அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குன்று குடை பிடித்துக்கொள்ளுமா?

காமராஜரின் நினைவு கழகத்தின்மீதே!
ஏசுவோர் ஏசட்டும்! இருக்கிறோம் நாங்கள்!
ஏத்தி ஏத்தித் தொழுவதன் இலட்சணம் என்ன?
எரிச்சலைக் குறைக்கவே ஏச்சு!

தம்பி!

உலகின் பாதியைச் சுற்றிவிட்டு வந்துள்ள காமராஜர் தமது முதல் முழக்கத்திலேயே நம்மைத் தாக்கிப் பேசி இருப்பது கண்டு மெத்த வருத்தப்படுவதாக எழுதி இருக்கிறாய்; நம் தோழர்களிலே சிலர் கோபம் கொண்டிருப்பதாகவும் அறிகிறேன். ஆனால், உண்மைக் காங்கிரஸ்காரர் சிலர் வருத்தமல்ல - கோபமல்ல - வெட்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருக்குமல்லவா? பாவம்! அவர்கள் ஓடி ஓடிப் பேசி வருகிறார்கள் எமது தலைவர் உலகுக்கே உன்னதமான தத்துவங்களைத் தந்துவிட்டு வரச்சென்றிருக்கிறார் என்று. வந்தவர் அப்படிப்பட்ட தத்துவ விளக்கம் பற்றியும், தத்துவ விளக்கத்தைத் தாம் தந்தபோது அந்தந்த நாட்டினர் ஆச்சரியத்தால் வாய்பிளந்து நின்றது பற்றியும் எடுத்துரைப்பார், கேட்டு இன்புறலாம் என்ற ஆசையுடன்தானே போயிருந்திருப்பார்கள் முழக்கம் கேட்க! ஆனால், அவ்வளவு தொலைவு போய்விட்டு வந்தவர், என்ன பேசினார்? வழக்கமான "விட்டேனா பார்!' என்பதைத்தானே! எனக்குத் தெரியாதா அவனோட யோக்யதை! இவனோட நிலை! என்ற திருவாய் மொழிதானே!

இதைத்தான் எல்லாச் சில்லறைகளும் நித்தநித்தம் பொழிந்து தள்ளிக்கொண்டிருக்கின்றனவே; இவர் பெரியவர் - உயர்ந்த இடம் இருப்பவர் - உலகு சுற்றியவர் - இவருமா அதே பேச்சைப் பேசுவது? அதிலும் வந்த உடனே!

என்றெண்ணி வெட்கப்படுகிறார்கள்.

மாஸ்கோ சென்றேன், ரμய நாட்டின் மகோன்னதமான வளர்ச்சியைக் கண்டேன். எப்படி ஒழிக்க முடியும் இங்குள்ள ஏழ்மையை என்று இதுநாள் வரையில் ஏங்கிக் கிடந்தேன் - சோவியத் நாட்டினைக் கண்டேன் - உறுதி கொண்டேன் - புது நம்பிக்கை கொண்டேன் - ஏழ்மையைப் போக்க முடியும்! அதற்கான திட்டத்துடன் வந்துள்ளேன்! கேண்மின்! என்ற முறையில் எழுச்சியூட்டத்தக்க முறையில் எவரையும் தம் வசம் ஈர்க்கத்தக்க வகையில் பேசுவார், தாம் மிகப்பெரிய தலைவர் என்பதனை மெய்ப்பித்துக் காட்டுவார் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போயிருக்கிறார்கள். அவரோ பாவம் அந்தப் பழைய பாணிப் பேச்சையேதான் பேசிக் காட்டி இருக்கிறார். நாடு பல சென்று வந்தவர் ஏதேது பேசுகிறார் கேட்போம் என்று பற்பல நாட்டுத் தூதரகத்தினர்கூட ஆவலாக இருந்திருப்பார்களே; பெரியவர் அந்தப் பழைய பாட்டையே பாடிவிட்டாரே, விட்டேனா பார்! என்ற பாட்டை; அதனைக் கேட்ட பிற நாட்டுத் தூதரகத்தினர் இவ்வளவுதானா இவர் சரக்கு என்றல்லவா எண்ணிக்கொள்வார்கள் என்பதனை நினைத்து உண்மைக் காங்கிரஸ்காரர்கள் உள்ளபடி வெட்கப்பட்டுத்தான் இருப்பார்கள்.

மண்டலம் பல சென்று திரும்பிய மாமன்னன் உரை கேட்டிடச் சிற்றரசரும், புலவர் பெருமக்களும், வணிகரும் மற்றும் வகையான வாழ்வினரும் கூடி இருந்த அவைதனில் அமர்ந்து மாமன்னன், அவையினரே! நாட்டிலே உள்ள ஏரி, குளம், குட்டைகளிலே உள்ள மீன்களைக் குவியல் குவியலாகப் பிடித்திடத் தக்க வலை உண்டு நம்மிடம் அறிவீரன்றோ! - என்று பேசிடின், அவையினர் என்ன எண்ணுவர்? தனியே சென்று தலையிலன்றோ அடித்துக்கொள்வர்?

காசி சென்று திரும்பியவரைக் கண்டு பேசச் சென்றவரிடம் காசித் தலத்தின் மகிமைபற்றியும் கங்கையின் எழில்பற்றியும், அங்குச் சென்றதால் தமக்கு ஏற்பட்ட மன அமைதிபற்றியும் கூறாமல், "கருவாடு மிக மலிவு'' என்று பேசிடின் என்ன எண்ணிக் கொள்வர்? கைபிசைந்து கொள்வர், காசிக்குப்போய்க் கற்றுக் கொண்டு வந்தது இதைத்தானா? என்று.

எதிர்க் கட்சிகளை - குறிப்பாக நமது கழகத்தை வழக்கம் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடத்தான் அவ்வளவு பெரியவரால் முடிந்ததேயன்றி, பொதுவுடைமை நாடுகளிலே உலவியதால் பெற்ற புதுக் கருத்துகள்பற்றிப் பேசினாரோ? நினைப்பே வரவில்லை! அவருடைய நினைவு முழுவதும், கழகத்தின்மீதுதான் இருந்திருக்கிறது.

சிலருக்குக் கோபம், சிலருக்கு வருத்தம், உண்மைக் காங்கிரசாருக்கு வெட்கம் ஏற்பட்டது அந்தப் பேச்சைக் கேட்டு - எனக்கோ தம்பி! ஒரு திருப்தி! ஒரு மகிழ்ச்சி! அவர் உலகத் தலைவர்களின் வரிசையிலே சேர்ந்துவிட்டார் என்றும், உலகத் தலைவராக உயர்ந்துவிட்டார் என்றும் கூறி உடுக்கை அடிக்கிறார்களே, உண்மையிலேயே அவர் உயர்ந்துபோய், எங்கே நம்மைப்பற்றிய நினைப்பற்றுப் போய்விடுகிறதோ - ஒரே அடியாக அலட்சியப்படுத்திவிடுவாரோ - கழகமா! அதை எதிர்ப்பதா! - இதுவா நாம் மேற்கொள்ளவேண்டிய வேலை? வேலையா அது? நாம் எதிர்த்தொழிக்கவேண்டியது இல்லாமை, போதாமை, அறியாமை எனும் தீமைகளை என்று பேசி விடுகிறாரோ - ஆரம்பித்து அவர் அவ்விதம் பேசக் கேட்டு பொதுமக்கள், கழகத்தைப்பற்றிய நினைப்பே அவருக்கு வரவில்லை! அதை ஒரு பொருட்டாக அவர் மதிக்கவில்லை! என்று பேசிக்கொள்கின்றனரோ என்றெண்ணி அஞ்சிக் கொண்டிருந்தேன்.

பெரியவர் பேச்சு அந்த அச்சத்தைப் போக்கிவிட்டது.

அவ்வளவு தொலைவு போய்விட்டு வந்தும் அவருக்குக் கழகம்தான் பிரச்சினையாக இருக்கிறது.

உயர்ந்த நிலை சென்றாராமே, அங்கிருந்து நோக்கும் போதும் அவருடைய கண்களுக்கு நாம்தான் தெரிகிறோம்.

இதனை எண்ணிடும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது கழகம் சாமான்யமானது அல்ல; எங்கெங்குச் சென்று திரும்பிடினும் அவருடைய கவனத்தை ஈர்த்திடும் வல்லமை பெற்றிருக்கிறது.

உலகத் தலைவராகிவிட்டார் என்கிறார்கள் காமராஜரை! மகிழ்ச்சி! அந்த உலகத் தலைவராகி விட்டவர், நமது கழகத்தைத்தான் தாக்கிப் பேசுகிறார், பேசிட ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்.

ஆகவே கழகம், உலகத் தலைவர் நிலையைப் பெற்றுள்ளவரின் "கவனிப்பை'ப் பெற்றிருக்கிறது!

பொருள் என்ன? கழகம் உலகத் தலைவர் ஆகிவிட்ட பிறகும் கவனித்தாகவேண்டிய பிரச்சினையாக இருக்கிறது.

கழகத்தின் வளர்ச்சியும் வல்லமையும் அந்த வகையிலே இருக்கிறது.

அவ்வளவு பெரியவர் ஆகிவிட்டவராலும் அலட்சியப் படுத்த முடியாத அளவு வளர்ந்துவிட்டிருக்கிறது.

ஆகவே தம்பி! நம்மை நாம் அறிந்துகொள்ளச் செய்தது அவருடைய முழக்கம்.

என் மகழ்ச்சி அதன் காரணமாகத்தான்! ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன அவர் பேசிட

நாணய மதிப்புக் குறைப்பு - அதன் விளைவு.

எல்லைத் தகராறுகள் - அவற்றுக்கான பரிகாரம்.

பாகிஸ்தான் - சீனா கூட்டுச் சதி - அதனை முறியடிக்க நாடு மேற்கொள்ளவேண்டிய முறைகள்.

உணவுப் பிரச்சினை - அதற்குப் பரிகாரம்.

நாலாவது ஐந்தாண்டுத் திட்டம் - அதன் வடிவம், பொருள் - பலன்.

இப்படிப் பிரச்சினைகள் பலப் பல உள்ளன. இவைபற்றி இவ்வளவு வளர்ந்துள்ளவர் என்ன கூறுகிறார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவல் கொண்டுதானே இருப்பார்கள்? இந்தப் பிரச்சினைகள்பற்றி மூண்டுவிட்டுள்ள குழப்பத்தைப் போக்குவார், தெளிவளிப்பார் என்று எண்ணாமலிருக்க முடியுமா? அகில இந்தியக் காங்கிரசின் தலைவராயிற்றே! ஆனால், பாரேன் தம்பி பொருளாதாரப் பிரச்சினைபற்றி டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசட்டும் - உணவுப் பிரச்சினை பற்றிச் சுப்பிரமணியம் பேசட்டும் - உலகப் பிரச்சினைபற்றி இந்திரா காந்தி பேசட்டும் - நான் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் போவதில்லை, என் முன் உள்ள பிரச்சினை ஒன்றே ஒன்று! இந்தத் தேர்தலில் கழகம் காங்கிரசை வீழ்த்தாமல் இருக்கும் வழியைக் கண்டுபிடிப்பது - அந்தப் பிரச்சினை பற்றித்தான் நான் பேசுவேன் என்று கூறுபவர்போல, வந்ததும் நம்மைப்பற்றிய துத்தியமே பாடி இருக்கிறார்!

தம்பி! களம் செல்லும் வீரன் வாளின் கூர்மை சரியாக உளதா என்று பார்த்துக்கொள்வான்.

வீர அர்ஜுனன் வேடமணிந்து நாடக மேடை செல்வோன், வாளின் கூர்மை சரியாக உளதா என்றா பார்த்திடுவான்? மீசை சரியாக ஒட்டப்பட்டிருக்கிறதா என்றுதானே பார்த்துக் கொள்வான்.

காமராஜர் உலகப் பிரச்சினைகளைப்பற்றி ஆய்ந்தறிந் திடவே நாடு பல சென்றுள்ளார் என்று அவர் நாமாவளி பாடிடுவோர் கூறிடினும், அவர் கொண்டுள்ள அக்கறை உலகப் பிரச்சினைகள்மீது அல்ல; காங்கிரஸ் நடாத்தும் எதேச்சாதிகாரத்தை உருக்குலைக்க எழுந்துள்ள கழகத்தை எப்படி மடக்குவது என்பதிலேதான்.

அவர் ஏதோ நாலு வார்த்தை பேசிவிட்டார் என்று வருத்தப்பட்டுக்கொள்கிறார்களே, நமது தோழர்கள், அவர்கள் ஒரு விஷயத்தை உணருகிறார்களா?

காமராஜர் கொண்டுள்ள வருத்தத்தை உணருகிறார்களா?

வருத்தம் கொஞ்சமாகவா இருக்கும் அவருக்கு?

சிற்றரசர்கள்
சீமான்கள்
வணிகக் கோமான்கள்
நிலப் பிரபுக்கள்
ஆலை அரசர்கள்
பெரிய புள்ளிகள்

அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி.

தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர்.

இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன!

சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர்.

இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்!

அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்?

இருக்க விடுகிறதா கழகம்?

இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக்கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக்கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார்.

மிக மட்டமாகப் பேசுகிறார்,
கேவலமான விதத்தில் பேசுகிறார்,
அவன் - இவன் - என்றுகூடப் பேசுகிறார்,
என்று வருத்தப்பட்டுக்கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டு மென்றேவா அப்படிப் பேசுகிறார்?
அவருடைய பேச்சே அப்படித்தான்!
அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்!
இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக்கொள்ளச் சொல்ல முடியுமா?

ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார்.

அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத் தெரியும் என்று நீ எண்ணிக்கொள்வதுதான்.

இதனைப் புரிந்துகொள் தம்பி! புகையிலைக்கு யாரும் நெடியை ஊட்டத் தேவையில்லை; இயற்கையாகவே இருக்கிறது.

புகையிலையிலே பூமணம் எதிர்பார்ப்பது, யாருடைய தவறு, தம்பி?

காமராஜரிடம் வேறுவிதமான பேச்சை எதிர் பார்ப்பது உன் தவறு!

அவருக்குத் தெரிந்த முறையில் அவர் பேசுகிறார் - அவ்வளவுதான்.

இது எனக்குப் புரிந்திருப்பதால்தான் தம்பி! அவருடைய பேச்சு எனக்குக் கோபத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை.

மேலும் தம்பி! நாம் என்ன அவ்வளவு "மேலான' நிலையினரா?

மெருகு கலையாத மோட்டாரிலா சவாரி செய்கிறோம்? மாளிகைகளிலா நமக்கு விருந்து நடக்கிறது?

அதிகாரிகளா நம்மைப் புடைசூழ்ந்து நிற்கிறார்கள்? "செக்கு' களையா நம்மிடம் தருகிறார்கள்

நன்கொடையாக. இல்லையே! நாம் எளிய நிலையினர்; எளியோருக்காகப் பணியாற்றுகிறோம். நம்மைக் கண்டதும், மதிப்பளிக்க வேண்டும், மரியாதை காட்ட வேண்டும் என்று பெரியவருக்குத் தோன்றுமா?

மகாராஜாக்கள் மண்டியிடுகிறார்கள்; ராஜாக்கள் உபசாரம் நடத்துகிறார்கள்; இந்தப் பயல்கள் எதிர்க்கிறார்களே என்று எண்ணுகிறார்; எரிச்சல் கொள்கிறார்.

இவ்வளவு செல்வம், செல்வாக்கு, அதிகாரம், அந்தஸ்து நம்மிடம் இருக்கிறது. பஞ்சைகள் நம்மை எதிர்க்கிறார்களே என்பதை எண்ணும்போது அவருக்கு ஏகப்பட்ட எரிச்சல் மூள்கிறது.

சிரங்கு பிடித்தவன் அரிப்பை அடக்கிக்கொள்ள வேக வேகமாகச் "சொறிந்து'கொள்ளும்போது, பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுத்துப் பாரேன், சள்ளென்று எரிந்துவிழுவான். மனித சுபாவம் அது. அதனை உணராமல், ஏசுகிறாரே என்று வருத்தப்படுகிறாய்.

அதுமட்டுமா தம்பி! ஏசுகிறார் என்கிறாயே! இது என்ன முதல் முறையாகவா உன் காதிலே விழுகிறது? அல்லது ஏசக் கிளம்பிய முதல் மனிதரா இந்தக் காமராஜர்?

கழகம் தொட்டிலில் இருந்த நாள்தொட்டு ஏசினர் பலர்; இவரைவிடக் கடுமையாக. பழகிக்கொள்ளச் சொல்கிறாயா அண்ணா! என்று கேட்கிறாய். அதற்காகச் சொல்லவில்லை.

இவ்வளவு ஏசி வருகிறார்களே இவர்கள், அது நம் வளர்ச்சியைத் துளியாவது கெடுத்ததா?

இவர்களின் ஏசலை மக்கள் மதித்திருந்தால் கழக வளர்ச்சிக்கு இந்த அளவு துணை நின்றிருப்பார்களா? கழகம் பெற்றுள்ள வளர்ச்சி என்ன இலேசானதா? எத்தனை இடிகளை, தாக்குதல்களைத் தாங்கிக்கொண் டிருக்கிறது! எத்தனை சாகசத்தைக் கண்டும் நிலை குலையாமல் இருந்து வருகிறது! எத்தனை எத்தனை சதிச் செயல்களைக் கண்டிருக்கிறது! சாய்த்திட முடியாத நிலையைப் பெற்றிருக்கிறது! இதிலிருந்து தெரிய வில்லையா, இவர்கள் ஏசுவது, வீண் வேலை என்பது?

மழை பெய்கிறதே என்று கவலை கொண்டு குன்று, குடை பிடித்துக்கொள்ளுமா?

தம்பி! அவர்கள் ஏசுவது நம்மை எந்த விதத்திலும் பாதித்த தில்லை; பாதிக்கவில்லை; பாதிக்காது.

மேலும் தம்பி! கழகம் விடுத்திடும் அழைப்பு என்ன? எல்லோரும் பாராட்டுவர்; எங்கிருந்தும் புகழ்மொழி கிடைத்திடும்; பெற்றிட வருக! பெருமகிழ்வு கொண்டிட வருக!! - என்றா அழைக்கிறது. இல்லையே!

ஏசுவர் - பொருட்படுத்தாதீர்.
தாக்குவர் - தாங்கிக்கொள்வீர்!
சிறையில் தள்ளுவர் - அதனை அறச்சாலை எனக் கொள்வீர்.
இஃதன்றோ கழகம் விடுத்திடும் வேண்டுகோள்!
இந்த வேண்டுகோளைக் கேட்டன்றோ கிளம்பினர் பணி புரிய ஆயிரமாயிரம் தோழர்கள்.
குத்தும் வெட்டும் கிடைத்தது - சிலருக்கு.
தடியடி கிடைத்தது - பற்பலருக்கு!
கஞ்சிக் கலையம் கிடைத்தது - பலருக்கு - சிறையினிலே!
இன்னுயிரே பறிக்கப்பட்டது - சிலருக்கு - நமது வணக்கத்துக்குரிய வீரர்க்கு.
இவ்வளவு இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றனர் தோழர்கள்.

கண்ணிழந்தோர் உளர், அறிவாயே! கா-ழந்தோர், கரமிழந்தோர் உளர், தெரியுமே உனக்கு! சொத்திழந்தோர், சுகமிழந்தோர் உளர் - பலர் - நமக்காக - நாட்டுக்காக. மக்கள், தம்பி! இதனைத்தான் கணக்கெடுத்து வைத்துள்ளனர்; எவரெவர் என்னென்ன ஏசினர் என்பதுபற்றி அல்ல!

ஏசுவோர் ஏசட்டும். எமதருமைத் தோழர்களே! இருக்கின்றோம் நாங்கள் தொகைதொகையாய், ஆதரவு தந்திடவே என்கிறார் மக்கள். இஃதன்றோ உன் உளத்தில் இருந்திட வேண்டும்? ஊசல் சரக்காகிப்போன ஏசல் மொழியா?

ஏசுகின்றனர், அதனால் நமது கழக வளர்ச்சி குன்றிடுவ தில்லை, உணருகிறோம்; ஆயினும் அண்ணா! எரிச்சலாக இருக்கிறதே; வருத்தமாக இருக்கிறதே என்கின்றாய்.

இத்தனை பெரிய உயரிடம் கிடைத்திருக்கிறதே காமராஜப் பெரியவருக்கு, அவர் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது என்றா எண்ணிக்கொள்கிறாய்? ஏமாற்றமும் எரிச்சலும், வேதனையும் துளைக்கிறது அவர் மனத்தை, அறிவாயா?

காங்கிரசைக் கட்டுப்பாடுள்ளதாக நடத்திச் செல்வதில் வல்லவர் - இது புகழ் மாலை. பிளவுகளைத் தடுத்திடுவார், பேதம் ஒழித்திடுவார் - இப்படிப் பாராட்டுதல்! எந்தப் பிரச்சினையையும் எளிதாகத் தீர்த்திடுவார், கூர்த்த மதி படைத்தார் - இப்படித் திருப்புகழ்.

சரி! தம்பி! திருப்புகழ் தித்திப்பாகத்தான் இருக்கிறது; ஆனால், உண்மை நிலைமை என்ன? கேரளத்திலே காங்கிரஸ் இரண்டு துண்டு. வங்கத்திலே காங்கிரசில் பிளவு. ஒரிசா காங்கிரசில் ஒரு வெடிப்பு. பீகார் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்க ஏற்பாடு. ராஜஸ்தானத்துக் காங்கிரசில் ரகளை. ஆந்திரக் காங்கிரசில் இரு படை வரிசைகள். உத்திரப்பிரதேசப் பிரச்சினையின் இலட்சணமோ உலகறியும்!

இவை எதனைக் காட்டுகின்றன தம்பி? காங்கிரசைத் திறமையாக நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்கவர் காமராஜர் என்பதனையா? இவர் பார்வை பட்டால் போதும், பிளவுகள் மூடிக்கொள்ளும் என்றார்களே, பிளவு எத்தனைப் பெரிய அளவு விரிவாகிக் கொண்டு போகிறது பார்த்தனையா?

இவர் கூப்பிட்டுப் பேசவேண்டியதுதான், உடனே "குடுமிப்பிடி'ச் சண்டையிட்டுக்கொண்டோரும், கட்டித் தழுவிக் கொள்வர்; ஒன்றுபடுவர் என்றனர்.

கேரளத்துக்குப் போயே பார்த்தார் - பலித்ததா?

இவர் கேரளம் சென்று சங்கர் என்பாரைப் பட்டத்தரசர் போலாக்கினார்! பலன்? காங்கிரசே இரு துண்டுகளாகிவிட்டது. தடுத்திட முடிந்ததா? ஒற்றுமை உண்டாக்க முடிந்ததா?

இந்தப் பிளவுகளெல்லாம் எம்மை ஒன்றும் செய்துவிடாது என்று பேசலாம்; பேசுகின்றனர்; அது வீறாப்பு! ஆனால் இவருடைய திறமை காரணமாக, காங்கிரசில் பேதம் நீங்கி, பிளவு நீங்கி, ஒற்றுமை ஏற்படும் என்று கூறினார்களே, நடந்ததா என்பதுதான். இல்லை! அப்படியாயின், இவருடைய திறமை பற்றிய திருப்பல்லாண்டு பாடுவதன் பொருள்?

போகட்டும் தம்பி! கட்சியிலே ஏற்பட்டுவிடும் பிளவு களைத் தடுத்திட முடியாமலிருக்கட்டும்; காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் என்கிறார்களே, ஒரு பிரச்சினையிலாவது திட்டவட்டமான கருத்து, காங்கிரசில் உள்ள மற்றவர்களை வழி நடத்திச் செல்லத்தக்க விதமான கருத்தளிக்கும் போக்கு காண்கின்றாயா?

இதுநாள் வரையில் - ஊரே கொதிக்கிறது ரூபாய் மதிப்பு குறைப்புபற்றி. இவர் அதுபற்றி ஒரு விளக்கம் கொடுத்தாரா?

இவருடைய ஒப்புதலின் பேரில் நடந்தேறியதா? இவரை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிரதம மந்திரி, இதை அமுலாக்கி னார்களா? அதற்கான விளக்கமாவது கிடைத்ததா?

நாணயத்தின் மதிப்பைக் குறைத்திடும் பிரச்சினை இவர் கவனிக்கத் தேவையற்ற அற்பப் பிரச்சினையா? அறிவற்றவன்கூட அவ்விதம் கூறிடானே! கருத்தளித்தாரா? இதுவரையில் காணோம்! ஏன்?

மானத்தோடு வாழ்வோம், அன்னிய நாட்டிடம் உணவுக் காகக் கை ஏந்தமாட்டோம் என்று முழக்கம் எழுப்பினார். எழுப்பிய முழக்கம் "பிளேட்' ஆக்கப்பட்டுவிட்டது.

கப்பல் கப்பலாக உணவுப்பொருள் அமெரிக்காவில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறதே - என்ன மதிப்பு அளிக்கப்பட்டது, இவருடைய மானத்தோடு வாழ்வோம் என்ற முழக்கத்துக்கு? இது பற்றிய கருத்து விளக்கம் தருகிறாரா? இல்லை! ஏன்? தந்திடின் இந்திரா காந்தி சர்க்காருடன் மோதிக் கொள்ளவேண்டி நேரிடும்! அதற்கு இவர் தயாராக இல்லை! காரணம்? என்ன ஆகுமோ என்ற அச்சந்தானே!

உரத் தொழில் சம்பந்தமாக அன்னிய நாட்டுக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், அக்கிரம மாக இருப்பதாகக் கருத்தறிவித்தார். இவரை நம்பிக் கொண்டு சில தலைவர்களும் அந்த ஒப்பந்தங்களைக் கண்டித்தனர். ஆனால், காங்கிரஸ் சர்க்கார், இவர் பேச்சை மதித்து நடந்ததா? இல்லை! அன்னியக் கம்பெனிகளுக்குச் சலுகைகள் தந்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. என்ன செய்கிறார்?

பிரச்சினைகள் பற்றிக் கருத்தறிவிப்பதே அத்திபூத்ததுபோல! அப்படி அவர் அறிவித்திடும் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை; மதிப்பளிக்கப்படுவதில்லை; அவர் கூறிடும் கருத்துக்கு முற்றிலும் முரணாகக் காரியங்களைச் செய்து கொண்டு போகிறார்கள்.

ஏகப்பட்ட பணத்தைக் கொட்டி ஐந்தாண்டுத் திட்டத்தை நடத்துவது தவறு என்று கூறி, நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொகை குறைக்கப்பட்டாக வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தபோதே பேசினார்.

நடந்தது என்ன? இவர் பேச்சை ஏற்றுக்கொண்டார்களா? பாரேன், நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காக எவ்வளவு பெரிய தொகை செலவிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை!

எந்தக் கருத்தை ஏற்றார்கள்? ஏத்தி ஏத்தித் தொழு கிறார்களே, எமது காமராஜர்தான் இப்போது இந்தியாவையே நடத்திச் செல்கிறார் என்று; இதுதானா அதற்கான இலட்சணம்?

பாராட்டுதலைப் பெறுவதோடு திருப்திப்படச் சொல்லுகிறார்கள்! பவனி வருவதிலே மகிழ்ச்சி பெறச் சொல்லுகிறார்கள்! கொள்கை - திட்டம் - நிர்வாகம் இவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள்!

இந்த நிலைமை காமராஜரின் மனத்திலே எவ்வளவு வேதனையை உண்டாக்கும் என்பதனை உணர்ந்திடின், தம்பி! அவருக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது என்பது புரிந்துவிடும்; அது புரிந்துவிட்டால், அவர் ஏசுவது அவர் தமது எரிச்சலை அடக்கிக் கொள்வதற்கே என்பதும் புரிந்திடும்.

மாஸ்கோ போனால் என்ன, மன்னார்குடி சென்றால் என்ன, அவருக்கு உள்ள எரிச்சல் தீருவதாகக் காணோம்.

நாடு பல சுற்றிவிட்டுத் திரும்புகிறார்; காலடி கீழே வைத்ததும் அவர் காதில் என்ன விழுகிறது? அமீன்சந்த்! அமீன்சந்த் என்று மக்கள் பேசிக்கொள்வது. என்ன இழவு இது இந்த அமீன்சந்த் விவகாரம் என்று கேட்கிறார்! விவரம் கூறுகிறார்கள், வேதனை குடைகிறது. வேதனை வெளியே தெரியாதிருக்க என்ன செய்ய வேண்டும்? யார்மீதாவது பாய வேண்டும். யார்மீது பாய்வார்?

ஏனய்யா இப்படியெல்லாம் வம்புகளை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்கள்? மக்களின் மனம் ஏற்கெனவே குமுறிக்கொண் டிருக்கிறது. நாள் தவறாமல் ஒரு பிரச்சினை கிளம்புகிறதே! ஏன்? - என்று கேட்க வேண்டும் அமைச்சர்களை! கேட்டால் சும்மா இருப்பார்களா? சிக்கலான கேள்வி!

எனவே என்ன செய்வது? எரிச்சலைக் குறைத்துக் கொள்ளக் கழகத்தை ஏசுவது!! எளிதான காரியம்! சுவையான காரியம்! பழக்கப்பட்ட காரியம்! ஆகவே அதனைச் செய்கிறார்!

ஏசுவது பொருளற்றது, பயனற்றது, நெடுநாட்களாக நடந்து வருவது என்பதனை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆகவே, கவலை கொண்டிடவேண்டிய நிலை நமக்கு இல்லை.

யாழோ குழலோ வாசித்திடின், இராக இலட்சணம் பற்றிக் கவனிக்கலாம். கலகலத்துப்போன போக்கு வண்டி கிளப்பிடும் ஓசை, என்ன இராகத்தில் அமைந்திருக்கிறது என்று ஆராய்ந்திடப்போமோ!

அண்ணன்,

28-8-66