அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மிரட்டல்! விரட்டல்!
2

உனக்கென்று ஓர் தனி இயல்பும், தனிவாழ்வு முறையும், கிடைத்திட அல்லவா, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தேன்! புன்னகை பூத்து நிற்கும் பூவையரெல்லாம் தாய் ஆவரோ? அவரிடம் பகை கொள்ளச் சொல்கிறேன் இல்லை! அவர்கள் அன்புடன் உன்னை அழைத்திடும்போது, அருவருப்பு அடைந்து வெறுத்து ஒதுக்கிவிடு என்று பேசினேன் இல்லை! ஆயிரம் கனிவு காட்டலாம் அம்மையே! எனினும் இதோ என் அன்னை! என்று பெருமையுடன் என்னைச் சுட்டிக்காட்டிடவா நீ தயக்கமடைய வேண்டும்! மதியற்றவனே! நேசம் வேறு, தாய்ப்பாசம் என்பது வேறு! கன்னல் மொழி பேசக்கூடும் மற்றவர் - உன் தாய் சில வேளைகளிலே கடிந்துரைக்கக் கூடச் செய்வாள் - எனினும் "தாய் அன்பு' என்பது தனியானதல்லவா - பிற எங்கும் பெறமுடியாததோர் பேரன்பு அல்லவா! பெற்றமனம் கொண்டிடும் பாசத்தை வேறு எங்கு காண இயலும்! இதனையுமா கற்பிக்கவேண்டும்? கடுவனிடமும் கொல்லும் புலியுடமும்கூடக் காண்கிறோமே இதனை. கருத்தற்றவனே! உன்னிடம் அகமும் புறமும் அளித்து, அணி ஆரமும் மேகலையும் தந்து, அறநெறியும் பிற பெருமைகளையும் தந்து, அழகியதாய் விழுமியதாய் உன் வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளைத் தேடித்தேடித் தந்து, நீ ஏற்றம் பெற்று, கொற்றம் நடாத்தி, ஏறுநடை போட்டு, எங்கணும் சென்று, என் வீரமும் அறிவும் எனக்கு என் அன்னை அளித்தாள்! என்று கூறி எனக்குப் பெருமை தேடித் தருவாய் என்று பார்த்தால், பெற்றவளை மறந்திடத் துணியும் பேதையே! கற்றதை மறந்திடும் கசடனே! என்னை மகனாக்கிக்கொள்ள ஒரு மகராசி, அழைக்கிறாள் - அவள் தன் வயிற்றில் பிறக்காதவர்களாயினும் வாஞ்சனை காட்டுவதாக வாக்களிக்கிறாள் - உச்சி மோந்து முத்தமிட்டு, உன் தாயாக நான் இருக்கிறேன்! உனக்கும் உன் போலப் பல பிள்ளைகட்கும் நான், தாய்வேலை பார்க்கும் பேராவல் சுரந்திடும் உள்ளம் கொண்டேன்', எனவே உத்தமனே! உன் தாய் என்று அவளையும் இவளையும் காட்டி அழாதே! நான் தாயானேன், நீ என் மகனானாய் என்று அழைக்கிறாள், நான் இனி அந்த அம்மைக்கு மகனாகி விடுகிறேன், தாயே! விடைகொடு! என்று துணிந்து என்னைக் கேட்கிறாயே! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! அந்த வேளையிலும், உன்னைப் பாவி! பழிகாரா! படுநாசமடைவாய்! என்று கூறவும் மனம் கூசுகிறதடா, பாலகனே! என்னைப் பார்! என் தாய்! என்று நீ கூறிப்பெருமைப்படத்தக்க நிலையில் நான் இல்லையா?... என்னிடம் என்னடா மகனே! குற்றம் கண்டாய்? என்னை வெறுத்துவிட்டு வேறோர் வேற்றுச் சீமையாளிடம் "தத்து' போகவேண்டிய நிலையா வந்துற்றது? நான் என்ன நீ பசியால் துடித்து, பதறிக் கதறிடும்போது உன் முகத்தையும் பாத்திடாமல், என் சுகத்தைக் கவனித்துக்கொண்ட மாபாவியா? உன்னை மாடாய் உழைக்கச் செய்து, நான் உலவி மகிழ ஒரு மாடி கட்டிக்கொண்டேனா! உழைப்பால் நீ ஓடானாலும் பரவாயில்லை, எனக்கு ஓர் உல்லாச ஓடம் வேண்டும், அதனை நான் களிப்புக் கடலில் செலுத்தி மகிழப்போகிறேன் என்று செப்பிய வன்னெஞ்சக்காரியா! என்ன குறை கண்டாயடா மகனே! புதிய தாய் தேடிடவேண்டிய விபரீதம் நேரிட்டதா, மகனே! மகனே! மதி இழந்தனையோ! மயக்க முற்றனையோ! பேதை மகனே! எதனையும் பெறலாம், அதற்கும் ஓர் வழி கிடைக்கும், ஆனால் அன்னையின் அன்பு என்பதனை, அறியாச் சிறுவனே! விலைபோட்டு வாங்க இயலுமா! அன்னையின் அன்பு, பெற்றவள் பாசம், மலிவு விலைக்குத் தருகிறோம், வருக! பெறுக! என்று யாரோ அங்காடியில் கூவிக்கூவி விற்பதாகக் கூறுகிறாயே! விளையாட்டுப் பருவத்தினன் நீ எனினும், கூடுகட்டி வாழும் குருவிகளைப் பார்க்கத் தெரியுமே உனக்கு தாய்க் குருவியிடம் தானே குஞ்சுகள் தீனியைக் கேட்கின்றன - ஊட்டப் பெறுகின்றன! மடியிலே பாலைச் சுமந்து நிற்கும் பசு எதுவோ அதுவே நமக்குத் தாய் என்று ஊட்டிடச் செல்லும் கன்று, நீ பார்த்ததுண்டா! ஏடுகள் புகட்டுவதைக் கூடக் கவனிக்க வேண்டாம்; பக்குவம் வேண்டும் அதற்கு! கண்ணுள்ளோர் காணக்கூடிய காட்சிகளடா இவை குருவிக் கூட்டிலே காணப்படும் குடும்ப பாசமும், துள்ளிடும் கன்றுக்குப் பாலும் அளித்து பரிவுடன் உடலை நாவினால் நீவியும் விடும் தாய்ப்பசுவின் பாசமும்!! இந்தக் காட்சிகள் போதுமே, தாய் உள்ளத்தைத் தாயிடம்தான் பெறமுடியும் என்ற உண்மையை உணர்த்த!'' என்றெல்லாம் தம்பி! தாயகம் கேட்கிறது! நான் காணுகின்ற வயலும் அதற்கு வளமூட்டும் நீர் நிலையங்களும், அந்த வளத்தை விளக்கக் குலுங்கிடும் மணியும் கனியும், அவை தமைப் பெற உழைப்பு நல்கிடும் உத்தமரின் வியர்வையும், குன்றும் குளமும், கூத்தும் பாட்டும், மக்களின் மாண்பும் பிறவும், எல்லாம் எனக்கு இதனைத்தான் காட்டுகின்றன! உனக்கு மட்டுமென்ன, நீயும் இதே எண்ணம்தான் பெறுகிறாய்!!

தம்பி எனக்கும் உனக்கும் காமராஜருக்கும் என்றுகூட வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே பேசுவோம், தேசிங்கு ராஜன் என்ற உடனே சுரக்கும் வீர உணர்ச்சி, வங்கத்திலும் கலிங்கத்திலும் ஏற்படமுடியுமா? பாக்தாதிலும் டமாஸ்கசிலும் எப்படி தேசிங்கு ராஜன் கதை கேட்டால், வியந்து பேசுவரோ அவ்வளவுதான் கல்கத்தாவிலும் கான்பூரிலும்! கட்டப் பொம்மன் என்றதும் இங்கு தோள்பூரித்து, மாற்றானின் தாள் வணங்கமாட்டேன், என் கரத்தில் வாள் உண்டு! என்று ஆர்த்தெழத்தக்க வீரம் நமக்கு எழுவதுபோல, பிற எங்கு காணமுடியும்? பாஞ்சாலங்குறிச்சியின் வீரக் கதையைக் கூறினால், பாஞ்சாலத்தில் உள்ளவர்கள் மனதிலே சொந்தம் எழாதே! வியப்பு தோன்றக்கூடும்! சுவை மிக்க வீரக்கதை கேட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கக் கூடும்! எனக்குத் தம்பி! சாதாரணமாக நெல் காணும்போது ஏற்படும் நம் பொருள் என்ற உணர்ச்சி கோதுமையைக் காணும்போது ஏற்படமாட்டே னென்கிறதே, என்ன செய்வேன்!

நம் நாடு - நம் இனம் - நம் நாட்டு இயல்பு - நமது வரலாறு - நம் நாட்டு வீரக் காதைகள் - நம் நாட்டு எழில் நம் நாட்டு முறைகள் - என்பன, தம்பி! தாயிடம் சேய்கொள்ளும் பாசம் போன்றது, இயற்கையாகச் சுரப்பது, இந்தப் பாசம், பெற, தம்பி! எத்தனை எத்தனை தலைமுறைகளாயின என்று எண்ணிப்பார்! காவிரி குறித்தும், தமிழகத்து வீரக் காதைகள் குறித்தும், இந்நாட்டுக் குன்று குறித்தும் நம்மவர் கொண்டிடும் கொள்கை குறித்தும், எத்தனை எத்தனை தலைமுறைகளாகப் பேசிப் பேசிப் பேசி; அந்தப் பாசம் நிலைத்து நிற்கிறது!

சேரன் செங்குட்டுவன் காலமுதற்கொண்டு சொல்லிச் சொல்லிச் சுவை ஊறி ஊறி, நமக்கென்று ஓர் சுபாவம் அமைந்து விட்டது - அதனை சுப்பிரமணியனார் பார்த்து சூ! மந்திரக் காளி! ஓடிப்போ! என்று சொல்லுவாராம் அந்த "பாசம்' ஓடியே போகுமாமே! இந்தக் கேலிக்கூத்தை என்ன வென்று சொல்வது!

நம் நடிகமணி டி.வி. நாராயணசாமி, 108 நாட்கள் சிவசீலா நாடகத்தில் சிவபெருமான் வேஷம் போட்டார் - பித்தளைப் பாம்புகள், கிரீடம் - ஏகப்பட்ட "பாரம்' - அந்தப் பழக்கத்தில், காலை வேளைகளிலேயே கூட, அந்த நாடகம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் நண்பர் நாராயணசாமி என்னிடம்வந்து பேசிக்கொண்டிருக்கையில், "பாரம்' சுமந்து கொண்டிருக்கும் தோற்றமே இலேசாகத் தென்படும்! தம்பி, தாய்நாட்டுப் பாசம், நாராயணசாமி சுமந்தது போன்ற பாரம் அல்ல - அதுதான் தேசியம் - பாரம்பரியம் என்கிறார்களே அது அதனை விலங்கு களும் அடியோடு இழந்துவிட முடியுமா என்பது ஐயப்பாடுதான் - நாம் எங்ஙனம் அதனை இழந்துவிட முடியும் - அமைச்சர்கள், அதனை இழந்தால்தானே எமக்கு அமைச்சர் வேலை கிடைக்கிறது என்று வாதாடக் கூடும் - தம்பி! அது அவர்கள் கீழ்நிலை சென்று விட்டதைக் காட்டுவதாகுமே தவிர, நாட்டுப்பற்று எனும் மாண்பு பொருளற்றது என்பதையா காட்டிடும்!

தலைமுறை தலைமுறையாக வளர்ந்து நமது குருதியுடன் கலந்துள்ள தாய்நாட்டுப் பாசத்தை, ஒரு உத்தரவு பிறப்பித்து ஒழித்துவிட முடியும் என்று எண்ணுகிறார்களே, இவர்களை என்னென்று கூறுவது!

சின்ன வயதிலே சந்தைப் புறத்திலே காணாமற்போய் விட்ட குழந்தை, வேற்றாரிடம் வளர்ந்து, பெரியவனானாலும், பிறகோர் நாள், உண்மை தெரிந்ததும், தாயின் பாதத்தைத் தன் கண்ணீரால் கழுவிடக் காண்கிறோம் - கதைகளில் தலைமுறை தலைமுறையாக தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் காக்கைப்பாடினியாரும், சீத்தலைச் சாத்தனாரும் கோவூர் கிழாரும், கணியன் பூங்குன்றனாரும், கபிலரும், திருத்தக்கரும், நக்கீரரும், நாகனாரும், நச்செள்ளை யாரும், (மற்றவர் பற்றிய முறையான பெயர் வரிசையை நமது நாவலரிடம் கேட்டுப் பெறுக) ஊட்டி வளர்த்து, உருவாக்கி வைத்துள்ளதை, ஊராளவந்தவர்கள் உத்தரவு போட்டு உருக்குலைத்து விடுவதாமே! இப்படியொரு "உற்பாதம்' நேரிட விடலாகுமா!

எனவேதான் தம்பி, பாரத நாடு - இந்தியா - இந்தியர் - என்று இவர்கள் இட்டுக்கட்டி இதுகாலை திணிக்க விரும்பும் போலித்தேசீயம், முளைவிட மறுக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நமது பரம்பரைக்குக் கிடைத்து, கண்ணீரும் செந்நீரும் வியர்வையும் அதற்கு அளித்து, செழிப்புறச் செய்து, எந்த இயல்பு - தாய்நாட்டுப்பற்று தேசியம் - நம்மிடம் குருதியிற் கலந்திருக் கிறதோ, அதனை அழித்திட முற்படுவது அறிவீனம் என்பது மட்டுமல்ல, ஆகாத காரியம், அடாத செயல் என்பதுடன், இவர்கள் எக்காரணம்பற்றியோ வெற்றி நிலை எய்தினாலும், இவர்கள் பிடியில் சிக்கிவிட்ட மக்கள், இருந்ததையும் இழந்து, புதியதோர் இயல்பும் பெறாமல், ஏதுமற்றவர்களாக, பட்டியில் மாடென உழல வேண்டி நேரிடுமேயன்றி, எமது! எம்மவர்! எமது இயல்பும் எம்வீரர்! எமது புலவர்! எமது நெறி! என்று கூறிப் பெருமைப்பட, அறிவாற்றல் பெறமுடியாததோர் நிலை பெறுவர்! நாடு இருக்கும், அதிலே மக்கள் இருப்பர் - ஆனால் இரண்டினையும் ஒன்று ஆக்கிடும் பாசம் - பற்று - தேசியம் - இருக்காது!! வீட்டிலே இருக்கும்போது, நம்முடன் இருப்போரைவிட, அதிகமான அளவில்தான் ஆட்கள் இருக்கிறார்கள் இரயில் பயணத்தில் வீட்டிலே காணப்படுவதைவிட சிற்சில வேளைகளிலே இரயிலில் குதூகலமும் கூடக் காணப்படும் - எனினும் அதிலே செல்லும் எவரும் - இரயிலைத் தமது வீடு என்று கொள்வதில்லையே!! சிறு குடில் எனினும், அதனிடம் ஏற்படும் பாச உணர்ச்சி, புதுமெருகுடன் கூடியதாக இருப்பினும், இரயிலிடம் ஏற்படுகிறதா!! புதிய போதகர்களோ, குடிலையும் அழித்துவிடுங்கள், நாங்கள் அமைந்திருக்கும் கூடாரத்தை உமது மனையென்று கொள்ளுங்கள் என்கின்றனர்! முடியாது ஐயன்மீர், ஏனெனில் அது முடியக்கூடிய செயலல்ல என்கிறோம். விடாதே! பிடி! சிறையில் அடை! என்று இந்துஸ்தான் டைம்ஸ் கொக்கரிக்கிறது!

இதிலிருந்து தம்பி, நான் துவக்கத்தில் எடுத்துக் காட்டியபடி, அங்கு வரையில், நமது கழகம் மணம் பரப்பிவிட்டிருக்கிறது என்ற பேருண்மை தெரிகிறது.

இதுபோல, எங்கும் நமது கழக நிலை தெரிந்திடவேண்டும் என்பதற்காகவேதான் தம்பி, நானும் துணிந்து ஆங்கிலக் கிழமை இதழ், ஜனவரித் திங்களிலிருந்து வெளியிடுவது என்று ஏற்பாடுகளைத் துவக்கிவிட்டேன். சென்ற ஆண்டு, எப்படியும் இந்த இதழ் துவக்கி நடத்துவது என்று, ஏற்பாடுகளை என் நண்பர் S.S.P. லிங்கம் அவர்களைக் கொண்டு துவக்கினேன். அவரும் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார் ஆனால், என் சுபாவம்தான் உனக்குத் தெரியுமே, புதிய பொறுப்பாயிற்றே! எப்படி இதனையும் கவனித்துக் கொள்வது! என்ற அச்சம் குடைந்தது. மெத்தச் சமாதானம் சொல்லி, நண்பர் லிங்கத்தை, இப்போதைக்கு வேண்டாம், பிறகு பார்ப்போம் என்று கூறினேன். இப்போது சென்னையிலிருந்து நடத்துவதைவிட காஞ்சியிலிருந்து வெளியிடுவது, சிறிதளவு வசதி தரும் என்ற எண்ணத்துடன், ஏற்பாடுகள் செய்துவருகிறேன். தம்பி! நான் அதற்காகக் கேட்கும் ஆதரவு நன்கொடை அல்ல - துவக்கத்திலேயே எனக்குத் தெம்பும் தைரியமும் வருவதற்காக, ஆயிரம் சந்தா தேவை என்று கேட்டேன்.

நான் இதுபோலக் கேட்கும்போது, தம்பி, நீ மட்டுமல்ல கேட்டுக்கொண்டிருப்பது.

மாற்றுக் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்; சர்க்காரும் உற்றுக் கேட்கிறது.

என் வேண்டுகோளைத் தம்பி, நீ அன்புடனும் அக்கரையுடனும் நிறைவேற்றி வைத்தால், உனக்கும் எனக்கும் உள்ள உறவு எவ்வளவு உயர்தரமானது என்பதை அறிவதுடன் நமது கழகத்துக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது, காரியத்தை வெற்றிகரமாக்கும் ஆற்றல் நமது கழகத் தோழர் களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை, மாற்றுக்கட்சியினரும், சர்க்காரும் அறிவர்!

உன் அன்பும் அக்கறையும், ஆங்கில ஏடு பொறுத்த வரையில், நான் மகிழத்தக்க வகையில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள வருந்துகிறேன். எனினும் சொல்லிவைக்கிறேன், நிலைமையை அறிந்து விரைவினில் ஆதரவு திரட்டி அளித்திடும் ஆற்றல் உன்னிடம் நிரம்ப இருக்கிறது என்று அறிந்தவன் என்பதனால்.

இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல, வளமான ஆங்கில ஏடுகளை மட்டுமே வெளி உலகு காண்கிறது. எனவே திராவிடம் தெரிவதில்லை.

டாக்டர் மு.வ. கூறுவதுபோல, சென்னை அமைச்சர் களையோ அச்சம் தடுக்கிறது; எப்போதேனும் அவர்கள் துணிந்து நீதி வழங்கும்படி கேட்டாலோ, மிரட்டலும் விரட்டலுமே கிடைக்கிறது. பல்கலைக் கழகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் டில்லி புறக்கணித்து விடுகிறது, மதிப்பளிக்க மறுக்கிறது. இப்படி ஒவ்வோர் முனையிலிருந்தும் டில்லியின் தாக்குதல் கிளம்புவது கண்டு, மனம் நொந்து போயுள்ள நம்மையோ நாட்டிலே நடமாடவிடுவதே கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டில்லியிலுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. இந்நிலையில், நமது கழகத்தைப் பிறர் அறிவதற்காகவாவது ஒரு ஆங்கில ஏடு - கிழமை இதழாவது வேண்டும் அல்லவா!

இதை அறிந்துள்ள உனக்கு ஆதரவு திரட்டி உடனே அனுப்பி வைக்கும்படி, தம்பி, நான் பன்னிப் பன்னிக் கூறத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

கலை, கல்வி, அரசியல், எனும் மூன்று துறைகளிலே, டில்லி வழங்கியுள்ள மிரட்டல் விரட்டல் கண்டோம் - இனித் தம்பி, தொழில் துறையிலிருந்து கிளம்பும் ஒரு துயரக் கீதம், கேள். அதைக் கூறு முன்பு, நமது நிதி அமைச்சர் உருவத்தையும் உரையையும் நினைவிலே கொண்டுவந்து நிறுத்திக் கொள்ளவேண்டுகிறேன்!! அடுத்த கிழமை அந்தத் துயர கீதம் பற்றிக் கூறுகிறேன்.

அன்பன்,

26-11-'56