அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனிவும் கசப்பும் - (1)

பேச்சுரிமையின் அவசியம்
நெருக்கடி நிலைக்கு முன்னும் பின்னும்
அச்சமற்ற மனப்போக்கு - சூழ்நிலை தேவை.
பேச்சுரிமை தந்து பொதுத் தேர்தல் நடத்துக !

தம்பி,

மூன்று சர்ஜன்கள் கூடிப் பேசும் வாய்ப்பு ஓரிடத்தில் ஏற்பட்டதாம் - ஒருவர் பிரிட்டனைச் சார்ந்தவர். மற்றொருவர் அமெரிக்காவைச் சார்ந்தவர், மூன்றாமவர் ரμயர்ன்வச் சார்ந்தவர். மருத்துவத் துறைப் பிரச்சினைகள் பற்றி, அதிலும் குறிப்பாக "அறுவை' முறை பற்றிப் பேச்சு எழுந்தது.

அறுவைச் சிகிச்சையிலேயே மிகக் கடினமானது இருதய அறுவைதான் என்றார் பிரிட்டிஷ் சர்ஜன்.

இல்லை! அதைவிடக் கடினம் மூளையிலே செய்யப்படும் அறுவை என்றார் அமெரிக்க மருத்துவர்.

இவை இரண்டையும் விடக் கடினமானது "டான்சல்' (தொண்டையில் வளரும் சதை) அறுவை என்று ரμய சர்ஜன் கூறினார். பிரிட்டிஷ், அமெரிக்க அறுவை நிபுணர்கள் வியப்பால் அதிர்ச்சி அடைந்தனர். அறுவையிலேயே, மிக எளிதானது, ஆபத்தற்றது, டான்சல் அறுவை; அவ்விதமல்லவா மருத்துவ முறை ஏடுகள் தெரிவிக்கின்றன; நடைமுறையிலும் அது விளக்கமாக இருக்கிறதே; இவர் என்ன "டான்சல்' அறுவைதான் மிகக் கடினம் என்று கூறுகிறாரே என்று வியப்படைந்தனர். அதைப் புரிந்து கொள்ளாமலில்லை, ரஷிய மருத்துவர்.

"டான்சல்' அறுவையை நாங்கள் காது வழியாகத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால், எங்கள் நாட்டிலே மக்கள் வாய் திறப்பதில்லை என்று கூறினார் ரμய மருத்துவர். உட்பொருளை உணர்ந்துகொண்ட மற்ற இரு மருத்துவ வித்தகர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இப்படி ஒரு நகைச்சுவைக்கான துண்டு கூறப்பட்டிருக் கிறது; நகைச்சுவைக்காக மட்டுமல்ல, மறைமுகமாக சோவியத் ரμயர்மக்ஒ எதிர்ப்புப் பிரசாரம், இதிலே தொக்கிக் கிடக்கிறது. சோவியத் ரμயர்விலே மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரம் கிடையாது, அச்சத்தால் வாய் மூடிக்கிடக்கிறார்கள் என்று இடித்துரைக்கக் கட்டிவிடப்பட்ட துணுக்கு.

வாயைத் தாராளமாகத் திறந்தால்தான், எளிதாகத் தொண்டையிலே வளரும் சதையை வெட்டி எடுக்க முடியும்; வாயைத் திறக்கவே மறுத்தால்? அல்லது இயலாமற் போய்விட்டால்? காது வழியாகத்தான் கருவியைச் செலுத்தித் தொண்டையில் வளர்ந்துள்ள சதையை அறுத்தெடுக்க முடியும்.

இவ்விதம் கூறியிருப்பது மருத்துவ முறைபற்றிய விளக்கம் தர அல்ல; பிரிட்டன், அமெரிக்கா போன்ற இடங்களில் மக்களுக்குத் தரப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம், ரஷியாவிலே கிடையாது, அங்கு மக்கள் வாயில்லாத பூச்சிகளாகி விட்டுள்ளனர் என்று கேலி பேசி, அரசியல் பிரச்சாரம் நடத்தவேயாகும்.

தம்பி! இதனை நான் கூறுவதற்குக் காரணம், சோவியத்தில் பேச்சுரிமை இல்லை என்று கண்டிக்கக்கூட அல்ல; பேச்சுரிமை எத்தனை அடிப்படையானது என்பதற்கான பொருள் இந்தத் துணுக்கிலே இருந்து பெறமுடிகிறது என்ற காரணத்தாலேதான்.

எத்தகைய அரசு முறையிலே பேச்சுரிமை வளமாக இருக்கும், எவ்விதமான ஆட்சிமுறையிலே மக்கள் வாய் பொத்திக் கிடக்க வேண்டி நேரிடுகிறது என்பது பற்றிய விவரம் கூறவும் ஒப்பிட்டுக் காட்டவும் முனையவில்லை. நான் கூற விரும்புவது, பேச்சுரிமை என்பது பற்றிய பொதுவான, முக்கியமான கருத்துக்களை.

பல பிரச்சினைகளைப் பற்றியும், பல பிரச்சினைகளிலே இயல்பாகவே எழுந்திடும் கருத்து வேற்றுமைகளைப் பற்றியும், எடுத்துப் பேசிடும் உரிமை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கும் நேரம் இது; இந்த நேரத்தில் பேச்சுரிமை பற்றிக் கருத்துரைப்பது தேவையா என்று எவரேனும் கேட்டிடின், தம்பி! நெருக்கடி நிலையின் போதும் பேச்சுரிமை தந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த அல்ல; ஆனால், கேடு கக்கிடும் நிலை எழாதபோது, சாதாரண நாட்களில் பேச்சுரிமை இருந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே இதனை எழுதுகிறேன் என்பதை எடுத்துக் கூறிட வேண்டுகிறேன்.

நெருக்கடி நிலையின்போது, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவது, அளிக்க மறுப்பது என்பது ஒன்று; பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தவும், மறுத்திடவும், பறித்திடவும் சூழ்ச்சி மேற்கொண்டு, நெருக்கடி! நெருக்கடி! என்று சவுக்கடி கொடுக்க முற்படுவது முற்றிலும் வேறானது.

இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்வதும் கடினமானது அல்ல.

பேச்சுரிமையைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்கு நெருக்கடி மூண்டிருக்கும் நேரத்தில் சீர்குலைவு, ஒற்றுமைக் குலைவு, முயற்சிக் குலைவு ஏற்படுத்துவது கண்டிக்கத் தக்கது. நான் அதனை வெறுக்கிறேன். ஆனால், நெருக்கடி நிலை என்ற அபாயச் சங்கினைப் பேச்சுரிமையைப் பறித் திடும் நோக்கத்துடனேயே ஊதிக் கிடக்கும் போக்கினை நான் மட்டுமல்ல, பேச்சுரிமையின் நல்லியல்புகளையும், அதனால் கிடைத்திடும் நற்பயன் களையும் உணர்ந்த எல்லோருமே, ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

"பத்தியம்' இருந்தாக வேண்டும், உடல் நலிவு இருக்கும்போது; அதனைப் போக்கிக் கொள்ள; ஆனால் "பத்தியம்' என்பதையே ஒரு "முறை' ஆக்கிடும் எண்ணத்துடன், உனக்கு உடல் நலம் இல்லை! இல்லை! என்று கூறினால், எப்படி அதற்கு ஆம்! என்று கூறிட முடியும்?

போரிலே தனது நாடு ஈடுபட்டிருந்த நாட்களிலேயே, நாங்கள் போரை வெறுக்கிறோம், சமாதான வாழ்வையே விரும்புகிறோம், ஆகவே, போரை ஆதரிக்க மாட்டோம், படையினில் சேரமாட்டோம் என்று ஒரு சில கூறியது பற்றிய வரலாறும் எனக்குத் தெரியும்.

நான் அந்த "அளவு' செல்லலாம் என்றும் கூறவில்லை; செல்வது சரிதான் என்றும் வாதாடவில்லை; நாட்டுக்குப் பகைவர்களால் ஆபத்து நேரிடும்போது, எல்லோருடனும் கூடி, ஆற்றலுடன் போர் நடாத்திப், பகைவனை விரட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்; அதன் படியேதான் நமது கழகத்தவர் ஒழுகி வருகின்றனர்.

பேச்சுரிமை, ஜனநாயகத்திற்கு அடிப்படை.

பேச்சுரிமை என்ற சொற்றொடரில், உரிமை என்பது எத்தனை முக்கியமானதோ, அத்தனை முக்கியமானது "பேச்சு' என்பதற்கான இலக்கணம்.

பேசத்தக்கன! பேச வேண்டியன! - என்ற வகை அறிந்து, பேசும் முறையும் தெரிந்து, பேச்சின் விளைவு யாதாக இருக்கும் என்பதனையும் யூகித்துணர்ந்து, பேச வேண்டும், பேச்சுரிமையை மேற்கொள்ள வேண்டும்.

எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், என்ன விளைவு என்பது பற்றி எண்ணாமலே பேசலாம்.

என்ற, பொறுப்பற்ற தன்மையை நான் விரும்பவுமில்லை; பிறரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; கூடாது. ஆனால், இவைபற்றி எவருக்கும் ஏதும் தெரியாது, கவலை கிடையாது என்ற எண்ணத்தைத் தடிப்பாக்கிக் கொண்டு, பேசாதே! என்ற கட்டளையை, நெருக்கடி நிலை நீங்கிய பிறகும் முழக்கிடுவா ரானால், அவர்தம் நோக்கம், நாட்டுப் பாதுகாப்பு அல்ல, பேச்சுரிமையை மக்களுக்கு வழங்குவதால், தமது ஆதிக்கம் அழிந்துபடும் என்ற அச்சம் கொண்டு, தமது பதவியை, அமுலைப் பாதுகாத்துக் கொள்வதே அவர் தம் நோக்கம் என்பது எளிதாகப் புரிந்துவிடுகிறது. அதைவிட மோசமானது, நெருக்கடி நிலை நீண்டு கொண்டே போகவிடுவது, தேவையா அல்லவா என்பது பற்றிய சிந்தனைக்குக் கூட இடமளிக்காமல்!

இன்று நம் நாட்டில், நெருக்கடி நிலை; உண்மை; மறுப்பார் இல்லை; அந்த நிலைக்கு ஏற்றவிதமாக, மக்கள் தமது பேச்சுரிமை யைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் விட்டுக் கொடுக்கவும், கடமைப்பட்டிருக்கிறார்கள்.

பகைக் படைகள், சதித் திட்டங்களை வகுத்தபடி இருக்கும் போது, இங்கு நாம், பல்வேறு பிரச்சினைகள் பற்றி, நமக்குள் எழுகின்ற கருத்துக்களை எடுத்துரைத்துக் கொண்டும், மக்களைப் பல்வேறு முகாம்களுக்குள் அழைத்துச் சென்று கொண்டும் இருப்பது, அடாத செயல்.

ஒரே ஒரு முகாம்தான் அமைந்திருக்க வேண்டும், நாட்டைக் காத்திட. இதிலே எவருக்கும் ஐயப்பாடு எழாது.

ஆனால், நெருக்கடி நிலை நீங்கியபிறகு, பேச்சுரிமை உண்டு என்பதிலேயும் ஐயப்பாடு எழுந்துவிட்டால், ஜனநாயக முறையை மேற்கொள்வதிலே, பலன் என்ன காணப் போகிறோம்?

நெருக்கடி நிலையின்போது பேச்சுரிமையை விட்டுக் கொடுத்திடும் கடமை மக்களுக்கு இருப்பது போலவே, கருத்து வேற்றுமைகளைக் கிளறிவிடத்தக்க காரியங்களில், எல்லோரையும் ஒரே முகாமில் இருந்திடுக! என்று கூறிடும் ஆட்சியாளர்கள், தம்மை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது.

புதிய காரியம், புதுச்சட்டம், புதுவரி, புதுக்கட்டளை, எது எனினும், அது நாட்டுப் பாதுகாப்புக்காகப் பயன்படத்தக்க தாகவும், தேவைப்படத்தக்கதாகவுமே இருக்க வேண்டும். அஃதன்றி, இது நெருக்கடி நிலையுள்ள நேரம், பேச்சுரிமையை மக்கள் விட்டுக் கொடுத்துவிட்டுள்ள நேரம், ஆகவே, இந்த நேரத்தில், எத்தகைய செயலைச் செய்திடினும், ஏன் என்ற கேள்வி எழாது; எழுமேல், பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, வாயை மூடிடச் செய்யலாம் என்ற நினைப்புடன், ஆட்சியினர் செயல்களில் ஈடுபட்டால், அது, ஜனநாயகத்தை மாய்த் திடும் கொடுமை என்றே கொள்ள வேண்டி ஏற்படுகிறது.

இன்றுள்ள ஆளுங்கட்சி, மக்களின் ஆணையின் துணை கொண்டு அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது,

இன்றுள்ள ஆளுங்கட்சி, அரசு கட்டிலில் அமர்ந்திருக்கும் நாட்களிலே, அன்னியன் படை எடுத்து விட்டான்; அவனை விரட்டிடும் போர் நடாத்திட, பொறுப்பேற்றுக்கொள்ள, ஆளுங்கட்சி கடமைப்பட்டிருக்கிறது. அந்தக் கடமையை ஆளுங்கட்சி, செம்மையாக நடாத்திச் சென்று, அன்னியனை விரட்டி ஓட்டிடும் பணியினில், நாட்டிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும்; மக்கள் சமுதாயம் முழுவதும், ஒன்றுபட்டு ஈடுபட, ஆட்சியினர் கரத்தினை, வலிவுபடுத்த அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

கடமை, அந்த வகையில் இருக்கிறது.

மக்கள் அந்தக் கடமையைச் செய்திடுவர் என்பதிலே ஆட்சியி னருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்திடினும், எந்த விதமான குந்தகமும் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கட்டுத்திட்டங்களை ஏற்படுத்திக் கொள்ள உரிமை பெறுகிறார்கள்.

அந்த உரிமையின் அடிப்படையிலேதான், பேச்சுரி மையைப் பறித்திடும் சட்டம் இயற்றிக் கொள்ளவும் இடம் கிடைக்கிறது.

ஆகவே, போர் நடாத்திடவும், போர் முயற்சிக்கு எல்லா மக்களின் துணையையும் பெற்றிடவும், பெற்றிடுவதற்கான வழி வகை வகுத்துக் கொள்ளவும், மக்கள் வழி தவறிச் சென்றிடாம லிருக்கக் கட்டுத்திட்டம் ஏற்படுத்தவும் ஆளுங்கட்சிக்குப் பொறுப்பும் கடமையும் இருக்கிறது; உரிமையும் இருக்கிறது,

ஆனால், அந்த உரிமை அந்த நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, தமது ஆதிக்கத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும் நீட்டிக் கொள் ளவும், அழுத்தமாக்கிக் கொள்ளவும் பயன்படுத்துதல், கூடாது; அறமாகாது.

நாட்டிலே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல், மக்களின் ஆணை என்ன என்பதனைக் கேட்டறிந்து, அந்த ஆணைக்கு ஏற்றபடி அரசு முறை அமைத்துக் கொள்வதற்காக.

மக்களின் ஆணையைக் கேட்டறிய, பல்வேறு கட்சிகளும் முனைய வேண்டும்; ஆளுங்கட்சியும் மீண்டும் எம்மையே அரியா சனம் அமர்த்துக என்று கேட்டிட வேண்டும்.

முன்பு அரியாசனம் அமர்ந்து, மக்களுக்குச் செய்தளித்த நலன்கள் பற்றி எடுத்துரைத்து, இனி ஒரு முறை அரியாசனம் அமர அனுமதி கொடுத்திடின், மேலும் இன்னின்ன நலன்களைச் சமைத்தளிப்பேன் என்று ஆளவந்தார்கள் கூறிட வேண்டும்.

அரியாசனத் தமர்ந்து இந்த ஆளவந்தார்கள் மூட்டிவிட்ட கேடுகள் பற்றியும், செய்யத் தவறியவை பற்றியும், செய்திருக்கக் கூடியவை பற்றியும் எடுத்துரைத்து, மற்றும் ஒருமுறை இவர்களை ஆளவந்தார்களாக்கினால் இன்னின்ன கேடுகள் சூழ்ந்திடும் என்ற எச்சரிக்கையினைக் கூறி, ஆட்சிப் பொறுப்பினை எம்மிடம் ஒப்படைப்பின் இன்னின்ன நலன்கள் பெற்றிடலாம் என்று வாக்களித்து, பிரசாரம் செய்திடும் பொறுப்பும் உரிமையும், மற்ற எந்த அரசியல் கட்சிக்கும் உண்டு.

இந்த உரிமை எந்தவிதமான தங்கு தடையற்று இருந்திட வேண்டும், பொதுத் தேர்தலில், மக்கள் தங்கள் கடமையைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டுமானால்.

பல்வேறு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களைக் கேட்டிடவும், ஒரு சாராரின் கருத்துடன் மற்றோர் சாராரின் கருத்தினை ஒப்பிட்டுப் பார்த்து, நல்லன கொண்டு அல்லன தள்ளிடவும் தக்க தெளிவும், துணிவும் எழ வேண்டும், ஒரு அரசுமுறையை அமைத்திட அல்லது ஒரு அரசுக் குழுவை அனுமதித்திட, என்னென்ன திட்டங்கள், பிரச்சினைகள் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று கணக்கெடுக்க அச்சமற்ற மனப்போக்கும், சூழ்நிலையும் வேண்டும். பகைப்படைகள் சதித் திட்டத்துடன் நாட்டைத் தாக்கத் துடித்தபடி உள்ளன என்ற நிலையை வைத்துக் கொண்டு, ஆட்சி முறை பற்றியும், ஆட்சிக் குழு பற்றியும், அதனை ஒட்டிய பிரச்சினைகளைப் பற்றியும், அவைகளை விளக்கிடப் பல்வேறு கட்சிகள் கூறிடும் வாதங்கள் பற்றியும், பொது மக்கள் அமைதியான நிலையில் சிந்தித்துச் செயல்பட முடியுமா என்று கேட்கிறேன், தம்பி!

பகைப் படைகள் விரட்டப்படாத வரையில், நெருக்கடி நிலை இருக்கும் வரையில். மக்கள் மனத்திலே ஓர் அச்ச உணர்ச்சி இருந்து வரும்; பகையினை முறியடிப்பது பற்றிய சிந்தனை முனைந்து நிற்கும்; அரசியல் பிரச்சினைகள், பல கட்சிகளின் திட்டங்கள் பற்றிய நினைப்பு எழ வேண்டிய அளவிலும் வகையிலும் எழாது.

அந்தச் சூழ்நிலையைச் சாதகமாகக் கொண்டு பொதுத் தேர்தலை நடாத்தி மீண்டும் ஆட்சியிலே அழுத்த மாக அமர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் அல்லவா. என்ன நேரிட்டாலும், திட்டமிட்டபடி 1967லில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக் கிறார்கள். இது முறையா? ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானா? என்று எண்ணிப் பார்க்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

பேச்சுரிமையும் இருந்திடாது, பாதுகாப்புச் சட்டமும் இருக்கும், நெருக்கடி நிலையும் நீடிக்கும், ஆனாலும் பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி நடந்திடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

"ஆனாலும்' என்ற சொல் காணப்படுகிறதே, தம்பி! அது அல்ல, உண்மையில் அங்கு பயன்படுத்த வேண்டிய சொல்.

பேச்சுரிமை இருந்திடாது, பாதுகாப்புச் சட்டம் இருக்கும், நெருக்கடி நிலையும் நீடிக்கும். ஆகவே பொதுத் தேர்தல் திட்டமிட்டபடி நடந்திடும்.

இவ்விதம் எண்ணுகின்றனர் காங்கிரசின் பெருந் தலைவர்கள். இதனை நான் உணர்ந்திருக்கிறேன் என்பதை உன்னிடம் எப்படி நான் கூறாமலிருக்க முடியும்?

பேச்சுரிமை இல்லை; பிரச்சினைகளை ஆராயத் தேவைப்படும் மன அமைதி மக்களிடம் இல்லை,

எவரையும் எந்த நேரத்திலும் எங்கும் பிடித்தடைக்க லாம் என்ற சட்டமும் கூராக இருக்கிறது.

மக்களுக்கு அச்சமூட்டத்தக்க விதமாக, பகைவர் களின் நடவடிக்கை இருந்து வருகிறது.

இந்த நேரமாகப் பார்த்து, நமது காரியத்தை நாம் சாதித்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள்.

அதனால்தான் தம்பி! நெருக்கடி நிலை நீக்கப்பட வேண்டும், அல்லது பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை நான் வெளியிட நேரிட்டது.

கட்சிகள் தத்தமது கருத்துக்களைத் தாராளமாக எடுத் துரைக்கும் சூழ்நிலையும் உரிமையும் இல்லை என்று கூறுகிறபோது, காங்கிரசின் பெருந்தலைவர்கள்,

பாதுகாப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்காமல்

பேசலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

எத்தகைய பேச்சு பாதுகாப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று கூறிடும் உரிமையும் அதிகாரமும் யாருக்கு? காங்கிரஸ் ஆட்சியாளருக்கு! அவர்கள் எதிர்த்து மற்றக் கட்சிகள் போட்டியிட வேண்டும் - பொதுத் தேர்தலில். புரிகிறதா, தம்பி! பின்னப்பட்டுள்ள மாயவலை!!

பொதுத் தேர்தலில் ஈடுபட்டாக வேண்டும் என்றால், காங்கிரஸ் ஆட்சியினர் செய்தவைகளைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தத்தமது கருத்தினை மக்களிடம் தெரிவித்தாக வேண்டும். உணவு முனையிலே ஏற்பட்டுள்ள வேதனை நிலைமை முதற்கொண்டு, போர்ச் சூழ்நிலையிலும் முதலாளிகளுக்கு ஆதரவளித்திடும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொடுமை வரையில் விளக்கி ஆக வேண்டும். வரி விதிப்பு முறைகள் பற்றிய கருத் துரையைக் கூறியாக வேண்டும். ஏழை மேலும் கசக்கிப் பிழியப்படுகிறான், எத்தன் கொழுத்துக் கிடக்கிறான் என்பதனை அம்பலப்படுத்தியாக வேண்டும், பாதுகாப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் புதுப்பிக்கப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும், என்பன பற்றிப் பேச வேண்டும்.

இந்தப் பேச்சில் எந்தப் பேச்சு பாதுகாப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை யார் கூற உரிமை பெற்றிருக்கிறார்கள்? அதிகாரத்தில் உள்ள காங்கிரசார்! அவர்களுடன் நாம் போட்டியிட வேண்டும், பொதுத் தேர்தலில்; முறைதானா என்று கேட்கிறேன்.

தம்பி! கட்சி சார்பாக வாதாடுவதைக்கூட நிறுத்திக் கொள்கி றேன். நாட்டின் மொத்த நன்மையின் சார்பாகவே கேட்கிறேன், எவ்வளவு முறையான கட்டுக்கடங்கிய பிரசாரம் நடத்தப் பட்டாலும், சமூகத்தில் மக்கள், பல பிரிவுகளாகத்தானே நிற்பார்கள். பொதுத் தேர்தலின்போது, கசப்பு, கிலேசம், மாறுபாடு, மாச்சரியம், இவைகள் ஏற்படத்தானே செய்யும். என் கட்சி! என் வேட்பாளர்! என் ஆதரவாளர்! - என்ற பேச்சு எழத்தானே செய்யும்! இந்த நிலை, எல்லாக் கருத்து வேற்றுமை களையும் மறந்து "நாட்டுப் பாதுகாப்புக்காக அனைவரும் ஒரு பேரணியாக நிற்கிறோம்' என்று இன்று மகிழ்ச்சியுடன், எழுச்சியுடன், பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறோமே, அந்த நிலைக்குக் குந்தகம் விளைவித்துத்தானே தீரும்? இதனை வரவேற்கத்தான் முடியுமா, இது பற்றிக் கவலையற்றுத்தான் இருக்க முடியுமா?

பல பிரச்சினைகளில்; அடிப்படைப் பிரச்சினை களில் ஆளுங்கட்சியிடம் பலத்த மாறுபாடு இருக்கிறது; அது இறந்துவிடவில்லை.

இந்தி ஆதிக்கப் பிரச்சினை இருக்கிறது. பொதுத் தேர்த -லே ஈடுபடுவது என்றாகி விட்டால், இந்தி ஆட்சி மொழியாவ தனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற "பிரசாரம்' நடந்தாக வேண்டும்; அது இந்தி ஆதரவாளர், இந்தி எதிர்ப்பாளர் என்ற இரு முகாம்களில் அல்லவா மக்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

மெள்ள மெள்ள, ஆனால் துணிவுடன் மதுவிலக்குச் சட்டத்துக்குக் காங்கிரஸ் அரசு, சாவுமணி அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கொடுமையைக் கண்டிக்கும் பொறுப்பி லிருந்து எப்படி நாம் விடுபட முடியும்? கண்டிக்கும் போது, கசப்பும் கொதிப்பும் எப்படி எழாமலிருக்கும்? இந்தக் கசப்பும் கொதிப்பும், ஏற்பட்டுள்ள கனிவையும் எழுச்சியையும் எப்படிப் பாதிக்காமலிருக்கும்? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

கசப்பு. கொதிப்பு மூட்டும்படி பேசினால் கம்பி எண்ண வேண்டி வரும் என்கிறார்கள் போலும்.

அதற்குப் பயந்துகொண்டு, பிரச்சினைகளைப் பேசாதிருப்பது என்றால், கருத்து வேறுபாடுள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் பொதுத்தேர்தல் நடாத்துவது எப்படிப் பொருத்தமுள்ளதாகும், பொருளுள்ள தாகும்?

அண்ணன்,

 

12-12-65