நேருவின் வருகைச் செலவு -
வரவேற்பும் உபசாரமும் தஞ்சை-திருச்சி-புயல் கொடுமை
தம்பி!
கோட்டைமீது, கொடி மரத்துக்குப்
பக்கத்தில் இருந்து கொண்டு பேசப்போகிறார் நேரு பண்டிதர்,
சென்னையில்.
காஞ்சீபுரம் பச்சையப்பன்
கல்லூரி மைதானத்திலே உள்ள மேடுபள்ளங்களைச் சமனாக்கி பாதையைச்
செப்பனிடுகிறார்கள், அங்கு பண்டிதர் பேசப்போகிறார்.
பண்டிதர் பவனிவர இருக்கிற
"ராஜபாட்டை'யைப் புதுப்பிக்கிறார்கள் - பல ஆயிரம் செலவு!!
பண்டிதர் செல்ல இருக்கும்
திருச்சி, குடந்தை, மாயவரம், காரைக்கால், புதுவை, வேலூர்
போன்ற ஒவ்வோரிடத்திலும் இதுபோன்ற ஏற்பாடுகள், எழிலூட்ட,
இன்பம் காட்ட எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன. கோகிலவாணி
குரலும் குழலும் இழைந்து, ஊனும் உயிரும் உருகத்தக்க வகையிலே
இசை அளிக்க, என்னென்ன பாடல்களை அளிக்கலாம்,
"எனது உள்ளமே, நிறைந்த
தின்ப வெள்ளமே!''
"கண்டதுண்டோ கண்ணன்போல்!''
"மாலைப் பொழுதினிலே. .
.''
"அழைத்துவா, போடி!''
இப்படிப் பல உண்டே, எதைப்பாடுவது,
இந்தியாவின் முடிசூடா மன்னன் அவையில் என்று எண்ணி எண்ணி,
இராத்தூக்கமிழந்து, அந்நாளின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக்
கொண்டிருக்கக்கூடும்.
அமைச்சர்கள் புதிய கதர்ச்சட்டைகள்
தைத்துக் கொள்கிறார்ளாம்!
போலீசும் பட்டாளமும், பவனி,
பரணி, இரண்டுக்குமே தக்க ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும்
காரியத்திலே, மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
காஞ்சீபுரத்தில் மட்டும்
பண்டிதரின் பவனி பாங்கான முறையில் அமையவேண்டும் என்பதற்காக
ஏறத்தாழ முப்பதினாயிரம் ரூபாய் செலவிடத் திட்டம் என்கிறார்கள்.
ஒரு தலைவரின் வருகைக்காக
இவ்வளவு ஆர்ப்பாட்டமா, இத்துணைப் பெருஞ் செலவா, இருண்ட
தெருக்களும், நாற்ற மடிக்கும் சேரிகளும் இருக்க, அவைகளைச்
செப்பனிட்டு ஒளிதர முன்வராத ஆட்சியாளர்கள், பண்டிதரின்
பவனிக்காகப் பாதைகளைச் செப்பனிடுவதற்கும் எழிலளிப்பதற்கும்
இவ்வளவு பெரும்செலவு செய்யத்தான் வேண்டுமா? இல்லாமையும்,
போதாமையும் நெளியும் நாட்டிலேயா இப்படி? பாலின்றி அழும்
பச்சிளங் குழந்தையைக் கதறக் கதறத் தொட்டிலில் கிடத்திவிட்டு,
பன்னீரில் குளித்திடப் பளிங்காலான திருக்குளம் செல்லும்
தாய், உண்டா? - என்றெல்லாம் கேட்டுப் பண்டிதருக்கு அளிக்கப்படும்
ராஜோபசாரத்தின் பொருட்டுப் பெருந்தொகை செலவிடப்படுவதை
நான் கண்டிக்கவில்லை! பண்டிதருக்கு வைபவம் நடத்தும் சாக்கிலாவது,
இதுவரை ஏறெடுத்துப் பாராமலிருந்த பாதைகளைச் செப்பனிடவும்
பாங்கு அளிக்கவும் முன்வந்தனரே, என்று மகிழவும் செய்கிறேன்.
"ஏன் இவ்வளவு செலவு?' என்று
கேட்டால், தம்பி! காங்கிரஸ்காரர்கள் கடும் கோபம் காட்டி,
இங்குள்ள பாதைகளைச் செப்பனிட்டோம், பண்டிதரின் பெட்டிக்கா
பணம் போய்ச் சேருகிறது, நமது நகர்களின் சீருக்குத்தானே
செலவிடப்படுகிறது, அறிவிலிகாள்! இதனையுமா அறிந்தீர் இல்லை,
என்ன மதியற்ற தன்மை! என்று கூறிக் கண்டிப்பர்.
வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தின்போது,
கவர்னர், வைசிராய், ஆகியோர், இதுபோல "விஜயம்' செய்வர்.
அப்போதெல்லாம், இதுபோலத்தான் பெரும் பணம் செலவிட்டு,
பூசி மெழுகியும் புதுக் கோலம் காட்டியும், பாதைகள் அமைத்தும்,
பாங்கினைச் சமைத்தும் காட்டுவர். திருவிழாக்கோலம் எழும்!
அந்தச் சமயத்திலெல்லாம், கிளர்ச்சிக்காரர்களாக இருந்த
காங்கிரஸ்காரர்கள்.
ஆடம்பரத்தைக் கண்டீரா?
அக்கிரமத்தைக் கேளீரோ?
கவர்னர் வருகிறானாம் பணம் பாழாகிறது!
பரங்கி வருகிறான். பாதையைச் செப்பனிடுகிறார்கள்.
ஒரு தனி மனிதன் விஜயத்துக்குப்
பணம் தண்ணீர் பட்ட பாடாகிறது, தர்மமா! கேட்பார் இல்லையா?
நம்மைப்போன்ற மனிதன், தேவனல்ல!
அவன் வருகிறான் என்றதும், ஏன் இந்தப் பரபரப்பு, எதற்காகப்
படாடோபம்!
பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்
நாட்டிலே, பவனியாம், பவனி! வெட்கமில்லையா! வேதனையா யில்லையா!
விசேஷ ரயிலாம்! பிரத்யேகப் பாதையாம்! அலங்கார மேடையாம்!
போலீஸ் அணிவகுப்பாம்! எவ்வளவு ஆடம்பரம் பார்த்தீர்களா!
ஏழையின் பணம் பாழாகும் விதத்தைக் கண்டீர்களா!
ஏழை எளியவர் கொட்டுவது
கண்ணீர், ஏய்த்துப் பிழைப்பவன் குளித்திடப் பன்னீர்! ஏனென்று
கேட்டிட வீரர் இல்லையா, விவேகி இல்லையா, தீரர் இல்லையா,
ஆண் மகன் இல்லையா? என்றெல்லாம் சிலர் முழக்கமிட்டனர்,
முணுமுணுத்தனர் பலர், பத்திபத்தியாக எழுதித் தள்ளினர்
சிலர் பாமர மக்கள் பதைத்தனர், பதறினர், பணம் பாழாகிறது!
பணம் பாழாகிறது!! என்று கொதித்தெழுந்து கூறினர்.
கவர்னர், வைசிராய் ஆகியோரின்
"விஜய'த்தைச் சாக்காகக் கொண்டு, நமது நகரங்களைத்தானே
அழகுபடுத்துகிறார்கள், நமது பாதைகளைத்தானே செப்பனிடுகிறார்கள்,
இது நமக்க மறைமுகமாகக் கிடைக்கும் நன்மைதானே, என்று அப்போது
வாதாட, தேசியவாதிகளின் மனம் இடம் தரவில்லை!
இப்போது நேரு பண்டிதரின்
பவனி, நித்திய நிகழ்ச்சியாக இருக்கிறது.
பிரத்யேக விமானம்! ஸ்பெஷல்
இரயில்! ஸ்பெஷல் கார்!
மக்களைக் காணமட்டுமல்ல,
மலை உச்சி ஏறி மகிழ, மலர்த் தோட்டம் கண்டு இன்புற, அலங்காரப்
படகு மூலம் ஆறுகளைகடந்து ஆனந்தம்கொள்ள, கிராமிய நடனம்கண்டு
களிப்படைய, குகைச் சித்திரங்களைக் கண்டு வியந்திட, கோயிற்
சிற்பங்களைக் கண்டு ஆச்சரியப்பட, கொலு மண்டபங்களைக் காண,
கோட்டைகளின் மீதேறிக் காட்சி தர, கோலாகல வரவேற்பு வைபவங்களில்
கலந்துகொள்ள - இன்னோரன்னவற்றுக் கெல்லாம், நேரு பண்டிதருக்கு
நேரம் கிடைக்கிறது. இவர் இத்தகைய காட்சிகளைக் கண்டு களித்திடும்
ஏற்பாடுகளைச் செவ்வனே செய்துதர ஏற்படும் செலவு பெரும்
பாரமாகிறது - எனினும், எற்றுக்கு இந்த ஆடம்பர ஆரவாரம்,
பயனற்ற படாடோபம், பாமரரை வஞ்சிக்கும் பகட்டு, பணம் பாழாகும்
விழாக்கள், என்று எண்ண மறுக்கிறார்கள்; துணிந்து எவரேனும்
கேட்டாலோ, ஏடா! மூடா! என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்?
எங்கள் நேருவுக்கு இதுவும் செய்வோம், இதற்கு மேலும் செய்வோம்!
என்று கூறி மிரட்டுகிறார்கள்.
நேருவுக்காக நடத்தப்படும்
பவனிகள், வைபவங்கள், வரவேற்புகள், கொண்டாட்டங்கள், கோலாகலங்கள்
போன்றவைகள், வெள்ளைக்காரன் காலம் தொட்டு இருந்து வருகிற,
ஏகாதிபத்திய முறையாகும்! அன்று ஏகாதிபத்திய முறையினைக்
கண்டித்தவர்கள், இன்று அதே முறையைக் கையாண்டு, களிப்பும்
பெருமையும் அடைகிறார்கள். அன்றும் இன்றும், ஏழை கண்ணீர்
வடித்த வண்ணமே இருக்கிறான்!
தம்பி, ஒரு கதை உண்டு. பரம
ஏழையாக இருந்த ஒருவன், தேவாலயத்தின் அருகே பாதையில் நடந்து,
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானாம்! கந்தல் ஆடை, கையில்
திருஓடு, கண்ணில் காமாலை, கைகால்களில் புண்-இந்தக் கோலத்தில்.
ஆண்டவனின் அடிபணிந்து அர்ச்சித்து அபிஷேக ஆராதனைகள் செய்வித்து,
அருளைப் பெறுவதற்காகப் பிரபுக்கள் பட்டுடை அணிந்து பளபளக்கும்
அணிபணிபூண்டு, பொன்னவிர் மேனியரோடு வண்டி வாகனங்களில்
செல்வர்; இதைக் கண்ட பிச்சைக்காரன், மனம் நொந்து, "ஆண்டவனே!
ஏதோ என்னை இல்லாதவ னாகவும், இவர்களைச் சீமான்களாகவும்
படைத்துவிட்டாய். அதுவே அக்ரமம். அது போதாதென்று, இருவருக்கும்
பொதுவாக ஒரு பாதையையும் அமைத்திருக்கிறாயே. ஏழைகள் செல்வதற்கு
ஒரு பாதை, சீமான்கள் பவனிக்காக மற்றோர் பாதையாவது அமைத்திருக்கக்
கூடாதா? என் கண்ணிலே, இந்தப் பளபளப்பும் மினு மினுப்பும்,
தகத்தகாயமும் தெரியாமல் இருந்தாலாவது, வேதனை குறையுமே!''
என்று சொல்லிக் கொண்டானாம்.
எப்படியோ, அவன் ஒரு பெரும்
சீமானாகிவிட்டான் - பட்டுடை! பரிமளகந்தம்! பல்லக்கு! பாவையர்!
எல்லாம் கிடைத்துவிட்ட நிலை! பல்லக்கில் செல்கிறான். பரம
ஏழையாக இருந்தவன், "பரம்பொருளின்' அருள் பெற! பாதையிலே,
பஞ்சை பராரி, ஏழை, நடைப்பிணம், கண்டான்! கண்களை இறுக மூடிக்கொண்டு,
கலக்கத்துடன், "கடவுளே! இதென்ன கொடுமை? ஏன் இப்படிப்பட்ட
"கோர'மான காட்சி என் கண்ணில் படும்படி செய்கிறாய்! நான்
என்ன குற்றம் இழைத்தேன்! இறைவா! இந்த ஜென்மங்கள் எமது
கண்களிலே தெரிந்து இதயத்தைத் தாக்காதிருக்கும் வண்ணம்,
இதுகளுக்கென்று ஒரு தனிப் பாதையும், உன் அருளைப் பெற்ற
எமக்கென்று ஒரு தனிப் பாதையும், அமைத்துத்தரக் கூடாதா!''
என்று இறைஞ்சினானாம்.
பஞ்சை பிரபுவானதும், பஞ்சைகளைப்
பார்ப்பதும் வேதனை என்று எண்ணுகிறான் - அதற்காக ஆண்டவனிடம்
கோபித்துக்கொள்கிறான்!
பஞ்சை பிரவுவானதும் அவன்
மனதிலே எத்தகைய நஞ்சு நெளிகிறது பார், தம்பி!
காங்கிரஸ்காரர்கள், தேசியத்
திருக்கோயிலிலே பூஜை நடாத்திய காலம் தீர்ந்துவிட்டது;
இப்போது அவர்கள் பவனி வரும் பிரபுக்களாகி விட்டனர் -
நெஞ்சமெலாம் நஞ்சாகி விட்டது - என் செய்வது?
வஞ்சியர் பாடி ஆடி மகிழ்வூட்ட,
சீமான்கள் பூச் சக்கரக் குடை பிடிக்க, ஆளவந்தார்கள் சாமரசம்
வீச, வைபவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன! உற்சவம் நடத்துகிறார்கள்.
உபதேசம் கிடைக்கிறது!! ஊர் மக்களின் வறுமையும் வேதனையும்,
எப்போதும்போலத்தான் இருந்து வருகிறது!!
தஞ்சை திருச்சி மாவட்டங்களிலே,
தம்பி, பெரும் புயலடித்து படுநாசம், விளைந்ததே, நினைவிலிருக்கிறதா?
நெற்களஞ்சியம், பொய்யாத பொன்னியால் பாலூட்டப்பட்டு வளரும்
தஞ்சை. அங்கு ஊரெலாம் வெள்ளக்காடாகி, பெருமரங்கள் சாய்ந்து,
பேய்க்காற்றால் ஏழைகள் இருப்பிடங்க ளெல்லாம், பிய்த்தெறியப்பட்டு,
பெருஞ்சேதம் விளைந்த சமயம். அந்த நேரத்தில், பண்டிதர்
வந்தார்! "வாரீர் தலைவரே! எமக்கு வந்துற்ற அவதியைக் காணீர்
பண்டிதரே! பூந்தோட்டம் அழிந்து கிடக்கும் கொடுமையைக்
காணீர்! பொன்னியின் செல்வர்கள் புலம்பிக் கிடக்கும் கோரத்தைப்
பாரீர்! கண்ணீர் துடைத்திடுவீர்!
கஷ்டத்தைப் போக்கிடுவீர்!
காவலரே! வாரீர், வாரீர்! வேதனை குறையும், நம்பிக்கை மலரும்.
ஒரு நல்ல வார்த்தை, சிறிதளவு ஆறுதல்மொழி கூறவாரீர்! புயலே!
கடலே! பேய்க்காற்றே! பெருவெள்ளமே! எம்மை அழித்திடக் கிளம்பினீர்!
அழிவையும் ஏவினீர்! எனினும், அஞ்சற்க! அஞ்சற்க! உமக்கு
வந்துற்ற இன்னலைத் துடைத்திடுவேன், இடுக்கண் வருங்கால்
நகுக! அழிவை ஒழித்திடுவேன், அல்லலைத் துடைத்திடுவேன்!
என்று எமக்கு ஆறுதலளித்திட எமது அருமைத் தலைவர், நேரு
பண்டிதர் வருகிறார், என்று கூறி, கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு, நம்பிக்கை பெறுவோம்! வருக பண்டிதரே! வருக! எம்மை
வாழ்விக்க வந்த பெம்மானே வருக, ஈடில்லாத் தலைவரே! இணையில்லா
வீரரே! வருக! வருக!' என்று அழைத்தனர்.
நேரு பண்டிதர் வந்தார் -
தென்னகத்துக்கு!
தஞ்சை தலைவிரிகோலமாகக்
கிடக்கிறது. பண்டிதரோ நேரே, சிந்தை அணி ஒவ்வொன்றும்
சிலிர்த்திடும் கவர்ச்சியூட்டும் கேரளம் சென்றார். குன்றின்மீதேறி,
பளிங்குமாளிகையில் அமர்ந்து, அங்குள்ள அடவியில், கரியும்
கரியும் களியாட்டம் நடாத்திடும் காட்சியை, வேங்கை சீறி
வேழத்தைத் தாக்குவதை, புலிக்கு அஞ்சிப், புள்ளிமான்கள்
சிட்டாகப் பறப்பதை, காட்டெருமைக் கூட்டம் பெருமரங்களைச்
சாய்ப்பதை, வர்ணஜாலமிக்க விந்தைப் பறவைகள் விதவிதமான ஒலி
கிளப்பி மகிழ்வதை, இந்த "ஆரண்ய'' அழகினைக் கண்டு அக மகிழ்ந்திருந்தார்!
திருவிதாங்கூர் மன்னரின் பிரத்யேக விருந்தினர்!
கேரள நாடு! மன்னரின் விருந்தினர்!
குன்றின்மீது மாளிகை! இன்பத்தேன் பாயாதிருக்குமோ! இதைக்
காண வந்த நேருவை, ஐயோ! அப்பா! அம்மா! ஐயகோ! என்று தஞ்சை
அழைத்தால், வருவாரா? வரவில்லை! புயல் தஞ்சைப் பூங்காவை
அழித்த போது ஏற்பட்ட வேதனையைவிட அதிகமாகத்தான் வேதனை,
நேரு பண்டிதர் அந்தச் சமயத்தில் "ஆரண்யரசம்' பருகிய சேதி
கேட்டவர்களுக்கு! வெள்ளைக்காரன், இதுபோலச் செய்யத் துணியவில்லை.
செய்திருந்தால், ஆயிரம் ஆயிரம் மேடைகள் அதிர்ந்துவிடும்!
நேரு செய்தார்-ரோமாபுரி தீப்பிடித்து எரியும்போது நீரோ
மன்னன் யாழ் வாசித்து மகிழ்ந்தான் என்பார்களே, அது போல!
அண்ணனுக்கு நானென்ன மட்டமா!
என்று கேட்பது போல, விஜயலட்சுமி அம்மையாரும், அவர் குடும்ப
அலங்காரவதிகளுடன், சீர்கெட்டுப் பேர் கெட்டு, ஊர்விட்டு
ஊர் ஓடி சிரமப்பட்டுச் சிதையும் தமிழர்களை, பிடரியில்கால்
வைத்து உதைத்துத் தள்ளிடும் போக்கில், கொத்தலாவலை சர்க்கார்
நடந்து கொண்ட நேரமாகப் பார்த்து, விருந்து வைபவத்தில்
கொண்டாட்டமாகக் கலந்துகொண்டார்; குமரிகளோ கடையும் இடையும்
நடையும் உடையும் மேனாட்டு மங்கையரை வெட்கிடச் செய்கிறது
பார் என்று கூறுவதுபோல, கோலம் காட்டி, ஆங்கிலமுறை நடனமாடி,
அகமகிழ்ந்தனர்!!
வெளிப்படையாக, வெட்கமின்றி,
யார் கேட்கமுடியும் என்ற துணிவுடன்தான், வடநாட்டு வன்கணார்கள்,
"தர்பார்' நடத்துகிறார்கள் வாயடைத்துப் கைகட்டியும் நிற்பதுதான்
தேசியம் என்று கருதப்படுகிறது - ஆகுமா இத்தகைய அக்ரமம்
என்று கேட்கத் துணிபவரையோ, தங்கள் கோபப் பார்வை யாலேயே
சுட்டுச் சாம்பலாக்கி விடலாம் என்று எண்ணு கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்!
கோட்டைமீது ஏறி, கவர்னரும்
முதல் மந்திரியும் புடைசூழ அமர்ந்து, நேரு பண்டிதர் பேசப்
போகிறார்.
என்ன பேசுவார்! பஞ்சசீலம்,
பாரதத்தின் புகழ் பாரெலாம் பரவிடும் பெருமை, உழைப்பின்
மேன்மை, கோவாக் கொடுமை, கொரியாவில் நமது கடமை, ஆப்பிரிக்க
சர்க்காரின் மடைமை, ரμய உபசாரத்தின் இனிமை, இவை பற்றி
எல்லாம் பேசப் போகிறார்! ஏழ்மை, அறியாமை, மார்க்கத்துறையிலே
உள்ள மடைமை, திராவிடத்துக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமை
இவை பற்றிப் பேசிட முன்வரார் - இவை பற்றிப் பேசுவோர்மீது
சினம் கொட்டத் தவற மாட்டார்!
சிறுபிள்ளைத்தனம்
பைத்தியக்காரர்கள்
அர்த்தமற்ற ஆபாசம்
என்றெல்லாம் ஏசுவார்! எதிர்ப்புகளை
அழித்தொழிப் போம் என்று எக்காளமிடுவார்!
பண்டிதரைக் காணச் செல்லும்
பெருங்கூட்டமும், அவருக்குப் பாரிலே கிடைத்திடும் புகழ்
மாலை, அவருக்காகப் பிற நாட்டார் நடத்திய விருந்துகள்,
வைபவங்கள், அறுபதைத் தாண்டியவர் இருபதுவயது வாலிபர் என
உற்சாகமாகக் காணப்படும் காட்சி, அவருடைய மேனியிலே தெரியும்
மினுமினுப்பு, கண்களிலே உள்ள குறுகுறுப்பு, ஆகியவை பற்றிப்
பேசி மகிழ்வர் - அவரிடம் தான் இந்திய பூபாகம் எட்டு ஆண்டுகளாக
ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே மக்களின் வாழ்வுக்கும்
தாழ்வுக்கும் பொறுப்பாளர் அவரே! அந்நிலையில் உள்ளவர்,
இவ்வளவுகவர்ச்சி பெற்றவராக இருந்தும் மக்களைச் சொக்கிடச்
செய்யவும் பிற அரசுகளின் நேசத்தைப் பெறவுமான திறமை இருந்தும்,
அவருக்கு, எதிர்ப்பு என்பது உருவான முறையில் எங்கும் இல்லாதிருக்கும்
நிலையில் நாட்டினுக்கு எந்த அளவுக்கு வாழ்வளித்திருக்கிறார்
- வறுமையை ஓட்டிட, வாட்டத்தைப் போக்கிட, அறியாமையை அகற்றிட
இல்லாமையை ஒழித்திட என்னென்ன காரியங்களில் ஈடுபட்டார்,
என்ன சாதித்துள்ளார் என்பது பற்றி, எண்ணிடப் போவதில்லை
- காட்சியில் சொக்கி நிற்பர்! மறுக்க முடியாத உண்மை ஒன்று
இருந்திடக் காண்கிறோம் காந்தியாருக்குப் பிறகு, பாமர
மக்கள், நேரு பண்டிதரிடம்தான், அளவற்ற பாசம் கொண்டுள்ளனர்.
இந்த அளவுக்கு பாமரரின் பாசத்தைப் பெற்றுள்ள தலைவர்கள்,
இன்று இங்கும் சரி, வெளிநாடுகளி லேயும் சரி, அதிகம் பேர்
கிடையாது! நேரு பண்டிதரைக் காணும் போது, உவகை கொண்டு
நமது மக்கள் முகமலர்ச்சியுடன் அவரை வரவேற்கத் திரண்டிடுவதுபோல,
ஈடனுக்கோ, ஐசனவருக்கோ, அவர்தம் நாட்டிலே உண்டா என்பது
கூடச் சந்தேகம்தான். திறந்த காரில் நின்ற வண்ணம் தெருவின்
இருமருங்கிலும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும்
முதியவரும் சிறாரும் அணிவகுத்து நிற்கும் காட்சியைக்கண்டு
புன்னகை காட்டியும் பூச்செண்டு வீசியும், நேரு பவனி வருவதுபோல
ஈடனும் பிறரும் பவனி வருவதில்லை. அந்த நாடுகளிலெல்லாம்
மக்கள், உற்சவம் கொண்டாடும் கட்டத்தைக் கடந்து விட்டனர்;
இங்கு உற்சவம் விமரிசையாக நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.
பல திருவிழாக்களிலே, நேரு பவனியும் ஒன்றாகக் கருதப்பட்டு,
விழாக் காட்சிகளிலே கவர்ச்சி கண்டு, அதோ பார் பொய்க்கால்
குதிரை, இதோ பூத நடனர், அதோ கொம்பு ஊதுகிறார்கள், இங்கேபார்
கோணங்கி கூத்து, என்று சுட்டிக்காட்டிசிரித்து மகிழ்வதுபோல,
அதோ பார் நேரு சிரிக்கிறாô, ஆமாம், ஆமாம், எதையோ உற்றுப்
பார்க்கிறார், மாலையை வீசுகிறார் பார், மாதர் பக்கமாக,
மகள் இந்திரன் நேருவின் முகம் மலர்கிறது பார், அதோ அந்த
மோட்டாரில் கேவல்சிங், இது பிளப்வாலா அந்த ப்யூக்கில்
இருப்பவர்தான் காமராஜர் என்று காட்சிகளைக் காட்டி காட்டிப்
பேசி மகிழ்சிறார்கள். இவ்வளவு நேசத்தையும் பாசத்தையும்,
உற்சாகத்தையும் உற்சவத்தையும் பெறுகிற நேரு பண்டிதரால்,
இதோ வறுமையை ஒழிக்கும் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டத்தைப்
போக்கும் வழி, புதிய தொழிற்சாலைகள், வாழ்வுக்கு புதிய
வசதிகள், தருகிறேன் மகிழ்ச்சி பெறுவீர்!. . . . என்னிடம்
இத்துணை அன்பு கொண்ட நண்பர்களே! நம்பிக்கை வைத்திருக்கும்
நல்லவர்கலே உங்கள் நல்வாழ்வுக்காக நான் சந்தித்துள்ள காரியங்களின்
பட்டியலைக் கூறுகிறேன் கேண்மின் என்று எடுத்துக் கூறுகிறாரா,
கூற முடிகிறதா, கூறும் வழி இருக்கிறதா, என்றால்? இல்லை,
இல்லை, அதுதான் இல்லை. அன்பு சொரிகிறார்கள் மக்கள்; அகமகிழ்கிறார்
நேரு. பிறகு அகில உலகச் செய்திகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக
எடுத்துக் கூறிவிட்டு, ஆகவே "ஜெய் இந்து' என்று முழக்கமிடச்
சொல்லிவிட்டுப் போய்விடுகிறார் - திருவிழாக் கோலம்
கலைகிறது, தெருக்களில் எப்போதும் போலத் திகைத்தவன்,
தத்தளிப்பவன், வாழ்க்கைக்கு வழி தேடி அலைபவன், வறுமையால்
வாட்டப்படுபவன்! மாடென உழைத்திடும் மனித உருவங்கள், வாலிபத்தை
வயோதிகமாக்கிக் கொண்ட வறுமையாளர்கள், பிணிகொண்டோர்
பிச்சைக்காரர் ஆகியோர் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
கண்ணீர் வற்றிவிடவில்லை; கை பிசைந்து கொள்வது நின்று
போவதில்லை. கண்டோம் களித்தோம் நேரு பண்டிதரை, நமக்குற்ற
இன்னல் ஒழிந்திடக் கண்டோம், இன்பம் பெருகிடக் கண்டோம்,
இதனை நமக்கு அளித்திட்ட ஏந்தலைப் போற்றுதும், அவர் ஆட்சியின்
மாட்சியைப் போற்றுதும், என்று கூறிட மக்களால் முடிய வில்லை!
பாமரரின் நிலை இது எனின்,
இந்தியப் பேரரசு எந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது,
எவ்விதமான எதேச்சாதிகாரம் கொழுந்து விட்டு எரிந்து ஜனநாயக
மலரினைக் கருக்கி விடுகிறது? எத்தகைய அடக்கு முறைகள் அவிழ்த்து
விடப்பட்டி ருக்கிறது, அதன்விளைவாக விடுதலை வேட்கையும்
உரிமை ஆர்வமும் கொண்டவர்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கப்
பட்டுள்ளனர்? தீட்டப்படும் திட்டங்களிலே உள்ள தவறுகளை
எடுத்துக் காட்டுவோரும், அவை நிறைவேற்றப்படுவதிலே ஏற்படும்
ஒழுங்கீனங்களைச் சுட்டிக் காட்டுவோரும் எவ்விதம் அலட்சியப்
படுத்தப்படுகிறார்கள், ஆட்சி முறையின் காரணமாக ஏழை மேலும்
ஏழை ஆக்கப்படுகிறான்? இலட்சாதிகாரி கோடிஸ்வரனாகிறானே,
முறையா, என்று கேட்போர் மீதுகண்டனம் எப்படி வீசப்படுகிறது
என்பனவற்றை அறிந்துகொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவு படைத்தவர்
களோ, நேருவின் பவனியிலே உள்ள கவர்ச்சிக்கும் நாட்டு மக்களுடைய
வாழ்வின் முன்னேற்றத்துக்கும் ஒருதொடர்பும் இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டுள்ளனர் எனினும் அந்தப் பெருங்கூட்டம்,
விழாக்கோலம், கவர்ச்சி ஆகியவைகளைக் கண்டதும் திகைப்புற்று,
இவ்வளவு மகத்தான செல்வாக்குப் பெற்றிருக்கும் பெரந்தலைவரை,
மக்களை மயக்கும் சக்தியை இந்த அளவுக்குப் பெற்றுள்ள நேரு
பண்டிதரை, அண்டிப் பிழைத்தால்தான் வாழ்வு, எதிர்த்தாலோ,
மூலையில் தள்ளப்பட்டு விடுவோம் என்று அஞ்சி, அவர்களும்
கோலாகலத்திலே கலந்து கொள்வதே சாலச் சிறந்தது என்று எண்ணி
விடுகிறார்கள்! காங்கிரஸ்காரர்களோ, பெருமழை பெய்து, தெரு
வெல்லாம் தண்ணீர் ஆறென ஓடும்போது, பாதையிலே இருந்த ஆபாசங்கள்
அடித்துக்கொண்டு போகப்பட்டுத் தெரு துப்புரவாவது போல,
நேருவின் பவனியால் ஏற்படும் உற்சாக வெள்ளம், காங்கிரசாட்சியினால்
ஏற்பட்டுள்ள அல்லலை, அவதியை, அதிருப்தியை, அவலட்சணத்தை,
எதிர்ப்பை, எரிச்சலை, ஒரே அடியாகத் தள்ளிக் கொண்டு போய்விடும்,
எங்கும் காங்கிரஸ் கட்சியின், மதிப்பும் செல்வாக்கும்
ஓங்கித் தழைத்திடும், மாற்றார் உற்றாராவர் உற்றார் உவகையால்
துள்ளிக் குதிப்பர், ஊராளும் முறையினால் ஏற்பட்ட உற்பாதங்களையும்
மறந்து மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தருவர், அன்பினைச்
சொரிவர் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.
இவர்களின் அச்சத்துக்குக்
காரணம், நேருபண்டிதரால் பாமரரைப் பெருமளவுக்குத் திரட்ட
முடிவதால், அவருடைய செல்வாக்கை எதிர்த்தால், மக்கள் தம்பால்
கசப்படைவர் என்பதுதான். இன்றைய நிலையைத்தான் இவர்கள் எண்ணிப்
பார்க்கிறார்களே தவிர, உண்மையை எல்லா மக்களும் உணர்ந்து,
நாம் வஞ்சிக்கப்பட்டோம் இம்சிக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம்
என்பதை அறிந்து கொதித்தெழப் போகும் ஓர் நாள் வந்தே தீரும்
என்பதையும், அந்நாளில், எமக்குக் கொடுமைகளும் துரோகமும்
இழைக்கப்பட்டபோது, அந்த நேருவுக்குப் பராக்குப் பாடிக்கொண்டும்,
பல்லக்குச் சுமந்து கொண்டும் இருந்தவர்தானே நீர்! எம்மை
இம்சித்த போது அவரிடம் இளித்துக் கிடந்தவரல்லவா நீர்!
எமக்குத் துரோகம் இழைக்கப்பட்டபோது அவர்முன் துதிபாடி
நின்றீரல்லவா! விளக்கமறியாதாருக்கு விளக்க வேண்டும் என்ற
பொறுப்பை மறந்து, கும்பலில் கூடிக் குலவினால், நமக்கும்
சுவைத்திடச் சில கிடைக்கும் என்றுதானே அவர்பின்னோடு சுற்றித்
திரிந்தீர் என்று கேட்கப் போகிறார்கள் என்பதை மறந்தேவிடுகிறார்கள்.
அதனால்தான், அறிந்ததைக் கூறவும் அச்சப்பட்டுக்கொண்டு
"அடைப்பம்' தாங்கி, அதிலேயே ஆனந்தம் தேடிக்கொள் கிறார்கள்.
இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்திடத் துணிவும் மக்களிடம்
எடுத்துக்கூறிவிடும் நெஞ்சு உரமும் கொண்டவர் களின் அளவு
குறைவுதான், தம்பி, ஆனால் அவர்கள் தமது கடமையைக் கலக்கமின்றிச்
செய்து கொண்டு வருகிறார்கள். அரசியலில் புதுப் புதுக்காற்றாடிச்
சண்டைகளைக் கிளப்பிக் கொண்டு இருப்பதில்லை. நிழலை உருவமெனக்
கூறிப் போராட்டம் நடத்துவதில்லை. பிரச்சினை எதற்கும்
பரிகாரம் தேடும் முழு உரிமை எமக்கே பிறருக்கு இதிலே பின்னோடி
வரத்தான் சலுகை அளிக்கப்படும் என்று பேசிடுவதில்லை. தொடர்ந்து,
திராவிடருக்கு இழைக்கப்படும் கொடுமையை, துரோகத்தை, மக்களிடம்
எடுத்துக் கூறி, அவர்களின் மனமயக்கத்தைப் போக்கிய வண்ணம்
உள்ளனர். தம்பி! அந்த அரும்பணியாற்றிடும் அஞ்சா நெஞ்சினர்
கொண்ட கழகத்தில்தான், நானும் நீயும் இருக்கிறோம்.
அன்புள்ள,

25-9-1955