அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கணக்குத் தீர்க்கும் காலம் !

கோபம், பலக்குறைவின் அறிகுறி !
காமராசருக்கு இந்திராவால் தொடர்ந்து குட்டுகள் !
வலதுசாரிகள் முடிவை மாற்றிக்கொள்ளத் தயங்கார் !
காமராசருக்கு அச்சம் - எதிர்க்கட்சிகளின் உடன்பாட்டால் !

தம்பி,

"தேர்தல் நெருங்க நெருங்கக் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் கோபம் வளர்ந்து வருகிறது, வார்த்தைகளிலே கடுமையும் தொனியிலே மிரட்டலும் மிகுதியாகிறது. சில ஆண்டுகளாகவே அவரிடம் தொத்திக்கொண்டுவிட்ட "எல்லாம் நானே!' என்ற போக்கு இப்போது உச்சக்கட்டம் சென்றிருக்கிறது. எனக்கு அதிலே ஒருவிதமான மகிழ்ச்சி, ஏனென்றால், இதற்குமேல் போவதற்கு இல்லை! ஆகவே, கீழே சரிந்தாகவேண்டும்! அவர் அல்ல! அவருடைய போக்கிலே காணப்படும் முடுக்கு!

"கோபம் பலவீனத்தின் அறிகுறி' என்று காந்தியார் கூறினார். அவர்தான் போய் விட்டாரே, இனி அவர் உபதேசம்' பற்றியா கவலைப்படப் போகிறார்கள் - அவர் பெயர் கூறிப் பெரியவர்களாகிவிட்டவர்கள்.

அவருக்குச் சிலைகள் அமைத்திருக்கிறோம். அவர் பெயரில் நகர்கள், நெடுஞ்சாலைகள், பூங்காக்கள், பவனங்கள், கல்விக் கூடங்கள், பிரார்த்தனை மண்டபங்கள் அமைத்திருக்கிறோம். போதாதா எமக்குள்ள பக்தியைக் காட்ட என்று கேட்பார்கள் அவர் "பேச்சை'த் துச்சமென்று தள்ளிவிட்ட தூயவர்கள்.

கோபம், பலக்குறைவின் அறிகுறி என்பதனை எவரும் மறுப்ப தில்லை; மறுப்பதற்கில்லை. கோபம், அடக்கமுடியாத ஆசையை நிறைவேற்றிக் கொள்வதிலே தடை ஏற்பட்டுவிடும்போது பன்மடங்கு அதிகமாகிவிடுகிறது. காமராஜர் அந்த நிலையால் நெளிகிறார்; ஆகவேதான் அத்தனை ஆத்திரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

அதிலும், மிகவும் வேண்டியவர்கள், தனக்குக் கட்டுப் பட்டவர்கள், தம்மால் உயர்நிலை சென்றவர்கள், தன் பேச்சைத் தட்டி நடப்பது மட்டுமல்ல, தன் பேச்சு பொருளற்றது, பயனற்றது, பொருட்படுத்தத் தக்கதல்ல என்று வெளிப்படை யாகவே கூறிடுவதைக் கேட்கும்போது, அவருக்கு - பெரியவருக்கு! - கோபம் கோபமாகத்தானே வரும்! அந்தக் கோபத்தை யார்மீது காட்டுவது? எதிர்க்கட்சிகள் மீது!! காட்டுகிறார்!!

அமெரிக்காவின் உதவியைப் பெறுவதற்காக, அந்த நாட்டு ஆட்சியாளர்கள் நீட்டிடும் காகிதத்தில் காட்டிடும் இடத்தில் கையெழுத்திடுவது, அடிமை முறிச் சீட்டிலே கையொப்பமிடுவதற்கு ஒப்பாகும்.

பலர் இந்தக் கருத்தினைக் கூறினர்; கூறி வருகின்றனர். பேரரசினை நடத்திச் செல்பவர்கள் தந்திடும் சமாதானம், விளக்கம், வாதத் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது; ஏற்பட்டுவிட்ட அய்யப்பாட்டை நீக்குவதாக இல்லை.

அய்யப்பாடும் அருவருப்பும் கொண்டுள்ளவர்களில் பெரியவரும் ஒருவர்.

உரத்தொழிற்சாலை சம்பந்தமாக அமெரிக்காவிடம் இந்தியப் பேரரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் அக்கிரம மானது, அநீதியானது, சோஷலிசக் கொள்கைக்கு ஊறு தேடுவது என்பது காமராஜரின் கருத்து.

இந்தக் கருத்தினை அவர் ஜெய்ப்பூரில் வெளியிட்டார்.

கை தட்டினர்; வரவேற்றனர்; யார் தவறான வழி சென்றாலும், பெரியவர் தடுத்து நிறுத்துவார் என்று பாராட்டினர்.

இந்திராகாந்தி அம்மையார் அமெரிக்கா சென்றார்களல்லவா- வசந்தம் கண்டேன்! என்று மகிழ்ந்து அறிவித்தார்களே!! - அப்போது. கேட்டார்கள் அவர்களை, காமராஜரின் கருத்துப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று.

அவர் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

என்று அம்மையார், சுருக்கமாக, ஆனால், கரீல் என்று படும்படி, பதில் கொடுத்தார்கள்!

கேள்வியை எழுப்பியவர்கள் அந்தப் பதிலைக் கேட்ட போது, எந்தவிதமான "தோற்றம்' காட்டினரோ தெரியவில்லை; ஆனால், எளிதிலே புரிந்துகொள்ளலாமே!!

என்ன இருந்தாலும் இப்படிக் குட்டி இருக்கக் கூடாது.

என் தலைவர்! என் வழிகாட்டி! என்று இங்கே "பஜனை' செய்வது; அங்கே போய் அவர்கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அத்தனை அலட்சியமாகச் சொல்லுவது! இதுவா தலைவரிடம் கொண்டுள்ள "மதிப்பு'க்கு அடையாளம்!

என்ன எண்ணிக்கொள்வார்கள் அமெரிக்கர்கள் தலைவரைப்பற்றி! அவர் எதையோ பேசுவார்! ஆனால் அவர் பேச்சை ஆட்சி நடாத்தும் அம்மையார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்! அவ்வளவுதான் அவருக்கு உள்ள "பிடி'யின் இலட்சணம்! என்றெல்லாம் கேலி பேசமாட்டார்களா!

பச்சையாகச் சொல்வதானால், தலைவரின் முகத்தில் கரி பூசிவிட்டார் என்றுதான் தெரிகிறது!

காட்டிக் கொடுத்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.

இவ்விதமெல்லாம் பேசிக் கவலைப்பட்டிருப்பர் "துதி பாடகர்கள்.

அவருக்கு மட்டும் என்ன மனத்திலே கோபம் எழாமலா இருந்திருக்கும். கொட்டிக் காட்ட "இடம்' பார்த்தபடி இருந்திருக்கிறார்; எதிர்க்கட்சி மீது கொட்டுகிறார்.

எதிர்க்கட்சிகள்மீது பாயும்போது காட்டும் ரோஷ உணர்ச்சியிலே நூற்றிலே ஒருபங்கு பயன்படுத்தியாவது, அம்மை யாரைப் பார்த்து, மரியாதையாக, ஆனால், உறுதியாகக் கூறியிருக்க வேண்டாமா, காமராஜர்

தாங்கள் அமெரிக்காவில் என் கருத்தைப் பற்றி அவ்வளவு அலட்சியமாகப் பேசி இருந்திருக்கக்கூடாது என்று.

கூறினாரா! இல்லை! ஏன்? அம்மையார் மேலும் என்னென்ன சொல்லிவிடுவார்களோ என்ற அச்சந்தான்! வேறென்ன?

எரிச்சலை அடக்கிக்கொண்டார்; மனம் குமுறியபடி இருந்தது.

"பஞ்சாபி சுபா' - வங்காளக் கலவரம்' போன்ற மிக முக்கியமான நிகழ்ச்சிகளை ஒட்டி அம்மையார் முடிவுகளெடுத்தபோது பெரியவர் நெடுந்தொலைவிலே நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டார்! மனம் படாதபாடு பட்டிருக்கத்தானே செய்யும்!!

பஞ்சாபி சுபா அமைக்கும் காலம்வரையில் பஞ்சாபில், குடியரசுத் தலைவரின் ஆட்சி ஏற்படுத்தப் படுவதைத்தான் விரும்புகிறேன்; என் சொந்தக் கருத்து அதுதான் என்று காமராஜர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அம்மையாரும் உடனுள்ள அமைச்சர்களும் கூடிப் பஞ்சாபில் இப்போதுள்ள "மந்திரி சபை'யே நீடிக்கட்டும்; குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி வேண்டாம் என்று முடிவு செய்து அறிவித்து விட்டனர்.

இவ்விதம் தொடர்ந்து குட்டுகள்; குடைச்சல்கள்! அதன் பயனாக ஏற்பட்ட மனக்குமுறல், காமராஜரை எதிர்க்கட்சிகள் மீது பாயச் செய்கிறது.

பட்டாளம் வந்துவிடும் என்று பயம் காட்டினார்!

அவருடைய இந்தப் பேச்சை, கவனிக்கத்தக்கதாகக்கூட அம்மை யாரும் மற்ற அமைச்சர்களும் கருத மறுத்துவிட்டனர். எதையாவது பேசிக்கொண்டிருப்பார்; பேசிக்கொண்டிருக்கட்டும் என்று இருந்து விட்டனர்.

இந்த அளவு அலட்சியப்படுத்தி இருந்திருக்க வேண்டியதில்லை என்று பலரும் பரிதாபப்படத்தக்க முறையிலே பிரதம மந்திரியார் நடந்துகொண்டார்!

காமராஜரின் "பட்டாளப் "பேச்சை அறிவாளர்கள் பலமாகக் கண்டிக்கலாயினர்; இதழ்கள் கண்டித்தன. கோபம் கிளம்பி இருக்கவேண்டுமே! காணோம்! ஏன் கண்டனத்துக்கு மறுப்புக் கூறக் கிளம்பி, மேலும் எதை எதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம்! அந்தப் பேச்சை அந்த அளவோடு விட்டுவிட்டார்!!

பேசாமலும் இருக்க முடியவில்லை.

பேசினாலும் மாட்டிக்கொள்ள வேண்டி வந்து விடுகிறது!

"ஆகட்டும் பார்க்கலாம்' என்ற பாணியோடு நின்றிருக்க வேண்டும்!

மேலால் சென்றதுதான் இத்தனை சங்கடத்துக்கும் காரணம்!

என்றெல்லாம் அவர் எண்ணிக்கொண்டிருந்திருப்பார். எடுபிடிகள் விடுமா! எமது தலைவர் ஏன் அவ்விதம் சொன்னார் என்றால் என்று துவங்கி ஏழும் ஏழும் பத்தடா! இதை இல்லை என்பான் யாரடா!! என்ற பாடிடும் பாணியிலே பேசிடக் கேட்கிறோம். அவர் ஒருமுறை பேசியதுடன் நிறுத்திக் கொண்டு விட்டார்.

இப்போது மற்றோர் "கரடி'யை ஓட்டி வந்து காட்டுகிறார்.

வெளிநாடுகள் பணம் தருகின்றனவாம், இங்குள்ள எதிர்க் கட்சிகள் சிலவற்றுக்கு, எதிர்க்கட்சிகள் சில தேர்தலிலே செலவிடும் பணத்தின் அளவைப் பார்க்கும்போது, தனக்கு அவ்விதம் தோன்றுகிறதாம். இவ்விதம் கூறியதும் நாட்டு மக்கள் பதைபதைத்து, துடிதுடித்து, கொதித்தெழுந்து எதிர்க்கட்சிகளைச் சாடுவர் என்று பெரியவர் எண்ணிக் கொண்டு இந்தக் "கரடியை' ஓட்டிக் காட்டுகிறார். விவரமறிந்தவர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்; இது எத்தகைய விந்தையான அரசு! துப்பறியும் இலாகாவும், போலீசும், சுங்கத் துறையும் வெளிநாட்டுத் தூதரகங்களும், கொள்ளை கொள்ளையாகப் பணத்தை மென்று தின்று கொண்டிருக்க, அத்தனை வளையங்களையும் மீறி வெளிநாட்டுப் பணம் இங்கே வந்திட எப்படி முடிந்தது! இவ்வளவுதானா இந்த அரசுக்கு உள்ள திறமை! கையும் பிடியுமாகப் பிடித்துக் காட்ட வல்லமையற்று, வக்கற்று, வழியற்று இருந்திடலாமா! பணம் அனுப்பும் வெளிநாடுகள் யாவை? எந்தக் கட்சிகளுக்குத் தருகின்றன? ஏன் என்ற விவரத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகளை அம்பலப் படுத்தாமல், பொறுப்பிலே உள்ளவர்கள் இப்படியா பேசுவது; மூன்று முழ நீளமுள்ள குதிரைக் கொம்பை ஆறு பொதி அளவுள்ள அத்திமலர் கொடுத்து வாங்கினேன் என்ற முறையிலா பேசுவது?

வெளிநாடுகள் பணம் தருவது, குற்றம்! மன்னிக்கப் படமுடியாத குற்றம்.

வெளிநாடுகளிடம் கட்சிகள் பணம் வாங்குவது மாபெருங்குற்றம்; தேசத்துரோகக் குற்றம்.

அப்படிச் சில கட்சிகளுக்கு வெளிநாடுகள் பணம் கொடுக்கின்றன என்று தோன்றுகிறது என்று பேசி விட்டு அதைக் கண்டுபிடிக்காமல் இருப்பது, பொறுப்புள்ள சர்க்காராக இருக்க முடியாது.

அத்தகைய போக்கிலே ஒரு சர்க்கார் இருப்பது அந்த நாட்டுக்கே அவமானம்!

இது வெறும் தேர்தல் தந்திரப் பேச்சு தானே!! என்று இடித்துக் கேட்கிறது மெயில் இதழ்.

தெளிவும் துணிவும், திறமையும் பொறுப்பும் வல்ல மையும் பண்பும் இருப்பது உண்மையானால் எந்தெந்த வெளிநாடுகள் எந்தெந்தக் கட்சிகளுக்குத் தேர்தல் செலவுக் காகப் பணம் தந்துள்ளன என்ற விவரத்தைக் காம ராஜர் வெளியிட வேண்டும்; தயக்கமின்றி; அச்சமின்றி; வெளியிடு வாரா!!

வெளிநாடுகள் பணம் தருவதாகத் தோன்றுகிறது; ஆனால், விவரம் தெரியவில்லை : கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதாயின், இத்தனை பெரிய இடத்தில் இருந்துகொண்டு விவரமறியாமல், விளக்க முடியாமல் பேசுவது கேட்டு அறிவாளர் கைகொட்டிச் சிரிப்பார்கள்! வெளிநாடுகளும் இந்த அரசு பற்றியும் நடத்திடும் தலைவர்கள் பற்றியும் மிகக் கேவலமாகக் கருதிக் கொள்வார்கள்.

ஏன் அதுபோலப் பேசினார் காமராஜர்? தேர்தலைப் பற்றிய திகில்! என்ன நேரிட்டுவிடுமோ என்ற அச்சம்! கணக்குக் கேட்கும் காலம் வருகிறதே என்ற கலக்கம்.

கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் குவித்தாலும், ஏமாற்றப்பட்டுப்போயுள்ள மக்களின் மனக்கொதிப்பை அடியோடு போக்கிவிடமுடியாது; அவர்கள் தமக்கு இழைக்கப் பட்டுள்ள கொடுமைகளுக்காகப் பழிதீர்த்துக் கொள்ளக் கிளம்புவதைத் தடுத்து விட முடியாது என்று காமராஜர் உணருகிறார்.

காங்கிரசுக் கட்சியில் உள்ள பணக்காரர்களை எண்ணிப் பார்த்திடும்போது, ஒரு விதமான தைரியம் வருகிறது. என்றாலும், எந்தப் பக்கம் திரும்பினாலும், வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர், கூனிக்கிடப்போர், கொத்தடிமை செய்தும் வாழ்க்கை பொத்தல் இதை போன்றாகிடக்கண்டு வதைப்படுவோர், இல்லாமை கொட்டுவதால் துடிதுடித்துக் கிடப்போர் என்போர் களே தெரிகின்றனர். அவர்களின் கண்கள் கேள்விக்குறிகளாகி விட்டிருப்பதையும் காண்கிறார்! இந்தப் புயலைச் சமாளிக்கப் பணத்தால் ஆகுமா என்று எண்ணுதிறார்; திகைக்கிறார்.

காங்கிரசுக் கட்சியை எதிர்க்க முனையும் கட்சிகளைக் காட்டுப்போக்கில் தாக்கிப்பேசினால் அச்சத்தால் அடங்கி ஒடுங்கிப் போவார்களா என்று பார்க்கிறார்; பலிக்காதது கண்டு பதைக்கிறார்.

ஒரே ஒரு தைரியம் அவருக்கு! காங்கிரசுக்கு எதிர்ப்பு நிரம்ப இருக்கிறது; பல முனைகளிலிருந்து, பல்வேறு முகாம்களிலிருந்து!

ஒரு கணம் மிரட்சி ஏற்படுகிறது, இத்தனை முகாம்களி லிருந்தா எதிர்ப்பு என்று! மறுகணமோ மகிழ்ச்சி துளிர்க்கிறது; பலமான எதிர்ப்புதான், ஆனால், பல முகாம்கள்!! ஒரே அணியில் இல்லை! பல அணிகள்! பல்வேறு போர் முறைகள்!! எனவே, பிழைதுக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கிறது.

நாட்டுக்கு விடுதலை கிடைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய காரணத்தால் இந்தியா முழுவதற்குமாக காங்கிரஸ் எனும் அமைப்பு பரவி வளர்ந்திட முடிந்தது.

இன்று வளர்ந்துள்ள எதிர்ப்புகள் அதுபோல ஒரே முகாமாக வடிவம் கொள்வது எளிதான காரியமல்ல.

எனவே, இந்த முகாம்களுக்குள் மோதுதலை மூட்டி விட்டால், மூலபலம் முறிந்துவிடும் என்பது காமராஜரின் கணக்கு!

ஆனால், நாடு இன்று பூண்டுள்ள போர்க்கோலத்தைப் பார்க்கும்போது இந்தக் கணக்கும் பொய்த்துப் போய்விடும் என்றே தோன்றுகிறது.

காங்கிரசுக்கு எதிர்ப்பாக உள்ள கட்சிகள் பல; அவைகளிலே ஒன்றை ஒன்று பகைத்துக் கொள்ளும் நிலையும் இருந்திடக் காண்கிறோம்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இயல்பு, திறமை, வரலாறு, வாய்ப்பு, வலிவு, கொள்கை, திட்டம் இருந்திடக் காண்கிறோம்.

ஆனால் , இவை யாவும், தனித்தனியாகத் தத்தமது கொள்கைகளை எடுத்துக் கூறிடுவதுடன், காங்கிரசின் எதேச்சாதிகாரப் போக்கைக் கண்டிப்பதிலும், காங்கிரசு ஆட்சி நீக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதிலும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

மொத்தத்தில் நாட்டு மக்களிடம் காங்கிரசாட்சிக்கு எதிர்ப்பான உணர்ச்சி பெரிய அளவிலே கொழுந்துவிட்டு எரிகிறது.

எல்லா எதிர்க்கட்சிகளும் எடுத்துக் கூறுவதிலிருந்து, காங்கிர சாட்சி மாற்றப்பட்டாகவேண்டும் என்ற எழுச்சியை மக்கள் பெறுகிறார்கள்; முதலில்! பெறுவதால் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை "ஓட்டு' அளிக்கக்கூடாது என்ற உறுதி பெறுகிறார்கள்.

இந்த உறுதி பெற்ற பிறகு காங்கிரசை வீழ்த்த, இன்றுள்ள எதிர்க்கட்சிகளில், எதற்கு வலிவும் வாய்ப்பும் போதுமான அளவு இருக்கிறது என்ற எண்ணம் பிறக்கிறது.

அத்தகைய வலிவும் வாய்ப்பும் உள்ள கட்சி எது என்று கண்டறிந்ததும், அந்தக் கட்சியிடம், தமக்கு நலன் தரத்தக்க கொள்கையும் திட்டமும் இருக்கிறதா என்று பார்த்திட முனைவர். அதிலே பொதுமக்கள் மனத்திற்கு நிறைவு ஏற்படின் அந்தக் கட்சியினை ஆதரிப்பர்.

தம்பி; இந்த முறையில் பொதுமக்கள் நமக்குத் தந்த வாக்குகளின் எண்ணிக்கைதான், சென்ற தேர்தலின்போது 34 இலட்சம்.

சென்ற தேர்தலின்போது இருந்தது போலவே இப்போதும் காங்கிரசை எதிர்க்கும் கட்சிகள் பல முகாம்களாக உள்ளன என்ற போதிலும்,

சென்ற தேர்தலைவிட இம்முறை, கட்சிகளுக்குள் "உடன்பாடு' பெருமளவு ஏற்பட்டுத்தீரும் என்பதற்கான அறிகுறிகள் பளிச்சிட்டுக் கொண்டுள்ளன.

வலதுசாரிகள் நம்மோடு "ஒட்டுஉறவு' கொள்ளப்போவதில்லை யாமே, அண்ணா! அப்படி இருக்கக் கட்சிகளுக்குள் உடன்பாடு இம்முறை சென்ற முறையைவிட அதிக அளவிலே இருக்கும் என்று எப்படிக் கூறலாம் என்று கேட்கிறாயா, தம்பி! காரணத் தோடுதான் கூறுகிறேன்.

வலதுசாரிகள் நம்மோடுதான் உடன்பாடு செய்து கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், அவர்களும் "உடன் பாடு தேவை என்பதை உணர்ந்து, இடதுசாரிகள், சோஷியலிஸ்டுகள், தமிழரசுக் கழகம் ஆகிய அமைப்பு களுடன் கலந்து பேச விழைகிறார்கள்.

நான் இந்த "விழைவை' வரவேற்கிறேன். பத்துப் பதினைந்து முகாம்கள், ஒரே முகாமாக அமையா விட்டாலும் பத்துப் பதினைந்தாகவே இருக்கப் போவதில்லையல்லவா? மூன்று அல்லது நான்கு முகாம்களாகும் போலத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு நிலைமை உருவெடுத்தால் கூட வரவேற்கத் தக்கதுதான்.

எடுக்கப்பட்டுள்ள முடிவு, இறுதி முடிவு என்று நான் கருதவில்லை.

ஆந்திர வலதுசாரித் தலைவர், எவருடன் கூடியேனும் காங்கிரசை வீழ்த்தவேண்டும் என்ற கருத்துடன் இருப்பதாக இதழில் கண்டேன்.

இந்த எண்ணம் வளர்ந்து, இன்றைய முடிவு மறுவடிவம் கொள்ளக் கூடும் என்பதிலே எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சென்ற தேர்தலின்போது, சுதந்திரக் கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்வது, தமது தூய்மையைக் கெடுத்துவிடும் என்று பேசிவந்த கம்யூனிஸ்டு நண்பரொருவர், தேர்தல் நெருங்க நெருங்க, மாநில மட்டத்திலிருந்து மாவட்ட மட்டத்திற்கு வந்து, அதிலிருந்து கடைசியில் "தொகுதி' மட்டத்துக்கு வந்தார். நினைவில் இருக்கிறது! நிலைமையை உணர உணர, முடிவுகள் திருத்தி அமைக்கப்படும்.

சுதந்திரக் கட்சியுடன் "உடன்பாடு' செய்து கொள்ள முடியாது - அவர்களை ஆதரிக்க முடியாது - என்று திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்ட கம்யூனிஸ்டுகள் - சுதந்திரக் கட்சியுடன் "உடன்பாடு' செய்து கொண்ட "பார்வார்டு பிளாக்குடன்' "உடன்பாடு' செய்துகொண்டு,. ஒத்துழைப்பு நல்கினர். நல்லவர்கள் தம்பி! அவர்கள்! அவர்கள் அவ்வப்போது எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு என்று எண்ணிக் கொள்ளாதே, மாற்றிக்கொள்ளத் தயக்கம் காட்ட மாட்டார்கள்!

இதழில் பார்க்கிறேன், சோவியத் ரμயர்வில் கம்யூனிஸ்டு கட்சி பற்றிய ஒரு செய்தியை.

மே தினம் வருகிறதல்லவா, தம்பி! அன்று உலக நாடுகள் பலவற்றுக்கும் வாழ்த்து வழங்க, எந்த முறையில், எந்த வடிவத்தில், எந்தக் காரணம் காட்டி வாழ்த்து வழங்குவது என்பது பற்றி சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி 111 வாழ்த்துகளைத் தயாரித்துள்ளது.

அதிலே ஒன்று, சோவியத் ரஷியாவும் அமெரிக்காவும் மேலும் விரிவான முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்பதாகும்!

ஆமாம், தம்பி! யாராவது வலதுசாரி மயக்கமடித்து விழப்போகிறார்; ரஷியாவும்அமெரிக்காவும் விரிவான முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் வாழ்த்தோவியம்!

முதலாளித்துவத்தை வெட்டி வீழ்த்திக் குழிதோண்டிப் புதைத்து, அந்தப் புதைகுழிமீது புதுமைப் பூங்காவை அமைத்து, அங்கிருந்து கிளம்பும் சமதர்ம மணத்தை அவனியெங்கணும் பரவிடச் செய்திடும் பாட்டாளியின் அரசாம் சோவியத் ரஷியாவா, உலக முதலாளித்துவ முகாமாகவும், சோஷியலிசத்தை ஒழிக்கச் சதி நடத்தும் பாசறையாகவும் உள்ள அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும்! புனிதமிகு மே தினத்திலா இந்தப் பேச்சு! ரஷிய கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்தா! ஐயகோ! அக்கிரமம்! அக்கிரமம்! அடுக்காது இந்த அநீதி!! என்றெல்லாம் துடி துடித்திடுவதில் பயன் இல்லை என்பதைக் கூறிடு, தம்பி! அமெரிக்காவுடன் விரிவான முறையில் ரμயர் ஒத்துழைக்க வேண்டும் என்ற வாழ்த்து தயாராகிறது.

அமெரிக்க-ரஷியா ஒத்துழைப்பு, எதற்கு? ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக. உலகிலே புதியதோர் போர் மூண்டிடாமல் தடுத்திட!

அமெரிக்கா தனியுடைமைத் தத்துவத்துக்கும் ரஷியா பொதுவுடைமைத் தத்துவத்துக்கும் கட்டுப்பட்டவையே.

அந்த அடிப்படையிலே விட்டுக் கொடுப்பது, பணிந்து போவது, வளைவது, நெளிவது இல்லை.

பொதுவுடைமை மூலமாகவே மனிதகுலம் மாண்பு பெற முடியும் என்ற தத்துவத்தை ரஷியா இழக்க வில்லை; மறக்கவில்லை; வற்புறுத்தத் தவறப் போவதுமில்லை.

ரஷியாவுடன் விரிவான அளவிலே ஒத்துழைப்பதால், அமெரிக்கா பொதுவுடைமைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆனால், அந்த இரு நாடுகளும், உலகிலே போர் மூண்டிடாதிருக்கச் செய்யும் புனிதப் பணியில் ஒத்துழைக்க முனைகின்றன.

தம்பி! சுதந்திராவுடனா...! என்று கோபம் கொப்பளிக்கும் நிலையினில் கேட்கின்றனரே, அவர்கள் ரஷியா காட்டிடும் பாடத்தையுமா, என்மீது உள்ள கோபத்தால் மதிக்க மறுக்க வேண்டும்! வேடிக்கையாகத்தான் இருக்கிறது, அந்தப் போக்கு!

இட்லரின் கொடுமையை ஒழிக்க அமெரிக்க ரூஸ்வெல்டும், சோவியத் ஸ்டாலினும், பிரிட்டிஷ் சர்ச்சிலும் ஒன்று கூடினர்; ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நோக்கத்துக்காக.

அதனை உலகமே வியந்து பாராட்டத் தக்க ராஜ தந்திரம் என்று கூறினர், அரசியல் துறை வித்தகர்கள்.

காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தப் பிற கட்சிகளுடன் செய்துகொள்ளும் "உடன்பாடு' பற்றி அதிர்ச்சி கொள்வோர், இந்த மூவர் முகாம் பற்றிய வரலாறு பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது!

தம்பி! இதனை விரிவாக எழுதுவது, அவர்களை, கண்ணே! வா! வா! கண்மணியே! வா! வா!! என்று அழைத்திட அல்ல. அவர்களேதான் தமது போர்முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நான் இதுபற்றி எழுதுவதன் காரணம், காமராஜர் இந்த "உடன்பாடு' பற்றிப் பேசி வருகிறாரே, அதுபற்றி விளக்கிடத்தான்.

காங்கிரசை எதிர்க்கும் சக்திகள் "உடன்பாடு' செய்து கொள்வது அவருக்கு அச்சமூட்டுகிறது.

அதன் காரணமாகவே அவர் ஆத்திரப்பட்டுப் பொருளற்றனவற்றைக்கூடப் பேசிக்கொண்டு வருகிறார்.

அண்ணன்,

24-4-66