அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நாலும் நாலும்
1

விலைகள் ஏறிவிட்டதற்குக் கூறப்படும் காரணங்கள்
"குழப்பக் கல்லூரி'யில் நேர்மாறான கருத்துகள்
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் நிலை
ஜனநாயக சோஷியலிசம்: இருபதாம் நூற்றாண்டின் இணையிலா மோசடி!

தம்பி!

நாலும் நாலும் ஏழு என்று ஒரு மாணவனும், ஒன்பது என்று மற்றோர் மாணவனும் கூறினால், அவர்கள் தலையில் குட்டி, காதைக் கிள்ளி, இப்படிப்பட்ட மரமண்டைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் நிலை பிறந்ததே என்று ஆசிரியர் ஆயாசப்படுவார்; பெற்றோர்களோ, எத்தனை கட்டைப் புத்தியாக இருப்பினும் ஆசிரியர் தமது பிள்ளைகளுக்கு அறிவு பிறந்திடச் செய்வார் என்று நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், இல்லை இல்லை ஒன்பது என்று மற்றோர் ஆசிரியரும், வேறோருவர் நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று தீர்மானிப்பதற்கு முன்பு "நாலு' என்றால் எத்தனை என்பதைக் கண்டாக வேண்டும் என்றும் கூறிடும் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் என்ன செய்வர் பெற்றோர்? என்ன கதி ஆவர் மாணவர்?

எதை வேண்டுமானாலும் சொல்லிவைக்கலாம் என்று உங்கள் அண்ணாதுரை இப்படிச் சொல்கிறானே, நாலும் நாலும் எட்டு என்பதைக்கூட சொல்லிக் கொடுக்கத் தெரியாத ஆசிரியரும் இருப்பாரா! பொருத்தம் இருக்கிறதா அவன் பேச்சில் - பொருள் இருக்கிறதா அவன் தரும் உதாரணத்தில் என்றெல்லாம், நம்மைப் பிடிக்காதவர்கள் கூறத் துடித்திடுவர்; சொல்லிவிடு தம்பி! அவர்கட்கு; அவர்கள் சல்லடம் கட்டு முன்பே! அப்படி ஒரு பள்ளிக்கூடம் இல்லை! ஆனால் அப்படி ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் எவ்வளவு வேதனை நிரம்பிய விசித்திரம் தெரியுமோ, அது தெரிகிறது ஆளுங்கட்சியான காங்கிரசில் ஒரே பிரச்சினை பற்றி வெவ்வேறு தலைவர்கள் வெளியிடும் மாறுபாடான கருத்துக்களைக் கவனிக்கும்போது.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுகிறேன்.

இன்று விலைகள் ஏறிவிட்டதற்குக் காரணம் உற்பத்திக் குறைவுதான்.

என்கிறார் ஒரு காங்கிரஸ் தலைவர்! பெரிய தலைவர்தான்!!

வணிகர்களின் இலாபவேட்டையால் ஏழைகள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று வீரமாகப் பேசிய உணவு அமைச்சர் சுப்பிரமணியமே,

நிரந்தரமான பரிகாரம் உணவுப் பொருள் உற்பத்தி அதிகமாவதிலேயே இருக்கிறது.

என்று பேசுகிறார் - பேசத் தலைப்பட்டிருக்கிறார்.

சே! சே! சே! விலைகள் ஏறிக்கொண்டிருப்பது உற்பத்தி பெருகாததாலா? யார் சொல்வது அப்படி! பைத்தியக்காரத்தனமான பேச்சு! உற்பத்தி பெருகி இருக்கிறது, சந்தேகமே இல்லை. ஆனால் உற்பத்தியான உணவுப் பொருள் சந்தைக்கு வருவதிலே, வேண்டுமென்றே தாமதம், விநியோக முறையில் குறை ஏற்பட்டுவிடுகிறது - ஏற்படுத்தி விடுகிறார்கள் பண முதலைகள்

என்று பேசுகிறார் மற்றொருவர். இவரும் பெரிய காங்கிரஸ் தலைவர் - கிருஷ்ணமேனன், தம்பி! ஒரு காலத்தில் "நேருவின் வாரிசு' என்று கொண்டாடப்பட்டு வந்தவர் - அவர் பதவி இழந்ததும் இங்கேகூட இழுத்த இழுப்புக்குச் சென்றிடும் இயல்பினர் சிலர், விருந்து வைத்து விழா நடாத்தி, இனி எமது வேலை, மீண்டும் இவரைப் பதவியில் ஏற்றி உட்காரவைத்துப் பக்கம் நின்று பார்த்துப் பரவசம் பெறுவதே! என்றுகூடப் பேசி வந்தார்களே, நினைவிலிருக்கிறதா! அதே கிருஷ்ணமேனன்தான்! அடித்துப் பேசுகிறார், உற்பத்தி குறையவில்லை, விநியோக முறையிலேதான் கோளாறு என்று.

இத்தனை இடர்ப்பாட்டுக்கும் மூல காரணம் என்ன? அதனைக் கண்டறியாது ஏதேதோ பரிகார முறை தேடிப் பயன் என்ன? இப்போது எழுந்துள்ள பிரச்சினை, உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் இடையே மூண்டுவிட்ட தகராறு அல்ல. கள்ளச் சந்தை, பதுக்கல் இவைகளால் ஏற்பட்டுவிட்டதல்ல, இந்தக் கேடு. ஜனத்தொகை பெருகிவிட்டது, கட்டுக்கு அடங்கவில்லை; இப்போது மூண்டுவிட்டுள்ள போட்டி உணவு உற்பத்திக்கும் மக்கள் உற்பத்திக்கும் இடையிலே! உணர்க! உணர்க! இந்த இரு உற்பத்திகளும் ஒன்றை ஒன்று மல்லுக்கு இழுக்கின்றன. மக்கள் உற்பத்தி வளர்ந்தபடி இருக்கிறது. நெருக்கடி அதனால்தான்! விலை ஏற்றம் அதனால்தான்!!

இவ்விதம் உருக்கமும் புள்ளி விவரமும் கலந்த உரையாற்றுகிறார் காங்கிரசில் உள்ள தலைவரொருவர், கனைத்துக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு எழுந்திருக்கிறார் இன்னோர் காங்கிரஸ் தலைவர்,

"குடும்பக் கட்டுப்பாடு - கருத்தடை - இதுவா பரிகாரம் இன்றைய நெருக்கடிக்கு, மதியீனம்! மதியீனம்! சோறு போட வழி தெரியாததற்காக, மக்களைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறீர்களா! கொலை பாதகமல்லவா! குழந்தைகள் பிறவாமல் தடுத்திட வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களே, ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் பிறக்காவிட்டால், இந்த நாடு கிழவர்கள் நாடாகிவிடுமே! பிறகு? எல்லோரும் மந்திரிகளாகிவிட வேண்டியதுதான்!'

என்று ஏளனம் செய்கிறார் - இடித்துரைக்கிறார் - கருத்தடைத் திட்டம் கூடாது என்கிறார், காங்கிரசின் பெருந்தலைவர்களிலே ஒருவர் கிருஷ்ணமேனன்.

சகல ரோக நிவாரணியைக் கையிலே வைத்துக் கொண்டு, பயன்படுத்தத் தெரியாமல் விழிக்கிறீர்களே! இத்தனை இன்னலும் மூட்டியவர் எவர்? தனிப்பட்ட முதலாளிகள், அவர்களைத் தலையில் தட்டி உட்கார வைத்திடாமல், சமதர்மத்தை அமுல் நடத்தாமல் கடப் பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் சாப்பிடுவது போல, முதலாளித்துவத்தைக் கட்டி அணைத்துக்கொண்டு, களைத்துவிட்டோம், இளைத்துவிட்டோம் என்று கை பிசைந்துகொள்கிறீர்களே. உடனே, சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்! பிறகு, பாருங்கள், எல்லாத் தொல்லைகளும் பஞ்சு பஞ்சாகிப் பறந்திடும்.

இவ்விதம் எழுச்சியுடன் பேசுகிறார் இந்தியப் பேரரசின் அமைச்சராக இருந்து விலகிய மாளவியா எனும் மாபெருந் தலைவர் - காங்கிரஸ் தலைவர்!! எழுந்திருக்கிறார் மற்றோர் காங்கிரஸ் தலைவர், ஒரு முறை சூழ இருப்போரைப் பார்க்கிறார்.

எதற்கும் தலையாட்டித் தலையாட்டி எல்லாக் காரியத்தையும் கெடுத்துக்கொண்டோம். மனத்தில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும். பேசுகிறேன். சோஷியலிசம் சர்வரோக நிவாரணி அல்ல! சோஷியலிசத்தினால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. தவறு! தவறு!!

இவ்விதம் பேசியவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே - மைசூரில் முதலமைச்சராக இருந்தவர், அனுமந்தய்யா என்பவர்.

துரிதமான, துணிவுமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஒருவர்.

ஆர அமர யோசித்து, விளைவுகள் என்னென்ன நேரிடக்கூடும் என்று பார்த்து, மெள்ள மெள்ளத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இன்னொருவர்.

இப்போதைய நெருக்கடி போக்கிட உடனடியாக அதிக அளவு உணவுப் பொருள் வெளிநாடுகளிடமிருந்து வரவழைத்தாக வேண்டும் என்று கூறுகிறார் ஒருவர்.

வரவழைக்கிறோம். வருகிறது. அமெரிக்காவிலிருந்தும், தாய்லாந்து, கம்போடியா ஆகிய இடங்களிலிருந்தும். பாகிஸ்தானிலிருந்துகூட வருகிறது என்கிறார் லால்பகதூர்.

அவமானம்! அவமானம்! இவ்வளவு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகுமா சோற்றுக்காக வெளி நாட்டானிடம் பிச்சை எடுப்பது? கேவலம்! கேவலம்! அதிலும் பாகிஸ்தானிடமிருந்து உணவுப் பொருள் பெறுகிறோம் என்று கூறுவது கேட்டு வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் என்று பேசுகிறார், காட்கில் எனும் பழம் பெரும் காங்கிரஸ் தலைவர்.

சர்க்காரே உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் கொள்ளை இலாபமடிப்போரின் கொட்டத்தை அடக்க முடியும் என்று ஒருவரும் சர்க்கார் உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ளக்கூடாது, வகையாகச் செய்திட முடியாது, நெருக்கடி அதிகமாகிவிடும் என்று மற்றொருவரும் நேர்மாறாகப் பேசுகின்றனர். இருவரில் எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற நோக்கம் காட்டி, வணிகர்களை அடியோடு ஒழித்துக் கட்ட அல்ல, சர்க்கார் உணவு தானிய வாணிபத் துறையில் ஈடுபடுவது - ஈடுபடப்போவது முழு அளவில் அல்ல - ஒரு அளவுக்குத்தான் - வணிகரும் இருப்பர் - சர்க்காரும் வணிகர் வேலை பார்க்கும் - இது கொள்ளை இலாபத்தைத் தடுக்க - வாணிப முறையைச் செம்மைப்படுத்த - சீர்குலைக்க அல்ல என்று கனம் சுப்பிரமணியம் கூறுகிறார்.

உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைத்திட வழி செய்யுங்கள் என்று கேட்கிறார் ஒருவர்.

கடலைப் பிண்ணாக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலே 45 கோடி கிடைத்ததாமே சென்ற ஆண்டு, அதனை இந்த ஆண்டு அதிகமாக்க வழி செய்க என்கிறார் வேறொருவர்.

சதாசர் சமிதி மூலம் ஊழலையும் இலஞ்சத்தையும் ஒழித்துக் கட்ட முடியும் - கட்டப்போகிறேன் - கட்டிக்கொண்டு வருகிறேன் என்று பேசுகிறார் நந்தா.

சதாசர் சமிதியா! அதிலே இலஞ்சப் பேர்வழிகள் நுழைந்து கொண்டுள்ளனராமே! போலீஸ்படை இருக்க எதற்காக இந்தக் காவிப்படை என்று கடுங்கோபத்துடன் கேட்கிறார், வங்கநாட்டுக் காங்கிரஸ் தலைவர் (அடுத்து அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகப் போகிறவராம்) அடுல்யா கோஷ்.

காமராஜ் திட்டம் கவைக்குதவாது என்கிறார் ஒருவர், அதுதான் கைகண்ட மருந்து என்கிறார் மற்றொருவர்.

தம்பி! இப்போது யோசித்துப் பார்க்கச் சொல்லு, நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், ஒன்பது என்று மற்றொருவரும், கூட்டுவது பிறகு பார்ப்போம், முதலில் நாலு என்றால் என்ன? எவ்வளவு அதைத் தீர்மானிப்போம் என்று வேறொருவரும் பேசிடும் பள்ளிக்கூடம்போல இருக்கிறதல்லவா!! தம்பி, அத்தனை பெரியவர்கள் கூடிப் பேசிய இடத்தைப் பள்ளிக்கூடம் என்று சொல்வதா என்று கோபித்துக்கொள்ள எவரேனும் கிளம்பினால், நமக்கேன் வீண்பகை - பள்ளிக்கூடம் என்பதை மாற்றி அவர்களுடைய நிலையின் உணர்வுக்கு ஏற்ற வேறு பெயரளித்துவிடுவோம் - கல்லூரி என்று கூறுவோமே - குழப்பக் கல்லூரி என்று பெயரிடுவோம்.

அட பைத்தியக்காரா! இதைப்போய்க் குழப்பம் என்கிறாயே! இதுதான் கருத்துப் பரிமாறிக்கொள்ளுதல்! இதுதான் ஜனநாயகம்! பேச்சு உரிமை! எவரும் தமது மனத்துக்குச் சரியென்றுபட்டதை அச்சம், தயை, தாட்சணியமின்றி எடுத்துக் கூறிடும் உரிமை இது வழக்கப்படுவது எமது ஸ்தாபனமாம் காங்கிரசிலேதான்! இதன் அருமை பெருமையைத் தெரிந்துகொள்ள இயலாமல், இதனைக் குழப்பம் என்று பேசுகிறாய், குறை இது என்று ஏசுகிறாய்! ஒரு ஜனநாயக அமைப்பிலே இதுதான் அழகு! என்று கூற முற்படுவர். தெரியும்.

ஆனால், தம்பி! நாலும் நாலும் எட்டு என்பது போன்ற அடிப்படையிலே ஆளுக்கொரு பேச்சுப் பேசுவது, ஜனநாயக மாகாது - கருத்துக் குழப்பத்தைத்தான் காட்டும்; கொள்கைக் குழப்பத்தைத்தான் காட்டும்.

இன்று காங்கிரசிலே திட்டவட்டமான கருத்துக் கொண்டு எல்லோரும் ஈடுபட்டு இல்லை. பண பலம், பதவிபலம், விளம்பர பலம் மிகுதியாக உள்ளது என்ற காரணத்தால், அதிலே புகுந்து கொண்டு அதிகாரம் பெறலாம், ஆதாயம் பெறலாம் என்ற நோக்கத்துடன் எவரெவரோ சேர்ந்துவிட்டனர் - ஒரே கட்சி என்று ஒப்புக்குக் கூறிக்கொள்கின்றனரேயொழிய - அடிப்படைப் பிரச்சினைகளிலேயே வெவ்வேறு கருத்துக்களை, முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்கள் - ஒட்ட முடியாதவர்கள் - வெட்டிக்கொண்டு போகவேண்டியவர்கள் - உள்ளனர். உற்பத்தியாளர்களின் சார்பில் பேசுகிறேன் என்று நிலத் திமிங்கலங்களுக்காக வாதிடுபவர்களும் உள்ளனர் காங்கிரசில்; விநியோகமுறை செப்பனிடப்பட வேண்டும் என்ற சமதர்மக் கருத்தினரும் உள்ளனர் அதே காங்கிரசில். முரண்பாடுகளை மூடி மறைத்து வைத்துக்கொண்டு எவரெவருக்கு எந்தெந்தச் சமயத்தில், எந்தெந்த இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறதோ, ஆங்கு தமது கருத்தினைச் செயல்படுத்திப் பயன் பெறுகின்றார்.

எனவேதான் தாமதம், தெளிவின்மை, துணிவின்மை திரித்திடுதல் எனும் கேடுகள் காங்கிரஸ் மேற்கொள்ளும் திட்டங்களிலும், இயற்றும் சட்டங்களிலும் நெளிகின்றன.

இத்தனை முரண்பாடுகளையும் கவனித்து, எந்தக் கரத்தினரையும் இழந்திட மனமில்லாததால், அவரவரும் என் கருத்தும் இதிலே இருக்கிறது, என் நோக்கமும் இதிலே ஈடேறுகிறது என்று மகிழ்ச்சி கொண்டிடத்தக்கவிதமாக, கலப்படமான முறையிலே சட்டம் ஏட்டிலே ஏறுகிறது - பெருந் தாமதத்துக்குப் பிறகு.

சட்டம் - திட்டவட்டமற்று, தெளிவற்று அமைந்து விடுகிறது. வழக்கு மன்றத்திற்குப் பெருவிருந்து கிடைக்கிறது.

சட்டம் செயல்படத் தொடங்கும்போது மேலும் இடர்ப்பாடுகள் எழுகின்றன - திரித்துவிட வழி கிடைப்பதால், சட்டத்தினால் கிடைத்திடவேண்டிய முழுப் பலனும் கிடைத்திடுவதில்லை. ஏட்டிலே முற்போக்கான சட்டம் இருந்தும் நாட்டிலே அதற்கேற்ற பலன் கிடைக்காமலிருப்பது இதனால்தான்.

பொதுப்படையாகப் பேசினால் சிலருக்குப் புரிவது கடினம் என்றால், தம்பி! காங்கிரஸ் அரசு இயற்றியுள்ள நிலச் சீர்திருத்தச் சட்டத்தையே, எடுத்துக்காட்டாகக் கொண்டு, நான் கூறியிருப்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.