அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கொல்லிமலைச் சாரலிலே

கொல்லிமலை மக்கள் இயல்பு -
குமாரசாமி ராஜா கருத்துரை -
தமிழக மலை வளம்.


தம்பி!

கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒஎழுப் பியபடி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் - ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள், இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ, மற்றப் பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழ வைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக் கொண்டு, மலைவளம் காண அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்துகாட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச் சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் - பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன்.

தொகுதி மூன்று 93 தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே, இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம் - சேந்தமங்கலப் பகுதி! "ஓஹோ! உனக்கு அப்படிக் கூறுவதைவிட, விளங்கத்தக்க விதத்தில் கூறவேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர், ஜி.பி. சோமசுந்தரம்!

கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ் நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.

நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை.

நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன்.

கொல்லிமலையிலே விளைந்திடும் பலாவும், வாழையும், கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலைவாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கி வந்தவண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக் கொண்டு, மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர், சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத் தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது, மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந்திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில், குடி இருந்துகொண்டு, காலமெல்லாம் கஷ்டப் படுகிறோமே, நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும், எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர்.

மலைவாழ் மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால், அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலை மீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடை உடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன.

கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா, மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் - தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர்.

காப்பியும், மிளகும், கடுக்காயும், ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வேறும் பொருள்களின் பெயர்ப்பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார். இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப் பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்வப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன.

செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன் மடங்கு அதிகமாகி இருக்கும் - திருச்சி மாவட்ட முழுவதும், இந்த மலைபடுபொருள் ஈட்டித்தரும் செல்வத்தைக்கொண்டே, ஏற்றம் பெற்றிடக்கூட இயலும். இப்போது கொல்லிமலையிலே கிடைப்பவை, திட்டமிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைபடு பொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங் காலமாக இருந்துவரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச்செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர், இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும்கூட! - அதாவது அவர்களும், நம்மைப்போல் இந்நாட்டு மன்னர்!

பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு, மல்லி நிறம்! வேறு நெல்வகையும் கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறிய மாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே, இப்பொருள் களைக் காட்டி நிற்கிறேன்!'' - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வது போல, நிற்கிறது கொல்லிமலை. இங்கு வீழ்ந்தோடி வரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று, பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்; நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத் தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப் பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை போன்றவை களை அமைத்திடும் துறையினர் ஆங்கு நடமாடுகின்றனர் - பாறைகளிலே இங்கும் அங்குமாக வெள்ளை நிறம் அடித்து வைத்துள்ளனர் - காண்போர், இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் -அணை என்று பேசிக் கொள்கின்றனர்.

தம்பி! துரைத்தனம், எந்தத் மட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித்தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளி விவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை.

கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா?

"வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகியவற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிகமிக விரயம் ஏற்பட்டிருக்கிறது என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார்.

கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை.

பக்ராலிநங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு, தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர், அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர்.

என்னுடைய "திருத்தலம்' என்று பக்ராலிநங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார், நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது. இந்த பக்ராலிநங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா-நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.

நூற்றுக்கு முப்பது பங்கு குறைவாம் - எதிர்பார்த்த பலனில்.

மற்றும், ஆங்கு அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் பெருந்தொழில்கள் அனைத்திலுமே, நிர்வாக ஊழலும், நேரக்கேடும், பொருள் நட்டமும், நாற்றமெடுக்கும் அளவில் உள்ளன என்று அவ்வப்போது நிபுணர்கள் ஆய்வுக் குழுவினர், அறிவிக்கின்றனர். எனினும், மேலும் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனரா எனில், இல்லை. இல்லை, என்பது பளிச்செனத் தெரிகிறது. பொக்காராவில் நாலாவது இரும்புத் தொழிற்சாலை அமைத்திடுவதிலே ஆர்வமும், சுறுசுறுப்பும், காட்டப்படுகிறது.

கொல்லிமலையோ, மகன் வரவுக்காக, சுவைமிகு உணவினைச் சமைத்து வைத்துவிட்டு, அது சில்லிட்டுப்போகும் நிலையிலும் மகன் வீடு வராதிருந்தால், ஏக்கத்துடன் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய்போல, இருந்துவரக் காண்கிறேன்.

ஆயிரம் கோடியா! அட பேராசைக்காரா! என்ன செய்வாய் அவ்வளவு தொகையை வைத்துக்கொண்டு? - என்று என்னைக் கேட்கின்றனர், கேலி பேசுகின்றனர், அமைச்சர்கள். கோலேந்திகளே! கொல்லிமலையைப் பார்த்துவிட்டு, என்மீது கேலிக்கணைகளை ஏவுங்கள்! பழமுதிர் சோலையாக்கலாம் கொல்லிமலையை - சில கோடி ரூபாய், பயன் தரும் முறையிலே செலவிட்டால்! சந்தனக் காடு காணலாம்! அடவி அழகும், அருவி அழகும் காணச் செல்வோர், சிந்துபாடி மகிழ்ந்திடும் உல்லாசக் கூடமாக்கலாம்! வெளிநாட்டார் விரும்பி வாங்கிடும் காப்பி பயிரிடலாம், மிளகு பயிரிடலாம்! கொல்லி மலைத் திட்டம் என்று மலைபடு பொருள் காணும் நிபுணர் குழுவினைத் திட்டம் தயாரித்து அளிக்கச் சொன்னால், இயலாது என்றா கருதுகிறீர்கள்; - என்று கேட்கத் தோன்றுகிறது. அமைச்சர்களைப் பார்த்து! அவர்கள், தம்பி! இந்த ஏழையின் பேச்சையா ஏற்பார்கள்!! அதனால்தான், உன்னிடம் கூறுகிறேன், ஊராருக்கு நீ உரைத்திடுவாய் என்ற நம்பிக்கையில்.

முன்பொருமுறை, தம்பி! கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்பது குறித்துக் கவலைப்பட்டுப் பேசினார், அமைச்சர் பக்தவத்சலம்! ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல! ஏழை பங்காளர் அல்லவா காங்கிரஸ் அமைச்சர்! அதனால், ஏழைக்குப் பொதிசுமக்க, மலிவானது கழுதை தானே! அதனால், அமைச்சருக்கு அந்தக் கவலை ஏற்பட்டது. கழுதைகளை வளர்க்கவேண்டும் என்றார். அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, நானறியேன் - ஆனால் கழுதைகள் விஷயமாக ஏற்படும் அக்கறையிலே ஒரு சிறு அளவாகிலும், காடு வளர்த்திடவேண்டும் என்பதிலே, அமைச்சர் பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம், பீர்மேடு இழந்தோம், காட்டுவளம் கெட்டுவிட்டது, தமிழகத்துக்கு. கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பனபோன்ற மலைகளை யாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்டமிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லிமலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே!

முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடு கிறது - எனினும், அது திருமாலுக்கா, அவன் மருமகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்து வைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம்.

அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும், மிளகும், காப்பியும், தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும், அகிலும், தினையும், தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தர வேண்டும். பிரான்சு பழரசம் அனுப்ப வேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்க வேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத், தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் - மலைவளம் பெருக்கிட, காட்டு வளம் கண்டிட, ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர், அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது?

தம்பி! கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக் கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், "அரண்கள்' என்றல்லவா கருதப்பட்டன - கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும், ஓரியும், பேகனும், குமணனும், காரியும் மலை அரண்களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர். வல்வில் ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும்போதே, நாணேற்றும் போது எழும் ஓசையே யன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள் வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலை யாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின் றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவைகளைத் தக்கவிதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார், உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத் தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை.

காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப்படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே, காட்டுப்பயிர் என்று கருதப்படும், கொக்கோ செடிதானே!

நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன்படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம்.

அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும், சென்ற கிழமை, "வனவிலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால், இந்த "வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பது பற்றி அக்கரை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும்.

தம்பி! முந்திரி பயிரிடவேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள். இப்போது முந்திரிக் காடுகளை வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமை யுடன் பேசிக் கொள்கின்றனர். அதுபோலவே மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர், என்றாலும், இன்றில்லா விட்டால் மற்றோர் நாள், மலை வளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப்படுவதாகும் என்று உணரத்தான் போகிறார்கள்.

***

கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது.

தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிபட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமது மக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது!

அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறு கானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச் சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம்.

இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுபை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், கானின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது, நிச்சயமாக உணரமுடிகிறது.

உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே, நான், என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சக்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி. மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம் எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப், புனலாடிப் புதுத் தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள, கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக் கொண்டேன். இயற்கையின் அன்பழைப்பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ, வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல, சென்று வருகிறேன்.

அண்ணன்,

23-10-60