அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மேனி சிலிர்க்குது!. . .

மேயர் தேர்தல் வெற்றி -
நாகர் கிளர்ச்சி.


தம்பி!

நெல்லைச்சீமை சென்றிருந்தேன் - நாலு நாட்கள் - பல இடங்கள் - எழுச்சியூட்டும் நிகழ்ச்சிகள் - எனவே, மடல் அனுப்ப இயலவில்லை. எனினும், திருநெல்வேலிச் சீமையிலே நான் கண்டு அளவளாவி அகமகிழ்ந்திட, பொதுக்கூட்டங்களிலேயும், தனியாகவும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தோற்றத்திலே, கண்ணொளியிலே, கருத்தாழம் மிக்க உரையாடலிலே, புன்னகையிலே, புதியதோர் விறுவிறுப்பிலே, உன்னைக் கண்டேன்! உள்ளத்தால் ஒருவர், வடிவத்தால் வெவ்வேறு என்றன்றோ இன்று நமது கழகத் தோழர்களின் நிலைமை! வாங்க அண்ணா! வாங்க அண்ணாச்சி! தடம் பார்த்து வாங்க! அதோ அந்தாலே பாருங்க! சொதி இன்னும் கொஞ்சம் போடட்டுமா அண்ணாச்சி! - என்று இவ்விதம் மாவட்டத்துக்கு மாவட்டம், பேச்சு எனினும், எங்கும் தமிழ் உள்ளம் தானே காண்கிறோம். அஃதேபோலத்தாம் தம்பிமார்கள் எந்தெந்தச் சீமையில் இருக்கிறார்களோ, அந்தந்த இடத்திலே வழக்கிலே இருந்துவரும் முறைப்படி பேசுகிறார்கள் என்றாலும், எங்கும் ஆர்வமும் எழுச்சியும், நம்பிக்கையும் நல்லுணர்வும், பொங்கிப் பொலிவளித்த வண்ணமிருக்கிறது. பக்குவமாக அமைக்க பூந்தோட்டம் சென்றால், தூய்மையைக் காட்டி நிற்கும் முல்லையும், மல்லியும், அந்திவானத்தை நினைவூட்டும் வண்ணப் பூக்கள் பலவும், வடிவத்தால் வகையால் வெவ்வேறாகத் தெரியும் - காண்பதற்கு அத்தனை பூக்களும் அழகுடன் விளங்கி - எல்லாம் ஒரு சேர மணம் பரப்பி, மனதுக்கு ஈடற்ற ஓர் மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா? அதுபோலவே, கழகத் தோழர்கள், கடலோரம் வாழ்ந்திடுவோராகட்டும், காடிடை உள்ள சிற்றூரில் உள்ளவர் களாகட்டும், வரிசை வரிசையாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளும், கொள்வோரும், கொடுப்போரும் எழுப்பிடும் ஒலிமிகு அங்காடி கொண்டதாக உள்ள சீரூர் வாழ்வோராக இருக்கட்டும். பல கல் பாழ்வெளியைக் கடந்தான பிறகு, பசுமையற்று, பாங்கற்று, வறுமை கொட்டியதால் வடிவம் கெட்டு, பிய்ந்து போயுள்ள கூரைகள், சரிந்து கிடக்கும் மண்சுவர்கள், செல்லரித்துப் போன வாயிற்படிகள் எனும் நிலையிலுள்ள, இருண்ட பட்டிதொட்டியில், பாடுபட்டுப் பலன் காணாமல், பகல் உண்டு, இரவில் அதை எண்ணிக் கொண்டு, படுத்துப் புரண்டு கிடந்திடுவோராயினும், அகில உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வாய்ப்புப் பெற்ற கல்வி வளம் பெற்றோரா யினும், மலையும் மடுவும், வயலும் வாவியும், கருகிய மொட்டும் கசந்த கரும்பும், வாலிப நரையும் வயோதிகர் உழைப்பும், கந்தலாடையும் காச இருமலும் என்பனவற்றையே, பாடம் தந்திடும் பள்ளிகளாக்கிக்கொண்டுள்ள குறிச்சியில் உழல்வோ ராயினும், எங்கும் எவரிடமும் தம்பி! இன்று, இதுநாள்வரை நான் கண்டிராத ஓர் ஆர்வம், தமக்கு ஓர் நல்ல எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது, அந்தத் தூயத்தொண்டிலே நமது கழகம் ஈடுபட்டிருக்கிறது, ஈடுபட்டிருப்பதால், இல்லாதானை ஏய்த்து ஏய்த்துக் கொழுத்திடும் வல்லான், அந்தக் கழகத்தை அழித்திடத் துடிக்கிறான். எனவே, நாம் நொந்து கிடப்பினும், நமக்காகப் பணியாற்றும் கழகத்துக்குத் துணை நிற்க வேண்டும் என்ற ஓர் விதமான "பந்தபாச' உணர்ச்சி உருவாகி இருப்பதைக் காண்கிறேன். மாடோட்டும் சிறார் முதல் காரோட்டும் தொழிலாளிவரை, கரும்பு பயிரிடும் காராளரிலிருந்து இரும்பு காய்ச்சி அடித்திடும் உலைக்கள உழைப்பாளி வரையிலே, ஏதோ ஓர் விதமான - என்னால் தெளிவாக விளக்கக் கூட முடியவில்லை - பற்றுக்காட்டுவது தெரிகிறது, துணை நிற்க இசைவது புரிகிறது, தோழமை கொண்டாடுவது காண்கிறேன். அத்துணை பேரும், ஐயந்திரிபற, நமது கொள்கைகளை அறிந்து கொண்டார்களா, அலசிப்பார்த்தார்களா, அடுக்கடுக்காக மாற்றார்கள் ஏவிடும் கண்டனங்கள், கருத்துள்ளனவா, அன்றிக் காழ்ப்பின் விளைவா என்பது பற்றியேனும் விளங்கிக்கொண்டனரா, என்று அவர்கள் தமது இதயத்தை வழங்கிடும்போதெல்லாம், நான் எண்ணி எண்ணிப்பார்க்கிறேன் - வியப்புறுகிறேன். அத்துணை ஆர அமர இருந்து ஆராய்ச்சி நடத்திட, அவர்கட்கு ஓய்வும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. எனினும் நம்மிடம் ஓர் பற்று நாம் அவர்களுக்காக என்ற ஓர் நம்பிக்கை, அந்த மக்களிடம் ஏற்பட்டி ருக்கிறது - கழகத்தை மாற்றார்கள் தாக்கத் தாக்க, இழிமொழியினர் பழிச்சொற்களை உமிழ உமிழ, அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது, வளருகிறது, உரம் ஏறுகிறது! வைரம் பாய்ந்தது என்கிறார்களே - அதுபோல.

தம்பி! பாரதியார் பாடலொன்று நான் அடிக்கடி கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அதிலே ஓரிடத்தில், மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி - என்றிருக்கும். அதன் முழுப் பொருளை உணர வேண்டுமானால், நமது கழகத்தோழர்களில் எவருக்கேனும், ஒரு ஊராட்சி மன்றத்திலே வரவேற்பு அளிக்கப் படும்போது, மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டுரை வழங்கிப் பரிவுகாட்டிடும்போது, விழாக் காணக் கூடிடும், நமது கழகத் தோழர்கள் களிநடமாடிடுவதைக் காண வேண்டும்! உள்ளபடி அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது! நமது கழகத்தவருக்கு, நமது தோழருக்கு இந்தச் சிறப்பு நடக்கிறது! ஏற்றம் பெறுபவர், பாராட்டுத்தாளை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து நிற்போர் மட்டுமல்ல, கழகம் ஏற்றம் பெறுகிறது; கழகத்துக்குப் பாராட்டுக் கிடைக்கிறது என்று எண்ணி எண்ணி, மகிழ்ச்சியால் துள்ளுகிறார்கள். ஊராட்சி மன்றங்களுக்கு, வரவேற்புக் கொடுப்பது, வாடிக்கையாகிப் போயுள்ள அலுவலாகிவிட்டிருக்கிறது என்று கூடக் கூறலாம். எனவே ஊராட்சி மன்றத்தினர் "உளங்களிந்து வரவேற்புத் தரும்போது, அவர்களுக்கு, புதியதோர் களிப்புப் பூத்திடக்கூடச் செய்யாது. பலமுறை வரவேற்புகள், பல திறப்பட்டவர்களுக்கு வழங்கி, வழங்கி, பழகிப்போய் விட்டிருக்கிறார்கள். நான் இந்தச் சுற்றுப் பயணத்தின்போது காயல்பட்டினம் ஊராட்சி மன்றத்தின் வரவேற்பினைப் பெற்றேன். விழாவுக்காக அழகிய பந்தல் அமைத்திருந்தனர். அதே இடத்தில், காயிதேமில்லத் முகமது இஸ்மாயில் அவர்களுக்கு முன்னால் ஊராட்சி மன்றம் வரவேற்வு அளித்ததாகவும், மறுநாள் அன்பர் ஆச்சாரியாருக்கு வரவேற்வு ஏற்பாடாகி இருப்பதாகவும் அறிந்தேன். இதுபோலத் தான் ஊராட்சி மன்றங்கள் பல்வேறு தரத்தினருக்கு, வரவேற்புகள் வழங்குகின்றன! எனவே, அவர்களுக்கு, மேனி சிலிர்த்திடக் காரணம் இருக்காது. செருக்குடன் செப்புகிறேனோ என்று எவரும் எண்ணிவிட வேண்டாம் - உள்ளதைச் சொல்லுகிறேன் - எனக்கு இத்தகைய வரவேற்புகளைப் பெறும்போது மேனி சிலிர்ப்பது இல்லை. ஒரே ஒருமுறை, என் மேனி சிலிர்த்ததுண்டு - அது, மீண்டும் திரும்பி வரமுடியாத "அந்தக் காலத்தில்' - ஈரோடு நகராட்சி மன்றத்தின் வரவேற்பு எனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பெரியார் முன்னின்று நடத்திய விழா - ஊர்வலமாக, பழையகோட்டைக் காளைகள் பூட்டிய வண்டியிலே நான் அமர்ந்து கொண்டிருக்க, வெண் தாடி காற்றினிலே அசைந்தாட, திராவிடச் செங்கோலாகிடத் தக்க வலிவு பெற்ற கைத்தடியை ஏந்திக் கொண்டு, அரிமா நோக்கு இதுதானோ என்று எவரும் எண்ணிடத்தக்க தனியானதோர் பார்வையை இப்புறமும் அப்புறமும் செலுத்திக் கொண்டு, பெரியார் ஊர்வலத்தில் நடந்து வந்தபோது - அன்று - உள்ளபடி எனக்கு மேனி சிலிர்த்தது. இப்போது, மேனி சிலிர்த்திடுவது இல்லை! நன்றி கொள் உள்ளம் உண்டு!

ஆனால், நமது தோழர்களுக்கு, இப்படி ஒரு வரவேற்புக் கூட்டம் கண்டால், ஊராட்சிமன்றத் தலைவர் மாலையை அணிவிக்கக் கண்டால், அடே அப்பா! என்ன களிப்பு! எத்துணை பெருமை! என்ன பூரிப்பு! மேனி சிலிர்க்கிறது! ஒருவரில் மற்றவர், என்றாகிவிட்டோம். நாம் எவ்வளவு தூரம் கலந்து போயிருக்கிறோம். நமக்குள் ஏற்பட்டுவிட்டுள்ள தொடர்பு, அரசியல் கட்சிகளிலே காணக்கிடக்கும், சதுரங்கக் காய்களின், இடம்பெறும் வகையினது அல்ல - இது, நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும் நிலை! தம்பி! எதை வேண்டுமானாலும் இழந்து விடலாம், மீண்டும் பெறலாம், எற்றுக்கு என்று கேட்டு அலட்சியப்படுத்தி விடக் கூடக் கூடச் செய்யலாம். ஆனால், அது இருக்கிறதே, "நெஞ்சோடு நெஞ்சம் உறவாடிடும்' தன்மை. நாம் இழக்கக்கூடாத செல்வம் - வேறு எந்தக் கட்சியிலும் காணக் கிடைக்காத கருவூலம் - பழங்காலத்துக் கதையொன்று உண்டு, கடவுளர் சிந்திடும் கண்ணீர்த்துளிகளே, கடலிடை முத்துகளாக மாறின என்று - நமக்குள், ஏற்பட்டுவிட்டுள்ள இந்த இழைந்துள்ள இதய உறவு, நாம் தனியாகவிடப்படுகிறோமே, திக்குத் தெரியாத காட்டிலே, சிறகு வளராத நிலையிலே கிளம்பிடும் புள்ளினம்போலானோமே, நமது எதிர்காலம் யாதோ? இருள் மருட்டுமோ, ஒளிக்கீறலாகிலும் கிடைக்குமோ, என்று எண்ணி, ஏக்கமுற்று, இந்நிலை ஏற்பட்டு விட்டதே என்று கசிந்து உதிர்த்த கண்ணீர்த் துளிகள், தம்பி! நான் குறிப்பிடும் கருவூலமாகி விட்டிருக்கிறது. இதை இழந்து, மற்ற எதைப் பெறுவதும், கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்.

இம்முறை, என்னைக் காணும்போது, நமது தோழர்களுக்கு, மகிழ்ச்சி பொங்கிட மற்றோர் காரணம் இருந்தது - மேயர் தேர்தல்.

ஊரூருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், இம்முறை மூக்கறு பட்டு விடும், முக்காடிட்டு மூலைக்குச் செல்வார்கள், மேயர் ஆக முடியாதது மட்டுமல்ல, பிளவு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் - பாருங்கள் அந்த வேடிக்கையை - என்று நிறையப் பேசி வைத்திருக்கிறார்கள். வெடிகள், வாணங்கள், அறிவிப்புப் பலகைகள், உர்வல ஏற்பாடுகள் எல்லாமே தயாராகிவிட்டிருந்ததாம், காங்கிரஸ் வட்டாரத்தில் - பல ஊர்த் தோழர்கள் கூறினர். மேயர் தேர்தலில், கழகம் தோற்றது என்ற செய்தி கிடைத்திடும். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு, சங்கு ஊதிக்கொண்டு, "சாவு' ஊர்வலம் நடத்த வேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டிருந் தனராம்; எனவே, நமது தோழர்கள், நெருப்பின்மீது நின்று கொண்டிருந்தார்கள்! வெற்றி கிடைத்ததும், தந்தையிடம் சென்று தகதகவென ஆடிடும் மகனும், தம்பியின் முதுகினைத் தட்டிக் கொடுத்திடும் அண்ணனும், அரும்பு மீசையை மேலும் அழகுதர முறுக்கியபடி, அது கீறிடுவதால் கன்னத்துக் கதகதப்புக் கண்ட, காதலி முன்றின்று, எப்படி என் வெற்றி! என்று கேட்டிடும் காதலனும், ஆக இப்படி எல்லாம் ஆகிவிட்டிருக் கின்றனர். நமது தோழர்கள். என்னைக் காணவே அவர்களுக்கு, மேலும் மகிழ்ச்சி பொங்கிற்று! மேனி சிலிர்த்த நிலை!! மேயர் பதவி, முதலமைச்சர் நிலைபோன்றது அல்ல - தெரியும் - புரிகிறது - ஆனால், அந்த இடம் நமக்குக் கிடைப்பது, நாம் வெற்றிப் பாதையிலேதான் சென்றுகொண்டிருக்கிறோம் என்தையன்றோ எடுத்துக் காட்டுகிறது - உரியவளைக் காணா முன்பே, அவள் வளை ஒலிகேட்டு இன்புறுவது உண்டன்றோ! அஃதேபோல!!

"ஏன் அண்ணா! இருவர் கேட்டார்களே, வாய்ப்பு அளித்திடும்படி - என்ன காரணம் கொண்டு, முனுசாமியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, ஒருவராவது கேட்க வேண்டுமே! உஹும்! ஒருவரும் கேட்கவில்லை. அத்துணை அலட்சியமா பிரச்சினையிலே, அல்லது என்னிடம் உள்ள நம்பிக்கையின் ஆழமும் அழுத்தமும் அவர்களைச் சிந்திக்க வைக்கவில்லையா, என்றால், தம்பி! அது அல்ல - அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள் - கழகத்துக்கு வெற்றி - கபடத்தை வீழ்த்திப் பெற்ற வெற்றி - தொடர்ந்து வெற்றி - இந்த எண்ணம், அவர்களை வேறு எது குறித்தும், நினைத்திட வைக்கவில்லை. மழலை பேசிடும் மதலை, தனக்கென்று தந்த கனியைக் குழப்பி, நமது வாயிலே திணித்திட, அதை குதப்பிக் கொண்டிருக்கும் போது, பெற்றளித்த பெருமாட்டி, என்ன ஒரே கொஞ்சல்! என்று கேட்க, உள்ளத்தை வென்றான், பதில் சொல்வது, எப்படி இருக்கும்! வார்த்தைகள் தெளிவாக இரா - கனி போலவே குழம்பிக் கிடக்கும் - கனியினும் இனித்திடும்! அது போன்ற முறையில்தான், நமது கழகத் தோழர்கள் மேயர் தேர்தல் பற்றிப் பேசினர், உள்ளம் நெகிழ்ந்து, மேனி சிலிர்த்திடும் நிலை!

எனக்கே, தம்பி! மேயர் தேர்தலிலே, நாம் பெற்ற வெற்றி எத்துணை மகிழ்ச்சிக்குரியது என்பது, ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் மேனி சிலிர்த்த நிலையில் இருந்ததைக் கண்டபோது தான், பளிச்சென்று தெரிந்தது. செடியில் உள்ள மலர், செண்டாகி, சேரிடம் அறிந்து சேர்ந்த பிறகு, தனியான, புதிய, கவர்ச்சி பெற்று, அளிக்கிறதல்லவா! அதுபோல!!

இந்த மகிழ்ச்சியைத் தேடிப்பெற்று, திருநெல்வேலிச் சீமையிலே, நண்பர்கள் E.V.இராசகோபால், அன்பில் தருமலிங்கம், மதுரை முத்து, மதுரை துரை அரசு, பாண்டி, நெல்லை இரத்தினவேலு பாண்டியன், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் உடனிருந்து உவகையை உயர்வானதாக்கிட, மதுரை டாக்டர் அருணாசலம் அவர்கள், வழிமடக்கி விருந்தளித்துக் களிப்பூட்ட, நாலு நாட்கள் சுற்றிவிட்டு வந்தேன். நாலாயிரத்து ஐம்பது ரூபாய், தேர்தல் நிதி, தந்தனர் - பெற்று மகிழ்ந்தேன் - எனினும் ஒரு கணம்தான் - என்னையோவெனில் அது போய்ச் சேர வேண்டிய இடம் போய்ச் சேரட்டும் என்று, டாக்டர் வாங்கிக் கொண்டார், பொருளாளர் கருணாநிதியிடம் சேர்ப்பிக்க!!

கேட்டது கிடைத்ததா என்று கேட்கத் தோன்றுகிற தல்லவா, தம்பி! நான், இவ்வளவு தர வேண்டும் என்று கேட்கவில்லை; ஆனால் நெல்லை மாவட்டச் செயலாளர் சிவசாமி, நாலாயிரம் தருவதாக வாக்களித்தார், நிறைவேற்றியு மிருக்கிறார் - ஆனால், இது முதல் தவணை - அவரறிவார், அறிந்தோர் அவர் பணி விரைவிலே வெற்றிபெற உடனிருந்து செயலாற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

தம்பி! தேர்தல் செலவுக்காக, காங்கிரஸ் கட்சியினால் இலட்ச இலட்சமாகப் பணத்தை மிக எளிதாகத் திரட்ட முடியும். பட்டப்பகலில் சட்டத்தின் கண்களைப் பணத்திரை போட்டு மூடிவிட்டு, கொள்ளை கொள்ளையாகப் பணத்தைக் குவித்துக் கொண்டுள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு வலியச் சென்றும் பொருளைக் கொட்டிக் கொடுப்பர் என்பதும் புரிகிறது, என்றாலும், நாம், ஏழை எளியவர்களின் சார்பிலே, பணியாற்ற, தேவைப்படும் தொகையினைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை, நமது தோழர்களுக்கு, நிரம்ப இருக்கிறது. அதிலே நமக்கு வெற்றியின் அறிகுறிகள் தென்படும்போதே, நமது கழகத் தோழர்களுக்க மேனி சிலிர்க்கிறது.

கொளுத்தும் வெயிலில் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயில்பட்டிக் கூட்டம். இசைபாடுவோர், இராக இலாபனை நடத்தி, கீர்த்தனங்கள் பாடி, பக்க வாத்தியக்காரருடன் வித்தைகள் செய்துகாட்டி, திருப்புகழ், காவடிச்சிந்து, அருட்பா என்று இப்படி எல்லாம் பாடுவார் - என்ன பாடினாலும் பணம் வராது! கடைசியில் மங்களம் பாடி முடிந்த பிறகுதான் பணம் தருவார்கள். அதுபோல் நள்ளிரவுப் பேச்சு, மழையின் ஊடே பேச்சு, என்று பல ஊர்களில் - நெல்லையிலும் தூத்துக்குடியிலும் சிறப்புச் சொற்பொழிவுகள் - எனினும் பணம் தந்தாரில்லை, நண்பர் சிவசாமி - கோயில்பட்டியில் "மங்களம்' பாடியபோது, நாலாயிரம் தந்தார். தம்பி! அந்தத் தொகையை ஒரு தட்டிலே (பித்தளைத் தட்டுதான்!!) வைத்து, என்னிடம் தந்த உடனே, பார்க்க வேண்டுமே அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை!! மேனி சிலிர்த்தது!! நமது கழகம் தேர்தல் நிதி திரட்டுகிறது - அதற்கு நாலு ஆயிரம் கிடைத்தது - என்பது காணும்போது அவர்களுக்கு மேனி சிலிர்க்கிறது. காங்கிரசுக்குப் பணம் சேருகிறது. இலட்சக் கணக்கில் - அது ஒரு பிரமாதமாகத் தோன்றுவதில்லை. நமது கழகத்தவருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கேகூட - ஏனெனில், காங்கிரஸ், கோடீஸ்வரர்கள் உள்ள கட்சி, அதிலே இலட்சக் கணக்கிலே பணம் திரட்ட முடிவதிலே, ஆச்சரியப் படவோ, செயலாற்றியவர்களைப் பாராட்டவோ என்ன இருக்கிறது. பணம் படைத்தோன், வெள்ளித் தட்டிலே வைத்தளிக்கப்படும் பாதாம் அல்வாவில், கால் பாகம் தின்கிறான்; தின்னும்போதுகூட கிடைத்திருக்கவேண்டிய கால் இலட்சம் இலாபத் தொகை குறைந்துவிட்டதை எண்ணிக் கொண்டு விட்டால், இனிப்புப் பண்டமே கசப்பாகிப் போகிறது. பாடு பட்டவன், பெற்ற பணத்தைக்கொண்டு, செட்டாகக் குடும்பம் நடத்தும் இல்லாள், அன்புடன் அளித்திடும் உண்டியை அவளுடன் உரையாடிக்கொண்டே உண்டு மகிழ்பவன், கடைசி உருண்டையைக் குதப்பியபடி இலையோடு ஒட்டிக் கொண்டு விட்டிருக்கும் ஊறுகாயை எடுக்க முயலுவது கண்ட இல்லத்தழகி குறுநகை புரிந்து, இலை பிய்த்துக் கொண்டு வந்துவிடப் போகிறது! - என்று கேலி பேசிட, வெட்கத்தை வெறும் சிரிப்பால் மறைத்தபடி, ஊறுகாய் கிடைக்கா விட்டாலும் அதைத் தொட்ட விரலைச் சுவைத்திடுகிறானே, அப்போது அவனுக்குக் கிடைத்திடும் சுவையும், அது அளித்திடும் மகிழ்ச்சியும், பாதாம் அல்வா சாப்பிட்ட பத்து இலட்சத்தாருக்குக் கிடைக்குமா, என்ன!

நாம் தேர்தல் நிதி திரட்டுகிறோம் - சிறு தொகை - அதற்குப் பெரும்பாடு என்றாலும், அதிலே நாம் வெற்றி காணும்போது, ஏழைக்கு ஊறுகாய் தொட்ட கைதரும் சுவை காண்கிறோம். இல்லத்தில் உண்கிறோம்! இல்லக்கிழத்தி அருகே இருக்கிறாள், எந்தப் பண்டத்திலே எந்தச் சுவை குறைந்திருந் தாலும், இன்மொழியால், புன்னகையால், ஈடுசெய்து மகிழ்வளிக்க! பாடுபட்டுப் பிழைக்கிறோம் என்ற எண்ணம், தேனாகிறது!!

அஃதேபோலத்தான் தம்பி! தேர்தல் களம் செல்கிறோம், பதவி பறிக்க அல்ல; தாயகம் காண, களம்பல சென்றாக வேண்டும், அதிலே இது ஒன்று என்ற உணர்வுடன், அங்கு செல்ல, இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று எண்ணும் போதே மகிழ்ச்சி பொங்கிவழியத்தானே செய்யும். அதற்கான தொகையினைத் திரட்டிட முடியும், திரட்டித்தரத் தோழர் களால் முடிகிறது, திரட்டச் செல்லும்போது, பொதுமக்கள், ஆதரவு தருகிறார்கள் என்பது நமக்கு, இன்ப உணர்ச்சிகளை, எடுத்ததை முடித்திடுவோம் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

நாலு ஆயிரம் என்று நண்பர் அறிவித்ததும், கூடியிருந்தோர், கையொலி செய்தனர் - களிப்பினைக் காட்டிட! ஏன்? அவர்கள், அதுவரையில் ஆவலுடன் - அச்சம் கலந்த ஆவலுடன் அமர்ந்திருக்கிறார்கள் - நல்ல தொண்டாற்றத்தான் பணம் கேட்கிறார்கள், தரவேண்டும் என்று மனம் கூறுகிறது, மடியோ நமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது - மிகமிகச் சிறிய தொகைதான் நம்மாலே கொடுக்க முடிகிறது - நம்மைப்போலத்தானே மற்றவர்கள், நம்முடன் உள்ளோரில் பெரும் பாகம் - இவர்கள் சேர்ந்து கொடுக்கும் தொகை, எப்படி அதிகமாக இருக்க முடியும் - ஒரு ஐந்நூறோ ஆயிரமோ சேருவதே கடினம் - என்று எண்ணி ஏக்கத்துடன் இருக்கின்றனர். அந்த நிலையில் நாலாயிரம் என்று அறிவிக்கப்பட்ட உடனே அவர்களுக்கு பெருமை கலந்த களிப்பு! நம்மாலே நாலாயிரம்! நமது கழகத்துக்கு நாலாயிரம் நாம் சிறு தொகைதானே கொடுத்தோம் என்று ஆயாசப்பட்டுக் கொண்டோம், சிறுதுளி பெருவெள்ள மாகிறது! இதோ நாலாயிரம்! இதே முறையிலே முயன்று பணியாற்றினால், கழகம் குறித்துள்ள தொகையைச் சேர்த்து விட முடியும்! - தம்பி! இதுபோன்ற எண்ணங்கள், அவர்களை மேனி சிலிர்த்திட வைக்கிறது.

நாகர்களின் விடுதலைக் கிளர்ச்சி, நம்முடையது போல அல்ல - அது காங்கிரசாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிக்கு அண்ணனாகிவிட்டது. இந்திய துரைத்தனம் பல நூறுகோடி ரூபாய் செலவிட்டு அமைத்துள்ள படைபலம், நாகர்களை அடக்க முடியவில்லை - இன்றுவரை. அதற்கு மாறாக, சின்னாட்களுக்கு முன்பு டில்லி அனுப்பிவைத்த படையினரில் நான்கு பேர்களை, விமானப்படையைச் சேர்ந்தவர்களை, நாகர்களின் விடுதலைப் படையினர், சிறைபிடித்து விட்டனர். டில்லி அரசிடம் உள்ள படை மிகப்பெரியது! அதிலே நாலே நாலுபேர்தான், நாகர்களிடம் பிடிபட்டனர். ஆனால், அந்தச் செய்தி கேட்டதும், நாகநாடு முழுவதும் தலைநிமிர்ந்தன்றோ நின்றிருக்கும்! எம்மை அழிக்கவந்தவர்கள் - எம்மிடம் பிடிபட்டார்கள் - கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம் என்றன்றோ விடுதலைப் போரைத் தொடர்ந்து நடாத்தி வரும் நாகர்கள் பெருமிதத்துடன் கூறுவர். அம்மட்டோ! நாகர்களை அடக்க, அழிக்க, ஏவப்பட்ட டில்லிப் படையினைச் சேர்ந்த நால்வரை, நாகர் சிறை பிடித்தனர் என்று கேள்விப் பட்டதும், விடுதலை வீரர்களாம் நாகர்களுக்கு மேனி சிலிர்த்துத் தானே போகும்!!

தம்பி! கேள்விப்பட்டால் நாமே, மேனி சிலிர்த்திடும் நிலை பெறுவோம் - அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது, இதை ஒட்டி,

பிடிபட்டவர்களைத் தேடி அலைகிறார்கள், டில்லி அரசினர். அந்த டில்லி அரசுக்கு, நாகர்களின் விடுதலை இயக்கம், சொல்லி அனுப்புகிறது, "சிறைப்பட்ட நால்வரை விடுதலை செய்து விடுகிறோம்; விடுதலை செய்துவிடும்படி, டில்லி அரசு எங்கள் நாகநாட்டு அரசைக் கேட்டுக்கொண்டால்'' என்பதாக! கேட்கும்போதே மேனி சிலிர்க்கும், பேச்சல்லவா இது! டில்லியில் ஒரு அரசு - நாகநாட்டில் ஒரு அரசு! முன்னையது பெரிதாக இருக்கலாம், நாகருடைய அரசு அளவு சிறியதாக இருக்கலாம் - எனினும், நிலையில், இரண்டும் ஒன்றே! இதுவும் அரசு, அதுவும் அரசு!! - என்று எடுத்துக்காட்டும், விடுதலை வீரம் கொழுந்துவிட்டெரியும் ஆர்வப் பேச்சல்லவா, அது! எனவேதான் மேனி சிலிர்க்கிறது.

மலைவாழ் மாவீரர்கள் தமக்கென்று வகுத்துக் கொண்ட முறைப்படி, விடுதலைப் போரினை நடாத்தி வருகின்றனர். வீரச் செயல்கள் நிகழும்போது, நாகர்களின் மேனி சிலிர்க்கிறது.

நாம், திராவிட விடுதலைக்கு வகுத்துக் கொண்டிருப்பது, அறவழி நின்று உரிமைக்கான கிளர்ச்சி நடாத்துவது; அதற்கான களங்களிலே ஒன்று, தேர்தல் களம்; அந்தக் களம் சென்று பணிபுரிந்திட, பொதுமக்களின் நல்லாதரவு மிகமிகத் தேவை. சிவசாமி திரட்டித் தந்த நாலாயிரம், இந்த ஆதரவு தர, மக்கள் தயாராக உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவது கண்டுதான், கழகத் தோழர்களின், மேனி சிலிர்க்கிறது. அண்ணா! என்று அழைத்து மதுரை முத்து, நான் தந்தது ஐந்து ஆயிரம் - என்று என்று கவனப்படுத்துகிறார். அதுமட்டுமல்ல! இந்தத் திங்கள் இறுதியில் இன்னும் பெற வருக என்று அழைக்கிறார்.

அந்த மாவட்டங்கள், இரு முறை வரவழைத்துத் தரும் தொகையை எமது மாவட்டம், ஒரே நாளில் தர இருக்கிறது என்று சுவையூட்டுகிறார், வடாற்காடு மாவட்டச் செயலாளர் தருமலிங்கம். எவ்வளவு என்று கேட்டு அவரே பதிலளிக்கிறார், பதினைந்தாயிரம் என்று.

இந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுடன் உறவாடி மகிழ்ந்து கொண்டிருப்பதனால்தான், தம்பி! ஊர் விஷயம், உலக விவகாரம், இவைபற்றி எழுதாமல், நமது குடும்ப விஷயமாக மட்டும், குதூகலப்படத்தக்க பகுதியை இந்தக் கிழமை எழுதினேன். மகிழ்ந்திரு. ஆனால், விழிப்பாக இரு! பணியாற்றியபடி இரு; புதிய நம்பிக்கையுடன் நாடு நமது நோக்கத்தை அறிந்து, ஆதரவு தரும் கட்டம் பிறந்திருக்கிறது, மேனி சிலிர்க்கிறது!

அண்ணன்,

18-12-1960