அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


"மிருக ஆட்சி''
2

நாடாரின் வாய்ப்புக் குறித்து கேட்டேன், இதற்கு ஒரு குடிமகன் கூறியதாவது -

காங்கிரஸ் தலைவர் காமராஜ நாடாருக்கு இங்கு செல்வாக்கில்லை. அவர் எங்கு சென்றாலும் யாரோ என்று மக்கள் அலட்சியமாகக் கருதுகின்றனர்.

அவருக்கு அரசியல்பற்றி மூலாதார அறிவே கிடையாது.

"நாடாரால் அரசியல் சூழ்ச்சிகள் தான் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. போதும் அச்சூழ்ச்சிகள்''

"முதலமைச்சராயிருந்த கண்ணியமான அரசியல் வாதியான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை மேற்படி பதவியிலிருந்து நீக்கியதற்கு நாடார்தான் பொறுப்பாளி. அவ்வாறு இருக்க, நாடாருக்கு ஏன் நாங்கள் எங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்''

"நாடாரைப் போன்ற சுயசாதிப் பித்தரைப் பார்க்க முடியாது. சுய சாதியிலும் தமக்கு வேண்டிய நண்பர் களுக்கே சலுகை காட்டுவார். எனவே நாடார்களிலே பெரும்பாலோர் அவருக்கு எதிராகவே இருப்பர்''

இருக்கலாம்! திருவில்லிபுத்தூர் தேர்தலின்போது காமராஜரின் குணாதிசயம் அவ்விதம் இருந்திருக்கலாம் பிறகு அவர், படிப்படியாக, மெல்ல மெல்ல, நல்லவராகி விட்டிருக்கக் கூடாதா, என்று கேட்கத் தோன்றும் தம்பி, அந்த ஆராய்ச்சியும் சிறிதளவு செய்தே பார்த்துவிடுவோமே அதிலென்ன கஷ்டம்.

"காமராசர் தோற்றார் என்ற செய்தியினால், இந்த மாகாணம் மட்டுமல்ல, இந்த நாடே எவ்வளவு கிடுகிடுத்துப் போயிருக்கும். நேருவுக்கு வலது கையாகவும், பார்ப்பனர்களுக்கு நீங்காத் துணையாகவும், முதலாளி களுக்கு இரும்புத் தூணாகவும் இருக்கின்ற ஒருவரைத் தோற்கடிக்கக்கூடிய தலைசிறந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்களே! தோழர் தங்கமணிக்குப் பயந்து கொண்டு விருதுநகரை விட்டு ஓடி, சென்னை ராஜ்ய சட்ட சபையையும் விட்டு ஓடி, பார்லிமெண்ட் அபேட்சகராக நின்ற ஒரு காங்கிரஸ் தலைவரைத் தோற்கடிக்கக்கூடிய தங்கமான வாய்ப்பைப் பாழாக்கிவிட்டார்களே, படுமோசக்காரர்கள்''

என்று விடுதலையில் எழுதப்பட்டது; இதை எல்லாம் கண்டு காமராஜர் திருந்திவிட்டிருக்கக் கூடாதா என்று கேட்போர் எழக்கூடும் அல்லவா? அதையும் கவனிப்போம், தவறென்ன!

காவடி தூக்கினார்
கன்னத்தில் போட்டுக்கொண்டார்
காலில் வீழ்ந்தார்.
தோள்மீது சுமந்தார்
கோவை சுப்பிரமணியத்தை அடுத்துக் கெடுத்தார்!

இவ்வளவு, திடுக்கிடக் கூடிய கேடுகளை, இழிவு என்றும் பாராமல் செய்த ஆசாமி யார்? இப்படி ஒரு தமிழ்ப் பண்பு இழந்தவரை நாடு தாங்கிக்கொண்டிருக்கிறதா? தமிழ் மண்ணிலேயா தாசர் புத்தி தலைக்கேறிய "ஜென்மம்' இருக்கிறது! - என்றெல்லாம் கேட்கத் தோன்றும். ஆசாமியார் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு, அரசியல் சம்பவம் என்ன என்பது பற்றி அறிந்துகொள்வோம்.

பொதுத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் இளைத்து, ஈளை கட்டி எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி என்ன செய்யுமோ என்று கிலிகொண்டிருந்தது.

அப்போது தமிழ்நாடு காங்கிரசுக்கு, காமராஜர்தான் கக்கன்.

காங்கிரஸ் குலைந்துவிடாது இருக்கவும், மந்திரிசபை அமைக்கவும், ஆச்சாரியாருடைய தயவு தேவைப்பட்டது.

ஆச்சாரியாருக்கும் தனக்கும் நீண்டகாலமாக இருந்துவரும் விரோதத்தை, இந்தச் சமயம் கவனித்தால், காரியம் கெட்டுவிடும் என்று கருதிய காமராஜர், காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரிசபை அமைத்து நடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி, ஆச்சாரியாரிடம் சென்று "பயபக்தி விசுவாசத்துடன்'' பணிந்து கேட்டார்.

அந்த "அடிமைப் புத்தியை''க் கண்டித்து, காரசாரமாக விடுதலை எழுதிற்று அதுபோது கிடைத்த மணிமொழிகள்தான் முன்னாலே உள்ளன.

"திருப்பரங்குன்றத்தில் தங்களைக் குப்புறத் தள்ளிய தற்காகக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். திராவிடர் களாகிய எங்களில் யாருக்கும் தலைமைப்பதவிக்கான தகுதி கிடையாது. நாங்களெல்லோரும் அடி முட்டாள்கள். நெல்லிக் காய் மூட்டைகள் உதவாக்கரையான சுரைக்காய் குடுக்கைகள், தங்கள் திருப்பாதங்களைக் கண்ணில் ஒத்திக் கொள்கிறோம். தயவு கூர்ந்து கருணை புரியுங்கள். மீண்டும் பதவியேற்று எங்களுக்கு நல்லபுத்தி கற்பியுங்கள்''

என்று கூறுவதுபோல, அவர் வீட்டுக்கு நூறுதடவை காவடி தூக்கி மண்டியிட்டு வணங்கி, தோள்மீது சுமந்துவந்து தலைமைப் பீடத்தில் அமர்த்திவிட்டனர்.

தோழர் காமராசர் கோவை சுப்பிரமணியத்திடம் கூடவே இருப்பது போல நடித்து, இறுதியில் அவரைக் கவிழ்த்துவிட்டு, ஆச்சாரியாரிடம் அடைக்கலம் புகப்போகிறார் என்று ஒரு வாரத்துக்கு முன்பே பல முக்கிய நண்பர்கள் பேசிக் கொண்டனர். அது தவறு என்று கருதினோம். ஆனால் இன்று உண்மையாகி விட்டது!!

எனவே, திருவில்லிப்புத்தூரில் எந்தக் காமராஜர் தெரிந்தாரோ அவரேதான், பிறகும் தெரிகிறார் - விடுதலையின் கண்ணோட்டத்தின்படி.

காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும் செல்வாக்கையும் காப்பாற்றுவதற்காக, சொந்தத்தில் இருந்துவந்த பகைமையும் மறந்தது பெருந்தன்மையல்லவா! சொந்தத்தில் "மானாபிமானம்' பார்த்துக்கொண்டு, கட்சி எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அவர் இருந்துவிடவில்லை, இதிலிருந்தே அவர் எவ்வளவு நேர்மையுணர்ச்சி கொண்டவர், கட்சிப்பற்றுக் கொண்டவர் என்பது தெரியவில்லையா?

காங்கிரசுக்குள்ளேயே பிளவு இருக்கிறது - காமராஜ் காங்கிரஸ் ராஜாஜி காங்கிரஸ் என்று கோஷ்டிச் சண்டை இருக்கிறது, கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும் இருக்கும்; இந்தச் சமயம்தான் அந்தக் கட்சியை ஒழித்துக்கட்ட ஏற்றது என்று காங்கிரஸ் விரோதிகள் எண்ணுவார்கள், இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது, நமக்கும் இராஜகோபால ஆச்சாரியாருக் கும் சொந்தத்தில் ஆயிரத்தெட்டு விரோதம் இருக்கலாம், அதற்காகக் காங்கிரசுக்குக் கேடுவர சம்மதிக்கக் கூடாது, இப்போது நாம் எப்படியாவது ஆச்சாரியார் துணையைப் பெற வேண்டும் என்று எண்ணிக் காரியமாற்றியது மிகத்திறமையான இராஜதந்திரமல்லவா?

இவ்விதமெல்லாம் கூறவில்லை,

காவடி தூக்கினார்
காலடி வீழ்ந்தார்
கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

என்று சொன்னதுடன், கோவை சுப்பிரமணியத்தை அடுத்துக் கெடுத்தார் என்றுதான் கூறப்பட்டது.

காங்கிரஸ் அமைச்சு நடைபெறுகிறது - பெரியார் போர்க் கொடி உயர்த்தினார், வடநாட்டுத் துணிக்கடை, உண்டிச் சாலைகளின் முன்பு மறியல் நடத்தினார். அப்போது, காமராஜர் என்ன செய்தார்?

ஆட்சியில் உள்ளவர்கள் உண்டு, பெரியார் உண்டு, நமக்கென்ன என்று இருந்தாரா? இல்லை!

இதென்ன மறியல்! நாங்கள் செய்த மறியல், மகத்தானது தூய்மையானது - அது சத்யாக்கிரகம் - இது துராக்கிரகம் - என்று கண்டித்தார்.

அடக்குவோம், ஒடுக்குவோம் என்று ஆர்ப்பரித்தார்.

ஆட்சியாளருக்கு இவர் "வக்காலத்து' வாங்கிக்கொண்டு பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், அது அவருடைய கடமை அல்லவா, என்று கேட்பர்; ஆம்! ஆம்! கடமை! அதனைக் குறைகூற அல்ல இதுபோது கூறுவது, அந்தச் சமயத்தில் காமராஜர், நல்லவர் - நம்மவர் என்று கூறத்தக்க நிலையில் இல்லை என்பதை நினைவூட்டத்தான்.

காமராஜர் அத்துடன் விடவில்லை; மறியலுக்கு எதிர் மறியல் செய்யப்போவதாகக் கூறினார். எடுத்தனர் எழுது கோல்லிதொடுத்தனர் பாணம் - காமராசர் என்றோர் தலைப்பில் தலையங்கம் வெளிவந்தது விடுதலையில் - அதிலே, காமராசரின் படப்பிடிப்பு முதல்தரமாக அமைந்திருக்கிறது. காண்போம் தம்பி, காண்போம்.

"காமராஜர் இன்றைய இந்த தமிழ்நாட்டில் தன்னை ஒரு சர்வாதிகாரி ஸ்டாலின் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். சர்க்கார் தன் காலடியில் இருப்பதாகவும், மந்திரிகள் தன்னுடைய அடிமைகள், வேலைக்காரர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்.''

எடுத்த எடுப்பிலேயே, விடுத்தகணை "விர்'ரென்று பாய்கிறது பார்த்தாயா தம்பி,

அகம்பாவம்
ஆணவம்
அதிகார வெறி

எனும் கொடிய குணங்கள் குடிகொண்டவராக, சர்வாதிகாரியாக இருக்கிறார், என்று, சவுக்கடி கொடுத்த விடுதலை, மேலும் எழுதுகிறது.

"காமராஜர் யார்? அவரின் இயற்கை நிலை என்ன? எப்படி இருந்தவர்? என்ன காரணத்தால் இவர் பொது வாழ்வில் மதிக்க வேண்டியவரானார்? இன்றைய வாழ்வு இவருக்கு எப்படி வந்தது? இவருடைய பொருளாதாரம், கல்வி, பொது அறிவு, அரசியல் திறமை, தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், ஒழுக்கம் எவ்வளவு? என்பவைகளான விஷயங்களை இவரே சிந்தித்துப் பார்ப்பாரானால், இவர் இப்போது பேசும் பேச்சுகளுக்குதான் தகுதியுடையவரா? இந்தப் பேச்சுகள் பேசுவது தன் பேரால் இருந்துவரும் பதவிக்கு ஏற்றதா என்பது விளங்குவதோடு, மிகுதியும் வெட்கப்படுவார் என்றே கருதுகிறோம்''

காமராஜர்மீது இந்தக் கடும் தாக்குதலை நடத்தினால் மட்டும் போதாது, இதில் ஒளிவு மறைவு என்ன, மக்களிடம் வெளிப்படையாகக் கூறிவிடவேண்டியதுதான், என்று தீர்மானித்து, காமராஜரின் முகமூடியைப் பிய்த்தெறிந்து, இந்த அவலட்சணத்தை நீங்களே பாருங்கள் என்று மக்களிடம் காட்டுவதுபோல, விடுதலை, மேலால் எழுதுகிறது;

"காங்கிரசானது முதல்தர மக்களிடமிருந்து பிடுங்கி மூன்றாந்தர மக்களிடம் ஒப்புவிக்கப்பட்டாலொழிய தங்களால் இந்த நாட்டில் வாழமுடியாது என்கின்ற நிலை, பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டபோது, அந்த மாதிரி நிலை பார்ப்பனருக்கு ஏற்படும்படியாக சுயமரியாதை இயக்கம் செய்துவிட்டதன் பயனாய், பார்ப்பனர்கள் தேடிப்பிடித்த ஆள்களில் ஒருவராக காமராஜர் பார்ப்பனர்களுக்குக் கிடைத்தவரே தவிர, அதற்கேற்ற காமராஜரின் தகுதி என்ன என்று சிந்திக்கப் பொது மக்களை வேண்டுகிறோம்''

தம்பி! நீயும் நானும் காங்கிரஸ் வரலாற்றிலே பெரும் பகுதியை, படித்துத் தெரிந்து கொண்டவர்கள் - பெரியார் அப்படி அல்ல; அவர் அந்தச் சம்பவங்களிலேயே தொடர்பு கொண்டிருந்தவர். காங்கிரசின் தலைவர்களின் கொடிவழிப் பட்டி அறிந்தவர் - யாரார் என்னென்ன யோக்யதை உள்ளவர் என்பதைத் தெரிந்தவர் - எவரெவர் எப்படி எப்படிக் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்தனர் என்ற "கதைகள்' அவருக்குத் தெரியும்.

அவர் கூறுகிறார், இந்தக் காமராஜர், பார்ப்பனர்கள் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தவர்களிலே ஒருவர் என்று.

மூன்றாந்தரம்!! என்பதைக் கூறிவிட்டு, சந்தேகமிருப்போர்,
கல்வி
பொது
அறிவு
ஒழுக்கம்
அனுபவம்
நேர்மை
தகுதி
திறமை

என்ற இவைகளைக் கவனித்துப் பார்த்து, இந்தக் காமராஜர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் - ஆண்டு ஆறுதான் உருண்டோடியுள்ளன, அந்த அரிய கருத்துரை நாட்டுக்கு அளிக்கப்பட்ட பிறகு.

பதவியும் அதிகாரிகளை மிரட்டி வளைய வைக்கும் வாய்ப்பும் இருந்தால், அகம்பாவம் ஏற்பட்டு, எப்படிப் பட்டவர்களையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசும் துணிவு கிளம்பும். இது காமராஜர் விஷயத்தில் முற்றிலும் உண்மையாகி விட்டது என்பதையும், விடுதலை விளக்குகிறது.

"காமராஜருடைய பதவி காரணமாக காமராஜருக்கு சில அதிகாரிகள் அடங்கி நடக்கவேண்டியதாகவும், காமராஜர் சிபார்சின் மேல் பதவி பெறவேண்டியவர் களாகவும், பல பெரும் தப்பிதங்கள் செய்து தப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கும்படியான நிலையில் இருப்பதால், காமராஜர், உண்மையிலேயேதான் ஏதோ பெரிய பதவியில் இருக்கும் சர்வாதிகாரி என்பதாகக் கருதிக்கொண்டு அகம்பாவ வெறியில் இருக்கிறார்.''

பெரியார் பொதுமக்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, இப்போதும் நாம் சிந்தித்துப் பார்க்கிறோம், தம்பி, காமராஜர்,

கல்வி
திறமை
பொது அறிவு
அனுபவம்

எனும் அருங்குணங்களின் பெட்டகம் என்று முடிவு கட்ட, மனம் இடம் தரவில்லை. பார்ப்பனர்களின் கையாள் என்ற பேச்சும், முதலாளிகளின் பாதுகாவலர் என்ற பேச்சும் பொருளற்றுப் போய் விட்டதாகத் தெரியவில்லை; அன்று போலவே இன்றும் காமராசர் திராவிட இன உணர்ச்சிக்கு மதிப்பளிக்க மறுக்கும் மகானுபவராக இருப்பதை கண்கூடாகத் தெரிகிறது - இந்நிலையில், என்ன காரணத்துக்காக அவர் நல்லவர் - நம்மவர் என்று கொள்வது?

இராஜரத்தினம்
சுந்தரவடிவேலு

என்று பட்டியல் கொடுத்தால், ஆச்சாரியார் காலத்து
சபாநாயகம்
சிங்காரவேலு
தேவசகாயம்
ஞானசம்பந்தம்
என்றும் அடுக்கிக் கொண்டே போகலாமே!!

எனவே, விபீஷணன் என்று திருவில்லிபுத்தூரின்போது. காட்டப்பட்ட காமராஜர், அதே போக்கிலேதான் இருக்கிறார். நோக்கமும் வேறு ஆகிவிடவில்லை.'

காங்கிரசோ, முன்பு இருந்ததைவிட, மக்களுக்கு, குறிப்பாக தென்னகத்து மக்களுக்குக் கேடு விளைவிக்கும் பாசீச அமைப்பாக மாறிக்கொண்டு வருகிறது.

இதைக் கண்டும், தம்பி! நம்மீது உள்ள கோபத்தைக் காரணமாகக் கொண்டு, காமராஜரை ஆதரித்து, அதன் தொடர்பாகக் காங்கிரசை ஆதரித்து, மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படுத்தி விட்டால், ஏற்பட உடந்தையாக இருந்தால், நாட்டு நிலைமை எப்படி ஆகும்? தம்பி! நான் கூறினால், பொறி பறக்காது; முன்பு பெரியார் சொன்னதை இரவலாக'க் கொண்டு உனக்கும், உன் மூலம், நாட்டுக்கும் தருகிறேன்.

"அடுத்த தேர்தலிலேயும் காங்கிரசு பதவிக்கு வந்து விட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாட்டில் மனித ஆட்சியா நடக்கும்? அசல் கரடி, புலி, ஓநாய், சிறுத்தை, சிங்கம் ஆளுகிற மாதிரியான எதிர்ப் பட்டதை அடித்துக் கொல்லுவதான முறையில்தான், மிருக ஆட்சிதான் நிச்சயம் நடக்கும்'

அப்படிப்பட்ட "மிருக ஆட்சி' ஏற்படக்கூடாது எச்சரிக்கையாக இருங்கள், காங்கிரஸ் கட்சியைப் பாசீச ஸ்தாபனமாக்கி விடாதீர்கள் என்று மக்களிடம் இந்தத் தேர்தலின்போது எடுத்துக் கூறுவோம், தம்பி. நம்மாலே, காங்கிரசின் கேடுபாடு குறித்தும், காமராசரின் திருக்கலியாண குணம்பற்றியும், ஆணித்திறமாக எடுத்துக்கூற முடியாதபோது, காமராஜர் குறித்தும், காங்கிரஸ் பற்றியும், "விடுதலை' நாட்டுக்குத் தந்துள்ள விளக்க உரைகளைத் தொகுத்து அளித்தாலே போதும், சூடும் சுவையும் நிரம்ப உண்டு.

குரங்குகைப் பூமாலைபோல், காங்கிரசு சர்க்கார் வரிப் பணம்போல.

யானை உண்ட முலாம் பழம்போல! காங்கிரசு நிதிக்குக் கொடுத்த பணம்போல!

பெருச்சாளி புகுந்த வீடுபோல! காங்கிரஸ் சர்க்கார் ஆண்ட நாடுபோல!

இப்படிப்பட்ட அரசியல் பழமொழிகள் - படப்பிடிப்புகள். கண்டனங்கள் - விளக்கங்கள் - ஏராளம் - ஏராளம்!!

பேரகராதி நமக்குப் பெருந்துணை புரியும்!!

அன்பன்,

2-9-1956