அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கோட்டை வெளியில்...

வேதனை வாழ்க்கை எத்தனை காலத்துக்கு?
மக்களே தலைவர்களைத் தயார் செய்யும் நிலை!
வரி கொடுத்தோமே, வாழ்வு கொடுத்தாயா?
எங்களுக்குத் தேவை சோஷியலிசம்: ஜோடனை யிசமல்ல!
டாட்டா பிர்லா கூட்டாளி-பாட்டாளிக்குப் பகையாளி!
வேலை மிகுதி; நேரமோ குறைவு!
குடும்பத்தோடு கூடுவோம் கோட்டை வெளியிலே!

தம்பி!

இந்தக் கிழமையும் உன்னுடன் அளவளாவ இயலாத நிலை நீடிக்குமோ என்று அஞ்சிக் கிடந்தேன்; ஆனால், ஓய்வும் உட்கொண்ட மருந்தும் தக்கபடி வேலை செய்ததால், உடல்நலக் குறைவு வேகமாகக் குறைந்துவிட்டது. கழக இதழ்களில் காணக் கிடைக்கும் செய்திகள், எத்தனை சுறுசுறுப்புடனும் விறுவிறுப்பாகவும் பிரச்சாரப் பணி நடைபெற்று வருகிறது என்பதனை எடுத்துக்காட்டுகின்றன. இந்த மாமருந்து புதிய தெம்பினை அளிக்கத் தவறுமா?

வேலை மலைபோல! நாட்களோ அதிகம் இல்லை. இந்நிலையில் என் முழுப் பங்கினைச் செலுத்தியாக வேண்டும். அதற்குத் தக்கவிதமாக என் உடல்நிலை அமைய வேண்டுமே என்பதே இன்று எனக்குள்ள கவலை. கவலை மட்டுமல்ல, தம்பி! வெட்கம்கூட!! எங்குச் சென்றிடினும் தோழமை! எப்பக்கம் திரும்பிடினும் பேராதரவு! சிற்றூர்களிலெல்லாம் உன்னதமான உற்சாகம்! எங்கிருந்துதான் பணம் திரட்டுவார்களோ; எத்தனை இன்னலோ தொல்லையோ? என்றாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்த வட்டத்திற்கே தனிச் சிறப்பளிக்கத்தக்க விதமாக அமையும்படி ஏற்பாடு செய்கிறார்கள் கழகத் தோழர்கள். எடுத்துக் கூறிடும் கருத்துக்களைத்தான் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்! காங்கிரஸ் எதேச்சாதிகாரம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதிலே எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்; உறுதி தெரிவிக்கிறார்கள்! நாடு கொண்டுள்ள இந்தக் கோலத்தை நித்த நித்தம் காண வேண்டும்! ஒரே நாளில் பல காண வேண்டும்!! ஓய்வு ஒழிச்சலின்றிக் காண வேண்டும் என்ற துடிப்பு எனக்கு. அதற்குத் தக்கவிதமாக உடல் நிலை அமையவேண்டுமே; இல்லையே என்பதை எண்ணும்போது என்மீதே எனக்குக் கோபம்.

தேவை மிகுதியாக இருக்கிறது; உணருகிறேன். அந்த உணர்வு, உடல் நலத்தைச் செம்மைப்படுத்திடும் என்றும் நம்புகிறேன். இல்லையென்றால், சென்ற கிழமை ஏற்பட்ட உடல்நலக் குறைவு இவ்வளவு வேகமாகக் குறைந்திருக்க முடியாது!

நமது கூட்டங்களில் எடுத்துக் கூறப்படும் கருத்துக்கள், பெரிதும் நாட்டு நலிவு, ஆட்சியாளர் மூட்டிவிட்ட அவதிகள், மக்களை அலைக்கழிக்கும் தொல்லைகள் என்பவைகளைப் பற்றித்தான். மக்கள் உள்ளத்திலே குமுறிக் கொண்டுள்ள "வேதனை' பற்றித்தான் நாம் எடுத்துக் கூறுகிறோம்; மனதுக்கு மகிழ்ச்சி தரத்தக்க விஷயங்களை அல்ல!!

சில வேளைகளில் எனக்கு ஒரு ஐயப்பாடு எழுவதுண்டு; இப்படி வேதனைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோமே, கேட்கும் மக்களுக்கு ஒரு கசப்புணர்ச்சி ஏற்பட்டு விடாதா, தொல்லையும் துயரமும் தரத்தக்க பேச்சினைத்தானா கேட்க வேண்டும் என்ற ஒரு சலிப்புணர்ச்சி ஏற்பட்டுவிடாதா என்ற ஐயப்பாடு.

ஆனால், நமது மக்கள், வேதனை பற்றிய பேச்சினை நாம் விடாது எடுத்துக் கூறிடுவது கேட்டு, கசப்போ சலிப்போ கொள்ளாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் தெரிந்த பிறகு, எனக்கு இருந்த ஐயப்பாடு போய்விட்டது. என்ன அந்தக் காரணம் என்றால், தம்பி! மக்கள்,

வேதனைகளைப் போக்கிக்கொள்ள முடியும்
வேதனை மூட்டியவர்களை விலக்கிட முடியும்
புதியதோர் வாழ்வினை நாம் பெற்றிட முடியும்
அதற்கான திறமையும் உரிமையும் தமக்கு உண்டு

என்ற நம்பிக்கையுடன் இருப்பதுதான் காரணம். அதனால் தம்பி! அவர்களுக்கு, திரும்பத் திரும்ப நாம் கூறுவதைக் கேட்டிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தந்தபடி இருக்கிறது.

மக்கள் சிந்திக்கிறார்கள், மிகத் தீவிரமாக. பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்கிறார்கள் - வேதனை தாக்குகிறது தத்தளிக்கிறோம், ஆனால், எத்தனை காலத்துக்கு? ஏன்? இதற்கு ஒரு முடிவே கிடையாதா? பரிகாரமே கிடையாதா? மாற்றமே கிடையாதா? என்ற கேள்விகள் கிளம்பிக் கிளம்பி, மக்களிடம் இன்று ஓர் புதிய உறுதியை எழச் செய்துவிட்டது. அந்த உறுதியைத் தம்பி! அவர்களின் கண்ணொளியும், முழக்கமும் எடுத்துக் காட்டுகின்றன.

வேதனை நாளாகவாகக் குறையும் மறையும் என்று எண்ணிப் பல காலம் பொறுத்துக் கொண்டனர். பொழுது புலரும், புதுவாழ்வு மலரும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். ஆளவந்தார்களும் அந்த நம்பிக்கையை ஊட்டியபடி இருந்தனர். உழுதுவிட்டோம், விதை தூவப் போகிறோம்! விதை தூவிவிட்டோம், அறுவடை காணப் போகிறீர்கள்! - என்று வாக்களித்தபடி இருந்தனர். நல்ல காலம் பிறந்திடப் போகிறது, அதோ நம்பிக்கை நட்சத்திரம் எழுந்துவிட்டது, காணீர்! - என்று கூறியபடி இருந்தனர்.

பொறுத்துக்கொள்ள வேண்டிய அளவு பொறுத்துக் கொண்டாகிவிட்டது;

காத்துக் கொண்டிருக்க வேண்டிய அளவு காத்துப் பார்த்தாகி விட்டது.

நிலைமையைத் திருத்துவார்கள் என்று நம்ப வேண்டிய அளவு நம்பிப் பார்த்தாகி விட்டது:

இனி இவர்களை நம்பிக் கிடப்பதில் பயனில்லை. நமக்கு வந்துற்ற வேதனையைப் போக்கிக்கொள்ள நாமாகத்தான் முயற்சி எடுத்தாக வேண்டும் என்ற உறுதியுடன் இன்று மக்கள் உள்ளனர்.

வேடிக்கை அல்ல, தம்பி! உண்மையான நிலைமை இன்று என்னவெனில், மக்கள் தயாராக உள்ளனர், உறுதியுடன் உள்ளனர், ஆட்சியிலே ஒரு மாற்றம் கண்டிட. மக்களுடன் தொடர்பு கொண்டுள்ள தலைவர்களே இன்று, தயாராக வேண்டும், மக்களை அணிவகுத்து அழைத்துச் செல்ல.

ஒரு வேடிக்கைச் சித்திரம் பார்த்த நினைவு வருகிறது.

குதிரைப் பந்தயம் நடைபெறுகிறது.

பல குதிரைகள் போட்டியிட்டு ஓடுகின்றன.

மிக வேகமாக ஓடிய ஒரு குதிரைமீது அமர்ந்திருந்தவன் கீழே விழுந்து விடுகிறான்.

இலக்கு இருக்கும் இடம் நெருங்குகிறது. குதிரை, தன்மீது ஆள் அமர்ந்தில்லை என்ற காரணம் காட்டி, பந்தயத்தில் வெற்றி பெறவில்லை என்று கூறிவிடுவார்களோ என்று கவலைப்படுகிறது.

கவலை காரணமாக, ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை.

ஓட்டத்துடன் ஓட்டமாக, பந்தயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை நோட்டம் பார்க்கிறது.

ஒரு ஆளை வாயால் கவ்வித் தூக்கித் தன் முதுகின் மீது அமரச் செய்கிறது.

இலக்கை வந்து அடைகிறது, வெற்றிப் பரிசு கிடைக்கிறது!!

இலக்கை நோக்கி வேகமாக ஓடிவரும் புரவி, தன்னைச் செலுத்துபவன் ஒருவனையும் தூக்கிச் செல்வதுபோல இன்று விழிப்புற்ற, எழுச்சி பெற்ற மக்கள் நிலை இருக்கிறது. தலைவர்கள், மக்களைத் தயார் செய்வதற்குப் பதிலாக, இன்று மக்கள், தலைவர்களைத் தயார் செய்கின்றனர், துரிதப்படுத்து கின்றனர், தீவிரப்படுத்துகின்றனர்.

நம்மாலே ஆகுமா என்ற இழுப்புப் பேச்சு இன்று மக்களிடம் இல்லை; நாம்தான் செய்தாக வேண்டும் என்ற உறுதி மிகுந்து காணப்படுகிறது.

வேதனைகளைத் தாங்கித் தாங்கி இனித் தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மாற்றம் கண்டாக வேண்டும் என்ற உறுதிகொண்டுவிட்டனர் மக்கள். எப்போது?

இந்த வேதனைகளுக்கான காரணம் கேளீர் என்று துவங்கி, ஆளவந்தார்கள் கூறியவைகளைக் கேட்ட பிறகு!

காரணம் எதுவும் பொருத்தமாக இல்லை; விளக்கம் போதுமானதாக இல்லை என்பதைக் கண்டறிந்தான பிறகு!

அன்புரை தருவதற்குப் பதிலாக ஆட்சியினர் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதைக் கண்டு மனம் வெதும்பிய பிறகு!

தேனும் பாலும் ஆறாக ஓடும் என்று காங்கிரசார் ஆளவந்தார் களாவதற்கு முன்பு கூறினர்; மக்கள் விவரமறியாதவர்கள் அல்ல; தேனும் பாலும் ஏன் ஆறாக ஓடவில்லை என்று ஆளவந்தார்களான காங்கிரசாரைக் கேட்கவில்லை. கண்ணீரும் இரத்தமும் பீறிட்டுக் கொண்டு வரும் நிலையையாவது மூட்டிவிடாமல் இருக்கக்கூடாதா என்றுதான் இன்று கேட்கின்றனர். தேனும் வேண்டாம், பாலும் வேண்டாம், சோறும் மோரும் போதும், அதுவாவது தரக்கூடாதா என்று கேட்கின்றனர். அடிப்படைத் தேவைகளை மட்டுமே கேட்கின்றனர்! அளவற்ற போக போக்கியத்தை அல்ல.

அதுவும், இதற்குமுன் என்றுமே கொடுத்திராத அளவு வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, இந்த அடிப்படைத் தேவைகளைக் கேட்கின்றனர்.

உண்மையைச் சொல்லுவதானால் தம்பி! வெள்ளைக்காரன், இன்று காங்கிரசாட்சி வசூலிக்கும் வரிப்பணத்தின் அளவைக் கேட்டு, ஆச்சரியத்தால் மூர்ச்சித்துக் கீழே விழுவான்! அவ்வளவு பெரிய அளவு வரிப்பணம் கிடைக்கிறது! வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி ஏழை எளியவர்கள் கொட்டிக் கொடுக் கிறார்கள். தொட்டதற்கெல்லாம் வரி! தொடர்ந்து வரி! சுமை ஏறியபடி இருக்கிறது! விதவிதமான வரி! எல்லாம் ஏழையின் முதுகெலும்பை முறிக்கத்தக்க விதமான வரிகள்.

பொதுமக்கள் புள்ளி விவரம் தெரிந்து கொள்ளாமலிருக்கலாம்; முன்பு இருபது கோடிக்கும் குறைவாகவே வரி கொடுத்து வந்தோம்; இப்போது இருநூறு கோடி அளவுக்குக் கசக்கி எடுத்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையை உணருகிறார்கள், தமது வாழ்க்கையிலே ஏறிவிட்டுள்ள சுமையின் அழுத்தத்தைக் கொண்டு.

பொருளாதாரத் துறையின் அரிச்சுவடி அளவு அறிந்தவர்களும், வரி வகையில், ஏழை மக்களை வாட்டி வதைக்கக் கூடியது மறைமுக வரி என்பதை அறிவர்.

பண்டங்களின்மீது விதிக்கப்படும் விற்பனை வரி,

இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின்மீது விதிக்கப்படும் சுங்க வரி

போன்ற மறைமுக வரிகள், காங்கிரசாட்சி ஏற்பட்ட பிறகு, எத்தனை வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதையும் எத்தனை பெரிய அளவு ஆகிவிட்டிருக்கிறது என்பதையும் கணக்கெடுத்துப் பார்த்தால், இந்த ஆட்சி நடத்திடும் கொடுமையின் வகை விளங்கிடும்.

இந்த மறைமுக வரிகள் மூலம் இந்தியப் பேரரசு 1964-65-ம் ஆண்டிலே மட்டும் பெற்றுள்ள தொகை 1,247 கோடி ரூபாய்.

இவ்வளவும், ஏழைகள் எப்பாடுபட்டேனும் வாங்கித் தீரவேண்டிய பண்டங்களின்மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் கிடைக்கிறது.

அதே ஆண்டில், சீமான்கள் கட்டிய வருமான வரியின் தொகை எவ்வளவு? 294 கோடி ரூபாய்.

இதுதான் தம்பி! காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம்.

ஏழை கட்டும் தொகை 1,247 கோடி; பணக்காரன் கட்டுவது 294 கோடி!!

ஏழையால், வரியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது; அவன் வாங்கித் தீரவேண்டிய பண்டங்களின்மீது வரி, மறைமுகமாகச் சேர்க்கப்பட்டிருப்பதால்.

ஏழை வாங்கித் தீரவேண்டிய கிரசின் எண்ணெய்க்காக அவன் தரும் பணத்தில் 45 சதம் வரியாகிறது!

ஏழை வாங்கிடும் சர்க்கரைக்காகக் கொடுக்கும் பணத்தில் 50 சதம் வரியாகிறது!

ஏழை பயன்படுத்தும் தீக்குச்சிக்காகத் தந்திடும் பணத்தில் 62 சதம் வரியாகிறது!

ஏழை வாங்கியாக வேண்டிய ஒவ்வொரு பண்டத்துடனும் இந்த மறைமுக வரி சேர்ந்திருக்கிறது.

அப்படி ஏழை கொட்டிக் கொடுக்கும் தொகை 1,247 கோடி! அதைக் கூசாமல் பெற்றுக்கொண்டுதான் காங்கிரசாட்சி கூவுகிறது, தனது திட்டம் ஜனநாயக சோஷியலிசம் என்று.

சில நூறு கோடி ரூபாய் அளவுக்கும் ஏறாமலிருந்த இந்த மறைமுக வரியை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றிவிட்டு, காங்கிரசாட்சி ஏழையின் வாழ்க்கையை உயர்த்துவதாகவும் பேசுகிறது; மறுத்தால் உருட்டி மிரட்டிப் பார்க்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல், மறைமுக வரி கொடுக்கத் தக்க விதமாக ஏழையின் வாழ்வு காங்கிரஸ் ஆட்சியினால், உயர்ந்துவிட்டதா, செம்மைப்பட்டு விட்டதா? என்று பார்த்திடின், தம்பி! முன்பு இருந்து வந்ததைவிட ஏழையின் வாழ்வு செல்லரித்துக் கிடப்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றன.

ஜெயப்பிரகாச நாராயணன், தேபர் போன்றார் இதற்குச் சான்றளித்துள்ளனர்.

வினோபா பாவே, மனம் குமுறி இது குறித்துப் பேசியிருக்கிறார்.

பொருளாதாரத் துறையின் ஆய்வாளர்கள் இதனைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

மற்ற இடங்களுக்குச் செல்வானேன், சர்க்காரே புள்ளி விவரம் தந்திருக்கிறது, நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய அறிக்கையுடன் இணைத்து.

430 இலட்சம் மக்கள் - தினம் 30 பைசா
430 இலட்சம் மக்கள் - 42 பைசா
460 இலட்சம் மக்கள் - 51 பைசா
430 இலட்சம் மக்கள் - 59 பைசா

பெற்று வாழ்ந்து வருவதாக!

பெற்றுவரும் வரிப்பணத்தின் அளவு என்ன? அதைக் கொண்டு மக்களின் வாழ்க்கையை எந்த அளவு செம்மைப்படுத்த முடிந்தது? என்று கேட்டால், கடுங்கோபம் பீறிட்டுக் கொண்டு வருகிறது காங்கிரசாருக்கு. பணக்காரனை மட்டும் விட்டு விட்டோமா? வரி போடுகிறோமே! என்கிறார்கள். எவ்வளவு என்று கேட்டால் 294 கோடி என்று கணக்களிக்கிறார்கள். ஏழைக்கு ஆயிரம் கோடிக்கு மேல்! பணக்காரனுக்கு அதிலே கால்தானா என்றால், ஆமாம்! அப்படித்தான்!! என்று அடித்துப் பேசுகிறார்கள்.

பணக்காரர்களுக்குப் போடும் வரித் தொகையையாவது சரியான முறையிலே வசூலித்துக்கொண்டு வருகிறார்களா? - என்று கேட்டால், கொஞ்சம் "நிலுவை' இருக்கிறது என்கிறார்கள். எவ்வளவு இருக்கும் அந்த நிலுவை என்று கேட்டால், ஒருவர் 300 கோடி இருக்கும் என்கிறார், இன்னொருவர், 500 கோடி இருக்கும் என்கிறார், வேறொருவர் ஆயிரம் கோடிக்குக் குறையாது என்கிறார்.

ஏழையால் ஒரு ரூபாய் வரியைக் கொடுக்காமல் தப்பித்துக்கொள்ள முடியாது. பணக்காரர்கள் பல நூறு கோடி ரூபாய் வரிப்பணத்தைச் செலுத்தாமலே காலத்தை ஓட்ட முடிகிறது. இதுதான் காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம்.

இதனை மெத்தத் தெளிவாக விளக்குவதுபோல இந்த ஆட்சியினர், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முதலாளி செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையை 30 இலட்ச ரூபாய் அளவு - தள்ளுபடி செய்துவிட்டனர்.

காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசத்தின் கனியைச் சுவைத்த இந்த முதலாளி ஒரு காங்கிரஸ்காரர், பிரமுகர்!!

ஒரு விளக்கம், ஒரு சமாதானம் கூற வேண்டுமே, இந்த அக்ரமத்துக்கு! கிடையாதே! ஆமாம்! அப்படித்தான்!! என்று அடித்துப் பேசுகின்றனர், ஆளவந்தார்கள்! யார் கேட்க முடியும் என்ற துணிவுடன்; என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவத்துடன்.

அவரால் வரித் தொகையைக் கட்ட இயலவில்லை யாம்!! ஏழையால் மட்டும் வரிச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடிகிறதா?

முடிகிறதே!
எப்படி?
கடன்படுகிறான்!
எவ்வளவு?
ஆய்வாளர்கள் தந்துள்ள கணக்கின்படி, விவசாயக் குடும்பத்தினர் பட்டுள்ள கடன் தொகை மட்டும் 2,789 கோடி ரூபாய்!

ஆக, காங்கிரசாட்சியில் பணக்காரன் வரி கட்ட மாட்டான்; தள்ளுபடி செய்துவிடப்படும்! ஏழை கடன் பட்டாகிலும் வரி கட்டியாக வேண்டும். இதுதான் காங்கிரசின் ஜனநாயக சோஷியலிசம்.

எதிர்க்கட்சிகள் இப்படித்தான், எதையாவது கிளறும்! ஏதாவது குளறும், காங்கிரசாட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் பேசும். காங்கிரசாட்சி ஒன்றுமேவா செய்யவில்லை? என்று கேட்டுவிட்டு,

விளக்குக் கம்பங்கள்
மின்சார பல்புகள்
பம்பு செட்டுகள்
பொலி காளைகள்
உரக் குழிகள்
அணைகள், தேக்கங்கள்
பள்ளிக்கூடங்கள்
மருத்துவ மனைகள்
தொழிற் பேட்டைகள்

ஆகியவற்றின் கணக்கை நீட்டுகின்றனர். இவைகளைக் கணக்குக் காட்டும்போது, வெள்ளையராட்சியில் வாங்கிய வரிப் பணம் எவ்வளவு? இப்போது இவர்கள் வாங்கிடும் வரிப் பணம் எவ்வளவு? என்ற கணக்கை மட்டும் மறைத்துவிடுகிறார்கள்.

இவர்கள் மறைத்தாலும் மக்கள் மறந்தா போய் விடுவார்கள்!

அவர்களுக்கும் கணக்குத் தெரியும்.

தெரிந்துவிட்டதால்தான் கணக்குத் தீர்த்தாக வேண்டும் என்ற உறுதிகொண்டு விட்டிருக்கிறார்கள்.

கட்டிய பள்ளிக்கூடம், நட்டுவிட்ட மின்சார விளக்குக் கம்பங்கள் ஆகியவைகளைக் காட்டியேவா காங்கிரஸ் ஆட்சி காலந் தள்ளிக் கொண்டு போக முடியும் - இனியும்! பித்தனும் ஏற்றுக்கொள்ள மாட்டானே!

கொடுத்த வெண்ணெய் எவ்வளவு, கிடைத்த நெய் எவ்வளவு என்ற கணக்கா புரியாமலிருக்கும், மக்களுக்கு!

விளைந்ததில், நெல் எந்த அளவு, பதர் எந்த அளவு என்று பிரித்துப் பார்க்கவா தெரியாது, மக்களுக்கு.

இறைத்தது எவ்வளவு, பாய்ச்சல் கிடைத்தது எந்த வகையில் என்பது பற்றிப் பார்த்திடவா தெரியாது, மக்களுக்கு.

தெரிந்துவிட்டது, அதனால்தான் அவர்கள் உறுதி கொண்டுவிட்டார்கள் ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்று.

இன்று அந்த மக்களை மயக்க, ஜனநாயக சோஷியலிசம் பேசிப் பார்க்கிறது காங்கிரஸ் அரசு!

மக்கள், காங்கிரசின் நடுநாயகர்கள் எவரெவர் என்று பார்க்கின்றனர்.

ஜனநாயக சோஷியலிசம் திட்டமாவது உண்மையானால், இத்தனை சீமான்கள், இந்தக் காங்கிரசிலே இடம் பெற்றிருப்பார்களா? என்று கேட்கிறார்கள்.

எங்கள் சோஷியலிசத்தில் ஏழையும் இருப்பான், பணக்காரனும் இருப்பான் - நாங்கள் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று காங்கிரசின் பெரியவர்கள் கூறுகிறார்கள், ஓ, அப்படியா! உங்கள் சோஷியலிசம் அப்படிப்பட்டதா! எங்களுக்கு சோஷியலிசம் வேண்டும், உங்கள் ஜோடனையிசமல்ல என்று மக்கள் கூறுகின்றனர்.

டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்குப் பகையாளி

என்று நமது கழகத் தோழர்கள் கூறும்போது, எழுகிறதே தம்பி! மகிழ்ச்சி ஆரவாரம், அதற்குக் காரணம், மக்கள் பெற்று விட்டுள்ள தெளிவு.

இந்தத் தெளிவு பிறந்திட நமது கழகம் பெரும் அளவு பணியாற்றி இருக்கிறது என்பதிலே நாம் பெருமிதம் கொண்டிடலாம் என்றாலும், இத்தனை தெளிவு பிறந்துள்ள போது, ஆட்சியை மாற்றிடும் செயலில் வெற்றி பெற்றால்தான், உண்மையான பெருமைக்கு நாம் உரியவர்களாவோம்.

அதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அடுக்கடுக்காக உள்ளன. வேலை அதிகம்! நேரம் அதிகம் இல்லை!! சென்ற ஆண்டே நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநாடுகளை நாம் இப்போதுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

திருச்சியில் துவக்கினோம், நாம் மகிழத்தக்க விதமாகவே மாநாடு நடந்தேறியது.

இப்போது வேலூர் கோட்டை வெளியில் அழகுற அமைகிறது மாநாட்டுப் பந்தல்.

திருச்சியில் திறந்தவெளி அரங்கு; இங்குப் பாங்கு நிறை பந்தல். நமது கழக மாநாடு, பல்லாயிரவர் கூடிடும் பாசறை மட்டுமல்ல, குடும்பம் குடும்பமாக நமது கழகத்தவர் கூடிடும் அறிவகம்.

பல்வேறு ஊர்களினின்றும் வந்திடுவோர், தத்தமது இடத்து நிலைமை பற்றி உரையாடி, மொத்தத்தில் அமைந்துள்ள சூழ்நிலையினை அறிந்து அகமகிழ்ந்திடுதல் அரியதோர் வாய்ப்பாகும்.

திருச்சியில் திறந்தவெளி மாநாடு - எனவே, காலையிலும் பிற்பகலிலும் காய்கதிரோன் குறுக்கிட்டதால கழகப் பேச்சாளர் பலர், கருத்து விருந்து அளித்திடும் வாய்ப்பினைப் பெற்றோமில்லை.

வேலூரில் எழில்மிக்கதும், வசதி நிரம்பியதுமான முறையில் பாங்கான பந்தல் அமைத்துள்ளனர்.

இரு நாட்களிலும், எழுச்சியூட்டத்தக்க விளக்க உரையாற்றிடும் நமது கழகத் தலைவர்கள் வருகின்றனர்.

கழகக் கலைஞர்கள், கருத்து விருந்துடன் கலை விருந்தும் தந்திட இசைந்துள்ளனர்.

முத்தமிழ் முழங்கிடும் திரு இடமாகத் திகழப் போகிறது வேலூர் மாநாடு.

வீரர் அணிவகுப்பைக் கண்டிடவும், வெற்றிப் பாதை வகுத்திடவும், வாரீர் வாரீர் என்று அனைவரையும் அழைக்கின்றேன்.

நாட்டை வாட்டிடும் கேட்டினைப் போக்கிட, கோட்டை வெளியினில் கூடுவோம் வந்திடுவீர் என்றழைக்கின்றேன்.

திருச்சி போலவே வேலூர் எனக்கு ஒரு திருத்தலம்.

திருச்சியில் ஒரு முறை சிறை சென்றேன். விலைவாசிக் குறைப்புக்கான அறப் போராட்டத்தின்போது வேலூர் சிறையில் இடப்பெற்றேன்.

மாநாடு கூடிடும் கோட்டை வெளியைக் கடந்து, கோட்டைக்கு உட்புறம் உள்ள துரைத்தன அலுவலகத்திலே தான், இன்று மாநாட்டு அலுவல்களை உற்சாகத்துடன் கவனித்துக் கொள்ளும் மாவட்டச் செயலாளர் தருமலிங்கம், வேலூர் நகராட்சி மன்றத் தலைவர் சாரதி, உறுப்பினர் தேவராஜி, தொண்டர் படைத் தலைவராக உள்ள இளஞ்செழியன், அவர் துணைவியார் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் முல்லை வடிவேலு ஆகிய பலர் கொண்ட அணிவகுப்பில் நான் நின்று மறியல் செய்தேன்; எங்களுடன் சிறையில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ப. உ. சண்முகம், முருகையன், திண்டிவனம், வானூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, பாலகிருஷ்ணன் ஆகிய பல நண்பர்கள் இருந்தனர். என்னுடன் அன்று இருந்த வேலூர் நண்பர் பாலசுந்தரம் மறைந்துவிட்டார்.

இப்போதும், அந்தோ! என் மனக் கண்முன் நிழலாடுகிறதே, போளூராரின் இனிய முகம்!

அந்தச் சிறையிலே அவரைக் கண்டதும், சிறை என்ற எண்ணமே பறந்தோடிவிட்டதே! அந்தச் சிரித்த முகத்தைக் காண முடியாது. ஆனால், மாநாட்டிலே வந்திடும் எவருக்குத்தான் அந்த இனியவரின் நினைவு நெஞ்சிலே எழாதிருக்கும், கண்களிலே நீர் துளிர்த்திடாமலிருக்கும்?

அவர் பெயரால், பந்தல் - அங்குக் கூடுவது, மறைந்த அந்த மாவீரனுக்குச் செலுத்தும் அஞ்சலியில் ஒருவகை என்றே நான் கருதுவேன்.

திருத்தலம் என்றும் கூறுவேன், அந்த மாநாட்டினை! அங்கு, தம்பி! உன்னை உன் நண்பர்களுடன் கண்டு அளவளாவ விரும்புவது இயற்கைதானே!

நண்பர்கள் மட்டுந்தானா அண்ணா! - என்று கேட்டிடாதே,
உன் குறும்புப் புன்னகையின் பொருள் விளங்காமலில்லை, உன் கோலமயிலுடன் வந்து சேர்; எழிலூட்டு; எழுச்சியூட்டு; எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கிடு. தம்பி! நீ உலவினால்தானே "கோட்டை' என்ற பெயரின் முழுப் பொருளும் நான் உணர முடியும்.

அண்ணன்,

10-7-66