அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


காலம் இல்லை... அதிகம்!

கொள்கையில் உறுதி-
தளராது பணிபுரிதல்


தம்பி!

வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பது பற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலு நாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக்கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம், எம்.பி. அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன்.

ஒன்று பொதுவாகக் கூறுவேன் - நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி, தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளையமிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம்.

நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் - நாடு நம்மை எதிர் கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக்கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக்கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைத் தங்கம் பயன்படுத்திக்கொள்ளும் தன்மைபோல, எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக்கொண்டு விட்டோம்.

இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும், செயலற்றவர்களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டதால், நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம்.

ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொது வாகக் கூறும்போது, அது உண்மைதான் - ஆனால் சாவு வேறு, உயிரற்றுப்போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன்.

சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு!

செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு.

முன்னவர், கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள் தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும்.

அவர்தான் உள்ளபடி, உயிரற்றோர்!

கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடு வாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும்.

அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத்திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடா வகையிலும், பயனுள்ளதாக்கிக்கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டுவைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன் வீரப்பணி யாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறிக் கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்து விட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திடவேண்டும், என்பதுதான்.

வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை - தம்பி! அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை!

வேலை நிரம்ப இருக்கிறது, காலம் அதிகம் இல்லை - எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம்.

வேலை நிரம்ப இருக்கிறது - காலம் அதிகம் இல்லை - எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பதுதான் முழு உண்மை.

அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது - அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறா யல்லவா! அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது மிக எளிதிலே "சொத்தை'யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். "அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய் மிகச் சிறிது.

பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு, கீழே வீழ்ந்துகிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது!

அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியா தாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்றும் கூறுவரன்றோ.

நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்ப மாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்கமாட்டார்கள்.

அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை.

அப்படியொரு அத்திப்பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது - ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்னாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது - அவர் அந்த "அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம், செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக் காயைத்தான் எண்ணிக் கொண்டிருந்திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறியவண்ணம் இருந்தார்.

நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகை உணர்ச்சியைத்தான் ஊட்டும் - அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள்.

இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங்குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை.

ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலிவிழந்தான் எவனும் இங்கு இல்லை.

வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை.

அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியாவிட்டால தலை இடித்துக் கொள்ளும், என்று பெருமிதத் துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும்போது, ஒரு கணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்! - என்றன்றோ எண்ணுவர்.

அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது.

பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய்கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற மகனை ஈன்றவளைக் காணும்போதே, கடுகடுத்த முகத் தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின்.

அதுபோன்ற போக்கு, ஆளுங் கட்சிக்கு இன்று - நம்மை நோக்குங்காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன் அழித்திடவும் முயலுகின்றனர்.

ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன், வேலை இருக்கிறது நிரம்ப!. . . காலம் இல்லை அதிகம்! - என்பதை.

உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊராருக்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணிஅணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயர வேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம்.

அண்ணன்

21-8-'60