நேருஜியின் புகழ்!
-
டிட்டோவிற்கு வரவேற்பு!-
ஐந்தாண்டுத் திட்ட ஊழல்.
தம்பி!
உலகமெல்லாம் எங்கள் நேருஜியைப்
புகழ்கிறது - உதவாக்கரைகளே! நீங்கள் அவருடைய ஆட்சியை,
அவர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கிறீர்களே,
இது முட்டாள்தனமல்லவா, போக்கிரித்தனமல்லவா, என்றெல்லாம்
மேடை அதிர அதிரக் காங்கிரசார் பேசுகிறார்கள் என்று எடுத்துக்
காட்டியிருக்கிறாய். உலகம் புகழ்கிறதே, என்பதற்கு ஆதாரமாக,
நேரு பண்டிதர் சர்வதேச விவகாரங்களிலே கலந்து கொள்வதையும்,
அவர் பல்வேறு நாடுகளிலே பவனி வருவது, ராஜோபசாரம் பெறுவது
ஆகியவற்றையும் சுட்டிக் காட்டு கிறார்கள். அமெரிக்கா சென்றார்,
சீனா சென்றார், இந்தோசீனா சென்றார், இந்தோனேμயர் சென்றார்.
சீமைக்குப் பல தடவை சென்றார், இதோ இப்போது ரஷ்யாவுக்குப்
போகப் போகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.
உலகம் இருவேறு முகாம்களாகி
இருப்பது உனக்குத் தெரியும்.
ஒரு முகாமில் கம்யூனிஸ்ட்
ஆட்சிமுறை நாடுகளும், மற்றொரு முகாமில் அதற்கு எதிரிடையான
ஆட்சி முறை நாடுகளும் உள்ளன.
இரு முகாம்களும், தத்தமது
கட்சிக்கு ஆள் பிடிக்கும் காரியத்தில் ஈடுபட்டுவிட்டிருக்கின்றன.
தம் கட்சியில் சேரா விட்டாலும் பரவாயில்லை, எதிர்க்கட்சியில்
சேராதிருந்தால் போதும், நடு நிலைமை வகித்தால் போதும் என்று
பாடுபடுகின்றன.
இதற்காக, புகழுரை, பாராட்டுரை,
உபசாரம், விருந்து இவைகளை அள்ளி அள்ளி வீசுகின்றன.
பணம் தேவையா, தாராளமாகத்
தருகின்றன! நிபுணர்கள் வேண்டுமா, கப்பல் கப்பலாக அனுப்பி
வைக்கிறார்கள்!
இந்தப் புகழுரை, போதை தருமளவு
தரப்படுகிறது! நேரு பண்டிதர் இதிலே மயங்கிவிட்டாரோ இல்லையோ
தெரிய வில்லை. காங்கிரஸ் ஏடுகளிலே வெளியிடப்படும் படங்களையும்
செய்திகளையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்.
இதே விதமான உபசாரம் நேரு பண்டிதருக்கு மட்டும் அல்ல, இலங்கை
கொத்தலாவலைக்கும், பிலிப்பைன் தீவு ராமு லோவுக்கும் வழங்கப்படுவதைக்
காங்கிரசார் கவனிக்கவில்லை. நேரு பண்டிதரின் பீக்கிங்
விஜயத்தின் போது ராஜோபசாரம் நடந்ததென்றால், அதே விதமான
உபசாரம் பர்மிய பிரதமர் சென்ற போதும் நடக்கிறது!
தம்பி! டிட்டோ இங்கு வந்தார்!
ராஜோபசாரம் எப்படி எப்படிச் செய்தார்கள்! அவர் வருகிற
கப்பலை நமது கப்பல்கள் சென்று எதிர்கொண்டு அழைத்தன! டில்லியில்
மக்கள் கூடி டிட்டோ ஜிந்தாபாத் போட்டனர்! மாலைகள் குவிந்தன!
விருந்துக்கு மேல் விருந்து! வரவேற்பு வைபவம், டிட்டோவைத்
திணரடிக்கும் அளவுக்கு நடந்தது. ஆவடி காங்கிரசிலும், ராஜபவனத்திலும்
அவருக்கு நடைபெற்ற பல்வேறு வகையான விருந்துகளும், கலா
காட்சிகளும் சாமான்யமா!
இப்போது ஆறு நாட்கள் நேரு
பண்டிதர் டிட்டோவின் விருந்தாளியாக, யுகோ நாடு செல்கிறார்.
டிட்டோ என்ன, பண்பு அறியாதவரா! நேரு பண்டிதரின் மனம் குளிரும்
வண்ணம், தனக்கு இந்தியாவிலே கிடைத்த வரவேற்பு சாமான்யம்
என்று கூறத்தக்க விதமாக, விருந்தும், உபசாரமும் ஏற்பாடு
செய்யாமல் இருப்பாரா?
பார், பார்! எங்கள் பண்டிதருக்கு
யுகோவில் கிடைக்கும் ராஜோபசாரத்தை என்று பேசிப் பூரித்துப்
போவதால் என்ன பலன்! டிட்டோ இங்கு வந்திருந்த போது, இங்கே
அவருக்கு நடைபெற்ற ராஜோபசாரத்தைப் பற்றி, யுகோ நாட்டுப்
பத்திரிகைகள் சக்கைப் போடு போட்டன!
டிட்டோவுக்கு இந்தியாவில் இணையில்லா வரவேற்பு!
ராஜபவனத்தில் ரசமான விருந்து!
மகாராஜாக்கள் மலர்மாரி பொழிந்தனர்!
மதுரமான இசை விருந்து அளிக்கப்பட்டது!
நேர்த்தியான நாட்டியம்!
இந்தியாவின் தொழில் முயற்சியை டிட்டோ
பார்வையிட்டார்
இவ்விதமெல்லாம் யுகோ நாட்டுத்
தினமணிகள் தலைப்புகள் தரத்தான் செய்தன தம்பி!
இவ்வளவு என்ன, இங்கே உள்ள
பத்திரிகைகள், பாண்டுங் மகாநாடு நேருவின் வெற்றி என்று
புகழ்ந்தன அல்லவா, எகிப்து நாட்டிலே நாசிர், பாண்டுங்
மகாநாட்டுக்குப் பிறகு சென்றதும், அவரை வரவேற்க மோட்டாரிலும்
குதிரை மீதும் ஒட்டகை மீதும் கால் நடையாகவும் பல்லாயிரக்
கணக்கான எகிப்தியர் வந்தனர். அவர்கள் என்ன முழக்கம் இட்டனர்
தெரியுமோ?
பாண்டுங் வீரரே வருக!
இந்தியாவை வசீகரித்த
இணையில்லாத் தலைவரே வருக!
இப்படித்தான்.
இந்தோனேசியாவில் தெரியுமா!
இருபத்தொன்பது நாடு களும் பெருமைப்படுத்திய தலைவர்களே,
வாழ்க! என்று அந்த நாட்டு இதழ்கள் சுகர்னோ, ஜோஜோ ஆகிய
தலைவர்களை புகழ்ந்து எழுதின!
ஒருவர்க்கொருவர் உபசாரத்தைப்
பொழிந்து கொள்வது, இன்றைய உலகிலே கொழுந்துவிட்டெரியும்
புதுமுறை. இதைக் கொண்டு, தப்புக் கணக்குப் போடுகிறார்கள்
தம்பி! அவ்வளவு தான்!
அமெரிக்கா உறவு பற்றியும்,
அந்த நாட்டினிடம் உதவியும் கடனும் பெறுவதால் ஏற்படக்கூடும்
இழிவு, ஆபத்து பற்றியும் ஆச்சாரியாரே சொல்லிச் சோதிக்க
வேண்டி நேரிட்டதைக் காங்கிரஸ் நண்பர்கள் மறந்து விடுகிறார்கள்.
உலகமே உள்ளன்புடன் நேரு
பண்டிதரைப் புகழ்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதனால்
அவருடைய ஆட்சியிலே காணக்கிடக்கம் அவலட்சணங்களை, அதனால்
எற்படும் அவதிகளை, குறிப்பாக திராவிடத்திற்கு ஏற்படும்
தீமைகளை எடுத்துக் காட்டாமல் இருக்க முடியுமா! எடுத்துக்
காட்டாதிருப்பது அறிவுடைமை தானாகுமா?
"மத்தாப்பு' கொளுத்தும்போது
பார்த்திருப்பாயே தம்பி! எவ்வளவு வண்ணம்! எத்துணை ஒளி!
ஆனால் தம்பி! எவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்து போய் விடுகிறது!
அது போலத்தான் ராஜ தந்திர முறை காரணமாக நடத்தப்படும் உபசாரம்
தரும் ஒளி! சிறு அகல் விளக்கானாலும் பரவாயில்லை, மத்தாப்புப்
போல அல்ல, நின்று நிதானமாக ஒளிவிட்டு இருளை அகற்றும்.
அதுபோலத்தான் உள்நாட்டிலே மக்களின் உள்ளம் குளிரும்படி
ஆட்சி நடத்தினால், நிரந்தரமான பெருமையும் நிலையான செல்வாக்கும்
கிடைக்கும். வெறும் நேத்திரானந்தத்தால் பலன் என்ன?
நேரு பண்டிதரின் "உலகப்
புகழ்'' பற்றி ஓயாமல் பண்பாடும் பத்திரிகைகளே, உள்நாட்டு
விவகாரத்தில், ஆட்சியின் கோணல் காரணமாக ஏற்படும் அவதிகளைச்
சுட்டிக்காட்டி, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
திண்டாடித் திணறுவது தெரியாததா! பழமொழி சொல்வார்களே, உப்புக்
கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி என்று. அது போலல்லவா தேசிய
ஏடுகளில் நிலைமை ஆகிவிடுகிறது!
நாற்றமடிக்குமளவுக்கு ஊழல்கள்
நிர்வாகத் துறையில் நாலு நாளைக் கொரு முறை மாற்றித் தீர
வேண்டியவிதமாக அவசரமாகத் தீட்டப்படும் திட்டங்கள்.
முன்யோசனை இல்லாததால் ஏற்படும்
கோடிக்கணக்கான பொருள் நஷ்டம்.
வீண் ஆடம்பரத்துக்காக விரயமாகும்
பெரும் பணம்.
காகிதத் திட்டங்கள்! அவரைப்
பற்றிக் கவைக்குதவாப் பாராட்டுரைகள்!
தம்பி! பார், பார், பண்டிதரின்
புகழொளியைப் பார்! என்று படம் காட்டுகிறார்களே காங்கிரஸ்
நண்பர்கள், அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள், அல்லது
தெரியாததுபோலப் பாவனை காட்டுவார்கள். நீ மறந்திருக்கமாட்டாயே,
பத்து நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளிலே வெளிவந்த செய்தியை.
உலகமே கண்டு வியக்கிறது.
எங்கள் பெரும் பெரும் அணைத்திட்டங்களை என்று பெருமை பேசினார்களே.
அதிலே காணக்கிடக்கும் கோளாறு வெளிவந்து விட்டது.
கோடி கோடியாகப் பொருள் செலவிட்டு,
பெரும் பெரும் நூதனமாக யந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன,
இந்தத் திட்டங்களுக்காக.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே
செலவிடப்பட்ட பணத்திலே பெரும்பகுதியை, அணைகள் கட்டும்
திட்டம்தான் விழுங்கிவிட்டன! அதிலே நடைபெற்றுள்ள அவலட்சணத்தைக்
கேள் தம்பி! பொறுப்பும் திறனும் உள்ள ஆட்சியிலே இப்படி
நடைபெறுமா என்று யோசித்துப் பார்! கோபம் அடையாத காங்கிரஸாரைக்
கேட்டு வேண்டுமானாலும் பார்! இந்த அணைத்திட்டங்களுக்காக,
கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கினார்களே யந்திரங்கள்,
அவைகளில் கிட்டத் தட்ட பாதி சும்மா கிடக்கின்றனவாம்! கேட்டாயா,
விபரீதத்தை! ஏழை மக்களின் வியர்வை, பணமாக்கி இந்தக் கருவிகள்
வாங்கப்பட்டன! ஆனால் வேலைக்கு உபயோகமாகவில்லை. பொய்க்கால்
குதிரை! அச்சு முறிந்த வண்டி! அஸ்திவாரமற்ற கட்டிடம்!
இது போலாகி விட்டது. ஏன்? கல்யாணம் செய்தும் பிரமச்சாரியாக
இருக்கக் காரணம்? இந்தக் கருவிகள் பழுதாகிப் போனால், பொருத்தக்கூடிய
சில்லறை சாமான்கள் கிடைக்க வில்லையாம்! எப்படி இருக்கிறது
நிர்வாகம்! இலாடம் கிடைக்கவில்லை, குதிரை கொள்ளு தின்கிறது,
கொட்டிலில் கொழுக்கிறது. வண்டியும் மேட்டில் கிடக்கிறது!
ஆணி கிடைக்க வில்லை, அதனால் ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கிய
அழகான படம், பரணில் கிடக்கிறது! சாவி இல்லை, எனவே பூட்டு
மூலையில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது! ஓடு கிடைக்க விலலை;
ஆகவே தளத்துக்குத் தேவையான சாமான்கள் துருப்பிடித்துக்
கொண்டு கிடக்கின்றன! பாய்மரமில்லை; எனவே கப்பல் பாழாகிக்
கொண்டிருக்கிறது! கூந்தல் இல்லை, மலர் வாடி உதிர்கிறது.
இப்படி இருக்கிறது அணைத்திட்டத்திற் கென்று பெரும் பொருள்
செலவிட்டு வாங்கிய யந்திரங்கள் சிறு துணைச் சாமான்கள்
கிடைக்காததால், தூங்கித் துருப்பிடித்து போகும் காட்சி!
எந்த நாட்டிலாவது இந்த அக்கிரமம் நடக்குமா? இவ்வளவு திறனற்று,
அக்கறையற்று எந்த தனிப்பட்ட முதலாளியாவது நடந்து கொள்வானா?
பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே? அவர்களுக்குப்
பதில் கூற வேண்டி வருமே? என்ற அச்சம் கொண்ட எந்த சர்க்காரிலாவது
இப்படி ஊழல் நடை பெறுமா? இந்நேரம் பொது மக்கள் சீறி இருப்பார்கள்
பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள் தேளாகி இருக்கும், சம்பந்தப்பட்ட
அமைச்சர் பதவியிலிருந்து விரட்டப் பட்டிருப்பார். இங்கு?
இதோ பண்டிதரின் அடுத்த பவனி, ரஷ்யாவில் என்று வேடிக்கை
காட்டுகிறார்கள். பணம் பாழாகிறது, ஊழல் தலை விரித்தாடுகிறது.
இது மட்டும்தான் என்று எண்ணிவிடவேண்டாம்
- இது இப்போது தெரியு ஊழல். இது போல் ஏராளம்! ஆட்சி -
அப்பழுக்கற்றது, அதைக் குறைகூறுவது கூடாது, என்று கூறுகிறார்களே
காங்கிரஸ் நண்பர்கள், சரியாகுமா!
அரசாங்க நிர்வாகம் ஒழுங்காக
இல்லை. நாடகமேடையில் நடிக்கப்படும் கேலிக்கூத்தாக இருக்கிறது,
சர்க்காரின் போக்கு. பொது மக்களின் பணம் விரயமாகிறது!
இவ்விதம் சொன்னால், காங்கிரஸ்
நண்பர்களுக்குக் கண்கள் சிவந்து விடுகின்றன.
அரசாங்கம் திறமைக் குறைவாக
நடந்து கொள்கிறது!
என்று கூறுங்கள் பக்கத்தில்
கல் இருக்கிறதா நம்தலைமீது தூக்கிப்போட, என்று தேடுவார்கள்,
தெளிவை இழந்துவிடும் அளவுக்கு தேசியம் கொண்டுள்ள காங்கிரஸ்காரர்கள்!
முட்டாள்தனம்.
என்று சொல்லுங்கள். . .!
ஏ! அப்பா. ஆவேசம் வந்தவர் போல் ஆடி, அடிப்போம், உதைப்போம்
என்றெல்லாம் ஏசுவர்.
ஆனால் இவ்வளவும் உண்மை.
நாம் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் - அடக்கி வைக்க முடியாமல்
ஒரு காங்கிரஸ் ஏடு நேரு ஆட்சியைப் பற்றி சில தினங்களுக்கு
முன் இவ்விதமாக வெல்லாம் கூறியிருக்கிறது. காங்கிரஸ் நண்பர்கள்
போலவே இந்த ஏடு எமது பண்டிதருக்கு உலகமே பாதபூஜை செய்கிறது
என்று பராக்குக் கூறுவதுதான்! எனினும், அதனாலேயே சகித்துக்
கொள்ள முடியாமல், ஆட்சி கே-க்கூத்தாக இருக்கிறது; பொதுமக்கள்
பணம் விரயமாகிறது; திறமைக் குறைவாக நடந்து கொண்டிருக்கிறது
என்று கண்டித்து எழுதிவிட்டது. முட்டாள் தனத்துக்கு முதல்
பரிசு பெறுகிறதாம் சர்க்கார்!! நாம் கூற அஞ்சுகிறோம்.
ஆனால் இதோ "கல்கி''யின் கண்டனத்தைப் பாருங்கள்:-
"ஏழு வருஷ காலமாக பாங்கிச்
சிப்பந்திகள் கிளர்ச்சி செய்யும் போதெல்லாம் இந்திய சர்க்கார்
பாங்கி முதலாளியின் கட்சியில் இருக்கிறார்கள் என்று புகார்
சொல்லி வந்தார்கள். இதை அவ்வளவாக பொதுமக்கள் நம்பவில்லை.
ஆனால் ஸ்ரீ வி. வி. கிரியின்
ராஜினாமா மேற்படி புகாரை இதுவரை நம்பாதவர்களையும் ஓரளவு
நம்பும்படி செய்துவிட்டது.''
இந்த பாங்கிச் சிப்பந்திகள்
தகராறு விஷயமாகக் கையாளப் பட்டிருக்கும் மௌடிகத்தனம் எல்லாவற்றையும்
தூக்கி அடிப்பதாக இருக்கிறது. அரசாங்க நிர்வாகச் சரித்திரத்தில்
திறமை இன்மைக்கும் மௌடிகத்துக்கும் முதற் பரிசு கொடுப்பதாக
இருந்தால் இதற்குத்தான் கொடுக்க வேண்டும். டிரிபுனலுக்குமேல்
டிரிபுனல் நியமிப்பது, விசாரணைக்கு மேல் விசாரணை நடத்துவது,
இதற்காக கோடிக் கணக்கில் பொது மக்களின் பணம் விரயமாவது,
கடைசியாக வெளியாகும் தீர்ப்பை அவசர உத்தரவு போட்டு நிறுத்தி
வைப்பது என்றால், இவையெல்லாம் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தைச்
சேர்ந்ததா, நாடக மேடையில் நடிக்கப்படும் கே-க்கூத்தா என்று
சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.
இப்போது என்ன சொல்கிறார்கள்,
நம்மீது எரிந்து விழும் காங்கிரஸ்காரர்கள்.
கோபுரமேறி கொடி காட்டுவது
பற்றிக் குதூகலிப்பது இருக்கட்டும், நண்பர்களே! இதோ கூரையேறிக்
கோழி பிடிக்காததற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள்!
உலகம் புகழ்கிறது என்கிறீர்கள்
- மெத்தச்சந்தோஷம், ஆட்சியிலே இந்த அவலட்சணம் இருக்கிறதே
அதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஊர்க்கோடியில் கோதானம் கொடுக்கிறார்
என்று புகழ்கிறீர்கள்! இங்கே மாதா மடிப்பிச்சை எடுக்கிறாளே
இதற்கென்ன சொல்கிறீர்கள்! என்றெல்லாம் கேட்டால், காங்கிரஸ்
நண்பர்களுக்கு வெட்கமும் துக்கமும் சேர்ந்துதாக்கும்.
வேறென்ன செய்வார்கள், நம்மீது சீறி விழுகிறார்கள்! ஒரு
உண்மையைத் தெரிந்து கொள் தம்பி! நம் மீது கோபிக்கி றார்களே
தவிர அவர்கள் மனதிலேயும் உண்மை உறுத்தாமலில்லி, "இந்தப்
பாவிகள் நடந்து கொள்வதும், இந்தப் பயல்கள் கே- செய்வது
போலத்தான் இருக்கிறது. பண்டித நேருகூட அடிக்கடி அந்த மாநாடு
இந்த மாநாடு என்று அலைந்து கொண்டிராமல், ஆட்சியை ஒழுங்காக்கி
ஊழலை ஒழித்து, நிர்வாகத்தைச் சரிப்படுத்தி, மக்கள் சுபிட்சமடையும்
மார்க்கத்தை கவனித்தால் நன்றாகத்தான் இருக்கும் அந்தப்
பயல்கள் குத்திக் கிளறிக் காட்டும்போது கோபமாகத்தான் இருக்கிறது.
ஆனால், ஆர அமர யோசித்துப் பார்த்தால், வெட்கமும் துக்கமு
மாகத்தான் இருக்கிறது'' என்று அவர்கள் மனம் எண்ணாமல் இல்லை.
அதை மறந்து விடாதே! ! உண்மை, அவர்களையும் நம் பக்கம் மெள்ள
மெள்ள ஆனால் நிச்சயமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.
அந்த பக்குவம் ஏற்படுகிற வரையில், பழித்துத்தான் பேசுவார்கள்,
பகைவர் போல்தான் நடந்து கொள்வார்கள். நாம்தான் பொறுமையாக
நடந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் வேளை நெருங்க
நெருங்கத் தாயின் கூச்சல் அதிகமாகத்தான் இருக்கும்.
அன்புள்ள,

29-5-1955