மத்திய அரசை மைசூர் கண்டிப்பு -
தியாகி, கித்வாய் அமைச்சர் ஆனமை -
கட்டாய இந்தி
தம்பி!
எடுத்ததற்கெல்லாம் டில்லி அதிகாரத்தின் உத்தரவுக்குக்
கட்டுப்பட்டு நடப்பது என்றால், இங்கு நமக்கு ராஜ்யத்தில்
பாராளும் மன்றம் என்ற ஒன்று எதற்கு? என்று கேட்கிறார்,
அனுமந்தய்யா, முன்னால் முதலமைச்சர்.
மைசூர் ராஜ்யம், தமிழகத்தைக் காட்டிலும் தொழில் துறையில்
வளம் பெற்றது; என்றாலும், அங்குகூட, வடநாட்டு வளம் ஓங்கி
வளருகிறது, தென்னகம் தேய்கிறது என்ற எண்ணமும், வடநாட்டின்
அதிகாரத்துக்குத் தலையாட்டும் நிலைமைக்குத்தான், இங்கு
"ராஜ்யங்கள்' ஆக்கப்பட்டுள்ளன என்ற எரிச்சலும் இருக்கத்தான்
செய்கிறது. அனுமந்தய்யா, இந்த எரிச்சலை வெளியிட்டிருப்பது
இது முதல் முறை அல்ல. பதவி பறிபோய்விட்ட ஆத்திரத்தில்
இது போலப் பேசுகிறார் என்று அலட்சியமாகக்கூறி உண்மையை
மறைத்து விடலாம் என்று சில காங்கிரஸ் காரருக்கு எண்ணம்
ஏற்படும் - ஆனால், அனுமந்தைய்யா இப்போது மட்டுமல்ல, மைசூர்
ராஜ்யத்தின் முதல் அமைச்சராக இருந்த நாட்களிலேயே கூட,
மத்திய சர்க்காரின் ஆதிக்கத்தைக் குறித்துத் தமது கண்டனத்தை
ஒளிவு மறைவு இன்றிக் கூறியிருக்கிறார் - அவருடைய வீழ்ச்சிக்கு
உள்ள பல காரணங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவோர் உளர்.
மைசூர் ராஜ்யத்தின் முதலமைச்சராக அவர் இருந்த நாட்களிலேயே
மத்திய சர்க்காரின் ஆதிக்கப்போக்கைக் கண்டித்ததால், அவர்மீது
டில்லி அரசுக்கு ஒரு கடுப்பு வளர்ந்திருக்கக்கூடும் -
மைசூர் ராஜ்யத்திலேயே அவருக்கு வேறு காரணத்தால் எதிர்ப்பு
கிளம்பியதும், டிலலி அவருடைய வீழ்ச்சியை அனுமதித்து இருக்கக்
கூடும், பெரிய இடத்து விவகாரம் - எனவே முழு உண்மை வெளிவருவது
கடினம். ஆனால், ஒரு அரசின் முதலமைச்சராக உள்ளவர் தமது
பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால் என்னென்ன முறையைக்
கையாளவேண்டும் என்ற சாணக்கிய சூத்திரம் தெரிந்துகொள்ள
அல்ல, இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது. நாடு அறியவேண்டிய
மிக முக்கியமான உண்மை, தன் ராஜ்யத்தின் நலனில் அக்கரை
கொண்ட தலைவர் யாரும், மத்திய அரசு கொண்டுள்ள போக்கைக்
கண்டிக்காமலிருக்க முடியவில்லை, மனக் குமுறல் ஏற்படாமலில்லை.
"ஜாடை மாடை'யாக வேனும் பேசிக்காட்டவேண்டி இருக்கிறது,
என்பதுதான்.
சிலர் இதுபோலப் பேசத் தலைப்பட்டதும், டில்லி விழித்துக்கொள்கிறது
- ஆசை காட்டியோ அச்சமூட்டியோ, அவர்தம் வாயை அடைத்துவிட
முடிகிறது.
கவர்னர் பதவிகளையும், வெளிநாட்டுத் தூதர் பதவியையும்,
பல்வேறு நாடுகளுக்குப் பவனி செல்லக்கூடிய கமிஷன் பதவிகளையும்,
வாரி வீசும் அதிகாரம் கையில் இருக்கிறது முற்றுந் துறந்த
முனிவர்களை மயக்கிட கடவுளே, தேவலோக கட்டழகிகளை ஏவுவாராமே!
கடவுளின் செயலே இதுவென்றால், ஆதிபத்ய ஆசை கொண்டவர்கள்,
பதவிப் பாவைகளை ஏவிவிட்டு, இவர்களை இளித்தவாயர்களாக்கி
விடுவது, நடை பெறக்கூடாததாகுமா!! சபலம், யாரை விடுகிறது?
"மத்திய சர்க்கார் - மாகாண சர்க்கார் என்று பிரித்துப்
பேசுகிறார் பிரபோ!''
"யார், அவ்விதம் பேசுபவர்?''
"இன்ன ராஜ்ய முதலமைச்சர்!''
"முதலமைச்சராக இருந்து கொண்டா அங்ஙனம் பேசுகிறார்? என்ன
பேதைமை, என்ன பேதைமை!'' "என்ன போக்கிரித்தனம் என்று சொல்லுங்கள்,
பிரபோ! நமது தயவைநாடி, துதிபாடி, மற்றவர்கள் தமது ஆட்சியைக்
காப்பாற்றிக்கொண்டிருக்க, இந்த முதலமைச்சர். எவ்வளவு
துணிவுடன், நமது ஆதிபத்தியத்தைத் துச்சமென்று கருதி, யாரோ
தம்மை மெச்சிக்கொள்ள வேண்டுமென்பதற்காக மத்திய சர்க்கார்
- மாகாண சர்க்கார் என்று பிரித்துப் பேசுகிறார், உரிமைபற்றிக்
கதைக்கிறார் - இதை மகாப்பிரபோ! நாம் அனுமதிக்கலாகாது...
ஆபத்தாகும், பிறகு! ஒரு இடத்திலே இந்தத் துணிவு ஏற்பட்டுவிட்டால்,
ஏற்பட்டது கண்டும் நாம் அதனைக் களைந்து எறியாமலிருப்பது
தெரிந்து விட்டால், மற்றவர்களும் கிளம்புவர் - பிறகு பாரதம்,
களமாகி விடும் எனவே, இதனை உடனடியாக, அடக்கியாக வேண்டும்.''
"வீண் பீதிகொள்கிறாய்! ஒரு முதலமைச்சர் முணு முணுப்பதாலே,
நமக்கு என்ன ஆபத்து நேரிட்டுவிடப் போகிறது; நாம் இதன்
பொருட்டு, அந்த முதலமைச்சரை அடக்கமுற்பட்டால், ஆ - ஊ
- என்று கூவி, மற்றையோரையும் கிளப்பிவிட்டுவிடுவார்...''
"அதுவும் ஒரு வகையில் உண்மைதான்... ஆனால் நமது ஆதிபத்தியத்தைக்
கண்டிக்கும் போக்கு வளர விடலாகாது...''
"ஆமாம்! வளரவிடப்போவதில்லை...''
"எப்படி, மகானுபாவா!''
"எண்ணற்ற வழிகள் உள்ளன! அந்த முதலமைச்சருக்கு உள்ள ஆசாபாசங்களை
அறிந்துவா; எந்தப் பதவிமீது மோகம் பிறந்திருக்கிறது;
ரμயாபோய்ப் பார்க்கப் பிரியம் ஏற்பட்டு விட்டதா; பாரிஸ்
பயணம் தேவையா; அமெரிக்கா சென்று ஆனந்தம்காண விருப்பம்
எழுந்திருக்கிறதா; என்னதான் புதிய பசி என்பதை அறிந்துவா;
அந்தப் பசிக்கு ஏதேனும் தருவோம்; வாய் தானாக மூடிக்கொள்கிறது;
வாழ்த்தி வணங்க ஓடோடி வருவார்''
"எல்லோரும், இதேபோல இருப்பார்களோ?''
"இது ஒன்றுதான், நமக்கு உள்ள முறையோ! பைத்தியக்காரா!
நமது அம்புறாத்தூணியில் இஃதுமட்டுமா இருக்கிறது?
ஆசைக்குக் கட்டுப்படாதவர் என்று தெரிந்தால் அச்சத்தை ஏவுவோம்...
ஷேக் அப்துல்லா படம் ஒன்று அனுப்பிவைத்தால் தெரிந்துகொள்கிறார்.''
"பலே! பலே! நானோர் ஏமாளி! தங்கள் முறையின் நுட்பத்தை
அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றேன் இல்லை!''
மத்திய சர்க்காரிடம் அளவுமீறிய அதிகாரம் குவிந்து கிடக்கிறது;
அதனால் ராஜ்ய சர்க்கார் தரம் இழந்து, திறம் அற்று, பெரியதோர்
பஞ்சாயத்துபோர்டாக வாழ்க்கையை ஓட்டவேண்டி நேரிட்டுவிடுகிறது
என்ற கருத்து குடையும் மனத்தினராகி, மனதிற்பட்டதை எடுத்துக்கூறும்
துணிவினைப் பெற்றுவிட்டால், அவரைப் பற்றி, டில்லி தேவதைகள்,
இதுபோல் பேசிக் காரியமாற்றும் போலத் தெரிகிறது.
மகாவீர் தியாகி என்றோர் மந்திரி இருக்கிறார், டில்லியில்
- இவர் டில்லி பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த நாட்களில்,
சர்க்காரின் செயலில், திட்டத்தில், போக்கில், காணக்கிடைக்கும்
"ஓட்டைகளை'க் காட்டிக் காட்டிச் சாடுவார்! பல இலாகாக்களிலே
மலிந்துகிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவார்! அமைச்சர்களின்
தவறுகளைக் காட்டிக் கேலி பேசுவார். அவருடைய கேள்விகள்,
சர்க்கார் தரப்பினரைத் திணறவைத்திடும்! அவர் தரும் புள்ளி
விவரங்கள், சர்க்காருக்கு மண்டைக் குடைச்சல் ஏற்படுத்தும்.
இந்தவிதமாக இடித்துக் கொண்டிருந்த தியாகி இப்போது அமைச்சராகிவிட்டார்!
ஏன்? அழைத்தார்கள்! எப்படி? அதுதான் இன்று டில்கையாளும்
அரசியல் செப்படிவித்தை. தியாகியைத் தீர்த்துக்கட்ட வேண்டும்!
தீபோலச் சுடுகிறார்; சர்க்காரின் போக்கைச் சாடுவதிலே
சமர்த்தராக இருக்கிறார்; இவரை வெளியே விட்டு வைத்தால்,
இது போலத்தான் தொல்லை தந்தபடி இருப்பார்! எனவே இவரைப்
பிடித்து "உள்ளே' போடவேண்டும்; அமைச்சராக்கிவிடுங்கள்!
ஆசாமி பிறகு வெல்வெட்டு மெத்தையில் சாய்ந்துகொள்வார்,
எதிர்ப்புமாய்ந்து போகும்!... என்று டில்லி தீர்மானித்தது;
தியாகிக்கு அமைச்சர் வேலை கிடைத்தது, சர்க்கார் தரப்புக்கு
தலைவலி குறைந்தது.
உணவுத்துறையிலே அமைச்சராக உள்ள கிருஷ்ணப்பா என்பவரை, இப்படித்தான்,
கித்வாய் கண்டெடுத்தார், என்று, பெருமையுடன் பேசுகிறார்கள்,
கேட்கிறோமல்லவா ரபி அகமத் கித்வாய், உணவுத்துறைக்கு மந்திரியாக
இருந்தபோது, கிருஷ்ணப்பா வெறும் உறுப்பினராக இருந்துகொண்டு
ஓயாது கேள்விகள் கேட்டுக் கேட்டுக் குடைவாராம்! கித்வாய்
இந்த ஆசாமியை இழுத்துவாருங்கள் என்று கூறி, வந்தவருக்கு
ஒரு வெல்வெட்டு மெத்தையைக் கொடுத்து "உட்கார்! நீர் மெத்த
சுறுசுறுப்பும் சூட்சமமும் உள்ளவர்! மந்திரிவேலை பாரும்!''
என்றாராம். கிருஷ்ணப்பா இப்போது மந்திரியாகி, "பஞ்சமா?
யார் சொல்வது, பொய்! பொய்! என்கிறார். "விலை ஏறிவிட்டது,
மக்கள் சொல்லொணாக் கஷ்டம் அனுபவிக்கிறார்கள்' என்று
முறையிட்டால், விலை ஏறினால் என்ன, தானாக இறங்கிவிடும்
- என்று சமாதானம் பேசுகிறார்.
இதே முறையிலே காரியமாற்றும் பழக்கம் ஏற்பட்டு விட்டதால்,
மத்திய சர்க்காரின் போக்கை எவரேனும் கண்டிக்கக் கிளம்பினால்,
அவர்களை, ஆசைகாட்டி, மடக்கிவிடலாம் என்ற நம்பிக்கை, டில்லிக்கு
இருக்கிறது.
குறை கூறியும், கண்டனக் குரல் எழுப்பியும், உரிமை முழக்கமிட்டுக்
கொண்டும், வெளியே தலைநீட்டுகிற காங்கிரஸ் தலைவர்களிலே
பலரும், தமது திருவும் உருவும் டில்லிக்குத் தெரிந்து,
"தூது'வராதா என்ற ஆசையினால் உந்தப்பட்டும், என்னை இப்படியே
நீங்கள் வாளா இருக்கவிட்டுவிட்டால், வேறு வேலை இல்லாத
காரணத்தாலும், அலட்சியப்படுத்தி விட்டார்களே என்ற எண்ணத்தாலும்,
நானும் ஏதாவது செய்ய முடியும் என்பதைக் காட்டித் தீரவேண்டிய
அவசியத்தினாலும், மத்திய சர்க்காரின் போக்கை எதிர்த்துப்
பேசக் கிளம்புவேன் - என்று டில்லிக்கு மிரட்டல் பாணம்
ஏன் இந்தப் போக்கினைக் கொள்கிறார்கள்.
இல்லையென்றால், மத்திய சர்க்கார் ஆதிக்கம் செய்கிறது,
இது நியாயமல்ல, நல்லதல்ல; ராஜ்ய சர்க்காரின் தரமும் திறமும்
கெட்டுவிடுகிறது என்று கூறிடும் அனுமந்தய்யாக்கள், நெஞ்சார
இதை உணர்ந்து, நேர்மைவழி நின்று இதனை எடுத்துரைக்க முன்வருகிறார்கள்
என்றால், இதற்குப் பரிகாரம் கூறவேண்டாமா? மக்களின் ஆதரவினை
இந்தத் தம் கருத்துக்குத் திரட்டிக் காட்ட வேண்டாமா? நாட்டுக்கான
சட்டதிட்டங்கள் குறித்து, கலந்து பேசி முடிவெடுக்கும்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிகளிலே, இதுபற்றி, அச்சம்
தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் எடுத்துரைக்க வேண்டாமா?
நேரு பண்டிதரிடம் வாதாட வேண்டாமா? செய்கின்றனரோ? இல்லை!
வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் வாயடைத்து இருந்துவிடுகிறார்கள்;
மத்திய சர்க்கார் என்ற முறையே இத்தகைய கொடுமையை, எதேச்
சாதிகாரத்தை, சர்வாதிகாரத்தைத்தான் மூட்டிவிடும். எனவே,
தனியாட்சியாக ராஜ்யங்கள் இருத்தல்வேண்டும் ஒன்றுக்கொன்று
நேசமாகவும் பாசத்துடனும், தோழமையுடனும் இருக்க வழிசெய்துகொள்ளலாம்.
ஒற்றுமையின் பேரால், இந்தக் கொடுமைக்கு இடமளித்துவிட்டு,
மத்திய சர்க்காரிடம் எதற்கெடுத்தாலும் மண்டியிட்டுக் கிடக்கும்
கேவல நிலைமை கூடாது. அதனைப் போக்கிக்ககொள்வோம், என்று
நாம் கூறும்போது, இதே அனுமந்தய்யாக்கள் பேசும் பாணி என்ன?
பாரதம் ஒரு தேசம் - ஓர் அரசு - இந்த ஐக்கியத்தை நாசம்
செய்தல்கூடாது - என்றல்லவா பேசுகிறார்கள்!! நமது உரிமை
முழக்கத்தை வரட்டுக் கூச்சல் என்று ஏசுகிறார்கள்; நமது
"தனி நாடு' கோரிக்கையை, "நாட்டைப் பிளவுபடுத்தும் நாசசக்தி'
என்கிறார்கள்!!
மத்திய சர்க்கார் தலையிட்டுத் தொல்லை தருகிறது - எதற்கெடுத்தாலும்
டில்லி உத்தரவு பிறப்பிக்கிறது, நாம் அதன் கட்டளைப்படி
ஆடவேண்டி இருக்கிறது - சேச்சே! இது மகாகேவலம்!!- என்று
பேசிக் கைபிசைந்து கொள்ளும் இந்தக் கண்ணியவான்கள், ஆசைக்கு
ஆட்படாமலும், அச்சத்துக்கு இடமளிக்காமலும், கொள்கைக்கு
மதிப்பளித்து, மக்கள் மன்றத்திலே அந்தக் கொள்கைக்கு ஆதரவு
திரட்டி வரும், நம் போன்றார்மீது காய்வது ஏன்? பாய்வது
எதன் பொருட்டு!!
பாரதம் ஒரு தேசம்... என்ற தத்துவத்தைப் பேசும்போதும்,
இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்கள்!
மத்திய சர்க்கார் எதிலும் குறுக்கிடுகிறது, எதற்கெடுத்தாலும்
கட்டளை பிறப்பிக்கிறது, நாங்கள் கைகட்டிச் சேவகம் செய்யவேண்டிய
கேவலம் ஏற்படுகிறது என்று மனக் குமுறலுடன் பேசும்போதும்,
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்களே தவிர கொள்கைப்
பற்றினால் செயலாற்றக் கிளம்புகிறார்கள் இல்லை!
குமாரசாமிராஜா, கவர்னர் கோலத்திலேயே கோவை வந்ததும்,
அங்கு பிரமுகர்களும் தொழில் அதிபர்களும் கூடியிருந்த
ஓர் அவையில், டில்லியின் போக்கினையும், தென்னாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதையும்,
வடநாட்டு அணைத் திட்டங்களில் பணம் பாழாக்கப்படுவதையும்,
கேட்போர் பதறித் துடித்து எழும் விதத்தில் பேசியதையும்
அறிவாய்.
"இவ்வளவுதான் என்று எண்ணாதீர்கள்! இன்னும் சொல்லவேண்டியவை
ஏராளமாக உள்ளன. இந்தக் கவர்னர் வேலையிலிருந்து விலகியதும்
அவ்வளவையும் சொல்லி விடுகிறேன்'' என்றல்லவா முழக்கமிட்டார்.
பத்திரிகைகளெல்லாம் பத்தி பத்தியாக வெளியிட்டன. கொட்டை
எழுத்திலே தலைப்புகளிட்டன; குமாரசாமிராஜா இவ்விதம் பேசிடக்
காரணம் என்ன என்பதுபற்றி "நிருபர்கள்' தமது கருத்துகளைத்
தொகுத்தனர்; நாட்டு மக்கள், வியந்தனர்; பலர் பாராட்டினர்;
இஃதன்றோ அஞ்சா நெஞ்சம்! கவர்னர் பதவியில் இருப்பதாலேயே
கண்மூடி மௌனியாகிவிட மாட்டேன்! அக்ரமமும் அநீதியும் கண்டால்,
எடுத்துக் காட்டிக் கண்டிக்கத்தான் செய்வேன்! என்று கூறிடும்
போக்கிலல்லவா குமாரசாமிராஜா பேசியிருக்கிறார். தென்னாட்டுத்
தலைவரில் ஒருவர் இப்படி வீரதீரமாகப் பேசுகிறார் என்பதறிந்தால்,
வடநாட்டுச் சர்வாதிகாரிகள் கூடச் சிறிதளவாவது அச்சம் கொள்வார்கள்;
எதையோ காட்டி மயக்கிவிடலாம் என்று யாரைக் குறித்து வேண்டுமானாலும்
நம்பலாம், குமாரசாமி ராஜா அப்படிப்பட்டவரல்ல, கவர்னர்
வேலை கொடுத்தோம், அதிலே இருந்துகொண்டே நமது போக்கைக்
கண்டிக்கிறார். ஏ! அப்பா! பொல்லாத ஆசாமி! இவரிடம் நாம்
சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும், என்றெல்லாம்
வடநாட்டுத் தலைவர்கள் எண்ணிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட
அஞ்சாநெஞ்சு படைத்தவர் முதலமைச்சராக இருந்தால் தேவிகுளம்
பீர்மேடு பறிபோகுமா, திருத்தணி திருப்பதியை இழந்து நிற்போமா,
என்றுகூட எண்ணிக்கொள் வார்கள்; அவ்வளவு பட்டவர்த்தனமாகப்
பேசினார், கவர்னர் பதவியில் இருந்து கொண்டே! ஆனால்...?
என்ன ஆயிற்று!
இலவு காத்த கிளி என்பார்கள், அந்த உவமை போதவில்லை!! குமாரசாமிராஜா,
சின்னாட்களுக்கெல்லாம் மென்று விழுங்கினார், நான் சொன்னதை
மிகைப்படுத்தி விட்டார்கள் என்று மழுப்பினார், நானொன்றும்
வடநாடு தென்னாடு என்று பேதம் பேசுபவனல்ல என்றார், அப்படிப்
பேசுபவர்கள்மீது பாய்ந்து தாக்குவேன் என்றார்! கடைசியில்
நம்மீதுதான் அவர் தமது கோபத்தை திருப்ப முடிந்ததேயொழிய
கோவைப் பேச்சைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை!!
நிதி அமைச்சர் சுப்பிரமணியனார், சில வேளைகளில், இதேபோல
ஓசை எழுப்பி மகிழ்கிறார்.
தொழில் வளம் தென்னாட்டில் போதுமானதாக இல்லை; புறக்கணிக்கப்பட்டிருக்கிறது;
நமக்கு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட
தொகை மிகக் குறைவு - என்றெல்லாம் அவரும், "இடம் பொருள்
ஏவல்' கவனித்து, வீரத்தை விவேகத்தை அள்ளி வீசுகிறார்!
வீசிவிட்டுச் சுற்று முற்றும் பார்க்கிறார்!! டில்லி,
சவுக்கு எடுக்கும் என்று தெரிந்தால், கிலி பிடிக்கிறது.
உடனே, "என்றாலும்' என்ற பதத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு,
வடநாடு தென்னாடு என்று பேசுவது மடத்தனம், போக்கிரித்தனம்,
பைத்தியக்காரத் தனம் தேசத் துரோகம் என்று சுடுசொல் வீசுகிறார்
நம் மீது இதென்ன பைத்தியக்காரத் தனமாக, புத்தி கெட்டதனமாக,
துடுக்குத்தனமாக, சுப்பிரமணியம் வடநாடு தென்னாடு என்ற
பேதம் தொனிக்கும்படி பேசினாராமே, என்று டில்லி கேட்க,
அது கேட்டு ஏற்பட்ட அச்சத்தால் அமைச்சர் தாக்கப்பட்டு,
"தாசனய்யா நான்! தர்ம துரைகளே! என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள
வேண்டாம்! இதோ எண்ணிக்கொள்ளுங்கள் "தோப்புக்கரணம்'
போடுகிறேன் - என்று டில்லியை நோக்கிக் கூறுவதாகத்தான்
நமக்கு அவர் பேச்சுப் படுகிறது - நம்மை நிந்திப்பதாகக்கூடத்
தெரியவில்லை.
நேர்மையில்லை, எனவே நெஞ்சிலே உறுதி இல்லை!
பற்றற்ற தன்மை இல்லை, எனவே பயமற்ற போக்குக் கொள்ள முடியவில்லை.
தெளிவும் இல்லை, துணிவும் எழவில்லை; தோத்தரித்துத் துதிபாடினால்
துரைத்தனத்தில் பங்கு கிடைக்கிறதே, இதனை இழந்துவிடுவதா
என்ற எண்ணம் குடைகிறது, வடநாடாவது, தென்னாடாவது பதவி,
பதவி, பதவி! அது போதும்! அது இனிக்கிறது! சுவைப்போம்,
கிடைக்குமட்டும்!! என்ற திருப்தி ஏற்பட்டுவிடுகிறது; பதவியில்
பதுங்கிக்கொள்கிறார்கள்.
இவர்களை எல்லாம் கூட விட்டுவிடு, தம்பி, விவேகத்தில் இவர்
வசிஷ்டர், வைராக்கியத்தில் விசுவாமித்திரர், தந்திரத்தில்
சாணக்கியர், தத்துவார்த்த விவாதத்தில் குல்லூகபட்டர்,
என்றெல்லாம் புகழ்கிறார்கள் இராஜகோபாலாச்சாரியாரை! அவர்
போக்கு என்ன?
இந்தி மொழிமீது அவர் போர் தொடுத்திருக்கிறார் பேச்சளவில்!
ஆங்கிலத்தைக் கைவிடுவது முட்டாள்தனம் என்று பேசுகிறார்.
இது குறித்து அவர் தம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது
முடுக்கும் மிடுக்கும் களிநடனம் புரிகின்றன! எதற்கும்
அஞ்சேன்! எவருக்கும் தலைவணங்கேன்! என்று கூறிடும் கெம்பீரம்
காண்கிறோம்.
ஆச்சாரியார், இந்தியைப் புகுத்தும் டில்லியின் போக்கைக்
கண்டிக்கும் போக்கிலே நூற்றிலே ஒரு பாகம், நாம் பேசினால்,
காங்கிரஸ் நண்பர்களுக்குக் கண்கள் சிவந்துவிடும், மீசை
துடிக்கும், கோபம் வெடிக்கும். அவர் "அனாயாசமாக' வடநாட்டுப்
போக்கைக் கண்டித்துப் பேசுகிறார் எழுதுகிறார்.
இதென்ன பைத்தியக்காரப் போக்கு!
இந்த அநீதியை நான் அனுமதியேன்;
சர்வாதிகார வெறி கூடாது.
மனம் பதறுகிறது - மானமும் போகிறது.
என்றெல்லாம் "காரசாரமாக'ப் பேசுகிறார். அறிக்கைமேல் அறிக்கை
விடுகிறார்!
பெரியார்
பி. டி. ராஜன்
ராஜா சர்.
மா. பொ. சி.
சேதுப்பிள்ளை
டாக்டர் மு. வ.
இராமசாமி சாஸ்திரியார்
கிருஷ்ணசாமி ஐயர்
வடபாதிமங்கலம்
திருச்சி விசுவநாதன்
நாவலர் நெடுஞ்செழியன்
போன்ற தலைவர்களை எல்லாம், தமிழ் வளர்ச்சியில் பேரார்வம்
காட்டும் அன்பர் சுப்பைய்யா அவர்களின் "தமிழகம்' எனும்
இல்லத்தில் கூட்டிவைத்துப் பேசி, அனைவரிடமும், "இந்தியை
அரசாங்க பாஷை' ஆக்கும் போக்கைக் கைவிட்டு விட வேண்டும்,
மாகாணத்துக்கு மாகாணம் தொடர்பு வைத்துக்கொள்ளவும். மாகாணத்துக்கும்
மத்திய சர்க்காருக்கும் தொடர்பு வைத்துக்கொள்ளவும் ஆங்கிலம்தான்
தகுதியானது, வசதியானது என்ற அறிக்கையில் கையொப்பமிடச்
செய்தார். நானும் உடனிருந்தேன்.
இவ்வளவு செய்தவர் யார்? கட்டாய இந்தியை முதல் அமைச்சராக
இருந்தபோது புகுத்திய ஆச்சாரியார்!!
கட்டாய இந்தியைப் புகுத்தி அதை எதிர்த்ததற்காகப் பெரியாரைப்
பெல்லாரிச் சிறையில் வாட்டியவரும் அவரே!
இந்தியைப் புகுத்தி தமிழரை நாசமாக்காதீர்கள். ஆங்கிலமே
இருக்கட்டும், என்ற தம்முடைய திட்டத்துக்குப் பெரியாருடைய
கையொப்பத்தை வாங்கியரும் அவரேதான்!!
ஆச்சாரியார் எப்படிப்பட்ட குணத்தவர் என்பதற்காக இதைக்
கூறவில்லை.
கட்டாய இந்தியைப் புகுத்தி, பெரியாரையும் ஆயிரத்துக்கு
மேற்பட்ட தொண்டர்களையும், சிறையில் போட்டு வாட்டி வதைத்து,
தாளமுத்து நடராசன் எனும் இரு இளைஞர்களின் உயிரையும் குடித்து,
கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பேன்! என்று கொக்கரித்துக்
கோலோச்சிய ஆச்சாரியார், எங்களை எல்லாம் அழைத்து, அனைவரும்
கூடி ஆங்கிலம் கேட்போம் வாரீர் என்று பேசினாரே, இது எத்தகைய
விந்தை, எங்களுக்கு எத்துணை பெரிய வெற்றி, என்பது பற்றிப்
பேசிட அல்ல, இதனைக் கூறுவது.
இந்தி ஆதிக்கம் புகுத்தப்பட்டபோது, எதிர்த்திட இவர் முன்
வரவில்லை; மனம் இல்லை; மாறாக இவரே அந்த ஆதிக்கத்தைப் புகுத்த
முனைந்து நின்றார்; எதிர்த்தோரை அடக்குமுறை கொண்டு தாக்கினார்.
காலங்கடந்து கருத்து மலர்ந்தாலென்ன, கருத்து மலர்ந்தது
என்பதிலே மகிழத்தானே வேண்டும் என்று கேட்பாய் தம்பி, நான்
அவர் ஏன் அப்போது அப்படிச் செய்தார், இப்போது ஏன் இவ்விதம்
செய்கிறார் என்று கேட்கவில்லை; நான் சொல்வது, இப்போதும்
அவர் செய்ய வேண்டியதை முறைப்படி செய்யவில்லை என்கிறேன்!
இப்போதும் அவர், காங்கிரஸ் மேலிடத்தில், இதுபற்றி வாதாட,
போராட, காங்கிரஸ் இதற்கு இணங்க மறுத்தால். மக்களைத் திரட்டி,
அந்தப் போக்கை எதிர்த்திட முன் வரவில்லை!
அதனால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ளும்
துணிவு பெற மறுக்கிறார்!
அன்று அனைவரையும் கூட்டிவைத்து, அருமையாக விளக்கமளித்தார்!
விளக்கத்தில், அருமைப்பாடு இருந்தது. ஆனால் அதற்குத் தேவை
இருந்ததா என்றால்; இல்லை என்பதை அங்கு கூடி யிருந்தோரின்
பெயர்ப்பட்டியலைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
இந்த நாட்டை ஆள்வது யார்? இராமசாமிப் பெரியாரா? நானா?
- என்று ஆச்சாரியார் ஆத்திரத்துடன் கேட்க வேண்டிய அளவுக்கு
வீரமான அறப்போர் நடத்திய பெரியாருக்கு, ஆச்சாரியார் இந்தியால்
விளையும் கேடுபற்றி விளக்க வேண்டிய அவசியம், என்ன வந்தது?
தமிழ் மொழியின் தொன்மை பற்றி டாக்டர் மு.வ.வுக்கும்,
பேராசிரியர் சேதுப்பிள்ளைக்கும் இவர் எடுத்துச் சொல்வதா!
ஏதோ, அவர் விளக்கம் அளித்தார் - கேட்டுக் கொண்டோம்,
இந்த நிலைக்கு அவர் வந்து சேர்ந்தாரே என்று மகிழ்ச்சியுடன்.
அதற்குப் பிறகு அவர் வந்து சேர்ந்தாரே என்ற மகிழ்ச்சியுடன்.
அதற்குப் பிறகு; அவர் செய்தது என்ன?
கட்டுரை எழுதுகிறார் - அழகான கட்டுரைதான் - ஆணித்தறமான
வாதங்கள் காண்கிறோம் - இது மேதாவித் தனம்; இல்லை என்பார்
இல்லை! ஆனால் இது போதாதே!
நயாபைசா அல்லவா நடமாடுகிறது!!
ஆச்சாரியார், இந்தப் போக்கை கைவிட்டாக வேண்டும் என்று,
நேரு பெருமகனாருக்கு, இறுதி எச்சரிக்கை ஏன் விடக் கூடாது?
ஏன் தமது ஒப்பற்ற நண்பர் பெரியாரிடம் கலந்து பேசி, இந்தி
ஆதிக்க ஒழிப்புக்கான அறப்போர் தீட்டி நடத்தக் கூடாது?
செய்கிறாரா? இல்லை! செய்வாரா? அவரா! கனவிலே கூட அப்படி
ஒரு காட்சியைக் காண முடியாது.
ஆனால் பேசுகிறார், எழுதுகிறார், இந்தி ஆதிக்கம் ஆபத்தானது,
அக்ரமம், அநீதி என்று! அந்தப் போக்கை எதிர்த்து ஒழித்தாக
வேண்டும் என்று எக்காளமிடுகிறார், ஆனால் எதிர்ப்பு நடத்த
மறுக்கிறார்.
அனுமந்தய்யாவும், சுப்பிரமணியனாரும், குமாரசாமி ராஜாவும்
வேறு பலரும், எப்படியோ, அப்படியேதான் ஆச்சாரியாரும் இருக்கிறார்.
இவர்கள் யாவரும் வடநாடு, மெள்ள மெள்ள தன் ஆதிக்கப் பிடியைப்
பலப்படுத்திக் கொண்டு வருவதை உணருகிறார்கள். ஓரோர் சமயம்
வெளியிலே கொட்டியும் காட்டுகிறார்கள். ஆனால், துணிந்தும்
தொடர்ந்தும் பணியாற்றி, வடநாட்டு ஆதிக்கத்தை ஒழித்திடும்
விடுதலைப் போர் நடத்த அஞ்சுகிறார்கள், அந்த அச்சத்துடன்
காங்கிரஸ் மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளாமலிருந்தால்,
பசையும் ருசியும் இருக்கிறது என்பதைச் சொந்த அனுபவ மூலம்
தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஆசையும் அவர்களை
ஆட்டிப் படைக்கிறது.
எனவேதான், தம்பி ஆசைக்கும் அச்சத்துக்கும் ஆட்பட வேண்டிய
நிலையில் இல்லாத நாம், துணிந்து, தூய உள்ளத்துடன், நமது
வசதிக்கும், நமக்கு மக்கள் அளித்திடும் வாய்ப்புக்கும்
ஏற்ற முறையில், தாயகத்தின் தன்மானம் காத்திடும் பணியில்
ஈடுபட்டு வருகிறோம். நாம், தகுதியற்றவர்கள் என்று கூறுவாருளர்.
அந்தச் சுடுசொல், நமக்குக் கோபமூட்டக்கூட இல்லை - அந்தக்
கட்டத்தையும் கடந்துவிட்டோம். மேலும் தகுதி பெற வேண்டும்
என்ற ஆர்வத்தை நமக்கும் தூண்டி விடவே, அந்தத் தூற்றலெல்லாம்
பயன்பட்டு வருகிறது.
பெரும் பெரும் தலைவர்கள், துணிவு பெறாமல் தடுமாறிடக் காண்கிறோம்;
டில்லியை எதிர்த்து நிற்க முடியாது என்று எண்ணி மருண்டிடக்
காண்கிறோம்; கண்ட பிறகும், நாம் நமது பணியினைக் கலங்காது
செய்து வருகிறோம்.
அவர்களின் தடுமாற்றத்துக்கு உள்ள காரணம் புரிகிறது. நாம்
மேற்கொண்டுள்ள பணியின் தூய்மையும் தெரிகிறது.
நாம், அவ்வளவு பெரிய பணிக்கு ஏற்றவர்கள்தானா என்ற ஐயப்பாடு
கூட எழக்கூடும் - விடுதலைப் போர் சாமான்ய மானதல்ல.
என்றாலும், நம்பிக்கையுடன் பணியாற்றுகிறோம், மேதைகள்
மருண்டோடுகிறார்கள்; நாமாவது, இந்த நற்காரியத்துக்கு
நம்மை ஒப்படைத்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் பணியாற்றி
வருகிறோம்.
அந்தப் பணியிலே ஒரு சிறு பகுதி - சுவையும் சூடும் மிகுந்த
பகுதி - தேர்தல்.
ஆய்வுக் குழுவினர் தமிழகமெங்கும் சென்று, தோழர்களைக்
கண்டு பேசிவிட்டு வருகின்றனர் - அவர்களிடம் நான் கேட்டுப்
பெறும் கருத்துரைகளை, தம்பி, உன்னிடம் கூறி மகிழ்ந்திட
உள்ளம் துடிக்கிறது - இப்போது உறக்கம் மேலிடுகிறது, மணி
விடியற்காலை நாலு.
அன்பன்,

28-10-56