அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மலர் மணம்

கழக ஏடுகள் பயன் தரத்தக்க படைக்கலன்கள்!
சுமை அதிகம், பாடும் அதிகம்!
நாட்டுக்கு எழில், ஆட்சிக்கு ஏற்றம் தருவது "காஞ்சி'!

தம்பி!

சிரித்திடும் முல்லையைப் பறித்திடும்போது, அதனைத் தன் உள்ளம் வென்ற எழிலுடையாள் ஏற்றுக்கொள்வாள், மணம் கண்டு மகிழ்வாள், எழில் எழிலுடன் சேர்ந்திடும் என்ற எண்ணம் கொள்ளாத காதலன் உண்டா?

வாளினை வடித்தெடுத்துக் கொடுத்திட உலைக் கூடத்தினில் பணி புரிவோன், இந்த வாள், வீரன் கரம் சேர்ந்து அக்கிரமத்தை வெட்டி வீழ்த்தப் பயன்படும், உரிமை காத்திடத் துணை நிற்கும் என்ற நம்பிக்கை பெற்றிடும்போதுதானே அவன் வேலைத் திறன் நேர்த்திமிக்கதாகும்?

சொல்லழகும் பொருளழகும் இழைந்துள்ள நற்கவிதை இயற்றிடுவோன் அக்கவிதையினைச் சுவைத்திட, பயன்பெற்றிட இசைந்து வந்திடுவோர் உளர் என்ற உணர்வினைப் பெற்றா லொழிய உள்ளத்திலிருந்து கவிதா சக்தி சுரந்திடுமா?

எடுத்துக் கொள்ளும் எந்தச் செயலினையும் பாராட்டி வரவேற்றிடவும், ஏற்றுப் பயன்படுத்திக்கொள்ளவும் தக்கார் உளர் என்ற எண்ணம் மேற்கொள்ளும் செயலினைச் செம்மை யானதாக்கிடுமல்லவா?

தாயின் அன்பினைப் பெற்றிட வாய்ப்பற்ற குழந்தை எத்தனை அழகுடன் விளங்கியும் பயன் என்ன?

இதழ் நடாத்தப்படுகிறது, மலர் வெளியிடப்படுகிறது. ஆயினும் அவற்றினைப் பெற்றிடுவதில் மகிழ்ச்சியும், பயன் பெறுவதில் சுவையும் தேடிடுவோரின் தொகை மிகுதியாகவும், வளர்ந்த வண்ணமும் இருந்தாலொழிய, எண்ணங்களை வடித்தெடுத்து இதழிலும் மலரிலும் தந்து வருவது எற்றுக்கு என்ற ஏக்கமல்லவா மனத்தினைக் குடைந்திடும் என்பதுபற்றிய எண்ணம், இவைபற்றிய நினைவினைக் கொண்டுவந்து சேர்த்தது.

ஆனால், கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் அத்தகைய கவலை குடைந்திடும் நிலையினை மூட்டிவிடவில்லை. "காஞ்சி' இதழினுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளித்து வருகின்றனர். மகிழ்ச்சி! நன்றி.

"காஞ்சி' இதழும், கழகக் கருத்துக்களைப் பரப்பிவரும் மற்றைய இதழ்களும், முழுக்க முழுக்கத் தம்மைக் கழகத்திடம் ஒப்படைத்துவிட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதாகும்.

ஏழெட்டுத் துணையாசிரியர்கள், மூன்று நான்கு ஓவியர்கள், சுறுசுறுப்பு மிக்க விளம்பரத் துறைக் குழுவினர் ஆகியோர் புடைசூழ ஆசிரியர் அமர்ந்தபடி, கண்களை மூடியபடி இந்த இதழில் என்ன வண்ணம் காட்டிடலாம், எந்தச் சுவையைக் கூட்டிடலாம் என்று சிந்தித்துப் பார்த்து எழில் ஏடுகள் பலவற்றினை ஒப்பிட்டுப் பார்த்து, வனப்பு மிக்க விதமான இதழினைத் தந்திடும் வகை காண்பது என்பதெல்லாம், வேறு இதழ்களில்; கழக இதழ் நடாத்துவோர் மாலையில் மன்னார்குடி, காலையில் காட்பாடி, மறுநாள் போடி, மற்றோர் நாள் சேலம், பிறிதோர் நாள் ஈரோடு என்ற முறையில் சுற்றிச் சுழல்பவர்கள். உடலிலே அலுப்பு ஏற்படும் என்பதனை எடுத்துக்காட்ட இதனைக் கூறிடவில்லை; ஓய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு நிம்மதியாகச் சிந்தித்து இதழினுக்குச் சுவைகூட்டிடும் நிலையில் உள்ளவர்கள் அல்லர் என்பதனை எடுத்துக் காட்டத்தான்.

பிற இதழ் நடாத்துவோர்போல, இதனையே தமது முழு நேர வேலையாகவோ, முதல் வேலையாகவோ கொண்டவர்கள் அல்லர்.

கழக இதழ் நடாத்துவோர் மேற்கொண்டுள்ள பணி, ஒரு புத்தரசு காண்பது; அதற்குத் தக்கவிதமான பாசறையாகக் கழகத்தை வலிவுள்ளதாக்குவது.

அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக அவர்கள் தேடிக்கொள்ளும் படைக்கலன்களில் ஒன்று, இதழ்!

அந்தப் படைக்கலன் வண்ணம் மிக்கதாக விளங்கிடச் செய்திடவேண்டுமே என்பதிலே மட்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத நிலையினர்.

ஆனால், அதேபோது அந்தப் படைக்கலன், பயன் தரத் தக்கதாக இருந்திட வேண்டும் என்பதிலே கண்ணுங் கருத்துமாக உள்ளவர்கள்.

இந்த நிலை காரணமாகவே இதழில் எழிலினை மிகுதியாக்கிட, கண்களைக் கவரத்தக்க வடிவம் கொடுத்திட முடிவதில்லை.

இதழ் நடத்துவது ஒன்றை மட்டுமே மேற்கொண்டிடின், எழில் ஏடு என்று எவரும் வியந்து பாராட்டிடத்தக்க முறையினில், நமது கழகத் தோழர் எவரும் இதழ் நடாத்திடலாம். இயலாத ஒன்று அல்ல! ஆனால், நாம் மேற்கொண்டுள்ள பணியின் அளவும் தன்மையும் நம்மை ஏட்டுக்கு எழிலூட்டும் வேலையிலே மட்டுமே நாம் பிணைந்துவிட இடம் தருவதில்லை.

இந்த நிலையிலும், கூடுமான வரையில், இதழிலே பொலிவு விளங்கிடச் செய்வதில், இளங்கோவன் ஈடுபட்டு, "காஞ்சி' இதழினுக்கு ஒரு கவர்ச்சி கிடைத்திடச் செய்து வருவதனைப் பலர் பாராட்டிடக் கேட்டு மகிழ்ச்சி கொள்கின்றேன்.

"காஞ்சி' இதழின் இந்த இரண்டாம் ஆண்டு மலர், எழில்மிகு வடிவம் பெற்றிட முனைந்து பணியாற்றி அனைவருக்கும் அகமகிழ்ச்சி அளித்திடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கும் நிலையினைக் காண்கின்றீர்கள்.

மலரில், இடம்பெற என்னிடமிருந்து கட்டுரைகளைப் பெறுவதென்பதே ஒரு தனிக் கலை! சற்றுக் கடினமான கலையுங்கூட!

கட்டுரைகளை - அதிலும் மலருக்கு என்று தனித் தன்மை வாய்ந்த கட்டுரைகளை - எழுதிட எனக்குக் கிடைக்கும் நேரமே, நள்ளிரவுக்கும் விடிவதற்கும் உள்ள நேரம் - அதிலேயும் கழகத் தோழர்கள் தங்கள் பிரச்சினைகளுடன் வாராதிருந்திடின்.

ஆனால் இந்த நிலையிலும் இதழ் மூலம் என் உடன் பிறந்தாருடன் தொடர்புகொள்வதிலே எனக்குள்ள பேரார்வம், என்னை எப்படியோ பணிபுரியச் செய்கிறது.

ஒவ்வொன்றையும் கூறிவிடவேண்டும், கூறிடும் ஒவ்வொன்றும் முழு அளவினதாக இருக்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு.

கூறித் தீரவேண்டியவைகளோ மிக அதிகம் அளவில்; அந்த அளவு வளர்ந்துகொண்டும் வருகிறது.

உலக நடவடிக்கைகளைப்பற்றி, உள்ளத்து எழும் உணர்ச்சி களைப்பற்றி, ஊராள்வோர் போக்குபற்றி, அதனை மாற்றியாக வேண்டிய முறைபற்றி, கூறிட ஆயிரம் உள.

பிரச்சினைகள் கூவிக் கூவி அழைக்கின்றன.

எந்தக் கருத்துக்கும் இனிமை சேர்த்திட, நான் உளேன் காண்க! என்று தமிழ் இலக்கியம் அழைக்கிறது.

ஆதிக்கத்தை எதிர்த்திடும் ஆற்றலை மக்களிடம் எழச் செய்திட வேறு எதுவும் செய்திட வேண்டாம், நான் உள்ளடக்கி வைத்துக்கொண்டுள்ள கருத்தோவியங்களைப் பார், அவை களைப் பக்குவப்படுத்தித் தந்திடு, அது போதும் என்று வரலாற்றுச் சுவடி கூறுகிறது.

கூறவேண்டியதற்கு வண்ணம் தேவையா? நல்வடிவம் தேவையா? நாடக வடிவினில் கொடுத்திடு, படிப்போர் உள்ளத்தைத் தொடும் என்று கூறுகிறது ஒரு குரல்!

கதை வடிவம் கொடு, எந்தக் கருத்தும் எளிதாகிடும், இனிப்பளித்திடும், இதயம் சென்று தாக்கிடும் என்று கூறுகிறது ஒரு குரல்!

ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல உள எனக்கு ஆவலூட்டுபவை.

ஆனால், நானோ கூறவேண்டியவைகளைக் கூறவேண்டிய முறையில் கூறியிருக்கிறோம் என்ற பெருமிதம் கொண்டிட முடியவில்லை; முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே கூறிட முடிகிறது. ஆனால், அந்த நிலையே ஓர் தனித் தன்மை வாய்ந்த மகிழ்ச்சியினைத் தருகிறது. காரணம், வடிவம் வண்ணம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதுபற்றி அதிகம் பொருட்படுத்தாமல், நமக்குத் தேவைப்படுவனவற்றினை, நம்முடைய தோழமையிலே மகிழ்ச்சி தந்திடும் அண்ணன் தருகின்றான் என்ற பற்றுடன், இதழினை வரவேற்றிடும் ஆயிரமாயிரம் தோழர்கள் உளர் என்பதுதான்.

"காஞ்சி' இரண்டாம் ஆண்டு மலரும் அதேவிதமான வரவேற்பினைப் பெற்றிடும் என்பதனை உணருகின்றேன்; மகிழ்ச்சி கொள்கின்றேன்.

இந்த மலரில் நெடுங்கதைகள் என்று சொல்லத்தக்க அமைப்புடன், இரண்டு கருத்தோவியங்களைத் தந்துள்ளேன்; இரும்பு முள்வேலி, வண்டிக்காரன் மகன். கழகத் தோழர்களின் நன்மதிப்பினைப் பெற்றுள்ள பலர் தந்துள்ள கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன.

இவைகளிலே ஒன்றுகூட, படித்துப் பொழுது ஓட்ட அல்ல! ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினையை விளக்கிட! இந்தத் தனித்தன்மை இதழ்களை மட்டும் நடத்திடுவோர் கொண்டிடவோ, தந்திடவோ முடியாது; அவர்கட்கு அந்த முறை தேவையுமில்லை.

எடுத்துக்காட்டுக்காக - எரிச்சல் மூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல - ஒன்று கூறுகின்றேன்; இன்று காங்கிரசாட்சியின் போக்கையும், ஒவ்வொரு நடவடிக்கை யையும், கண்டிப்பதில், கேலி செய்வதில், இதழ்கள் பலவும் ஈடுபட்டுள்ளன ஆர்வத்துடன்.

ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து அன்றாட நிர்வாகத்திலே நெளியும் ஊழல்கள் வரையில், ஆளுங்கட்சிக்குள் நெளியும் அலங்கோலங்கள் உட்பட கண்டிக்கப்படுகின்றன, இதழ்கள் பலவற்றாலும்.

ஆனால், தாம் வலியுறுத்தும் பிரச்சினைகள், அளித்திடும் விளக்கங்கள், தந்திடும் அறிவுரைகள், விடுத்திடும் எச்சரிக்கைகள், துளியேனும், ஆட்சியின் போக்கை மாற்றிடுவதில் வெற்றி தந்துள்ளனவா என்ற கணக்குப் பார்க்கின்றனரா, இதழ் நடாத்துவோர் என்றால் இல்லை; வேறு கணக்குத்தான் பார்த்துக்கொள்கின்றனர்.

கண்டனத்தைக் கொட்டுகின்றனர், காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றனர், வாதங்களைத் திறமையாகச் செய்கின்றனர். ஆனால், வழக்கிலே வெற்றி கிட்டிற்றா என்பது பற்றி மட்டும் பார்த்திட முனைவதில்லை. ஏன்? அவர்கள் இதழ் நடாத்துகிறார்கள்; ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திடும் இயக்கம் நடத்தவில்லை. அவர்களிலே சிலர் தமது திறமையை விளக்குகிறார்கள், தீமையை ஒழித்திடும் செயலில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ளாமலேயே! அவர்கள் பிரச்சினைகளைப்பற்றி நிம்மதியாகச் சிந்திக்கவும், நேர்த்தியாக விளக்கிடவும் தகுதி பெற்றவர்கள்; நிலைமையை மாற்றிட வேண்டும் என்ற மனத் திண்மை கொள்பவர்கள் அல்லர்.

கழக ஏடுகள் அவ்விதமானவை அல்ல.

அந்த ஏடுகள், கழகம் பெற்றுள்ள படைக்கலன்கள்.

கழகமோ, ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திட அறப்போர் மேற்கொண்டுள்ள பாசறை.

ஆகவேதான் கழக ஏடுகளில் பிரச்சினைகள் விளக்கப் படுவது மட்டுமல்ல, சிக்கல்கள் போக்கிட வழி கூறப்படுகிறது; அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன; குறிக்கோள் எடுத்துக் காட்டப்படுகிறது.

ஆக, நல்லாட்சி, காண வேண்டும் என்பதற்கான ஆர்வம் கொண்டோர் எவரும், அதற்கான இயக்கம் அளித்திடும் இதழ்களை, ஏந்தித் தீரவேண்டிய படைக்கலன் என்று கொண்டிட வேண்டும். கழக இதழ்கள் மூலம் பெற்றிடும் பலன், இதனால் தனித்தன்மை வாய்ந்ததாகிறது.

எந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும், அது குறித்து சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் அதே இதழ்கள், சூடு தணிந்ததும், வேறு திசையிலே மக்களின் கவனத்தைத் திருப்பி விட்டு விடுவதிலே முனைவதனைக் காணலாம்.

அதனைவிடத் துணிவாகச் சில இதழ்கள், கண்டனம் வெளியிட்டுவிட்டு, சின்னாட்களுக்குப் பிறகு "கனம்' கள் தந்திடும் கருத்துக்களை அவை முன்னம் தாம் வெளியிட்ட கண்டனத்துக்கு முற்றிலும் ஒத்து வராது என்று தெரிந்திருந்தும் - வெளியிட்டு பிரச்சினையை மடியச் செய்துவிடுகின்றன.

இந்த இதழ்கள் மட்டும், அறப்போர் மனப்போக்குடன், நல்லாட்சி கண்டாக வேண்டும் என்ற துடிப்புடன் பணி புரிந்திடின், ஜனநாயகம் எவ்வளவோ அளவு செம்மைப் பட்டிருந்திருக்கும். ஆனால், அந்த முறையில் அவைகள் வேலை செய்யவில்லை.

அதனால் கழக இதழ்கள், வசதியும் வாய்ப்பும், வல்லமையும், அனுபவமும் கொண்ட மற்ற இதழ்கள் செய்திருக்கக்கூடிய - ஆனால் செய்யாது விட்டுவிட்டுள்ள - வேலைகளையும் சேர்த்துச் செய்திடவேண்டி இருக்கிறது. சுமை அதிகம்! ஆகவே பாடு அதிகமாகிறது.

நீண்ட பழங்காலந் தொட்டே - பணம் - பதவி - எனும் எதன் காரணமாக ஏற்படுவதாயினும் - செல்வாக்குக் கொண்டவர்களின் சீற்றத்துக்கு அஞ்சுவதும், புன்னகைக்கு விரும்புவதும், நம் நாட்டிலே இயல்பு ஆக்கப்பட்டு விட்டிருக்கிறது.

மந்தம், நிதானம் ஆக்கப்பட்டுப் பாராட்டப்படுவதும், கஞ்சத்தனத்தை சிக்கனம் என்று புகழ்வதும், துடுக்குத்தனத்தை அஞ்சாமை என்று கூறிப் பாராட்டுவதும், களியாட்டத்தில் ஈடுபாடு இருந்திடின் அதனைக் கலை ஆர்வம் என்றும், எவரையும் மதித்துக் கலந்து பேசிடாத போக்கை, சுய சிந்தனை என்றும், அகம்பாவத்தைக் கெம்பீரம் என்றும் கூறிப் பாராட்டுவோர் இருப்பதனைக் காண்கின்றாய்.

இந்தி ஆதிக்கப் பிரச்சினைபற்றித் தமிழக ஏடுகள் காட்டிய ஆர்வமும், தொடுத்த கண்டனமும் கொஞ்சம் அல்ல.

இன்று வரையில் இந்த இதழ்கள் கேட்டுக்கொண்ட அளவிலேகூட ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்படவில்லை.

என்ன செய்கின்றன இந்த இதழ்கள்?
அதனையும் எழுதுகின்றன!
எழுதிவிட்டு! எழுதுகின்றன!
அவ்வளவுதான்!!

ஜனநாயகம் வலிவு பெறவேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும்? தட்டாமல் தயங்காமல் இந்த இதழ்கள், மக்களிடம் கூற வேண்டும். இந்தத் தேர்தலில், காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்! இந்தி ஆதிக்க நோக்கத்துடனேயே இந்த ஆட்சி இருந்து வருகிறது. எமது வேண்டுகோட்களுக்கு எள்ளளவு மதிப்பும் தரவில்லை. இது அரசியல் அகம்பாவம். இந்த அகம்பாவம், சர்வாதிகாரத்திற்குத்தான் நாட்டை இழுத்துச் செல்லும். ஆகவே, நாட்டினரே! இந்த காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று எழுத வேண்டும்.

எழுதுகின்றனவா? இல்லை! ஏன்? அவை, அக்கிரமத்தை ஒழித்தாக வேண்டும் என்பதற் காக அமைந்துள்ள படைக்கலன்கள் அல்ல! வண்ணம், வடிவம் பாரீர்! என்று கூறிடும் ஏடுகள்!!

எனவேதான் தம்பி! நான் மிக அதிகமாகவே வலியுறுத்திக் கொண்டு வருகிறேன், நல்லாட்சி காண வேண்டும் என்பதிலே நாட்டம் உள்ளோர், அந்த நோக்கத்துக்காகவே ஆக்கப்பட்டுள்ள படைக்கலன் போன்ற கழக ஏடுகளைப் பெரிய அளவில் ஆதரிக்க வேண்டும் என்பதனை.

வானவில்லின் வண்ணத்தைக் கண்டு வியந்திடலாம்; ஆனால், ஓவியம் தீட்டிட வண்ணக் கலவை நாம் தயாரித்துக் கொண்டாக வேண்டும். வானவில்லில் காணப்படும் வண்ணத்தை வழித்தெடுத்துக்கொள்ள முடியாது.

கழக ஏடுகளின் தனித்தன்மை எவ்வளவுக்கெவ்வளவு அதிக அளவில் உணரப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வேகம் நமது பயணத்திற்குக் கிடைக்கும்.

இந்தப் பணி சிறப்படைய வேண்டுமெனில், பறித்தெடுத்த சிரித்திடும் முல்லையைப் பெற்றுச் சூடிக்கொள்ள எழில் மங்கை இருந்திட வேண்டும் என்பதுபோல், வடித்தெடுத்த வாளினைக் கரம் கொண்டு களம் சென்றிடத் தகுதி மிகு வீரன் கிடைத்திட வேண்டும் என்பதுபோல, கழக ஏடுகளைத் தக்க ஆதரவு கொடுத்து வளர்ந்திடச் செய்வதுடன், பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் உணர்ந்த பல்லோர் தேவைப்படுகின்றனர்.

அந்தப் பல்லோர், "காஞ்சி' இதழினுக்கு ஊக்கமளித்து வருகின்றனர் தொடர்ந்து; தோழமையுடன், அவர்கட்கு நன்றி கூறிக்கொள்வதிலே மகிழ்ச்சி பெறுகின்றேன்.

"காஞ்சி' இதழுடன் தம்பி! உனக்கு ஏற்பட்டுள்ள அன்புத் தொடர்பு தெம்பு ஊட்டுவது மட்டுமல்ல, இதழின் எதிர்காலத்திற்கான ஒளியும் தந்திடுகின்றது.

போர்டில்லன் எனும் ஆங்கிலக் கவிஞன் கூறியதனை நினைவிற் கொள்ளுகிறேன்:

இரவுக்கு ஆயிரம் கண்கள்,
ஆனால், பகலுக்கு ஒன்றே!
ஆயினும், சூரியன் மறைந்தால்
உலகத்தில் ஒளி இல்லையே!

அறிவுக்கு ஆயிரம் கண்கள்
ஆனால், நெஞ்சுக்கு ஒன்றே!
ஆயினும், அன்பு மறைந்தால்
வாழ்வில் ஒளி இல்லையே!

முத்தமிழும் முத்தும் முழங்கிடும் திருநாடு நம் நாடு. கத்தும் கடல் அடக்கிக் களம் செலுத்திக் கடாரம் சென்றோர் நம் இனத்தார். நாமணக்கப் பா பாடி நற்றமிழை நல்லவையைப் பாமணக்கச் செய்ய வந்த பாவலர்கள் தேனொத்த தீந்தமிழைத் தந்திடும் திருநாடு, நம் நாடு. எனினும். . . . .?

ஓர் ஏக்கம் - ஓர் பெருமூச்சு - ஓர் குமுறல் அன்றோ, அந்த "எனினும்' என்பதுடன் பிறந்திடக் காண்கிறோம். அந்த ஏக்கம் போக்கிட, பெரு மூச்சு நின்று ஓர் புன்னகை மலர்ந்திடக் குமுறல் அகன்று மனத்திலே ஓர் நிம்மதி எழுந்திட, எடுத்துக் கொள்ளப்படும் இணையற்ற முயற்சியில், தனது பங்கினைச் செலுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது "காஞ்சி'.

தம்பியாம் நீ திரட்டித் தந்திடும் பேராதரவே, "காஞ்சி' இதழின் பணி செம்மையுடையதாகிடச் செய்திடும்.

"காஞ்சி' நடாத்திடும் இளங்கோவனும், உடனிருந்து பணியாற்றும் முத்துராமனும், சுந்தரேசனும் அவ்வப்போது கதை, கவிதை, கட்டுரை வழங்கிடும் நண்பர்களும், ஓவியம் தீட்டித் தந்திடுவோரும், இதழின் எழிலும் பயனும் மிகுந்திடவேண்டுமென விழைகின்றனர்.

எந்த எழிலும் தம்பி! உன் கரம் தந்திடும் எழிலுக்கு நிகராகாதன்றோ! இதோ என்னிடம்! என்னிடமுந்தான்!! - என்று கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் "காஞ்சி'யைக் கரத்தில் கொண்டு கூறிடுவதைக் காட்டிலும் இனிய இசை வேறு எது இருக்க முடியும் - என் செவிக்கு?

அந்த மகிழ்ச்சியினை அளித்துவரும் மாண்புக்கு நன்றி கூறி, "மலர்' கண்டிடுவாய், மணம் நுகர்ந்திடுவாய் என்று அழைத்துத் தருகின்றேன், நாட்டுக்கு எழிலும் ஆட்சிக்கு ஏற்றமும் தேடித் தந்திடும் முயற்சியினை மேற்கொண்டுள்ள "காஞ்சி' இதழின், இரண்டாம் ஆண்டு மலரினை.

அண்ணன்,

11-9-66