அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கதைகள் - கருத்தளிக்க
2

"என்னடி காசு ரொம்பக் கொட்டியோ கிடக்குது உன் வீட்டில் - ஏனடி இந்த ரோஷம் - எடுத்துச்செல் இதனை'' என்று பாட்டி பரிவுடன் சொன்னாள். பாவையோ, அதைக் கேட்டல்ல, தோட்டத்தில் சிரிப்புச் சத்தம் எழக் கேட்டு மகிழ்கின்றாள்.

கிளி கொஞ்சும் காட்சி காண, தாய் சென்றாள் தோட்டப் பக்கம். அங்கு, கொடியினைப் பற்றி இழுத்து, குழந்தையின் கரம் கொடுத்து, அதை அறுத்ததுமே குழந்தை, கைகொட்டிச் சிரித்திடவும், அதன் கன்னத்துக்குழியை, அவரைப் பூவினால் நீவி, அவனும், அகமகிழ்ந்திடவே கண்டாள்.

அரைநொடி நின்றாள் கண்டு; "அண்ணா!'' என்றழைத்த வண்ணம், அவனருகே சென்று, "போக்கிரி அண்ணா, இவன்; இவன் போக்குக்கு ஏற்றவண்ணம் ஆடி நீர், கொடியை எல்லாம் அறுத்திடலாமோ?'' என்று கூறிக் குழந்தையை வாங்கிக்கொண்டு, முத்தமிட்டாள்; அவனோ, வையகம் தன்னை வாழ்விக்கும், அன்பின் அருமை அறிந்து அகமகிழ்ந்து நின்றான்.

அங்கெங்கோ ஓர் இல்லத்தில், அவனுக்கென்றே உள்ள மங்கை தெரிகின்றாள் குழந்தையோடு செடிகளின் மறைவில் நன்றாய்!!

***

குழந்தைக்குக் கொடியின் - அருமை தெரிவதில்லை; விளையாட்டாகக் கொடியினை அறுத்துவிடுகிறது. பாசம் காரணமாகத், தாயோ, கோபிக்க முடிவதில்லை. கொடியினைப் பாங்காக வளர்த்தவனோ, அது பாழ்படுத்தப்படுவது கண்டு பதறத்தான் செய்கிறான்; எனினும், அன்பின் அருமை அவனையும் தன் வயப்படுத்தவே, அவனும் கொடி அறுத்தேனும் குழந்தை குதூகலம் அடையட்டும் காண்போம்; கொடியினில் கொத்துக் கொத்தாக "அவரை' இருந்திடக் காணும்போது ஏற்படும் களிப்பை மிஞ்சும் களிப்பன்றோ காண்கின்றோம், இந்தக் குழந்தை கன்னத்தில் குழியும் விழ, "களுக்'கெனச் சிரிக்கும்போது என்று எண்ணுகிறான்.

கள்ளம் கபடமற்ற நிலை குழந்தைக்கு. எனவே கொடியினை அறுத்திட்டாலும், மூண்டிடும் கோபம் தன்னை அடக்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் வேண்டுமென்றே ஒருவன் கொடியினை அறுத்தால், மனம் எத்தனை வேதனைப்படும்!!

விவரமறியாமல், விளைவு தெரியாமல், சிலர் நல்ல காரியத்தைக் கெடுத்துவிடுகிறார்கள். அவர்தம் குறையறிவு கண்டு இரங்குகிறோம். வேறு சிலரோ, வேண்டுமென்றே, நாசம் உண்டாக்கும் நோக்குடனேயே, கொடியினை அறுத்திடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கொடிகளை அழித்து விட்டேன். துண்டு துண்டாக்கி விட்டேன் என்று அவர்கள் கைகொட்டிச் சிரிப்பர்! அவர் செயலுக்குப் பரிவு காட்டிப் பாராட்டவும் சிலர் முன் வருவர். ஆனால், கொடி படரக் கண்டு மகிழ்ந்தவன் மனம் என்ன பாடுபடும்! அவனல்லவா, படர்ந்துள்ள கொடியின் அருமை அறிந்தவன். அவன் மனமன்றோ அனலிடைப் புழுவெனத் துடிக்கும், அழிவு வேலை செய்திடுவோனைக் காணின்.

ஆக்கத் தெரியாவிட்டாலும், அழிக்காமலாவது இருக்க வேண்டும் - என்பதைப் பாடமாக்கவே, இதனைச் சொன்னேன்.

விவரமறியாதாரின் செயலால்கூட, அழிவு நேரிடுவது உண்டு - குழந்தை கொடி அறுத்ததுபோல!

அது கண்டு, கோபம் எழும்; ஆயினும் அடங்கும், கெடுமதி யுடையோர் கொடி அறுத்திடுவதுபோன்ற தீய செயலில் ஈடுபட்டால், உலகம் மன்னிக்காது!!

விவரமறியாதார், கொடி அறுத்திடுவதுபோன்ற அழிவு வேலையில் எவரேனும் ஈடுபட்டால், கதையில் வரும் குழந்தையைக் கொடிக்கு உரிமையாளன், முதலில் கோபித்துக் கொண்டான் எனினும், பிறகு, பரிவு காட்டினான் அன்றோ, மன்னித்து; அதுபோன்றே; அருமை அறியாமல், விவரம் தெரியாதார் கேடுடைச் செயலே புரியினும், அது கண்டு, நமக்குக் கோபமே எழினும், அதனை அடக்கிக்கொள்வதும், நீக்கிக் கொள்வதுமே முறை என்பதை விளக்கத்தான் இந்தக் கதை!

எது கொடி? எது குழந்தை? என்றெல்லாம் கண்டுபிடிக்கும் காரியத்திலே வீணாக ஈடுபட வேண்டாம், தம்பி! பொதுவாகச் சொல்கிறேன், எந்தத் தனிப்பட்டவர்களையோ எண்ணிக் கொண்டு அல்ல.

சிலருக்குத் தாம் செய்யும் காரியம், இப்படிப்பட்டது என்ற உணர்வு ஏற்பட்டு, வெட்கம் பிறந்தால் நல்லதுதான். ஆனால், ஆசை வெட்கமறியாது என்று அன்றே சொல்லியிருக்கிறார்களே!!

***

நாம் வாழ்ந்த கதை; இன்று வீழ்ந்துகிடக்கும் வேதனை; இதனை மாற்ற நாளை நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கை; இவைபற்றி எல்லாம் கூறிடுவாய், கேட்டிடலாம், கருத்துப் பெற்றிடலாமென்று நான் நினைத்தால், நீ என்னண்ணா! குருவிக் கதையும், கொடி அறுத்த குழவி கதையும் சொல்கிறாயே; நமை அழிக்க எண்ணி, ஆளும் கட்சியிலுள்ளோர். இலட்ச இலட்சமாக "நிதி' திரட்டிக் குவித்தபடி உள்ளனர்; நீயும் கொண்டு வருகிறாய் 101 காசு, 501 காசு, 2001 காசு என்று! - என்றுதானே, தம்பி! கோபம். கோபம் கொள்ளாதே!! இன்னொரு கதை கூறுகிறேன், கேள்.

வயலிலே படர்ந்திருந்தது பூசுணைக்கொடி! பெரிய, பளபளப்பான, பூக்கள், கொடியினில் பொன் நிறம்! கண்கவர் வனப்பு!!

வயலின் ஓரத்தில், வரப்பைத் தன்னிடமாக்கிக்கொண்டு, வளர்ந்திருந்தது ஒரு மகிழ மரம். சின்னஞ்சிறு பூக்கள். அதிலே! உற்றுப் பார்த்தாலொழியக் கண்ணுக்குத் தெரியாது அவ்வளவு சிறுசு!!

கீழே "பூசுணை'ப் பூ! மகிழம் பூவைப் பார்த்து கேசெய்வதுபோல், மலர்ந்து இருக்கிறது. காற்றடிக்கிறது! பூசுணைப் பூவின் இதழ்கள் அசைகின்றன! வா! வா! சின்னஞ் சிறு மகிழம்பூவே! என்னைப் பார்! என் அழகைப் பார்! நீயும் இருக்கிறாயே பூவென்ற பேருடனே பூனைக்கண் அளவுக்கு - என்று கேலி செய்வதுபோல, அசைந்து ஆடுகின்றது.

மகிழம் பூக்கள், காற்றடித்ததும் உதிருகின்றன கீழே!

கொடியிலிருந்து பூசுணைப்பூ அறுந்துபோகவில்லை காற்றால். மகிழம் பூக்களோ, குவியல் குவியலாக உதிர்கின்றன மரத்தடியில்.

இவ்வளவுதான் உன் வாழ்வு! இவ்வளவுதான் உன் வலிவு! ஒரு காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கேபேசுகிற து பூசுணைப்பூ. இது காலையில் தோன்றிய காட்சி! கொடியிலே கொலுவிருக்கும் பூசுணைப்பூ!

குப்பையுடன் குப்பையாகக் கிடக்கும் மகிழம்பூ!

மாலை! வயலை ஒட்டியுள்ள வீட்டில் வாழும் "வண்ணக்கிளி' வீதியிலே இருந்த, சாணி உருண்டையை வழித்தெடுத்து, வறட்டியாகத் தட்டுகிறாள், சுவரினிலே!! தம்பி! சாணியுடன் என்ன என்கிறாய்? காலையிலே களிநடமாயிற்றே, அதே பூசுணைப் பூதான்! ஆமாம். மார்கழி மாதம், வீட்டெதிரே. சாணி உருண்டைமீது பூசுணைப் பூவை அழுத்தி வைப்பர், கண்டதுண்டு அல்லவா?

கர்வம் கொண்ட நிலையில், என்னைப் பார்! என் அழகைப் பார்! காற்றும் பிய்த்திட முடியாத என் வலிவைப் பார்! பளபளப்பைப் பார்! அளவு பார்! நீயும் இருக்கிறாயே பூனைக் கண் அளவு என்று கேலி பேசும் நிலையில் இருந்ததல்லவா பூசுணைப்பூ! அதற்கு நேரிட்ட கதியைக் கண்டனையோ? அதைப் பறித்தெடுத்த பாவை, சூட்டிக்கொண்டனளோ, கார் குழலில்! இல்லை! கோயிலுக்கு உகந்ததெனக் கருதி, அங்கு அனுப்பினானோ? அதுவும் இல்லை! வேறு எங்கு சென்றது பூசுணைப்பூ? சாணி உருண்டைமீது!

அளவு பெரிது! பளபளப்பு மிகுதி! பொன் நிறம்! எல்லாம் எதற்குப் பயன்பட்டது? சாணி உருண்டைக்குச் "சால்வை'யாக!!! இந்த இடம் போய்ச்சேரத்தான், இத்தனை "வாயாடி'த்தனமும், பயன்பட்டது. காலை முதல் சாணி உருண்டைமீது இருந்தது; மாலையோ, சுவரிலே, தட்டப்பட்டுக் காய்கிறது "வறட்டியாக'.

பூசுணைப் பூவைப் பறித்தெடுத்து, சாணி உருண்டைக்குப் போர்வையாக்கி, பிறகு, வறட்டி தட்டிடும், பெண்ணின் தலையிலே, என்ன தெரியுமா? மகிழம்பூ மாலை!! ஆமாம், தம்பி! கீழே உதிர்ந்துகிடந்த மகிழம் பூவேதான்! அளவு, சிறியது! பளபளப்பும் இல்லை! உதிர்ந்துதான் கிடந்தது, மரத்தடியில், மண்பரப்பில்! பூசுணையால், கேலிப் பொருளாகக் கருதப்பட்ட பூனைக்கண் அளவுள்ள, மகிழம்பூ! அதற்கு எது இடம்? சாணி உருண்டை அல்ல! மாதின் கூந்தல்!!

பூசுணை அளவு பெரிது, பளபளப்பு மிகுதி - ஆனால் மணம் ஏது?

மணமற்றது, சாணி உருண்டைக்குத்தான் ஏற்றதாயிற்று!

மகிழம்பூவோ மணம் உள்ளது; அளவு கிடக்கட்டும்; வண்ணம் கிடக்கட்டும்; எனவேதான், அது மாதின் கூந்தலிடம் சென்று அணியாயிற்று!!

அதுபோலத்தான், தம்பி, காங்கிரசிடம் சேரும் பணம். பெரிய அளவுள்ள பூசுணைப்பூ! பளபளப்பு உண்டு, மணம் இல்லை! அளவு பெரியது, ஆயின் அணிவார் இல்லை. சாணிக் கென்று பூசுணைப்பூவைப் பயன்படுத்துவதுபோல், காங்கிரசிடம் குவியும் நிதியும், அசங்கியமான காரியத்துக்குத்தான் பயன்படப் போகிறது! நல்ல காரியத்துக்கு அல்ல. மணம் தர அல்ல.

நம்மிடம் வந்திடும் 101, 1001, 2001 இவைகள், உதிர்ந்து கிடக்கும் மகிழம்பூக்கள், சாணிக்கு அல்ல; மணம் அளிக்க!

இப்படித்தானா அண்ணா, மனதுக்குச் சமாதானம் தேடிக்கொள்வது!! - என்று கேட்பாய்; தெரியும் எனக்கு.

காங்கிரஸ் பெருந்தலைவர்கள், கேட்ட உடனே, ஆயிரம் பத்தாயிரம் என்று அள்ளித் தருகிறார்கள் சுளை சுளையாக!!

பெறுபவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு! தருபவர்களுக்கு அத்துணை அன்பு! தெரியவில்லையா? - என்று கேட்கிறாய், சரி! கோடிவீட்டுக் கோபாலப் பிள்ளையின் கருப்பு ஆடு, கதை தெரியுமா உனக்கு? தெரிந்திருந்தால், காங்கிரசுக்கு ஆயிரம், பத்தாயிரம் என்று பணம் குவிவதுபற்றி வியந்து பாராட்ட மாட்டாய். கேளேன் அந்தக் கதையையும்.

மாரியம்மன் திருவிழா தடபுடலாக! ஊர்வலம் முடிந்து, அம்மனை உள்ளே கொண்டுபோகும், நேரம். "ஓஹோ!'' என்று ஓங்காரக் கூச்சலிட்டான், அருணாசலம்! வந்துவிட்டாள் அம்மன்!! - என்று கூறி வணங்கி நின்றனர் பக்தர்கள். ஆவேசம் வந்துவிட்டது அருணாசலத்தின்மீது! அதுவரை ஊரார் பார்த்ததில்லை அவ்வளவு "உக்கிரமான' ஆவேசத்தை.

"அம்மா! தாயே! அங்காள பரமேஸ்வரி! அடியாரை இரட்சிக்க வேண்டுமம்மா!'' - "சிலம்புப் பாட்டு' பாடுகிறான் பூஜாரி! ஆவேசமாடிடும் அருணாசலமோ குதிக்கிறான், உடலை நெளிக்கிறான், கண்களை உருட்டுகிறான், புருவத்தை நெரிக்கிறான், பற்களை நறநறவெனக் கடிக்கிறான். சிறுவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். பெண்களுக்குப் பெரும் பீதி. முதியவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

"எள்ளளவு கோபமும் எங்கள்மேல், வேண்டா மம்மா! என்ன நீ, கேட்டிட்டாலும் இப்போதே தருவோம் அம்மா; எல்லையைக் காத்து நிற்கும், எங்கள் குலதேவி அல்லோ!''

பாடலை பூஜாரி, உருக்கமாகப் பாடிவிட்டு, அம்மனைக் கேட்கிறான், "என்ன குறை, கூறம்மா?' என்று. "போட்டாயடா பூஜை! போட்டாயடா! போடுகிறேன் என்று முன்னம் சொன்னபடியே.''

அம்மன் என்ன! பூஜாரிக்குச் சளைக்குமா? பாடுகிறது!!

"என்ன பூஜையம்மா! எங்களிடம் கூறுமம்மா! கோழிகொண்டுவந்து, குடலெடுத்து மாலையாக்கிக் கொண்டாடச் சித்தமம்மா! கோபம் வேண்டாம் தாயே!''

"வேண்டாண்டா கோழி''

"ஆடு அறுக்க வேண்டுமென்றால், ஆகாது என்றா சொல்வோம், அம்மா உன் ஆசை என்ன? அறியச் சொல்லுமம்மா!''

"ஆடுதாண்டா வேணும்''

"ஆகட்டும், தாயே! ஆடு "காவு' கொடுக் கிறோம்!''

"சாதாரண ஆடு அல்லடா! வெள்ளாடு வேணும் - வெள்ளாடு''

"வெள்ளாடு கொண்டுவந்து வேண பூஜை செய்வோம், தாயே!''

"வெள்ளாடு வேண்டும்டா - கருப்பு நிறத்திலே. காலரா நோயைக் கொண்டுவர, காத்திருக்கிறா, மொள்ளைமாரி! உயிர் பிழைக்க வேணுமென்றால், உடனே வேணும் கறுப்பாடு.''

"கருப்பாடு வாங்கிவர கணநேரம் தாருமம்மா.''

"வேணாம்! சந்தையிலே இருக்கற ஆடு வேண்டாம்டா, சண்டாளப் பசங்களா; கோடி வீட்டுக் கோபாலப் பிள்ளையிடம் இருக்கிறதே, கருப்பு வெள்ளாடு, அதுதான் "காவு' கொடுக்கணும். இல்லையானா, காலரா நோய் வந்து, ஊரே சுடுகாடாகும். மொள்ளைமாரி, என்னைத் தகிக்கிறா! இப்பவே கோபாலப் பிள்ளை வீட்டு ஆட்டை அறுத்து, அந்த இரத்தத்தைக்கொண்டு எனக்கு அபிஷேகம் செய்யணும். மறந்திங்க, தொலைஞ்சிங்க. மலை ஏறிப் போறேண்டா. மாரியம்மா, நானேதான்.''

அம்மன் "பழம்' சாப்பிட்டுவிட்டு மலையேறிவிட்டது.

ஊர்ப் பெரியவர்கள் சென்று, "அம்மன்' சொன்னதைக் கூறி, எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், கோடிவீட்டுக் கோபாலப் பிள்ளையுடைய கருப்பு வெள்ளாட்டை இழுத்து வந்து, குளிப்பாட்டி, "காவு' கொடுத்தார்கள்.

இந்தக் கதைக்கும் காங்கிரஸ் பெருந்தலைவர்களுக்கும், ஆயிரம் பத்தாயிரம் என்று பணம் பலர் கொடுப்பதற்கும், என்ன சம்பந்தம்? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அது விளங்க, பழைய சம்பவம் ஒன்று கேள், தம்பி!

ஆவேசமாடிய அருணாசலம், கோடி வீட்டுக் கோபாலப் பிள்ளையிடம், ஆட்டுப் பால், கேட்டான் ஒரு நாள் மருந்துக்காக ஆழாக்கு. இல்லை போ! என்று விரட்டிவிட்டார். கோபம், அருணாசலத்துக்கு; "பார்த்துக்கொள்கிறேன் உன்னை ஒரு ஆழாக்குப் பால் தர முடியாதுன்னு சொன்னேயல்லோ, இரு! இரு! நீ, பதறப் பதற, உன்னோட கருப்பு ஆட்டை, "காவு' கொடுத்துவிட்டு, மறுவேலை பார்க்கிறேன்'' - என்று கருவிக் கொண்டான்.

மாரியம்மா திருவிழா வந்தது; ஆவேசம் ஆடும் வாய்ப்பைத் தேடிக்கொண்டான்; காரியத்தை முடித்துவிட்டான்.

சாதாரண அருணாசலம் ஆழாக்குப் பால் கேட்டபோது கிடைக்கவில்லை.

ஆவேசம் ஆடினான். ஆடே வெட்டப்பட்டது, "காவு' கொடுக்கப்பட்டது.

தம்பி! பதவி ஆவேசமாடிக்கொண்டல்லவா, பணக்காரர் களிடம் போகிறார்கள், காங்கிரஸ் பெரிய தலைவர்கள் - ஆவேசம் ஆடிய அருணாசலம்போல! அதனால் கிடைக்கிறது ஆயிரம், பத்தாயிரம்! அன்புக் காணிக்கை அல்ல!! அச்சத்தைப் போக்கிக்கொள்ள, ஆபத்தைத் தடுத்துக்கொள்ள ஆகின்ற "செலவு.''

சிரிக்கிறாயே தம்பி! சிந்தித்துப் பாரேன், நான் சொல்வதிலே உள்ள பொருள் விளங்கும்.

மரங்கொத்த நினைக்கும் குருவி, கொடி அறுக்கும் குழந்தை, மாலையாகும் மகிழம்பூ, கோடிவீட்டுக் கருப்பு ஆடு எனும் இவையாவும், தரும் கருத்தினை எண்ணிப்பார், தம்பி! சுவை கருதி மட்டுமல்ல, பயன் கருதி!!

இதிலென்ன இருக்கிறது! மதுரைக்குத்தான் வரப் போகிறாயே, சுவையும் பயனும் பெற, தர.

அதற்கான ஏற்பாட்டிலே ஈடுபட்டிருக்கும் வேளை இது. அதிகம் எழுதி, அதற்குக் குந்தகம் ஏற்படுத்தலாமா? திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்.

அண்ணன்,

2-7-61