அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனிவும் கசப்பும் - (2)

மணத்துக்கு அனுமதி இல்லை!
"மலடி' வசை மொழியும் நிற்காது!
உணவு நெருக்கடி காங்கிரஸ் ஆட்சியின் விளைவு!
பேச்சுரிமை மறுப்பது ஆளுவோர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவே!

தம்பி,

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை பளிச் செனத் தெரிகிற வரையில், பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று நான் எண்ணுகிறேன்.

பொதுத் தேர்தலுக்கு ஏற்ற சூழ்நிலை, பளிச்சென இல்லா விட்டாலும் ஓரளவுக்காகிலும், தெரியவேண்டுமானாலும், பாதுகாப்புச் சட்ட அமுலாகிலும் நீக்கப்பட வேண்டும்.

கருத்து வேற்றுமைகளே இல்லை என்றோ, அந்த வேற்றுமைகள் இப்போது தாமாகப் போய்விட்டன என்றோ, எவ்வளவு துணிந்த பேர்வழியும் கூறிடமாட்டார். பழைய வேற்றுமைகள் மட்டுமல்ல, புதுப்புது கருத்து வேற்றுமைகள் எழுந்துள்ளன.

வேறு எங்கும்கூடச் செல்ல வேண்டாம், காமராஜரின் கருத்துக்களையே எடுத்துக் கொள்வோம்.

நிலவரி முறை மாற வேண்டும் என்று கூறி வருகிறார்.

எப்போது? எப்படி? என்று கேட்கவும், இந்தத் திட்டம் பற்றி, எட்டாண்டுப் பதவியின்போது ஏன் எண்ணிப் பார்க்கவில்லை என்றும், அதற்குப் பிறகாகிலும் மற்ற "சகாக்களை'க் கொண்டு ஏன் முறை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கேட்க வேண்டுமல்லவா? அதையொட்டிய பேச்சிலே இவர்கள் நிலச் சீர்திருத்த சட்டத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்ட கொடுமையை விளக்க வேண்டுமல்லவா; அதனை விளக்கிடும் போது நில முதலைகளை நம்பிக் கிடக்கும் ஒரு கட்சி எப்படி நிலச் சீர்த்திருத்தம் செய்யும் என்று கேட்க வேண்டுமல்லவா? கேட்கும்போது, ஆட்சி நடாத்திடு வோருக்குப் பாலும் பழமும் சாப்பிட்ட மாதிரியாகவா இருக்கும்! எண்ணிப் பார்க்கட்டுமே நேர்மையாளர்கள்.

இப்போதே, எத்தனையோ வகைவகையான யோசனை களை வெளியிட்டு வருகிறார்கள், பல கட்சியினர்; பல தலைவர்கள்.

இந்தியாவும் - பாகிஸ்தானும் கூட்டரசு அமைக்க வேண்டும் என்று பேசுகிறார் டாக்டர் லோகியா. பொதுத் தேர்தலில் ஈடுபடுவதென்றால் அந்தத் திட்டம் பற்றி அவர் மேலும் சூடாகவும் விரிவாகவும் பேசத்தானே செய்வார். அந்தப் பேச்சு உள்ள தோழமையை, ஒன்றுபட்ட உணர்ச்சியைக் குலைக்குமா குலைக்காதா என்று கூறும் உரிமை பெற்றவர் யார்? ஆட்சியாளர்! ஆட்சியில் உள்ள கட்சி காங்கிரஸ்! லோகியா எந்தக் கட்சியை எதிர்த்து நிற்க வேண்டும்? காங்கிரஸ் கட்சியை! முறையாகுமா? நடுநிலை நின்று பிரச்சினைகளை ஆராய்ந்திட வல்லவர்களை இது குறித்து எண்ணிப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் பாதுகாப்பு மந்திரி கிருஷ்ணமேனன்,

போர்! போர்! என்று சதா பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

என்றும், ஜெயப்பிரகாஷ் நாராயணன்,

போரின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது.

என்றும் பேசி வருகிறார்கள்,

இந்தக் கருத்துகள் தேவை என்ற எண்ணத்தில், பொதுத் தேர்தலில் ஈடுபடும் கட்சிகள், பேசினால், நிலைமை எப்படி இருக்கும்! விரும்பத்தகாத நிலைமையைத் தேடிப்பிடித்து அழைத்துக் கொண்டு வருவது தேவைதானா? எதற்காக? இதுதான் சரியான சமயம், மறுபடியும் பதவியைப் பிடிக்க என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவா!! பொறுப்புள்ள போக்காகுமா இது?

அமெரிக்காவிடம் கேட்டுப்பெறும் (பி.எல் 480) உணவு இருக்கிறதே, அது குறித்து, எத்தகைய கடுமையான அபிப்பிராய பேதமிருக்கிறது. தேர்தலை நடத்துவது என்றால். அதைப் பற்றிய விவாதம் மக்கள் மன்றத்தைப் பிளவு படுத்தாதா!

மக்களைப் பிளவுபடுத்தத் தக்க பிரசாரம் தடுக்கப் படும்; ஆனால், பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

இது என்ன விசித்திரம்! மணம் செய்து கொள்ளவும் அனுமதி கிடைக்காது, மலடி என்ற வசை மொழி கூறுவதும் நிற்காது!!

இன்று மக்களை அலைக்கழிக்கும் பிரச்சினைகள் யாவும், போர் மூண்டதன் விளைவாக எழுந்தவை என்றால், இவைகளுக்கு ஆளுங்கட்சி பொறுப்பல்ல என்று கூறலாம், மெய்ப்பிக்கலாம். ஆனால், போர் மூள்வதற்கு முன்பிருந்தே இருந்து வருபவைகள், மக்களை வேதனைக்குள்ளாக்கி வரும் பல பிரச்சினைகள்.

எட்டு அவுன்சு அல்ல இரண்டு அவுன்சுதான் தர முடியும்; நாட்டைக் காத்திடும் புனிதப் போரில் ஈடுபட்டி ருக்கும்போது. வயிறாரச் சாப்பிட்டாக வேண்டும் என்றா எண்ணுவது; கேட்பது. நாட்டுப் பற்றுள்ளவன் அவ்விதம் கேட்கலாமா!

இவ்விதம் பெருந்தலைவர்கள் பேசும்போது, கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். எதையும் இழந்து நாட்டைக் காத்திட வேண்டும் என்ற உணர்ச்சி எழும் நேரம் என்பதால்.

ஆனால் எட்டு அவுன்சு என்ற நிலை, போர் காரணமாகவா ஏற்பட்டது? இல்லையே! பாகிஸ்தானியப் பகைவன் கிளம்புவதற்கு ஆண்டு பலவற்றுக்கு முன்பே அல்லவா, "பசி' எனும் பகைவன் நாட்டு மக்களைத் தாக்கிடத் தொடங்கினான்.

ஏன் உமது ஆட்சியிலே இந்த அவலநிலை ஏற்பட்டது என்று ஆட்சியாளர்களைக் கேட்கவும், இத்தகைய அவதி நிலையை ஏற்படுத்தியவர்களையா மறுபடியும் அரியணை அமர்த்துவது என்று மக்களைக் கேட்கவும், நமக்கு உரிமை இருக்கிறது. உணவுப் பிரச்சினையை இன்றைய ஆளவந்தார்கள், குழப்ப மிகுந்த செயல்களினால், மேலும் மேலும் சிக்கல் உள்ளதாக்கி விட்டிருக் கிறார்கள் என்பதை எடுத்து விளக்கிட வேண்டும். உணவு நெருக்கடி, சீன ஆக்கிரமிப்பின் விளைவு அல்ல; பாகிஸ்தான் படை எடுப்பினால் ஏற்பட்டது அல்ல; காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்கள் கோணலாகிப் போனதனால் ஏற்பட்டதாகும். எனவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் காங்கிரஸ் ஆட்சியினர். ஆனால், நெருக்கடி நிலை இருப்பதனால், அவர்களுக்குத் தங்கள் குற்றங்களை மறைத்துக் கொள்ள வசதி கிடைக்கிறது. உணவு நிலை இப்படி மோசமாகிக் கொண்டு வருகிறதே என்று எவர் கேட்டிடினும்,

நாட்டுக்கு நெருக்கடி!

பகைவன் பல முனையில்!

பாதுகாப்பு! பாதுகாப்பு!

இஃதன்றி, அரிசி, கோதுமை, என்ற அற்பப் பொருள்கள் பற்றிப் பேசவே கூடாது!

நாட்டுப் பற்றுள்ளவன் சோறு பற்றிய நினைப்பா கொள்ளுவான், இந்த நேரத்தில்!

என்று முழக்கம் எழுப்பிட முனைகிறது. இங்கே இவர்கள் ஆட்சியிலே, உழவுத் தொழில் செழித்து, உணவுப் பண்டங்கள் மலை மலையாகக் குவிந்து, போதும்! போதும்! என்று சொல்லுமளவு மக்களுக்கு உணவுப் பொருள் கொடுத்து, மிகுந்ததைக் கப்பல் கப்பலாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருந்து, பகைவர்கள் பாய்ந்து வந்து தாக்கி, களஞ்சியங்களைக் கொளுத்தி, நாசமாக்கி, வயல்களை அழித்து, சோற்றுப் பஞ்சம் ஏற்படும்படி செய்து விட்டார்கள் என்ற நிலை இருந்தால், பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்! ஆட்சியை ஒழுங்காகத்தான் நடத்திக் கொண்டு வந்தார்கள், இல்லை என்ற சொல் எழாதபடி, மக்களுக்கு வசதிகளைத் தேடிக் கொடுத்து வந்தார்கள்; மலை மலையாக செந்நெல் குவிந்திருக்கக் கண்டோமே! மனைகளிலே மகிழ்ச்சி பொங்கிடக் கண்டோமே! ஒரு குறையுமின்றி மக்கள் வாழ்ந்திருக்கக் கண்டோமே. பகைவர்கள் பாய்ந்து வந்து தாக்கி அல்லவா வளத்தை அழித்தார்கள், வாழ்க்கையைக் கெடுத்தார்கள். பகைவர்களால் ஏற்பட்ட படுநாசத்திற்காகப் பரிவுடன் ஆட்சி நடாத்தி வந்தவர்கள் மீது கோபித்துக் கொள்ளலாமா! அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! - என்று மக்கள் கூறிட முடியும் - அந்தப் பெருந்தன்மை நம் மக்களிடம் உண்டு.

ஆனால், உணவு நெருக்கடி இன்று நேற்றா ஏற்பட்டது! காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட நாள்தொட்டு இருந்து வருவதல்லவா, இந்த உணவு நெருக்கடி.

பற்றாக்குறையும், விலை ஏற்றமும், எவரால் விளைந்தன? பகைவர்களால் அல்லவே!

தம்பி, சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இதுவரையில், வெளி நாடு களிலிருந்து வரவழைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் மொத்த மதிப்பு 2600 கோடி ரூபாய் என்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.

இந்தப் பெரிய தொகையை இங்கே, காடு திருத்திக் கழனி ஆக்கவும், பாசன வசதிகளைப் பெருக்கிடவும், உரம் தயாரித்துத் தரவும், விவசாயக் கருவிகளைச் செய்தளிக்கவும் பயன்படுத்தி இருந்திருப்பின், கணிசமான அளவு உணவுப் பொருள் இங்கேயே விளைந்திருக்கும்; தேவைக்கு மேலேயும் விளைந்து, மிகுந்ததை வெளிநாடுகளுக்கும் அனுப்பி இருந்திருக்க முடியும்.

இவ்விதம் கூறுபவர் பதவிப்பசி கொண்டவரல்ல; இவர்களிடம் அருவருப்பு அடைந்த அரசியல்வாதியுமல்ல; சொல்லப்போனால் அரசியலே வேண்டாம் என்று கூறிவிட்டு, சர்வோதய இயக்கத்துக்காகத் தம்மைத் தாமே தானமாகத் தந்துவிட்ட தகைமையாளர், ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

இவைகளுக்கெல்லாம் ஒரே பதில் அல்லவா வெளிவரும், இந்தச் சமயம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால்; அன்னியன் தாக்கு கிறான், அறிவி-! இந்த நேரத்திலா அவுன்சுக் கணக்கும்; அரிசிக் கணக்கும் பேசுவது! - இவ்வளவுதானே பதில்.

ஐயா! நான் தாய் தந்தையை இழந்தவன்; என் மீது இரக்கம் காட்டி, தண்டனையை நீக்கிவிடுங்கள்; நான் தாய் தந்தையை பூஜித்துப் புண்ணியம் பெற விரும்புகிறேன். என் தவ நோக்கத்தைக் கெடுத்து விடாதீர்கள் என்று, தாயையும் தகப்பனையும் கொன்றுவிட்ட ஒரு கொடியவன், கூறினானாம், ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியைப் பார்த்து. தாயையும் தந்தையையும் இவனே கொன்றுபோட்டான்; ஆனால் இவனே நான் தாய் தந்தையை இழந்து தவிக்கிறேன், ஆகவே என்னிடம் இரக்கம் காட்டுங்கள் என்றும் கேட்கிறான். எப்படி இருக்கிறது வேடிக்கை! உணவுப் பஞ்சம் ஏற்படும்படி செய்தவர்கள் ஆட்சி நடத்தும் காங்கிரசார். ஆனால், அவர்களே பேசுகிறார்கள், உணவுப் பஞ்சம் வந்துவிட்டது, ஆகவே, வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள், கிடைத்ததைச் சாப்பிடுங்கள் என்று.

ஏனய்யா, இப்படி உணவுப் பஞ்சம் வந்தது? என்று கேட்டாலோ, பேசாதே! பகைவன் தாக்குகிறான்! பாதுகாத்திடும் பணியில் ஈடுபட வேண்டிய நேரம் இது; மற்றவை பற்றிய பேச்சு எதுவும் பேசிடலாகாது என்று கூறுகின்றனர். இது எந்த வகையான நியாயம்?

நிலைமை அவ்விதம், என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்து விடுவோம் என்றாலோ, பொதுத் தேர்தல் வருகிறது, எல்லாக் கட்சிகளும் தாராளமாக ஈடுபடலாம், என்கிறார்கள். பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டுமானால், அவரவர்கள் தத்தமது கருத்துக்களைக் கூற வேண்டுமே என்றால்,

கூறுங்கள், ஆனால், நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படாதபடிப் பேசுங்கள்; ஏனெனில், இது நெருக்கடி நேரம் என்கிறார்கள், எந்தப் பேச்சு, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை எடுத்துக் கூறிட, அதற்கான நடவடிக்கை எடுத்திட உரிமை பெற்றவர்? காங்கிரஸ் ஆட்சியினர்!! பாதுகாப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் பேச்சின் இலக்கணம் இப்படி இப்படி இருக்கும் என்று ஏதாகிலும் ஒரு வரையறை உண்டா? இல்லை. சர்க்கார் தமக்குக் கிடைத்திடும் தக்க ஆதாரங்களின் பேரில் நடவடிக்கை எடுக்க முற்படுவர். சர்க்கார் காட்டிடும் ஆதாரங்களை, காரணங்களை எடுத்துக் கூறச் சொல்லிக் கேட்டு, வழக்கு மன்றத்தின் மூலம் நியாயம் தேடலாமா? முடியாது! ஏன்? எந்தெந்த வகையிலே பாதுகாப்பு முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கப்பட்டது என்பது பற்றி வழக்கு மன்றத்திலே எடுத்துக் கூறினால், அந்தச் செய்தி எதிரிக்குப் பயன்பட்டுவிடும், ஆகவே, கூறுவதற்கில்லை. பிறகு? உள்ளே தான்! வேறே வழி!! இந்த நிலையில், ஆளுங்கட்சியை எதிர்த்துப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் போட்டியிடலாம் வருக! வருக! விரைக! விரைக! என்று அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து எனக்குத் தோன்றிய ஐயப்பாட்டினை எடுத்துக் கூறியதறிந்த "ஸ்டேடஸ்மன்' நிருபர் என்னை அணுகி ஒரு கேள்வி கேட்டார்.

இந்த நிலையில் பொதுத் தேர்தலை நடத்தியே தீர்வது என்று முனைந்தால், உங்கள் கழகம், தேர்தலில் ஈடுபட முடியாது என அறிவிக்குமோ?

அவர் கேட்ட கேள்வியை வேறு பலரும் கேட்க எண்ணுவர் என்பதால், அவருக்கு அளித்த பதிலையும் இங்குக் குறிப்பிடுவது தேவை என்று கருதுகிறேன். நான் அளித்த பதில்,

இல்லை! பொதுத் தேர்தல் நடந்தே தீரும் என்று ஏற்பட்டு விடுமானால் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடும், ஆனால், எவ்விதமான உள்நோக்கத் துடன், எத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ ஆட்சியினர் பொதுத் தேர்தலை நடத்த விரும்புகிறார்கள்; அதிலே காணக் கிடக்கும் சூழ்ச்சி எத்தகையது என்பதை முன்னதாகவே பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனைக் கூறி வருகிறேன்.

நெருக்கடி நிலை காரணமாக, மராட்டியத்திலும் மற்றும் சில பகுதிகளிலும், உள்ளாட்சிக்கான தேர்தல்கள் - பேரூர் - வட்டம் - மாவட்டம் - இவற்றினுக்கான தேர்தல்கள் நடத்தப்பட மாட்டா என்று அறிவித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி, தன் அமைப்புக்கான தேர்தலையும் ஒத்திப் போட்டிருக்கிறது, நெருக்கடி நிலை காரணமாக.

நாமும் நமது கழக அமைப்பின் தேர்தல்களைத் தள்ளி வைத்திருக்கிறோம்.

நாட்டுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நேரமும் நினைப்பும் ஒன்றுபட்ட உணர்ச்சியை வளர்த்திட மட்டுமே பயன்பட வேண்டுமேயன்றி, பேதம், பிளவு, முகாம், அணி, இவைகளை உண்டாக்கிடும் செயல்களுக்குப் பயன்படக் கூடாது என்பதாலே.

உள்ளாட்சித் தேர்தல்களிலே ஈடுபடுவோர், ஆட்சி முறை, சட்ட திட்டம், பொருளாதாரப் பிரச்சினை, உணவு நெருக்கடி போன்றவை குறித்து, கருத்துரைத்துக் கொண்டிருக்கப் போவ தில்லை; தேவையுமில்லை. எனினும், பல கட்சிகள் ஒன்றோ டொன்று மோதிக் கொண்டு, அதன் காரணமாக வீண் மாச்சரியம் சச்சரவு எழ இடம் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், அந்தத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தல் என்றாலோ முழுக்க முழுக்க, "கருத்துப் போர்' எழுந்தே தீர வேண்டிய நிலையை ஏற்படுத்திக் கொள்வது; சச்சரவும், மாச்சரியமும், நிரம்ப எழக்கூடும்; ஒன்றுபட்டுப் பணியாற்றும் சூழ்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிடும்.

இதை அறிந்தும் பொதுத் தேர்தலை நடத்திட எண்ணுவதன் நோக்கம் என்ன? பொதுத் தேர்தலை, பேச்சுரிமையற்ற சூழ்நிலையிலேயே நடத்திவிடுவதுதான் மீண்டும் தமது ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்ளும் வழி என்பதால்!

இந்தச் சூழ்ச்சியை மக்கள் உணர்ந்திட வேண்டும் என்பதற்கே இத்தனையும் கூறுகிறேன்.

சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும், இந்த நெருக்கடி நிலையிலும் சர்க்காரின் திட்டங்களைச் சாடலாம், கண்டித்து வாக்களிக்கலாம்.

தங்கப் பத்திரத் திட்டம் முதற்கொண்டு திங்கள் இரவு விரதம் இருக்கும் திட்டம் வரையில், பாராளுமன்றத்தில் பாராட்டியவர்கள் மட்டுமல்ல, பலமாகக் கண்டித்தவர்களும் இருக்கிறார்கள்.

தங்கப் பத்திரத் திட்டம் பற்றிப் பாராளுமன்றத்திலே வீசப்பட்ட கண்டனங்களைக் கணைகளாக, பொது மேடை களிலே இருந்து வீசிடின், தங்கம் திரட்டித் தாயகத்தைக் காத்திடும் பாதுகாப்பு முயற்சிக்கு அந்தப் பேச்சு குந்தகம் விளைவிப்பதாக ஏற்பட்டுவிடக் கூடும்; ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படக் கூடும்.

ஆனால், பொதுத் தேர்தலை நடத்துவதானால், அது போன்ற திட்டங்கள் பற்றி ஒவ்வொரு கட்சியும் கருத்தறிவித்தாக வேண்டும்.

நெருக்கடி நிலையையும் வைத்துக் கொண்டு, பொதுத் தேர்தலையும் நடத்த முற்பட்டால், கட்சிகள் எப்படிச் செயல்பட முடியும்?

பொதுத் தேர்தலில் முழுப் பேச்சுரிமையுடன் ஈடுபடுவ தானால், ஆட்சிப் பொறுப்பிலுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள் ஆகியோரின் நிர்வாக ஊழல்களை அம்பலப் படுத்தியாக வேண்டும்; கெய்ரோன்கள் பற்றிப் பேசியாக வேண்டும்.

ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் பெருகிய செல்வம், எங்கே போய்விட்டதோ தெரியவில்லையே என்று காமராஜர் கேட்டாரே, அதற்குப் பதில் கூற வேண்டும்; அந்தச் செல்வம் சென்ற இடம், சென்ற வகை, அதிலே காங்கிரஸ் கட்சி பெற்ற "பங்கு' இவைகளை வெட்ட வெளிச்சமாக்கியாக வேண்டும்.

அமைச்சர்கள் மீது கூறப்பட்டு வரும் முறைகேடுகள் பற்றிப் பொது மன்றங்களிலே பேச வேண்டி ஏற்படும். இப்போதே சட்ட மன்றங்களிலும், சிலர் துணிந்து பொது மன்றங்களிலும், இவை பற்றிப் பேசிக் கொண்டு வருகின்றனர்.

காங்கிரசுக்கும் பிற கட்சிகளுக்கும் இடையிலே உள்ள கருத்து மாறுபாடு காரணமாக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே, ஆதிக்கம் செலுத்தும் குழு, அகப்பட்டுக் கொண்டு விழிக்கும் குழு என்று ஒரு "முகாமே' ஒவ்வோரிடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் சச்சரவின்போது, பல ஊழல்கள் வெளியாகின்றன. பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

ஒரிசாவில், முன்னால் முதலமைச்சர் டாக்டர் அரிகிருஷ்ண மேதாப், "போட்டிக் காங்கிரஸ்' மாநாடே நடத்தினார் சென்ற மாத இறுதியில்.

ஒரிசா சட்டசபை உறுப்பினர்கள் பலரும், பல மாவட்டத் தலைவர்களும் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டுள்ளனர் மாநாட்டிலே என்ன பேசப்பட்டது தெரியுமா, தம்பி! இன்று ஒரிசாவில் ஆட்சி செய்யும் காங்கிரசை எப்படியும் வீழ்த்தியாக வேண்டும் என்பது பற்றி.

பொறுத்துக் கிடந்தோம். மே-டம் நியாயம் வழங்கும் என்று காத்துக் கிடந்தோம் ஊழல் நாற்றம் சகிக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பில் உள்ள பலர் மீது இலஞ்சக் குற்றம் இருக்கிறது.

இவை அவர்கள் எடுத்துக் காட்டிய காரணங்கள்.

காங்கிரசை விட்டு விலகி விடுவதாக அறிவித்து விடுவோமே, என்று ஒருவர் கூறுகிறார். டாக்டர் அரிகிருஷ்ணமேதாப், விலகி விட்டோம் என்று அறிவித் தால்தானா! மேலிடத்துக்கு நாம் ஒரு தனிக் கட்சியாக இருந்து வருவது ஏற்கனவே தெரியாதா!

இன்று ஆட்சியை நடத்தும் கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும் என்பது நமது நோக்கம்; அதனை நாம் ஏற்கனவே வெளிப்படையாகக் கூறியாகிவிட்டது என்கிறார். அனைவரும், அடுத்த பொதுத் தேர்தலில், காங்கிரசை எதிர்த்துப் போட்டி யிடப் போவதாக முடிவு செய்துள்ளனர் ஒருவர், காங்கிரஸ் "டிக்கட்' கொடுத்தாலும் ஏற்கப் போவதில்லை என்று ஆத்திரத் துடன் பேசினார்.

ஒரிசா காங்கிரஸ் சர்க்கார் போடும் புதிய வரிகளைக் கண்டித்ததுடன், அந்த வரிகளை எதிர்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

உணவுப் பிரச்சினையைத் தக்க முறையில் விரைவில் தீர்த்து வைக்காவிட்டால், பெரியதோர் கிளர்ச்சி நடத்தப் படும் என்று மேதாப் அறிவித்திருக்கிறார்.

இந்த எதிர்ப்பும் கொதிப்பும், பொதுத் தேர்தல் நடத்தப்படுவது என்றால், எத்தனை வேகமாகும்; என்னென்ன விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக் கூடும் என்பது பற்றிய எண்ணமே காணோம் காங்கிரசின் பெருந்தலைவர்களுக்கு ஏன்? நெருக்கடி நிலை நீடிக்கிறது, பேச்சுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது, இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, எதிர்ப்புக் குரலை அடக்கிவிடலாம் என்ற தைரியம்.

இத்தனை சூழ்ச்சித் திறத்துடன், காங்கிரஸ் கட்சியினர் எளிதாக ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்ள, பொதுத் தேர்தலை நடத்த விரும்புகிறார்கள். அதனை விளக்க வேண்டிய கடமை உணர்ச்சியில் இதனைக் கூறினேன்; பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை; நிலைமையை விளக்கி இருக்கிறோம் என்ற அளவிலே மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்று கூற விரும்புகிறேன், ஜனநாயகத்தையும் பேசிக் கொண்டு, ஒரு கட்சி ஆதிக்கத்துக்காக இத்தனை சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும், ஒரே அடியாக, நேர்முகமாக, இனி இங்கு ஒரு கட்சி ஆட்சிதான்! என்று சட்டம் இயற்றிக் கொள்ளலாம். ஜனநாயக முறை இருப்பதாக எண்ணிக் கொண்டு, பல கட்சிகள் நம்பி மோசம்போகும் கொடுமையாவது இல்லாமற்போகும்.

இந்த என் எண்ணத்தைச் சிலருடன் எடுத்துரைத்த போதுதான், பலருக்கு இதேவிதமான எண்ணம் இருப்பது எனக்குத் தெரியவந்தது. சிலரிடம் கேட்டானாம், பலர் கருத்து தெரிந்து கொண்டானாம், பார்த்தீர்களா இவன் காட்டும் தப்புக் கணக்கை என்று பேச்சாளர்கள் சொற்பொழிவு ஆற்றக்கூடும். தம்பி! சிலரிடம் நான் பேசினேன், அவர்கள் தமது கருத்தையும் தாம் மற்றவர்களுடன் பேசியதையும் கூறினர்; அதனால் பலருடைய கருத்து தெரியவந்தது. என் கடமை அல்லவா! வேறு என்ன நான் உனக்குத் தர இருக்கிறது, எனக்குத் தோன்றும் எண்ணத்தை அனுப்பித் தருவதைத் தவிர.

அண்ணன்,

19-12-65