அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மரண அடி கொடுப்பாராம்!

காமராஜரின் கோபத்துக்குக் காரணம் எரிச்சல்!
காமராஜரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவாம்!
நேருவின் புகழொளிக்கே மாய்ந்திடாத கழகம் காமராஜரின் புகழொளி கண்டா மிரண்டிடும்?
ஏமாற்றமடைந்த மக்களின் படைப்புகள் எதிர்க் கட்சிகள்!
காமராஜரின் மரண அடிப் பேச்சு கனதனவான்களுக்குத் தெம்பூட்டுவதற்காகவே!

தம்பி!

மரண அடி கொடுக்கப்போகிறேன் என்று பிரகடனம் செய்துவிட்டுள்ளார் காமராஜர். எதிர்க் கட்சிகளுக்குத்தான்!

இவர் பாசம் பொழிவார், ஆதரவு அளிப்பார் என்றா எதிர்க் கட்சிகள் எண்ணிக்கொண்டிருக்க முடியும்? தாக்குவதற்குத் தான் துடித்துக்கொண்டிருப்பார், அதற்கே திட்டமிடுவார் என்பது எல்லோருக்கும் புரியும்! இதை இவர் சொல்லித்தானா எதிர்க் கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும்? நன்றாகத் தெரியும், மிக நன்றாகத் தெரியும். எதிர்க் கட்சிகளை ஒழித்துக் கட்டினாலொழிய, தனது கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில், "அகில இந்தியா' இருக்கிறார் என்பது. ஆகவே, அவரிடமிருந்து எதிர்க் கட்சிகள் தாக்குதலைத் தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். தட்டிக்கொடுப்பார் என்ற நினைப்புடனா இருக்க முடியும்? அந்நிலையில் காமராஜர் மரண அடி கொடுப்பேன் என்று பேசியிருப்பது, எதிர்க் கட்சிகளை நோக்கி அல்ல!

சஞ்சலமும் சந்தேகமும் கொண்டு, ஆரூடம் பார்த்தபடி இருக்கும் அவருடைய கட்சிக்காரர்களுக்கு, "தைரியம் ஊட்டு கிறார், அஞ்சாதீர்கள்! நான் இருக்கிறேன் - மரண அடி கொடுக்கிறேன் எதிர்க் கட்சிகளுக்கு' என்று பேசுகிறார்.

"பயலின் கையைக் காலை வெட்டிப் போட்டுவிடுகிறேன் பயப்பட வேண்டாம்'' என்று நிலப்பிரபுக்குத் தைரியம் ஊட்டி விட்டு, "செலவுக்கு' வாங்கிக்கொண்டு, உல்லாசத்தைத் தேடிச் செல்லும் உருட்டு விழியினர் உள்ளனர்; அறிவோம் அல்லவா?

வரப்புச் சண்டை, வாய்க்கால் சண்டை, கற்பழிக்க முனைந்ததால் மூண்ட பகை போன்றவைகளிலே சிக்கிக் கொள்ளும் சீமான், என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று அச்சம் கொண்டு நடுங்கிடும்போது, குத்திக் குடலெடுப்போன், குறி பார்த்து வேல் வீசுவோன், மடக்கி அடிப்போன், மறைந்திருந்து வெட்டுவோன் போன்ற பேர்வழிகள், "ஐயா மட்டும் கொஞ்சம் தாராளமாகச் செலவுக்குப் பணத்தைக் கொடுத்தால், ஒரு நொடியிலே தீர்த்துக்கட்டிவிடுகிறேன் - தலை வேறு, முண்டம் வேறு ஆக்கிவிடுகிறேன். ஐயா எதற்கும் கவலைப்படத் தேவையில்லை, நான் காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறேன், ஐயா மட்டும் செலவுக்குப் போதுமானதைத் தந்து பார்க்கட்டும். . . . . ஐயாவோட வம்புக்கு நின்றவனை உருத் தெரியாமல் செய்துவிடுகிறேன்'' என்று பேசுவர்; பலர் சொன்னபடி படுகொலையும் செய்வர்; பிடிபட்டால், தப்ப வைக்க "ஐயா' வருவார், ஏதாவது வழி கண்டு பிடிப்பார் என்று துணிச்சலாகப் பாய்வர். இது கீழ் மட்டத்து நிலைமை.

மேல் மட்டத்தில் - அதிலும் மக்களை நடத்திச் செல்லும் தகுதி பெற்றவர்கள் என்ற விருதுகொண்ட அரசியல் கட்சி மட்டத்தில் - பொது மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள தன்னலக்காரர்கள் - தருக்கர்கள் - தங்கள்மீது மக்களின் சீற்றம் பாய்ந்திடும், தங்கள் ஆதிக்கம் சாய்ந்துபடும் என்ற நிலை ஏற்படும்போது, காமராஜர்போல, செல்வாக்கினைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களை நாடுவர். அப்போது காமராஜர்கள், "பயப்படாதீர்கள் எதிரிகளை ஒழித்துக் கட்டுகிறோம்; உமக்கு ஒரு ஆபத்தும் வராதபடி பார்த்துக்கொள்கிறோம்'' என்று பேசி தைரியம் அளிப்பார்கள்.

செய்வதற்கான இடத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்துகொண்டு, செய்து முடித்திட அந்த வலிவு பயன்படக் காணோம்; வீறாப்புப் பேசுகிறார் - மரண அடி கொடுப்பேன் என்பதாக. என்னமோ இவர் இத்தனைக் காலமாகப் போனால் போகட்டும் என்ற போக்கிலே இருந்தவர்போலவும், தி. மு. கழகம் வளர்ந்து போகட்டுமே என்று கருதி வாளா இருந்தவர்போலவும், இப்பொழுதுதான், கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்ற நினைப்பே வந்ததுபோலவும் எண்ணிக் கொள்ளச் சொல்லுகிறாரா?

முன்பாகிலும், கழகத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் காட்டிக்கொண்டிருந்தார்கள். "ஓட்டு' கேட்கிறது, நாட்டை ஆள விரும்புகிறது என்பது பற்றி எமக்குக் கோபம் இல்லை. ஆனால், இந்தக் கழகம் நாட்டை அல்லவா பிளக்க விரும்புகிறது; பிரிவினை அல்லவா கேட்கிறது! இது பெரியதோர் ஆபத்தல்லவா? இதனை அனுமதிக்கப்போமா! அதனால்தான் இந்தக் கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்கிறோம் அறிக! அறிக! - என்று ஆர்ப்பரித்தனர்; கழகமோ, நாட்டைத் துண்டாடும் திட்டத்தை விட்டுவிட்டது. மரண அடி கொடுக்க வேண்டும் என்று இப்போது ஏன் கூற வேண்டும்?

முன்பு, நாடு பிளவுபடாதிருக்கக் கழகத்தை ஒழித்திட வேண்டும் என்று பேசினர்.

இப்போது? கோபத்துக்குக் காரணம்?

பதவியைப் பறித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்களே என்பதுதானே!

அதற்கான வலிவும் வளர்ச்சியும் பொது மக்கள் ஆதரவினால் கழகத்துக்குக் கிடைத்துக்கொண்டு வருகிறது என்பதாலே ஏற்பட்டிருக்கும் எரிச்சல்தானே, கோபத்துக்குக் காரணம்?

சரி! கோபம் கொண்டதற்கான காரணம்கூட கிடக்கட்டும்; மரண அடி கொடுக்கிறேன் என்கிறாரே அதற்குத் தேவையான "வலிவு' உள்ளபடி இருக்கிறதா? இருந்திருந்தால் கழகம் இந்த வளர்ச்சி பெற்றபோது, என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

கழகமா! அதற்குச் செல்வாக்கா! எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள்? கூட்டத்திற்கு ஆள் சேருகிறதே அதைப் பார்த்தா? பைத்தியக்காரன் பின்னாலேகூடத்தான் பத்து பேர் செல்கிறார்கள், வேடிக்கை பார்க்க! அந்தக் கும்பலைக் கண்டு, அவனுக்குப் பெரிய செல்வாக்கா என்று பேசிப் பார்த்தார் பேட்டைப் பெரியவர் கோட்டையிலே கொலுவிருக்கிறோம் என்ற துணிச்சலால்.

தெருக்கோடியிலே பிச்சைக்காரன் இனிமையாகப் பாடினால், அவனைச் சுற்றி ஒரு கூட்டம் சேரும்; காசுகள்கூடப் போடுவார்கள்! அதனால் அந்தப் பிச்சைக்காரன் பெரிய மனிதனாகிவிடுவானா என்று கேட்டார் விருதுநகர் வல்லவர்.

ஆனால், பொது மக்கள் இத்தகைய பொறுப்பற்ற முறையிலே நினைக்கவில்லை, கழகத்தை ஆதரிக்கலாயினர்.

கை தட்டுவார்கள், ஆனால், ஓட்டுப் போடுவார்களா?

என்று கேட்டுக் கெக்கலி செய்தார் காமராஜர். கழகம் "ஓட்டு' கேட்டது. பொது மக்கள் முதல் முறை 16,28,598 ஓட்டுகளை வழங்கினர்.

வெட்ட வெளியோடு சரி, இவர்களை எவனாவது சட்டசபைக்கு அனுப்பி வைப்பானா? என்று பேசியவர்கள், பொது மக்கள் கழகத்துக்குத் தந்த ஆதரவின் கணக்குத் தெரிந்த பிறகாகிலும், ஜனநாயகப் பண்பின்படி, கழகத்துக்கு உரிய மதிப்பு அளித்திட முன்வந்தனரா? இல்லை!

கண்டபடி எழுதுகிறார்கள் கழகத்துக்காரர்கள்.

இவர்கள் கை கட்டை விரலை வெட்டிவிடுவேன்!! என்று பேசினார், கண்ணியம் மிக்க காமராஜர்.

அவர் அளவுக்கு ஆத்திரப்படாதவர்கள், "ஐயோ பாவம்' என்று பச்சாதாபப்பட்டு, சிலர் ஓட்டுப்போட்டுவிட்டார்கள். அடுத்து கழகம் என்ன கதியாகிறது என்பதை, மழைக் காலத்துக் காளான் சூரிய வெப்பம் பட்டதும் கருகிப்போவதுபோல, இருக்குமிடம் தெரியாமல் ஒழிந்துபோய்விடும் என்று ஆரூடம் கணித்தார்கள்.

ஆனால், பொது மக்கள் இரண்டாவது முறை கழகத்தை மேலும் அதிக அளவு ஆதரித்து 34 இலட்சம் வாக்குகளை வழங்கினர்.

இவ்விதம் இரு முறை மக்கள் கழகத்தை ஆதரித்தும் பெற வேண்டிய தெளிவைப் பெறாமல், இந்த முறை பாருங்கள்! மரண அடி கொடுக்கிறேன்!! - என்று பேசுகிறார் காமராஜர்.

"பெரியவர்'' என்ற புதிய பட்டம் சூட்டி இருக் கிறார்கள் அவருக்கு. "பெரியவர்' ஆனது இதற்குத்தானா?

கூட இருந்து கும்மி கொட்டுபவர்களின் "கோவிந்தா' கோஷம் இப்படியுமா அவரைப் பாழ்படுத்திவிடுவது?

பாரினில் இவர்போல் யாம் கண்டதில்லை - என்று அவர்கள் பாடிடும் பஜனை கேட்டா இவ்வளவு மயக்கம் இவருக்கு ஏற்பட்டுவிடுவது!

ஆத்திசூடி தெரியுமா ஐயா! என்று இவரைக் கேட்டவர்கள்தான் இன்று அகில உலகில் இவர்போல் ஒரு தலைவர் இல்லை! என்று அர்ச்சிக்கிறார்கள் என்பதை இவர் அறியாரா?

எதனையும் சகித்துக்கொள்வேன், ஆனால், என் தலைவன்மீது ஒரு துளி எச்சில் துப்பினாலும் விட மாட்டேன், ஒழித்திடுவேன் என்று இன்று பேசிடும் "பக்தர்'கள், என்னைத் தமது தலைவன் என்று கொண்டிருந்தபோது, எவனாவது எங்கள் அண்ணன்மீது வசை உமிழ்ந்தால் "பாதக் குறடெடுத்து பன்னூறு அடி அடிப்பேன்'' என்று பாடினவர்கள் என்பதை அறியாரா?

சிறுவர்களுக்கான பாடப் புத்தகத்தில், "ராஜபக்தி'க்கான பாடம் ஒன்று உண்டு.

இதோ நமது ராஜா. இவர் மிக நல்லவர்!

இதுதான் பாடம்! ஒரு ராஜா போய், வேறோர் ராஜா பட்டத்துக்கு வந்திடின், பழைய படம் எடுக்கப்பட்டு, புதிய ராஜாவின் படம் போடப்படும், படம்தான் மாறும்! பாடம் அப்படியேதான் இருக்கும்.

இதோ நமது ராஜா, இவர் மிக நல்லவர்!

இதற்கு ஒப்பான அரசியல் நடத்துபவர்கள் மொழிந்திடும் புகழுரை கேட்டு மயங்கியா, இந்தப் பூலோகமே தன் காலடியில் பந்தாகிக் கிடக்கிறது என்று மயக்கம் கொண்டுவிடுவது? நல்லது செய்யாதே அந்த மயக்கம்!

மரண அடி கொடுப்பேன் என்று பேசுகிறோமே; கேட்டிடும் குட்டிக் குபேரர்கள் கைதட்டி மகிழ்ச்சி காட்டுகிறார்களே; பிறகு அவர்கள் சிந்திக்கமாட்டார்களா, எந்த விதமான வசதியுமில்லாமல், எல்லா முனைகளின் எதிர்ப்பையும் தாங்கிக்கொண்டு இந்தக் கழகம் இவ்வளவு வளர்ந்திருக்கிறதே; இப்போது மரணஅடி கொடுப்பேன் என்று பேசிடும் பெரியவர், முன்பு பல முறை கழகத்தை ஒழித்துக் கட்டுவதாகச் சொன்னவர் தானே; செய்தாரில்லையே; இப்போது மட்டும் எப்படிச் செய்வார் என்று யோசிக்க மாட்டார்களா; யோசித்திடும்போது நமது பேச்சு வெறும் உருட்டல் மிரட்டல்தான் என்பது புரிந்து விடாதா - என்றùல்லாம் காமராஜர் எண்ணிப் பார்க்க மாட்டாரா? நேரம் இல்லை பாவம், அவர் என்ன செய்வார்! சூழ்ந்துகொண்டுள்ள "சூடமேந்திகள்' அவருடைய சிந்திக்கும் சக்தியை பொசுக்கிவிடுகின்றனர்.

தம்பி! 1962-ம் ஆண்டுக்கும் 1967 பிறக்கப் போகிற கட்டமான இப்போதைக்கும் இடையில் காங்கிரசுக் கட்சிக்குத் தானாகட்டும், காமராஜப் பெரியவருக்குத்தானாகட்டும், கழகத்துக்கு மரண அடி கொடுக்கத்தக்க விதமான புதிய வலிவு என்ன கிடைத்துவிட்டது என்பது எப்போதாவது, எங்கேயாவது, எவராலாவது விளக்கப்பட்டுக் கேட்டதுண்டா?

1962-ம் ஆண்டு காங்கிரஸ் சில இடங்களிலே தோற்றதற்கும், எதிர்க் கட்சிகள் தேர்தல் களத்திலே வெற்றி பெற்றதற்கும் காரணம்,

வரி அதிகமானது
விலைவாசி ஏறியது
உணவு நெருக்கடி
ஏழை எளியோர் துயரம்

போன்ற நிலைமைகள். இதனால் மக்களுக்குக் காங்கிரசிடம் ஒரு கசப்புணர்ச்சி, கோபம், பாடம் கற்பிக்க வேண்டும் என்ற துடிப்பு. அதன் காரணமாகக் காங்கிரசைத் தோற்கடித்தார்கள். ஆனால் 1967-ம் ஆண்டு வேகமாக வந்துகொண்டிருக்கும் இப்போது அந்த மோசமான நிலைமைகள் மாறிவிட்டன; மக்கள் கசப்புணர்ச்சி கொள்வதற்குப் பதிலாகக் களிப்புணர்ச்சி கொண்டுள்ளனர்; அதற்கான முறையில்,

உழுபவனுக்கே நிலம் என்று ஆகிவிட்டது.
தொழிலாளருக்கு நீதியும் நிம்மதியும் கிடைத்திருக்கிறது.
உணவு நெருக்கடி போக்கப்பட்டுவிட்டது.
விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வரிகளையும் குறைத்தாகிவிட்டது.
ஏழை எளியோர் புன்னகை புரிகிறார்கள்.

ஆகவே, இந்த முறை மக்கள் காங்கிரசிடம் பாசம் காட்டுவர், எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு காட்டமாட்டார்கள் - என்று கூற முடியுமா? கூசாது பொய் பேசிப் பழக்கப்பட்டவர்களால் கூட முடியாது.

1962-ம் ஆண்டு இருந்த நிலைமையைவிட மிக மோசமான நிலைமை அல்லவா இப்போது எல்லாத் துறைகளிலும். அப்போது இருந்துவந்த அல்லல் வளர்ந்தல்லவா இருக்கிறது. எலி தின்று பசி போக்கிக்கொள்ளுங்கள் என்று "உபதேசம்' செய்கிற நிலைமையல்லவா காண்கின்றோம்.

இது மக்களின் கசப்புணர்ச்சியை, கொதிப் புணர்ச்சியை அதிகமாக்கித்தானே இருக்கும்?

இருந்தும், இம் முறை எதிர்க் கட்சிக்கு மரண அடி கொடுப்பேன் என்று பேசும் அளவுக்குத் துணிவு எப்படி வந்தது துரைத்தனம் நடத்தும் கட்சியினருக்கு?

தம்பி! நாம் மட்டும் அல்ல, உண்மையான ஜனநாயகவாதிகள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஒரு கட்சியை மக்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு என்னென்ன கொடுமைகளை அந்தக் கட்சி நடத்திடும் ஆட்சி செய்திடவேண்டுமோ அவ்வளவும் செய்தான பிறகு, அந்தக் கட்சித் தலைவர், எதிர்க் கட்சிக்கு மரண அடி கொடுப்பேன் என்று பேசும் துணிவு, எதைக்கொண்டு பெற முடிகிறது?

பணம், தம்பி! பணம்! மூட்டை மூட்டையாகச் சேர்த்து வைத்துள்ள பணம்!

பணம் பாதாளம்வரை பாயும் என்பதிலே உள்ள நம்பிக்கை.

வாய்க் கசப்பைப் போக்க, நாக்கிலே தேன் தடவுவதுபோல, கசப்புணர்ச்சி கொண்டுள்ள மக்களுக்கு, பணத்தாசை காட்டி மயக்கிடலாம் என்ற நம்பிக்கை.

ஏழ்மையும் அறியாமையும் கப்பிக்கொண்டிருக்கும் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை மீண்டும் வலைவீசிப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசை.

இதனை மறுத்திட நினைத்திடும் மகானுபாவர்கள், 1962-ம் ஆண்டிலே இருந்த கசப்புணர்ச்சி போய்விட, இந்த ஐந்து ஆண்டுகளிலே காங்கிரசாட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகளிலே எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை விளக்கிடக் கேட்டதுண்டா?

விளக்கமாவது அவர்களாவது தருவதாவது! ஒரே வீராவேசம் அல்லவா பொங்கி வழிகிறது! பெரியவரே மரண அடி கொடுப்பேன் என்ற தரமான பேச்சுப் பேசும்போது "பொடியர்கள்' பேசுவது எந்தத் தரம் இருக்கும் என்பதைக் கூறவா வேண்டும்?

ஏடா! மூடா! எமக்கு இதுபோது வந்திருக்கும் புதிய வலிவுக்கான காரணம் புரியாது கிடக்கின்றனையே! கூறுதும் கேண்மின்! இது காமராஜர் சகாப்தம்! அறிந்திடுமின்! அவர் புகழ் அவனியெல்லாம் பரவியுள்ள காலம்! பொருள் புரிந்து கொள்ள முனைமின்! - என்ற முறையில் நாநடமிடுவது தெரியும், தம்பி! நன்றாகத் தெரியும்.

காமராஜப் பெரியவரின் புகழ் இந்தக் காசினி எங்கும் பரவியுள்ள கதை சுவையுள்ளது.

ஆனால் அந்தப் புகழ் காங்கிரசுக்குப் புது வலிவும் பொலிவும் தேடிக்கொடுத்து, மக்களின் கசப்புணர்ச்சியை மாற்றிவிடும் அளவினது அல்லது வகையினது என்றால்,

தம்பி! 1962-ம் ஆண்டுத் தேர்தலின்போது "முடிசூடா மன்னராக' - "ஆசியாவின் ஜோதியாக' - மகாத்மாவின் வாரிசாக - இருந்து வந்தாரே பண்டித ஜவஹர்லால் நேரு, அவருக்குப் புகழ் ஏதும் இல்லையோ!!

அந்தப் புகழ் இருந்தும்தானே, எதிர்க் கட்சிகள் வளர்வதைக் காங்கிரசினால் தடுத்திட முடியாமல் போய்விட்டது?

இன்று இருப்பதைக் காட்டிலும் சிறிதளவு குறைவாகவே அல்லலும் அவதியும் மக்களை வாட்டிக்கொண்டிருந்தபோதே "நேருவின் புகழொளியில் மயங்கி' மக்கள் எதிர்க் கட்சிகளை ஆதரிக்க முடியாது என்று கூறிடவில்லை.

நேருவின் "புகழொளி'க்கு இருந்ததைக் காட்டிலும் வசீகரமும் வல்லமையும் காமராஜர் புகழொளிக்கு உண்டு என்று கூறுவார் உண்டா?

நேருவினால் அவர் நாட்களில் சாதிக்க முடியாது போனவைகளைக் காமராஜர் இன்று சாதிக்கப் போகிறார் என்று கூறுவார் உண்டா?

நேருவைக் காட்டிலும் காமராஜர் உலகமறிந்தவர்; நேருவிடம் உலகம் காட்டிய மதிப்பைவிட அதிக அளவு மதிப்பினைக் காமராஜரிடம் காட்டுகிறது; நேருவின் அறிவாற்றலைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அறிவு கொண்டவர் காமராஜர்; பிரச்சினைகளை விளக்குவதில், வாதத் திறமையில், சிக்கல்களை நீக்குவதில், நேருவுக்கும் இல்லாத திறமை இவருக்கு உண்டு என்பார் உண்டா?

மக்களைத் தன்வயப்படுத்திடும் ஓர் புன்னகை, கோபத்தையும் கொதிப்பையும்கூட ஓரளவு மறந்திடச் செய்திடும் நடை அழகு, உலகப் பிரச்சினைகளைப் படம் பிடித்துக் காட்டும் தனித்தன்மை, உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் மட்டுமல்லாமல், கவிஞர்கள், தத்துவ மேதைகள், காவிய கர்த்தாக்கள், விஞ்ஞான வித்தகர்கள், பொருளாதார நிபுணர்கள், புரட்சி பூத்திடச் செய்த மாவீரர்கள் ஆகியோருடன் நேசத் தொடர்பு கொண்டிருந்ததால் ஏற்பட்டிருந்த விசாலமான நோக்கம், தாராளத் தன்மையுடைய சிந்தனை, இதயங்களை ஈர்த்திடத்தக்க இலட்சிய ஆர்வம் இவ்வளவும் கொண்டல்லவா விளங்கி வந்தார் பண்டிதர்?

அவர் புகழ் பாடாத ஏடுண்டா? பரவாத நாடுண்டா?

படம் இல்லாத வீடு உண்டா? எத்தனை எத்தனை கோலத்தில் அவர் படம்; நித்தநித்தம் இதழ்கள் மூலம்!

சிந்திக்கும் நேரு, சிரித்திடும் நேரு, சீறிடும் நேரு, குழந்தைகளுடன் கொஞ்சிடும் நேரு, விளக்கிடும் நேரு, வினவிடும் நேரு, மாபெருங் கூட்டம் கண்டு நெஞ்சு நெகிழ்ந்திடும் நேரு, ஊர்வலத்தில் முகம் மலர்ந்திடும் நேரு, விமான நிலையத்தில் நேரு, விஞ்ஞானக் கூடத்தில் நேரு, குதிரைமீது நேரு, குதூகல நடனமிடும் நேரு, ஜொ-க்கும் நட்சத்திரங்களுடன் நேரு, உழைக்கும் பாட்டாளிகள் மத்தியில் நேரு, பத்திரிகை நிருபர்களிடம் நேரு, வணிகர் விழாவில் நேரு, பக்ரா பக்கத்தில் நேரு, குலு பள்ளத்தாக்கில் நேரு, நாகநாடு உடையில் நேரு, பர்மியக் கோலத்தில் நேரு, ஆங்கில உடையில் நேரு, கேக் வெட்டும் நேரு, பாங் அதிபருடன் நேரு, சோ-இன்-லாயுடன் நேரு, கெனியாடா வுடன் நேரு, நைல் நதி தீரத்தில் நேரு, வோல்கா கரையில் நேரு, ஐ. நா. சபையில் நேரு, ஆல்ப்ஸ் குன்றில் நேரு, வெசுவயஸ் எரிமலை காணும் நேரு, லால் பகதூர் தோளைத் தடவிக் கொடுத்திடும் நேரு, தம்பி! ஒன்றா இரண்டா, ஓராயிரம் மட்டுமா? ஓராண்டா, ஈராண்டா? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அல்லவா, அவர் திரு உருவம் கண்டு, நாட்டு மக்கள் சொக்கினர்!

இருந்தும்? அவர் நடாத்திய ஆட்சி, மக்களுக்கு நல்வாழ்வு தரவில்லை என்று மனராத நம்பிய எதிர்க் கட்சிகள் அந்தப் புகழொளி கண்டு மயங்கி, முடங்கிக் கிடந்தனவா? இல்லையே!

அந்தப் புகழொளி எதிர்க் கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமலா செய்துவிட்டது? இல்லையே!

அவருடைய புகழ் ஒளி போதும் தனி மராட்டிய மாநிலம் வேண்டாம் என்றா கூறிவிட்டனர்? இல்லையே!

அந்தப் புகழொளி இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை - இந்தி வந்தால் வரட்டும் என்றா இருந்துவிட்டனர்? இல்லையே!

குறைகளைக் கூறிட, கருத்து வேற்றுமைகளை எடுத்துரைத்திட, கிளர்ச்சி நடத்திட, கருப்புக் கொடி காட்டிட முடிந்தது எதிர்க் கட்சிகளால் - புகழொளி இருந்தும்.

நேருவின் புகழொளிக்கு இல்லாத வசீகரமும் வல்லமையும், காமராஜரின் புகழொளிக்கு இருக்கிறது என்று கூறிடக் கூசுவர் எவரும்; கூறிடத் துணிவோர், நேருவின் நினைவுக்கே கறை பூசிடும் காதகராவர்.

நேருவின் புகழொளியையே இவ்வளவு விரைவிலே மறந்து, வேறோர் புகழொளி அவருடையதைவிட வலிவுள்ளது என்று பேசிடத் துணிவோர், இந்தப் புதிய புகழொளியை எத்தனை சடுதியில் மறந்திடத் துணிவர் என்பதை எண்ணும்போது, தம்பி! எவருக்கும் நடுக்கம் எடுக்கும்.

என்றாலும் கூசாமல் கூறுகின்றனர், காமராஜரின் புகழொளி காங்கிரசுக்குப் புதிய வலிவைக் கொடுத்துவிட்டது; எதிர்க் கட்சிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை, கசப்புணர்ச்சி கொண்டிருந்த மக்கள் இப்போது களிநடமிடுகின்றனர் என்றெல்லாம்.

அதுபோலக் கூறுபவர்களின் "போற்றி! போற்றியை'ப் பொருள் உள்ளது என்று எண்ணிக்கொண்டு காமராஜப் பெரியவர் "மரண அடி கொடுப்பேன்' - என்று முழக்கமிடுகிறார்.

தி. மு. கழகம் 34 இலட்சம் வாக்குகளைப் பெற்றபோது "ஆசிய ஜோதி' ஒளிவீசிக்கொண்டிருந்திடக் கண்டோம்.

அந்தப் புகழொளி கண்டு மயங்கிடாத கழகம், மாய்ந்திடாத கழகம், காமராஜரின் "புகழொளி'யைக் கண்டா மிரண்டிடும்?

"புகழொளி' - தனி மனிதர்களின் அறிவாற்றலைக்கொண்டு அமைகிறது!

ஏழையின் இதயத்துக்கு நிம்மதியும் இல்லத்துக்கு நல்வாழ்வும், இதழுக்குப் புன்னகையும் தரத்தக்க ஆட்சிக்காக போரிடுபவர்கள், "புகழொளி' போதும் என்று இருந்துவிடமாட்டார்கள்.

அத்தனை புகழொளியும் எமது பசியைப் போக்கிட வில்லையே, குமுறிக் கிடக்கின்றோம் வாழ்வு நிமிர்ந்திட வழி காணோமே என்ற ஏக்கக் குரலே எழுப்புவர்.

எதிர்க் கட்சிகள், ஏமாற்றமடைந்த, எரிச்சல் கொண்ட ஏக்கப் பெருமூச்சு எழுப்பும் மக்களின் படைப்புகள். எங்கிருந்தோ வந்து குதித்திடுபவைகள் அல்ல!

புகழொளிகளைப் புதிது புதிதாக உண்டாக்கிக் காட்டு வதால், எதிர்க் கட்சிகள் மடிந்திடா; மக்களின் முகத்தில் படிந்துள்ள கவலைக் கோடுகள் துடைக்கப்பட்டு, வறுமை தாக்கியதால் ஏற்பட்ட புண் ஆற்றப்பட்டு கண்ணீர் துடைக்கப் பட்டாலொழிய, எத்தனை பெரிய எக்காளம் கிளப்பி, மரண அடி கொடுப்பேன் என்று உரத்த குரல் எழுப்பினாலும் விம்மும் மக்கள் கட்டிக் காத்துவரும் எதிர்க் கட்சியினை ஒழித்திடுவது முடியாத காரியம்.

இதனைக் காமராஜர் அறியாமல் இருக்க முடியுமா? அறிவார்!! ஆனால், அவரை நம்பிக்கொண்டு, ஆனால், கழக வளர்ச்சி கண்டு நடுங்கிக்கொண்டுள்ள "கனதனவான்களு'க்குத் தெம்பு தர, தைரியம் ஊட்ட மரண அடி கொடுக்கிறேன்! - என்று பேசுகிறார், பேசட்டும்.

அண்ணன்,

25-9-66