ஐந்தாண்டுத் திட்டமும்
பஞ்சமும் -
இலங்கையில் தமிழர் கொடுமை.
தம்பி,
இப்போதெல்லாம் மிகமிக அருமையாகிவிட்டது
- அத்தி பூத்ததுபோல என்றுகூடச் சொல்லிவிடலாம் ஒரு காட்சி
- நான் சிறுவனாக இருந்தபோது கண்டிருக்கிறேன் அதனை - நீ
காணவேண்டுமானால் நமது இயக்கக் கதிரொளி அதிகம் பரவாத "பட்டி'யாகச்
சென்றால் எப்போதேனும் காணலாம் தெருக்கூத்துக் காட்சி.
என்ன அண்ணா! இது! தெருக்கூத்து
இப்போது எங்கும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது
- அத்தி பூத்தது போல என்கிறாயே - சதா நடக்கிறதே - என்கிறாயா
தம்பி! நான், நீ இப்போது காணும் தெருக்கூத்தைக் குறிப்பிட்டுச்
சொல்லவில்லை - இப்போதுதான், ஆச்சாரியாரும் ஆதி சங்கரர்
வாரிசும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே காலம் கெட்டுப்
போய்விட்டதே - அம்முறையில் நடைபெறும் தெருக்கூத்து நீ
காண்பது; நடத்தப்படுவது புராண நாடகமாக இருந்தால்கூட, அதிலே
நாலு சீர்திருத்தப் பாடல் பாடினால் மட்டுமே, மக்கள் ஒப்பம்
தருகிறார்கள்; நானும் அத்தகைய தெருக்கூத்துக்களைக் காண்கிறேன்,
ஒவ்வோர் சமயம்.
ஒரு சமயம், தம்பி, நான்
நெடுந்தொலைவிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தேன்
- திருநெல்வேலிச் சீமையிலிருந்து. நாம் அன்று வாழ்ந்து,
இடையில் தாழ்ந்து, இது போது விழிப்புற்று எதிர்காலம்
ஏற்றமுடையதாக இருந்திடச் செய்வோம் என்ற சூள் உரைத்துக்
கொண்டிருக்கும் "சேதி' பற்றி, மக்களிடம் எடுத்துக் கூறிவிட்டுத்
திரும்பிக்கொண்டிருக்கிறேன் - ஒரு குக்கிராமத்தில் கூத்து
நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும் அறியா வண்ணம் ஒருபுறம்
இருந்து கொண்டு, கண்டு களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!!
பெற்றெடுத்த செல்வங்கள்
பஞ்சத்தால் எலும்புந் தோலு மாகப் போயிருந்த நிலையில்,
உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தன்
அண்ணனிடம் உதவிக்குப் போகும் உருக்கமான கட்டம்; அந்தக்
காட்சியைக் கிராமத்து மக்கள் மெத்த உருக்கத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தனர்; சிலர் கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக்
கண்டேன், தம்பி! நான் குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது,
டில்லியில் "முன்μ மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார்
என்றால், எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை
நீயே யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு
இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய நிலைமையினால்
பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது, என்னைத் தூக்கி
வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
"உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே!
பஞ்சம் அப்படியா பரவி இருக்கிறது உன் தேசத்திலே....''
என்று கட்டியக்காரன் கேட்கிறான்.
பாதி பேச்சும் பாதி அழுகையுமாக
நல்லதங்காள் பேசுகிறாள்:
"ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று
சொல்லுவேன்? பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே
பஞ்சம், பட்டினி.''
"நெல்லே விளையவில்லையோ
அம்மணி?'' என்று கட்டியக்காரன் கேட்டான்.
"ஆமாம் ஐயா! அரிசிச் சாதத்தை,
என் அருமைக் கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!'' என்றாள்
நல்ல தங்காள்.
"அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால்
என்ன? பருத்திக் கொட்டை கிடைக்கவில்லையா?'' என்று கேட்டானே
கட்டியக்காரன்!!
"குபீர்' என்ற சிரிப்பொலி
கிளம்பிற்று.
"அப்பா! வெந்த புண்ணிலே
வேல் சொருகலாமா? பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன்,
பச்சிளங் குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால்
என்ன, பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம்
செய்கிறாயே! தர்மமா?'' என்று நல்லதங்காள் கேட்கிறாள்.
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி,
கட்டியக்காரன், "அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம்.
உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம். சத்தியமாக
நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள் தேசத்திலேயும்
இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி கிடையாது - அதற்கு
இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை பருத்திக்கொட்டை சாப்பிடச்
சொன்னார். அதைத்தான் நான் சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!''
என்று கூறிவிட்டுக் காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர்
சிரிப்பொலி கிளம்பிற்று.
நல்லதங்காள், கட்டியக்காரனை
எழுந்திருக்கச் சொல்லி, "அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்!
உன் நாட்டிலே, பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா
மந்திரிகளாக இருக்கிறார்கள்?'' என்று கேட்டாள்.
"ஆமாம் தாயே! நாங்களாகத்தான்
தவமாய்த் தவமிருந்து அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப்
பெற்றோம்'' என்றான் கட்டியக்காரன்.
"இது என்ன அநியாயமடா அப்பா!
மாடு தின்னும் பருத்திக் கொட்டையை மக்கள் தின்னட்டும்
என்று சொல்கிற மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே!
ஏனோ இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாமலிருக்கிறாய்?''
என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன்,
"அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா!
நாங்களாகத்தான் இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து
மந்திரிகளாக்கினோம்'' என்று கூறிவிட்டு,
மாட்டுப் பொட்டியில்
ஓட்டுப் போட்டோம், மகராஜி
எங்க வயித்திலே
மண்ணைப் போட்டாங்க, மகராஜி!
என்று பாடவே ஆரம்பித்தான்.
மக்கள், "கரகோஷம்' சொல்லி
முடியாது.
தம்பி! நீ, இத்தகைய கூத்துக்களைக்
காண்கிறாய், இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர்
வகுத்த சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்தி
லேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன். இங்கேதான்,
கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க,
உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது இருக்குதே!''
என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான் கட்டியக்காரன்! காலம்
கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார் இதனால்தான் பாவம்,
கை பிசைந்து கொள்கிறார்!!
நான் குறிப்பிடும் தெருக்கூத்து
- அசல் புராணம்!! பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து
கூத்து.
அப்படிப்பட்ட கூத்துக்களில்,
பரமாத்மாவைத் தரிசிக்க வேண்டும், "சாலோக சாமீப சாரூப
சாயுச்ய' பதவியைப் பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து,
கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும், அதற்கு
என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல், திகைத்துத்
திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து "ராஜா'! திடீரென்று
ஒரு நாள், யாராவது ஒரு மகரிμ அவர்முன் தோன்றுவார். உடனே
மன்னர், அடியற்ற நெடும் பனைபோல் அவர் பாதத்தில் வீழ்ந்து
வணங்கி, "மாமுனியே! மாதவரே! இந்தப் பாவியேன் கடைத்தேறும்
மார்க்கம்தனை அருளுவீரே!'' என்று கெஞ்சுவான். உடனே மனம்
இளகி, மகரிμ, மன்னனை அருகே அழைத்து, "குழந்தாய்! இதோ
நான் அருளும் இந்த மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால்,
உனக்குச் சகலமும் சித்திக்கும்'' என்று கூறி, அவன் காதருகே,
இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும் போதே,
மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை மூடியபடி,
"ஆஹாஹாரம்' செய்வான். இரண்டோர் விநாடிகளிலே "மஹாமந்திர'
உபதேசம் முடிந்துவிடும். மன்னன் மற்றோர் முறை மகரிμயின்
பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு, "தன்யனானேன்! தன்யனானேன்!
இது நாள்வரையில், இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று
கிடந்தேன், பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே
கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!'' என்று போற்றி விட்டு,
மாதவ பூஜிதரே!
உம் மலரடிதனை நிதம்
பதமுடன் தொழுவேன்,
மாதவ பூஜிதரே!
என்று பாடுவான்! காட்சி
முடிவு பெறும்; மக்கள் காணக் கிடைக்காத காட்சி என்று கூறிக்
களிப்படைவர். நான் சிறுவனாக இருக்கும்போது, இத்தகைய காட்சிகள்
நிரம்பியதுதான் "கூத்து''
நாடாளும் பிரச்சினை பற்றிப்
பேசாமல், நாடகமாடும் பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே,
என்ன அண்ணா! என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு
கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை
விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக்
கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன்.
மேலும், தம்பி, இந்த நாடகம்
பற்றிக் குறிப்பிடுவதும் நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை
விளக்கத்தான்!
மதி குறைந்து நிதி மிகுந்திருந்த
பழைய மன்னனிடம் மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிμ,
இரண்டோர் விநாடி உதடசைத்து "மஹா மந்திரம்' உபதேசிப்பாரே,
தெருக் கூத்திலே, அதுபோல, "நறுக்கென்று' நாலே நிமிஷம்
பேசி, மக்கள் மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து,
கோபத்தைப் போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து,
தேச பக்தியை ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி,
மாற்றுக் கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர்
காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு, நான்
சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை
நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான்
வேறு என்ன தம்பி சொல்ல முடியும்.
வேதமும் உபநிஷத்துமா சொல்ல
முடியும்!! ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார்,
காமராஜர்!
யாராரோ, என்னைப் பேசத்
தெரியாதவர், கல்லுப் பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே,
இதோ பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக்
காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர் - ஒரே நாளில்
15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும் கேட்டுத்
தொலைத்தார்கள்!
ஒரே நாளில் 15 கூட்டங்கள்!
தம்பி! நான் ஐந்து நாட்கள் சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன்
- திகைக்கிறேன்.
15. ராமநாதபுரம், பரமக்குடி
16. வில்லிபுத்தூர், தளவாய்புரம்
17. சாத்தூர், விருதுநகர்
18. அருப்புக்கோட்டை
19. சின்னமனூர்
இவ்வளவுதான் முடிந்தது!!
ஐந்து நாட்களில் எட்டே
கூட்டங்கள்! செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே
நாளில் 15 கூட்டங்களிலே பேசிய அந்த "மேதை' எங்கே, ஐந்து
நாட்கள் சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள
உன் அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா இருக்கிறது,
அவருடைய அருஞ்செயல்!!
ஆனால் தம்பி, அவரால் ஒரே
நாளில் 15 கூட்டங்க ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக்
கொள்ளக் கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப்
பேசுவார்! மகரிμ "மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே!
நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை விளக்கவேண்டிய
தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச வேண்டுமா! பூகோளம்
காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து எடுத்தியம்பப் போகிறாரா?
வாதிடப் போகிறாரா? பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்;
அவர், நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் - "மஹாமந்திரம்'
உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே இவர்தம்
திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய வைத்துக்கொண்டிருந்தார்
என்று கொண்டாடு வதாக, அவர் கருதுகிறார்!
கொப்பம்பட்டியிலும் சரி,
கொடுமுடியிலும சரி, பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும்
சரி, அவர் கூறுவது என்ன?
எதிர்க் கட்சிகளை நம்பாதே!
திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம்.
வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது.
வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை.
காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது.
ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது.
பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால் என்ன?
வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவுதான்!
பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே!
இவைகளை விளக்க, இவைகளுக்குக்
காரணம் காட்ட, ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப்
பதில் கூற, அவசியம் இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் -
திறமையும் வேறு தேவைப்படும்!
கண்ணன் தின்னும் பண்டம்
வெண்ணெய்,
அண்ணன் எழுதிய கடிதம் எங்கே?
என்று பேசுவதிலே தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில்
பதினைந்து ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்!
காரணம் கேட்போர், ஆதாரம்
தேடுவோர், வரலாற்றினைக் காட்டு என்போர், என் "கூட்டத்திலே'
இருந்தால் தானே, நான் அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம்
ஏற்படும் - நான் பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே
கலந்து கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர்
கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது
கோபம்!
கலெக்டரும், அவர் தயவினைத்
தேடும் கனவானும், போலீஸ் அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச்
செல்ல முடியாத மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும்
அவர்களுடைய உதவியைத் தேடித்திரியும் "காண்ட்ராக்டர்களும்''
- கூடி நிற்கும் அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக
மேதாவிலாசம் போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக
வேண்டும். இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம்
எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க! உண்மையைச்
சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் "பிரச்சினை' ஏது? அப்படியே
ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை இருந்தாலும், பொதுக்
கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா இருக்க முடியும்!
எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக்
காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து கொலுவீற்றிருக்கிறார்!
வறுமை கொட்டுகிறது
பொறு! பொறு!
வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது?
இரு! இரு!
அகவிலையால் கஷ்டப்படுகிறோம்!
ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில்.
பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது!
ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும்.
இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே!
"இந்தியா பல்வேறு நாடுகளைக்
கொண்ட ஒரு உபகண்ட மாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன்
இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த
முடிவுக்கே வந்திருக்கின்றனர். சீதோஷ்ண நிலை, மண் வளம்,
பொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழிகள்,
முதலியன யாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு
விதமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள் ஒவ்வொன்றுக்கும்
தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம் ஆகியவைகள், இருந்து
வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந்திருப்பதனாலேயே
இந்தியாவை ஒரு உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது.
மேலும், இந்தியாவின் சரித்திரத்தை
ஆராய்ந்து பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும்
தனித்தனி அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.
ஆங்கிலேயர்களால் இந்தியாவில்
ஒரே அரசாங்கத்தை நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு
என்ற எண்ணத்தைப் பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான்.
ஆனால் அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்?
நமக்காக அல்ல.
இந்தியா முழுவதையும் ஒரே
ஆட்சியின்கீழ் வைத்து இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள
முடிந்ததற்குக் காரணம் அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும்
தந்திர புத்தியுமேயாகும்.
இந்தியாவில் ஒரு இனத்தையும்
அதற்குரிய தாயகத்தையும் எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது
முக்கிய விஷயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை
உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும்
பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான
முறை. இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர்,
கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார்,
மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும்
இருக்கின்றன.
இந்தப் பதினேழு நாடுகளும்
தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக்
கூடிய அளவுக்கு, மக்கள் தொகை, பொருள் வளம், நிலவளம்
ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று,
இனப்பற்று களுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம்
வளர்ந்து வந்தது. அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது.
ஆனால் இனியும் நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது.
ஏகாதிபத்தியத்திடமிருந்து
சுதந்திரத்தைப் பெறப் போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற
சுதந்திரத்தைப் பிற இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப்
பின்வாங்குவது தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல.
ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து
இந்தியா விடுபடுவது போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும்
தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக்
கொள்கை.
வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து
பெற்ற உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்றுவிட்டன.
தம்பி! திராவிடத்திலே,
"திராவிடம்' என்பதைக் கற்பனை என்று கூறி வருவோரே, இந்த
அளவுக்குக் கூறிட நேரிட்டது. நாம், இந்தக் கருத்துகளுக்கு,
வரலாற்றுச் சான்றுகளையும், இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத்
தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது
வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம் காட்டுகிறோம்;
அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட மனம் புழுங்கிய நிலையில்,
வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுபற்றிக் குமுறுவதை
எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு திட்டம் ஒரு ஓரவஞ்சனைத்
திட்டம் என்பதற்குக் காங்கிரஸ் ஏடுகளே தரும் கருத்துக்களை
எடுத்து மக்களிடம் வழங்குகிறோம் - இவ்வளவையும் காமராஜர்,
தமது மின்னல் வேக மேதாவிலா சத்தின் துணைகொண்டு, ஒரே நாளில்,
15 கூட்டங்கள் நடத்தி ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்!
இவரன்றோ முதலமைச்சர்!
மக்கள் என்ன எண்ணுகிறார்கள்?
திராவிட நாடு தனி நாடாக
வேண்டும் என்பதற்கும், வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி
வதைக்கிறது என்பதற்கும், பணக்காரர் கொட்டம் வளர்ந்து
வருகிறது, பாமரர் பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும்
காமராஜர் "அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!'' என்பதன்றி,
தக்க வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ கூறக்காணோமே
- என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார் களா? என்று நீ
கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான் எண்ணிக்கொள்வார்கள்;
எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் காமராஜரின் மின்னல் வேக
மேதாவிலாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், மனம் குமுறும்
நிலையில் உள்ள மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல;
பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும், சேனாபதியும்,
மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அகம்பாவத்தின்
விலை அறிவார்களேயன்றி, ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து
திரிபவர்கள்! அவர்கள், முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர்
களிப்புடன் கண்டார் என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும்
அறியார், பாபம்! நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி
அவர்கட்கு என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள்,
இப்போது நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக் "கடுவிஷம்'
என்றார், இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த "உயர்வு'
கண்டு உளம் பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து
என்ன, நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது
மேதா விலாசத்தைக் காட்டலாமே!
ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே,
முதலமைச்சர், மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக்
கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25 பிணங்களைக்
கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி, தமிழரின் பிணங்கள்!
யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றனரோ?
வெட்டப்பட்டனரோ, குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ,
வெறியரின் தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின்
பிணங்கள் சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு
இறையான செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன.
கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை எத்துணையோ!
கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி நடக்கிறது அங்கே,
இங்கே மின்னல் வேகத்தில் மேதா விலாசத்தைக் காட்டுகிறார்
தமிழர் - பச்சைத் தமிழர்!
சுட்டுத் தள்ளுகிறார்கள்
வெட்டிக் கொல்லுகிறார்கள்
துரத்தித் தாக்குகிறார்கள்
கொள்ளை அடிக்கிறார்கள்
பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில், அடக்குமுறை
அவிழ்த்துவிடப்பட்டி ருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக்
கிளம்பிவிட்டிருக்கிறது, ஆயிரம் "கோவா' நடக்கிறது அங்கு!
கடலுக்கு அப்பால்; எமது தாயகம் இருக்கிறது, காமராஜர் என்றோ
தமிழர் கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு
அவர் சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம்
அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளு கிறார்கள்,
இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி கனதனவான்களிடம்,
கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார், காமராஜர், கனம்!
திருமாவளவன் சிங்களம் வென்றான்,
அங்கு பிடிபட்ட வரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை
கட்டினான் என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத்
தீவிலே, செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர்,
காவிரியைத் தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர்.
கோவா கொடுமையைக் கண்டிக்க,
"நா' இருந்தது; தமிழன் தாக்கப்படுகிறான், வாயடைத்துக்
கிடக்கின்றனர்.
வகையற்றோர் ஆள்கின்றனர்;
வேற்றுச் சீமையிலே நம்மவர் மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள்,
நம் குலத்தவர்; கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை
ஒழித்துக்கட்ட "பழையகோட்டை'களை நாடுகிறார் - பதவி மகுடி
ஊதுகிறார்!
"கதறுகின்றாள் தமிழ் அன்னை.
அந்தக் கூக்குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத்
துளைக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை
இராஜ்ய முதல் மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள்
நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில்
விழவில்லையே'' - என்று பதறிக் கேட்கிறது, "சுதந்திரம்'.
எப்படி ஐயா, விழும்!
"இந்த வழியாகத்தானே பிணம்
வரும்; வரட்டும், நான், கலந்து கொள்கிறேன்'' என்று கூறவில்லையா,
இரத்தக் கண்ணீரில் - குட்டம் பிடித்துப் பிறகு அலையும்
மோகன்!
நான் ஆள் பிடிக்கும் வேலையில்
அலைந்து திரிகிறேன். தி.மு.க. வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம்
கட்டிக்கொண்டு, வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார்
கைவலுக்கிறதா என் கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான்
"கோதா'வில் இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம்,
இருபத்து ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல்
தொல்லை தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட
அவர் சலித்துக் கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு,
அவர் துணிந்து தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில்
புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து
பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை எத்தனையோ
இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு இருபத்து ஐந்துபேர்
பிணமாகிவிட்டால் என்ன, குடியா முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர்
- தமிழர் - பச்சைத் தமிழர் - தம் மேதா விலாசத்தை மின்னல்
வேகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி,
இலங்கையில் தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே,
எவ்வளவு கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா
உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள்
இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை இரசிக்கிறார்கள்
- பலனும் பெறுகிறார்கள்.
அன்பன்,

24-6-1956