அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கொட்டடி எண் : 9
2

அடையாற்று லாக்கப்புக்கு, சைதை சப் - ஜெயில், "அரண்மனை' போலத்தானே!! மூத்திரச் சட்டியாவது, தந்தார்கள்! லாக்கப்பில், அறையில் ஒரு மூலையைத்தான் காட்டினார்கள்!

நாங்கள்தான், சட்டசபையில் உட்கார்ந்து சட்டங்கள் பற்றிப் பேசுகிறோம், திட்டங்களைக் குறித்து விவாதிக்கிறோம்!!

எங்களைப் போட்டடைத்ததோ, சாதாரண கைதிகள் தங்கிடும், கொட்டடியில்தான்.

எனினும், அந்த 9ஆம் எண் கொட்டடியில் நாங்கள் தங்கி இருந்தோமே தவிர, எங்கள் எண்ணம் சிறகடித்துக்கொண்டு தமிழகத்தையே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டது!

கழகம் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டறிய இயலாதார், எம்மைக் கேவலமாக நடத்துகின்றனர். ஆனால், எமது கொள்கையின் நேர்த்தியை அறிந்து கொண்டாடிப் போற்றுபவரின் தொகையோ, வளருகிறது, வளருகிறது, வளர்ந்த வண்ணம் இருக்கிறது - என்பதை எண்ணிடும்போதே, அந்த இருட்டறையே, ஒளிப்பிழம்பாகத் தெரிந்தது!

தண்ணீர் கேட்கிறோம், தரமறுக்கிறார்கள். இவர்கள் அறியார், நாங்கள் சிறைப்பட்டோம் என்ற செய்தி கேட்டு, கண்ணீர் உகுத்தோரின் தொகையையும்.

பெற்றவர் காட்டிடும் பரிவினும் மிக்கதான அன்பு காட்டி, உறவுகாட்டி உற்சாகமூட்டி, நம்மை ஆதரிப்போர், "ஆலெனத் தழைத்து, அறுகுபோல வேர்விட்டு, வளர்க, வளர்க! என வாழ்த்துவோர் எண்ணற்றவர்' என்பதனை அறிந்துகொள்ளும் எண்ணற்றவர்கள், கஞ்சிக் கலயத்தை எமது கரத்தினில் தருகின்றனர்; கேவலம் என்றா எண்ணிக் கவலைப்படுவோம்!!

மனைதொறும் மனைதொறும் மகிழ்கிறார்கள், கழகம் தாழ்நிலை நீக்கிக்கொண்டு, தன்மானம்பெற்று வாழ்ந்திட உழைத்துவரும் நமது கழகத்தின் மாண்பு கண்டு! இதனை உணர்ந்து உவகை பூத்திடும் முகத்தினராகிப் பணியாற்றி வரும் நம்மைச் சிறையில், சீரழிவாக நடத்தினால், இரத்தம் சிறிது சுண்டிவிடும், உடல் சற்றே இளைத்துவிடும், வாலிபனுக்கும் வயோதிகம் மேலிடும், இஃதேயன்றி, வேறென்ன நட்டம்?

சிறையிலே, தகுதிபற்றியும், பொது மக்களிடம் பெற்றுள்ள ஆதரவுபற்றியும், அலட்சியம் காட்டி, அருவருக்கத்தக்க விதத்தில் நடத்துவதனாலேயே, நாட்டிலே நமக்குக் கிடைத்துள்ள நன்மதிப்புக் குன்றிப் போகுமா, குறைந்து போகுமா! வரலாறும் வீரக்கதையும் அறியாதாரே அங்ஙனம் எண்ணுவர்; துளியேனும் அவை அறிந்தோர், அரைபடும் சந்தனம் மணத்தல்போல, சிறை தரும் இன்னல், கழகத்தின் புகழைத்தான் பெருக்கும் என்பதனை அறிந்து அகமகிழ்வர். அவ்விதத்தில், உடன்பிறந்தோரே! நீவிர், மகிழவேண்டும் என்பதற்கே, சிறையில் நாங்கள் பெற்ற சீரழிவைக் கூறினேன் - சிந்தை நொந்திடச் செய்யவுமல்ல.

அதோ, உமது உள்ளம் வென்றாள், குத்திப் புடைத் தெடுக்கும் செந்நெல்லைப் பயிரிட்டோன், முழங்காலளவு சேற்றிலே இறங்கினான். இன்னல் முதலில் பிறகே கன்னல்! முத்து முத்தாக வியர்வை உதிர்த்திடும், முல்லை, வாழை பரப்பி, வண்ணச் சேலை புரள, வகைவகையான உண்டி நிரப்பி, நீ உண்ணும்போது கண்ணால் கொத்திடத்தானே போகிறாள்! முத்து முத்தாக வியர்வை - முதலில்! பிறகு, முத்தம், முத்தம், முத்தம் - உனக்கல்ல - பெற்றெடுத்த மகவுக்கு!!

கொட்டடி, எண் 9இல் நாங்கள் தள்ளப்பட்டால் என்ன? அதனினும் கொடிய இருட்டறையில் அடைக்கப்பட்டால் தானென்ன, கருவில் உருவானபோது, கண்டது கதிரவனை அல்லவே! இருள் மயம்தானே! பிறந்த பிறகோ? அஃதே போலத் தான், கொட்டடியில் பூட்டி வைக்கப்படும் கொள்கை வீரர்கள், இன்னலைத் தழுவிக்கொள்கின்றனர்; ஈன்றெடுக்கப்போகும் செல்வத்தை எண்ணி மகிழ்கின்றனர் என்பதனைத்தான் நீவிர் அனைவரும் எண்ணுதல் வேண்டும்.

உறுதி வளரவேண்டும்! உழைக்கும் திறன் ஓங்கவேண்டும்! இடுக்கண் கண்டு அஞ்சாமை ஓங்கவும் வேண்டும்! இன்னல் செய்வோரை வெறுத்திடாத தூய்மை வேண்டும்! மறந்தும் தீச் செயலை தொடாதிருத்தல் வேண்டும் தமிழ் மரபென்பதனை மனதிலிருத்த வேண்டும்! தன்மானம் நாட்டினிலே தழைத்திட உழைக்கும்போது, நம் மானம் பறித்திடவே மாற்றார் செய்யும் கொடுமைதனைச் துச்சமென்று தள்ள வேண்டும்! இச்சகம் பேசிடினும், ஏசிடினும், இடித்திடினும், இகழ்ந்திடினும், மனம் உடைந்திடாமல், என் நாடு பொன்னாடு, இஃதோ உற்றவர்க்கு அடிமைக் காடு? என் முன்னோர் மாப்புகழை மறந்து நானும், நத்திப் பிழைத்திடவோ, மற்றென்ன எத்திக்கும் கொடி கட்டி, எவருக்கும் திறை கட்டா, ஏற்றமிகு தமிழ் இனத்தில் உதித்தேன் அலனோ? என்றெண்ணி, இதயம் தன்னில் ஏற்புடைக் கொள்கை கொண்டு, உழைத்திடவே வேண்டும்!

நாடு பல உள, நாமறிவோம்! காடும் மேடும் கொண்டன வாய், கழனி நலமற்றதுவாய், பொன்னும் மணியும் காணாது, கரும்பும் இரும்பும் கிடைக்காது, கனல் கக்கும் மலையும் நில நடுக்கமும் கொண்டதாய், உள்ள நாடுகளும் உள்ளன. பாறைமீது தூவிய விதையாகும், அத்தகு நாடுகளிலே, பாட்டாளி தரும் உழைப்பு என்று எண்ணத்தக்க விதத்தில், இயற்கை வளமற்று உள்ள நாடுகள் பல.

நாமிருக்கும் நாடு அஃதல்ல! இயற்கை கொஞ்சும் எழிலகம்! இங்கு இல்லாத பொருள் இல்லை; எவர்க்கும் ஈந்திடத் தக்க அளவு கண்டிடலாம். இந்நாடதனில், காடு காட்டும் கனிவுங்கூட பல்வேறு நாடுகளில் காண இயலாதென்பது கட்டுக் கதை அல்ல; கணித்துரைப்போர் கூறுவது?

உடன்பிறந்தோரே! இத்தகு திருநாட்டில் வந்துதித்தோம், இருந்து வருகிறோம்;

நாமிருக்கும் நாடு நமதல்ல என்ற நஞ்சினும் கொடியதோர் நிலை நம்மைப் பிடித்தாட்டுகிறது.

ஏடெல்லாம், நம் நாட்டின் புகழ் பாடுகின்றன!

புலவர் தரும் சொல்லோவியத்தில், பூம்புகார் காணு கின்றோம், பூரிப்படைகின்றோம்; அல்லங்காடி செல்கின்றோம். ஆடலரங்கம் நுழைகின்றோம்; சுங்கம் கொள்வார் காண்கின் றோம், அங்கம் தங்கம் என்று அகமகிழ்ந்து கூறிடத்தக்க அரிவையர் தெரிகின்றனர்! பழமுதிர் சோலைகள் - பாங்கான வயல்கள்! களிறு உராயும் சந்தனக் காடுகள்! வாளை துள்ளும் வயல்கள்! தேன்சொரியும் தேமாக்கனிச் சாலைகள்! சிற்பக் கலையின் சிறப்புகள்! அம்மவோ! தமிழகத்தை இந்தப் "பொல்லாத' புலவர்கள் காட்டும்போது, தெரிந்திடும் திருவுடன், நம் கண்முன் தோன்றிடும் தமிழகத்தின் "உருவினை' ஒப்பிட்டுப் பார்க்கும்போது உள்ளம் வெதும்பாதிருத்தல் இயலுமோ?

எலும்புருக்கிக்கு ஆளாகி நாம் காணும்போதே இளமையும் எழிலும், குன்றியும் குறைந்தும் போகும், மனை யாட்டியையும், மணக்கோலத்துடன் காட்சி தரும் அம்மங்கை நல்லாளின் ஓவியத்தையும் மாறிமாறிப் பார்த்திடும் மணவாளன் மனம் என்ன பாடுபடும்!

நாட்டுப்பற்றுடையார், இன்று பெறும் வேதனை அத்திறத்தது; ஐயமில்லை.

ஊரில் இருக்கும் துள்ளு நடையுடன் கூடிய ஆண் குருவி, கர்ப்பம் முதிர்ந்திருக்கும் பெண் குருவிக்குப் பிரசவிக்கும் இடம் ஏற்பாடு செய்வதற்காக, இனிமை பொருந்திய கரும்பின் வெள்ளிய பூவைக் கோதி எடுக்கிறதாம்!! புலவர் கூறுகிறார்!

ஊர்ச் சிறப்பு, ஊராள்வோன் சிறப்பு, வீரம் ஈரம், காதல் கவிதை, வளம் கொடை, அறம் அன்பு, போர் முறை பொருள் தேடுமுறை எனும் எத்துறை பற்றியதாயினும், புலவர் தீட்டிடும் ஓவியம் காண்போர் உள்ளத்தைத் தொடுவதாகவே இருந்திடக் காண்கிறோம்.

வளம் நிறைந்து, வாழ்க்கைத் தரம் சிறந்து, ஆட்சி முறையில் அன்பும் அறமும் தழைத்து வீடெல்லாம் மகிழ்ச்சிக்கூடங்களாகி இருந்த திருநாடு, நம்முடையது.

இங்கு, யானைகொண்டு போரடித்தனர்; முத்துக்கொண்டு கழலாடினர், சந்தனம்கொண்டு நெல் குத்தினர்; தந்தம்கொண்டு "இருக்கை' அமைத்தனர்; கரும்புகொண்டு கூரை வேய்ந்தனர்; அறிவுகொண்டு ஆண்டு வந்தனர்; ஆற்றல் காட்டி வெற்றி கண்டனர்; புலவரைப் போற்றிப் பெருமைபெற்றனர்.

அத்தகைய நாடு, இன்று பழுதுபட்ட சித்திரமோ, பழங் கதையோ என்று நினைத்திடத்தக்க கோலம்கொண்டுளது; மக்களிற் பெரும் பகுதியினர் ஓலமிட்டு உழல்கின்றனர்; ஆட்சி யாளர், "ஏனென்றால், சிறைவாசம், இம்மென்றால் வனவாசம்' என்பார்களே, அந்நிலைக்கு வேகமாகத் தாவிக் குதிக்கின்றனர்.

இந்நிலை மாற, நமக்கெனத் தமிழ்ப் பண்புடன் கூடியதோர் அரசுவேண்டும் என்கிறோம்; ஆர்ப்பரிக்கின்றனர், அரசுக் கட்டிலில் அமர்ந்திட அனுமதிக்கப்பட்டுள்ள அடிவருடிகள்.

கிடைக்கும் இன்பத்தைக்கொண்டு, மகிழ்ந்திருக்கும் இத் திருநாளன்று, நாடு வாழவும் கேடுதீரவும் பாடுபடும், நமது கழகத்தவர் அனைவருக்கும், அறிவாற்றல் வளரவேண்டும் என்ற வாழ்த்துரையை வழங்குவோமாக!

அறிவாற்றல் மிகுந்து, அது மிகுந்தோர் தொகை வளர்ந்து, அதற்கேற்ப அறமும் திறமும் வளர்ந்து நமது குறிக்கோள் ஈடேறி னால். . . .! பாலை சோலையாகும், பைங்கிளிகள் கொஞ்சும், பங்கப் பழனத்து உழும் உழவர் பலவின் கனி பறித்து, தெங்கு திருகிடும் மந்தியைச் சாடுவர்; மலரை வாளை தாக்கி, தேனினைச் சொரியச் செய்யும்; தேமதுரத் தமிழோசை கேட்டுப் பல தேயத்தார், தருக! தமிழ்! தருக! என்று, வருவர்! இல்லாமை இல்லாது ஒழியும், இடுக்கண் எனில், என்ன என்று கேட்பர் மக்கள். தொழிலெலாம் துலங்கும், தொல்லை அகலும்! பகலென ஒளி பரவி, பேத இருளினைப் போக்கி வைக்கும், அறநெறி நிலைக்கும், அன்பு அரசோச்சும், இன்பநிலை எவ்வெவர்க்கும்; இதிலே அட்டியில்லை என்று எடுத்தியம்பும் காலம் காண்போம்.

மின்னிடும் பொன்னினைக் காண, எலும்பு நொறுங்குமோ என்பது குறித்து எண்ணாது, உழைப்பாளி குடைந்து சென்றிடக் காண்கிறோம்! சுறாவும் சுழலும் கண்டு அஞ்சாது, மூழ்கித்தான், முத்துக்கொணர்கின்றனர்.

அவரையும் துவரையும், இஞ்சியும் மஞ்சளும், வாழையும் தெங்கும், வரகும் தினையும், சேமையும் பிறவும் கிடக்கும் இடம் பார்த்து எடுத்து வரப்பட்டன அல்ல! நிலம் திருத்தி, நீர் பாய்ச்சி, காத்து வளர்த்த பின்பு, கண்டோர் கை சிக்கிடாமல், விழிப்பாக இருந்து, பின்னர், கொண்டு வரப்பட்டவை!

படர்வனவும், வளர்வனவும்கூட, உழைப்பின் துணை பெற்றாகவேண்டும் எனில், பட்ட மரம் துளிர்த்திடும் பான்மை போல, எந்தையர் நாட்டிலே இன்றுள்ள இழிநிலைபோக்கி, இடர்களை நீக்கி, மிடியினைத் தாக்கி, சுடர்தனைக் காண வேண்டுமாயின், நாம் ஒவ்வொருவரும், எத்துணை அளவுக்குப் பாடுபடவேண்டும், தொல்லைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதனை எண்ணித் துணிவுகொள்ள வேண்டாமோ?

அதனை எண்ணிடும்போது, கொட்டடி ஒன்பதும், அதிலே நாங்கள் பெற்ற கொசுக்கடியும், சகதியும், சட்டியும் அவை பரப்பிய கெடுநாற்றமும் அமுலும் அதட்டலும், அவை தரும் அல்லலும் அருவருப்பும், ஒரு பொருட்டாகா!!

எனவே, கடினமான உழைப்புக்கு, கண்ணியமிக்க தொண்டினுக்கு, கண்டோர் வியக்கும் கட்டுப்பாடுணர்ச்சிக்கு, ஏற்றவர்களாக, நாம் ஒவ்வொருவரும் ஆகவேண்டும், திருநாள் தரும் தித்திப்பு இந்தப் பயனை நாம் பெற உதவவேண்டும்.

சுற்றிலும் காணும், பொருள் ஒவ்வொன்றும் வினையின் விளைவு - மதியுடன் கலந்த வினையின் விளைவு! உழைத்துப் பெற்றது! சுவை கண்டு மயங்கி, பொருள் வந்த விதம் மறத்த லாகாது! மறந்திட மாட்டீர்!! மரபறிவீர், நானறிவேன்!!

எனவே, இன்று மகிழ்ந்திருப்பீர், எனினும் நாட்டுக் குழைக்கும் கடமையினை மறவாதீர்! வீட்டிலே இன்று காணும் பாட்டொலி, வளைகூட்டொலி, பேச்சொலி, "இச்'சொலி இவை யாவும் நலிவில்லை என்று நாட்டிலோர் நல்லொலி எழ வேண்டும். அதற்கான செயலினிலே புகவேண்டும், அச்செயலில் அறமும் திறமும் இணைந்திருத்தல்வேண்டும் என்ற கருத்தினைக் கெடுத்திட அல்ல; வளர்த்திட! - என்பதனை, காணும் சுவை யுடனே, நான் அளிக்கும் தேனெனவே கலந்து உண்பீர்!!

நாட்டுக்கு நாம் உழைத்து, பாட்டு மொழியாம் தமிழ் பாரெல்லாம் மணம் பரப்பும் பாங்கு கண்டு பழம் ஏடதனில் பார்த்திடும் ஓர் சீரும் சீலமும் துலங்கிடவும் விளங்கிடவும், காண்பதுதான் திருநாளிற் திருநாள் - தீதெல்லாம் தீய்ந்தொழிந்த திருநாள்!

அதற்கான ஆவலை எழச்செய்ய வருவதுதான் ஆண்டுக்கு ஒரு நாள், ஆன்றோர் காலந்தொட்டு அகமகிழ்வுதானளிக்கும் அறுவடைத் திருநாள் பொங்கற் புது நாள்!!

இதனை உமக்குக் கூறிடவும், இவ்வாண்டு இசைவுபெற இயலாதோ என்றெண்ணி, இருட்டறையில், கொட்டடியில், முடங்கிக் கிடந்திட்டேன். உமது விருப்பம் உணர்ந்தாற்போல், ஊராளும் பேறு பெற்றோர் உனை விடுத்தோம்! என்றல்ல, வெளியே சென்றிரு, விளிப்போம், வந்து சேர்! என்று கூறியே எனை அனுப்பினர்! வந்தேன் - செந்தேனென இனித்திடும் திரு நாளில், நலமெலாம் பெருக! என்று என் நல்லெண்ணந்தனைத் தந்தேன். இருந்துவிட்டு வந்த எண் ஒன்பது கொட்டடியைக் காட்டினேன் - மீண்டும் அஃதோ, வேறோ, நானறியேன்! எங்கு எனைக் கொண்டு செல, இன்று ஆட்சியிலுளார் எண்ணம் கொண்டிருப்பினும், என்றென்றும், உமது நெஞ்சில் எனக்கோர் இடமுண்டன்றோ! இச்சிறப்புப் பெற்ற பின்னர், இருட்டோ இடரோ, இழிவோ பழியோ எது வந்து தாக்கிடில், என், எதையுந் தாங்கும் இதயம் உண்டு, என்னினும் ஆற்றல்மிக்கார் எண்ணற்றோர் உண்டு. எனவே, நாடு நன்னிலை அடையப் போவது உறுதி! நமது இலட்சியம் வெற்றிபெறப்போவது திண்ணம். பால் பொங்கும்! பொங்கிட, தழலிட விறகுவேண்டும்!! நாட்டிலே நல்லாட்சி எனும் பால் பொங்கிட, தழலில் நாம் விறகாக்கப்பட்டால், அதனினும் சிறந்ததோர் பேறு வேறில்லை அல்லவா!!

சிறை புகுதலும் அங்குச் சீரழிவு காணுதலும், ஒவ்வொரு நாட்டு விடுதலைக்காகப் பலர் பட்ட இன்னலுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, மிகச் சாதாரணமானவை!

ஆனால், இவைகளைத் தாங்கித் தாங்கி, நெஞ்சுரம் கொண்டு, பின்னர்க் காவியம் புனைவோனும் ஓவியம் தீட்டு வோனும், கருத்திலே கொண்டிடத்தக்க, "வீரத் தியாகி' ஆகிடும் வாய்ப்பைப்பெறவேண்டும்.

கேட்டுப்பாருங்கள், உழவனை! முளைவிட்டு, பச்சைப் பசேலென்று வளர்ந்து, முனையில் கதிர் காட்டி, குலுங்கிக் கூத்தாடி, முற்றிச் சாய்ந்ததுதான், இன்று முனை முறியா அரிசியாகி, ஆவின் பாலுடன் கருப்பஞ் சாற்றுடன், அடுக்களை ஏறி, உமது அன்புக்குரிய அல்லியோ அஞ்சுகமோ, அன்னமோ, சொர்ணமோ, மலர்க்கொடியோ செல்வியோ "ஒரே ஒரு பிடி! என் கையால்! இந்த ஒரு முறை மட்டும்'' என்று கொஞ்சிப் பேசி, உமக்கு வட்டிக்கும் பொங்கலாகிறது!

சிறுவிரலாற் துழாவி, வாயிலிட்டு மீண்டும் வழித்தெடுத்து இலையிலிட்டதை வாள் நுதலாள் கண் காட்ட எடுத்துண்ணு கின்றீர்; அல்லது மீண்டும் செல்வத்திற்கே ஊட்டுகின்றீர்!

நமக்குப் பிறகு இங்கு வாழ்ந்திடும் வாய்ப்பினைப் பெற இருக்கும், வழித்தோன்றல்களுக்கு, முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டி ஊட்டினால் மட்டும் போதாது, நாவுக்கு மட்டுமே சுவை கிடைக்கும்; நாட்டுக்கோர் நல்ல நிலை நாம் கண்டு தந்திட்டால், வீட்டுக்கு வீடு, விழாக்கோலம், என்றென்றும், அறிந்திடுவீர் இவ்வுண்மையினை, அதற்கேற்பச் செயல்படுவீர்!

இன்றல்ல! இன்று, திருநாள்! காண, களிக்க, பேண பேருவகைகொள்ள, நாணம்கொண்டாளின் நல்லிதழில் ஒளி ஏற்ற, வீணை மொழி கேட்டு வியர்த்திருக்க, பாணன் துணை தேடாமல் பாவையரின் பரிவுபெற, இன்புற்றிருக்க ஏற்ற நாள்!

இந்நாளில், நீவிர்கொள்ளும் இன்பம், எந்நாளும் எங்கெங்கும் இருந்திடத்தக்கதான, "திருநாடு' நாம் காண்போம், திறமெல்லாம் அதற்களிப்போம் என்ற உறுதிபெற்று, எழுவீர் விழா முடித்து.

விழா நாளன்று, உடன்பிறந்தோரே! என் மகிழ்ச்சியை, நல்லெண்ணத்தை அளிக்கிறேன்; பெறுவதிலே நீவிர் அடையும் மகிழ்ச்சியினும், தருவதிலே நான் பெறும் பெருமிதம் அதிகம்.

அண்ணன்,

14-1-1958