வெள்ளிப் பணத்துக்குக் பல்லிளிக்க - என்று உள்ளம் உரைக்கிறது, தம்பி நீ உரைத்திடுவது வேறோ!

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் ஏந்தி வந்த வடிவழகி மீது கொண்ட மையல் மிகுதியினால் மாய்ந்தான் அம்பிகாபதி என்பார்; மாற்றான் என்றறியாது மாறுவேடம் புரியாது பாசறைக்குள் பகைவனையே சேர்த்த தனால் வீழ்ந்தான் ஓர் மன்னன் என்பார்; இவை யாவும் கதையெனினும், நமது கருத்தினிலே தெளிவுண்டாக்கும் பாடம் உண்டு, காண்பாய் தம்பி!

நோக்கம்தனிலே நமக்கோர் உறுதி உண்டாமென்றால், பாக்கம் பல தந்தாலும், பகைவர் முன் பல்லிளித்து நில்லோம்; பதவிப் பானம் தந்த மயக்கம் மேலிட்டதாலே பற்பல பேசுகின்றார்; பொருளற்ற பேச்சு, மருள்வோம் அல்லோம்; மறவர் நாம், மறவோம் என்றும்.

தம்பி! உன் ஆற்றல் அறிந்ததனால் அறைந்தேன் நான் இவ்வாறெல்லாம். அஃதுணர்ந்து விழிப்பு மிகுந்திடுக! எழுச்சி மிகக் கொள்க! கட்டுப்பாட்டுடனே கடமையாற்றிடுக! கண்ணியம் மறவாமல் காரியமாற்றிடுக! என்று நாட்டினருக்கு, இன்று தொட்டு எடுத்துரைத்து, வீழ்த்திடுவோம் வஞ்சகத்தை, காத்திடுவோம் தமிழ் மரபை, விரட்டிடுவோம் இந்தியின் ஆதிக்கத்தை என்றெவரும் சூளுரைத்துக் கிளம்பிடும் வகையே செய்க! முனைந்து நீ இதனைச் செய்தால், முத்தமிழ்க்கு உரியவனே! மும்முரசு கொண்டவனே! முக்காலும் உண்மை, வெற்றி ஈட்டிடலாம்' வேற்று மொழி ஓட்டிடலாம், வெந்த உள்ளம் கொண்ட மக்கள் சிந்தையில் தேன் பெய்திடலாம், நல்லாட்சி அமைத்திடலாம். அறிந்திடுக அன்புத் தம்பி.

அண்ணன்,

முதல் ஆண்டு நிறைவு மலர்