அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கடமை நினைவுகள். . .
2

தம்பி! சைதைச் சிறையிலேயும், சென்னைச் சிறையிலும், நான் இவைபற்றி எண்ணியபடி இருந்தேன். ஒவ்வொரு நாளும் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற நண்பர்கள், அவர் பிடிபட்டார்! இவர் பிடிபட்டார்! என்ற செய்திகளையே கொண்டுவந்தனர். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் கிளர்ச்சி நடைபெற்றால் எழும்பி இருக்கக்கூடிய பரபரப்பு, ஒரே கிழமையில் ஏற்பட்டுவிட்டது, அதிதீவிர அறிவுக் கூர்மையுடன் ஆளவந்தார்கள் திட்டமிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதனால்,

இந்தக் கிளர்ச்சிகளை எல்லாம் கண்டு நாங்களா பயப்படுவோம்!

என்று ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் படித்த இரு கைதிகள் சைதைச் சிறையில் பேசிக்கொண்டனர்; கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தீனா மூனா காரனுங்களைக் கண்டு நாங்க பயப்பட மாட்டோம் என்று பேசி இருக்கிறார் ஒரு காங்கிரஸ் மந்திரி.

அடே அப்பா! இதிலே என்ன அதிசயம். தீனா மூனாக்காரனுக்கிட்டவா, போலீசும், பட்டாளமும் ஜெயிலும் கஜானாவும் இருக்குது, கண்டு பயப்பட! எல்லா அதிகாரமும் இப்ப காங்கிரசுக்காரர்கிட்ட இருக்குது. பின்னே, தைரியமாகத்தான் இருப்பாங்க. ஏன் பயப்படப் போறாங்க.

அதைத்தான் சொல்றாங்க, நாங்க பயப்படலே.....ன்னு.

அட யார்டா இவன் அறிவுகெட்டவனா இருக்கறே. இத்தனை போலீசு பட்டாளம் கோர்ட் ஜெயிலு எல்லாம் இந்தக் காங்கிரசுகிட்ட இருக்கிறது தெரிஞ்சிருந்தும், தீனாமூனாகாரரு, பயப்படாம கிளர்ச்சி செய்கிறாங்க; அது அதிசயமே தவிர, ஆட்சி செய்கிறவங்க பயப்பட வில்லைன்னு பேசிக்கொள்வது பெரிய அதிசயமாப் பேசவந்துட்டான், அநியாயம்!

கைதிகள் பேச்சைத்தானா கூறுகிறீர் என்று கேட்கிறாயோ, தம்பி! வேறு, எதை நான் கூறமுடியும் - கைதிகள் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், "கனம்கள்' பேசுவதைக் கேட்கக்கூடிய இடமா இது!! சிறையிலே இருக்கும் கைதிகளுக்குக்கூடப் புரிகிற மிகச் சாதாரண உண்மை, கனம்களாகிவிட்டவர்களுக்குப் புரியவில்லையே, ஏன்! ஒருவேளை, கனம்களாகிவிட்டதாலோ!! தெரியவில்லை, ஆனால் பேசுகிறார்கள், நாங்கள் கிளர்ச்சிகளைக் கண்டு பயப்படவில்லை என்று. இத்தனைக்கும், இந்தக் கிளர்ச்சி கட்டுக்கு அடங்கியதாக, திட்டமிடப்பட்டது; இதனால் சமுதாயத்துக்குச் சங்கடமோ சஞ்சலமோ ஏற்படாது; இது நவம்பர் கிளர்ச்சி; இவர்கள் நடத்திய ஆகஸ்ட்டு அல்ல! இருந்தும், இதை ஒடுக்க ஏன் இவ்வளவு பதைபதைப்பு, துடிதுடிப்பு! "இவ்வளவுதானா நீங்கள்? இந்தியை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நடத்தப்படுகிறது, தடுக்கத் திறமை இல்லையா?'' என்று கேட்டுவிடுவார்களே, டில்லியில்! அந்தப் பயம் உச்சியைப் பிடித்துக் குலுக்குகிறது. தடைச் சட்டத்தை மீறாததால், கழகமே கலகலத்துப்போய்விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள் - இப்போது கழகம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தத் திட்டம் போட்டிருக்கிறது என்கிறீர்கள் - கலகலத்துப்போனது உண்மையானால் அந்தக் கழகத்தினால் ஒரு கிளர்ச்சி நடத்த முடியுமா? ஆதரவு இல்லாமலா ஒரு கிளர்ச்சிக்குக் கழகம் திட்டமிடும்? உங்கள் பேச்சை, நடவடிக்கைகள் மெய்ப்பிக்கவில்லையே; தவறான தகவல்களைக் கொடுத்து நிலைமையை மறைக்கிறீர்களே! - என்றெல்லாம் டில்லி மத்திய சர்க்கார் கேட்டுவிடுமே - அந்தக் கிலி! தமிழகக் காங்கிரசு அரசு மேற்கொண்டுவிட்ட "கெடுபிடி' நடிவடிக்கைக்குக் காரணம் இதுதான், தம்பி!

எங்கே, அந்தப்பய? எங்கே? கோபமாகக் கூவுகிறான் கணவன்.

ஏன் இப்படிப் பதைக்கிறீங்க? பையன், என்ன செய்து விட்டான்? - பதறிக் கேட்கிறாள் மனைவி.

என்ன செய்தானா? அடியே! என் தலைக்குத் தீம்பு தேடிட்டான். என் பிழைப்பிலே மண்ணைப் போட்டுட்டான் - ஆத்திரத்துடன் பேசுகிறான் கணவன்.

என்னத்தைச் செய்துட்டான் சொல்லித் தொலையுங்களேன் - மனைவி கேட்கிறாள்.

குரலைச் சற்றுத் தாழ்த்தி, கணவன் கூறுகிறான்;

அவனோட அம்மாதானேடி நீ? உனக்கு வேற எப்படி இருக்கும் புத்தி. தெருவிலே யார், தெரியுதா? எஜமானரு! ஏன் நிற்கறாரு தெரியுதா? அவரோட அருமையான நாயை இந்தப்பய, நம்மவண்டி, உன்னோட பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? அவனைக் கடிக்க வந்துதாம், அதுக்காக, கல்லாலே அடிச்சிருக்கான். எஜமானரு பதைக்கிறாரு, பதறுறாரு, கொண்டாடா அந்தப் பயலை, உன்னாலே அடக்க முடியாவிட்டா நான் முதுகுத் தோலை உரிச்சிப் போடறேன்னு கொதிக்கிறாரு.

நல்லா இருக்குங்க நியாயம்! நாயி கடிக்க வந்தது, கல்லைத் தூக்கிப்போட்டான். அது பெரிய தப்பா? நாயி கடிக்கலாமா? இவரு வூட்டு நாயி, நம்ம மகனைவிட ஒசத்தியா - மனைவி கேட்கிறாள், கோபத்துடன்.

கணவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஓங்கிக் கொடுக்கிறான் முதுகில். . . கன்னத்தில். ஐயோ! அப்பாடா! அம்மாடி! என்ற அலறல்

. எஜமானர், மீசையை முறுக்கியபடி, வீட்டைவிட்டு வெளியே செல்கிறார், தமது மாளிகைக்கு - வெற்றிக் களிப்புடன்.

அது வெறிநாய் - எல்லோரையுந்தான் கடிக்க வருது - என்று ஊரிலே பலர் பேசிக்கொள்கிறார்கள்.

கதை என்கிறாயா தம்பி! கட்டப்பட்டது, கருத்துக்காக. இரண்டு முறை படித்துப்பார். தமிழக அரசு மேற்கொள்ளும் போக்குக்கான காரணம் விளங்கும்.

இவைப்பற்றி எல்லாம் பேசும் வாய்ப்பு எனக்குச் சைதைச் சிறையிலும் கிட்டவில்லை. இன்றுவரை (நவம்பர் 27) சென்னைச் சிறையிலும் கிட்டவில்லை.

விலைவாசிக் குறைப்புக்கான கிளர்ச்சியின்போது, வேலூர் சிறையில் இருந்தபோது, நமது தோழர்கள் அனைவரும், சிறையிலே ஒரு தனிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பகலில் கழகத் தோழர்கள் பலரிடம், பல்வேறு பிரச்சினைகள்பற்றிப் பேசிட வாய்ப்புக் கிடைத்தது. இரவுகளிலேயும், என்னோடு தோழர்கள் பொன்னுவேலும் ராஜகோபாலும் ஒரே அறையில் இருந்தனர். இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருப்போம். எனக்கு வலப்புறத்து அறையிலே, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் - இடப்புற அறையில் சட்டமன்ற உறுப்பினர் முல்லை வடிவேல்!

பாராளுமன்ற உறுப்பினர், எல்லாப் பழைய சினிமாப் பாடல்களையும், உரத்த குரலில் பாடுவார். . . பாட்டு என்று அவர் எண்ணிக்கொண்டு ஓசை கிளப்புவார் - பாகவதர் பாடல்களை!! கேட்டுக்கொண்டிருப்பேன்.

வடிவேலுவின் இசையோ, உள்ளபடி உருக்கமாக இருக்கும் - ஒவ்வொரு பாட்டையும் அவர் எனக்காக அல்ல - பிரிந்துள்ள சோகத்தைத் தெரிவிக்கவேண்டியவர்களுக்குத் தெரிவிக்கும் கருத்துடன் - பாடுவார். முறைப்படி பயிற்சி பெற்றால், எல்லோருமே கேட்டு இன்புறத்தக்கதாகவே அவருக்கு மெல்லிசை வரக்கூடும். ஆனால் சிறை தந்த இசைதான் அது என்று பிறகு அறிந்துகொண்டேன்.

இப்போதுகூட காதிலே ஒலிப்பதுபோலவே இருக்கிறது, திருவண்ணாமலை சண்முகத்தின் வெண்கலச்சிரிப்பொலியும், வேலூர் சாரதியின் வெடிச்சிரிப்பும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேலுவின் கூச்சம் கலந்த புன்னகையும், வானூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணனின் போலீஸ் நடையும், போளூர் சுப்பிரமணியத்தின் சிரிக்கும் கண்களும்! எல்லாம் விருந்தாக இருந்தன, வேலூர் சிறையில். இங்கு இதுவரையில் (நவம்பர் 27) தொடர்புகொள்ள, தோழமையுடன் அரசியல் பிரச்சினைகள்பற்றி பேச வாய்ப்பே இல்லை. சைதாப்பேட்டையில் இருக்கும் வரையில் இந்தச் சங்கடம் இருக்கும், சென்னை சென்றுவிட்டால், நம்முடைய தோழர்களுக்கு மத்தியில் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்னை சென்னைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்ற சேதியை அன்பில் தர்மலிங்கம் சொன்னபோது, களிப்பூர் செல்லப்போகிறோம் என்று நிச்சயித்துக்கொண்டேன். அன்று என்னைக் காண வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஜெயிலருடன் வந்து பேசிக்கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, நாணிக் கோணிக் கிடந்தார். நான் அறிமுகம் செய்து வைத்தபோதுதான், விஷயம் புரிந்தது. நண்பர் பாலகிருஷ்ணன் எட்-கான்ஸ்டபிளாக இருந்தபோது. அந்தப் பகுதியில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் ஜெயிலருடன் பேசிக்கொண்டிருந்தவர். இருவரும் சிறிது நேரம் "அந்த பழைய' நாட்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுகூட எனக்கு, அந்த அதிகாரி என்பொருட்டுத்தான் அங்கு வந்திருக்கிறார் என்பது தெரியாது. சிறிது நேரத்திற்கெல்லாம் துணைக் கமிஷனர் வந்து சேர்ந்தபோதுதான், விவரம் புரிந்தது. அவரும் போலீஸ் அதிகாரியும், என்னை அழைத்துச் சென்று, சென்னை மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நான் வருவது தெரிந்து, அங்கு வந்திருந்த நமது நண்பர்கள் எவரும், என் அருகே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே சென்றேன், மெத்த மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன். ஏனெனில், நண்பர்கள் நடராசனும், கோவிந்தசாமியும், சிற்றரசும், கலியாண சுந்தரமும், அ. பொ. அரசும், செல்வராசும், ஆசைத்தம்பியும் மற்றும் பலரும் உள்ளே இருக்கிறார்கள். கச்சேரி பாஷையில் சொல்வதானால், பெரிய ஜமா! கண்டதும் களிப்படைவார்கள், களிப்புப் பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் என்னை சிறையின் முன் பகுதியில் உள்ள மாடிக் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர், கொஞ்சம் சோர்வு தட்டிற்று என்றாலும், அதற்கு இடையிலும் ஒரு சிறு நம்பிக்கை. ஒரு சமயம், நமது தோழர்களில் சிலரையாகிலும் இங்குக் காணலாம் என்ற நம்பிக்கை, நான் அங்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மணி 7-க்கு மேலாகிவிட்டது. படி ஏறும்போதே, "அண்ணாவா! அண்ணா' என்ற அன்புக் குரல் கேட்கும் என்று எதிர்பார்த்தேன் - ஒரு அழைப்பும் இல்லை. உள்ள அறைகள் நாலு, அதிலே இரண்டு அறைகளிலே வேறு யாரோ காணப்பட்டார்கள். ஐந்தாம் நம்பர் அறையில் என்னை விட்டுவிட்டு, ஒரு துண்டு ரொட்டியும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் கொடுத்துவிட்டு, பூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். எனக்குப் பெருத்த ஏமாற்றம் மனச்சங்கடம். சைதாப்பேட்டைபோலவேதான் சென்னையிலும் நான் "தனியன்' ஆக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டது, உள்ளபடி வேதனையாக இருந்தது. தனியனாக இருப்பது எனக்கு வேதனை தரும் என்று அறிந்துதானோ என்னவோ இந்த ஏற்பாடு! யார் கண்டார்கள்!

உடன் இருப்பவர்கள் யார் எனத் தெரியவில்லை; இரண்டு நாட்கள் கழித்து அவர்களும் சொன்னார்கள்; பொழுது விடிந்து ஒரு வார்டர் சொல்லுகிறவரையில், தங்களுக்கும் புதிதாக வந்திருப்பது யார் என்பது தெரியாது என்று. ஆனால் காலையில் நான் எழுந்த உடனே, இருவரும் இன்முகத்தோடு வந்தனர். எங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்கள். அது முதல், என்னைத் தங்கள் "விருந்தினன்' போலவே அன்புடன் நடத்தி வருகிறார்கள். உணவு, உரையாடல் ஆகிய எதிலேயும் எனக்குக் குறை ஏற்படாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். இருந்தாலும் உள்ளே உள்ள நமது நண்பர்களைக் காணமுடியவில்லையே, பேச முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியபடி இருந்தது. குறிப்பாகக் காஞ்சி கலியாண சுந்தரத்தின் பேச்சைக் கேட்கவேண்டும் என்று ஒரு ஆவல்! வேறு யாரிடம் பேசுவதைக் காட்டிலும், என்னிடம் பேசும்போதுதான், கலியாணத்துக்குத் துணிவும் தாராளமும் நிரம்ப வரும். என்னிடம் அளவற்ற அன்பு - அதுபோலவேதான் எனக்கும். வேறு எவரிடம் கேட்கமுடியாத சில கருத்துக்களை, சில பாணிகளைக் கலியாணத்திடம் கேட்க முடியும். சைதையிலிருந்து புறப்பட்டபோது எண்ணிக்கொண்டேதான் வந்தேன் - நம்மைப் பார்த்த உடன் கலியாணம்,

"வா! வா! வந்து சேர்ந்தாயா!'' என்று அழைக்க,

"ஆமாம்! உன்னை ஏன் அழைத்துக்கொண்டு வந்தார்கள்?'' என்று நான் கேட்க,

"அழைத்துக்கொண்டு வந்தார்களா! இது மாமியார் வீடா! தீபாவளி வரிசை வைத்து அழைத்து வந்தார்களா! இழுத்துக் கொண்டு வந்தார்கள்'' என்று கலியாணம் சொல்ல,

"ஏன் இப்படி இவ்வளவு பேர்களைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்'' என்று நான் ஐயத்துடன் கேட்க,

"பின்னே, நீ செய்கிற வேலைக்கு எங்களைச் சும்மாவா விட்டுவைப்பார்கள்'' என்று கலியாணம் குத்த,

"உனக்கு வேண்டியதுதான்!'' என்று நான் கேலி செய்ய.

"எவனெவனோ இருக்கறான், அவனை எல்லாம் பிடித்துக் கொண்டு வரல்லே. ரொம்ப காரியமா, என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டானுங்க'' என்று எரிச்சலோடு சொல்ல,

வேடிக்கையாகப் பொழுதுபோகும் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். ஆனால் எனக்குக் கிடைத்ததோ, தனிமை! கழகத் தோழர்களின் தொடர்பும் தோழமையும் அற்ற நிலை. உள்ளபடி சிறைவாசம்!! என்ன செய்ய!

நான் வந்திருப்பது கேள்விப்பட்டு அவர்களும் உள்ளே அல்லற்பட்டிருக்கிறார்கள். அமைப்புச் செயலாளருக்கு அளிக்கப்படவேண்டிய மரியாதை, ஜெயிலிலும் இருக்கும் என்ற நினைப்புடன், நடராசன் கேட்டிருக்கிறார் சிறை அதிகாரியை; எங்களை அண்ணா இருக்கும் இடத்தில் கொண்டுபோக வேண்டும் என்று. இங்கு இருக்கிறாரே, சிறை அதிகாரி, அவர், இல்லை என்று கூறுவதே இல்லை. ஒரு அழகான புன்னகை! அதற்குப் பொருள், என் முறைப்படிதான் காரியம் இருக்கும்; அதை மாற்றச் சொல்லிக் கேட்டுப் பயன் இல்லை - என்பதுதான்.

வெளியிலிருந்து வருபவர்களைச் சில நிமிடநேரம் பார்த்துப் பேசுவதுபோலவே, சிறை அதிகாரியின் அனுமதி பெற்று, நடராசனையும் தோழர் கோவிந்தசாமியையும், ஒரு நாள் பார்த்துப் பேசினேன் - அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அவர்கள் வெளியே போகிறவரையில் இதே நிலைதான். வெளியே சென்றுவிட்டு, மறுபடியும் என்னைப் பார்க்க, நடராசன், கோவிந்தசாமி, அரசு, செல்வராசு, ஆசைத்தம்பி வந்திருந்தனர் - சத்தியவாணிமுத்துவும் உள்ளே இருந்தபோது பார்க்க, பேச, கிடைக்காத வாய்ப்பு, அவர்கள் விடுதலை பெற்ற பிறகுதான் எனக்கு ஓரளவு கிடைத்தது. இதே முறைதான் நீடிக்குமா, சில நாட்களுக்குப் பிறகு ஏதாவது மாறுதல் ஏற்படுமா என்று தெரியவில்லை.

சென்னைச் சிறையில், ஒவ்வொரு நாளும், கருணாநிதியும் நாவலரும் வருகிறார்கள் - இரண்டொரு நிமிடங்கள் பேசுகிறோம். நானே, விரைவில் அவர்களை அனுப்பி விடுகிறேன் - ஏனெனில் சூழ உட்கார்ந்திருக்கும் அதிகாரிகள் நாங்கள் அதிகநேரம் பேசிக்கொண்டிருப்பதைத் தொல்லையாகக் கருதிவிடுவார்களோ என்பதுதான், மேலும் அரசியல் பிரச்சினைகளைப் பேசக்கூடாது; கழகத்திலே மேற்கொண்டு இன்னின்னது நடத்தப்பட வேண்டும் என்று சொல்லக்கூடாது; எதைப் பேசவேண்டுமோ, எதைப் பேசினால் சுவையும் பயனும் எங்களுக்கு ஏற்படுமோ அவைகளைப் பேசக்கூடாது! மாற்றப்பட முடியாத விதிமுறையல்லவா அது!! ஆக இரண்டொரு நிமிடங்களிலேயே பேச்சு முடிந்துவிடுகிறது.

எப்படி?
பரவாயில்லை.
தனியாகவா?
இல்லை; இரண்டு பேர் இருக்கிறார்கள்.
யார் அந்த இருவர்?
வேறு வழக்கிலே வந்தவர்கள்.
சாப்பாடு எப்படி?
பரவாயில்லை, குறையில்லை. அங்கேயே சமைக்கிறார்கள்.
ஏதாவது கொண்டு வரவா?
புத்தகங்கள் கொடுத்தனுப்புங்கள்.
நம்ம பத்திரிகைகள் வருகின்றனவா?
நம்ம பத்திரிகைகளா? கிடையாது. வராது.
மற்றப் பத்திரிகைகள் அனுப்பலாம்.
வீட்டுக்கு என்ன சேதி?
வந்திருந்தார்கள்! வரச்சொல்லுங்கள்.

இவ்வளவுதானே பேச முடிகிறது! இதையே பின்னிப் பின்னி எவ்வளவு பேச முடியும். ஆகவே விரைவாகவே அனுப்பி விடுகிறேன். இங்கு முதல் முறையாக, பரிமளம் சரோஜாவுடன், ராணியையும் மகன் இளங்கோவனையும் அழைத்து வந்தபோதுகூட, அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க இயலவில்லை.

இரண்டாவது முறையாக ராணி வந்தபோது, டி. வி. நாராயணசாமியும் அவர் துணைவியார் பாப்பாவும் உடன் வந்தனர் - என்ன எண்ணிக்கொண்டார்களோ, மிக விரைவாகவே பேச்சை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டேன். அதிகாரிகள் காவல் காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலை, மெத்தச் சங்கடத்தைத் தருகிறது. அதனால் நான் அதிக நேரம் பேச முடிவதில்லை. வழக்கறிஞர் நாராயணசாமியிடம், சட்ட சம்பந்தமாக நிறையப் பேச முடிகிறது. சட்டத்தின் பல்வேறு காவல் அலுவலர்களிலே சேர்ந்தவர்கள்தானே சிறை அதிகாரிகள். ஆகவே, சட்டம்பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் "தகாத' பேச்சாகப்படாது என்ற எண்ணம் எனக்கு.

ஆனால் இந்த அளவு பேச்சுகூட, வழக்கு நடந்து முடியும் வரையில்தான்! தண்டனைக் கைதி என்று ஆகிவிட்ட பிறகு, இந்த அளவுக்கு அடிக்கடி பார்க்கவோ, பேசவோ முடியாது - அனுமதி கிடைக்காது.

வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்பதை நாவலரும் கருணாநிதியும் தெரிவித்தார்கள். நான் திடுக்கிட்டுப் போய்விட வில்லை; உண்மையிலேயே, அன்று என் மனம் என்னைப்பற்றிய நினைவிலே இல்லவே இல்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பாதகத்தை எண்ணி எண்ணி நான் மிகுந்த வேதனையில் ஆழ்ந்து போயிருந்தேன். வேலூர் சப்ஜெயிலில் இருந்தபோதுதான், கென்னடிபற்றிய புத்தகங்களையும். அவர் எழுதிய நூற்களையும், ஆர அமரப் படித்து, அந்த ஆற்றல் மறவனுடைய அருங்கருத்துக்களை உணர்ந்து, பெரும் பயன் அடைந்தேன். உலகே திடுக்கிட்டுப் போகத்தக்க விதத்தில், ஒரு கொடியோன், அந்தப் புனிதனைச் சுட்டுக் கொன்றதுபற்றிப் பத்திரிகையில் படித்துப் படித்து, உலகில் நல்லது செய்வதற்கே வாய்ப்பு இல்லையா! என்று ஓர் வெறிச்சிட்டுப்போன வேதனை கப்பிக்கொண்டிருந்த நிலை! இந்த நிலையில் என்மீது சதி செய்ததாக வழக்குத் தொடுக்கிறார்கள் என்று நண்பர்கள் சொன்னது, எனக்குச் சரியாகக்கூடக் காதிலே விழவில்லை. அவர்கள் சென்ற பிறகு, பத்திரிகைகளிலேதான், வழக்குபற்றிய முழு விவரம் படித்தேன். நாளை (நவம்பர் 28) வழக்கு மன்றம் செல்லும் நாள்.

அண்ணன்

27-9-1964